Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மத்திய அரசின் Budget 2012 - ஓர் அலசல் 27

அதிரைநிருபர் பதிப்பகம் | March 20, 2012 | , , , ,

கவைக்கு உதவாத காட்டுப்பூ

நமது ஊர்களில் மோடிமஸ்தான்களைப் பார்த்திருப்போம். ஒரு பெட்டியில் பாம்பு வைத்திருப்பார்கள். ஒரு கீரிப்பிள்ளை கட்டிக்கிடக்கும். சுற்றி கூட்டம் நிற்கும். பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடப்போகிறேன் என்று சொல்லியே கூட்டத்தை கூட்டி வைத்திருப்பார்கள். கடைசிவரை விடமாட்டார்கள். கூட்டமும் எதிர்பார்த்துவிட்டு கலைந்து போய்விடும். இந்த நினைவுதான் வருகிறது மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கையைப் பார்க்கும்போது.

நாட்டின் பெரும்பான்மையினராக இருக்கக்கூடிய ஏழைகளும், நடுத்தரவர்க்கத்தினரும் ஒவ்வொரு முறையும் நிதிநிலை அறிக்கைகள் வரும்போது சில எதிர்பார்ப்புகளை வைத்திருப்பார்கள். தங்களுடைய பொருளாதாரச் சுமைகளை இந்த நிதிநிலை அறிக்கைகள் ஓரளவுக்கு குறைக்கக்கூடும் என்பது இந்த எதிபார்ப்பின் முக்கிய அம்சம். ஆனால் இப்போது சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை ஒரு பயனையும் தராமல் ஒரு சடங்காக முடிந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஒவ்வொன்றாக குறிப்பிடலாம்.

முக்கியமாக நடுத்தர வர்க்கத்தினர் எதிர்பார்த்தது வருமானவரியின் உச்சவரம்பு. இந்த உச்சவரம்பு எற்கனவே INR1,80,000/=  ஆக இருக்கிறது.  இதை இப்போது INR 2,00,000/=  ஆக உயர்த்தி இருக்கிறார். இந்த உயர்வில் எந்தப் பயனும் இல்லை. கடந்த வருட நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டபோது இருந்த விலைவாசிக்கும், இப்போதுள்ள விலைவாசிக்கும் ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த இருபதாயிரம் உயர்வு என்பது ஒரு ஏட்டுச்சுரைக்காய்- கறிக்கு உதவாது என்கிற நிலைதான். குறைந்தது ஒரு  INR 3,00,000/=  ஆக உயர்த்தி இருந்தால் மத்திய நிதி அமைச்சர் நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைகளை உணர்ந்து இருக்கிறார் என்று ஓரளவு ஒப்புக்கொள்ளலாம். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை.

நாட்டின் முக்கிய பிரச்னை கறுப்புப்பணம். குறிப்பாக வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள  கறுப்புப்பணம். இதை நாட்டுக்கு திரும்பக்கொண்டு வருவதற்கு எவ்வித ஆக்கபூர்வமான யோசனையும் இந்த அறிக்கையில் இல்லை. மாறாக, உள்நாட்டில்  கறுப்புப்பணத்தை ஒழிக்க புறப்பட்டு இருக்கிறேன் என்று காட்டும் விதமாக மீண்டும் நடுத்தட்டு மக்களின் தலையில் கை வைத்திருக்கிறது இந்த அறிக்கை. தங்க நகை வாங்குவோர் இனி பலவகையிலும் 4%  வரியும் கட்டவேண்டும். அத்துடன் இரண்டு லட்சம் மதிப்புக்கு மேல் வாங்கினால் PAN  (PERMANANET ACCOUNT NUMBER) பான் கார்டு காட்டி வாங்கவேண்டும். அத்துடன் அதற்கான வரி DAS ( DEDUCTION AT SOURCE)  என்ற முறையில் பிடித்தம் செய்யப்படும். ஏற்கனவே தங்க நகைகளின் விலை ஏறிக்கிடக்கிறது. இனி பவுனுக்கு ஆயிரம் ரூபாய் அதிகம் கொடுக்கவேண்டுமென்றால் இந்த சுமை நடுத்தரவர்க்கத்துக்கு பெரும் இடராக இருக்கும்.அதுமட்டுமல்லாமல் இந்த நடைமுறைகளிலும் வரிகளிலிருந்தும் தப்பிக்க விலைகளை குறைத்துப்போட்டோ அல்லது பல உறவினர் பெயர்களிலோ சில்லரையாக நகைவாங்கும் வழக்கமும் கடைப்பிடிக்கப்படலாம்.  இதனால் மேலும் கணக்கில் வராத கறுப்புப்பணத்தின் புழக்கம் அதிகரிக்கும்.

இதே முறைதான் அசையாச்சொத்துக்களை வாங்குவோருக்கும் கடைப்பிடிக்கப்படும். இதனால் பினாமி பெயரால் சொத்துக்கள் வாங்குவது அதிகரிக்கும். இவற்றைப் பார்க்கும்போது இப்படிப்பட்ட தவறுகளை செய்வதற்கு அரசே வழிவகுத்துக் கொடுப்பதாக தெரிகிறது.

நடுத்தரவர்க்கத்துக்கு உதவுகிறேன் என்ற முறையில் சில நுகர்வோர் பொருள்களுக்கான உற்பத்திவரி குறைக்கப்பட்டு இருக்கிறது. அவை LCD, LED   தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கும், LED மின் விளக்குகளுக்கும் உற்பத்திவரி குறைக்கப்பட்டுள்ளது.அத்துடன் மிக மிக முக்கியமாக அத்தியாவசியப்பண்டங்களில் ஒன்றான மகளிரின் சானிடரி நாப்கின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் செல்ஃபோன், மெமரி கார்டு ஆகியவற்றின் விலைகளும் குறையும்.மெமரி கார்டுகளின் விலைகுறைப்புக்கு காரணம் இன்னும் அதிகமான ஆபாசப்படங்களை பதிவுசெய்து வைத்துக்கொண்டு மக்கள் மகிழ்வாக இருக்கட்டும் என்ற பரந்த நோக்கமாக இருக்கலாம். பீடி, சிகரெட்கள் விலை வழக்கம்போல் கூடும். சொகுசுகார்களுக்கு விலை கூடும். இப்படி பரவலாக ஒரு பொருளாதார மாற்றத்தில் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்த முடியாத மாற்றங்கள் இந்த நிதி நிலை அறிக்கையில்- எங்கே போய் சொல்ல? யாரைக்கட்டிப்பிடித்து அழ?

நகர்ப்புறங்களின் வளர்ச்சிக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி இருககிறார்கள். இது வெளிப்படையில் வரவேற்கத் தகுந்ததாக தோன்றும். ஆனால் இதன் உண்மைப் பலனை அனுபவிக்கப் போகிறவர்கள் அரசியல்வாதிகள், ஒப்பந்தப் புள்ளிகாரர்களாகவே இருப்பார்கள். கடைசியில் கிணறு காணாமல்போன கதைதான். ஒருவகையில் கட்சிக்காரர்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்ற நோக்கமாகவும் இருக்கலாம். 

விவசாயிகளின் கடனுக்கு கூடுதலாக ஒரு லட்சம் கோடி தொகை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் விவசாய இடுபொருள்களின் விலைகளைக் குறைக்காமல் கடன்தொகையை உயர்த்தி இருப்பது கடனை அதிகம் வாங்கி அதிகவிலை கொடுத்து இடுபொருள்களை வாங்குங்கள் என்று விவசாயிகளைத் தூண்டுவது போலாகும். முக்கியமாக உரத்தின் விலை குறைக்கப்படவில்லை. மத்திய நீர்வள அமைச்சகத்தின் அறிக்கையின்படி வரும் ஆண்டின் பாசனத்துக்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு பணம் கட்டவேண்டிய நிலை வரலாம். அந்த தண்ணீருக்கு மானியம் கொடுக்கும் முறையிலாவது ஒரு சலுகை இந்த நிதி நிலை அறிக்கையில் இல்லை. விவசாயம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஒருநாளும் நாட்டை முன்னேறவிடாது.

நான் திரும்பத்திரும்ப கூறுவதன்படி இந்த அரசுக்கு முதலாளிகளின் மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலும் ஒரு தனி அக்கறை. நாட்டை சூறையாட அவர்களுக்கு அனுமதி அளிப்பதில் தயக்கமே காட்டுவது இல்லை. அதன்படி இந்த நிதி நிலை அறிக்கையிலும், பெரிய நிறுவனங்கள் இறக்குமதி செய்யம் விலை மதிப்புமிக்க இயந்திரங்களுக்கும், உதிரி பாகங்களுக்கும் பெருமளவில் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது இதுதான். தின்றவன் திங்க திருப்பாலக்குடிகாரர்கள் தெண்டம் கொடுத்த கதை. ஐந்து பவுன் தங்கம் கொண்டு வருபவனுக்கு இறக்குமதிவரி. பெரும் இலாபம் சம்பாதிக்கிறவனுக்கு இறக்குமதி சலுகை.- விளங்குமா?

இவ்வளவுக்கும் பிறகு அரசின் வருமான உயர்வுக்கு – அரசின் செலவுக்கு என்ன வழிவகை செய்து இருக்கிறது என்று நாம் கேட்டால் நமக்கு ஒரு அதிர்ச்சி இதில் காத்திருக்கிறது. தனது வருமானத்துக்கும் செலவுக்கும் அரசு பங்கு விலக்கல் மூலம் Rs. 30,000 கோடி திரட்டுவேன் என்கிறது. இந்த பங்கு விலக்கல் என்றால் என்ன? அது ஒன்றுமல்ல. என் பாட்டனும் முப்பாட்டனும் எனக்காக வேண்டுமென்று தேடிவைத்துள்ள நடுவிக்காடு, சேண்டாகோட்டை, அலத்திக்காடு தோப்பையும், திருத்துறைப்பூண்டி வயலையும் எனது தவறான பொருளாதார அணுகுமுறைகளால் நான் விற்றுவிட்டு “ஷோக்” கொண்டாடுவதுதான் பங்கு விலக்கல். அதாவது இந்திய அரசு, இவ்வளவு நாளாக பல இலாபம் தரும் நிறுவனங்களில் பங்குகளில் முதலீடு செய்து வைத்துள்ளது. இப்போது இதில் இருந்து பங்குகளை விற்றுவிட்டு அந்தப்பணத்தை அரசின் வருமானமாக வைத்துக் கொள்வேன் என்கிறது.

மொத்தத்தில் பார்க்கும்போது இந்த முறை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஒரு சடங்கு ஆக நிறைவேறி இருக்கிறதே தவிர இதில் பெரும்பான்மை மக்களுக்கு பயன் தரும் விதத்தில் ஒன்றும் இல்லை என்றுதான் கருத வேண்டி இருக்கிறது. பெரும் தொழில் அதிபர்கள் இந்த அறிக்கையை வரவேற்று இருககிறார்கள். மக்கள் நல இயக்கங்கள், விவசாய அணியினர், பாட்டாளி வர்க்கத்தினர் இந்த நிதி நிலை அறிக்கையை வரவேற்க முடியாது.

பொருளாதார அறிஞர்கள் BUDGET  என்கிற ஆங்கில வார்த்தைக்கு 'BUD'  'GET' என்று பிரித்து விளக்கம் தருவார்கள். அதாவது ஒரு மொட்டு மலர்கிறது என்று பொருள். அந்த மலரின் மொட்டு மலரும்போது அதில் மணம் பரப்பும் சுகந்தம் வேண்டும். அதில் உற்பத்திக்கு மகரந்தம் வேண்டும். அந்த மலர்  தேனருந்த வண்டுகளை அழைக்க வேண்டும். அதன்மூலம் காய்க்கவேண்டும்; கனியவேண்டும்; பலன்தரவேண்டும். இந்த தன்மைகள் இல்லாத மலர்கள் மலர்ந்தும் மலராத பாதி மலர்களே. நமது நிதியமைச்சர் மலர வைத்துள்ள இந்த மலர் ஒரு காட்டுப்பூ. கவைக்குதவாது.  

-இபுராஹீம் அன்சாரி

27 Responses So Far:

Noor Mohamed said...

//மொத்தத்தில் பார்க்கும்போது இந்த முறை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஒரு சடங்கு ஆக நிறைவேறி இருக்கிறதே தவிர இதில் பெரும்பான்மை மக்களுக்கு பயன் தரும் விதத்தில் ஒன்றும் இல்லை என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.//

இதுதான் சுருக்கமான உண்மை நிலை. எது எப்படியோ

//பொருளாதார அறிஞர்கள் BUDGET என்கிற ஆங்கில வார்த்தைக்கு 'BUD' 'GET' என்று பிரித்து விளக்கம் தருவார்கள்//

என்ற விளக்கத்தை இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் இந்த ஆக்கம் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி காக்கா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மெய்யாலுமே இந்த பட்ஜெட் பற்றி இன்னும் முழுமையாக செய்தித்தாள்களில் வாசிக்கவில்லை

தாத்தா தொலைக்காட்சி பேட்டியில் சொன்னாராமே "நல்ல பட்ஜெட்... ஏற்று கொள்வதும் / ஏற்றுக் கொள்ளாததும் உள்ளடக்கிய பட்ஜெட்"ன்னு ! இந்த பொடி விக்கிறவய்ங்க பேச்சத்தானே காலம் காலமா நம்புறாய்ங்க !

அருமையான அலசல் !

மெமரிகார்டுக்கு சலுகை ! :) நிறை பிளாக் மெயில்(!!!!) சேவை தொடர (புதிய தொழிலுக்கு வழிவகை) !!!!

அது சரி இ.அ.காக்கா அதென்ன "கவைக்கு உதவாத" ?

இவய்ங்க அதுக்கு சரிபட்டு வரமாட்டாய்ங்களோ ?

Shameed said...

பட் ஜெட் முழுமையான விளக்கம் அருமை மாமா வாழ்த்துக்கள் உங்கள் கட்டுரை மூலம் பல விசயங்கள் அறிந்து கொண்டேன்

Shameed said...

ஆக பட் ஜெட்டில் பணக்காரர்கள் பட் (என்று) செட்டில் ஆகிவிடுவார்கள் நடுத்தர மக்கள் எப்போதும் போல் நடுத்தெருவில்தான்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//.... நடுத்தர மக்கள் எப்போதும் போல் நடுத்தெருவில்தான் //

இல்லையே, ! பணக்காரர்களும் நடுத்தெருவிலே இருக்கிறார்களே...

சாதரனமாகத்தானே இதைச் சொல்றேன்...

Shameed said...

m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…

//இல்லையே, ! பணக்காரர்களும் நடுத்தெருவிலே இருக்கிறார்களே//

அந்த நடுத்தெருவல்ல இந்த நடுத்தெரு!

Anonymous said...

தம்பி அபூ இப்ராஹீம் அவர்களுக்கு,

//அது சரி இ.அ.காக்கா அதென்ன "கவைக்கு உதவாத" ?//

சரியில்லாத விஷயம் பற்றி சரியான கேள்வி. பதிலும் நீங்கள் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.

இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான். எதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்? இது பொதுவானது " கவைக்கு உதவாத" என்கிற சொற்றொடர் பற்றி. வழக்கில் லாயக்கு இல்லாதவர்களைப் பற்றி குறிப்பிடுவது. ஆனாலும் ஒரு விளக்கம் தேவை.

"கவைக்கு உதவாத என்றால் என்ன?" யாரைக் கேட்கலாம் என்று யோசித்தேன்.

துபாயில் அகாடமிக் சிட்டியில் நான் அறிந்த திரு. பிரகாசம் என்ற ஒரு பேராசிரியர் இருக்கிறார். அவரிடமே கேட்டுப்பார்க்கலாம் என்று அழைத்தேன். கேட்டேன். அவர் சொன்ன விளக்கம்.

கவைக்கு உதவாதது என்றால் என்ன? இது மாடுகளைப்பற்றி சொல்லத் தொடங்கப்பட்ட வார்த்தையாம். அதாவது கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைப்பதற்கு கவளை என்ற தோளில் ஆன ஒரு பையைக்கட்டி மாடுகளை ஏர்பூட்டுவதுபோல் அதில் பூட்டி கிணற்றுக்குள் அந்த கவளை போகவும் வரவும் செய்து நீர் எடுத்து விவசாயத்துக்கு செலுத்துவார்களாம். அதற்குரிய மாட்டுக்கு கவளை மாடு என்று பெயராம். சில தொத்தல் மாடுகள் இதற்கு ஒத்துவராதாம். அந்த மாடுகளை இது கவளைக்கு உதவாது என்று சொல்லத்தொடங்கி அது மருவி கவைக்கு உதவாது என்று ஆகிவிட்டதாம். உதவாதவைகளை அப்படி குறிப்பிடுவது வழக்கு என்று கூறுகிறார்.

உழக்கும் மாடுகளை செவலை மாடுகள் என்றும் சொல்வார்கள் என்பது உபரித்தகவல்.

ஏற்றுக்கொள்ளலாமா? இல்லை வேறு தமிழ் ஆசான்களையும் கேட்கலாமா?

வஸ்ஸலாம்.

இப்ராஹீம் அன்சாரி.

Shameed said...

இப்ராஹீம் அன்சாரி.

//ஏற்றுக்கொள்ளலாமா? இல்லை வேறு தமிழ் ஆசான்களையும் கேட்கலாமா?//

இதுவே மிகத்தெளிவான விளக்கமாக உள்ளது !!!

sabeer.abushahruk said...

ஒரு தனிப்பட்டத் துறையே இரவு பகல் பாராது உழைத்துத் தயாரிக்கும் பட்ஜெட்டை விமரிசிக்க அசாத்திய தைரியமும் ஞானமும் வேண்டும்.

இவை இரண்டும் அன்சாரி காக்காவிடம் இருக்கிறது என்பதற்கு ஆதாரமே இந்தக் கட்டுரை.

எந்த ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டாலும் எல்லா சாத்தியங்களையும் ஆராய்ந்து புள்ளி விவரங்களோடு பின்னியெடுக்கும் காக்கா அவரகளை மனதாரப் பாராட்டுகிறேன்.

அதிரை நிருபரின் தரத்திற்கு ஏற்ற பதிவர் காக்கா அவர்கள்.

வாழ்க.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

பிரணாப் முகர்ஜி - ஒரு மோடிமஸ்தான் என்பதும் உண்மை!

முன்னாள் நிதி அமைச்சர் - சர்வீஸ் சார்ஜின் தலைவர் - எல்லாவற்றிலும் சேவை வரி போட்டு மக்களை மொட்டையடித்தவர். இனி வருகின்றவர்களும் மொட்டையடிக்க வழி வகுத்தவர் - இவரும் ஒரு மோடிமஸ்தான்தான்.

இவர்களுக்கு மக்கள் எல்லாம் கிள்ளுக் கீரைகளாக போய்விட்டார்கள்.

//// ஏட்டுச்சுரைக்காய்- கறிக்கு உதவாது என்கிற நிலைதான். குறைந்தது ஒரு 3,00,000/= ஆக உயர்த்தி இருந்தால் மத்திய நிதி அமைச்சர் நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைகளை உணர்ந்து இருக்கிறார் என்று ஓரளவு ஒப்புக்கொள்ளலாம். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை.////

தன் வீட்டின் நிதிகளை ஒழுங்காகப் பார்ப்பார்களா? என்று தெரியவில்லை. குளு குளு அறையில் பட்ஜெட் தயாரித்து பணமுதலைகளுக்கு வலிக்காமல் என்ன செய்யலாம் என்று அந்நியனுக்கும் அந்நிய முதலீட்டுக்கும் விசுவாசமாக இருப்பவர்கள். ஏழை மக்களை கொண்ட நாடு இந்தியா என்பது இந்த அரசியல் வியாதிகளுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை.

அலாவுதீன்.S. said...

///நாட்டின் முக்கிய பிரச்னை கறுப்புப்பணம். குறிப்பாக வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம். இதை நாட்டுக்கு திரும்பக்கொண்டு வருவதற்கு எவ்வித ஆக்கபூர்வமான யோசனையும் இந்த அறிக்கையில் இல்லை. ///

இவர்கள் கொண்டு வருவதற்குள் கியாமத் வந்து விடும்.
**************************

/// தங்க நகை வாங்குவோர் இனி பலவகையிலும் 4% வரியும் கட்டவேண்டும். ///

தங்கம் 2ஆயிரம் 4ஆயிரம் விற்ற காலத்தில் ஏழை பெண்களின் திருமணங்கள் கேள்விக்குறியாக இருந்ததது. இந்தக் கொள்ளைக்காரர்களின் வரியால் இனி நகைகளை பேப்பரில் பார்க்கத்தான் முடியும் ஏழைகளால்.

எது எதற்கோ போராட்டம் செய்யும் மக்கள். நிச்சயம் தங்கத்திற்காக போராட்டம் செய்யாமல் இந்தியா முழுவதும் தங்கம் வாங்க மாட்டோம் என்று முடிவெடுத்து அதன்படி வாங்காமலும் இருந்தால் - பிராணப்பின் பட்ஜெட்டின் வரிக்கு ஒரு பெரிய அடி கிடைக்கும். செய்வார்களா??????? **************************

//// இதே முறைதான் அசையாச்சொத்துக்களை வாங்குவோருக்கும் கடைப்பிடிக்கப்படும்.////

ரியல் எஸ்டேட் துறை உயருமா? வீழுமா?
**************************

//// பொருளாதார மாற்றத்தில் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்த முடியாத மாற்றங்கள் இந்த நிதி நிலை அறிக்கையில்- எங்கே போய் சொல்ல? யாரைக்கட்டிப்பிடித்து அழ?////

மக்கள் விழிப்புணர்வு அடையாத வரை ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட கவலைப்படாத அரசியல் வியாதிகள் இருக்கும் வரை இப்படிபட்ட மோடி மஸ்தான்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார்கள்.

அலாவுதீன்.S. said...

/// அரசியல்வாதிகள், ஒப்பந்தப் புள்ளிகாரர்களாகவே இருப்பார்கள். கடைசியில் கிணறு காணாமல்போன கதைதான். ///

கட்டப்படாத பாலம், போடப்படாத ரோடு, கட்டாத கிணறு வகையில் - அனைத்தையும் கட்டிவிட்டோம் என்று கணக்கு காண்பித்து. ஒப்பந்தப் புள்ளிகாரர்களான அரசியல்வியாதிகளுக்கே போய்ச்சேர்ந்து விடும்.
********************************

///விவசாயிகளின் கடனுக்கு கூடுதலாக ஒரு லட்சம் கோடி தொகை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ///

விவசாயிகளுக்கு கடன் கொடுக்கிறேன் பேர்வழி என்று சிறு விவசாயிகள் பெயரை வைத்து பினாமியாக பணக்கார பெரு விவசாயிகளும் அரசியல்வாதிகளுமே இதில் லாபம் பெற்று விடுகிறார்கள். பிறகு விவசாயிகள் வாரக்கடன் தள்ளுபடி என்று அறிவிக்கப்படும். மானமுள்ள உண்மை விவசாயிகள் கந்து வட்டிக்காரனிடம் மாட்டிக்கொண்டு உயிரை விடுவார்கள்.
********************************

//// மத்திய நீர்வள அமைச்சகத்தின் அறிக்கையின்படி வரும் ஆண்டின் பாசனத்துக்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு பணம் கட்டவேண்டிய நிலை வரலாம். அந்த தண்ணீருக்கு மானியம் கொடுக்கும் முறையிலாவது ஒரு சலுகை இந்த நிதி நிலை அறிக்கையில் இல்லை. விவசாயம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஒருநாளும் நாட்டை முன்னேறவிடாது.////

தண்ணீரை தேசியமயமாக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இறைவன் வழங்கிய தண்ணீருக்கும் வரியா????????? யாரை கேட்கிறாய் வரி? பரங்கித் தலையா? என்று மக்கள் கட்டபொம்மன் ஸ்டைலில் பேச ஆரம்பிக்கும் காலமும் விரைவில் வரத்தான் போகிறது. (இந்தியாவின் நீர் ஆதாரத்தில் உலக(ரவடி)வங்கிக்கு ஒரு கழுகு கண் இருக்கிறது).
********************************

////நான் திரும்பத்திரும்ப கூறுவதன்படி இந்த அரசுக்கு முதலாளிகளின் மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலும் ஒரு தனி அக்கறை. நாட்டை சூறையாட அவர்களுக்கு அனுமதி அளிப்பதில் தயக்கமே காட்டுவது இல்லை.///

1000% உண்மை... உண்மை... உண்மை.

அலாவுதீன்.S. said...

/// ஐந்து பவுன் தங்கம் கொண்டு வருபவனுக்கு இறக்குமதிவரி. பெரும் இலாபம் சம்பாதிக்கிறவனுக்கு இறக்குமதி சலுகை.- விளங்குமா?///

ஏழைகளின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டவனுக்கு நல்ல சாவு வராது என்பது பழமொழி.

நிச்சயம் விளங்க மாட்டார்கள் அரசியல்வியாதிகள்.

தங்கம் பழைய விலைக்கு வருவதற்கு ஒட்டு மொத்த இந்திய மக்களும் - அதிகம் வேண்டாம் ஒரு மாதத்திற்கு வாங்குவதில்லை என்று முடிவெடுத்தால் நிச்சயம் இதன் பலன் கிடைக்கும்.
***************************************

//// இவ்வளவுக்கும் பிறகு அரசின் வருமான உயர்வுக்கு – அரசின் செலவுக்கு என்ன வழிவகை செய்து இருக்கிறது என்று நாம் கேட்டால் நமக்கு ஒரு அதிர்ச்சி இதில் காத்திருக்கிறது. தனது வருமானத்துக்கும் செலவுக்கும் அரசு பங்கு விலக்கல் மூலம் Rs. 30,000 கோடி திரட்டுவேன் என்கிறது. இந்த பங்கு விலக்கல் என்றால் என்ன? அது ஒன்றுமல்ல. என் பாட்டனும் முப்பாட்டனும் எனக்காக வேண்டுமென்று தேடிவைத்துள்ள நடுவிக்காடு, சேண்டாகோட்டை, அலத்திக்காடு தோப்பையும், திருத்துறைப்பூண்டி வயலையும் எனது தவறான பொருளாதார அணுகுமுறைகளால் நான் விற்றுவிட்டு “ஷோக்” கொண்டாடுவதுதான் பங்கு விலக்கல். அதாவது இந்திய அரசு, இவ்வளவு நாளாக பல இலாபம் தரும் நிறுவனங்களில் பங்குகளில் முதலீடு செய்து வைத்துள்ளது. இப்போது இதில் இருந்து பங்குகளை விற்றுவிட்டு அந்தப்பணத்தை அரசின் வருமானமாக வைத்துக் கொள்வேன் என்கிறது.////


ஆஹா! சூப்பர் திட்டம். சமீபத்தில் ஒரு நாட்டின் அதிபர் (நாடு ஞாபகத்திற்கு வரவில்லை) நாட்டை கடனில் மூழ்கடித்து விட்டு, மஞ்சள் கடிதாசி கொடுத்து விட்டு நாட்டை விட்டு தப்பி போய்விட்டார்.

இந்த அரசியல்வியாதிகள் போடும் திட்டங்களாலும், மக்களின் மேல் வலிந்து போடும் வரிகளாலும், கடனுக்கு மேல்; கடன் உலக வங்கியில் தனித் தனி மாநிலமாக வாங்கி உயர்த்தி வருவதாலும். அந்த உலக ரவடி வங்கி மாநிலம் மாநிலமாக, துறை வாரியாக கடனை வாரி வழங்கிக் கொண்டு இருப்பதாலும் ஒரு நாள் இவர்களும் மஞ்சள் கடிதாசி கொடுத்து நாட்டை விட்டு ஓடும் நாளும் விரைவில் வரும்.

இன்னொரு பெரிய அதிர்ச்சி உலக ரவடி வங்கிக்கு கோடிக்கணக்கில் வட்டி மட்டும்தான் கொடுத்து வருகிறார்கள். முதல் அடைப்பதற்குள் கியாமத் வந்து விடும்.

அலாவுதீன்.S. said...

///இதில் பெரும்பான்மை மக்களுக்கு பயன் தரும் விதத்தில் ஒன்றும் இல்லை என்றுதான் கருத வேண்டி இருக்கிறது. பெரும் தொழில் அதிபர்கள் இந்த அறிக்கையை வரவேற்று இருககிறார்கள். மக்கள் நல இயக்கங்கள், விவசாய அணியினர், பாட்டாளி வர்க்கத்தினர் இந்த நிதி நிலை அறிக்கையை வரவேற்க முடியாது.///

****************************
அதானே பார்த்தேன்!! எல்லா பணக்கார முதலைகளாக பட்ஜெட்டை வரவேற்று பேட்டி கொடுத்தார்களே என்று.

நிச்சயம் ஏழைகளுக்கான நிதி நிலை அறிக்கை இது இல்லை.

உமர்(ரலி)அவர்களின் ஆட்சி வேண்டும் என்றார் காந்தி. நாமும் அதுபோல் எதிர்பார்க்கிறோம். நம் காலத்திலா அல்லது பேரன்கள் ... பேரனுக்கு பேரன் காலத்திலா? நிச்சயம் ஒருநாள் வல்ல அல்லாஹ்வின் அருளால் இறை ஆட்சி வரும்.

சகோ. இபுராஹீம் அன்சாரி அவர்களுக்கு: பட்ஜெட் பற்றி தெளிவாக விளக்கியதற்கு வாழ்த்துக்கள்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதிரை நிருபரின் தரத்திற்கு ஏற்ற பதிவரும்,பதிவும்!

ஒன்றுக்கும் உதவாத காட்டுப்பூ போன்ற மணமே இல்லாத பட்ஜெட் என்பதை உங்களின் தெளிவான விளக்கம் உணர்த்துகிறது.

ZAKIR HUSSAIN said...

Mystery in India:

1. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட பணம் ... ஒதுக்கப்பட்டு போவது. [பொதுமக்களுக்கு பயன் படாமல் ]

2. சுதந்திரம் அடைந்து இன்றுவரை 64 பட்ஜெட் போடப்பட்டிருக்கும்...இந்த பட்ஜெட் 'மக்களுக்கான பட்ஜெட் என்று ஆளுங்கட்சி / கூட்டணி சொல்வதும்....பணக்காரர்களுக்கான பட்ஜெட், ஏழைகள் தொடர்ந்து கஸ்டத்தில்தான் இருப்பார்கள் என்று எதிர்கட்சி சொல்வதும் ஸ்டேன்டர்ட் டயலாக்
3.போன முறை 'சிறந்த பட்ஜெட்' என்று சொன்ன அரசியல் குரங்குகள் இன்று உருப்படாத பட்ஜெட் என்று ஏன் சொல்கிறது என்று சிந்திக்காமல் எல்லோரும் வழக்கம் போல் பாலுக்கும், மண்ணெண்னைக்கும் , அரிசிக்கும் க்யூ வில் நிற்க தயாராவது.

4. பட்ஜெட் விசயங்களை ஆராயும் திறன் படைத்த இப்ராஹிம் அன்சாரி அண்ணன் போன்றவர்களை பாஸ்போர்ட் எடுத்து கண்கானாத ஊருக்கு அனுப்பி வைப்பது.

Unknown said...

விவசாயிகளின் கடனுக்கு கூடுதலாக ஒரு லட்சம் கோடி தொகை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் விவசாய இடுபொருள்களின் விலைகளைக் குறைக்காமல் கடன்தொகையை உயர்த்தி இருப்பது கடனை அதிகம் வாங்கி அதிகவிலை கொடுத்து இடுபொருள்களை வாங்குங்கள் என்று விவசாயிகளைத் தூண்டுவது போலாகும். முக்கியமாக உரத்தின் விலை குறைக்கப்படவில்லை. மத்திய நீர்வள அமைச்சகத்தின் அறிக்கையின்படி வரும் ஆண்டின் பாசனத்துக்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு பணம் கட்டவேண்டிய நிலை வரலாம். அந்த தண்ணீருக்கு மானியம் கொடுக்கும் முறையிலாவது ஒரு சலுகை இந்த நிதி நிலை அறிக்கையில் இல்லை.
---------------------------------------------------------------

ஜாகிர் காக்காவின் பாஷையில் இப்படி சொல்லாம்
ஏதோ MNC யின் SALES AGENDA மாதிரி இருக்கு
இது இந்தியாவின் ORIGINAL VERSION அல்ல...

lot of information Thanks Ansari KAAKA

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மந்திர வாதியின் முகத்தை தோல் உரித்து காட்டிய விதம்.அருமை காக்கா.

இவங்களை எல்லாம் பேசாமே நதியோரம் உட்கார்ந்து கிளி ஜோசியம் பார்க்க சொல்லலாம். கையிலே இருக்கிற பெட்டியாவது நிறைஞ்சு கொட்டும்.

Anonymous said...

இப்போ போட்டுயிருக்கிற பட்ஜட் எல்லா மக்காளுக்கும் உதவாத பட்ஜ ட்டாக உள்ளது. இந்த பட்ஜட் எல்லா மக்களையும் பாதிப்புல்லாக்கியுள்ளது.

நடுத்தெரு மக்களுக்கு மட்டுமல்ல எல்லாதெரு மக்களுக்கும் பாதிப்புத்தான். இந்த உதவாத பட்ஜட் அரசு சாதகமாக போட்டுவிட்டார்கள் மக்களுக்கு சாதகமாக இல்லை.

Yasir said...

வீணாப்போன வெட்டி பட்ஜெட்...அதனை தெள்ளத்தெளிவாக பல உதராணங்களுடனும்,ஆதாரங்களுடனும் எடுத்து சொன்ன அன்சாரி மாமாவிற்க்கு வாழ்த்துக்கள்....சிறந்த,முதிர்ந்த எழுத்து + கருத்து நடை

அப்துல்மாலிக் said...

நல்ல அலசல் காக்கா, இந்த பட்ஜெட் இப்படியே தொடருமா இல்லை ஆட்சி மாறினால் இந்த பட்ஜெட்டும் மாறுமா (செல்லாமல் போகுமா)?

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

அன்புமிக்க தம்பி கவிஞர் சபீர் அவர்களுக்கு, மற்றும் ஜனாப். M.H.J. ( MSM) அவர்களுக்கும்

//அதிரை நிருபரின் தரத்திற்கு ஏற்ற பதிவர் காக்கா அவர்கள்//. அதிரை நிருபரின் தரத்திற்கு ஏற்ற பதிவர் என்பதைவிட பதிவர்கள் என்று அனைத்துப் பதிவர்களையும் சொல்லவேண்டும்.

இங்கே பதியப்படுகிற ஒவ்வொன்றும் மாஷா அல்லாஹ் பொறுப்புடையதாகவும், சமுதாய உயர்வை நோக்கம் கொண்டதாகவும், தகவல்களை சொல்வதாகவும் அமைந்திருப்பதுடன் அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும் பெறுவதற்கான தகுதிகளையும் பெற்றிருப்பது நாம் செய்த பெரும் பாக்கியமாகும்.

சகோதரர் அலாவுதீன் அவர்களிலிருந்து ஜனாப். ஜமீல் (காக்காவா தம்பியா என்று தெரியவில்லை) ஆகியோருடைய கட்டுரைகளும், உலக இலக்கியத்தரம் வாய்ந்த கவிஞர்கள் சபீர், கவியன்பன் அபுல் கலாம், மு.செ.மு.நெய்னா, ஷேக்கனா நிஜாம், ZAEISA, ஆகியோருடைய பதிவுகளும் பெரும் தரம் வாய்ந்தவைகளாக இருப்பது இறைவன் தந்த வரம். இவர்களுடன் நெறியாளர் அபூ இப்ராஹீம் அவர்களுடன் என் தம்பி – நான் தம்பி என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளதத்தக்க வகையில் படிக்கட்டுகளை கட்டும் அன்பு ஜாகீர்- பேசும்படம் தரும் மருமகன் சா. ஹமீது இவர்கள் யாருமே அந்த அந்த துறையில் தரம் வாய்ந்த பதிவுகளை தருகிறார்கள்.

இந்த அமைப்பு பெருமைக்குரியது. இங்கு பதியப்படுபவை வெற்று Gossips அல்ல.

மகுடம் வைத்தாற்போல் ஜனாப். அஹமது காக்கா அவர்களின் ஆய்வுக்கட்டுரை! சொல்லவே வேண்டாம். பெருமைக்குரிய பதிவல்லவா?

சிலர் மட்டுமே பின்னூட்டங்களை பதிவு செய்கிறார்கள். ஆனால் பலர் படிக்கிறார்கள்- பலனடைகிரார்கள் என்ற செய்தியும் இனிப்பானதே. தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்தும் தம்பி நூர் முகமது (தொலைபேசி மூலமாகவும்), L.M.S. அபூபக்கர் , யாசிர், அப்துல் மாலிக், போன்றோர் தருவதுதான் பூஸ்ட் இஸ் தெ சீக்ரெட் ஆப் மை எனர்ஜி. (our Energy). ஜசக்கலல்லா ஹைரண்.

நான் பதிவிடும்போது எனக்கு நிறைய நண்பர்கள் அதிரை, முத்துப்பேட்டை, குமரி, துபாய் மற்றும் வளைகுடாவின் பல நாடுகளில் இருந்து அழைத்துப்பாராட்டுகிறார்கள். இவர்கள் அனைவரின் எதிர்பார்ப்புக்கும் ஏற்றபடி பதிவுகளை செய்யவேண்டுமென்றே நிறைய கவனம் எடுத்துகொள்ள வேண்டி இருக்கிறது. இதே கருத்தை நெறியாளர் அவர்களும் சொன்னார்கள். முக்கியமாக நிறைய சகோதரிகள் படிக்கிறார்கள் என்பது அனைவரின் மனதுக்கும் மகிழ்வு தரும் செய்தி. பல பேராசிரியர்களும், ஆலிம்களும், மாணவர்களும் கூட படிக்கிறார்கள்.

ஆகவே தரம் என்பது தளம், பதிவர், படிப்பவர்கள் என எல்லோரிடமும் பரவிக்கிடக்கிறது.

ஆகவே தரத்தை என்றும் காப்போமாக!. QUALITY ASSURANCE AND QUALITY CONTROL ARE MOST IMPORTANT ASPECTS IN HRD POLICIES.

தம்பி. அப்துல் மாலிக் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

//ஆட்சி மாறினால் இந்த பட்ஜெட்டும் மாறுமா (செல்லாமல் போகுமா)?//

போகாது . இந்த பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தி, நிதி அமைச்சர் விளக்கமளித்து, நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறிவிட்டால் இந்த நிதி ஆண்டுக்கு ( Fiscal Year) இதுதான் பட்ஜெட். ஆட்சி மாறினாலும் அடுத்த பட்ஜெட் வரை இதன் ஒதுக்கீடுகள் நீடிக்கும்.

அடுத்த ஆட்சி தனது பட்ஜெட்டை அடுத்த நிதி ஆண்டுக்கு சமர்ப்பிக்கும். அப்போது வேண்டாதவைகளை ரத்து/ மாற்றம் செய்யலாம்.

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

இப்படி அல்லவா எதிர்பார்க்கிறோம் நிதிநிலை அறிக்கையை

மருத்துவ விஞ்ஞானம் இந்தியாவில் சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது. பல நாட்டினர் மருத்துவ சிகிச்சைக்காக பல்லாயிரக்கணக்கில் இந்தியா வருகிறார்கள். ஆனால், அடிப்படை மருத்துவ சிகிச்சை வசதிகள் சாதாரண மக்களையும் கிராம மக்களையும் இன்னும் சென்றடையவில்லை.
சென்ற ஆண்டு பட்ஜெட்டில் மருத்துவ வசதி, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் ஒன்றாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டது. ஒரு முழு வருடம் உருண்டோடிவிட்டது. அதற்கான தொடர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்த அறிவிப்பின் பயனாக, என்னென்ன வரிச் சலுகைகள் மற்றும் கூடுதல் நன்மைகள் வழங்கப்பட உள்ளன என்பதுகூட சம்பந்தப்பட்ட யாருக்கும் தெரியவில்லை.

இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என பிரதமர் அண்மையில் அறிவித்திருக்கிறார். இது நம்பிக்கையூட்டும் செய்தி. கிராமங்கள், சிற்றூர் முதல் பெரு நகரங்கள்வரை சாதாரண மக்களின் மருத்துவ வசதிக்கு, கால வரம்புடன் கூடிய, பொது சுகாதார மேம்பாட்டுத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். நம் நாட்டில் டாக்டர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகவும் செவிலியர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காகவும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் தலைவர் பிரதாப் சி. ரெட்டி அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஓட்டு வங்கியை கருத்தில்கொண்டு, இடையிடையே விவசாயக் கடனை தள்ளுபடி செய்யும் போக்கை கைவிட்டு, விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காவும் தரிசாக உள்ள நிலங்களை விளைநிலங்களாக விரிவாக்கம் செய்வதற்கும் உரிய வகையில், நீண்டகால அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை. விவசாயிகளின் தற்கொலைகள், பழங்கதையாக மாறிடும்வரை, விவசாயிகள் மீது தொடர்ந்து முனைப்பு காட்டிட வேண்டும்.

செலவு இனங்களை எடுத்துக்கொண்டால், உணவு, உரம், பெட்ரோலியப் பொருட்கள் (அதாவது டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு) ஆகியவற்றுக்கான மானியச் செலவு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இன்னும் சொல்வதென்றால், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, உணவு உத்தரவாதத் திட்டம் அமல்படுத்தப்படும். அதன் விளைவாக, உணவு மானியச் செலவு எகிறி விடும் என்பது வெளிப்படை.

உலகின் பிற நாடுகளில் நிறைய புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்நாடுகளின் அரசும் அதை ஊக்குவிக்க நிறைய நிதி உதவி செய்யப்படுகிறது. ஆனால் நமது நாட்டில் அதை பற்றி யாரும் கவலை கொள்வதே கிடையாது. இந்தியாவில் அமையும் அரசுகள் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க அதிக நிதி ஒதுக்குவதும் இல்லை, அப்படியே ஒன்று கண்டுபிடித்தாலும் அதை ஊக்குவிப்பதும் இல்லை. ஒவ்வொரு அரசியல்வாதியும் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியும், கொள்ளை அடித்துவிட்டு அதில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று மட்டுமே தான் சிந்திக்கிறார்கள்.

கருப்பு பணம்

அன்னிய நேரடி முதலீடு, இந்திய நிறுவனப் பங்குகளில் அன்னிய முதலீடு என பல வழிகளிலும் இந்தக் கறுப்புப் பணம் இந்தியாவுக்குள் ஏற்கெனவே வந்துவிட்டது. இப்போது 2011-ம் ஆண்டின் அரையாண்டு முடிவுற்ற நிலையில், மேலதிகமான பணம் இந்த நாடுகள் வழியாக இந்தியாவுக்குள், வெள்ளைப் பணமாக மாறி வந்திருக்கவும்கூடும். இந்தியாவில் பங்கு வர்த்தகத்தைக் கண்காணிக்கும் செபி அமைப்பு மற்றும் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா ஆகியன இத்தகைய முறைகேடுகளை மிகவும் நுட்பமாகப் பார்ப்பதாகச் சொல்லப்பட்டாலும் மத்திய அரசு, பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்கிற நிலைப்பாட்டில் செயல்படும்போது அவர்களால் இந்த அமைப்புகளை என்னதான் செய்துவிட முடியும்? இவ்வாறு முறைகேடாக அன்னிய நேரடி முதலீடு வருகிறது என்று தெரிந்தவுடன் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்? இதற்கான வழிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அப்படியெல்லாம் நமது அரசு கவலைப்பட்டுக் கொள்வதாகவே இல்லை. வெளிநாட்டிலிருந்து யார் வேண்டுமானாலும், நேற்று முளைத்த காளான் நிறுவனங்கள்கூட முதலீடு செய்யலாம் என்று அரசு அனுமதிப்பதும், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கறுப்புப்பணத்தை நீங்கள் சட்டப்பூர்வ முதலீடாக இந்தியாவுக்குக் கொண்டு வாருங்கள் என்பதும் ஒன்றுதான்.

அன்னிய முதலீட்டுக்கு எல்லாக் கதவுகளையும் திறந்துவைத்து கேள்விமுறை இல்லாமல் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளுங்கள் என்று அனுமதித்து விட்டால் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் போட்டு வைத்திருப்பதாகச் சொல்லப்படும் 2.5 பில்லியன் டாலர்களும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

சாரி லேட்டாயிடுச்சி இப்ராஹீம் அன்சாரி சார் (காக்கா).
பள்ளியிலே பொருளாதார பாடம் கசந்துச்சி,
இப்போ புரியவும் செய்யிது,நல்லாவும்இருக்கு,நல்லா பாடம் நடத்துறீங்க சார்.எங்க ஹாஜி முஹம்மத் சார் மாதிரி

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ. இபுராஹீம் அன்ஸாரி,

இந்த பட்ஜெட்டுக்காக நிதியமைச்சர் அதிகமாக அலட்டிக்கொள்ளவில்லை; உழைப்பும் செலுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. விலைவாசி ஏற்றத்தின் ரேஷியோவைப் பற்றித் தெளிவான அறிவு (50-60%) உள்ளவராக இருந்தால் வருமான வரி உச்சவரம்பில் வெறும் 6% கூட்டியிருப்பாரா?

இந்திய அரசின் அதிகாரபூர்வமான அறிக்கையின்படி கடந்த பத்தாண்டுகளில் வறுமையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,80,000. 'விவசாய நீருக்காகப் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்குக் கட்டணம்' எனும் கூடுதல் சுமை ஏற்றப்படின் தற்கொலைகள் கூடுமா? குறையுமா? என்பதைக்கூட யோசிக்காத மக்கள் விரோத பட்ஜெட் இது.

இதற்கிடையில், இந்தியாவில் 'வறுமைக் கோட்டுக்கு'க் கீழே இருந்தவர்களுள் 8% மேலே வந்துவிட்டார்களாம். தமிழக மக்களுள் 10% வறுமைக் கோட்டிலிருந்து வெளியேறிவிட்டார்களாம். திட்டக் கமிஷன் கூறுகிறது.

எல்லாஞ் சரிதான்!

தனிமனித வருமானத்தைப் பற்றிப் பேசாமல், கிராமப் பகுதிகளில் ஒருநாளைக்கு 23 ரூபாய் செலவழிக்கக்கூடியவர்களும் நகர்ப் பகுதிகளில் 33 ரூபாய் செலவழிக்கத் தெரிந்தவர்களும் வறுமைக் கோட்டிலிருந்து விடுபட்டவர்களாவர் என எவருக்கும் பிடிபடாத விளக்கம் கூறுகின்றனர்.

வறுமைக் கோட்டுப் பார்ட்டிகளுள் 80% பேர் பட்டினியுடன் இரவில் தூங்குகின்றார்களாம். இதையும் வெட்கங்கெட்ட அரசே சொல்கிறது.

ஸலாம் கூறிவிட்டு, தலையைச் சொறிந்துகொண்டு நிற்பவரிடம் 100 ரூபாய் கொடுத்தால் அவருக்கு 50 ரூபாயை ஒரேநாளில் செலவழிக்கத் தெரியாதா என்ன?

இந்திய மக்களுள் எவரும் இதுவரை கண்டுபிடிக்காத 'வறுமைக் கோடு' பற்றிய தெளிவான ஓர் ஆய்வுக் கட்டுரை தாருங்கள்.

***

கருகரு தலைமுடி கொண்ட உங்கள் சகோதரர் அஹ்மது ஷாவும் நானும் ஒத்த வயதினர். நான் உங்களுக்கு மூத்தவனா? இளையவனா? நீங்கள்தாம் முடிவு செய்துகொள்ள வேண்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இந்திய மக்களுள் எவரும் இதுவரை கண்டுபிடிக்காத 'வறுமைக் கோடு' பற்றிய தெளிவான ஓர் ஆய்வுக் கட்டுரை தாருங்கள்.//

இ.அ.காக்கா அவர்களுக்கு,

நானும் ஜமீல் காக்காவின் வேண்டுகோளை வழிமொழிகிறேன்...

சொல்லாமலே ஆய்வு செய்யும் நீங்கள் நாங்கள் கேட்டால் செய்யாமலே இருப்பீர்கள் !?

சபீர் காக்கா... சீக்கிரம் கிரேனை விட்டு இறங்கி வாங்க இங்கே !

Anonymous said...

அன்பின் சகோதரர் ஜனாப். ஜெமீல் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

ஜசக்கல்லாஹ் ஹைரண். தங்களின் சிறப்பான பின்னூட்டத்துக்கும் அன்புக்கட்டளைக்கும்.

இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன். ( தம்பி அபூ இப்ராஹீம்! தாங்களும் கவனிக்க).

என் சகோதரர் அஹமது ஷா எனக்கு இளையவர்தான். அவரை குறிப்பிட்ட பிறகுதான் உங்களின் அன்றைய இளமை முகம், உங்கள் வீடு, உங்கள் தந்தை, தாயார் ஆகியோர் எனது நினைவில் வந்தார்கள். உங்களுக்கு ஒரு சகோதரர் இருந்தார் அவர் உங்களுக்கு மூத்தவரா அல்லது இளையவரா என்று நினைவு இல்லை. மேலும் நீங்கள் எனது தம்பி இக்பாலுக்கு வகுப்புத்தோழர் என்று நினைக்கிறேன். மிக்க மகிழ்ச்சி- கண்ணியத்துக்குரிய உங்களின் தொடர்பு கிடைத்ததற்கு.

தம்பி இர்பான் அவர்கள் இவ்வளவு விளக்கமான பின்னூட்டம் இட்டு இருக்கிறீர்கள். ஆனால் தொடர்ந்து தனிப்பதிவுகள் தராமல் எங்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள். இதற்கான இ. பி.கோ. என்ன என்று தம்பி சபீர் அவர்கள் , நெறியாளர் அவர்களுடன் கலந்து கொண்டு அறிவிக்கப்படும். மருமகனார் யாசிர் அவர்கள் மூலம் எப் ஐ ஆர். போடப்படும் என்று அன்பு எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன்.

தம்பி அர.அல. நீங்கள் வகுப்புக்கு தாமதமாக வந்தாலும் பாடத்தை பிக் அப் செய்துகொண்டவரை, மகிழ்ச்சி. உங்களின் அன்புக்கு என்றும் அருகதை உடையவனாக் இறைவன் ஆக்கி வைப்பானாக.

தம்பி எல் .எம். எஸ். அபூபக்கர் ! எதற்கும் தங்கள் கடையில் கொஞ்சம் கிளிஜோசியப் பெட்டி வாங்கி இருப்பு வையுங்கள். அடுத்து தமிழக பட்ஜெட் வர இருக்கிறது. தேவைப்படும்.

வஸ்ஸலாம்.

இப்ராஹீம் அன்சாரி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.