Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உழை ! 29

அதிரைநிருபர் பதிப்பகம் | September 03, 2011 | , , ,


விடிகிறது மற்றொருநாள் சகோதரா
முடிகிறது ஓய்வுநேரம் விழித்திடு
வடிகிறது இலைநுனியில் பனித்துளி
மடிநீங்க குளிர்நீரில் குளித்திடு

காரிருள் உழைத்துக்களைத்து விலக
கதிரவன் கதிர்பரப்பி உழைக்க
ஊரெலாம் விழித்துழைப்பைத் துவக்க
உனக்கும்தான் விடிகிறது ஊனுழைக்க

தூக்கமே பாய்களில் பற்றினால்
தாக்குமே நோய்கள் தொற்றினால்
உறக்கம் கலையனும் தோழரே
உழைத்து நிலைக்கனும் வாழ்விலே

உழைக்காமல் வயிற்றை வளர்த்தால்
தழைக்காது உன்றன் உடல்நிலை
மழைக்கால மண்குடில் போல
குலைந்திடும் நின்றன் தலைமுறை

ஓரிறு பருக்கைக ளாயினும்
ஓர்உழைப்பினில் கிடைத்த தாகனும்
ஒருவாய்க் கஞ்சியே யாயினும்
ஓர்உழைப்பின்றி கிடைக்காது சாகனும்

ஓசியில் வளர்க்கின்ற குடலும்
தாசியின் வகைகெட்ட உடலும்
காலத்தின் பிடிதனில் சிக்கிடும்
கடும் நோய்கண்டு சிதைந்தேபோய்விடும்

சிற்றெரும்புச் சாரைகள் காண்பீரே
சிறகடிக்கும் நாரைகள் காண்பீரே
சிறுதுரும்பென உணவுக்குக் கூட​
சுறுசுறுப்பாய் உழைத்துபின் உண்ணும்

உழவனின் உழைப்பின்றிப் போனால்
உலகுக்கு ஏதையா உணவு
உழைத்து வழிகின்ற வியர்வையில்தானே
உருவாகும் உனக்கென்று வாழ்வு

கரும்பச்சையம் முதலீடு செய்து
கரியமில வாயுவும் சேர்த்து
கதிரவக் கதிர்களின் சாட்சியில்
கானகத்தின் உழைப்பே கனிகள்

கண்களின் உழைப்பே காட்சிகள்
கால்களின் உழைப்பே கடவுகள்
இருவரின் உழைப்பே இல்லறம்
இதயத்தின் உழைப்பே இவ்வுயிர்!

உயிர்வாழும் அர்த்தமே உழைப்புத்தான்
உயர்வாகும் வாழ்க்கையே உழைத்துத்தான்
உழைக்கின்ற வர்க்கத்தினுள் நுழை
உன்கரங்களை நம்பியே உழை!



- சபீர்
Sabeer abuShahruk

29 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா : புத்துயிரூட்டும் பொக்கிஷ வரிகள் !

உழை உழைன்னு வளைகுடா முதலாளியும் சொல்லத்தான் செய்கிறார்கள் அங்கே ஏதோ ஊழை(சத்தம்) கேட்பதுபோல் பிரம்மை அதிகமதிகமே !

ஆனால் உங்களின் உழை, வருடும் வரிகள், வாழ்வின் வாசலுக்கு வழிகாட்டிட்டும் வைகரை வெளிச்சம் !

அற்புதமான வரிகள் ஆணித்தரமான கருத்தாழம் !

என்னைத் தொட்டதில் நிறைய அதில் இங்கே பட்டுன்னு கண்ணில் பட்டது

//கண்களின் உழைப்பே காட்சிகள்
கால்களின் உழைப்பே கடவுகள்
இருவரின் உழைப்பே இல்லறம்
இதயத்தின் உழைப்பே இவ்வுயிர்!///

சூப்பர் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உங்க 'கல்பி'ன் உழைப்பில் கவி சூப்பர்.
என்னுள் உதித்த உழைப்பு இவை.
>
இம்மைக்கு உழைப்பு செல்வம்
இருளில் உழைப்பு நித்திரை

மரணத்திற்கு உழைப்பு மற்றவர்
மறுமையின் உழைப்பு இறைவணக்கம்

ஆறுகளின் உழைப்பு நீரோட்டம்
ஆயுளுக்கு உழைப்பு ஆரோக்கியம்

மழைக்கு உழைப்பு மரங்கள்
மண்ணுக்கு உழைப்பு மண்புழுக்கள்

கதிரவனின் உழைப்பு தாவர உயிர்
காலங்களின் உழைப்பு கடிகாரம்.

crown said...

விடிகிறது மற்றொருநாள் சகோதரா
முடிகிறது ஓய்வுநேரம் விழித்திடு
வடிகிறது இலைநுனியில் பனித்துளி
மடிநீங்க குளிர்நீரில் குளித்திடு.
---------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
விடிந்துவிட்டது உன் ஓயாத உழைபிற்கு தயாராகு!தூக்கம் முடித்து பனித்துளியும் இலையிலிருந்து வடிகிறது அதுபோல் நீ உன் பணிக்கு தயாராகு படுகையின் மடியில் இருந்து மடி நீங்க( மடி=சோம்பல்)குளித்து. என்ன அருமையான உவமானம். அதே வேளையில் மொழிப்பிரவாகம்!.கவிஞரே எனக்கு விசில் அடிக்க வராது!அனாலும் பாரட்டாமல் இருக்க முடியவில்லை.எங்கே தேடி பிடிக்கிறீர்கள் இப்படியான வார்தைகளை ?வார்தை கிடைத்தபிந்தான் கவிதையே எழுதுவீங்களோ அந்த வார்தைக்கு? மடி என்பதை இதில் முடிச்சி போட்டு எழுதிய முயற்சி நல்ல ரசனை.அல்ஹம்துலில்லாஹ்.

crown said...

காரிருள் உழைத்துக்களைத்து விழக
கதிரவன் கதிர்பரப்பி உழைக்க
ஊரெலாம் விழித்துழைப்பைத் துவக்க
உனக்கும்தான் விடிகிறது ஊனுழைக்க
தூக்கமே பாய்களில் பற்றினால்
தாக்குமே நோய்கள் தொற்றினால்
உறக்கம் கலையனும் தோழரே
உழைத்து நிலைக்கனும் வாழ்விலே.
------------------------------------------------------
இருளும் உழைக்குது இது ஒரு உருவகம் அது கைகால் இயல்பான நிலையில் இல்லாதாரும் உழைக்கும் காலம் இது என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார்.சூரியனும் தன் உழைப்பை துவங்குவதுபோல் நீயும் உழை அந்த சூரியன் உழைப்பதுவே நீ எழுந்து உழைக்கத்தான் அதுவும் ஒரு உருவகம். சூரியன் உழைப்பதால் ஒளி கிடைக்கும் இருள் நீங்கும் நீயும் உழை உன் வாழ்வின் இருள் நீங்கி சந்தோச ஒளிப்பிறக்கும்.பாயிலேயே படுத்துறங்கி காலம் கழித்தால் காலமெல்லாம் நோயிலேயே அந்த பாயில் உன் இயக்கம் முடங்கி போகும் உன் ஆயுள் அடங்கி போகும். எனவே உழை உழைக்காமல் இருந்தால் ஊதை சதை வந்து விரைவில் உன் கதை முடிக்கும்.

crown said...

உழைக்காமல் வயிற்றை வளர்த்தால்
தழைக்காது உன்றன் உடல்நிலை
மழைக்கால மண்குடில் போல
குலைந்திடும் நின்றன் தலைமுறை
-------------------------------------------
மேலும் ஒரு அருமையான உவமானம்.சுவர் நன்றாக இருந்தால் தான் சித்திரம் தீட்ட முடியும் என்பதுபோல் உன் உடல் பத்திரமாய், ஆரோக்கியத்திற்கு பாத்திரமாய் இருக்க உழைக்கனும்,அவ்வாறு உழைப்பில் உயர்ந்து உன் உழைப்பில் வரும் சந்ததியும் தழைக்கனும்.அதற்கு உடல் உழைப்பு அவசியம் அவ்வாறு இல்லாமல் போனால் அடை மழையில் அடையாளம் கானாது சிதைந்து போகும் மண் குடிசை போல் உன் சந்ததியும் இல்லாமல் போகும் உன் வாழ்வும் மண்னாகி போகும்.

crown said...

ஓரிறு பருக்கைக ளாயினும்
ஓர்உழைப்பினில் கிடைத்த தாகனும்
ஒருவாய்க் கஞ்சியே யாயினும்
ஓர்உழைப்பின்றி கிடைக்காது சாகனும்

ஓசியில் வளர்க்கின்ற குடலும்
தாசியின் வகைகெட்ட உடலும்
காலத்தின் பிடிதனில் சிக்கிடும்
கடும் நோய்கண்டு சிதைந்தேபோய்விடும்.
-------------------------------------------------------------
ஒருவாய் சோறும் உன் உழைப்பில் வந்ததாய் இருக்கணும்.ஒருவாய் கஞ்சிகூட உழைக்காமல் இருந்தால் அது கிடைக்காது சாகனும் அதுதான் நிலை. பிச்சை எடுத்து யாசித்து உண்டுவாழ்வதும்,வேசியின் கிழ் குணமும் மானம் கெட்டு, உடல் சீர்கெட்டு தூற்றம் பெற்று துற்னாற்றம் பெற்று காலம் கடந்தபின் பினி வந்து, போக்கிடம் இல்லாமல் அனாதையாய் சாக நேரிடும். உழைக்காமல் உடல் வளர்ப்பது ஈனம் இதில் எங்கே மிஞ்சும் மானம்? எல்லாம் அவ மானம்.

crown said...

உழவனின் உழைப்பின்றிப் போனால்
உலகுக்கு ஏதையா உணவு
உழைத்து வழிகின்ற வியர்வையில்தானே
உருவாகும் உனக்கென்று வாழ்வு.

சிற்றெரும்புச் சாரைகள் காண்பீரே
சிறகடிக்கும் நாரைகள் காண்பீரே
சிறுதுரும்பென உணவுக்குக் கூட​
சுறுசுறுப்பாய் உழைத்துபின் உண்ணும்.
-----------------------------------------------
(கவிஞர் மன்னிக்க, உங்கள் கவிதையின் பாராவை மாற்றி என் வசதிக்காக மாற்றி போட்டுள்ளேன். பாரமுகமாக இருந்து பொருத்தருள்க.)உழவன் உனக்கும் எனக்கும் சொந்தமோ, பந்தமோ இல்லாதவன் ஆனாலும் அவன் உழைப்பு எல்லாருக்கும் உணவாகிறதே! அவன் வியர்வை நம் வாழ்வு பயிர் செழித்து வளர்கிறதே. எனவே உழைப்பு ஒரு பொது உடமை.அது மனித கடமை.சின்ன சின்ன உயிர்களும் தனக்குணவை தாமே உழைத்து பெருகிறது நாமும் அவ்வாறே உழைக்க வேண்டும்.

crown said...

கரும்பச்சையம் முதலீடு செய்து
கரியமில வாயுவும் சேர்த்து
கதிரவக் கதிர்களின் சாட்சியில்
கானகத்தின் உழைப்பே கனிகள்

கண்களின் உழைப்பே காட்சிகள்
கால்களின் உழைப்பே கடவுகள்
இருவரின் உழைப்பே இல்லறம்
இதயத்தின் உழைப்பே இவ்வுயிர்!

----------------------------------------------------------------
ஒரு காய் தோன்ற மரம் செய்யும் கூட்டு முயற்சியே வாழ்கை உணவு சக்கரத்தின் அச்சு என அறிந்து கொள்ளும் அறிவியல் தெரிந்தால் உழைப்பின் முக்கியம் தெரியும்.
அதுபோல் கண்களின் உழைப்பு காட்சி ,பயன் =பார்வை.
கால்களின் உழைப்பு கடவுகள் (கடத்தல்),பயன்=இயக்கம்.கணவன் , மனிவி இருவரின் ஒத்துழைப்பு இல்லறம்.பயன்= இன்பம்.இதயத்தின் உழைப்பு உயிர்.பயன் = வாழும் வாழ்கை. உழைப்பு தனியாகவோ,'
கூட்டாகவோ இருக்கலாம் ஆனால் உழைப்பு. உன்மையாய் இருக்கனும் அப்பத்தான் நிம்மதியான அறுவைடை இன்பமாய் அமையும்.

ZAKIR HUSSAIN said...

உழைப்பை பற்றி இந்த அளவு வரிக்கு வரி கவிதையின் அடர்த்தி குறையாமல் எழுதியிருப்பது அழகு. இதுபோல் நிறைய எழுச்சிக்கவிதைகளாக எழுது.

கிரவுன் வந்து மடி=சோம்பல் என எழுதி ..இந்த இடத்தில் ஏன் “மடி’ என நான்கேள்வி கேட்காமல் தடுத்து விட்டார் [ தமிழ் தெரிந்ததவர்கள் எழுதுவது இயற்கை, தமிழில் இப்படி பாண்டித்யம் பெற்றவர்கள் வாசகர்களாக இருப்பது அதிரை நிருபரின் அதிர்ஷ்டம் ]

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…
உழைப்பை பற்றி இந்த அளவு வரிக்கு வரி கவிதையின் அடர்த்தி குறையாமல் எழுதியிருப்பது அழகு. இதுபோல் நிறைய எழுச்சிக்கவிதைகளாக எழுது.

கிரவுன் வந்து மடி=சோம்பல் என எழுதி ..இந்த இடத்தில் ஏன் “மடி’ என நான்கேள்வி கேட்காமல் தடுத்து விட்டார் [ தமிழ் தெரிந்ததவர்கள் எழுதுவது இயற்கை, தமிழில் இப்படி பாண்டித்யம் பெற்றவர்கள் வாசகர்களாக இருப்பது அதிரை நிருபரின் அதிர்ஷ்டம் ]
-------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நன்றி! எல்லா புகழும் அல்லாஹுக்கே! என்மேல் கொண்ட அன்பின் வெளிப்பாடே இதுவும். மடி என்பது செத்து மடி, ம( நொ)டித்து போவான்,மடிஞ்சு போ எல்லாம் பலம் இல்லாமல் போ, சோர்ந்து போ எனப்படும் வார்தையின் மூலம் . ஒருவன் தன்னுடைய வியாபாரத்தில் நட்டம் அடைந்து விட்டால் ஏன் இப்படி மடிந்து போய் இருக்கிறாய்? எனவும் அவன் நொடித்து போய்விட்டான் எனவும் சொல்வதும். உழைப்பில்லாமல் செத்து மடிந்து போ எனவும் சொல்வதை கேள்வி பட்டிருக்கிறோம்.உழைப்பில் வந்த வருமான இழப்பு. சோர்வின் காரனமாய் உழைக்காமல் திரிவது இப்படி உழைப்பின் அடைப்படையில் அமைந்த வார்த்தைகள்தான் அவைகள். இதை உழைப்பை பற்றிய கவிதையில் சரியான இடத்தில் பொருத்தி எழுதியது அவரின் தமிழ் திறமையை பறை சாற்றுவதாக அமைகிறது. கவிஞர் கவிஞர்தான்.அவர் தமிழின் மடியில் தான் தலைவைத்து படுப்பாரோ?

sabeer.abushahruk said...

கிரவுன்,
அஸ்ஸலாமு அலைக்கும்.

எனக்குத்
தலை சாய்த்துப் படுக்க வாய்த்திருப்பது
தமிழ் மடி யெனில்
உங்கள்
தலையில் வைத்துப்
பிரகாசிப்பது
தமிழ் கிரீடமா?

ZAKIR HUSSAIN said...

இந்த நிகழ்வை நான் எழுதியே ஆக வேண்டும்...வருடம் 1983 அல்லது 1984 ஆக இருக்க வேண்டும்..சபீரும் நானும் சாப்பிட்டுகொண்டே பேசிக்கொண்டிருந்தோம் [ அவனது வீட்டில் ] அந்த சமயத்தில் சபீர் சவூதிக்கு போக விசாவுக்கு பணம் கட்டி விட்டு காத்திருந்த நேரம் ..அவனது முகத்தில் சந்தோசம் இல்லை..ஏன்டா இப்படி கவலையா இருக்கே என நான் கேட்டதற்கு ' நான் சாப்பிடும்போதெல்லாம் யாரோ என் காதில் வந்து 'தண்டச்சோறு ...தண்டச்சோறு' நு சொல்ரமாதிரி இருக்குடா". அவன் வீட்டில் சாப்பிட்டாலும் இன்னும் நாம் சம்பாதிக்கவில்லையே என்ற அவனின் உணர்வுதான் இன்றைக்கு அவனை இவ்வளவு உயர்த்தியிருக்கிறது [ அல்லாஹ் மிகப்பெரியவன் ]

உழைத்து சாப்பிட வேண்டும் என்ற இந்த உணர்வை நான் பல செமினார்களில் பேசியிருக்கிறேன்.

முன்னேர நினைக்கும் ஓவ்வொரு இளைஞனும் உள்நிருத்த வேண்டிய உணர்வு இது.

crown said...

sabeer.abushahruk சொன்னது…
கிரவுன்,
அஸ்ஸலாமு அலைக்கும்.

எனக்குத்
தலை சாய்த்துப் படுக்க வாய்த்திருப்பது
தமிழ் மடி யெனில்
உங்கள்
தலையில் வைத்துப்
பிரகாசிப்பது
தமிழ் கிரீடமா?
-----------------------------------------------
வலைக்குமுஸ்ஸலாம். என் தலையில் வைத்து சுமப்பது கலிமண்னைத்தவிர வேறு இல்லை. ஆனாலும் பல நேரம் மடிக்கனினியில் என்னை மறந்து தூங்கியது உண்டு.இப்படி வேண்டுமானால் சொல்லலாம் மடிகனினியின் மடியில் தலை வைத்துப்படுத்தவன் என்று.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துக்கொண்டு காலைப் பொழுதில் மலைக்குச் சென்று (மலையேறி) விறகு வெட்டி விற்று, தாமும் சாப்பிட்டுப் பிறருக்கும் தருமம் செய்வது மக்களிடத்தில் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும்."
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) புகாரி: 1480).

மாஷா அல்லாஹ்!

உழைப்பு பற்றிய
அழகிய சிந்தனை கவிதை!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அபு ஆதில் said...

உயிர்வாழும் அர்த்தமே உழைப்புத்தான்
உயர்வாகும் வாழ்க்கையே உழைத்துத்தான்
உழைக்கின்ற வர்க்கத்தினுள் நுழை
உன்கரங்களை நம்பியே உழை!

உழைப்பின் சிறப்பை அழகாக சொல்லி இருக்கிறிர்கள்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பிற்குரிய சபீர் காக்கா உழைப்பை பற்றி உடைக்காமல் எழுதுவதற்கு.மூளைக்கு அதிகமாக உழைப்பு கொடுத்திருகிறீர்கள்.

// சிற்றெரும்புச் சாரைகள் காண்பீரே
சிறகடிக்கும் நாரைகள் காண்பீரே
சிறுதுரும்பென உணவுக்குக் கூட​
சுறுசுறுப்பாய் உழைத்துபின் உண்ணும் //

ஜப்பானியர்கள் எறும்பை போன்று .சுறு சுருப்பானவர்கள் என்று சொல்லுவார்கள்.அசால்ட்டாக நினைத்தோம்.ஜப்பானுக்கு போன பிறகுதான் தெரிந்தது.85 ,90 .வயது கிழவி வேலையில் இயந்திரத்தோடு போராடும்போது.இவர்களை போன்று தான் எறும்பும் சுறு சுருப்பானதோ என்று.

சுறு சுருப்புனா என்னவென்று தெரிந்து கொள்வதா இருந்தா கண்டிப்பாக ஜப்பானுக்கு போயே ஆகனும்.
அவர்களின் வாழ்க்கை இயந்திர வாழ்க்கை என்று தான் சொல்ல வேண்டும்.

Muhammad abubacker ( LMS ) said...

எறும்பு போல் உழைக்க சொல்லிப்புட்டு அதன் மேல் இப்புடியா பிஸ்கட்டை அடுக்கிவைத்து அதை கொள்ளுவது.பாவம் இடுப்பு முள்ளு ஒடிந்திரும்போலிருக்கு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எறும்பு போல் உழைக்க சொல்லிப்புட்டு அதன் மேல் இப்புடியா பிஸ்கட்டை அடுக்கிவைத்து அதை கொள்ளுவது.பாவம் இடுப்பு முள்ளு ஒடிந்திரும்போலிருக்கு.//

அது எங்க கம்பெனியில வேலை செய்யுற எறும்பு ! வாயால் சொன்ன வேலை, எழுத்தால் அனுப்பிய வேலை, நச்சரிக்கும் வேலை, டவுட்டு கேட்டே சாகடிக்கும் (ஒரு கூட்டத்தைன்) வேலை... இப்படியாக அடுக்கி அடுக்கி சுமை கூடிடுச்சு !

எறும்பை மட்டும்தான் பார்த்து பாவப் படுவியலோ !?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// அபு இபுறாஹிம் சொன்னது
எறும்பை மட்டும்தான் பார்த்து பாவப் படுவியலோ !? //

வாய் இல்லா ஜீவனமாச்சே .நம்மை போன்ற வாய் உள்ள ஜீவனமா இருந்தால் வார்த்தைகளால் நம்ம மேலே சுமைகளை வீசி இருக்கும்.

Shameed said...

crown சொன்னது

//அவர் தமிழின் மடியில் தான் தலைவைத்து படுப்பாரோ?//

அவர் எதில் தலை வைத்தாலும் அது தழைத்தோங்கும் என்பது மட்டும் உண்மை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இன்னும் நாம் சம்பாதிக்கவில்லையே என்ற அவனின் உணர்வுதான் இன்றைக்கு அவனை இவ்வளவு உயர்த்தியிருக்கிறது [ அல்லாஹ் மிகப்பெரியவன் ] //

அல்லாஹ் அக்பர் !

வெற்றியாளர்களோடு வெள்ளாந்தியா நானும் உறவாடுகிறேன் என்பதை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் !

sabeer.abushahruk said...

இன்று உழைப்பு கூடியதால் ஊடகம் வர இயலவில்லை. (நிஜமா இந்தியா இங்கிலாந்து பார்க்க ஒதுங்கவில்லை. முதல் முதலா ஜெயிக்கிறமாதிரி ஆட்டம் மாறியதும் மழை இங்கிலாந்துக்கு உதவி மேட்ச் கைவிடப்பட்டதெல்லாம் எனக்குத் தெரியாது)

உழைக்கும் கரங்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.

இனி,
பின்னூட்டங்களில் எனக்குப் பிடித்தவற்றை சொல்லி விடுகிறேன்.

sabeer.abushahruk said...

//உழை உழைன்னு வளைகுடா முதலாளியும் சொல்லத்தான் செய்கிறார்கள் அங்கே ஏதோ ஊழை(சத்தம்) கேட்பதுபோல் பிரம்மை அதிகமதிகமே !//

அபு இபுறாகிம்,
ஊழைச் சதை வளர்த்து
உழைக்க மறுப்பவர்களின்
கோழைக் கூப்பாடு அது

//இருளில் உழைப்பு நித்திரை
ஆயுளுக்கு உழைப்பு ஆரோக்கியம்//

எம் ஹெச் ஜே,
நித்திரையைக்கூட உழைப்பாக்கிய விந்தை உமது கற்பனை சாதுர்யம்!

//உழைக்காமல் 
    உடல் வளர்ப்பது ஈனம் 
    இதில்
     எங்கே மிஞ்சும் மானம்? 
     எல்லாம் அவ மானம்.//

கிரவுன்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கனமான அர்த்தம் சுமக்கிறது உம் கைகளில் சிக்கிய மொழி. ஆயினும், கூனல் விழவில்லை!

உங்களின் தெளிவுரை, ஜாகிர் சொல்வதுபோல நிறைய கேள்விகளுக்கு அவை கேட்கப்படுமுன் விளக்கம் சொல்லிவிடுவதால், உழை பற்றி என் காட்டில் பாராட்டு மழை!

நன்றி!

sabeer.abushahruk said...

//உழைத்து சாப்பிட வேண்டும் என்ற இந்த உணர்வை நான் பல செமினார்களில் பேசியிருக்கிறேன்/

ஜாகிர், செய்...தொடர்ந்து செய். எல்லா கேள்விகளுக்கும் பதில் உண்டு என்று சொல். உழைப்பு ஒரு கேள்வியெனில் உயர்வே அதற்கான பதில் என்று சொல்.

//அழகிய சிந்தனை கவிதை//
நன்றி அலாவுதீன். நம்மைப்போன்ற உழைப்பாளிகளினால் மட்டுமே இதை அழகு என்று கொஞ்ச முடியும். உழைப்பாதோருக்கோ இது தலைவலி.

sabeer.abushahruk said...

நன்றி அபு ஆதில், உங்கள் அன்பிற்கும் உழைப்பை ரசித்தமைக்கும்.

எல் எம் எஸ்:ஜப்பானியரின் சுறுசுறுப்பை நேரில் கண்டு இங்கு பகிர்ந்ததன்மூலம் இந்த பதிவுக்கு உதாரணமும் வழங்கிவிட்டீர்கள் நன்றி.

ஹமீது:

அதெப்படி, கவிதையை விமரிசிக்கும்போது மட்டும் எல்லா நக்கலும் ஒடுங்கி உங்கள் எழுத்து தன்னைத்தானே சிங்காரித்துக் கொள்கிறது? ஷுக்ரன்.

அ.நி.: மிக மிக பொருத்தமான படம் பதிந்து உங்கள் ரசனையை மென்மேலும் பாராட்டவைத்துவிட்டீர்கள். நன்றி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//. (நிஜமா இந்தியா இங்கிலாந்து பார்க்க ஒதுங்கவில்லை. முதல் முதலா ஜெயிக்கிறமாதிரி ஆட்டம் மாறியதும் மழை இங்கிலாந்துக்கு உதவி மேட்ச் கைவிடப்பட்டதெல்லாம் எனக்குத் தெரியாது)//

ஃபோன் ஏதும் வராமலிருக்கும்போர்தே நினைத்தேன் ஸ்கோர் என்னான்னு கேட்டிடுவோமோன்னு அமைதியாக இருந்தீங்களோ ?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கவிக்காக்காவின் காவியம் ஒரு உயிரோட்டம். உறங்கும் உள்ளங்களை தட்டி எழுப்பும் தாரக மந்திரம். அருமைக்கு வந்த ஒரு பெருமை என்று தான் சொல்ல வேண்டும்.

இப்பொழுதெல்லாம் நம் கட்டுரைகளுக்கு மேக்கொண்டு எழுதுவதற்கு (மாச்சப்பட்டு)சடப்பு பட்டு சபீர் காக்கா ஒரே வார்த்தையில் "ஹோம்சிக்" என்று எழுதி முடித்து விடுகிறார்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இப்படி ஓட்டுவார்கள் என்று பார்ப்போம்...

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

sabeer.abushahruk said...

//ஒரே வார்த்தையில் "ஹோம்சிக்" என்று எழுதி முடித்து விடுகிறார்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இப்படி ஓட்டுவார்கள் என்று பார்ப்போம்...//

எம் எஸ் எம்,

"ஹோம்சிக்" என்பது ஒரு வார்த்தையா?
ஹோம் என்றால் ஹோமில் உள்ள எல்லோரும் , ஹோமிருக்கும் தெரு, ஹோமிருக்கும் ஊர் என்று பெரிய ஒரு உள்ளடக்கத்தையே கொண்ட வார்த்தை அது. அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் உங்கள் எழுத்தை அனுஅனுவாய் ரசித்துத்தான் "ஹோம்சிக்" எனும் ஒற்றை அனுவாய்ச் சொன்னேன்.

nandakumar07 said...

உழைப்பின் அவசியம் அறிவித்த உமக்கு நன்றி. மணல் வீடு உவமை அருமை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.