Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள்.. ஏற்றம்-13. 40

ZAKIR HUSSAIN | May 14, 2012 | , ,



பொதுவாக ஒருவன் வாழ்க்கையில் வெற்றியடைந்தவன் என்று ஒரு அளவுகோல் இருக்கும்போது அதை அவன் வைத்திருக்கும் 'பணம்' மட்டுமே அளவுகோலாக பயன்படுத்தப்படுகிறது. ஏன் இந்த தவறான அனுகுமுறை என்றால் 'பணம் இருந்தால் எல்லாவற்றையும் வாங்கி விடலாம்' எனும் பொதுவான கருத்துதான்.

ஆனால் அந்த பணம் படைத்தவர்களின் மனதை ஆய்வு செய்யும் திறமை நம்மிடம் இருந்தால் நமது கருத்து சரியா தவறா என தெரிந்துவிடும் அப்படி என்றால் பணம் சம்பாதிப்பது முக்கியமில்லை என்ற இன்னொரு இலவச இணைப்பான முடிவுக்கு வந்து விடக்கூடாது. அது பொறுப்புகளை சுமக்க தயங்குபவர்கள் கண்டுபிடித்த ஃபார்முலா. வாழ்க்கையில் ஒன்றும் சாதிக்காமல் பக்கத்தில் உள்ள தஞ்சாவூர் போய் வந்தால் கூட வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சாப்பிட ஏதும் வாங்கி வராமல் வீட்டுக்கு வந்து "பணமா முக்கியம்..நான் மட்டும் வசதியானவனாய் இருந்தால் ஏழைகளை படிக்க வைப்பேன், ஊருக்கு உழைப்பேன், அநாதை ஆசிரமம் கட்டுவேன், முதியோர்களை அரவணைப்பேன்' என்று அசோக சக்ரவர்த்திமாதிரி பீத்தும் எந்த நடிகர்களையும் இப்போது கின்டர்கார்டன் படிக்கும் பிள்ளைகள் கூட 'என்னா சீன் போடுரான்யா" என கமென்ட் அடித்துவிடும்.

இப்போது கையில் இருக்கும் 50 ரூபாயில் உன்னால் / உங்களால் என்ன தர்மம் செய்ய முடியும் என்பதை செயலில் காட்ட முடிந்தவர்கள்தான் தொடர்ந்து தர்மம் செய்பவர்களாக இருக்கிறார்கள். தர்மத்துக்கும் மனதுக்கும்தான் சம்பந்தம் இருக்கிறது. ஒரு கோடி கையில் கிடைத்து விட்டால் தர்மம் செய்யும் மனம் வந்துவிடும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

இருப்பினும் மனிதன் ஒரு சில விசயங்களில் மட்டும் வெற்றியடைந்தவனாய் பார்ப்பது "பார்வையில் கோளாறு' . இதை சரி செய்யத்தான் “WHOLE PERSON CONCEPT” என்ற ஒரு விசயம் இருக்கிறது. ஆனால் இதில் ஒரு மனிதன் வெற்றியாளன் தானா இல்லை வெற்றியாளன் மாதிரி முகமூடி அனிந்தவனா என யார் தீர்மானிப்பது.... நீங்கள்தான்.... யாரை?... உங்களை 'மட்டும்'தான்.  மற்றவனை சரி செய்ய அவனுக்கு தெரியும்... முதலில் நாம் நம்மை பார்ப்போம்

WHOLE PERSON CONCEPT


      1.   Health.
உடல் ஆரோக்கியத்தை பேனுவதென்பது வயதான பிறகு உள்ள விசயம் என்ற தவறை இன்னும் இந்த நவீன உலகம் செய்து கொண்டிருக்கிறது.  குதிரைக்கு கண் கட்டிய மாதிரி பணம் மட்டுமே / வேலை மட்டுமே / விசுவாசம் மட்டுமே என ஒடும் வாழ்க்கையில் தடுக்கி விழுந்தபோது தேடும்போது கிடைக்காத செல்வம் 'உடல் நலம்'.

தள்ளிப்போட்டு பார்த்துக்கொள்ள இது ஒன்றும் அரியர்ஸ் அல்ல.  'அரியது"..இறைவன் கொடுத்த வரத்துக்கு சில மரியாதைகள் இருக்கிறது. மரியாதை இல்லாமல் போகும்போது அது மாயமாய்த்தான் போய்விடும்.

உடல் மீது கவனம் செலுத்தாமல் எதிர்காலத்திட்டம் தீட்டுவது அவ்வளவு ஏற்புடையது அல்ல.

உங்கல் உடல் ஆரோக்கியத்துக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறீர்கள்?


நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

         2.   Family
ஒரு மனிதன் வெற்றியடைய ஒடிக்கொண்டிருக்கிறான் என்றால் குடும்ப வாழ்க்கை சரியாக அமைய வேண்டும். குடும்ப வாழ்க்கை சரியாக அமையாமல் ஒரு மனிதன் வெற்றியடைய முயற்ச்சி எடுப்பது என்பது 'தினம் தினம் எதிர்நீச்சல்". இதில் பெண்களின் பங்கு மிக முக்கியம். தோல்விகளில் ஆதரவாகவும், வெற்றியடையும்போது நிதானத்தையும், இறைவனுக்கு நன்றி செலுத்துவதையும் கற்பிக்கும் ஆசானாக இருக்கும் வீட்டுப்பெண்கள் இருக்கும் வரை ஆண்களால் எந்த சவால்களையும் சமாளிக்க முடியும். இப்போதைய கால கட்டத்தில் பொருள்களை தேடி அலையும் இந்த "நவீன பசி"யில் பெண்களிடம் நான் காணும் ஒரு விசயம் கல்யாணம் ஆன பிறகும் தனது தகப்பனின் மகளாக இருக்கும் கதாபாத்திரத்தை விட்டு தனது கணவனின் மனைவியாக வாழும் கதாபாத்திரத்துக்கு தன்னை மாற்றிக்கொள்ள அதிக காலம் எடுத்துக் கொள்கிறார்கள். இது நிச்சயம் மாற வேண்டும். மற்றும் சிலர் கணவனுடன்  ஷாப்பிங் போகும்போது கணவனை ஒரு மொபைல் ஏ.டி.எம் மெசின் மாதிரி நடத்துவதை தவிற்க வேண்டும்.

ஆண்கள் 'சம்பாதிக்கிறேன்" என்ற ஒரே காரணத்துக்காக பெண்களை அடிமைபோல் நடத்திவிட்டு அதற்கு தேவையில்லாமல் ஞானி மாதிரி பேசுவதை தவிர்க்க வேண்டும். கல்யாணம் செய்து பல வருடங்கள் ஆன பிறகு சில ஆண்கள் "வெருமனே" மனைவியை குறை சொல்லிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது, இத்தனை நாட்கள் அன்பை வளர்க்காமல் எப்படி குறைகாண மட்டும் தெரிந்து கொண்டார்கள் என்பது ஆச்சர்யம். கல்யாணம் செய்த ஆரம்ப காலத்தில் கணவனின் பல முட்டாள் தனங்களையும், பிடிவாதங்களையும், வறுமையையும் தாங்கிக்கொண்ட மனைவியை சில ஆண்கள் வசதி வந்த பிறகு ' அவளுக்கு அவ்வளவு இன்டலக்சுவல் இல்லை" என்று சொல்லும்போது... இப்போ ஒரு ஃபிளாஷ் பேக் போட்டால் தேவலாம் என தோனும்.


உங்கள் குடும்பத்தில் நீங்கள் மதிக்கப்படுமளவுக்கு என்ன செய்து இருக்கிறீர்கள்?


.. நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

          3. Education
அதான் பள்ளிக்கூடம் எல்லாம் போயிட்டுதானே இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறோம் என சொல்லவேண்டாம். "கல்வி என்பது சர்டிபிகேட்டுக்குள் அடங்கும் சர்ப்பம் அல்ல' என்று எழுதினால் இவன்லாம் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டான்யா என கமென்ட் எழுதக்கூடும் என்பதால் கல்வி என்பது கருவறை தொடங்கி கல்லரை வரை என்ற அந்த ஓல்டு வார்த்தையை எழுதுகிறேன். நாம் எல்லாம் படித்து முடித்து விட்டோம் என்றால் நாம் 'முடிந்து" விட்டோம் என்று அர்த்தம்.


ஒவ்வொரு நாளும் உங்கள் துறைசார்ந்த விசயங்களை உங்கள் முன்னேற்றம் சார்ந்த விசயங்களை எந்த அளவு படிக்கிறீர்களோ அந்த அளவு முன்னேறலாம். சிலர் வாசிப்பதை தவறாக புரிந்திருக்கிறார்கள். பரபரப்புக்காக எழுதப்படும் 'தொடர் கொலைகள்- பாலியல் குற்றங்கள்" போன்ற விசயங்கள் நீங்கள் ஃபாரன்சிக் , போலீஸ், இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிசம்' சார்ந்து இருந்தால் பிரயோஜனப்படும்இல்லாவிட்டால் நீங்கள் மேகசினுக்கு கொடுத்த காசு பப்ளிசருக்கு பயன்படும்..அம்புடுதேன்.


நீங்கள் எவ்வளவு நேரம் உங்களை உயர்த்திக்கொள்ளும் கல்வியில் நேரம் செலவளிக்கிறீர்கள்.


நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

         4.   Career.
நீங்கள் தேர்ந்தெடுத்த வேலை , படிப்பு , தொழில் உங்களுக்கு மனதிருப்தியை தருகிறதா இல்லாவிட்டால் எங்கு நாம் தவறு செய்திருக்கிறோம் என்று எப்போதாவது ஒரு அரைமணி நேரம் அதற்காக ஒதுக்கி உட்கார்ந்து யோசித்திருக்கிறீர்களா... எதிலும் செக்கு மாட்டுத்தனமா இருந்து விட்டால் உழவுக்கு பயன்படாமல் போய்விடலாம் எனும் படிக்காத மேதைகள் சொன்னது இப்போதும் என் காதில் விழுகிறது.


நீங்கள் பணம் சம்பாதிக்கும் தொழில் / துறை உங்களை முன்னேற்ற உதவ வேண்டும்.... முன்னேற்றியதா?... முன்னேற்றாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். 

5.Service [to Society]
உங்களின் தேவைகள் பூர்த்தியாகிவிட்டால் ஒரு வெறுமை நிலை நிச்சயம் உருவாகும். ஒருவன் சரியான மனிதம் கற்றிருந்தால் எல்லைகளை மீறிய அன்பு அவன் மனதுக்குள் குடியிருக்கும். மற்றவர்களின் சோகத்தை கேட்கும்போது அழாத கண் இருந்தும் பயனில்லை. தன்னால் முடிந்தால் செய்தே ஆக வேண்டிய விசயங்கள் நம்மை சுற்றி இருக்கிறது. ரோட்டில் கிடக்கும் கருவேல முட்கிளையை எடுத்துப்போட உடல் தெம்பு இருந்தும் பஞ்சாயத்து போர்டை வையும் சமுதாயத்தால் சமுதாயத்துக்கு பயனில்லை.
 
சேவை செய்பவர்களைப்பற்றி ' அவனைப்பார்... இவனைப்பார்.. எவ்வளவு அள்ளிக் கொடுத்திருக்கிறான். எவ்வளவு சேவை செய்திருக்கிறான் என்று மற்றவனை உதாரணம் காட்ட பிறந்தவர்களா நீங்கள்?. அப்படி உதாரணம் மட்டும் காண்பிப்பவராக இருந்தால் உங்கள் தாய் உங்கள் எதிர்காலத்துக்காக கண்ட கனவுக்கு என்னதான் மதிப்பு?.


இன்று உங்களை சுற்றியுள்ள சமுதாயத்துக்காக என்ன செய்யப்போகிறீர்கள்?


நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

6. Financial
கடனில்லாத வாழ்க்கையும், வரும் வருமானத்தை செலவு செய்யும்போது உங்கள் உள் மனதுக்குள் உறுத்தல் இல்லாத ஒரு மனநிலையும் இருந்து விட்டாலே சரியான ட்ராக்கில் இருக்கிறீர்கள் என்பது என் கருத்து.


மற்றவர்களைப்போல் இல்லையே என்று புலம்பாமல் போன வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் உங்களின் வருமானம் எந்த அளவு உயர்ந்திருக்கிறது என்று நீங்களே உங்களுக்கு ஒரு செக்கிங் வைத்துக் கொண்டால் நலம். போட்டி உங்களுடன் தான் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மற்றவனின் வாழ்க்கையை நீங்கள் வாழ பார்க்காதீர்கள். அது நிச்சயம் முடியாது.

ஒருக்கால் உங்கள் வருமானம் குறைவாக இருந்தால் அதற்காக என்ன செய்யலாம்?


நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.


7. Spiritual
இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இறைவனின் கருணையில்லாமல் அவனது உதவியில்லாமல் எதுவும் தன்னால் நடந்து விடாது. காலையில் விழித்ததிலிருந்து அந்த ஏக இறைவனிடம் கையேந்திப்பாருங்கள்... அவன் உங்களின் தாயின் அன்பை மிஞ்சியவன். இறைவன் இல்லை என்று சொல்பவர்களையும் தன் அன்பால் வழிநடத்திச் செல்லும் இறைவனை வணங்குவதில் உள்ள சந்தோசம் அவனிடம் பிச்சை கேட்கும் சந்தோசம் எந்த உலக சந்தோசமும் தந்துவிடாது. [ இது பற்றி ஒரு எபிஸோட் எழுத வேண்டும் என்பது என் ஆசை]
 

இன்று உங்களைப்படைத்த கருணைமிகு இறைவனை எத்தனை முறை நினைத்தீர்கள்? அப்படி நினைக்க எது தடையாக உங்களின் அன்றாட வாழ்க்கை "உண்மைநிலை"யை உணராமல் செய்திருக்கிறது. 


நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விசயங்களான 7ம் வாழ்க்கைக்கு முக்கியம்.இந்த 7 முக்கியமான விசயங்களும் இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறையில் வாழ்வது மிக மிக எளிதானது. மறுபடியும் சொல்கிறேன் நான் முஸ்லீமாக பிறந்ததனால் இதை எழுதவில்லை. [தயவு செய்து மாற்று மத சகோதரர்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது] . எந்த சூழ்நிலையிலும் தனிமனிதனின் கெளரவம் காக்கப்படும் வாழ்க்கையை இஸ்லாம் சொல்லியிருக்கிறது என்றுதான் சொல்கிறேன். 

இந்த 7 தலைப்புகளும் ஒரு மனிதனுக்கு சரியான முறையில் அமைய / அமைத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது ஒன்று , இரண்டு மட்டும் கூடுதலாக இருந்து மற்றது குறைவாக இருந்தால் ....மன்னிக்கவும் ...உங்களை உடன் மதிப்பீடு செய்து கொள்வது நல்லது.

முடிவெடுப்பது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை we will see in next episode.

-ZAKIR HUSSAIN

40 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நீங்கதான் முடிவெடுக்கனும் / செய்யனும் !

தனிச் சிறப்புடன் அமைந்த படிக்கட்டு இது !

ஒவ்வொன்றும் அப்படியே நமக்கே, நம்மைச் சுற்றியே நடந்த/நடப்பது போன்ற உணர்வுகளை தனக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கும் மனநிறைவு பதிவு இது காக்கா !

இப்னு அப்துல் ரஜாக் said...

படிக்கட்டுக்களில் ஏறி,மேல் தளத்துக்கு வந்துட்ட மாதிரி ஒரு பீலிங்.ஒவ்வென்றும் ஒரு கிரியா ஊக்கி.

//உடல் மீது கவனம் செலுத்தாமல் எதிர்காலத்திட்டம் தீட்டுவது அவ்வளவு ஏற்புடையது அல்ல.//உண்மையில் இதை நாம் பள்ளிக் குழந்தைகள் முதற்கொண்டே சொல்லிக் கொடுக்க வேண்டும்.சரியான விழிப்புணர்வு இல்லாமல்,சரியாகவும் சாப்பிடுவதில்லை,சாப்பிட்டால் கண்டதையும் சாப்பிடுவது என நம் சமூகம் உடல் ஆரோக்கியத்துக்கு முதலிடம் கொடுக்காமல் இருப்பது வேதனைக்குரியது.

// அவளுக்கு அவ்வளவு இன்டலக்சுவல் இல்லை" என்று சொல்லும்போது... இப்போ ஒரு ஃபிளாஷ் பேக் போட்டால் தேவலாம் என தோனும்.//சீரியசான விஷயத்தை நகைச் சுவை கலந்து சொன்ன விதம் அருமை.'அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடையமனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். இது போன்ற ஹதீஸ்களையும் நாம் (பொதுவாக எல்லா)அடிக்கடி மக்களிடையே புழங்கி,வலம் வர செய்து,தாயின்,தந்தையின்,சகோதர பந்தம், மனைவியின்,பிள்ளைகளின் மதிப்பை உணர்த்த வேண்டும்.

//நாம் எல்லாம் படித்து முடித்து விட்டோம் என்றால் நாம் 'முடிந்து" விட்டோம் என்று அர்த்தம்.//இப்படி நாம் எண்ணினால்,அதுக்கு மேல் நமக்கும்,அறிவுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை நறுக் கென சொல்லியுள்ளீர்கள்.'இன்ஷா அல்லாஹ்,நாம் என்றும் மாணவர்களாகவே இருப்போம்.

கல்வியின் முக்கியத்துவம் குறித்த ஒரு ஹதீஸ்.

தன்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்து, அவளை நல்ல முறையில் நடத்தி, பிறகு அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைக்கிறவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

அதிகம் தெரிந்து கொள்ள,அதிகம் கேள் என்பார்கள்.சிலர் தெரியாத விஷயங்கலைக்கூட,தெரியும் என்பார்கள்.அப்புறம் அது சம்பந்தமான விளக்கம் கிடைக்காமலேயே போய் விடும்.நம் தலைவர் அவர்கள் முதன் முதலில் ஜிப்ரயீல் அலை அவர்களிடம் சொன்ன,"எனக்குத் தெரியாதே"என்ற வார்த்தைகளுக்குப் பின்புதான்,நமக்கு கல்வியே(இஸ்லாம்)கிடைத்தது,சுபானல்லாஹ்.ஆச்சர்யமாக இல்லை.



//இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இறைவனின் கருணையில்லாமல் அவனது உதவியில்லாமல் எதுவும் தன்னால் நடந்து விடாது.காலையில் விழித்ததிலிருந்து அந்த ஏக இறைவனிடம் கையேந்திப்பாருங்கள்... அவன் உங்களின் தாயின் அன்பை மிஞ்சியவன். இறைவன் இல்லை என்று சொல்பவர்களையும் தன் அன்பால் வழிநடத்திச் செல்லும் இறைவனை வணங்குவதில் உள்ள சந்தோசம் அவனிடம் பிச்சை கேட்கும் சந்தோசம் எந்த உலக சந்தோசமும் தந்துவிடாது. //


உண்மை,உண்மையை தவிர வேறில்லை. இந்தக் கட்டுரையின் மகுடமே இந்த வார்த்தைகள்தான்.(இன்ஷா அல்லாஹ்,இதுக்காகவே ஊருக்கு போகும்போது,மலேஷியா வந்து,நேர்ல பாராட்டனும் போல இருக்கு)



//[ இது பற்றி ஒரு எபிஸோட் எழுத வேண்டும் என்பது என் ஆசை]//

அவசியம் எழுதுங்கள்.

(படத்தில் இருப்பது எந்த வூரு பள்ளிவாசல் காக்கா)

Unknown said...

அகண்ட பார்வை .......ஜாகிர் காக்கா
நாம் சில விசயங்களில் நம்மை சரி செய்து கொள்ள வேண்டும் என நான்
நினைக்கும் ஏதாவது ஒரு விஷயம் உங்கள் படிக்கட்டுகளில் கண்டிப்பாக
ஒரு தெளிவான பார்வையுடன் தீர்வு இருக்கும் .நன்றி .

அப்படியானவை சில உங்கள் படிக்கட்டுகளிருந்து .....

##உடல் ஆரோக்கியத்தை பேனுவதென்பது வயதான பிறகு உள்ள விசயம் என்ற தவறை இன்னும் இந்த நவீன உலகம் செய்து கொண்டிருக்கிறது. குதிரைக்கு கண் கட்டிய மாதிரி பணம் மட்டுமே / வேலை மட்டுமே / விசுவாசம் மட்டுமே என ஒடும் வாழ்க்கையில் தடுக்கி விழுந்தபோது தேடும்போது கிடைக்காத செல்வம் 'உடல் நலம்'.
தள்ளிப்போட்டு பார்த்துக்கொள்ள இது ஒன்றும் அரியர்ஸ் அல்ல. 'அரியது"..இறைவன் கொடுத்த வரத்துக்கு சில மரியாதைகள் இருக்கிறது. மரியாதை இல்லாமல் போகும்போது அது மாயமாய்த்தான் போய்விடும்.
உடல் மீது கவனம் செலுத்தாமல் எதிர்காலத்திட்டம் தீட்டுவது அவ்வளவுஏற்புடையது அல்ல.


##உங்களின் தேவைகள் பூர்த்தியாகிவிட்டால் ஒரு வெறுமை நிலை நிச்சயம் உருவாகும். ஒருவன் சரியான மனிதம் கற்றிருந்தால் எல்லைகளை மீறிய அன்பு அவன் மனதுக்குள் குடியிருக்கும். மற்றவர்களின் சோகத்தை கேட்கும்போது அழாத கண் இருந்தும் பயனில்லை. தன்னால் முடிந்தால் செய்தே ஆக வேண்டிய விசயங்கள் நம்மை சுற்றி இருக்கிறது.

---------------------
இவை இரண்டும் பொக்கிசங்கள்.

Noor Mohamed said...

கவிதை படைப்பவரை கவிஞர் என்கின்றோம். இது போன்ற ஆழமான அர்த்தமுள்ள சிந்தித்து செயல் படுத்தும் கட்டுரை படைக்கும் சகோதரர் ஜாகிர் ஹுசைன் அவர்களை நான் எப்படி அழைப்பது? கவிவேந்தர் சபீர் அவர்களே முதலில் இதற்கு ஒரு வழி கூறுங்களே!

பணமா பாசமா? பணமா நலமா? பணமா படிப்பா? பணமா குணமா? இவைகளுக்கெல்லாம் விடைகள்தான் இக்கட்டுரை. இதை படித்து படிப்பினையாகக் கொண்டு பயன் பெற வேண்டும்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

பதிமூன்றாவது படியை வலைத்து வலைத்து கட்டி விட்டு.அதனுடைய தரத்தை பார்வையாளர்கள் நீங்கள் தான் முடிவு செய்துகொள்ள வேண்டும் என்று நளினமாக சொல்லும் திறமை கொண்ட ஜாகிர் காக்காவுக்கு வாழ்த்துக்கள்.

// உடல் ஆரோக்கியத்தை பேனுவதென்பது வயதான பிறகு உள்ள விசயம் என்ற தவறை இன்னும் இந்த நவீன உலகம் செய்து கொண்டிருக்கிறது. //

சரியான கண்ணோட்டம் 40 வயது உட்பட்டவர்களெல்லாம்.கலரி சாப்பாட்டை வெளுத்து கட்டிவிட்டு கவலை இல்லாமல் வெட்டி பேச்சால் ஓடுகிறார்கள்.

கலரி சாப்பாட்டை மட்டுமில்லை கொழுப்பு வகை உணவுகளை குறைத்து விட்ட நாற்ப்பது வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் அதிகாலையில் ECR சாலையில் சந்தோசமாக உலாவக்கூடிய இவர்களுக்கு மத்தியில் நான் ஓட கூடியவன் என்பதை உடல் நலத்தை பேன வேண்டும் என முடிவு செய்தவனாக மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நிசத்தில் எல்லாம் கானல் நீர்' என்பது போல் உள்ளத்தில் பல நல்ல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் சில அசாதாரன‌ சூழ்நிலைகள் நம்மை முடமாக்கி செயலிழக்கச்செய்து விடுகின்றன. அது பணிபுரியும் நிறுவனத்திலோ, ஊரிலோ அல்லது வீட்டிலோ கூட இருக்கலாம்.

அருமையான இக்கட்டுரையை படித்து மகிழும் மனம், அதை பின்பற்ற நினைக்கும் உள்ளம் சிறிது நேரம் கழித்ததும் நமக்கும் படித்ததற்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் மறந்து இருந்து விடுகிறது.

எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக பின்பற்றப்படும் நல்லவைகளே நமக்கு நிச்சயம் ஏற்றத்தை தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இறையச்சமும், இறைவழிபாடும் அப்படித்தான். நோன்பு காலங்களில் மற்றும் வாரத்தின் ஜும்மா நாட்களில் மட்டும் இறைவனை வணங்கி விட்டு மற்ற நாட்களில் இறைவனுக்கும், நமக்கு சம்மந்தமில்லை என்றெண்ணி வழிபாட்டிற்கு விடுமுறை விட்டு விடுவ‌தை இறைவ‌ன் ஒரு போதும் விரும்புவ‌தில்லை.

'பணம் சம்பாதிப்பதற்காக அலைமோதும் இந்த நவீன யுகத்தில் ஐங்கால‌ தொழுகைக்காக அவ்வப்பொழுது சிறிது நேர‌ம் ஒதுக்க‌ப்ப‌டுவ‌தை கால‌ விர‌ய‌ம் என்றெண்ணுப‌வ‌னுக்கு உன்னை ப‌டைத்த‌தே வீண் விர‌ய‌ம் என்றெண்ணி அல்லாஹ் விரைவில் அழித்தொழிக்க‌ மாட்டானா?'

காக்கா இன்னொரு விசயம், உடல் நலம், ஆரோக்கியம், உடற்பயிற்சி என்று பேச்சு வந்து விட்டால் இவன் உலகில் ரொம்ப நாட்கள் வாழ‌ ஆசைப்படுகிறான். துனியாவுடைய ஆசை வந்துவிட்டது என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடுகிறது. இது சரியா? தவறான கண்ணோட்டமா? ஐங்காலத்தொழுகைகள் போக எஞ்சிய நேரங்களில் உடல் நலத்திற்காக உடற்பயிற்சி செய்வதில் என்ன தப்பு இருக்கிறது? (சாவப்போறவங்க தானே நாமெ என்றெண்ணி யாரும் பணங்காசு சம்பாதிக்காமல் இல்லை. சொத்து, பத்துக்கள் வாங்கிப்போடாமல் இல்லை. அமெரிக்கா, ஆஸ்த்திரேலியா போகாமல் இல்லை. தலைக்கு கலர்ச்சாயம் பூசாமல் இல்லை. பொண்ணு வீட்டில் நாசூக்காக தட்சிணைகள் வாங்காமல் இல்லை தானே??? வேறென்னா......)

கால் வ‌ழியின்றி ஏற‌ வைக்கும் உங்க‌ள் ப‌டிக்க‌ட்டுக‌ள் தொட‌ர‌ட்டும். இறுதியில் எம்மை அது சுவ‌ர்க்க‌த்திற்கு கொண்டு போய் சேர்க்க‌ட்டும்......ஆமீன்.

வாழ்த்துக்க‌ள் காக்கா...

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். படித்து விட்டு நாம கருத்து எழுதனும்னு நினைச்சி வெளியில் வேலையாக போய்விட்டு வருவதற்குள் இத்தனை பேர் மிக அருமையாக கருத்து வெளியிட்டுவிட்டார்கள். இதற்கு பின் நாமெ என்னத்த எழுத முடியும்? என்னத்த எழுதி கிழிக்க என்று ஏக்கத்துடனே இங்கே இப்ப பதிகிறேன். ஒவ்வொரு பத்தியும் வாழ்கையின் அடிப்படையை பத்தி(பற்றி)இவ்வளவு ஜனரஞ்ஜமாகவும், நகைச்சுவையாகவும் மருந்துல இனிப்பை தடவி கொடுத்திருக்கீங்க.வேளா வேலைக்கு இதை உணவிற்கு பின் சரியாக பயன் படுத்துவது உணவை விட அவசியம். நாளை வாழ உணவு வேண்டும் அந்த உணவு உண்ண ஆரோக்கியம் வேண்டும் அந்த ஆரோக்கியம் இருந்தால்தான் நாளை உணவிற்கு உழைக்க முடியும் இப்படி மனிதனின் வாழ்க்கைச்சக்கரத்தின் அடிப்படையை தூசு தட்டி சுத்தபடித்தி தந்திருக்கீங்க இதை சரியான முறையில் பராமரிப்பதும், இதில் பயனிப்பதும் அவரவர் கடமை.சரியா சொல்லனும்னா ஊட்ட சத்து, உந்து சக்தி,கிரியா ஊக்கி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். வாழ்த்துக்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இரு 'மை' க்கும் உகந்த ஏற்றம் தரும் 7 நல் விசயங்கள்.
எளிமையாய் ஏற்க நம் மனப் பக்குவமே நல் மருந்து.

அதிரை சித்திக் said...

சகோ .ஜாகிர் ..,கூறிய ஏழு விசயங்களை ..,

அ. நி ,யின் ஆஸ்தான கவி ..,கவி நடையில்

சுறுக்கமாய் ஒரு பா வடித்து மழலையர் பள்ளியில்

பயிற்சி பாடமாக வைக்கலாம் ..அதாவது அறம் செய விரும்பு ..

ஆர்வது சினம் ..என்பது போல ''

ஆரோக்யம் ..பேன்''' கற்ற கல்விக்கு பனி செய் ''மனம் அறிந்து மணம் செய் (மணந்த பின் மனம் அறி )

தர்மம் உள்ளதை கொண்டு உள்ளதால் நினை ..விழித்ததும் இறையை நினைவு கூர் என

குறிபெடுத்து ..ஞயமாய் இனிமையாய் கவிகோர்த்து சபீர் அவர்கள் பின்னூட்டத்தின்

வாயிலாக இனிமை சேர்க்க வேண்டுகிறேன் ..,ஜாகிர் எழுத்துக்கும் எண்ணத்திற்கும் சபாஷ்

அதிரை சித்திக் said...

கவியன்பன் கலாம் காக்காவை மறந்து விட்டேன்

கலாம் காக்காவும் கவி மலை பொழிய வேண்டுகிறேன்

Yasir said...

படிக்கட்டுகள் உயர உயர உயரத்திற்க்கு வந்து மாசுகலப்பற்ற ஆக்சிஜனை சுவாசிப்பது போன்ற உணர்வை, சுகத்தை இந்த ஆக்கத்தின் மூலம் ஏற்படுத்தி உள்ளீர்கள்.அல்லாஹ் உங்களுக்கு எல்லா வகையிலும் பரிபூரண சுகத்தை தரட்டும் ஆமீன்

”WHOLE PERSON CONCEPT” இந்த கான்செப்ட்டில் "HOLE" விழாமல் பார்த்துக்கொண்டால் நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம்.....அல்லாஹ்வின் உதவியால் இந்த 7லும் என் வாழ்வில் உண்டு அல்ஹம்துலில்லாஹ்

Yasir said...

//என்று அசோக சக்ரவர்த்திமாதிரி பீத்தும் எந்த நடிகர்களையும் இப்போது கின்டர்கார்டன் படிக்கும் பிள்ளைகள் கூட 'என்னா சீன் போடுரான்யா" என கமென்ட் அடித்துவிடும்./// ஹாஹாஹா .....எப்படி இப்படி எல்லாம் உங்களால் மட்டுமே எழுத முடிகிறது....நெறைய சீன் ராஜாக்களை நான் பார்த்து இருக்கின்றேன் காக்கா

Yasir said...

//கையில் இருக்கும் 50 ரூபாயில் உன்னால் / உங்களால் என்ன தர்மம் செய்ய முடியும் // What a powerful statement .....Great !!!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"நடக்க ஈக்கிற கவிக்காக்கா ஊட்டு கலியாணத்துலெ அஞ்சி கறி சாப்பாடா? இல்லை அடுக்கு பிரியாணி சாப்பாடா? என்று அவர்கள் யோசிச்சி களரிக்கு லிஸ்ட் தயாரிப்பு செஞ்சிக்கிட்டு ஈக்கிம் பொழுது கவி மழை பொழியச்சொன்னால் எங்கெ போறது? இதுலெ பிளாஸ்டிக் கீசு பையை வேறு ஊரில் ஒழித்து விட்டீர்க‌ள்?"

க‌வ‌லெப்ப‌டாதியெ ந‌ல்ல‌ பிர்ணியோடு க‌லிஃபோர்னியாவுக்கே எடுப்பு சாப்பாடு உண்டு. DHL கொரிய‌ர் செல‌வு ம‌ட்டும் நீங்க‌ள் கொடுத்துக்கொண்டால் போதும்.........

ZAKIR HUSSAIN said...

To Bro Ara Ala,

படத்தில் உள்ள பள்ளிவாசல் மலேசியாவில் உள்ள புத்ராஜயா எனும் இடம். இந்த ஊர்[ அல்லது இடத்தில்தான் மலேசியாவின் பிரதமர் அலுவலகத்திலிருந்து எல்லா அமைச்சுகளும் இருக்கிறது.

இந்த பள்ளிவாசல் கட்டிய விதம் மிகவும் பாராட்டுக்குறியது. முழுக்க முழுக்க வென்டிலேசன் காற்றில் இருக்கலாம்.[No Fans / No Air condition] ஸ்டைன்லஸ் ஸ்டீல் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் "இரும்பு பள்ளிவாசல் என்ற பெயர் கொண்டது. திறந்து 2 வருடம் இருக்கும்.

சேக்கனா M. நிஜாம் said...

1. Health.
2. Family
3. Education
4. Career.
5.Service [to Society]
6. Financial
7. Spiritual

Thanks for your valuable concepts. we are expecting more concepts from you…( insha allah )

ZAKIR HUSSAIN said...

மு.செ.மு. நெய்னா முஹம்மது = அதிராம்பட்டினத்தின் விக்கிபீடியா

ZAKIR HUSSAIN said...

//காக்கா இன்னொரு விசயம், உடல் நலம், ஆரோக்கியம், உடற்பயிற்சி என்று பேச்சு வந்து விட்டால் இவன் உலகில் ரொம்ப நாட்கள் வாழ‌ ஆசைப்படுகிறான். துனியாவுடைய ஆசை வந்துவிட்டது என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடுகிறது. //


அப்படி சொன்னவனிடம் "இன்றையிலிருந்து சாப்பிடாதே" என்று சொல்லிப்பாருங்கள். அடுத்த முறை இந்த முட்டாள்தனமான வசனமெல்லாம் பேசமாட்டானுக. ஏன்னா சாப்பிடறதும் வாழனுங்கற ஆசையிலெதானே. இது மாதிரி நிறைய 'முல்லா"க்கள் நம் ஊரில் இருக்காங்க.

Noor Mohamed said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//மு.செ.மு. நெய்னா முஹம்மது = அதிராம்பட்டினத்தின் விக்கிபீடியா//

மறுக்க முடியாத வெளிப்படை உண்மை. நெய்னாவை உலுப்பினால் நிறைய திரட்டலாம்

sabeer.abushahruk said...

ஜாகிர்,

ஏழு படிக்கட்டுகளுக்கான விஷயங்களை ஒரே படிக்கட்டில் எழுதி முடித்தது ஒரு ட்ரைலர் போல சுவாரஸ்யப்படுத்துகிறதே தவிர முழுமையாக எங்களுக்கு புரிய வேண்டுமெனில் ஒவ்வொரு கான்ஸெப்ட்டையும் ஒவ்வொரு படிக்கட்டாக எழுத வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

உன்னை மாதிரி மயக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர்களால் நிச்சயமாக சமுதாய மேம்பாட்டிற்கு பிரயோஜனமுண்டு.

sabeer.abushahruk said...

நூர் காக்கா / சகோ.சித்திக்:

தங்கள் அன்பிற்கு நன்றி. கால நேரம் கூடி வருகையில் இந்த படிக்கட்டுகளை கவிதையாக்க முயல்கிறேன், இன்ஷா அல்லாஹ். ஏற்கனவே பலமுறை ஜாகிரின் கருத்துகளையும் கடிதங்களையும் கவிதையாக்கி அவனையே வியக்க வைத்திருக்கும் அனுபவம் உண்டு. எனவே, இதையும் ஒரு கை பார்த்துவிடுவோம்.

தற்போது ஏன் முடியாது என்பதற்கு பதிலை அன்பின் நெய்னா கோடிட்டுக் காட்டியாச்சு. இருப்பினும் அவசியம் என் அடுத்தப் பின்னூட்டத்தை வாசியுங்கள்.

sabeer.abushahruk said...

அன்புடன் அழைக்கிறேன்.

அன்பிற்குரிய அதிரை நிருபர் தளத்தின் சகோ.களே,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வரும் மே 20ந்தேதி என் மூத்த மகள் ஷப்னம், என் மருமகன் மஜூதுவை மணக்க இருக்கிறாள்.

லாவண்யா கல்யாண மண்டமத்தில் காலை 9 மணிக்கு துவங்கும் மார்க்க பயானிலிருந்தே தாங்கள் அனைவரும் கலந்துகொண்டு, மணமக்களை நபி வழியில் வாழ்த்தி, என்னோடு விருந்துண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஸபீர் அபுஷாருக்

(அ.நி. கவனத்திற்கு, 
அல் நூர் ஹஜ் சர்விஸின் நெடுங்கால ஹஜ் வழிகாட்டி மேலப்பாளையம் உஸ்மானியா கல்லூரியின் பேராசிரியர் ஜனாப். மெளலவி ஹாஃபிழ் அல்ஹாஜ் பி ஏ காஜா மொய்னுத்தீன் ஆலிம் அவர்களின் "நல்ல குடும்பம்" என்னும் தலைப்பிலான மார்க்க சொற்பொழிவு அதிரை நிருபரில் நேரலை செய்ய தகுதி வாய்ந்தது. கவனிக்கவும்)

Unknown said...

நல்ல படியாக திருமணம் நடக்க எங்கள் வாழ்த்துக்களும் ,துவாவும் சபீர் காக்கா..
மணமக்கள் நீடுழி நம் மார்க்க வழியில் வாழ என் அன்பான வாழ்த்துக்கள் காக்கா.

அதிரை சித்திக் said...

சகோ கவி ..சபீர் ..இல்ல திருமண விழா

சபீர் அவர்களின் கவி போல் இனிமையாய்

நடந்தேற வாழ்த்துக்கள் ..மணமக்கள்

பல்லாண்டுகாலம் இனிதே வாழ்க

ஈருடல் ஓருயிர் என்பார்கள் அது போன்று

உயிருக்குயிராய் அன்பு கலந்த வாழ்க்கை வாழ்ந்திட

வாழ்த்துகிறேன் ..மணம்புரியும் மணமக்கள் ..மன மறிந்து

வாழ வாழ்த்துகிறேன் ..என்றும் அன்புடன் அதிரை சித்திக்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சபீர் காக்கா
தலைமைச் செய்தியாய் வர வேண்டிய மணச் செய்தியை பின்னூட்டமாய் தெரிவிக்கிறீர்களே!

செயலில் நபி முறையுடன்,
செல்வத்தில் ஈகையுடன்,
பெற்றோருக்கு புகழுடன்,
என்றும் புன்னகையுடன்,
பெயருக்கேற்ற உயர்ந்த 'டவராய்'
சிறந்து இணைந்து வாழ்வில்
உயர்ந்திட உளப்பூர்வமான என் துஆ.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//சபீர் காக்கா
தலைமைச் செய்தியாய் வர வேண்டிய மணச் செய்தியை பின்னூட்டமாய் தெரிவிக்கிறீர்களே!//

கவிக் காக்கா தனித் தனியாக ஒவ்வொருரையும் நேரில் சந்தித்து அழைக்க ஆசைதான், வேலையும் இருந்து அதற்கு மேல் பளுவும் இந்ததால், இதயக் கதவுகளை இனிமையாக தட்டிட இதுவும் ஒரு வழி என்று இன்றல்ல என்றோ அவர்களும் அறிந்தவர்கள்தானே அதுதான் உள்ளம் தொட்ட உறவுகளுக்கு உரிமையுடன் இந்த தளம் வாயிலாகவும் அழைப்பு வைத்திருக்கிறார்கள்...

இன்ஷா அல்லாஹ் சூழல் அமைத்து இயன்றவரை அவர்களின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திட அதிரைநிருபர் குழு சார்பாகவும் அழைக்கிறோம்... :)

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புள்ள சபீர் காக்கா,
தங்களின் இல்லத் திருமணம் இனிதே நடந்தேறவும்,மணமக்கள் நீடூழி வாழ்ந்து,ஈருலகிலும் வெற்றி பெறவும் வாழ்த்துவதோடு,எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சபீர் காக்கா தாங்கள் புதல்வி திருமணத்தின் முதல் கட்டமே எழிய முறையில் உள்ளம் தொட்ட உறவுகளுக்கு இலகுவான அழைப்பிதல். நிக்காஹ் முடியும் வரையிலும் நபி (ஸல்)அவர்கள் சுன்னத்தை பின் பற்ற அல்லாஹ் உதவி செய்வானாக!

தம்பதியர்கள் ஒருவருக்கொருவர் சரியான முறையில் புரிந்தும்.

அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதரும் சொன்ன பிரகாரம் வாழ்க்கை அமைத்து கொள்ளவும்.

பெற்றோர்கள் கண்குளிர நடந்து கொள்ளவும்.

குழந்தைகள் பல பெற்று அல்லாஹ்வை அஞ்சி பல்லாண்டு வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...



அன்புள்ள சபீர் காக்கா அவர்களுக்கு,



உங்கள் இல்ல‌ திருமண அழைப்பிதழ் கிடைத்து ரொம்ப சந்தோசம். அல்லாஹ் கிருபையில் நிக்காஹ் இனிதே நடந்தேறிடவும், மணமக்களின் இஸ்லாம் போற்றும் இல்லறம் கடைசி மூச்சு வரை சிறந்து விளங்கவும், அதன் மூலம் குடும்பத்தினர்களுக்கு சகல சந்தோசங்களும் வந்தடையவும், நம் மார்க்கம் செழிக்கவும், ஊரெல்லாம் அமைதி நிலவவும் இந்த உன்னத சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீனிடம் மனமுருகி இறைஞ்சுகின்றேன்.



உங்கள் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க எனக்கெல்லாம் பேரவா உள்ளது. பணி இடத்து சூழ்நிலையால் என்னால் இரு மனங்கள் இணையும் இஸ்லாம் போற்றும் இத்திருமணத்தில் கலந்து கொள்ள இயலாமல் போகும் சூழ்நிலையை எண்ணி வ‌ருந்துகிறேன். ஆனால் நிச்ச‌ய‌ம் மணமக்களையும் அவர்களை ஈன்றெடுத்த தாய், தந்தையரையும் வாழ்த்தி து'ஆச்செய்ய‌ ம‌ற‌க்க‌ மாட்டேன். (இன்ஷா அல்லாஹ் வ‌ருங்கால‌த்தில் பேர‌க்குழ‌ந்தைக‌ள் ப‌ராம‌ரிப்பு ப‌ற்றிய‌ ந‌ல்ல‌ த‌ர‌மான‌ க‌விதைக‌ளை த‌ங்க‌ளிட‌மிருந்து எதிர்பார்க்கிறேன்.)



நினைவுட‌ன் மின்ன‌ஞ்ச‌லில் அழைப்பித‌ழ் அனுப்பிய‌மைக்கு ந‌ன்றி க‌ல‌ந்த‌ என் இனிய‌ ச‌லாம் உங்க‌ள் அனைவ‌ர்க்கும்....



வ‌ஸ்ஸ‌லாம்.



அன்புடன்



மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

என்ன இது படிக்கட்டுகளா? அல்லது பத்திரிக்கை அழைப்பிதழா? ஆகட்டும்...ஆகட்டும்....

எதுக்கும் சகோ. சேக்கன்னா நிஜாமிடமும் கொஞ்சம் கன்சல்ட் பண்ணிக்கிடுங்க.....இந்த தடவை பிர்ணியா? அல்லது ப்ரட் சுவீட்டா? எது எப்படியோ? 'ஆட்டுத்தலை வறுவலும் ஆஸ்பத்திரி டோக்கனும்' என்ற கட்டுரையை ஜாஹிர் காக்கா மூலம் மீள் பதிவு செய்ய வைத்து விடாதீர்கள்........

என்னா சபீர் காக்கா, முந்திரி, பாதாம், பிஸ்த்தா, பூமார்க் நெய்ண்டு லிஸ்ட் போடச்சொன்னா அத‌ப்பத்தி கவிதை எழுதிக்கிட்டு உக்காந்துக்கிட்டு ஈக்கிறியெ..........

கிரானிக்கடையிலெ வேலை செய்யிற ஆளு, என்னா இது? மளியச்சாமானுவோ லிஸ்ட்க்கு பதிலா யாரோ தவறுதலா கட்டுரை எழுதி அனுப்பிக்கிறாஹ.....அந்த ஊட்டுக்கு போனைப்போடு என்று சொல்ல வைத்து விடாதீர்கள்.......

உங்க‌ள் இல்ல‌ திரும‌ண‌ம் சன்மார்க்க‌மும், சான்றோர்க‌ளும் போற்ற‌ இனிதே இன்ப‌முட‌ன் ந‌ட‌ந்தேறிட‌ எல்லாம் வ‌ல்ல‌ ர‌ப்புல் ஆல‌மீனிட‌ம் பிரார்த்திக்கின்றேன்.....

Noor Mohamed said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்பு தம்பி கவிவேந்தர் சபீர் அவர்களுக்கு,

உங்கள் இல்லத் திருமணம் இனிதே நடந்தேற வாழ்த்துகிறேன்.

‘நபியே! உமக்கு முன்பும் தூதர்கள் பலரை நாம் அனுப்பியுள்ளோம். மேலும், மனைவிமக்களையுடையவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருக்கின்றோம்.’ (அல்குர்ஆன் 13:38 )

‘நீங்கள் அமைதி பெற உங்களி லிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.’ (அல்குர்ஆன் 30:21)

‘திருமணம் எனது வழிமுறை. யார் அதனைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல.’ (நபி மொழி)

'பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீகைர்.' (நபி மொழி)

20/05/2012 அன்று வாழ்க்கை ஒப்பந்தத்தில் இணையும் தம்பதிகள் ஷப்னம் மஜூது வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழவும், அல்லாஹ்வும் அவனுடைய ரசூல் அவர்களும் காட்டிய வழிமுறையை கடைபிடித்து இல்லறத்தை நல்லறமாய் நடத்த அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்ய துஆ செய்கிறேன்.

அன்புடன்
நூர் முஹம்மது
கதீப் - தம்மாம் / சவூதி அரேபியா

ZAKIR HUSSAIN said...

Thanx to all our brothers for your wonderful comments. Insha Allah i will write the next episode with more interesting matters.

Noor Mohamed said...

Dear brother ZAKIR HUSSAIN

தங்களின் "படிக்கட்டுகள்.. ஏற்றம்-13" பத்திரிக்கையாகவும் அமைந்துவிட்டது.

சகோ. கவிவேந்தர் சபீர் அவர்களின் சிரேஷ்ட புதல்வியின் திருமண அழைப்பிதழை பின்னூட்டம் மூலம் அறிந்து, பலர் அட்வான்ஸ் வாழ்த்துக்களும் அறிவித்துவிட்டனர்.

இதிலிருந்து இயற்கையாகவே உங்களின் ஆருயிர் நட்பை அறிய முடிகிறது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நூர் முஹம்மது காக்கா, சபீர் காக்கா, ஜாஹிர் காக்காவுக்கு முன்னாடி கவிக்காக்கா ஊட்டு கலியாண மேட்டரை இங்கே ஆரம்பிச்சு உட்டதே நானாக்கும்.......நம்மள மறந்துட்டியளெ ஹாக்கா......

KALAM SHAICK ABDUL KADER said...

ஏழு படிகள் ஏறு!



புதுக்கவிதை:



வாழும் கலைகள் கூறும்

ஏழு படிகள் ஏறு!

சூழும் வெற்றி ஓங்கும்

தாழ்வு மனப்பான்மை நீங்கும்



உடல் எனும் வீடு

உன்னிடம் தூய்மை தேடும்



அடித்தாலும் பிடித்தாலும் குடும்பம்

நடித்தாலும் நகைத்தாலும் குடும்பம்

மடித்தாலும் மடங்காத மரமே குடும்பம்

வெடித்தாலும் விலகாத வேரே குடும்பம்



கல்வி எனும் ஒளிச்சுடரும்

பல்விதமாய் எங்கும் படரும்

ஒருவர் பின் ஒருவராய்ப் பற்றும்

அஞ்சல் ஓட்டம் போல் தொற்றும்

கற்றதைக் கற்பித்தல்; மாசிலா மனதைப்

பெற்றதை ஒப்பித்தல்!



தொழில் எனும் பூஞ்சோலை

எழில் கூட்டிடும் உன்வேலை



சமுதாயச் சேவை; அன்புக்கு

அமுதாய்த் தேவை



இரை தேடும் உன்னை

இறை தேடி வருவான் முன்னே



உள்ளத்தின் ஒளி அறியும் கலை

பள்ளத்தினின்றும் வெளிவரும் நிலை



குறட்பா (மரபுக் கவிதை)



உடலை நலமுடன் ஓம்புதல் உன்றன்
கடமை யெனநீ கருது.



கொடுக்கும் உறவே குறைவின்றி மீளும்
குடும்பம் அதுவென கொள்.



கற்றதனால் நன்மையாம் கற்றதைக் கற்பித்தல்
மற்றவரை நேசித்தல் மாண்பு

செய்யும் தொழிலதைச் செவ்வனே செய்வதால்
பெய்யும் புகழோ பெரிது



சேவை பெரிதென செய்தல் படைப்பினத்
தேவை யுணர்ந்துநீ தேடு



பொருளைத் திரட்டப் புறப்படும் நேரம்
அருளைப் பொழிவான் அவன்



ஆன்மீகம் கற்றலும் ஆழ்மனம் நோக்குதலும்
மேன்மேலும் ஆற்றல் மிளிர்





“கவியன்பன்” கலாம்

KALAM SHAICK ABDUL KADER said...

ஷப்னம் - திருமண வாழ்த்து


கவிதையின்
கவிதைக்குக்
கல்யாணம்!

வரம் பெற்றக்
கவிஞர்
தரம் உயர்ந்தார்
மாமனாராக!

கொடி முல்லையாய்
வளர்த்த பிள்ளையும்
பற்றிப் படர மருமகன்
வெற்றி கொண்டார்!

இருமனங்கள் சேரும்
திருமணத்தில்
நறுமணமாய்
நபி(ஸல்) வழியே
நடக்கட்டும்!


அன்பான உங்கள் அழைப்பால் அகமகிழ்ந்தோம்
பண்பான உங்களின் பாசமகள் வாழ்கை
மலரும் கவிதை மணம்போல் மலரும்
பலரும் துவாசெய்வார் பார்


முதன்மை மகளாம் ஷப்னம்
முழுமை பெறவே திருமணம்
பதவி உயர்வு தந்தைக்கு
“பர்கத்” பெருகும் இன்றைக்கு!

கணவனும் மனைவியும் வாழ்க
“காத்தமுன்” நபி(ஸல்)யின் வாழ்த்தாக
மணமுறும் வேளையின் “துஆ”வாக
மடல்வழி வனையும் கவியாக!


மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
>
> بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
> நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது ... பாரகல்லாஹூலக
> வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்... பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும்
> பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக!
> உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக! என்று கூறுவார்களென அபூஹூரைரா
> (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, ஆகிய
> நூல்களில் இடம் பெற்றுள்ளது. (பரகத்) என்னும் அரபி சொல்லுக்கு 'புலனுக்கெட்டாத
> இறை அருள்' என்பது பொருள்.

அதிரை சித்திக் said...

கவிதை கடலுக்கு கவிதைக்கா பஞ்சம் ..

எனது ஆசையை நிறைவேற்றிய கவியன்பன் காக்கா

அவர்களுக்கு நன்றி ..அ.நி .பின்னூட்டத்திலும் .வெளியிட்டு

என் அவாவை நிறைவேற்றுங்கள் ...தங்களின் அன்பிற்கு நன்றி

கடல் நிறைய தண்ணீரில் ஒரு கரண்டி தண்ணீர் எடுத்து தந்தது போல்

கவி கடல் கலாம் காகாவிடமிருந்து கவிதை பெற்றது ..

மனம் வேண்டும் ..,நிறைவாய் உள்ளது உங்களிடம் ..மீண்டும் நன்றி

ZAKIR HUSSAIN said...

நன்றி சகோதரர் கவிஞர் அபுல்கலாம்...அபுல்கலாம் என பெயர் இருந்தாலே திறமைகள் கொட்டிகிடக்குமோ..

குடும்பம் பற்றிய புதுக்கவிதை அருமை.

crown said...

வரம் பெற்றக்
கவிஞர்
தரம் உயர்ந்தார்
மாமனாராக!
--------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். வரம் பெற்றக்
கவிஞர்
தரம் உயர்ந்தார்
மாம(ன்)னாராக!
என்றுமே என் அன்பு தேசத்தின்
கவிசக்(கரை)ரவர்திதான் சபீர்காக்கா!
அவரிகளின் மூத்த மகளாரின்
இனிதான மணவாழ்விற்கு
என் ,என் குடும்பத்தினரின்
மனமார்ந்த வாழ்தும் துஆவும்.
மணமக்கள் வாழ்க பல்லாண்டு,வளம் பல கண்டு

KALAM SHAICK ABDUL KADER said...

ஜஸாக்கல்லாஹ் கைரன் அன்புச் சகோதரர் ஜாஹிர் ஹுசைன். உங்களின் கட்டுரைகளால் ஈர்க்கப்பட்டு உங்களைக் காண வேண்டும் என்ற பேரவாவுடன் காத்திருக்கின்றேன். கவிவேந்தர்- உங்கள் ஆருயிர் நண்பர்- சபீர் அவர்கள் இல்லத் திருமண விழாவிற்கு உங்களின் வருகை இருக்கும் என்பதால் தற்பொழுது ஊரில் இருக்கும் (அ.நி. வாசகர் வட்டம்) அன்புச் சகோதரர்கட்குக் கிடைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம்! இன்ஷா அல்லாஹ் ஜூன் 14 முதல் ஜூன் 14 வரை விடுப்பில் தாயகம் வருவேன்; அத்தருணம் நீங்கள் ஊரில் இருந்தால் சந்திக்கலாம்.

இன்ஷா அல்லாஹ் கவிஞர் வீட்டுத் திருமணத்தில் என் சார்பாக என் மகன் கலந்து கொள்வார்; இவ்வேற்பாடு அக்கவிஞர் மீது நான் கொண்டுள்ள அன்புக்கு மரியாதை!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.