Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 27

அதிரைநிருபர் பதிப்பகம் | October 18, 2012 | , ,

தொடர் - 6
கனவும் நனவும் 

கி.பி. 610ன் ஆரம்பத்தில் அண்ணலாருக்கு உறக்கத்தில் கனவு ஒளிப்படலங்கள் தோன்றத்துவங்கின! அரபியில் இதனை ருஃயா  சாதிக்கா என்பர்.  எதை இரவு கனவாய்க் கண்டார்களோ அது அப்படியே அன்று விடிந்ததும்  நனவாய் நிகழும். நபித்துவத்தின்  நற்செய்தி ஆறு மாதங்களுக்கு முன்பே இப்படி கனவுகள் மூலம் கனியத் துவங்கியது. அல்லாஹ்வின் அருள் ஒளி அகிலமெங்கும் தொடர்ந்து 23 ஆண்டுகள் பரிணமித்து அறியாமை இருளை அடித்துத் துரத்தியது! இன்ஷா அல்லாஹ், இறுதி நாள் வரை தொடர்ந்து நிற்கும் அந்த மனங்கவர் மாமனிதர் கொண்டு வந்த குர்ஆன் எனும் இந்தக் கலங்கரை விளக்கம்!  

இப்போது, நாம் காண்போம் சற்று  கனவின் விளக்கம்:

கனவு காணாத மனிதரே கிடையாது! வாய் பேச இயலாதவர், கண் காண முடியாதவர், காது கேட்க வகை இல்லாதவர், சித்தப்பிரமை கொண்டவர்,  குழந்தைகள், வயோதிகர், ஏன்? விலங்குகளும் பறவைகளும் கூட கனாக் காணுகின்றன என்கின்றனர் மனக்கூறு வல்லுனர்கள்.

நாம் காணும் கனவுகள் மூன்று வகை:  

(1) நற்செய்தி : அல்லாஹ் ரப்புல் ஆலமீன்,  நம்பிக்கையாளனுக்கு அனுப்பும்  புஷ்ரா  எனும் நன் மாராயம்! இது கண்டால் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று அல்லாஹ்வைப் புகழுங்கள். நல்ல கனவு கண்டவருக்கு அன்று முழுதும் அலாதியான மகிழ்ச்சியும் மன அமைதியும் மனமெங்கும் வியாபித்து இருக்கும். தனக்கு நெருக்கமான, தோழமை கொண்ட நலம் விரும்பிகளிடம் கண்ட கனவைப் பகிர்ந்து கொள்ளலாம். 

(2) தீய கனவுகள் : இது முற்றிலும் ஷைத்தானின் தீண்டுதலால் தோன்றுவது!  பயங்கரமான, மடத்தனமான, அருவருப்பான, ஆபாசமான, மிருகத்தனமான, இயற்கைக்கும் இயல்புக்கும் மாற்றமான, மொத்தத்தில்   பேய்த்தனமாகத்  தோற்றம் தரும் அனைத்தும் முஃமின் உடைய ஈமானை சற்று அசைத்துப் பார்ப்போமே என்று இப்லீஸ் ஏற்ப்படுத்திக் கொள்ளும் ஓர் இருட்டு வாய்ப்பு!

ஒருவர் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது  என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். (புஹாரி 6985 )

அப்போதும் மனம் அமைதி பெறவில்லை எனில், எழுந்து இரண்டு ரக் அத் தொழுதுவிட்டு அந்தத் தீய கனவின் தீமைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடவேண்டும் (ஸஹீஹ் முஸ்லிம் 4200)

(3) மனப்பிரமை: அஜீரணத் தொல்லை  அதிகமானாலும் மனப்பிரமையான கனவுகள் அடிக்கடி தோன்ற வாய்ப்புள்ளதென்பது உடற்கூறு வல்லுனர்கள் கூற்று. இவை பெரும்பாலும் அர்த்தமில்லாத கனவுகளாகும். கற்பனையான,  தன் மனோ இச்சையின் தாக்கத்தின் பிரதிபலிப்பு கனவில் அதுபோல ஒரு பிரேமை ஆகவே வரலாம். (உதாரணம்: நாகூர் தர்காவிற்குச் சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றப் பேரவா கொண்ட ஒரு பித்துக்குளிப் பெண்மணியின் பிரேமை!) 

குறிப்பாக, கனவில் அவுலியா வந்து அழைத்தார்! (ஆகவே, நான் தர்காவிற்குச் செல்ல தயாராகி விட்டேன்)  என்று பொய்யுரைப்பது மிகப்பெரும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

'பொய்களிலேயே மிகப் பெரும் பொய், ஒரு மனிதன் தன்னைத் தன் தந்தையல்லாதவருடன் இணைத்து (நான் அவரின் மகன் என்று) கூறுவதும், தன் கண்கள் பார்க்காத ஒன்றை (ஒரு கனவை) அவை பார்த்ததாகக் கூறுவதும், இறைத்தூதர் சொல்லாத ஒன்றை அவர்கள் சொன்னதாகச் சொல்வதும் ஆகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என வாஸிலா இப்னு அல் அஸ்கவு(ரலி) அறிவித்தார் (புஹாரி எண் 3509)

இப்போது நாம் அந்த சஹாபியை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது!

அரக்கப் பறக்க ஓடி வந்து, அல்லாஹ்வின் தூதரே! என அழைத்தபடி இயல்புக்கு மாற்றமாக நின்று கொண்டிருக்கும் அவரைப் பார்த்ததுமே அண்ணலார் யூகித்து விட்டார்கள். இவர் எதையோ பார்த்து பயங்கரமாக அதிர்ச்சி அடைந்திருக்கின்றார்! கசங்கிய உடை, கழுவாத முகம், வாரப்படாத பரட்டைத் தலை என்பதெல்லாம் அப்போதுதான் படுக்கையிலிருந்து எழுந்து நேராக நபி (ஸல்) அவர்களைக் காண வந்துள்ளார் என்பதைப் பறை சாற்றின!

"சொல்லுங்கள் தோழரே! என்ன நிகழ்ந்தது?"

"அல்லாஹ்வின் தூதரே! எனது தலை. எனது தலை துண்டிக்கப் படுவது போன்று நான் கனவு கண்டேன் என்றார் பதட்டமாக! தொடர்ந்து, அந்தக் கனவில் என் தலை வெட்டப்பட்டது. அதுமட்டுமல்ல! வெட்டப்பட்ட என் தலையைப்  பாய்ந்து  பிடிப்பதற்காக  நானே துரத்திக்கொண்டு  ஓடினேன் என் கனவில் " என்று கூறி நின்றார் பரிதாபமான தொனியில்!

செய்தி கேட்ட நபிகளார் சிரித்து விட்டார்கள்!

வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் நபியின் முகம், சிரிப்பால் மேலும் சிவந்து போனதைக் கனவு சொல்லி நின்ற அவர் கண்டு களித்தார். அண்ணல் நபியின் அழகிய சிரிப்பால் தோழரின் கவலை தொலைந்து போனது! எங்கிருந்தோ ஒரு நிம்மதி வந்து அமைதியுடன் அவர் மனதில் அமர்ந்து கொண்டது!

அறிவுரை: உறக்கத்தில் ஷைத்தானின் விளையாட்டால் உங்களில் எவரும் கெட்ட  கனவு கண்டால், மற்ற எந்த மனிதரிடமும் சொல்லித்திரிய வேண்டாம் என, அவரை ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தார்கள் அன்பே வடிவாம் அண்ணல் நபியவர்கள்.

(அறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல் ஸஹீஹ் முஸ்லிம் 4665. 4212) 

இக்பால் M.ஸாலிஹ்

27 Responses So Far:

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

சகோதரர் அவர்களின் அரிய முயற்சியின் பலனை ஒவ்வொரு அத்தியாத்திலும் கண்டு வருகிறோம்.

****
வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் நபியின் முகம், சிரிப்பால் மேலும் சிவந்து போனதைக் கனவு சொல்லி நின்ற அவர் கண்டு களித்தார். அண்ணல் நபியின் அழகிய சிரிப்பால் தோழரின் கவலை தொலைந்து போனது! எங்கிருந்தோ ஒரு நிம்மதி வந்து அமைதியுடன் அவர் மனதில் அமர்ந்து கொண்டது!
*****

அற்புதமான எழுத்து நடை, கண்மனி நபியவர்களின் சிரிப்பை அழகாக வர்ணித்து இருக்கிறீர்கள்.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்

sabeer.abushahruk said...

அடர்த்தியான எழுத்து நடை நாலைந்து வரிகளுக்குள்ளே நாற்தாயிரம் அர்த்தங்களைப் பொதித்து வைத்திருக்கிறது.

கண்மணி நபி (ஸல்)அவர்களை நீ வர்ணிப்பது மனம் கவர்கிறது எனினும் வரம்பு மீறாதிருக்கிறது.

வேலையிலிருந்து திரும்பி களைத்துப்போய் தூங்கும்போது கனவெல்லாம் வருவதில்லை. தூக்கத்திற்கும் விழிப்புக்குமான இடையிலான நேரங்களில் தோன்றுவது பிரம்மைதானே?

வித்தியாசமானத் தொடர்,தொடர்க!

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

மனித வாழ்க்கையில் கனவுகள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நடக்க முடியாததை ஒருவன் எதிர்பார்க்கும் போது 'பகல் கனவு காணாதே' என்று கூறுவதும், சாட்சிகள் இல்லாமல் நடைபெற்ற காரியத்தை பேசும் போது 'ஊமை கண்ட கனவு போல்' என்று உவமை கூறப்படுவதும் கனவுகளின் பாதிப்பை உணர்த்தப் போதுமானதாகும்.

கனவு காணாதவன் மனிதனாக இருக்க முடியாது என்ற அளவுக்கு அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு அம்சமாக மாறிவிட்ட கனவு பற்றி இஸ்லாம் கூறுவதை விளக்குவதே இத்தொடரின் நோக்கமாகும்.

கனவு பற்றி ஒருவன் எத்தகைய நம்பிக்கை வைத்திருக்கிறான் என்பதன் அடிப்படையில் அவனது வாழ்க்கையிலும் மாறுதல் ஏற்படுவதால் இதுபற்றி விளக்கும் அவசியம் ஏற்படுகின்றது.எனினும் தன் தீயச்செயல் (சைத்தானின் தூண்டுதலினால்) செய்து கனவுகளை காரணம் காட்டுவோர் ஏராளம் இதோ ஒரு சில:

கனவு கண்டு விட்டு தன் மனைவியை சந்தேகித்தவர்கள் மேலும் அவ(ர் க)ளை விவாகரத்து செய்தவர்கள்

கனவில் கண்டது போலவே தங்கள் பொருட்களைச் செலவிட்டவர்கள்.

பணக்காரனாக ஆவது போல் கண்டு அதை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் எனப் பட்டியல் நீள்கிறது.

அல்ஹம்துலில்லாஹ் நல்லதொரு தெளிவான ஆக்கம்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
///கனவின் விளக்கம்:
நற்செய்தி
தீய கனவுகள்
மனப்பிரமை///*** பற்றி தெளிவான விளக்கம்***

///அண்ணல் நபியின் அழகிய சிரிப்பால் தோழரின் கவலை தொலைந்து போனது! எங்கிருந்தோ ஒரு நிம்மதி வந்து அமைதியுடன் அவர் மனதில் அமர்ந்து கொண்டது!///

மாஷா அல்லாஹ்! அழகிய எழுத்து நடை, அழகிய விளக்கம். வாழ்த்துக்கள்!

Ebrahim Ansari said...

இது கனவைப் பற்றிய பலரது சந்தேகங்களுக்கு விடை பகரும் இந்த தொடரின் இனிய பகுதியாகும். சிறப்பான விளக்கங்கள். பாராட்டுக்கள்.

Shameed said...

//முகம், சிரிப்பால் மேலும் சிவந்து போனதைக் கனவு சொல்லி நின்ற அவர் கண்டு களித்தார்//

பலருக்கும் கோபத்தால் முகம் சிவக்கும் "நம்முடைய அண்ணல் நபியின் அழகிய சிரிப்பால் முகம் சிவந்தது" ஆகா அழகிய எழுத்து கோர்வை

Jahir said...

அருமையான ஹதீஸுடன் பயனுள்ள தகவல்கள்

ஜலீல் நெய்னா said...

மாப்ளே, உன்னுடை எழுத்து நடை தெரியும் இருந்தாலும் பிரமிக்க வைத்து விட்டது. இன்ஷா அல்லாஹ் தொடரவும்.

// சித்தப்பிரமை கொண்டவர், குழந்தைகள், ஏன்? விலங்குகளும் பறவைகளும் கூட கனாக் காணுகின்றன என்கின்றனர் மனக்கூறு வல்லுனர்கள்.//

இதற்கும் ஆதாரத்துடன் கொடுத்து இருந்தால் எங்களுக்கு பயனுள்ளதாக இறுந்திருக்கும்.

ZAKIR HUSSAIN said...

கனவைப்பற்றி விளக்கம் இருக்கிறதா?...

கனவுகளின் பலன் கள் என்று புத்தகம் பார்த்தமாதிரி ஞாபகம். இதற்கெல்லாம் பலன் சொல்ல முடியுமா ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அற்புதமான எழுத்து நடை, அழகான வர்ணனை... கட்டுரையே கவிதையாக எங்கள் கண்களுக்கு படுகிறது !

கட்டுரைகளை வாசிக்க தயங்குபவர்களையும் வாசிக்கத் தூண்டும் வசீகரம் !

KALAM SHAICK ABDUL KADER said...

//அற்புதமான எழுத்து நடை, அழகான வர்ணனை... கட்டுரையே கவிதையாக எங்கள் கண்களுக்கு படுகிறது !

கட்டுரைகளை வாசிக்க தயங்குபவர்களையும் வாசிக்கத் தூண்டும் வசீகரம் !//

//வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் நபியின் முகம், சிரிப்பால் மேலும் சிவந்து போனதைக் கனவு சொல்லி நின்ற அவர் கண்டு களித்தார். அண்ணல் நபியின் அழகிய சிரிப்பால் தோழரின் கவலை தொலைந்து போனது! எங்கிருந்தோ ஒரு நிம்மதி வந்து அமைதியுடன் அவர் மனதில் அமர்ந்து கொண்டது!
*****

அற்புதமான எழுத்து நடை, கண்மனி நபியவர்களின் சிரிப்பை அழகாக வர்ணித்து இருக்கிறீர்கள்.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்//
அன்புச் சகோதரி அமீனா மற்றும் அன்பு நெறியாளர் அபுஇப்றாஹிம் ஆகியோரின் கருத்துரைகளை அடிபிறழாது வழிமொழிகின்றேன். என் உள்ளக்கிடக்கையில் இவ்வெண்ணங்கள் உருவாகிக் கிடக்கையில் எப்படி இருவரும் முந்திக் கொண்டார்க்ளோ? இதுவும் கனவா? நனவா?

அழகாக- நகைச்சுவையாக அண்ணல் நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் உரையாடி எல்லார்க்கும் மகிழ்ச்சியை ஊட்டும் உண்மை நிகழ்வுகளை ஆதாரத்துடன், அழகாக-நகைச்சுவையாகவும் ஹதீஸ் வகுப்பெடுக்க முடியும் என்றால் , அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் அவர்கட்கு அல்லாஹ் அருளிய அருட்கொடை ஒன்றே அதற்குக் காரணம் எனலாம்.


crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.அருமையான விளக்கத்துடன் , அனுபவித்து எழுதியதை கட்டியம் கூறும் எழுத்து பாணி. நெறியாளருக்கு ஒரு வேண்டுகோள் என் மனதில் பட்டது. எல்லா ஆக்கங்களுக்கும் கருத்துப்படம் தேவையா? காரணம் சகாபாக்கள் பற்றிய சம்பவம் ஒரு சதாரண மனிதன் உருவத்தில் கிராபிக்ஸில் தலை விழுவது போல் உள்ளது என்னமோ என் நெஞ்சை நெருடுகிறது. இது என் தனிப்பட்ட கருத்து.

KALAM SHAICK ABDUL KADER said...

//என் மனதில் பட்டது//

என் மனத்திலும் பட்டது.தயைகூர்ந்து அந்த வரைபடத்தை நீக்குக. மனத்தில் உள்ளதை மறைக்காமல் சொல்லிவிடும் மகுடக் கவிஞர் க்ரவுன் அவர்கட்கு ஜஸாக்கல்லாஹ் கைரன்

Iqbal M. Salih said...

நெறியாளர் தம்பி அவர்கட்கு,

தம்பி தஸ்தகீரின் கருத்து

கவனிக்கத் தகுதியானது.

முடிவு எடுக்க உங்களுக்கு முழு

உரிமை இருக்கிறது!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நபி மணியும் நகைச்சுவையும் இன்னும் தொடர்வீங்க தானே!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
நெறியாளரின் உடன் நடவடிக்கைக்கு நன்றி! மேலும் இப்பொழுதுள்ள படம் ஒரு விசயத்தை சொல்வதாக எனக்குப்பட்டது. இந்த பூமிபந்து சுற்றி வந்தாலும் ஒரு இடத்தில் நிலையாக இருக்க முடியாது. மேலும் சிறிதாக இருப்பது பெரிதாவதும், பெரிதான வட்டம் சிறிதாவதும். உலக வாழ்கையெனும் வட்டம் நிலையற்றதும். இன்பம், துன்பம் மாறிவருவதும்,வளர்ந்தவர்,தேய்வதும், தேய்பவை வளர்வதும். இப்படி மாறி,மாறி வரும் நிலையற்ற வாழ்கையை படம் பிடிப்பதாக உள்ளது.இனி கவி காக்கா தொடர்வார்கள்.

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் கிரவுன்.

வட்டங்களைப் பார்த்து நீங்கள் உதிர்த்திருக்கும் தத்துவங்கள்தான் வாழ்க்கைக்கானச் சட்டங்கள்!

(என்னையும் இழுத்துவிட்டாச்சா!)

நீர்ப்பரப்பில் கல்விழுந்தால்
அலைஅலையாய் வட்டங்கள்

சிறு வட்டங்களெனப் பிறந்து
விட்டம்கூட்டி வளர்ந்து
பெருவட்டங்களென 
விஸ்வரூபம் எடுத்தாலும்
ஒரு வட்டனேனும் 
உடையாமல்
கரைதொட்டதுண்டா?

பெண்ணைச் சுற்றியொரு
வட்டம்
பொருளைச் சுற்றியொரு
வட்டம்

எழுந்துவீழும்
அலைபோல்தான்
உடம்பில் நம் தலை
வட்டமோ மாவட்டமோ
எல்லோருக்கும்
இறுதியில்
வட்டமல்ல
செவ்வகப்
பெட்டகமே நிலை!


Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்
நபிமணியும் நகைசுவையும் அருமையான தொடர் வாரவாரம் ஆரவாரமில்ல அருமையான பதிப்பு. கனவைப்பற்றிய குறிப்பு! கால வரலாற்றின் துடிப்பு!அமெரிக்காவில் இருந்து என்னை போன்ற அதிரையர்களுக்கு தங்கள் வழங்கி வரும் பாடம் வாழ்த்துகள் சிறிய தந்தையே, துன்பம் இல்லா இன்பமான வாழ்வை தர வல்ல ரஹ்மான் அருள் புரியட்டும். நன்மையான கனவு தீமையான(சைத்தானின் தூண்டல்) கனவு என்று பகுத்து அறிவித்த பதிப்பு அடுத்த வாரம் வரை காத்திருப்பது கஷ்டம் தான் இறைவன் நாடினால் அடுத்த வாரம் வாசிப்போம் மணியான தொடரை சுவையான தினத்தில்,,,,

ZAKIR HUSSAIN said...

எழுந்துவீழும்
அலைபோல்தான்
உடம்பில் நம் தலை
வட்டமோ மாவட்டமோ
எல்லோருக்கும்
இறுதியில்
வட்டமல்ல
செவ்வகப்
பெட்டகமே நிலை!

...........................

பாஸ்..வட்டத்துக்கு ஏன் பாஸ் இவ்வளவு விரக்தி தத்துவம்??

வட்டத்தில் ஓடி ஒலிம்பிக் தீபம், வட்டமான மசால் வடைனு ஏதாவது வார்த்தைக்கு கீழே வார்த்தை போட்டிருந்தா கை தட்டியிருப்போம்ல.

ஒடம்பு கனத்தா வார்த்தைலெ கவலைதெரியும்னு... படிக்கத என் பாட்டி சொன்ன ஞாபகம்... வாக்கிங் போராப்லதானே??





sabeer.abushahruk said...

எலே,
மருக்கா ஒருக்கா வாசியும். கவலை எங்கேங்கானும் தொக்கி நிக்கி? பயம்ல காட்டியிருக்கோம்.( எல்லாம் கிரவுனால வந்தது)

ஒடம்பு கனத்தா? அதெப்படி இம்பூட்டு சரியாச் சொல்றே?
ஆமத்தா, கனத்துத்தேன் போச்சு. கடைசி பருக்கை வரை நாக்கு சப்புக்கொட்டி துண்றமாதிரில சமச்சி தர்ராங்க 'வல்லரசு'.

வாக்கிங்லாம் வுட்டு நாளாச்சு நைனா. ஒரு திட்டம் வகுத்துத் தாயேன். நீதான் இதுமாதிரி சொல்லித் தர்ரதில கில்லாடியாச்சே. ஆனா, ஷார்ஜா க்ளைமேட்ல ஒருநாள் வாக்கிங் போனா மருநாள் உடம்பு சரியில்லாம போய்டுதே.

சரி, கேட்டுப்புட்டே உனக்காக குஷியா ஒரு வட்டம்:

வட்ட நிலா வொன்று
கிட்ட வந்தது
விட்ட இடத்திலிருந்து
திட்ட துவங்கியது

(ஒக்காருங்க ஒக்காருங்க. கைல கல்லெல்லாம் எடுக்கப்படாது ரீசென்ட்டாவே முடிச்ட்லாம்)

நடுப்புள்ளியாய்
நீயிருந்த காலங்களில் - நண்பா,
எத்தனைப் பெரிய
ஆரமாயிருந்தாலும்
என் வட்டமோ
உன்னைச் சுற்றியே!

(ஆச்சு. கைதட்டேன்டா)

ZAKIR HUSSAIN said...

//ஒடம்பு கனத்தா? அதெப்படி இம்பூட்டு சரியாச் சொல்றே?//

இங்கேயும் இப்படித்தான் பாஸ்.

சுடு ஒத்தடத்தில் உடம்பை ரிலாக்ஸ் செய்து..[ கொஞ்சநாழிக்கு] பிறகு வாக்கிங், யோகானு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.

நீயும் த்ரட்மில் ஓடிப்பழகு. யாரும் ஆரம்பிக்கலாம். நோ லிமிடேசன்.

கை தட்டலாம்...இன்னும் எழுதுங்க பாஸ். திண்ணை லெ ப்ளாக் லெ எழுதுறீங்களா , புக் மார்க் வச்சுக்குவேன்னு கேட்ட நண்பருக்கு ரிப்லை பண்ணியாச்சா?..

கவியன்பன் பக்கத்தை இதுவரை நிறைய பேர் புக்மார்க் செய்திருப்பாங்கள்தானே...
....................................


இனிமேல் கவிதை எழுத நினைப்பவர்களுக்கு!!

கவிதையை மேன்வல் புக் மாதிரியோ, அல்லது டூரிஸ்ட் ஸ்பாட்ட்டில் கொடுக்கும் விளக்க புத்தகம் மாதிரியோ எழுதாதீர்கள்.

"உங்கள் கற்பனையின் ஆழம் எங்களுக்குள் ஒரு மின்னலை உருவாக்க வேண்டும்." - இதை யாரும் சொல்லலெ. நான் தான் சொல்ரேன்.










m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இங்கே கவிதையெல்லாம் அலவ்டா !?

ஒகே ஒகே !

//வட்ட நிலா வொன்று
கிட்ட வந்தது
விட்ட இடத்திலிருந்து
திட்ட துவங்கியது//

வாவ் வாவ் !! இது எங்களுக்கா ? :))

நிலவின் வெளிச்சம்
அதிகம் தெரிகிறது
அதிரை இருட்டில்
அதுவும் வீட்டில் (மட்டுமே)

//நடுப்புள்ளியாய்
நீயிருந்த காலங்களில் - நண்பா,
எத்தனைப் பெரிய
ஆரமாயிருந்தாலும்
என் வட்டமோ
உன்னைச் சுற்றியே!//

சான்ஷே இல்லை.. வட்டம் விலக ! அவ்வளவு ஸ்ட்ராங்க் !

ஏங் காக்கா, நிலவைச் சுற்றாதா உங்கள் வட்டம்?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//"உங்கள் கற்பனையின் ஆழம் எங்களுக்குள் ஒரு மின்னலை உருவாக்க வேண்டும்." - இதை யாரும் சொல்லலெ. நான் தான் சொல்ரேன். //

:) கலக்கல் ஸ்டெப்(ஸ்) !

ஆமாம் !

கைகளில் இருக்கும் முடியெல்லாம் எழுந்து நிற்கனும் !
கண்களில் சொட்டு சொட்டா வடியனும் !

இதை நான் சொல்லல... - ஒரு ஞானி சொன்னது !

Iqbal M. Salih said...

கனவுகள் பற்றிய இந்தக் கட்டுரையைப் பாராட்டிய மரியாதைக்குரிய சகோதரி ஆமினா அவர்கட்கும் அன்பான சகோதரர்கள்: அலாவுதீன்,அதிரைத்தென்றல், ஜாகிர்,சபீர்,டாக்டர் இ.அ., சாவண்ணா, ஜலீல், ஜாஹீர்,அபுஇப்ராஹிம், கவியன்பன் கலாம், தஸ்தகீர், ஜஃபர் சாதிக், இம்ரான் கரீம் ஆகியோருக்கும் நன்றிகள்.

ஜலீல்: உன் கேள்விக்கு இர்ஃபான் சிஎம்பி உடைய பின்னூட்டத்தில் பதில் இருக்கிறது.

ஜாகிர்: கனவின் விளக்கம் பற்றிய ஞானம், அநீதியாக சிறையில் தள்ளப்பட்ட அழகின் சிகரம், அழகிய வரலாற்றின் நாயகர் யூசுஃப் நபிக்கு அல்லாஹ் அருளியிருந்தது பற்றியும் முஅத்தா எழுதிய இமாம் மாலிக் அவர்கள் எந்தக் கனவைக் கண்டுவிட்டு மதீனா நகரை விட்டும் வெளியே செல்லத் தயங்கினார்கள் என்பது பற்றியெல்லாம் நாம் சமீபத்தில்தான் இந்த ரமலானின் ஒரு நடுஇரவுவரை நீ, நான், நிஜாம் மூவரும் கோலாலம்பூரில் உரையாடிக்கொண்டிருந்தோம்! அதையெல்லாம் மறந்துவிட்டு கனவின் பலன் புத்தகம் பற்றிக் கேட்கின்றாய்! அதெல்லாம் நமக்குத் தேவையில்லை. அத்தியாயம் யூசுஃபின் தமிழாக்கம் மட்டும் படித்தாலே போதுமானது!

Yasir said...

அழகான ஹதீஸ்களுடன் நம் ஒரே தலைவர் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் விவரிக்கும் விதம் ஒவ்வொரு வாரமும் இத்தொடரின் எதிர்ப்பார்ப்பை எகிறவைக்கின்றது...துவாக்களும் ,வாழ்துக்களும் காக்கா

KALAM SHAICK ABDUL KADER said...

//"உங்கள் கற்பனையின் ஆழம் எங்களுக்குள் ஒரு மின்னலை உருவாக்க வேண்டும்." - இதை யாரும் சொல்லலெ. நான் தான் சொல்ரேன். //

உளவியல் மருத்துவர் ஜாஹிர்:

உங்களின் ஆதங்கத்தை “துளிப்பா” எனும் “ஹைகூ” நிறைவுச் செய்யும்.
மரபுப்பா, புதுக்கவிதை என்றிருந்த( காலம் சுருங்கியது போல்) கவிதையின் அடிகள் நான்கு வரிகட்குள்; அதுவும் அதன் கருவை நச் என்று நான்காம் அடியில் இறுதிச் சொல்லில் புகுத்தும் அற்புதக் கவியாக “துளிப்பா” இன்று உங்களைப் போன்ற இரசிகர்கட்குத் தீனி போட்டுக் கொண்டிருக்கின்றது. அடியேனும் என் வலைத்தளத்தில் சில துளிப்பாக்கள் வனைந்துள்ளேன்; “சுயகுறிப்பேடு” எனும் தலைப்பில் உள்ள அத்துளிப்பாவினை இரசித்து விட்டுக் கருத்துரையிடுக. உங்கள் உற்ற நண்பர் - கவிவேந்தர் அவர்களும் இரசித்துள்ளார்கள். “காலம்” எனும் தலைப்பில் அடியேன் எழுதிய துளிப்பா , சத்யமார்க்கம்- வலைதளத்தில் பதியப்பட்டது என்றால், அக்குழுவினர் அப்படிப்பட்ட “நச்”சென்று மனதில் விழும் நான்கடிகளைத்தான் விரும்புகின்றனர் என்பதும் யாம் அறிவோம்.

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

சகோதரர் கிரவ்ன் அவர்கள் உரக்கச் சொன்னதை, கட்டுரையாளர் சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அவர்கள் அவ்வாறே ஏற்றது பெருந்தன்மை ! உடணடியாக அதிரைநிருபர் தளமும் அமல்படுத்தியதும் சிறப்புக்குரியது.

சுட்டிக்காட்டப்பட்டது நியாயமானதாகவும், இறைக் கோட்பாட்டுக்கு உட்பட்டதாகவும் இருப்பின் எவ்வித மாறுப்பின்று அப்படியே ஏற்பது நம் கடமை - அல்ஹம்துலில்லாஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.