Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உணர்வுகள் மூன்று ! 32

அதிரைநிருபர் பதிப்பகம் | April 21, 2012 | , , ,

தீராதவை…

அம்மா கைகளில்
குழந்தை…
சும்மாச் சும்மா
உம்மா
கொடுத்துக் கொண்டிருந்தது
அம்மா.

கன்னங்களிலோ
நெற்றியிலோ
குத்து மதிப்பாக
முகத்திலோ
இன்ன இடம்தான்
என்றில்லாமல்
வாகாக வாய்க்கும்
எந்த இடத்திலுமோ
வென...

வாகனங்களைக்
காட்டியொரு உம்மா
வானத்தைக்
காட்டியொரு உம்மா
மரங்களைக்
காட்டியொரு உம்மா
மனிதர்களைக்
காட்டியொரு உம்மா

கத்தும்
குருவியைக் காட்டியும்
கொத்தும்
கோழியைக் காட்டியும்
கழுவும்
கறி மீனைக் காட்டியும்
காத்திருக்கும்
கரும் பூனையைக் காட்டியும்
உம்மா
கொடுத்துக் கொண்டிருந்தது
அம்மா.

இடது கையிலிருந்து
வலது கைக்கு
மாற்றும்போதொரு உம்மா
மயங்கும்
விழிகளில் உம்மா
மெல்லச் சுமந்து
தூளியில் இட
கிடத்தும்போதொரு உம்மா
கிடத்திய பின்னொரு உம்மா

தூளியைத் தூக்கி
கொத்துக் கொத்தாக
பலமுறை உம்மா
என
சும்மாச் சும்மா
உம்மா கொடுத்தும்
தீர்ந்து போனதா
அம்மாவின் உம்மா?


தொலைவில் மழை

தொலைக்காட்சியில்
மழை கண்டு
அலைபேசியில் ஊரழைத்தால்
தொலைபேசியில்
சப்தமாய் மழை

சாளரம் வழியாக
சாரலாய் மழை
கூரையின் நுனியிலும்
குட்டிக்
குற்றாலமாய் மழை

கத்திக் கப்பல்களும்
காகிதக் கப்பல்களும்
கரை சேரவில்லையாம்
கனுக்கால் வரை மழை

மின்சாரம் வெட்டுப்பட
முட்டை விளக்கின்
மட்டுப்பட்ட வெளிச்சத்தில்
முகங்களில் மழை

இரவின் இருளில்
மழை பெய்வதில்லை
அதன்
பேச்சுச் சப்தம் மட்டுமே
கேட்டுக் கொண்டிருக்கும்

அடைமழை காலத்தில்
குடைமேல் மழை
தடைபட்ட தூரலில்
உடையெல்லாம் மழை

முகிழ் முயங்கி
மழை பொழிந்து
மண் ணடைந்து
மடை வழிந்து
கட லடைந்து
கலக்கும் வரையான நீரை
மழை என்றே
அழை!


அகம்!

இன்று
வியாழன்...
வெள்ளி சென்றது
நேற்றுப்போல்.
எத்தனை
வேகமாய்
கடக்கிறது
இந்தியனின் இளமை
வளைகுடாவில்?!

எத்தனை
ஆண்டு அல்ல
குடும்ப வாழ்க்கை
ஓராண்டில்
எத்தனை
தடவை
என்றாகிப்போனதே!

ஊரிலிருந்து
வந்த நண்பன்
உன்
நினைவுகள் மொய்க்கும்
பெட்டியொன்று தந்தான்.

அட்டைப்பெட்டியின் மேல்
எழுதியிருந்த
என் பெயர்
சற்றே அழிந்தது ...
அட்டைப் பெட்டியை
நீ
ஒட்டிக் கட்டுகையில்
பட்டுத் தெறித்த உன்
நெற்றிப் பொட்டின் வியர்வையா
சொட்டுக் கண்ணீர் பட்டா?

அக்காள் கையால் செய்த
நார்த்தங்காய் ஊறுகாய்
உம்மா பெருவிரலால்
நசுக்கி உலர்த்திய அப்பளம்
பீட்ரூட் அல்வா
விகடன், ஜூ வி
உன் கையால்
கலந்தரைத்த மசாலாப்பொடி

நான் கேட்ட பொருட்களோடு
பெட்டி முழுதும்
ஒட்டி யிருந்தன
நீயாக அனுப்பிய
கடுஞ்சோகப் பெருமூச்சும்
நிலைகுத்திய பார்வைகளும்...

-சபீர்

32 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

விலை இல்லா அம்மாவின் உம்மாவால்.மெய் மறந்து போனேன்.
இங்கு உள்ள வெயிலின் உஸ்ணத்தால்.தொலைவில் உள்ள மழையை கண்டு ஏங்குகிறேன்.

// அக்காள் கையால் செய்த
நார்த்தங்காய் ஊறுகாய்
உம்மா பெருவிரலால்
நசுக்கி உலர்த்திய அப்பளம்
பீட்ரூட் அல்வா
விகடன், ஜூ வி
உன் கையால்
கலந்தரைத்த மசாலாப்பொடி//

நூர்லாட்ஜ் பீட்ரூட் அல்வாவா? அல்லது காவன்னா ஹோட்டல் அல்வாவா?

குழந்தை மிதக்கும் குளம் எங்கே இருக்கு ? அதில் குளிக்க ஆசையா இருக்கு.

அதிவிரைவில் அதிரையை நோக்கி வர இருப்பதால்.நிலை குத்திய பார்வை சரியாகிவிடும் காக்கா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உணர்வுகள் மூன்று'க்கு தனி மின்னஞ்சலில் விமர்சனம் வருவதை தவிர்க்கவும் முடியவில்லை... நெறியாளன் என்ற சும்மாவும் இருக்க முடியவில்லை... சத்தம் போட்டு சிரிக்க வைக்கிற மாதிரியெல்லாம் விமர்சனம் வந்தா என்ன செய்வதாம்....

அசத்தல் காக்காவின் கமெண்ட் ஒரு சாம்பிளுக்கு (நெறியாடலுக்கு பின்னர்) : "ஒரு வாரமாக ஏதோ ________ வச்ச மாதிரி கம்ப்யூட்டரில் எது எழுத உட்கார்ந்தாலும் ஒரு அலுப்பு வருகிறது. எதற்கும் இருக்கட்டுமே என்று கந்தசவா ஒலியுல்லா கம்ப்யூட்டர் அப்பாவுக்கு "சிப்ஸ்' முடிந்து வைத்திருக்கிறேன்....

பில்கேட்ஸ் லெப்பை சொல்லும் கந்தூரி உரூஸில் அந்தகிரடிட்டை கிராக் (Crack) தேடியெடுத்து செலுத்திவிடலாம்."

Unknown said...

மின்சாரம் வெட்டுப்பட
முட்டை விளக்கின்
மட்டுப்பட்ட வெளிச்சத்தில்
முகங்களில் மழை

இரவின் இருளில்
மழை பெய்வதில்லை
அதன்
பேச்சுச் சப்தம் மட்டுமே
கேட்டுக் கொண்டிருக்கும்
---------------------------
காட்சிப்படுதியத்தில் எனக்கு p.c. ஸ்ரீராமின் 'மீரா ' பார்த்தமாதிரி இருந்தது .. class
....

இடது கையிலிருந்து
வலது கைக்கு
மாற்றும்போதொரு உம்மா
மயங்கும்
விழிகளில் உம்மா
மெல்லச் சுமந்து
தூளியில் இட
கிடத்தும்போதொரு உம்மா
கிடத்திய பின்னொரு உம்மா

தூளியைத் தூக்கி
கொத்துக் கொத்தாக
பலமுறை உம்மா
என
சும்மாச் சும்மா
உம்மா கொடுத்தும்
தீர்ந்து போனதா
அம்மாவின் உம்மா?
-------------------------------
அம்மா உம்மா கவிதையும் சும்மா இல்ல ...அழகு

----

KALAM SHAICK ABDUL KADER said...

குழந்தையெனும் கவிதை




உயிரும் மெய்யும்
கலந்திருக்கும்
உன் புன்னகை மொழி ...!

இசைக்கருவிகள்
மழலை ஒலி முன்னே
மண்டியிடுகின்றன!

மலர்கள்
இதழ்களை விரிக்கின்றன
உன் சுவாசத்தை
அவைகளின் வாசமாக்கி
வசப்படுத்திக் கொள்ள..!

அல்லும் பகலும்
அழகூட்டும் உன் விழிகளால்
விண்மீன்கள் வெட்கித்துத்
தோல்வியை ஒப்புக்கொள்கின்றன..!

கருவறையின்
கதகதப்பை உன்னிடம்
காற்றும் கடன் கேட்கும்

விஞ்சும் பட்டு மேனியைக்
கொஞ்சம் தொட்டுப் பார்க்கக்
கெஞ்சும் மலர்த்தோட்ட்ம்!

ப்ரசவத்தில் கதறினாள்
உன் தாய்
நீ பிறந்ததும் அவள்மீது
பட்ட உன் பார்வையால்
பட்டெனப் புன்னகைச் சிதறினாள்
தாயின் மயக்கம் தீர்த்த
சேயே, மருத்தவச்சி நீயே!

துன்பத்திற்குப் பின்னர்
இன்பம் எனும் தத்துவம்
புரிய வைத்த புத்தகம் நீ!

அற்புதங்கள் காட்டும்
இறைவனின் பேரற்புதம் நீ!

உன் புன்னகை இதழ்களில்
தேன் உண்ணத் துடிக்கின்றன
வையகத்தின் வண்ணத்துப் பூச்சிகள்!

அம்மா அழகென்றால்
நீ “அம்மா” என்றழைப்பதில்
அழகும் அழகு பெறுகின்றது;
தமிழும் அழகும் பெறுகின்றது! .

--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

sabeer.abushahruk said...

ஜாகிரின் கமென்ட்;

ஊர்ல அக்னி வெயில் அடிக்கிற நேரத்திலே மழையைப் பற்றி எழுதுறியே "மண்ண அள்ளி தூத்தமாட்டாங்க?"

அவனுக்கு எல் எம் எஸ்ஸின் பதில்:

//இங்கு உள்ள வெயிலின் உஸ்ணத்தால்.தொலைவில் உள்ள மழையை கண்டு ஏங்குகிறேன்.//

அதிரை சித்திக் said...

சும்மா சொல்ல கூடாது ..சதம் அடிப்பதில்

பங்களிப்பாளர்கள் அசரவில்லை ..

எதார்த்தம்கட்டுரைகள் ஒருபுறம் ..

அரசியல் கட்டுரைகளின் அமர்க்களம் மறுபுறம்

சபீர் அவர்களின் கவிதைகள் sooper .star

படம் போல sooper hit ....

மொத்தத்தில் அதிரை நிருபர் அசத்தல் தளம்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கவிஞரின் கவி உணர்வின் மூன்று வகை ஈரங்கள் கவித்துவத்தின் வைரங்கள்.

Unknown said...

மலையாள வாடை நல்லாத்தான் வீசுது! உம்மா = முத்தம்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// ஜாகிரின் கமென்ட்;

ஊர்ல அக்னி வெயில் அடிக்கிற நேரத்திலே மழையைப் பற்றி எழுதுறியே "மண்ண அள்ளி தூத்தமாட்டாங்க?"

அவனுக்கு எல் எம் எஸ்ஸின் பதில்:

//இங்கு உள்ள வெயிலின் உஸ்ணத்தால்.தொலைவில் உள்ள மழையை கண்டு ஏங்குகிறேன்.//
====================================================================
கற்பனையான கேள்விக்கு காப்பி அடித்து பதில். ஜாகிர் காக்கா கேள்வியை மாற்றி கேளுங்க. அ. நி. நிர்வாகம் பரிச்சையிலே காப்பி அடிக்கிறவங்களே பிடிக்க பரிசோதகர்கள் போடவில்லையா ?

அப்துல்மாலிக் said...

மூன்றும்மே 3 முத்துக்கள்
என்றென்றும் நினைவில் நிற்கும் சொத்துக்கள்


ஒரு முத்தை பாராட்டினால் இன்னோனு கோவிச்சுக்கும்

ஆகவே

மூன்றும் முத்துக்கு முத்தான
முக்கோண அலசல்..

அருமை சபீர் காக்கா...

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

ஒரு சிலர் இழந்த உம்மாவின் முத்தத்தை மறுபடியும் கிடைக்குமா என ஏங்க வைக்கிறது மனம் வெகு காலமா!

உம்மாவின் முத்தம் பிள்ளையின் முத்தம் என முத்தத்தால் ஆக்கமாக முத்தமழை பொழிந்தீர் சபீர் காக்கா...வாழ்த்துக்கள்

குழந்தையின் கண் சிமிட்டலில் ஒரு உம்மா
குழந்தையின் முதல் பேச்சில் ஒரு உம்மா
குழந்தையின் இதழ் சிரிப்பில் ஒரு உம்மா

பிஞ்சி பாதங்களினால்
நெஞ்சில் கோலமிட
கஞ்ச தனமின்றி அன்பு
பாசம் காட்டுது தந்தையின்
அன்பு முத்தத்தில்..

கொஞ்சி பேசிடும் குழந்தையிடம்
கெஞ்சியே வாங்கிடுவர் முத்தத்தை

மூன்னூறு நாள் சுமந்து
புவிதனில் பிறந்ததும்
உச்சி முகர்ந்தவள்
அளித்திடும் அன்பு முத்தமதில்
அனைத்தையும் (வலி) மறக்கின்றாள்

பக்கத்தில் இருந்து தரும் அம்மாவின் உம்மா
காற்றலையில் பறந்து வரும் வாப்பாவின் உம்மா
குழந்தை குழம்பியது எந்த உம்மா சிறந்ததென்று

\\அட்டைப்பெட்டியின் மேல்
எழுதியிருந்த
என் பெயர்
சற்றே அழிந்தது..//

தன்னவன் பெயரை எழுதி அன்புடன் தொட்டு பார்த்து அவள் மகிழ்ந்ததினலோ? அல்லது
அவள் கை ரேகையினை பதிந்து தன்னவனும் அதை தொடுவான் என்று எண்ணியோ?

மூன்றுமே சூப்ப்ப்ப்ப்ப்ப்பர் சபீர் காக்கா

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு,

முக்கனி, முத்தமிழ், முச்சங்கம், முப்பரிமாணம் வரிசையில் இந்த மூன்று உணர்வுகள்.

அருமை! அழகு! அற்புதம்!

மணவிழா விருந்துக்கு முன்னோட்டமான சுவைகள் சுவைத்த திருப்தி.

Anonymous said...

சபீர் காக்கா.... அகம் கவிதைகள் பல அர்த்தங்களை சொல்லுகிறது....

‘தலைமுறை
தலைமுறையாய்
குடும்பம் வாழ
தலைமறைவாய்
வாழ வேண்டியுள்ளது
அயல்நாட்டில்’

ரெண்டு வருஷத்துக்கு முன்பு ப்ளாக்கில் எழுதியது இதற்கு பொருந்துதோ இல்லியோ அட்லீஸ்ட் ஒத்து வந்தாலே சரி....

வளைகுடா...
குடம்னா நிரம்பும்...
இது குடாஆஆஆ......
நோ சான்ஸ்... :)

Ahamed irshad
.............
Keep Smiling

அலாவுதீன்.S. said...

தீராதவை…


தொலைவில் மழை

அகம்!

மூன்றுமே அழகுதான்!


வாழ்த்துக்கள்!

KALAM SHAICK ABDUL KADER said...

இங்கு மும்மழைப் பொழிவால் உணர்வு விதைகள் வீரிட்டு விளைகின்றன!

அதிரை சித்திக் said...

உண்மையிலே என்னால் ஒரே நேரத்தில்

மூன்று கவிதையும் படிக்க முடியவில்லை

முதல் கவிதையின் சுவையே ஒருநாள் முழுவதும்

ரசித்து மகிழ்நதேன். தேனுண்ட வண்டு போல்

ஆகா.. என்ன கவிதை ..என மகிழ்ந்து போனேன் .

அடுத்த நாள் மறுகவிதைஅது வேறு சுவை

முதல் கண்ட சுவைபோல் இல்லை ,,என்றாலும்

வேறு சுவை ..கடைசி கவி சுவை ...

சுவை தான் என்றாலும் அது நம்ம சோக க(வி )தை ...

முதல் கவிதை தேன்''...

அன்புடன் புகாரி said...

அன்பினிய சபீர், அகம் ஓர் அழகான கவிதை. பாலையில் இருந்து பாலைத்திணை பாடுவது சிறப்பு. வளைகுடாக்களிலிருந்து இப்படி உருவாகும் கவிதைகள், யுத்தகாலக் கவிதைகளுக்கு நிகரானவை. நிறைய இப்பொருளில் எழுதுங்கள். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

அன்புடன் புகாரி

Yasir said...

முத்து முத்தாய் முன்று கவிதைதள் எழுதிய கவிக்காக்கா அவர்களுக்கு அரபி ஸ்டையிலில் மூன்று முத்தங்கள்

crown said...

அம்மா கைகளில்
குழந்தை…
சும்மாச் சும்மா
உம்மா
கொடுத்துக் கொண்டிருந்தது
அம்மா.
-------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பின் பெட்டகம் தன் அன்பை இப்படி அள்ளித்தெரிக்கும் அற்புத காட்சி!

crown said...

கன்னங்களிலோ
நெற்றியிலோ
குத்து மதிப்பாக
முகத்திலோ
இன்ன இடம்தான்
என்றில்லாமல்
வாகாக வாய்க்கும்
எந்த இடத்திலுமோ
வென...
-------------------------------------------
வாய்க்கும் பொழுதெல்லாம், அன்பை வார்க்கும் அந்த வாய்! தாயின் வாய்! அது நம் நோய் தீர்க்கும் மருந்தாகவும் , இதயத்தின் மீது கருனை மழையாகவும் இருப்பதற்கு இந்த மழலை பெரும் முத்தம் ஒரு சிறு அத்தாட்சி!

crown said...

வாகனங்களைக்
காட்டியொரு உம்மா...............
கரும் பூனையைக் காட்டியும்
உம்மா
கொடுத்துக் கொண்டிருந்தது
அம்மா.
-------------------------------------------------
அன்பை பொழிய சந்தர்பம் ஏற்படுத்திகொண்டது அந்த மழலையை கற்பத்தில் சுமந்த அந்த ஜீவன்!வானம் பொய்க்கலாம் வான் மழை பொழிய! ஆனால் கற்பசூழில் தாங்கிய அன்பு ஜீவன் வாய் மழையை பொய்க்காமல் அந்த பொக்கை வாய்க்கும் பல முத்தம் கொடுத்து உயிர் பயிர் செழிக்கசெய்து கொண்டது.

crown said...

இடது கையிலிருந்து
வலது கைக்கு
மாற்றும்போதொரு உம்மா......
தூளியைத் தூக்கி
கொத்துக் கொத்தாக
பலமுறை உம்மா
என
சும்மாச் சும்மா
உம்மா கொடுத்தும்
தீர்ந்து போனதா
அம்மாவின் உம்மா?
------------------------------------------------------
இலக்கணம் ஏதும் வைத்து கொள்ளாமல் எல்லை ஏதும் வகுத்து கொள்ளாமல் அன்பை பொழிவதுதான் உண்மை அன்பும் அதன் வெளிப்பாடும். இதில் தாயின் அன்புக்கு ஈடு எல்லை தாண்டும் அன்புமட்டுமே . அவள் அன்பை கேட்டாள் அன்பை தருவாள் வம்பு செய்தாலும் அன்பை தரும் அற்புதம் தான் தாய். இங்கே கவிஞரின் வரிகளில் அந்த மழைலை ஓவியத்தை அச்சில் வார்த்த அந்த அச்சு இயந்திரம் மேலும், மேலும் தன் அன்பை முத்திரை பதித்து கொண்டே இருந்தது நிதிரைக்குச் செல்லும் தன் அன்புச் செல்லம் தூங்கும் வரையில் அந்த தூளியை தூக்கி.

crown said...

தொலைக்காட்சியில்
மழை கண்டு
அலைபேசியில் ஊரழைத்தால்
தொலைபேசியில்
சப்தமாய் மழை
---------------------------------------------------
நிசப்தமாய் தனிமை இதயம் அழும் அந்த அழுகையிம் மனசாட்சியே மறுமுனையில் கேட்கும் பெரும் மழை! கண்ணத்தில் கோடு போட்டு முந்தானையில் அழிந்து போனாலும் எண்ணத்தில் ரணமாய் அப்படியே பதிந்து போகும்.

crown said...

கத்திக் கப்பல்களும்
காகிதக் கப்பல்களும்
கரை சேரவில்லையாம்
கனுக்கால் வரை மழை
--------------------------------------------
வயதுக்கு வந்த பருவமங்கை வாழ்கை தடம் புரள வந்த வரதட்சனையெனும் பேய்மழை காட்சியை கொண்டுவரும் வரிகள் இவை! அங்கே காதித கப்பல் குடைசாயும் இங்கே ஒரு குடும்பமே குடைசாயும் கண்ணீர் மழை!இது நம் சமுதாய வாழ்வின் பிழை!

crown said...

முகிழ் முயங்கி
மழை பொழிந்து
மண் ணடைந்து
மடை வழிந்து
கட லடைந்து
கலக்கும் வரையான நீரை
மழை என்றே
அழை!
--------------------------------------------
மன்னிக்கவும் மழையென்று அழைக்கமுடியாதபடி அழுக்கு மனம்பிடித்த மணிதர்கள் நனைவதால் அது மழையல்ல! குமட்டல் தரும் அசுத்தம்.பலர் கண்ணீரை சுமந்து சென்று கடல் செல்லும் முன்னேயே உவர்பாக மாறிவிடும் பாவ நீர் அந்த மழையன அழைக்கப்படும் பிழை இந்த வான் மழை!(
கவிஞர் நல்லெண்ணம் கொண்டவர் அதனால் மழையென அழைத்தார்) நான் .......விடுங்க!

crown said...

இன்று
வியாழன்...
வெள்ளி சென்றது
நேற்றுப்போல்.
எத்தனை
வேகமாய்
கடக்கிறது
இந்தியனின் இளமை
வளைகுடாவில்?!
--------------------------------------------------
கசந்து போகும் உண்மை! அழுவதற்கே படைக்க பட்ட உயிர் செத்து உயிர் பிழைக்கும் உயிர்கள்.

crown said...

எத்தனை
ஆண்டு அல்ல
குடும்ப வாழ்க்கை
ஓராண்டில்
எத்தனை
தடவை
என்றாகிப்போனதே!
------------------------------------------------
தவனையாகி போன உறவு புதிப்பிக்கும் குடும்ப அட்டைதான் இங்கே நம் விடுப்பும், கவலைதரும் நெருப்பு கணமும். சில சந்தோசம் , பல ,பல துன்பம் இது நமக்கு வந்த சாபம்.

crown said...

நான் கேட்ட பொருட்களோடு
பெட்டி முழுதும்
ஒட்டி யிருந்தன
நீயாக அனுப்பிய
கடுஞ்சோகப் பெருமூச்சும்
நிலைகுத்திய பார்வைகளும்...
-------------------------------------------------
சோகத்தை பொட்டலம் கட்டி அனுப்பி இருந்தாள் இல்லாள். அவள் அனுப்பிய மைசூர் பாகும் சின்னதாய் கசந்து போகும் நம் தின்று மறுபாதி அவள் திண்ணாமல் போவதால் அந்த தித்திப்பும் , நெஞ்சை அழுத்தும் நோயாகிறது.
கவிஞரின் ஒவ்வொரு வரியும் வைரம் என்று எத்தனைதடவைதான் சொல்வது? எல்லாமே விலைமதிப்பில்லா சொத்து. சோகம், சந்தோசம் எல்லாம் கலந்த கலவை!வாழ்த்துக்கள்.

sabeer.abushahruk said...

//இலக்கணம் ஏதும் 
வைத்து கொள்ளாமல் 
எல்லை ஏதும் 
வகுத்து கொள்ளாமல்  பொழிவதுதான் 
உண்மை அன்பு.//

//வானம் பொய்க்கலாம் 
வான் மழை பொழிய! 
ஆனால் 
கற்பசூழிகற்பசூழில் தாங்கிய 
அன்பு ஜீவன் 
வாய் மழையை பொய்க்காமல் 
அந்த பொக்கை வாய்க்கும்
பல முத்தம் கொடுத்து 
உயிர் பயிர் செழிக்க
செய்து கொண்டது.//

-crown

attn.: adirai nirubar,
ain't we missing something?

sabeer.abushahruk said...

thanks for those brothers who liked and commented on this posting.

(couldn't write in detail as preparing for a short visit to Adirai.)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//attn.: adirai nirubar,
ain't we missing something?//

ஆமா காக்கா, இதுமாதிரி தூண்டிலில் கவிதைத் தேன் தடவினாத்தான் கீரிடம் இந்தப்பக்கம் சிக்குது ! ஸாரி தட்டுப்படுது !

கிரீடத்தை கண்டுகழிக்க கவிதைப் பொடி தூவிகிட்டே இருக்கனும்போல !

அதான் அதிரையின் அகம்னு ஏதோ கரு கண்ணிப் பட்டதை காண்பதற்காக ஏர்போர்ட்டுக்கு கிளம்புறதாக கேள்வி பட்டேன் !?

அப்படின்னா கிரவ்னுரை இனி ஜமாய்க்கலாம் ! :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கண்ணிப்// என்பதை கண்ணில் என்று வாசித்துடுங்களேன்.. "ஹி ஹி ஹி... வேகத்தடையில்லா ECR ரோட்டோரம் வீடு இருப்பவங்களுக்கு தெரியும் தானே"

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.