Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

போலி கவுரவம் 19

அதிரைநிருபர் பதிப்பகம் | March 02, 2012 | , ,


பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், சான்றிதழுக்கும், மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

கணவனும், மனைவியும் தாங்கள் வளர்த்து வந்த கழுதையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

• "யாராவது ஒருவர் கழுதை மீது அமர்ந்து செல்லலாமே'' என்றார் அவ்வழியே சென்ற ஒருவர்.அதனால் கணவர் கழுதை மீது ஏறி உட்கார்ந்தார்.

• "கொடுமைக்கார புருஷனாக இருப்பார் போலும். தான் மட்டும் சுகமாக அமர்ந்து கொண்டு மனைவியை நடக்க விடுகிறார்'' என்றார் அவ்வழியே சென்ற ஒருவர். இப்போது மனைவியை அமரவைத்து கணவர் நடக்க ஆரம்பித்தார்.

• "புருஷனை மதிக்காதவள். திமிராக கழுதை மீது அமர்ந்து செல்கிறாள்'' என்ற மற்றொருவரின் சொல்லைத் தொடர்ந்து கணவரையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டாள் மனைவி.

• "கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருந்தால் பாவம் இந்த கழுதையை இப்படி கஷ்டப்படுத்துவார்களா?'' என்றார் வேறொருவர்.

இறுதியில் கணவர் மனைவி இடையே சண்டை வந்து விட்டது. "உங்களால்தான் இந்த அவமானம்" என்று ஆரம்பித்தா மனைவி. "உன்னால் என் கவுரவமே போச்சு'' என்றார் கணவரும் அவர் பங்கிற்கு.

நம் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடுத்தவர்கள் சொல்வதை கேட்பதும், போலி கவுரவமே முக்கியக் காரணம்.

போலி கவுரவம் மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலே தானாகவே ஏற்பட்டு விடுகிறது. ஓடிக்கொண்டிருக்கும் சிறுவன் கால் தடுக்கி விழுகிறான். யாராவது பார்த்து விட்டார்களா என இங்கும் அங்கும் பார்க்கிறான். யாரும் பார்க்க வில்லையென்றால் எழுந்து, துடைத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறான். யாராவது பார்த்து விட்டால், அதுவும் சிரித்து விட்டால் போச்சு. அசிங்கம், அவமானம்! கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. தடுக்கி விழுவது கூட பெருங்குற்றம் என பிஞ்சு மனம் நம்புகிறது.

உலகில், போலி கவுரவத்தின் தலைமையகம் அமெரிக்காதான் என்றால் அது மிகையல்ல. அடுத்த பத்தாண்டுகளுக்கு கிடைக்கக் கூடிய எல்லா கடன் சலுகைகளையும் இப்போதே பெற்று நீயா, நானா என்று போட்டி போட்டு கவுரவம் பார்ப்பதில் அமெரிக்கர்கள் கில்லாடிகள். கிடைக்கிறது என்பதற்காக சக்தியை மீறி வாங்கிய வீட்டுக்கடன்களில் திவாலாகி, "அமெரிக்காவில் வீடுவேண்டுமா? ரொம்ப சீப்'' என்று இங்கு டீக்கடை முன்பு நில புரோக்கர்கள் கிண்டலாக கேட்கும் அளவுக்கு கடந்த ஆண்டு அங்கு பெரும் நெருக்கடி.

"என்னை அடியுங்கள், உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்'' என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்து கொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால்அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற 'கவுரவ நிலைப்பாடு' இங்கு வேரூன்றி விட்டது.

இந்த போலி கவுரவம் படித்தவர்களையும் வாட்டி எடுக்கும் சக்தி கொண்டது.

"சக மாணவர்கள் முன் ஆசிரியர் என்னை திட்டி விட்டார்; அதனால் எனக்கு அவமானமாக இருந்தது'' என்று அம்மாவிடம் பையன் புலம்பினால் அது போலி கவுரவத்தின் அறியாப்பருவம். "இன்னொரு டீச்சர் முன்பு என்னைக் குறை சொல்லாதீங்க சார். என் கவுரவம் என்னாவது?'' என்று ஒரு டீச்சரே தலைமையாசிரியரிடம் குறைபட்டுக் கொள்வது போலி கவுரவத்தின் விபரீதவளர்ச்சி. தவறு தவறுதான். அதை யார் சொன்னால் என்ன? எங்கு சொன்னால் என்ன? அதற்கும் கவுரவத்திற்கும் என்ன சம்பந்தம்?

நாம் கவுரவமானவர்கள் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் அணியும் செருப்புக்கு எப்படி தெரியும்? பலர் மத்தியில் செருப்பு அறுந்துவிட்டால் அதை தூக்கிப் போட்டு விட்டு வெறுங்காலோடு நடந்தால் சுமார் கவுரவம்; விலை உயர்ந்தது, சரி செய்து விடலாம் என அச்செருப்பை கையில் எடுத்துக் கொண்டு, தலை நிமிர்ந்து நடந்தால் சூப்பர் கவுரவம். இதை விடுத்து, பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக காலை தரையில் தெத்தித் தெத்தி தேய்த்தபடி நடந்து வந்து வண்டியில் ஏறினால், அது போலி கவுரவம்.

பாழாய்ப்போன டூவீலர் என்ஜின் திடீரென எக்குத்தப்பாகி பெட்ரோலைக் குடித்து விடுகிறது. பைக் பாதி வழியில் நின்று விடுகிறது. மனைவி ஒரு பக்கம், ஓட்டி வந்த கணவர் மறுபக்கம், அவ்வளவுதான். போயே விட்டது கட்டிக்காத்த(??) கவுரவம்! அருகில் உள்ள பெட்ரோல் 'பங்க்'குக்கு வண்டியைத் தள்ளிச் சென்றால் கவுரவம்தான். ஆனால் உள்ளத்துக்கும், உடன் வரும் செல்லத்துக்கும் அது கவுரவக் குறைச்சல் ஆயிற்றே. "என்ன ஆச்சு?'' என்று ஏதோ வண்டியில் குண்டு வெடித்த மாதிரி சிலர் கேட்பார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்தால், அது போலிகவுரவம். வண்டி பிரச்சினைக்கும், வாழ்க்கை கவுரவத்திற்கும் என்ன தொடர்பு? - யோசித்துப்பாருங்கள்.

சாப்பிடாவிட்டால் கூட சிலரின் உடல் வஞ்சனை இன்றி வளர்ந்து விடுகிறது. இதற்காக உடலின் அளவைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டுமேயன்றி, 'எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்' என்று கவுரவம் பார்த்து வெளியில் வருவதைக் குறைக்கக் கூடாது. வீட்டுக்கு போலீஸ் வருவது பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்தவரின் இருப்பிடத்தை உறுதி செய்யத்தான். இதில் 'மற்றவர்கள் வேறுமாதிரி நினைத்து விடப்போகிறார்கள்' என பயப்படுவது ஏன்?

இப்படி எங்கும் எதிலும், எப்போதும் பெரியவர்கள் கூட கவுரவம் பார்ப்பதால் இளைய தலைமுறையும் இதையே பின்பற்றி, தன் திறமையை வெளிக்கொண்டு வர தயங்குகிறது. 'உனக்கு தெரிந்ததைப் பேசு' என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னால் 'சரியாகப் பேசவில்லையென்றால் எல்லோரும் தவறாக நினைப்பார்கள்' என்று பயப்படுகின்றனர். 'யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. முடிந்தவரை முயற்சி செய்' என்று அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நாளை சந்திக்க இருக்கும் நேர்முகத்தேர்வில் அவர்கள் வெல்ல முடியும். அவர்களை 'ஊக்குவிக்க யாரும் இல்லாவிடினும், குறை சொல்வோருக்கு குறைவில்லை'' எனும் நிலை ஆபத்தானது.

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால்நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதேஎண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும்,பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

தன்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்காக 'பஃப்பே' விருந்துக்கு ஏற்பாடு செய்தது ஒரு வங்கி. ஒரு கையில் தட்டு; மறுகையில் இரண்டு ஸ்பூன்கள். சப்பாத்தி, சிக்கன் என போர்க்ஸ்பூனுக்குள் சிக்காத அயிட்டங்கள். பலமாகக் கொத்தினால் போட்டிருக்கும் கோட்டுக்குள் குழம்புசீறி சிதறும் ஆபத்து. அதில் ஒரே ஒருவர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அசத்தினார். ஆம்,ஸ்பூன்களை வீசிவிட்டு கையால் எடுத்து, கடித்து, மென்று சாப்பிட்டு 'எங்கேப்பா ஐஸ்கிரீம்' என்று கேட்டபடி நகர்ந்தார்! மற்றவர்கள் முகம் சுளித்தனர். ஆனால், பிறர் மத்தியிலும் தனக்காக சாப்பிட்டவர் அவர் ஒருவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

குறை சொல்வது, பொறாமைப்படுவது, அவசரப்பட்டு பேசுவது, ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடன் அப்படியே நம்பி விடுவது போன்றவை மனிதனின் பலவீனங்கள். நம் பண்புகளையும், உழைப்பையும், வெற்றியையும் அவ்வளவு சீக்கிரம் சக மனிதர்கள் நம்பி ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை. 'மற்றவர்' என்று நாம் கருதும் அந்த மனிதர்களுக்கும் இது பொருந்தும்.இந்நிலையில் பிறர் பார்வைக்கும், சொல்லுக்கும் நாம் மதிப்பளித்து அவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் முன் திட்டு வாங்குகிறோமே என்றெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை.

உருக்குகிறோமே என்று தயங்கினால் தங்கம் நகையாவதில்லை, களி மண்ணேடுத்து அதனை குழைத்திட தயங்கினால் மண் பாத்திரமாவதில்லை; அடித்து, துவைக்கிறோமோ யோசித்தால் ஆடைகள் சுத்தமாவதில்லை; நம் குறைகள் நம்மிடமிருந்து நீங்க, நமக்கு வேண்டியவர்கள் நம்மை கையாளும் போதுதான் நம் அறிவுமுழுமையாகிறது. இதை யார் பார்த்தால் என்ன? எங்கு பார்த்தால் என்ன? நம் வளர்ச்சிக்குதடையாக இருக்கும் ஒரு விஷயம் நிஜ கவுரவமா அல்லது போலி கவுரவமா என்பதுதான் கேள்வி.

போலிக் கவுரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக்காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம். உண்மையில்லாதபட்சத்தில், நம்மை நோக்கி வந்து விழுகிற பழிச்சொற்கள் அசிங்கமல்ல; அதை பிறர் பார்த்தால் ஏற்படுகிற அவமானமும் நமக்கல்ல!!

-Abdul Razik

19 Responses So Far:

Noor Mohamed said...

படித்தவர்கள் எனத் தம்மை மக்கள் மத்தியில் காட்டிக் கொள்வதற்கு ஆங்கிலத்தில் பேசுவதுதான் கவுரம் என்ற கேவலமான நிலை நம்மில் பலருக்குண்டு.

பிள்ளைகள் பெற்றோர்களை உம்மா, வாப்பா என்று கூப்பிடுவதற்கு பதிலாக, பலர் முன்னிலையில் மம்மி, டாடி என அழைப்பதையே சில பெற்றோர்கள் கவுரமாக கருதுகின்றனர்.

சேக்கனா M. நிஜாம் said...

// பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால்நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதேஎண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும்,பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.//

மிகச்சரியான வார்த்தைகள் !

“வாழ்த்துகள்” அப்துல் ராஜிக்.........................இதே போல் தொடருங்கள் உங்களின் “விழிப்புணர்வு” எழுத்துச்சேவையை

sabeer.abushahruk said...

சாட்டையடி!

இப்படி அடிக்கடி கண்டிச்சாத்தான் நம்மாட்கள் திருந்துவாய்ங்க.

வருக வருக சகோ ராஜிக்

Anonymous said...

நன்றாக சொன்னீர்கள் சகோ. ராஜிக்.

சமீபத்தில் சென்னையில் பள்ளி ஆசிரியையை கொலை செய்த மாணவனின் செயலுக்கு கூட இந்த போலி கவுரவம் ஒரு காரணமாக இருந்ததாக கூறுகிறார்கள்.

மற்ற மாணவர்கள் முன்பாக தன்னை ஆசிரியை கண்டித்ததும், தனது பெற்றோரின் கவனத்துக்கு தனது தவறுகளை கொண்டு சென்றதும் கோபத்தை தூண்டியதாக கூறுகிறார்கள்.

நீங்கள் சுட்டி இருப்பது ஒரு தலையாய மனோதத்துவ பிரச்னை. இதை அனைவரும் உணர்ந்து தடுத்துக்கொள்ள முயல வேண்டும்.

நல்ல பதிவு. நல் வாழ்த்துக்கள்.

இப்ராகிம் அன்சாரி.

ZAKIR HUSSAIN said...

தன்னை இன்னொருவரின் வார்த்தையில் தேடுபவன் தன்னை தொலைத்து நாளாகிவிட்டது என அர்த்தம்.

சகோ; அப்துல் ராஜிக் எழுதியிருக்கும் விசயம் இப்போதைக்கு மிக அவசியமானது. நம் ஊர் போன்ற இடங்களில் சிலரின் போலி கெளரவத்துக்காக பல வருடம் வெளிநாட்டில் சிலரை அடிமையாக வைத்து சில குடும்பங்கள் வேலை வாங்கிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

நம்ம மதிப்பு என்ன ஆவுரது? எனும் முதல்சொல்தான்..ஒரு மனிதனை ஓய்க்கும் முதல்சொட்டு விசம்...எப்போதோ உசுப்பு ஏத்திவிடப்பட்ட வார்த்தைக்கு [ கல்யாண விருந்து / வீடு பெருசாகட்டணும் / நிறைய நகை போடனும் etc , etc] போன்ற போலி கெளரவங்கள்/போன்ற வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு பல வருடங்கள்[Prime years of life ]வெளிநாட்டில் தனது வாழ்க்கையை தொலைத்து விட்டார்களோ என நினைக்க தோன்றுகிறது.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

//// பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், சான்றிதழுக்கும், மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை. ////

அடுத்தவருக்காக வாழ்ந்தால் நம்முடைய சுயத்தை இழக்க நேரிடும். சரியான வார்த்தைகள்! வாழ்த்துக்கள்!

//// கணவனும், மனைவியும் தாங்கள் வளர்த்து வந்த கழுதையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.///

உலகத்தைப் பற்றி தன் மகனுக்கு தெரியப்படுத்த தந்தையும் மகனும் வெளியில் சென்று ஒவ்வொருவருவர் ஒன்று கூற: பிறர் என்ன சொல்வார்கள் என்று கவலைப்படக்கூடாது : என்று தந்தை மகனுக்கு அறிவுரை கூறுவார் என்று நான் படித்தது. கணவனும் மனைவியும் வைத்து இந்த படிப்பினையை படித்தது இல்லை.

அலாவுதீன்.S. said...

பிறர் நம்மைப்பற்றி மற்றவர்கள் முன் வைத்து அறிவுரை கூறினால் நாம் ஏற்றுக்கொள்வோமா? நம் மனது ஏற்றுக்கொள்வோமா?

போலி கவுரவம் என்பது வேறு பிறர் மத்தியில் மற்றவர்களை குறை சொல்வது கண்டிப்பது என்பது வேறு.

மனைவியானலும் சரி, குழந்தையானாலும் சரி, வேலையாட்கள்|ஆனாலும் சரி, நண்பர்கள் ஆனாலும் சரி யாரையும் யாருக்கும் முன்னாலும் வைத்து திட்டுவதோ அறிவுரை கூறுவதோ அறிவுடைமையாகாது.

அடுத்தவர்கள் மத்தியில் வைத்து தன்னை பெரிய அறிவாளிப்போல் நினைத்துக்கொண்டு அறிவுரை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அலாவுதீன்.S. said...

பிறர் நம்மைப்பற்றி மற்றவர்கள் முன் வைத்து அறிவுரை கூறினால் நாம் ஏற்றுக்கொள்வோமா? நம் மனது ஏற்றுக்கொள்ளுமா?

/// "என்னை அடியுங்கள், உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்'' என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்து கொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால்அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற 'கவுரவ நிலைப்பாடு' இங்கு வேரூன்றி விட்டது. ///

மற்றவர்கள் முன்னால் என்னை திட்டாதீர்கள் என்பது எப்படி கவரவ நிலைப்பாடு என்று சொல்ல முடியும். ஒரு மனிதனின் கண்ணியம் அல்லவா பறிபோகிறது. ஆணோ பெண்ணோ தன் கண்ணியம் பறிபோவதை பார்த்துக்கொண்டு நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், நாலு பேருக்கு முன்னால் கேட்டாலும் பரவாயில்லை என்ற நிலை பாடு ரோஷம் கெட்ட தன்மையாகி விடும்.

அலாவுதீன்.S. said...

கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார்????? மற்றவர்கள் முன் திட்டு வாங்குவது நல்ல செயல் என்று சொல்ல வருகிறாரா?????

/// பிறர் பார்வைக்கும், சொல்லுக்கும் நாம் மதிப்பளித்து அவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் முன் திட்டு வாங்குகிறோமே என்றெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை. ///

மற்ற மனிதர்களுக்கு முன்னால் தன் கண்ணிய
த்தை இழந்து நிற்க சொல்கிறாரா? ஒரு மனிதனின் கண்ணியத்தை மற்றவர்களுக்கு முன்னால் பறிப்பதற்கு அடுத்தவர்களுக்கு என்ன உரிமையிருக்கிறது. சங்கடப்படாதீர்கள் மற்றவர்களுக்கு முன் ரோஷம் இழந்து நில்லுங்கள் என்று அறிவுரை தருவது போல் இருக்கிறது.

அலாவுதீன்.S. said...

/// என்னை அடியுங்கள், உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்'' என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்து கொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால்அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற 'கவுரவ நிலைப்பாடு' இங்கு வேரூன்றி விட்டது. ///

மற்றவர்கள் முன்னால் என்னை திட்டாதீர்கள் என்பது எப்படி கவரவ நிலைப்பாடு என்று சொல்ல முடியும். ஒரு மனிதனின் கண்ணியம் அல்லவா பறிபோகிறது. ஆணோ பெண்ணோ தன் கண்ணியம் பறிபோவதை பார்த்துக்கொண்டு நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், நாலு பேருக்கு முன்னால் கேட்டாலும் பரவாயில்லை என்ற நிலை பாடு ரோஷம் கெட்ட தன்மையாகி விடும்.
போலி கவுரவம் என்பது வேறு பிறர் மத்தியில் மற்றவர்களை குறை சொல்வது கண்டிப்பது என்பது வேறு.

அலாவுதீன்.S. said...

///// "சக மாணவர்கள் முன் ஆசிரியர் என்னை திட்டி விட்டார்; அதனால் எனக்கு அவமானமாக இருந்தது'' என்று அம்மாவிடம் பையன் புலம்பினால் அது போலி கவுரவத்தின் அறியாப்பருவம். "இன்னொரு டீச்சர் முன்பு என்னைக் குறை சொல்லாதீங்க சார். என் கவுரவம் என்னாவது?'' என்று ஒரு டீச்சரே தலைமையாசிரியரிடம் குறைபட்டுக் கொள்வது போலி கவுரவத்தின் விபரீதவளர்ச்சி. தவறு தவறுதான். அதை யார் சொன்னால் என்ன? எங்கு சொன்னால் என்ன? அதற்கும் கவுரவத்திற்கும் என்ன சம்பந்தம்? ////

சக மாணவர்களுக்கு முன்னால் ஆசிரியருக்கு திட்ட உரிமை கிடையாது. டீச்சரை மற்ற டீச்சருக்கு முன்னால் குறை சொல்ல தலைமையாசிரியருக்கும் உரிமையில்லை. யார் சொன்னால் என்ன? எங்கு சொன்னால் என்ன என்று மனிதர்கள் கண்ணியத்தை இழந்து நிற்க முடியாது. மனிதர்களின் கண்ணியத்தைத்தான் தாங்கள் கவுரவம் போலி கவுரவம் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

அதற்காக கண்டிக்கவே கூடாதா?
கண்டிக்கலாம் தனியாக அழைத்து தாங்கள் செய்தது தவறு, நீ செய்தது தவறு என்று காரண காரியத்தோடு விளக்கி சொல்லும்பொழுது சொல்பவருக்கும் மதிப்பு கூடும். தவறு செய்தவர்களும் உடனடியாக திருத்திக் கொள்ளும் வாய்ப்பும் ஏற்படும்.

அலாவுதீன்.S. said...

///// போலிக் கவுரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக்காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம். உண்மையில்லாதபட்சத்தில், நம்மை நோக்கி வந்து விழுகிற பழிச்சொற்கள் அசிங்கமல்ல; அதை பிறர் பார்த்தால் ஏற்படுகிற அவமானமும் நமக்கல்ல!! ////

போலி கவுரவம் என்பது வேறு பிறர் மத்தியில் மற்றவர்களை குறை சொல்வது கண்டிப்பது என்பது வேறு.
மற்ற மனிதர்களின் கண்ணியத்தை சீர்; குலைக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது.
பிறர் மத்தியில் தவறுகள் சுட்டிக்காட்டப்படுவது அவமானமே. பிறர் முன்னால் சொன்னால் நிச்சயம் தவறுகள் களையப்பட வாய்ப்பே இல்லை. தனியாக அழைத்து அன்பாக எடுத்துச் சொல்லும்பொழுது நிச்சயம் தவறுகள் திருத்தப்படும். நாம் மற்றவர்களை அடுத்தவர்களுக்கு முன்னால் திட்டவோ, அறிவுரை கூறவோ புறப்படும் முன். நம்மை மற்றவர்கள் நாலுபேருக்கு முன்னால் இப்படி நடந்து கொண்டால் நாம் ஏற்றுக்கொள்வோமா??? என்று நினைத்து பார்க்க வேண்டும்.
யாரையும் யாருக்கும் முன்னாலும் அறிவுரை கூறவதோ, திட்டுவதோ நல்ல செயல் இல்லை என்பதை நாம் அனைவரும் புரிந்து. மற்றவர்களை தனியாக அழைத்து அறிவுரை சொல்வதோ, திட்டுவதோ என்ற நிலைக்கு வந்தால் இதுதான் அறிவான செயல் ஆகும். தவறுகளும் நிச்சயம் களையப்பட்டு திருந்த வாய்ப்பு கிடைக்கும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அடுத்தவருக்காக வாழ்வது போலி கவுரவம் என்பது எல்லோருக்கும் தெளிவு, இதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை.

தனிமனிதனுடைய குறைகளை மற்றவர்கள் முன் சுட்டிக்காட்டுவது அம்மனிதனுடைய சுயகவுரவத்திற்கு ஏற்படும் மிகப்பெரிய சவால். இக்கட்டுரையில் முடிவு வித்யாசமாக இருந்தாலும் இது பொதுவான விதியாக ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு மனிதனின் தவறை திருத்துவதற்கு அத்தவறை எப்படி சுட்டிக்காட்டுவது என்பதில் தான் நிறைய மக்கள் கருத்துவேறுபாடுகொள்கிறார்கள் என்பது என்னவோ உண்மைதானே..

பிறர் தவறை சுட்டிக்காட்டுகிறோம் என்ற பெயரில் மேடையேறியும், வாரப்பத்திரிக்கைகளிலும், இணையத்தளங்களிலும் தனிமனித கவுரவம் கண்ணியத்திற்கு வேட்டு வைக்கும் வேலையில் ஈடுபடுவது நவீண நாகரீகமாகிவிட்டது பெரும்பாலும் நம்மவர்களிடத்தில், இதில் ஒரு சிலர் விதிவிலக்கு.

இந்த நபிமொழியை எல்லோரும் மீண்டும் வாசிப்பது நல்லது

ஒருவரின் மானம் எப்படிப் பட்டது?

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது, 'இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!" என்றனர். உடனே அவர்கள் 'இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்க மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!" என்றனர். உடனே அவர்கள் '(இது) புனித மிக்க நகரமாகும்! இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?' என்றதும் மக்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!" என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் '(இது) புனிதமிக்க மாதமாகும்!' எனக் கூறிவிட்டு, 'உங்களுடைய இந்த (புனித) நகரத்தில் உங்களுடைய இந்த (புனித) மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போன்றே, அல்லாஹ் உங்கள் உயிர்களையும் உடைமைகளையும் உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!" எனக் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்கள், தாம் ஹஜ் செய்தபோது நஹ்ருடைய நாளில் ஜம்ராக்களுக்கிடையே நின்று கொண்டு, 'இது மாபெரும் ஹஜ்ஜின் தினமாகும்!' எனக் கூறினார்கள். மேலும், 'இறைவா! நீயே சாட்சி!" என்றும் கூறி மக்களிடம் இறுதி விடை பெற்றார்கள். எனவே, மக்களும் 'இது நபி(ஸல்) அவர்கள் (நம்மிடம்) விடை பெற்று (உலகைவிட்டு)ச் செல்கிற ஹஜ்ஜாகும்!" எனப் பேசிக் கொண்டார்கள்." (புகாரி: 1742. )

உண்மையை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே...

KALAM SHAICK ABDUL KADER said...

"ஊக்கு விற்பதற்கும் ஊக்குவிப்பது மிகவும் அவசியம்” என்பதை அற்புதமாக விளக்கியுள்ள அப்துற்றாஸிக் அவர்களின் கட்டுரை, உண்மையில் “போலி கவுரவம்” பார்க்கும் போலி மனிதர்கட்குச் சரியான சவுக்கடி!

Shameed said...

சகோ. ராஜிக் வாழ்த்துக்கள் நல்ல கருத்துக்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ. ராஜிக்கு, எப்புடி இப்படியெல்லாம்...??? சொல்லவே இல்லெ?? நல்லா எழுதிறிய.....அன்சாரியாக்கா, ஜாஹிராக்கா லிஸ்ட்லெ சேந்துட்டியளெ......ஆஹட்டும்.....

பெரும்பான்மையானோரின் வாழ்வில் போலி கவுரம் வேலி போட்டு அடைத்து அதற்குள் நடுவரில்லாமல் தான்‍தோன்றித்தனமாக பந்து விளையாண்டு வருவது என்னவோ உண்மையே.....

தாம் மேலே ஒரு கழுதையை வைத்து உதாரணம் தந்தீர்கள். அதில் கடைசியாக இதையும் சேர்த்திருக்கலாம். இப்படியெல்லாம் பார்த்து பலவாறு பேசிக்கொள்ளும் மக்களால் கணவன், மனைவி இருவரும் கழுதையின் மூக்கணாங்கயிற்றை பிடித்து நடந்து சென்றனர். அதையும் பார்த்து ஒருவர் கூறினாராம் 'சரியான கஞ்சத்தனமான தம்பதியாக இருக்குமோ? பொதி சுமக்கும் கழுதையை வைத்துக்கொண்டு இப்படி நடந்து செல்கின்றனரே?'

அதாவது இதன் உட்கருத்து என்னவெனில் உலகம் நாம் எதைச்செய்தாலும் எதையாவ‌து சொல்லிக்கொண்டே இருக்கும். ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ள் தொட‌ர‌ இவற்றையெல்லாம் ச‌ட்டை செய்ய‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை. (அப்பொ பேண்ட் செய்ய‌லாமா? என்று யாரும் கேட்டு விடாதீர்க‌ள்).

வாழ்த்துக்க‌ள் ச‌கோதர‌ரே. தொட‌ருங்க‌ள் ப‌டிக்க‌ க‌ண் வ‌லியில்லாம‌ல் காத்திருப்போம்......

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

போலி கவுரவத்தால் சிலருடைய வாழ்க்கையில்.பல காரியங்கள் வறண்டு விட்டது.போய்க்கொண்டிருப்பதை.கத்தியால் இல்லை புத்தியால் தோலுரித்த இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.சகோ. அப்துல் ராஜிக் வருக! வருக!

அப்துல்மாலிக் said...

பகிர்வுக்கு நன்றி சகோ. ராஜிக், போலிகவுரவம் தானும் தன்னோடு இணைந்தவர்களையும் படுபாதாளத்துக்கு தூக்கிச்செல்கிறாது என்பதை விளக்கும் இக்கட்டுரை நிச்சயம் பாராட்டுக்குரியவை

Yasir said...

போலி கவுரவம் களைப்பட வேண்டியதுதான்...எழுத எழுத எழுத்தும் கருத்தும் முதிர்ச்சி அடையும் தொடர்ந்து எழுதுங்கள் சகோ ராஜிக்...வாழ்த்துக்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.