Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நெஞ்சில் உரமின்றி…! 62

அதிரைநிருபர் பதிப்பகம் | April 28, 2013 | , , ,



தீவினை செயும் மாந்தர் எவர்க்கும்
நோவினைத் தரும் வேதனை இருக்கும்
பூவினை யொத்த தோலெனும் போர்வை
தீயினைத் தொட்டு சாம்பலை உதிர்க்கும்

தன்னையே உயர்த்தித் தற்பெருமை பேசுவோர்
வெண்ணெயை வைத்துக் கொக்கினைப் பிடிப்பவர்
மண்ணையே திரித்து மாலையாய் பிதற்றுவர்
கண்ணையே குத்திக் காட்சியைக் காட்டுவர்

நாவிலே நாளெலாம் நந்தவனம் வளர்ப்பவர்
நெஞ்சிலே முட்செடி நித்தமும் சுமப்பர்
புன்னகை இதழிலே பூநாகம் இருக்கும்
புண்ணென உள்ளமே ரணமாகிக் கிடக்கும்

நெஞ்சிலே உரமின்றி தஞ்சமே தேடுவர்
நேர்மைத் திறனின்றி முதுகிலே குத்துவர்
நிமிர்ந்த நெஞ்சே நிலையான வீரம்
நேர்கொண்ட பார்வையே நல்லோர்க்குத் தீரம்

குறைகுட மென்று கூத்தாடிக் காட்டுவர்
கூழையாய்க் குணிந்து கும்பிடும் போடுவர்
பிறையென ஆனாலும் வளர்ந்தால் பெளர்னமி
தரையெனக் கிடந்தாலும் நடந்தால் நேர்வழி

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவர்
உண்மையைப் பேசி பொய்தனை  விடுபவர்
இம்மையை நல்ல தன்மையாய் வாழ்பவர்
தம்மையே  திருத்தித் தரணிக்குக் காட்டுவர்

வருவதை ஏற்று வாழ்க்கையை வாழ்பவர்
வறுமையைச் சகித்து வான்மறை ஓதுவர்
பொறுமையைக் கொண்டு புண்களை ஆற்றுவர்
மறுமையை நாடி ஒருவனைப் போற்றுவர்

கைகளைக் கொண்டு கடுமையாய் உழைப்பவர்
கற்றதைக் கொண்டு கண்ணியம் காப்பவர்
பொய்களை வென்று புதிர்களை உடைப்பவர்
பெற்றதைப் பகிர்ந்து பெரும்பேறு ஈட்டுவர்

நஞ்சையை யொத்த மனத்தினைக் கொண்டவர்
நன்செயல் வித்தை தழைத்திட உதவுவர்
தென்னையை யொத்தத் தேன்சுவை யெல்லாம்
அன்னையைப் போல அன்புடன் புகட்டுவர்

ரத்தமும் சதையும் யாவர்க்கும் உண்டுதான்
நித்தமும் நினைவும் நேர்மைக்கு நன்றுதான்
முத்தமோ யுத்தமோ மோகித்தது எதுவெனினும்
நேருக்கு நேராக நிற்பதே ஆணினம்!

Sabeer AbuShahruk

62 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இத் தருணத்தில் அருமையான விழிப்பூட்டும் கவிதை.

//கைகளைக் கொண்டு கடுமையாய் உழைப்பவர்
கற்றதைக் கொண்டு கண்ணியம் காப்பவர்
பொய்களை வென்று புதிர்களை உடைப்பவர்
பெற்றதைப் பகிர்ந்து பெரும்பேறு ஈட்டுவர்//

மேற்கண்ட வற்றை நயவஞ்சகக் காரர்களுக்கு எச்சரிக்கை, விழிப்பூட்டும் கட்டுரையாளர் அறிஞர் அபூ முஸ்'அப் இடம் காண முடிகிறது.

//ரத்தமும் சதையும் யாவர்க்கும் உண்டுதான்
நித்தமும் நினைவும் நேர்மைக்கு நன்றுதான்
முத்தமோ யுத்தமோ மோகித்தது எதுவெனினும்
நேருக்கு நேராக நிற்பதே ஆணினம்!//

மேற்கண்ட வரிகள் இன்றைய அமைப்பிடமோ, நிர்வாகத்திடமோ இல்லாத நய வஞ்சகமே காணப்படுகிறது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நெஞ்சிலே உரமின்றி தஞ்சமே தேடுவர்
நேர்மைத் திறனின்றி முதுகிலே குத்துவர்
நிமிர்ந்த நெஞ்சே நிலையான வீரம்
நேர்கொண்ட பார்வையே நல்லோர்க்குத் தீரம்//

காக்கா, மேற் கண்ட சூடு...

//ரத்தமும் சதையும் யாவர்க்கும் உண்டுதான்
நித்தமும் நினைவும் நேர்மைக்கு நன்றுதான்
முத்தமோ யுத்தமோ மோகித்தது எதுவெனினும்
நேருக்கு நேராக நிற்பதே ஆணினம்!//

இப்படி கம்பீரம் காட்டத்தானே !

Ahamed irshad said...

|| குறைகுட மென்று கூத்தாடிக் காட்டுவர்
கூழையாய்க் குணிந்து கும்பிடும் போடுவர்
பிறையென ஆனாலும் வளர்ந்தால் பெளர்னமி
தரையெனக் கிடந்தாலும் நடந்தால் நேர்வழி ||

க்ளாஸ் காக்கா...

// கைகளைக் கொண்டு கடுமையாய் உழைப்பவர்
கற்றதைக் கொண்டு கண்ணியம் காப்பவர்
பொய்களை வென்று புதிர்களை உடைப்பவர்
பெற்றதைப் பகிர்ந்து பெரும்பேறு ஈட்டுவர் //

இதில் கற்றதைக் கொண்டு கண்ணியம் காப்பவர் என்பது ரொம்ப அரிதாக இருக்கிறது தற்காலத்தில்...

இதற்கு ‘மற்றவனை விட கற்றவனையே நம்புகிறது சமூகம்’ என்ற என் கருத்தையும் இங்கே பதிகிறேன்...

//ரத்தமும் சதையும் யாவர்க்கும் உண்டுதான்
நித்தமும் நினைவும் நேர்மைக்கு நன்றுதான்
முத்தமோ யுத்தமோ மோகித்தது எதுவெனினும்
நேருக்கு நேராக நிற்பதே ஆணினம்! //

ஆண் இனத்தில் ஆணி தவிர்க்கவே முடியாதென்பதற்க்கு சான்று... இதில் ‘மோகித்தது’ என்ற வார்த்தை புதியதாக இருக்கிறது.. சம்திங் ஸ்பெஷல்... புதுசாக வார்த்தைகளை படிப்பதில் அவ்வளவு சுவராஸ்யம் எனக்கு... இதில் மொத்தமாய் கருத்து குவியலே பொதிந்திருந்தாலும் இன்னதென்று பிரிச்சு பார்க்காமல் அனைத்தையும் ஏற்கதக்கவையே... அருமை,நல்லாருக்கு, சூப்பர் இதெல்லாம் டெம்ப்ளேட் பின்னூட்டமாய் போனாலும் திரும்பவும் அடிக்கிறேன்... அருமை, சூப்பர் காக்கா...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அருமை,நல்லாருக்கு, சூப்பர் இதெல்லாம் டெம்ப்ளேட் பின்னூட்டமாய் போனாலும் திரும்பவும் அடிக்கிறேன்... அருமை, சூப்பர் காக்கா... //

யப்பா ! ரூமிலெ சம்மனம் கொட்டி இப்புடியா யோசிப்பே ! :)

ஒனக்கு ஒரு பின்னூட்டம் போடனும்(டா)ப்பா !

நன்றின்னு ஒரு பின்னூட்டம் டெம்ப்ளேட் இருந்தா எனக்கு டவுன்லோடு செய்து அனுப்பிடனும் ஆமா !

Shameed said...

//ரத்தமும் சதையும் யாவர்க்கும் உண்டுதான்
நித்தமும் நினைவும் நேர்மைக்கு நன்றுதான்
முத்தமோ யுத்தமோ மோகித்தது எதுவெனினும்
நேருக்கு நேராக நிற்பதே ஆணினம்!//

ஆண்மையின் அழகை அழகாய் சொன்னது அழகாய் இருக்கு

Unknown said...

சபீரே

நயவஞ்சகர்களை சுடும் காந்த வரிகள் .

நல்லோர்களை வருடும் தென்றல் வரிகள்

பொறுமை, உழைப்பு இரண்டின் மேன்மையை உணர்த்தும் உண்மை வரிகள்.

மொத்தத்தில் சபீரின் சலனமற்ற சாட்டையடி வரிகள்.

வாழ்க உன் நெஞ்சுரம்
வளர்க உன் கவித்திறம்

அபு ஆசிப்.

adiraimansoor said...

எல்லாவரிகளும் மிகவும் அருமை
அதில் மிகவும் பிடித்தது

"தன்னையே உயர்த்தித் தற்பெருமை பேசுவோர்
வெண்ணெயை வைத்துக் கொக்கினைப் பிடிப்பவர்
மண்ணையே திரித்து மாலையாய் பிதற்றுவர்
கண்ணையே குத்திக் காட்சியைக் காட்டுவர்"

"நாவிலே நாளெலாம் நந்தவனம் வளர்ப்பவர்
நெஞ்சிலே முட்செடி நித்தமும் சுமப்பர்
புன்னகை இதழிலே பூநாகம் இருக்கும்
புண்ணென உள்ளமே ரணமாகிக் கிடக்கும்"

"நெஞ்சிலே உரமின்றி தஞ்சமே தேடுவர்
நேர்மைத் திறனின்றி முதுகிலே குத்துவர்"

மேலே உள்ள‌வரிகளுக்கு சொந்தக்காரர்கள் அதிரையில்
மிகவும் அதிகமாகவே இருக்கின்றனர்.
இப்படி பட்டவர்களுக்கு மொரட்டுத்தன்மும்
சேர்ந்திருக்கும் ஆனால் சொரனை இருக்காது
தான் செய்யும் செயல்கள் யாவும் சரி என்றே பிதட்டுவர்
அது எவ்வளவு முட்டாள்தனமாக இருந்தபோதிலும்

அதிரைமன்சூர்

Unknown said...

Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer Abusharukh,

Your poetic lines are condensed with meanings and expressive which would reform individuals and community.

தீவினை செயும் மாந்தர் எவர்க்கும்
நோவினைத் தரும் வேதனை இருக்கும்
பூவினை யொத்த தோலெனும் போர்வை
தீயினைத் தொட்டு சாம்பலை உதிர்க்கும்
Warning for evil doers.

தன்னையே உயர்த்தித் தற்பெருமை பேசுவோர்
வெண்ணெயை வைத்துக் கொக்கினைப் பிடிப்பவர்
மண்ணையே திரித்து மாலையாய் பிதற்றுவர்
கண்ணையே குத்திக் காட்சியைக் காட்டுவர்
Nature and end of one who praise him/herself.

நாவிலே நாளெலாம் நந்தவனம் வளர்ப்பவர்
நெஞ்சிலே முட்செடி நித்தமும் சுமப்பர்
புன்னகை இதழிலே பூநாகம் இருக்கும்
புண்ணென உள்ளமே ரணமாகிக் கிடக்கும்
Real characters of cunning foxes.

நெஞ்சிலே உரமின்றி தஞ்சமே தேடுவர்
நேர்மைத் திறனின்றி முதுகிலே குத்துவர்
நிமிர்ந்த நெஞ்சே நிலையான வீரம்
நேர்கொண்ட பார்வையே நல்லோர்க்குத் தீரம்
Ideal characters of bravemen.

குறைகுட மென்று கூத்தாடிக் காட்டுவர்
கூழையாய்க் குணிந்து கும்பிடும் போடுவர்
பிறையென ஆனாலும் வளர்ந்தால் பெளர்னமி
தரையெனக் கிடந்தாலும் நடந்தால் நேர்வழி
Characters of mean people and noble people.

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவர்
உண்மையைப் பேசி பொய்தனை விடுபவர்
இம்மையை நல்ல தன்மையாய் வாழ்பவர்
தம்மையே திருத்தித் தரணிக்குக் காட்டுவர்

வருவதை ஏற்று வாழ்க்கையை வாழ்பவர்
வறுமையைச் சகித்து வான்மறை ஓதுவர்
பொறுமையைக் கொண்டு புண்களை ஆற்றுவர்
மறுமையை நாடி ஒருவனைப் போற்றுவர்
Intentions and action of believers and pious poeple.

கைகளைக் கொண்டு கடுமையாய் உழைப்பவர்
கற்றதைக் கொண்டு கண்ணியம் காப்பவர்
பொய்களை வென்று புதிர்களை உடைப்பவர்
பெற்றதைப் பகிர்ந்து பெரும்பேறு ஈட்டுவர்
Genius' hardwork and achievements.

நஞ்சையை யொத்த மனத்தினைக் கொண்டவர்
நன்செயல் வித்தை தழைத்திட உதவுவர்
தென்னையை யொத்தத் தேன்சுவை யெல்லாம்
அன்னையைப் போல அன்புடன் புகட்டுவர்
Gentle and great men's characters.

ரத்தமும் சதையும் யாவர்க்கும் உண்டுதான்
நித்தமும் நினைவும் நேர்மைக்கு நன்றுதான்
முத்தமோ யுத்தமோ மோகித்தது எதுவெனினும்
நேருக்கு நேராக நிற்பதே ஆணினம்!
This ending stanza is proclaiming a challenge!!!!

Fantastic brother... JazakkAllah Khairan.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்
பணம் படைத்தவர்களின் ஆணவம் பற்றி அம்பலப் படுத்தும் நல்ல கவிதைகள். நன்றி

இந்த நல்ல தமிழ் தளத்தில் ஆங்கிலத்தில் சிலர் கமென்டு போடுவதும் அதை ஊக்குவிப்பதும் தவிர்க்கப் பட வேண்டும்.

சகோதரர் அமீன் அவர்களுக்கு நல்ல தமிழில் பதிவிட அவருக்கு யாராவது சொல்லிக் கொடுங்கள்.

இது பற்றி எழுதியமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

crown said...

தீவினை செயும் மாந்தர் எவர்க்கும்
நோவினைத் தரும் வேதனை இருக்கும்
பூவினை யொத்த தோலெனும் போர்வை
தீயினைத் தொட்டு சாம்பலை உதிர்க்கும்.
--------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். நன்மையை ஏவி தீயதை தடுக்க தீனை அழைத்து,தீ அதை அதன் தன்மையை சொல்லி தீயது கொல்லும் தீயதை செய்தால் எனும் கருத்து குவியல்.

crown said...

தன்னையே உயர்த்தித் தற்பெருமை பேசுவோர்
வெண்ணெயை வைத்துக் கொக்கினைப் பிடிப்பவர்
மண்ணையே திரித்து மாலையாய் பிதற்றுவர்
கண்ணையே குத்திக் காட்சியைக் காட்டுவர்.
------------------------------------------------------------
எல்லாம் மாயை!அவர்கள் வார்த்தையால் காயை கனிஆக்குவோம் என ஜாலாம் காட்டும் வித்தையெல்லாம்,சொத்தை!அதன் விதையினும் எந்த மரமும் வராது,பின் காய் எங்கே? கனியெங்கே?

crown said...

நாவிலே நாளெலாம் நந்தவனம் வளர்ப்பவர்
நெஞ்சிலே முட்செடி நித்தமும் சுமப்பர்
புன்னகை இதழிலே பூநாகம் இருக்கும்
புண்ணென உள்ளமே ரணமாகிக் கிடக்கும்.
----------------------------------------------------------
நயவஞ்சகர்களின் மொத்த செயலை இப்படி உள்ளங்கைமேல் நெல்லிக்கனி போல் விளக்கிடும் கவிதை!

crown said...

சிறிய இடைவெளிக்குப்பின் தொடருகிறேனே!

Ebrahim Ansari said...

பாரதியார் மறு பிறவி எடுத்து வந்து எழுதியது போன்ற சாட்டையடிக் கவிதை.

//தன்னையே உயர்த்தித் தற்பெருமை பேசுவோர்
வெண்ணெயை வைத்துக் கொக்கினைப் பிடிப்பவர்
மண்ணையே திரித்து மாலையாய் பிதற்றுவர்
கண்ணையே குத்திக் காட்சியைக் காட்டுவர்// ஓங்கி அடித்த சாட்டை இவ்வரிகள்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கவி காக்க அவர்களின்.40 கசையடி கொண்ட 40 வரிகள்.நயவஞ்சகர்களுக்கு வலிக்கத்தான் செய்யும்.ஆனால் அதை உணர்ந்து திருந்திக் கொள்வதிலும் வஞ்சக செய்யும் வக்கிர புத்தி கொண்டவர்களாகத்தான் அலைகிறார்கள்.

கவி காக்கா இருந்தாலும் அடித்து அடித்து சளைத்து விடாதீர்கள்.வஞ்சக நோய் தலை தெரித்து ஓடும் வரை உங்கள் சாட்டையை சுழற்றுங்கள்.

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

கவிதை அருமை.

வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நயவஞ்சகர்களின் மூக்கில் குத்தியது போல் உள்ளது...

யாருக்காவது இரத்தம் வந்ததா என்று புலண் விசாரனை செய்ய வேண்டும்.

அதிரை.மெய்சா said...

தற்பெருமை பாடுவோருக்கு, தகுந்த பாடம் புகட்டிடும் உண்மையை உணர்த்திய அருமையான விழிப்புணர்வு கவிதை.

வாழ்த்துக்கள் நண்பா.!

Yasir said...

கேள்வி : ஈனப்பிழப்பு என்றால் என்ன ?
உள்ளம் ஒன்றை நினைக்கும் ஆனால் வாய் மற்றொன்றை பேசும் ...இந்த செயலுக்கு பெயர்தான் ஈனப்பிழப்பு...அதனை வெட்கம் கெட்டு செய்யும் சிலருக்கும் சாட்டையடி இக்கவிதை.....அனல் தெரிக்கும் வரிகள்....கொப்பளம் வந்திருக்குமோ..சாவன்னா காக்கா? இதனை படித்தபிறகு சிலருக்கு ....சூப்பர் கவிக்காக்கா

அலாவுதீன்.S. said...

//// தீவினை செயும் மாந்தர் எவர்க்கும்
நோவினைத் தரும் வேதனை இருக்கும்
தன்னையே உயர்த்தித் தற்பெருமை பேசுவோர்
நாவிலே நாளெலாம் நந்தவனம் வளர்ப்பவர்
நெஞ்சிலே உரமின்றி தஞ்சமே தேடுவர்
நேர்மைத் திறனின்றி முதுகிலே குத்துவர்
குறைகுட மென்று கூத்தாடிக் காட்டுவர்

கைகளைக் கொண்டு கடுமையாய் உழைப்பவர்
கற்றதைக் கொண்டு கண்ணியம் காப்பவர்

நேருக்கு நேராக நிற்பதே ஆணினம்! ///

மொத்தத்தில் அழகிய கருத்துக் கவிதை! வாழ்த்துக்கள்!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கவிக்காக்காவின் கவி வரிகள்
கல்நெஞ்சம் கொண்டோரையும்
வரியில்லாமல் வாரி அணைக்கும்....

Abdul Razik said...

Excellent Sabeer kaka...

நயவஞ்சகர்களை சுடும் காந்த வரிகள் .

நல்லோர்களை வருடும் தென்றல் வரிகள்

பொறுமை, உழைப்பு இரண்டின் மேன்மையை உணர்த்தும் உண்மை வரிகள்.


adirai aseena சொன்னது "இந்த நல்ல தமிழ் தளத்தில் ஆங்கிலத்தில் சிலர் கமென்டு போடுவதும் அதை ஊக்குவிப்பதும் தவிர்க்கப் பட வேண்டும்.

சகோதரர் அமீன் அவர்களுக்கு நல்ல தமிழில் பதிவிட அவருக்கு யாராவது சொல்லிக் கொடுங்கள்."

20 பேர் தமிழில் எழுதும்போது ஒரு சிலர் ஆங்கிலத்தில் comments இடுவது சரி என்று நினைக்கிறேன். நம் ஊர் சம்மந்தப்பட்ட இணைய தளங்கள் எல்லாவற்றிலும் தாய் மொழி தமிழிலேயே அனைத்து செய்திகளையும் படிக்கிறோம், காரணம் அனைவரும் படிக்க முடியும் என்பதை என்பதால். அதே சமயம் டிகிரி படித்து முடித்த உங்கள் வீட்டு பிள்ளையிடம் ஆங்கிலத்தில் மிக அத்தியாவசியமான 4 வாரத்தைகளை கொண்ட கடிதம் ஒன்றை எழுதச் சொல்லி பாருங்கள், அப்பொழுது புறியும், ஆங்கிலத்தின் அருமை, தொழில் அல்லது நல்ல வேலை வாய்ப்புகளை தேடி செல்பவர்களுக்குத் தான் மற்ற மொழிகளின் அருமை தெரியும்.

Abdul Razik
Dubai

Yasir said...

சகோ.அமீனின் ஆங்கில மொழி கருத்துக்கள் தொடர வேண்டும் என்பது என் ஆசை...தொடர்ந்து ஆங்கிலத்திலயே எழுதுங்கள் நண்பரே...சகோ.அதிரை அசினா ஆங்கிலத்தில் கருத்து பதிவது மற்றவர்களை ஊக்கப்படுத்தும்...சகோ.அமீனின் ஆங்கில செறிவுமிக்க வார்த்தைகள் பலருக்கும் பயனுள்ளதாக உள்ளது என்பதை மறுக்க முடியாது

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

தமிழே என் பேச்சு, தமிழே என் மூச்சு என முழக்கமிட்டு தன்னை தமிழனத்தலைவர்களாக பிரகடணப்படுத்திக்கொள்பவர்கள் கூட தன் பிள்ளை, பேரப்பிள்ளைகளை ஆங்கிலக்கடலில் நீந்த வைத்துள்ளனர். எனவே தாய் மொழி தாண்டிய பிற மொழி அறிவு இக்கால, வருங்கால சந்ததியினர் அனைவருக்கும் அவசியம்.

Unknown said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்த ஏற்புரை எனக்கு மிக அத்தியாவசியமானது. 

காரணம், சிலரது நடத்தைகள் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பால் சட்டென உதித்த வரிகள் பாரதியின் " நெஞ்சில் உரமின்றி நேர்மைத் திறனின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி" என்பதாகும். இதிலிருந்தே தலைப்பை எடுத்து தொடர்ந்தேன்.

நம் சகோதரர்கள் ஒருவரைப்பற்றி ஒருவர் புறம் பேசுவதும் முதுகில் குத்துவதும்  எனக்கு வேதனை தருகிறது.

எனக்குப் பரிச்சயமான சகோதரர்கள் சிலர் நேரிலே ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டு என்னிடம் இகழ்ந்தனர் ஏளனம் பேசினர்.  அத்துடன் நமதூரின் பிரச்னையும் தாக்கவே, ஆற்றாமையே இந்தப் பதிவு. இதை வாசிக்க நேர்ந்தால் உறைக்கட்டும். நேர்வழி பெறட்டும்.

இனி,

sabeer.abushahruk said...

இனி,
இந்தப் பதிவிற்கான புகைப்படம் மிகவும் பொருத்தமாகவும் அர்த்தத்தோடும் இருப்பதால் அதற்காக அதிரை நிருபருக்கு நன்றி.

எம் ஹெச் ஜே: 

பாராட்டிற்கு நன்றி. போட்டிக்கவிதை எழுதி நாளாயிற்றே, தலைப்புத் தரவா?

 "நிற்க அதற்குத் தக"

(க்ளூ: நல்லதைச் சொல்: சொன்னபடி நில்: வாக்குத் தவறாதே: போக்குப் பிறழாதே)

அபு இபுறாகீம்:

படமும் எழுத்தும் சுரணை உள்ளவர்களுக்குச் சுடத்தான் செய்யும். 

அஹ்மது இர்ஷாத்:

நான் எதிர்பார்த்த உணர்வுகளை நீங்களும் பெற்றதன் காரணமே நமக்கிருக்கும் சமூக அக்கறைதான். உற்சாகமான பாராட்டிற்கு நன்றி தம்பி.

ஹமீது: 

ஆண்மையின் அழகே நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையும்தான். நமக்கு இருக்கு. எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதே அவா.

அபு ஆசிஃப்:

காதரு, கையிலே மைக் மட்டும்தான் இல்லே. கோஷமாகவே ஒலிக்கிறது உன் பாராட்டு. நன்றிடா.  

அதிரை மன்சூர்:

இவிங்க பண்ற அக்கப்போருக்கு நாமெல்லாம் ச்சின்னப்பிள்ளைகளாயிருந்தால் கல்லை எடுத்து, அதுவும் நல்ல கருங்கல்லா எடுத்து மண்டைய ஒடைச்சிடலாம். பெரிய ஆட்களாகிட்டோமே அதான் ரீஸென்ட்டா சொல்றோமாக்கும்.  பாராட்டுக்கு நன்றி மன்சூர்.

Unknown said...

அன்புள்ள சகோதரர்களுக்கு மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன். அல்லாஹ் மன்னிப்பானாக!

இக்காலத்தில் ஆங்கிலமும் அவசியமான ஒன்று தான். ஆனால் நாம் தமிழில் எப்படி இருக்கிறோம். அதில் முழுமையடைய வில்லையே.

சீனர்கள், ஜப்பானியர்கள் அவர்கள் மொழியாலேயே சாதிக்கின்றனர்.

ஆங்கிலம் கற்க அதில் முன்னேற்றம் அடைய ஆயிரக்கணக்கானவை இணையத்தில் குவிந்து கிடக்கின்றன. அப்படி இருக்க இந்த 100 சத தமிழ் தளத்தில் ஆங்கிலத்தை ஏன் புகுத்த வேண்டும்.

நம்மில் எவ்வளவு தமிழ்த் தவறு இருக்கு என்று நீங்களே உங்களை சோதித்து பாருங்கள் நம்மிடையே நம் மொழி இன்னமும் 100 சதம் அடைய வில்லை.

காட்டாக சகோ. அப்துல் ராஜிக் அவர்கள் எழுத்து இது
//அத்தியாவசியமான 4 வாரத்தைகளை கொண்ட கடிதம் ஒன்றை எழுதச் சொல்லி பாருங்கள், அப்பொழுது புறியும், //
இதில் மட்டும் 2 தவறு இருக்கிறது. நீங்களே பாருங்கள்.


இதற்கு அடுத்த பதிவில் கூட ஒரு சகோதரர் தவறுகளை சுட்டிக் காட்டி திருத்தமும் செய்து இருக்கிறார்கள். இப்படி இருக்க நாம் அடுத்த மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நம் மொழி என்னாவது?

சிலர் தங்கள் அலைபேசியில் தமிழ் எழுத்து இல்லாததால் ஆங்கிலத்தில் எழுதுவது தவிர்க்க முடியாதது.நமக்கு மொழியின் முக்கியத்துவம் முழுமையாக இருந்தால் இன்று எல்லா அலைபேசியிலும் தமிழ் வசதியும் இதுவரை வந்திருக்கும்.

நான் ஆங்கிலத்தை எதிர்க்க்கவில்லை அதுவும் வேணும். வேண்டிய இடங்களுக்கு! ஆனால் இங்கல்ல.!

தமிழை வளர்த்துக் கொள்வோம் 100%

sabeer.abushahruk said...

Dear brother B. Ahamed Ameen,

Thanks for reading this post. 

Though you marked your comments at the bottom of each stanza, I take them as titles of it's contents. Your quotes are guidelines to understand the characteristics of described personalities. 

Anxiously awaiting your poem "Dream" with an expectation that was seeded by your previous poem "Edges".


sabeer.abushahruk said...


அன்பிற்குரிய சகோ அதிரை அஸினா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தங்களின் பாராட்டிற்கு நன்றி. 

கவிதை வாசிப்பதற்கென்று ஒரு பிரத்யேக ரசனையும் தவறுகளைத் தட்டிக்கேட்பதை ஆதரிக்க கொஞ்சம் தைரியமும் வேண்டும்.  வரவேற்பு சகோ.

மொழி என்னும் ஊடகம் ஒரு உபகரணம்/கருவி மட்டுமே. சிற்பிக்கு உளியைப்போல, ஓவியனுக்குத் தூரிகையைப்போல. அப்படித்தான் எனக்குத் தமிழும் அமீன் அவர்களுக்கு ஆங்கிலமும்.  நாம் பேசுபொருளைப் பார்க்க வேண்டும் அதைத் தரும் முறையைப் பார்க்க வேண்டும்.

தினத்தந்தியைப் போலவோ, பிட் நோட்டீஸைப் போலவோ சிதிலமாக இந்தத் தளத்தில் எகழுதப்படுவதில்லை. பங்களிப்பாளர்களிடமும் வாசகர்களிடமும் ஒரு தெளிவான அறிவு (லிடெரச்ய்) நிலவும் தளம் இது.

இதில் யாருக்கு எந்த கருவி இலகுவானதோ அதைக்கொண்டே அவர்தம் உயரிய கருத்துகளைப் பதிக்கலாம்.  புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

மற்றபடி இது 100% தமிழ் தளமல்ல சகோ. 100% ஆக்கபூர்வமான தளம்

தவாராக நினைக்காவிடில் ஒரு வேண்டுகோள்: தங்களின் எழுத்திலும் ஒரு தெளீவு இருப்பதால்... இங்கே எழுதுங்களேன் சகோ.

Unknown said...

//Yasir சொன்னது…
சகோ.அமீனின் ஆங்கில மொழி கருத்துக்கள் தொடர வேண்டும் என்பது என் ஆசை...தொடர்ந்து ஆங்கிலத்திலயே எழுதுங்கள் நண்பரே...சகோ.அதிரை அசினா ஆங்கிலத்தில் கருத்து பதிவது மற்றவர்களை ஊக்கப்படுத்தும்...சகோ.அமீனின் ஆங்கில செறிவுமிக்க வார்த்தைகள் பலருக்கும் பயனுள்ளதாக உள்ளது என்பதை மறுக்க முடியாது//

அப்படி என்றால் நம் தீனின் மொழியான அரபி எங்கே? நாட்டின் மொழியான ஹிந்தி எங்கே? பெரும்பான்மை முஸ்லிம்கள் நம் நாட்டில் பேசும் உருது எங்கே?

இவற்றிலும் எழுதத்தொடங்கினால் அவற்றுக்கு எல்லாம் யார் பதில் எழுதுவார்கள்.

இந்த மொழிகளில் எல்லாம் சிலர் ஏச ஆரம்பித்து விட்டால் எத்தனை பேருக்கு புரியும்?

sabeer.abushahruk said...

சகோ அபு முஸ்'அப்,

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெரும்பான்மையானோரின் இரண்டாம் மொழி ஆங்கிலமே. விகிதாச்சாரப்படி அரபி (தீனுக்கு மொழி ஏது?), ஹிந்தி, உருது ஆகியவை மூன்றாம் நான்காம் இடத்தில் இருப்பதால் அந்த மொழியில் ஆக்கங்கள் தற்போதைக்குத் தேவையில்லை.

எனக்கு நான் படித்த பெளதீகமும் ஆங்கிலமும்தான் 26 வருடங்களாகச் சோறு போடுகிறது.

தமிழ் தாயைப்போல; ஆங்கிலம் நண்பனைப்போல. நண்பனின் உதவியால் பிழைக்கிறேன்; தாயைக் காப்பாற்றுகிறேன்.

Yasir said...

கவிக்காக்காவின் பதிலே என் பதில்.....நான் கற்ற கணினியும் /ஆங்கிலமும் அல்லாஹ்வின் உதவியால் எனக்கு 13வருடமாக புரோட்டா/கறி/பிரியாணி போடுகின்றது

sabeer.abushahruk said...

கிரவுன்,

அருமையான முஸ்தீபுகளோடு துவக்கிய கிரவுனுரை கடைசியில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.

சோலியாகிப்ப போனீர்களோ? நமக்கான வாழ்வியல் நிர்பந்தங்கள் இல்லாதுபோனால் தமிழில் நேரம்போவதே தெரியாமல் விளையாடிக்க கொண்டிருக்கலாம். இல்லையா?

இப்றாகீம் அன்சாரி காக்கா அவர்கள்,

பாரதியின் வரிபிடித்து எழுதத்துவங்கினாலே அவரின் அந்த கோபமும் சாடலும் கூடவே ஒட்டிக்கொள்கிறது. தாங்கள் பாராட்டுவது நான் பெற்ற பேறு. பேராசிரியர் சார் வாசித்தார்களா?

நன்றி காக்கா.

எல் எம் எஸ்:

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமாமே, இவர்களும் மாறுவார்கள்.

நான் தனி மனிதல்ல. எனக்குச் சார்பாக மூன்றெழுத்து விலாச நண்பர்கள் படையுண்டு. அச்சமின்றி அடிப்பேன்.

கே எம் ஏ ஜமால் காக்கா:

பாராட்டிற்கு நன்றி காக்கா. வாழ்த்துக்கு ஜஸாகல்லாஹ் க்ஹைர்.

sabeer.abushahruk said...

தாஜுதீன்:

மூக்கில் குத்துப்படுவதும் முதுகில் தட்டிக்கொடுக்கப்படுவதும் யாரார் எந்தெந்தத் தன்மையோடு ஒத்துப்போகிறார்கள் என்பதைப் பொருத்தது அல்லவா?

நன்றி தம்பி.

அதிரை மெய்சா: நன்றி நண்பா.

யாசிர்: 
மனதார மதிப்பும் மரியாதையும் வைத்து அன்பு செலுத்துகிறோம். சடுதியில் ஏதாவது ஓர் அற்ப காரணத்திற்காக தன் மரியாதையைத் தானே கெடுத்துக் கொள்பவர்களை என்னவென்பது?  திருந்த வேண்டும்.

அலாவுதீன்:ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

எம் எஸ் எம் நெய்னா:
ஜஸாக்கல்லாஹ் க்ஹைர் தம்பி.

அப்துல் ராஸிக்: உணர்ச்சிபூர்வமான பாராட்டிற்கு நன்றி.

வஸ்ஸலாம்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்லதைச் சொல்:
சொன்னபடி நில்:
வாக்குத் தவறாதே:
போக்குப் பிறழாதே:

போட்டிக்கு கூப்பிடுரியோ, ஓகே. இன்சா அல்லாஹ்

ஒரு அன்புக் கண்டனம்

அது

100% தமிழ்தளமல்ல என்று பிரகடனப் படுத்தி விட்டீர்களே!

சகோ. அதிரை அசீனா கருத்திலும் அபூ முஸ்'அப் கருத்திலும் நான் உடன் படுகிறேன்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer AbuShahrukh,

Thanks a lot for appreciating and valuing my comments.
Always your humility and humbleness fetch great respect to you from depth of my heart.

Unknown said...

Dear brother Mr. Abdul Razik,
Your encouragement to contribute my thoughts through English is highly appreciated.

Dear brother Yaseer,
I am deeply satisfied by your love and appreciation for my writings.

Dear brother Mr. MSM Naina,
Your support by revealing the real faces of sentimental talkers and support about Tamil language is noteworthy.

Unknown said...

Dear brothers Mr. Adirai Asina, Mr. Abu Mus'ab

You both seems to be recent to this forum.

Although you appreciate Tamil posts and comments which are 99% of posts and comments, for your satisfaction the English posts and comments are very few here in Adirai Nirubar, which are negligible.

There are so many brothers who are more creative intellectuals than us have appreciated English language contribution here, primarily to encourage(to contribute and to learn) people from our community.

I have contributed my thoughts through English few articles and an English poem in Adirai Nirubar. Those are all listed below for your knowledge. Please go and check them would be valuable to you too. If you observe our brothers' feedbacks for the posts then you will agree the acceptance of my contribution in English.

We all have faced similar criticisms about Engilsh posts and English comments in my previous posts. You may check them(comments) too.

My All posts(English) will be listed in Adirai Nirubar - copy & paste the following link.

http://www.adirainirubar.blogspot.ae/search/label/B.%20Ahamed%20Ameen

English posts one by one.

1. Beware of killer offers in Dubai - எச்சரிக்கை !
http://www.adirainirubar.blogspot.ae/2012/11/beware-of-killer-offers-in-dubai.html

2. Risky Lives Of Dubai Motor Bike Riders (Messengers)
http://www.adirainirubar.blogspot.ae/2012/11/risky-lives-of-dubai-motor-bike-riders.html

3. The Edges...(An English poem in Adirai Nirubar)
http://www.adirainirubar.blogspot.ae/2012/12/the-edges.html

4. Right Understanding
http://www.adirainirubar.blogspot.ae/2013/02/right-understanding.html

5. Naming and Calling Spiritually and Personally
http://www.adirainirubar.blogspot.ae/2013/02/naming-and-calling-spiritually-and.html


Unknown said...

Dear brother Mr. Jaffar Sadeq,
//ஒரு அன்புக் கண்டனம்

அது

100% தமிழ்தளமல்ல என்று பிரகடனப் படுத்தி விட்டீர்களே!

சகோ. அதிரை அசீனா கருத்திலும் அபூ முஸ்'அப் கருத்திலும் நான் உடன் படுகிறேன்.//

You are one of the regular contributors of this Adirai Nirubar forum. So you are the witness for the above English posts and feedbacks and comments. How could you condemn the brother Mr. Sabeer AbuShahruk and his true statements of admitting of reality?

Unknown said...

Assalamu Alaikkum dear brothers and sisters,

Lets all have good intentions towards each other, learn from each other noble characters, and support each other, and grow into one of the great communities. InshaAllah.

Take care.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

டியர் ப்ரதர் அஹமது அமீன், அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்களின் சில பதிவுகளையும், பதிவுப் பின்னணி கருத்துகளையும் இங்கும் வேறு தளங்களிலும் நன்றாகவே கவனித்து வருகிறேன்.
நல்ல பல ஆக்கப்பூர்வமான கருத்தைத் தான் பதிகிறீர்கள்.
ஆனால் உங்களின் சாராம்சம் இதை வாசிக்கும் யாவருக்கும் அடையாதே.
இந்த ஆக்கப் பூர்வமான தளத்தில் தமிழ் நாளுக்கு நாள் அருகி விட்டால் ஆக்கப்பூர்வமான (மொழியல்ல) கருத்துக்கள் அனைவரையும் சென்றடைவது எப்படி?
பிழைக்கப் போற இடத்தில் பொருளீட்ட ஆங்கிலமும் தேவை தான்.
ஆனால் சதா காலமும் நம்ம அம்மா சொல்லித் தந்த தமிழின்றி கிடைக்குமா இன்பம்?
சபீர் காக்கா நான் சொல்றது சரியா?
கண்டனத்திற்கு கோபமெல்லாம் இல்லைலோ?

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

சகோ. அஹமது அமீன்,

நாம் மொழியைப் பற்றி எதுவும் கூரவில்லை, மாறாக நீங்கள் கூரும் கருத்துக்கள் மிகக்குறைந்த மக்களையே சென்றடையும் என்பதுதான் நம் கருத்து.

அது அல்லாமல் நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவதை மக்களுக்கு புரிய வைப்பதற்காக நாம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் கட்டாயத்திற்கு சில சமயங்களில் உல்லாக்கப்படுகிரோம்.

ஆங்கில புலமை அபிவிருத்தி செய்வதற்கு, அதற்கென்று தனி பகுதியை தொடங்கலாமே, அதில் ஆங்கிலத்தில் பதிவுகளையும், கருத்துகளையும் பதியலாமே.

//sabeer.abushahruk சொன்னது…
சகோ அபு முஸ்'அப்,

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெரும்பான்மையானோரின் இரண்டாம் மொழி ஆங்கிலமே. விகிதாச்சாரப்படி அரபி (தீனுக்கு மொழி ஏது?),//

இது பற்றி இன் ஷா அல்லாஹ் எமது அடுத்த பதிவில் தொடரின் இரண்டாவது பகுதியில் முழுமையாக ஆராயலாம்.

Unknown said...

சகோ அபூ முஸ் அப், சகோ ஜகபர் சாதிக் இவர்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். சில சகோ.கள் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அதிகப் படுத்தாமல் இருப்பது வேதனைக்குரியதாகவே உள்ளது. எதிர்காலத்தில் மொழியை நினைத்து அச்சமாக உள்ளது.

sabeer.abushahruk said...

//கண்டனத்திற்கு கோபமெல்லாம் இல்லைலோ?//

ஒரு துளிகூட இல்லை, எம் ஹெச் ஜே!

தமிழா ஆங்கிலமா என்று கேட்கப்பட்டால் கண்டிப்பாகத் தமிழ்தான் வேண்டும்; தமிழ் மட்டுமே என்பதில் உடன்பாடில்லை எம் ஹெச் ஜே.

ஒரு மார்க் கேள்விகள் ஐந்து கேட்கிறேன். பதில் சொல்லுங்கள். பத்து மார்க் கேள்விக்கெல்லாம் செல்லாமலே பாஸாகிடலாம் தம்பி.

1) இது 100% தமிழ் தளம் என்றால் கம்பராமாயணத்தைத் தொடராகப் பதிவோமா அல்லது அஹ்மது தீதாத், ஜாகிர் நாயக் ஆகியோரை ஆங்கிலத்தில் பதிவோமா?

2) எதைக் கொண்டு ஒரு பதிவு பிரபல்யமாகின்றது? பேசுபொருளா பிரயோகிக்கப்பட்டப் பாஷையா?

3)ஒரு ஆக்கத்தின் தாக்கத்தை தீர்மாணிப்பது பின்னூட்டங்களா அல்லது எத்தனை வாசகர்கள் விரும்பி வாசித்திருக்கிறார்கள் என்னும் கணக்கீடா? (சில தமிழ் பதிவுகளைவிட அதிகமான வாசகர்கள் அமீனின் ஆங்கிலப்பதிவுகளை வாசித்ததற்கான ஆதாரம் அ.நி யிடம் உள்ளது)

4) ஒரு படைப்பாளி தனது சிந்தனைகளை அவை எந்த மொழியில் தோன்றுகிறதோ அப்படியே தருவது சுவையாக இருக்குமா அல்லது அவற்றை வரிவரியாய்த் தமிழ் 'படுத்தி'த் தருவதா?

5) தமிழ்மேல் நமக்கு இருக்க வேண்டியது பற்றா வெறியா?

இவற்றிற்கும் நீங்க ஒத்துக்கொள்ளாவிடில் அப்புறம் பத்து மார்க் கேள்விகளால் தாக்குவேன். (அதற்கும் நீங்கள் அடங்கleeன்னா மக்களே, இங்கே சொல்லி அங்கே ஒரு ஃபோனும் அங்கேயிருந்து லண்டனுக்கு ஒரு ஃபோனும் பண்ண வச்சி ஓச்சிப்புடுவோம்ல)

Ebrahim Ansari said...

//பேராசிரியர் சார் வாசித்தார்களா?//

தம்பி சபீர் அவர்களுக்கு , பேராசிரியரிடம் சொன்னேன். இன்னும் படிக்கவில்லை சற்று பிசி .ஆனால் நிச்சயம் படிக்க வேண்டுமென்று சொல்லி இருக்கிறேன். கேட்டறிந்து தெரிவிக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

Ebrahim Ansari said...

என்னுடைய கருத்தை மொழி தொடர்பாக பதிய விரும்புகிறேன்.

இங்கு எல்லோரும் தமிழில்தான் எழுதுகிறோம். நல்ல தமிழ் இங்கு எழுதப் படுகிறது. இன்னும் சொல்லப் போனால் முஸ்லிம்கள் இப்படிஎல்லாம் அழகு தமிழில் எழுதுவார்களா என்று என்னிடம் ஒரு மாற்றார் கேட்டுவியந்த நிகழ்வுகள் உள்ளன.

அதே நேரம் தம்பி அமீன் போன்றவர்கள் எழுத்தும் ஆங்கிலத்தை அறிந்து கொள்ள முடிந்தவர்கள் அறிந்து கொண்டால் நன்மையே. அறிய முடியாதவர்கள் முயன்று அறிந்தாலும் அவர்களுக்கு நன்மையே. மொழிகளுள் ஆங்கிலம் நமக்கு உதவுவதுபோல் மற்றவை உதவவில்லை என்பதை வெளிப்படியாக ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.

நம்மை வழி நடத்துகிற அரபு மொழியை நாம் பொருள் அறிந்து படிக்க இயலா நிலையில்தான் இன்னமும் இருக்கிறோம். இதற்கு நாம் முயல வேண்டும். அதே நேரம் நமக்கு மிகவும் பயன்படும் ஆங்கிலத்தை அப்புறப் படுத்துவது அவ்வளவு புத்திசாலித்தனமாக இராது.

தேசிய மொழியான இந்தி மொழியையோ மார்க்கத்தின் இலக்கியங்கள் நிறைந்த உருது மொழியையோ பள்ளிகளில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு நமக்கு துரதிஷ்டவசமாக இல்லை. தடுக்கப் பட்டு இருக்கிறது. நாமே முயன்று கற்றால்தான் . எனக்கு இந்தி எழுதப்படிக்கத் தெரியும். காரணம் முயற்சிதான். ஆனால் ஆங்கிலம் நமது கல்வி முறையில் கட்டாயமாக் இருந்தும் அதில் நாம் இன்னும் போதுமான பாண்டித்துவம் பெறவில்லை. முதுகலைப் பட்டதாரிகள் கூட I AM WELL. HOPE YOU ARE IN WELL. என்று எழுதுகிறார்கள். நம்மில் ஒருவர் நல்ல ஆங்கிலம் எழுதுவதை வரவேற்போம்.

வேண்டுமானால் தம்பி அமீனுக்கு ஒரு யோசனை. தாங்கள் இடும் பின்னூட்டத்தின் மொழிபெயர்ப்பையும் தாங்களே இணைத்து வெளியிட்டால் மிகவும் உதவியாக இருக்கும் என்பது எனது அன்பான அபிப்பிராயம். எல்லோரும் புரிந்துகொள்ளவும் முடியும்.

(அடிக்கடி இருக்கையைவிட்டு எழுந்திருக்க இயலாத என் போன்றோர் உங்கள் ஆங்கிலப் பின்னுட்டம் பார்த்துவிட்டு கனத்த பழைய லிப்கோ டிக்சனரியை எடுத்துப் புரட்டும் வேலையும் குறையும். ஹஹஹஹாஹ்.) ஒரு கருத்தே தவிர கட்டாயமல்ல.

sabeer.abushahruk said...

// I AM WELL. HOPE YOU ARE IN WELL.//

காக்கா,


"in well" என்று சரியாகத்தானே சொல்லியிருக்கிறது அந்தக் "கிணற்றுத் தவளை"? :-)

Abdul Razik said...

இன்று உலகில் இஸ்லாத்தைப் பற்றி தவரான கருத்துக்கள் மீடியாக்கள் மூலம் பரப்பப் படுகின்றன. இதில் உலக அலவில் தோராயாமாக 70% ஆங்கில மீடியாக்களூம் மீதி 30% தமிழ் மற்றும் இதர மீடியாக்களூம் வெளியிடுகிறன. இச்சூழ்நிலையில் ஆங்கில மீடியாக்களுக்கு எத்தனை பேர் எதிர்ப்பு கமெண்ட்ஸ் கொடுத்து அச்செய்திகளை திரும்பப்பெற வைத்துள்ளார்கள் என்று தெறியுமா? அப்படி குறல் கொடுக்காவிட்டால் அவர்களுடய தாக்குதல் அதிகரிக்கும். இதற்கு ஆங்கில அறிவு அவசியம் இல்லையா? இன்று யுகே மற்றும் யு எஸ்ஸில் இருந்து வெளியாகும் அனேக பத்திரிக்கைகளும் இஸ்லாத்திற்கு எதிரான செய்திகளை போட்டி போட்டு பரப்பிக்கொண்டிருக்கின்றன. இவைகளுக்கு அவ்வப்பொழுது நம்மில் சிலரும் உலகின் பல மூலைகளிலிருந்து சிலரும் எதிர்ப்பு கம்மெண்ட்ஸ் கொடுதுக்கொண்டு இருப்பதால் அந்த செய்திகள் திரும்பப்படுகின்றன. இவைகளுக்கு ஆங்கில அறிவு மிக அவசியம் என்பதை அறிய வேண்டும்.

2. மேலே கமெண்ட்ஸ் எழுதிய சிலர், அவர்களுடைய தற்போதைய அலுவலக வேலைகள் நல்ல முறையில் நடப்பதற்கு காரணம் ஆங்கில அறிவும் காரணம் என்று எழுதி உள்ளார்கள். ஒருவருக்கு ஹலாலான வருமானம் கிடைத்து வாழ்வாதாரம் மேம்படும்போது, அமைதி, நிம்மதி, ஒழுக்கம், தன்னிறைவு போன்றவை கிடைக்கும். அல்லாஹ் உதவியுடன் நல்ல உடல் ஆரோக்கியமும் கிடைத்து விடுகிறது.

3. ஆங்கில அறிவின் அவசியம் பற்றி எழுதுவதாக இருந்த்தால், நிறைய எழுதலாம். இங்கு போட்டி நடக்கவில்லை. எனவே நம் சமுதாய இளைஞர்கள் அவர்களுடைய எதிர்கால தொழில், வேலை வாய்ப்பு மற்றும் சமுதாயப்பனி இவைகளை கருத்தில் கொண்டு, ஆங்கில பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றளுக்கும் அவசியம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.


Abdul Razik
Dubai

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சார்... (ஐயா!)

நானும் ஒரு உண்மையச் சொல்லிடுறேன்...

முதன் முதலாக இங்கே துபாய்க்கு வந்ததும் வேலை என்று சென்ற இடத்தில் முதலில் சந்தித்தது ஒரு பங்களாதேஷ்காரரை அவர் "கியா (ஹ)ஆளே" என்றார் எனவென்று புரியவில்லை !

இரண்டு மாதங்கள் கழித்து அமெரிக்க ரிடர்ன் (எமனி) மேலாளர் என்னை பார்த்து சொன்னது "உன்னிடம் மூளை இல்லை"ன்னு சொன்னார்... காராணம் அவர் பேசிய ஆங்கில் (உண்மையில்) அறவே எனக்குப் புரியவில்லை..!

ஆறு மாதங்கள் கழித்து ஏற்கனவே சந்தித்த பங்களாதேஷ் காரர் என்னிடம் "இது சரியாக இருக்கா பார்" என்றார், நானும் அந்த ஆங்கில கடிதத்தை பார்த்து விட்டு (எனக்குத் தெரிந்த வரை) சரி என்று சொல்லாமல் சின்ன சின்ன எழுத்து இடமாற்றங்கள் செய்து இப்போ சரி என்றேன். அவரும் அதனை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து விட்டு நல்ல பெயர் வாங்கி வந்தார் (அப்போதான் புரிந்தது அவர் எவ்வளவு நம்மை விட... ).

அதன் பின்னர் ஒரு சில மாதங்கள் கழித்து எதனை ஆங்கிலத்தில் டைப் செய்தாலும் "அவனிடம் ஒகே வாங்கி வா" என்று முதலாளி சொல்ல ஆரம்பித்தார் (நான் அவனில்லைன்னு சொல்லவே இல்லையே)

ஒன்றரை வருடம் கழிந்தது, இனி "நீயே பர்த்துக்கோ" என்று சொல்லிவிட்டு ஒதுங்கிவிட்டார் முதலாளி...

இப்படியாக கழிந்தது... அடுத்து எந்த ஒரு அலுவலக அவசிய கெஞ்சலுக்கு (யோசனை கேட்பது போன்ற பாவனையில்) முதலில் நீ வரைவு எழுது என்று சொல்லி அதிலிருந்து வெட்டி ஒட்டி எடுத்து அப்புறம் வெற்றியும் கண்டு வருகின்றனர்.

எதுக்கு இப்போ இதுன்னு கேட்கிறீங்களா ?

இதுவரைக்கும், இரண்டு புத்தங்களை மொழி பெயர்ப்பு செய்திருக்கேன் (நான் மட்டும் வாசிப்பதற்காக), ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டுரைகளையும் மொழி பெயர்த்து வாசித்திருக்கிறேன்... (இதை இப்போதைக்கு சொன்னால் பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க)..

ஆங்கிலம் - (எனக்கு) அகாராதி படிக்க வைத்த மொழி...
தமிழ் - (அந்த) அகராதியை புரிய வைத்த மொழி....

ஒன்னும் குழப்பிடலையே !?

புதுசுரபி said...

//தன்னையே உயர்த்தித் தற்பெருமை பேசுவோர்
வெண்ணெயை வைத்துக் கொக்கினைப் பிடிப்பவர்
மண்ணையே திரித்து மாலையாய் பிதற்றுவர்
கண்ணையே குத்திக் காட்சியைக் காட்டுவர்//

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்ந்தற்றால் – தன்னை
வியவாமை அன்றோ வியப்பாவது! இன்பம்
நயவாமை அன்றோ நலம்.

-நீதிநெறி விளக்கம்

தன்னைத்தானே பாராட்டிக்கொள்கிறவன் தன்னுடைய புகழ் விளக்கின்மீது தண்ணீர் ஊற்றுகிறான்.

தற்புகழ்ச்சியினை ஒருவன் நீக்கிவிட்டால் - அவன் புகழ் தானே பரவும் - புதுசுரபி

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கவிக் கலைஞராக்கா அஸ்ஸலாமு அலைக்கும்,

கந்துரிக்கு போய் பாத்துட்டு கண்டனம் தெரிவித்து விட்டு விழித்து எழ லேட்டு
பதிலை ஒன்னு ஒன்னா எழுதிப்புடுறேன்.

1. கம்பராமாயணத்தை இங்கே தொடரிட்டால் இந்தப் பக்கம் தலை வைக்கவே மாட்டேன்.

2. பேசு பொருள் மூலம் பதிவு பிரபல்யமாகிறது, அதற்கு தாய் மொழி சிறப்பு சேர்க்கிறது.

3.தமிழ்ப் பதிவுகளை வாசிப்பது தமிழன் மட்டுமே,ஆனால் ஆங்கில பதிவுகளை உலகத்தையே வாசிக்கச் செய்து அதிக வாசிப்புக்கான ஆதாரத்தை நிச்சயம் காட்ட முடியும். (பிரிட்டிஷ் காரங்களையும் வாசிக்க ஏற்பாடு செய்யவா?)

4.வரி வரியாக தமிழ்ப் படுத்த வேண்டியதிலை தான். ஆனால் அதற்காக ஒரேடியாக இங்லீஸா?

5.தாய் மொழியில் அதிக பாசமும், பிழைப்பு மொழியில் தேவையான அளவுக்கு நேசமும் இருக்கனும்.

அப்பரம் போன் போட்டு விசாரிக்கிற சூழல் வந்தால் எதுவே சொல்ல முடியாமெ உங்களிடத்தில் சரணடைந்து விடுவேன்.

கேள்விக்கான பதிலில் பாஸாகி விடுவேன் எனும் நம்பிக்கையில்....!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நெ. சார்... (ஐயா!)
அஸ்ஸலாமு அலைக்கும்

நானும் விடுபட்ட.......... சொல்லிடுறேன்

அப்போதான் புரிந்தது அவர் எவ்வளவு நம்மை விட.......... .அறிவாளி இல்லை.

இனி "நீயே பர்த்துக்கோ" என்று சொல்லிவிட்டு ஒதுங்கிவிட்டார் முதலாளி.......அப்ப நீங்க தான் முதலாளி

அந்த மொழி பெயர்த்த புத்தகம் வெளியீடு எப்போது?

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Jaffar Sadeq,

I appreciate your honest responses.

//3.தமிழ்ப் பதிவுகளை வாசிப்பது தமிழன் மட்டுமே,ஆனால் ஆங்கில பதிவுகளை உலகத்தையே வாசிக்கச் செய்து அதிக வாசிப்புக்கான ஆதாரத்தை நிச்சயம் காட்ட முடியும். (பிரிட்டிஷ் காரங்களையும் வாசிக்க ஏற்பாடு செய்யவா?)//

You agreed that its good strategy to increase the visitors for our Adirai Nirubar blog when we publish English contents also.(Its just click away to forward the links).

Please share our knowledge(English contents from our blog which are almost generic concepts applicable to all) with those English friends nearby you. Hope our Adirai Nirubar blog's reputation will grow globally beyond language barriers.

I thank and appreciate Mr. Sabeer Abusharuk for facilitating understandings among us.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

புதுசுரபி said...
This comment has been removed by the author.
புதுசுரபி said...

ஆங்கிலேயனை விரட்ட அவன் மொழி கனவிலும்கற்க மாட்டோம் என்று
தூய நாட்டுப்பற்றின் காரணமாக இந்திய முஸ்லீம்கள் தொலைத்ததுதான் ஆங்கில மொழியறிவு.
அறிந்துகொள்ளுங்கள் அயல்மொழி கற்க
அருமை இஸ்லாத்தில் தடையேதும் ஒருபோதுமில்லை.
அருமைநபியவர்கள் அன்புத்தோழரை அண்டை நாட்டிற்கு தூதுவராய் அனுப்புகையில் அம்மொழி கற்கும்படி அந்தத்தோழருக்கு ஆணையிட்டார்கள்.
அயல்மொழி கற்க பதினேழு நாள் நாள் போதுமென்று
அறிவியல் சொல்கிறது. அல்லாஹ் நம் மூளையினை அமைத்திருக்கிறான் அத்துணை துல்லியமாய்.
மொழிக்கெதிரி நாமில்லை.
நயமாய் கற்போம் பலமொழி நானிலத்திலே

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நெஞ்சில் உரமின்றி.. சொல்லி(புட்டீங்க), அங்கே
பஞ்சிலே உறக்கமின்றி... சிலர் - தகவல் !

Yasir said...

நண்பர் M.H. ஜஹபர் சாதிக் .லண்டனுல இருந்துகினு...இங்லீஸ் வேணாமா ?? இந்தா கேமரூனுக்கு போனைப்போட்டு உங்களைப்பத்தி சொல்லிப்புடுறேன் :)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//நண்பர் M.H. ஜஹபர் சாதிக் .லண்டனுல இருந்துகினு...இங்லீஸ் வேணாமா ?? இந்தா கேமரூனுக்கு போனைப்போட்டு உங்களைப்பத்தி சொல்லிப்புடுறேன் :)//

இவங்க மொழி வெறியர்கள் அல்ல
மனித நேயர்கள்!

Yasir said...

//இவங்க மொழி வெறியர்கள் அல்ல///..நானும் அப்படித்தான்...பலதர மொழிக்கருத்துக்களையும் வரவேற்பவன்

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோதரர் கவிஞர் சபீர் -

//தீவினை செயும் மாந்தர் எவர்க்கும்
நோவினைத் தரும் வேதனை இருக்கும்
பூவினை யொத்த தோலெனும் போர்வை
தீயினைத் தொட்டு சாம்பலை உதிர்க்கும்//

குர் ஆன் வசனத்தை எனக்கு நினைவுபடுத்திய வரிகள் இவை. நரகத்தில் வேதனைப்படுவோருக்கு தோல் கருகக்கருக மீண்டும் புதிய தோல் அணிவிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் வேதனை செய்யப்படும் என்பது அந்த வசனத்தில் கூறப்படும் . அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னித்து நரக வேதனையிலிருந்தும் காப்பானாக. உயர்வான சுவனத்தை அவன் அருளைக்கொண்டு அனைவருக்கும் தருவானாக-
ஜஜாகல்லாஹு கைரன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு