Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தமிழ் வளர்ந்த நினைவுகள்.. ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | April 07, 2012 | ,


அப்போதெல்லாம் ஐந்து வயது முடிந்து ஆறு வயது தொடங்கிய பின்னரே ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பர். நான் 1960 ஆம் ஆண்டில் எங்கள் ஊரிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தேன்.

சிலுவை முத்து வாத்தியார் தமிழ் நீருக்கு வைத்த பாத்திதான் இன்னும் என்னுள் நேர்த்தியாய்த் தமிழை வாழச் செய்கிறது!

நாற்காலியில் அமர்ந்தபடி என் பேரை நீட்டிச் சொல்லி அழைத்து அருகில் நிறுத்திச் சேர்த்தணைத்து , கசங்கி நிற்கும் சட்டையை நீவி விட்டு, உள்மடிந்து கிடக்கும் காலரை வெளியே எடுத்து விட்டுச் செல்லமாய்த் தலை முடியை ஒதுக்கி விட்டு ஆனா ஆவன்னா சொல்லித் தந்து அன்பாய்த் தமிழமுது ஊட்டிய என் முதல் ஆசான். கற்பலகையும் கற்குச்சியும் கொண்டு தமிழை எழுதக் கற்றுத் தந்தார். 


இரண்டாம் வகுப்பு 'கஞ்சிப்புர'யில்.

கல்விக் கண் திறந்த கர்ம வீரர் தர்மமாய் ஏழைகளுக்கீந்த மதிய உணவு உருவாகும் கட்டிடம்தான் எங்கள் நாஞ்சில் தமிழில் 'கஞ்சிப்புர'!

வலப்புறம் "ஆம்பள ஒண்ணுப்புர"

இடப்புறம் " பொம்பள ஒண்ணுப்புர"

இரண்டிற்கும் நடுவே தனித் தீவாய்க் கஞ்சிப்புர. 

அதன் முன்னும் பின்னும் வாசல் உண்டு. சுற்றிலும் வெற்றிடம்.

முன்வாசல் மாணவர்க்கும் பின் வாசல் உணவு சமைக்கும் கிழவிக்குமாம். 

அப்புரயில் ஒப்புற அமர்ந்து தப்பற வளர்ந்தது என் தமிழ்.

"கேட்டெழுத்து" என நீட்டி முழக்குவார் நாயுடு வாத்தியார்.

அவர் சொல்லும் சொற்களை நின்ற படியே கேட்டு எழுத வேண்டும்.

அணில், ஆடு, இலை , ஈக்கள், உரல்.........

"எழுதியாச்சாலே? சிலேட்டைக் கீழே போடு"

"டமார் டமார்" என ஒலி எழப் படார் படார் எனக் கீழே விழும் சிலேட்டுப் பலகை. 

அதன் பெயர்தான் கற்பலகையே தவிர அது கல்லன்றல்லோ?

உடைந்து விடும். வீட்டில் அடி விழும். மாற்றாகப் புது "தகர சிலேட்டு"க் கிடைக்கும் -- உடைக்காமல் இருப்பதற்காக! 

அது விழுந்து விழுந்து பெயின்ட் உதிர்ந்து எழுதவே முடியாமல் போவது தனிக்கதை.

வசதி உள்ளோர் பிள்ளைகளுக்கு மணி வைத்த சிலேட்டு.- கலர்க்குச்சி! இன்னும் பணக்காரப் பிள்ளைகளுக்குப் பொம்மைக் குச்சி.!அதைப் பார்த்து வீட்டில் போய் அழுது அரற்றிக் கொண்டு வருவோம் கலர்க்குச்சி. 
முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனை போய்க் கடலில் இருந்து கொண்டு வருவோம் கடற்குச்சி. 

கடற்பஞ்சு எனும் ஒரு பொருளும் எடுத்து வருவோம்.

சிலேட்டில் தண்ணீர் ஊற்றிக் கடற்பஞ்சால் தேய் தேய் எனத் தேய்த்துக் கழுவுவோம் எழுத்து "பளிச்"செனத் தெரிவதற்காக! 

" நல்லா பத்துதா பாத்துக்கடே"

அந்த இனிய வாய்ப்பு என் மக்களுக்கு இல்லாமலே ஆகிவிட்டது.


மூன்றாம் வகுப்பு எனக்கு இரட்டை வரி நோட்புக்கும் மொட்டைப் பென்சிலும் தந்தது-- தமிழை அழகிய வடிவில் எழுதிப் பழக! அவ்வகுப்பில் தமிழ் உரைநடை/ பாடல் கற்றேன்.

அப்போது இந்தியாவைச் செஞ்சீனா போரால் வளைத்திருந்தது. மீசை சுப்பிரமணியம் வாத்தியார் சின்னச் சின்ன மழலைப் பாடல்களை அச்சிட்டுப் புத்தகமாகத் தருவார். ஐந்து பைசா விலையில்.

" சிங்க நாதம் கேட்குது சீன நாகம் ஓடுது
சுதந்திரத்தின் சக்தி மிக்க சங்க நாதம் கேட்குது"

எனப்பாடுவோம். 

பாடல்/ கவிதை வடிவில் தமிழ் என்னுள் நுழைந்தது.

ஆனந்த விகடன் இதழில் "சிறுவர் வண்ண மலர்" என்று , கட்டியான தாளில் குழந்தைகள் பக்கம் அச்சடித்து வரும். என் தாயார் அதையெல்லாம் பிய்த்தெடுத்துத் தைத்துத் தருவார் சிறு தொகுப்பாக! 

அதைப் படித்துக் கதை வடிவிலும் தமிழை உள்வாங்கினேன்.


நான்காம் வகுப்பில் தமிழாசிரியர் ஒரு முற்றிய பழம். அவர் பெயர் தெரியாது - "பாட்டா" எனக் கூறுவோம். நல்ல தமிழ் சொல்லித் தந்தார். 


ஐந்தாம் வகுப்புப் பல புதுமைகளைத் தந்தது பேனாவும் நான்கு வரி நோட்புக்கும்.

காரணம் ஆங்கிலம் அறிமுகம்.

A B C D 

எழுத -- படிக்கக் கற்றுத் தந்த நாகம்மை டீச்சர். 

எங்கள் பகுதித் கடிதக்கார (POST MAN) ஐயர் மகளானதால் எங்களுக்கெல்லாம் "கடிதக்காரி". 

ஆம்பள வாத்தியார்" மட்டுமே பாடம் எடுத்ததுபோய் அழகாய் வந்த "பொம்பள டீச்சர்".
அதனால் இன்றுவரை நெஞ்சில் நிலைத்திருக்கும் உருவம் 

நேர்த்தியாய் உடை, 

நிமிர்ந்த நடை!

சிவப்பாய் அழகாய் 

வட்ட முகத்தில் நெற்றிப் பொட்டு.

"பூச்சை"க் கண்கள்! 

நீண்ட மூக்கில் சின்ன மூக்குத்தி, 

சிவந்த உதடுகள்; சிரித்தால் ஒளிரும் பல்வரிசை.

இங்கிலீஸ் டீச்சர்! 

வியப்புடன் பார்த்துக் கொண்டிருப்பேன்.

வர்ணனை எல்லாம் இந்த வயதில் வந்தது. அந்த வயதில் பாடம் சொல்லித் தந்த"ஒரே பொம்பளடீச்சர்"

"பொம்பள டீச்சருக்கு மட்டும்தானே இங்கிலீஷ் தெரியும்."

A B C D தப்பாய்ச் சொன்னால் அருகே அழைத்து, மேற்கையின் உட்புறம் இரு விரல்களால் கிள்ளுவார். 

"கடிதக்காரி பிச்சிட்டாடே" என அடுத்த மாணவனிடம் மெதுவாய்ப் புலம்புவோம். 

டீச்சரைப்போல் அழகாயில்லை ஆங்கிலம், அதனால் எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது; ஆனாலும் படிக்காமல்; விட்டதில்லை-- பரீட்சையாயிற்றே? 

இன்று நான்காம் வகுப்பில் படிக்கும் என் மகன் "

can anybody help to solve this problem" என்று கேட்கிறான். அன்று அதன் ஒரு சொல் கூட எனக்குத் தெரியாது. 

ஐந்தாம் வகுப்பில் தமிழ் சொல்லித் தந்தவர் வரீது வாத்தியார்.

ஆறும் இப்படியே கடந்தது.

ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுத்தது. 

'தமிழ் வாழ்க! இந்தி ஒழிக" என நான் முழக்கமிட்டேன் -- எல்லோருடனும்.


ஏழாம் வகுப்பில் தமிழாசிரியர் 'பாண்டை"ஆறுமுகம்.

பாண்டை என்பது மதுக்கஷாயம் ! அவர் அதைக் குடிப்பதால் அவர் 'பாண்டை வாத்தியார்."

அடிப்பார் ; ஆனால் அடுக்குத் தமிழில் பாடம் சொல்வார். தமிழின் ஓசையும் ஒலியும் என்னை ஈர்த்தது இங்கேதான்.


எட்டாம் வகுப்பில் உதுமான் வாத்தியார். இனிமையாய்த் தமிழ் சொல்லித் தந்தார். 

எட்டாம் வகுப்பில் நான் நடுநிலை இலக்கிய மன்றத் துணைச் செயலாளர். மன்ற விழாவில் இலக்கிய உரையாற்றுவதற்காகப் பேராசிரியர் பெருமாளை அழைக்க அவரில்லம் சென்றேன். மாலை நேரம். வயிற்றுக்குச் சிற்றுண்டி தந்தார். ஆனால் அதைவிடப் பேருண்டி அங்கிருந்து கொண்டு வந்த "அபிதானசிந்தாமணி"தான்.

அதைப் படித்தேன்; படித்தேன்; அப்படிப் படித்தேன்.

தேனிழ் மூழ்கிய வண்டானேன். தமிழ் என்னுள் தழைத்தது; வளர்ந்தது; ஒளிர்ந்தது.


ஒன்பதாம் வகுப்பில் சாகுலமீது வாத்தியார் தமிழாசிரிய்ர்.

வந்த முதல் நாளே

"யாரெல்லாம் கைடு கொண்டு வந்திருக்கா"

நான்! நான்! நான்!

"எல்லாரும் கொண்டாங்கலே " என அனைத்தையும் வாங்கி ஜன்னலூடே வெளியே வீசி எறிந்தார்.

"இனி நாஞ்சொல்றதுதாம் பாடம்; நான் தர்ரதுதான் நோட்ஸ்; புரிஞ்சுதா?"

நிமிர்ந்து உட்கார்ந்தேன் வகுப்பில். 

யாப்பிலக்கணத்தை--

சீர், தளை. அடி, தொடை எனச் சிக்கலின்றி என்னுள்ளத்தில் ஏற்றி வைத்தார். தமிழ் என்னுள்ளே ஒரு புதிய சிம்மாசனத்தில் அமர்ந்தது.

பத்திலும் பதினொன்றிலும் ஆரோக்கியமுத்து வாத்தியார். தமிழ்ப் பாடத்தில் நான் ஒன்றாம் நிலை. மனப்பாடப் பகுதியெல்லாம் முதலாவதாக ஒப்புவிப்பேன். 


புகுமுகவகுப்பு நாகர்கோவில் கிருத்துவக் கல்லூரியில்.சிறப்புத் தமிழை நான் தேர்வு செய்ததால் தமிழாசிரியர் ஆறுபேர். 

எனக்குள் ஆறிலும் தேறியது ஒருவர் மட்டுமே. இயேசுதாஸ்.!

அவரால் தமிழ் என்னை மேலும் நெருங்கியது. 

இளங்கலை இந்துக்கல்லூரியில். முதல் இரண்டாண்டுகள் மொழிப்பாடத்திற்கு எத்தனையோ "போராசிரியர்கள்" ஆனால் மகாலிங்கம்பிள்ளை மட்டுமே "பேராசிரியர்" .

மலையாளம் வகுப்பைப் புறக்கணித்துத் தமிழ் வகுப்பில் மலையாள மாணவர்களையும் அமரச் செய்யும் அற்புத ஆசிரியர். 

கண்ணதாசன், பாரதிதாசன் தொகுதிகள், அப்துல்ரகுமானின் 'பால்வீதி', அபியின் 'மெளனத்தின் நாவுகள்' , கமராசனின் 'கறுப்புமலர்கள்' , மேத்தாவின் 'கண்ணீர்ப்பூக்கள்' , மீராவின் 'ஊசிகள்' , வானம்பாடிக் கவிஞர்கள் எனத் தேடிப் படித்தேன்.

தமிழ் என்னோடு இரண்டறக் கலந்ததால் முதுகலையில் தமிழ் படிக்கச் சென்றது நெல்லை இந்துக்கல்லூரிக்கு.

பேராசிரியர் பாலு.

இலக்கணம் என்றால் வேம்பாகும் மாணவர்க்கு. ஆயின் தொல்காப்பியத்தைத் தேனாகப் புகட்டியவர் பேராசிரியர் பாலு.

தமிழாய்வு கேரளப் பல்கலைக் கழகத்தில். என் ஆய்வு நெறிகாட்டி , கவிமணி தே.வி.யின் பேரர் டாக்டர் குற்றாலம்பிள்ளை.

என் தமிழில் இருந்த சின்னச் சின்ன பிசிறுகளை நேர்த்தியாய்ச் செதுக்கி மிளிர வைத்த பண்பாளர். அவரில்லத்தில் என்னை அழைத்து வைத்து எனக்கில்லா அக்கறையையும் சேர்த்துக் காட்டி என் ஆய்வேட்டை என்னிடமிருந்து பிறப்பித்த பொறுமையின் சிகரம்.

நினைவுகள் நீந்திக் கொண்டிருக்கும்வரை என் தமிழாசான்களும் என்னுள் நிற்பர்.

-நாஞ்சிலன்

துபை வானலை வளர்தமிழ் மன்றம் சார்பாக , துபையிலிருந்து வெளியாகும் "தமிழ்த்தேர்" -2010 அக்டோபர் மாத இதழில் வெளியானது

10 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

//'தமிழ் வாழ்க! இந்தி ஒழிக" என நான் முழக்கமிட்டேன் -- எல்லோருடனும்.//
இதுதான் நாம் பண்ணிய தப்பு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தமிழில் சுவராஸ்யமாக எப்படி எழுதலாம் என்று கற்றுக் கொள்ள இந்த பதிவிலும் பாடமிருக்கு !

எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி !

sabeer.abushahruk said...

டாக்ட்டரய்யா வரிசையாகப் பஸாகிய வகுப்புகள் எமக்கும் மனக்கண்ணில்.

அந்தந்த வகுப்பான சுவாரஸ்யங்கள் வாழ்க்கையில் மறக்கவியலாதவை.

பகிர்வுக்கும் பழைய நினைவுகளைக் கிளரியமைக்கும் நன்றி நாஞ்சிலய்யா.

Noor Mohamed said...

சகோ. முனைவர் நாஞ்சிலன் அவர்களின் இக்கட்டுரையை படித்ததும் என் இதயத்தில் தேங்கியுள்ள, எனக்கு ஆரம்ப பள்ளி முதல் கல்லூரி வரை பாடம் எடுத்த ஆசிரிய பேராசிரிய பெருமக்களின் பட்டியலை புரட்டிப் பார்த்தேன். மொத்தம் 51 பெருமக்கள்.

இதில் யாரெல்லாம் எந்தெந்த பாடங்களை பள்ளியில் படித்துத்தந்தார்கள், கல்லூரியில் பட்டப் படிப்பில் பாடங்களில் எந்தெந்த பகுதிகளை படித்துத்தந்தார்கள் என்பதை மறக்க முடியாத என் நினைவுகளை ரினிவல் செய்துவிட்டார்கள் சகோ. முனைவர் நாஞ்சிலன் அவர்கள்.

நன்றி சகோ. முனைவர் நாஞ்சிலன் அவர்களே. தொடரட்டும் உங்கள் கட்டுரை. மலரட்டும் எங்கள் நினைவுகள்.

KALAM SHAICK ABDUL KADER said...

//இலக்கணம் என்றால் வேம்பாகும் மாணவர்க்கு.//

மருத்துவரய்யா அவர்களின் இவ்வரிகள் என்னை 1973ஆம் ஆண்டிற்கு என் நினைவு நாடாக்களைச் சுழற்றி விட்டன. ஆம்! எனக்கும் யாப்பிலக்கணத்தின் மீது அளவற்ற ஈர்ப்பு ஏற்பட்டது பள்ளியிறுதி வகுப்பில் (SSLC)தமிழாசான் வெண்பா இலக்கணம் கற்பித்து விட்டு, ஈற்றடி கொடுத்து மற்ற மூன்றடிகளை நிரப்ப வேண்டும் என்று வைத்தப் போட்டி! எப்பொழுதும் வகுப்பில் முதல் மாணவனாகவே வர வேண்டும் எனற ஆர்வம் என்னுள் இருந்ததும்; யாப்பிலக்கணத்தை வேம்பாக நினைக்காமல் இனிப்பாக ஏற்றுக் கொண்டதாலும் அப்போட்டியில் வென்றேன்; இன்றும் மரபினைப் பற்றிப் பிடிப்பதில் தான் என் மீது மகிழ்ச்சியடைவதாக என் ஆசான் அதிரை அஹ்மத் காக்கா அவர்களின் பாராட்டும் வாழ்த்துகளும் கிடைப்பதற்கு அன்று யாப்பிலக்கணம் மீதான மாறாத ஆர்வம் மட்டும் என்பதும் இன்று நினைக்க வைத்து விட்டன உங்களின் வைர வரிகள்!
ஆயினும், ஒட்டிப் பிறந்த “ஒற்றுப் பிழைகள்” போன்ற மற்றப் பிழைகளில் இன்னும் திருத்தம் வேண்டி நிற்கின்றேன்; ஒருவேளை அக்காலத்தில் இவ்விலக்கணத்தின் மீதான அக்கறை என்னுள் எழாமல் போனதாற்றான், இன்றும் என் ஆசான் அஹ்மத் காக்கா அவ்ர்கள் தொடர்ந்து என் ஆக்கங்களில் காணப்படும் இவ்வொற்றுப் பிழைகளைத் திருத்தம் செய்து தந்தும் மீண்டும் மீண்டும் தவறிழைப்பவனாகவே இருக்கின்றேன் எனபதும் உணர்கின்றேன். ”இளமையிற் கற்பது என்றும் அழியாது” என்பது பேருண்மை!

கவிவேந்தர் சபீர் அவர்கள் கருத்துரை//டாக்ட்டரய்யா வரிசையாகப் பஸாகிய வகுப்புகள் எமக்கும் மனக்கண்ணில்.

அந்தந்த வகுப்பான சுவாரஸ்யங்கள் வாழ்க்கையில் மறக்கவியலாதவை.

பகிர்வுக்கும் பழைய நினைவுகளைக் கிளரியமைக்கும் நன்றி நாஞ்சிலய்யா//

உண்மையான வரிகள்; என்னுள்ளும் இவ்வுண்மை உணர்வுகட்தான்!!

Meerashah Rafia said...

//'தமிழ் வாழ்க! இந்தி ஒழிக" //

நம்மை அறியாமல் அன்று ஒட்டுமொத்த தமிழர்களும் செய்த தவறாகத்தான் இதை கருதுகின்றேன்..

இன்று எம்மைப்போன்று பலர் வாழ்க்கையில் தினமும் நுனி நாக்கில் கருணாநிதியை கனிசமாய் திட்டிக்கொண்டு

" ஹிந்தி/உருது நஹி மாலூம்"
"மா அரஃப் அரபி"
"அன மதராசி(எங்கள் நாட்டு பாஷை கற்காத மதராஸ் காரன் நான்)"


என்று சவூதி அரேபியாவில் வாகனம் ஓட்டும் பாகிஸ்தானியர்கள் முதல் வாகனம் துடைக்கும் பங்களாதேசிகளிடம் வரை பெருமையாக நான் சொல்ல அவர் பாவமாக எம்மை பார்கின்ற அவ நிலை..தினம் தினம் வெட்கப்படுகின்றேன்..வேதனையோடு.

ஒரு மொழி என்பது இங்கு ஒரு பட்டப்படிப்பு சான்றிதழ் போன்றது.
தமிழன் மட்டும் தொலை தூர கல்வியாகத்தான் இதை பயில்கின்றான்..

இதை பற்றி ஒரு கட்டுரை எழுத ஒரு வாரம் பத்தமாடிருக்கு..

மு.செ.மு.மீரஷாஹ் ரஃபியா

Ebrahim Ansari said...

கவிவேந்தர் சபீர் அவர்கள் கருத்துரை//டாக்ட்டரய்யா வரிசையாகப் பஸாகிய வகுப்புகள் எமக்கும் மனக்கண்ணில்.

அந்தந்த வகுப்பான சுவாரஸ்யங்கள் வாழ்க்கையில் மறக்கவியலாதவை.

பகிர்வுக்கும் பழைய நினைவுகளைக் கிளரியமைக்கும் நன்றி நாஞ்சிலய்யா//

உண்மையான வரிகள்; என்னுள்ளும் இவ்வுண்மை உணர்வுகட்தான்!!

கவிவேந்தர்களின் கருத்துக்களையும் தம்பி நூர் முகமது அவர்களின் கருத்தையும் வழிமொழிகிறேன்.

பழைய நினைவுகளிலிருந்து மிகப்பாடுபட்டு , விடுபட முடியாமல் விழி பிதுங்கியவனாகவும் அரிச்சுவடி சொல்லித்தந்த ஜெயம் டீச்சரிலிருந்து அயோத்திய காண்டத்தில் அவலச்சுவை கற்பித்த பேராசிரியர் அப்துல் கரீம் வரை - வகுப்பில்லா வகுப்பு நடத்திய கவிக்கோ கற்பித்த மனோன்மணீயம் வரை- அதிரைக்குதிரையே என்று தட்டிக்கொடுத்த
தி. மு.அ.காதர் வரை நண்பராகப்பழகிய நாஞ்சில் ஆரிது வரை- பொன்னாடை போர்த்திய வலம்புரி ஜான் வரை - நினைவுகள்! நினைவுகள்! நீங்காத நினைவுகள்! அசை போட முடியாமல் அவ்வளவு நினைவுகள்.

- இப்ராஹீம் அன்சாரி.

Yasir said...

நீங்கதாத நினைவுகளை உசிப்பிவிட்டது உங்கள் கட்டுரை..

Noor Mohamed said...

//நீங்கதாத நினைவுகளை உசிப்பிவிட்டது உங்கள் கட்டுரை..//

தம்பி யாசிர், நான் ஒன்றை நினைவு படுத்தவா?

தாங்கள் 10 ஆம் வகுப்பிலும், 12 ஆம் வகுப்பிலும் அரசு இறுதித் தேர்வில் பள்ளியில் முதலிடத்தை பெற்றிருப்பதை பள்ளி பலகையில் எழுதப்பட்டுள்ளதே, அது நீங்காத நினைவில்லையா? இது போன்ற தம்பிமார்களுடன் பழகுவதில் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு.

Yasir said...

//இது போன்ற தம்பிமார்களுடன் பழகுவதில் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு./// தங்களின் நட்பை பெற ,நான் கொடுத்து வைத்தவன் காக்கா..அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.