Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேர்மை ! தூய்மை! தாய்மை! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | April 15, 2013 | , , , ,


தாய்மைக்கு நிகர் சொல்லும்படி உலகில் ஏதேனும் உண்டென்றால் இல்லை என்றுதான் எல்லோரும் ஒரு குரலில் கூற முடியும். அவ்வளவு அற்புதமான அமைப்பாக பெண்மையை அல்லாஹ் படைத்திருக்கின்றான். அல்லாஹ்வின் படைப்புகளைப் பற்றி எழுதுவதென்றால் கடல்நீர் அவ்வளவையும் மையகக்கொண்டு வானளவு காகிதக்கட்டுகளை பரப்பி வைத்து வாழ்த்துக்கள் எழுதினாலும் போதாது. அவ்வளவு கருணையும் அற்புதங்களும் கொண்டவன் அல்லாஹ். 

மண்ணாக இருந்த மனிதனை தந்தையிடம் தரிக்கச்செய்து, தாயின் கருவறையில் உதிக்கச் செய்து ஒப்படைக்கிறான். இதை திருக்குர்ஆனில் சொல்லியும் காட்டுகிறான். “தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது" என்று அண்ணல் நபிகள் மொழிந்தார்கள். “முந்தி தவமிருந்து, முன்னூறு நாள் சுமந்து அந்தி பகலாக தொந்தி சரியக் கிடந்து” என்று தாய்மையைப் பற்றி வானளாவப் பாடுகிறார் பட்டினத்தார். “ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்” என்று திருவள்ளுவரும் கூறுகிறார்.    கல்லூரி நாட்களில் உலகத்தில் சிறந்தது எது? ஓர் உருவமில்லாதது எது? வீரமா? காதலா? தாய்மையா? என்றெல்லாம் பட்டிமன்றங்கள் கண்டுள்ளோம். அனைத்திலும் தாய்மையே வென்றுள்ளது. 

உள்ளே கருச்சுமந்து உதிரத்தால் பால் கொடுத்து அள்ளி எடுக்கும் போதெல்லாம் அன்பையே சேர்த்தெடுத்து – தொல்லை தனக்கென்றும்  சுகமெல்லாம் நமக்கென்றும் சொல்லாமல் சொல்லிவரும் தேவதைதான் தாய். பண்பு  தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணை தாய். பசித்த முகம் பார்த்து பழம் தரும் சோலை தாய். இருக்கும் பிடி சோறும் தனக்கென எண்ணாது கொடுக்கின்ற குலமகள் தாய். 

இந்த தாய்மையைப் பற்றி இஸ்லாத்தின் வரலாற்று ஏடுகளில் சில சம்பவங்களை குறிப்பிட்டுக் காட்டவே இந்த அறிமுகம். 

தாய்மையின் வலிமையை பச்சிளங்குழந்தையைக் கொண்டு பேசவைத்த   சம்பவத்தை விவரிப்பதை முதல் முத்திரைச் செய்தியாகப் பதித்துத் தொடங்கலாம்.  

ஒரு குழந்தை பிறக்கப் போகிறது ; அது தனது ஆட்சிக்கு எதிரானது; ஆட்சிய ஆட்டங்காண வைக்கப் போகிறது என்று ஆடிப்போனான் பிர் அவுன். அதன் விளைவு கற்பந்தரித்த தாய்மார்களின் வயிற்றை வாள் கொண்டு கிழித்து வயிற்றின் உள்ளே துளிர் விட்டிருந்த தளிர்களை வெட்டி வீழ்த்தினான் அந்த விவேகமற்றவன் .  பச்சிளங்குழந்தைகளின் உயிர்களை பஸ்பமாக்கினான் அந்த பாதகன். சிந்தப் பட்ட இரத்தங்கள் செங்குருதி நதியாக ஓடியது என்றால் மிகையல்ல. 

அந்தப் படுபாதகமான நிலையிலும், தான் மடிந்தாலும் பரவாயில்லை தன் குழந்தை பிழைக்க வேண்டுமென்று நைல் நதியினிலே , ஒரு பேழையில் வைத்துக் காப்பாற்றி ஓடவிட்டாள் ஒரு தாய் . அவள் பெயர் யாரிஹா. பேழையில் வைத்து அனுப்பப்பட்ட குழந்தையின் கதி என்ன  என்று அறிய தன் மகள் சாராவை நைல் நதியின் கரையோரம் சென்று கண்காணித்துக் காவல் புரிய வைத்தாள்  அந்தத் தாய். அதையும் விட ஒரு படி மேலாக, எந்த பிர்  அவுன் குழந்தைகளைக் கொள்ள வேண்டுமென்று துடியாய்த் துடித்தானோ, அதே கொடுங்கோலனின் கொலுமண்டபத்திலே தன் பெற்ற குழந்தையைப் பேணி வளர்க்க வேஷம் போட்டு வளர்ப்புத்தாயாக வேலைக்கும் சேர்ந்தாள். கொடியவனின் கூடாரத்திலே... விஷப் பாம்பின் புற்றுக்குள்ளே.. சிங்கத்தின் குகைக்குள்ளேயே தனது குழந்தையை தானே பராமரிக்க தன்னுயிரைத் துச்சமென மதித்து உட்புகுந்த தாயின் உள்ளத்தை என்னவென்று சொல்வது?

அடுத்து, கன்னி மரியம் தாய்மை அடைகிறார். ஊராரின் தூற்றலுக்கும் துன்மார்க்கரின்  துடுக்கான வார்த்தைகளுக்குமிடையில் அனாதையாக ஆதரவற்றவராக அன்னை மரியம் பட்ட அவதிகள் கொஞ்சமா? காரூனின் சகோதரி கற்புக்குக் களங்கம் வந்துவிட்டது; கயமைத்தனம் கொண்டுவிட்டாள் என்றெல்லாம் நரம்பில்லா நாக்குகளின்  கொடிய வார்த்தைகளுக்கு ஆளானார்.  கணவன் இல்லாமல் கர்ப்பமடைந்த அன்னை மரியம். அந்த நெடும் பாலை மணலில் பட்ட துன்பங்கள் கொஞ்சமா? ஊருக்கு வெளியே உன்மத்தம் பிடித்தவர்களின் பார்வைகளுக்கப்பால் பெற்றெடுத்த குழந்தையை கொன்று போட்டிருந்தால் யாருக்குத் தெரியும்? யார் என்ன  கேட்டிருக்க முடியும்? தாயல்லவா? பத்து மாதம் சுமந்த குழந்தையை கொன்று போட மனம் வருமா?

குமுறும்  மனத்தோடு, கொதிக்கும் பாலைமணலில் குழந்தையைத் தன் இரு கரங்களில் ஏந்தி வரும்போது எள்ளி நகையாடிய கூட்டங்கள்- ஏளனம் பேசிய எத்தர்களுக்கிடையில் தன்னந்தனியே தாய்மை உணர்வோடு வந்தது சாதாரண நிகழ்வா?

அவ்வூர் மக்கள் இம்ரானின் மகனை நோக்கி அள்ளி வீசிய அச்சிடமுடியாத அபத்த வார்த்தைகளை அல்ல வசை சொற்கள் விஷம் தோய்ந்த வாளைவிட மோசமானவை. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. பச்சிளம் குழந்தை பவளவாய் திறந்து பேசிய அற்புதம் நிகழ்ந்தது. தொட்டிலில் கிடத்தப் பட்டிருந்த குழந்தை பேசியது. 

திருக்குர்ஆன் அத்தியாயம் 19 – வசனம 29 to 33 வரை இந்த நிகழ்ச்சியைக் காணலாம். 
  • “ நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். அவன் எனக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து நபியாகவும் ஆக்கி இருக்கிறான். 
  • நான் எங்கிருப்பினும் வளமிக்கவனாகவே இன்னும் என்னை ஆக்கியுள்ளான் இன்னும் உயிர் வாழும்(காலம்) வரை தொழுகையையும் ஜகாத்தையும் (நிறைவேற்றிட) எனக்கு உபதேசித்துள்ளான்.
  • இன்னும் , என் தாயாருக்கு நான் நன்மை செய்ய வேண்டுமென்றும் (எனக்குக் கட்டளை இட்டுள்ளான்) இன்னும் பெருமையடிப்பவனாகவோ துர்ப் பாகியமுடையவனாகவோ என்னை அவன் ஆகிவிடவில்லை. 
  • இன்னும், நான் பிறந்த நாளிலும் நான் இறக்கும் நாளிலும் நான் உயிர்பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலை பெற்றிருக்கும் “ என்று அந்தக் குழந்தை கூறியது. அதுதான் மரிய்முடைய மகன் ஈசா ( ஸல்). என்று முஸ்லிம்களும் இயேசு என்று கிருத்துவர்களும் கூறுகின்றனர். தாயின் மீது சுமத்தப் பட்டக்  களங்கத்தை துடைப்பதற்காக பச்சிளங்குழந்தை வாய்திறந்து பேசிய வரலாறு தாயின் கற்புக்கு அளித்த புனிதமான  சாட்சியமாகும்.
இதுவன்றியும், ஒரு குழந்தை தாய்க்கு தைரியம் சொல்லி நெருப்புக் குழம்பில் வீசச்சொன்ன வரலாற்றையும் திருக்குர்ஆன் சொல்லிக் காட்டியுள்ளது. முன்னது நேரிடையானது; பின்னது மறைமுகமான வரலாறு. மீண்டும் ஒரு குழந்தை பேசியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்தியாயம் 85  அல் புரூஜ் அத்தியாயத்தில் இறைவன் வசனம் 4 முதல் 8  வரை இறைவன் குறிப்பிடும் வசனங்கள் இந்த ஒரு வரலாற்றைக் கூறுகிறது.
  • நெருப்புக் குண்டவாசிகள் சபிக்கப் பட்டனர் 
  • எரி பொருளுடைய நெருப்புக் குண்டம் 
  • அவர்கள் அதனருகில் உட்கார்ந்திருந்தபோது 
  • (ஓரிறை) நம்பிக்கையாளர்களை ( நெருப்புக் குண்டத்திளிட்டு அவர்கள்) ளுடன் இவர்கள் நடந்து கொண்டதற்கு இவர்களே சாட்சியாளர்கள்
  • (யாவற்றையும்)மிகைத்தோனும் புகழுக்குரியவனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டதர்காகவன்றி ( வேறு எதற்கும்) இவர்கள் பழி வாங்கவில்லை. 
ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக நிகழ்ந்த சம்பவம். ஓரிறைக் கொள்கையை வலியுறுத்திய ஒரு சிறுவனைக் கொன்று போட கொடுங்கோலன் செய்த அனைத்து சதிகளும் அல்லாஹ்வின்  கருணையால் முறியடிக்கபபட்டன. இறுதியில் சிறுவன் சொன்னபடியே அச்சிறுவனை அல்லாஹ்வின் பெயரால் என்று கூறி அம்பெய்து கொன்றான் அரக்க அரசன்.

ஆனால் அங்கு கூடி இருந்த மக்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் இந்த சிறுவனின் இறைவனான அல்லாஹ் மீது நாங்கள் அனைவரும் இப்போது நம்பிக்கை கொண்டோம் எனக்  கூறினர். இதைக் கண்ட அரசன் மேலும் பீதியடைந்து பெரும் நெருப்புக் குண்டங்களை ஏற்படுத்தி ஏக இறைக்  கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரையும் நெருப்புக் குண்டத்தில் எறிந்தான். இறுதியாக ஒரு தாய் தனது கையில் பச்சிளங்குழந்தை ஏந்தி இருந்தவள் நெருப்பில் இறங்க தயக்கம் காட்டினாள். தான் வேண்டுமானால் தீயிலும் இறங்குவாள் தான் சாவதைப் பற்றி தயங்கத் தயாரில்லை.   ஆனால் தன் குழந்தையை எவ்வாறு வீசுவாள்? தயங்கினாள். ஒதுங்கினாள் பதுங்கினாள் .  ஆனால் தாயின் கரங்களில் தவழ்ந்த அந்தக் குழந்தை , “ என்னருமைத் தாயே! நீ பயப்படாதே! ஏனென்றால் நீ சத்தியத்தின் மீது இருக்கிறாய் ”  என அல்லாஹ்வின் அனுமதியோடு பேசிய அற்புதம் அங்கு நிகழ்ந்து. அந்தத் தாயும் குழந்தையுடன் நெருப்புக் குண்டத்துள் குதித்து தன் உயிரை இறைவனுக்காக அர்பணித்துவிட்டாள்.  இந்த சம்பவமே மேற்கண்ட திருமறையின் அத்தியாயத்தின் வசனங்களில் சுட்டப் படுகிறது. (முஸ்லிம் திர்மிதி ).  இந்த சம்பவத்துக்குப் பிறகு அங்கு ஏகத்துவம் நிலைப் பெற்றது. 
இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியில் நிறைவுறும்
முத்துப்பேட்டை P.பகுருதீன் B.Sc

22 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாஷா அல்லாஹ் அழகிய எழுத்துநடையில் அற்புதமான சம்பவங்களை இங்கு நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய சகோ. முத்துப்பேட்டை P.பகுருதீன் B.sc., அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி க‌ல‌ந்த‌ ச‌லாம் சென்ற‌டைய‌ட்டுமாக‌.

ஒருவ‌ன் த‌ன் வாழ்நாளில் "உம்மாட‌ வ‌துவாப்பேரு எதுவும் வாங்காம‌ல் து'ஆவை ம‌ட்டும் வாங்கி வ‌ந்தாலே ஏழ்மையில் அவன் இருந்தாலும் எல்லா வ‌ள‌ங்க‌ளும் நிர‌ம்ப‌ப்பெற்ற செல்வந்தனாகவே க‌ருத‌ப்ப‌டுவான் இன்ஷா அல்லாஹ்."

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Bahruddeen,

//தாய்மைக்கு நிகர் சொல்லும்படி உலகில் ஏதேனும் உண்டென்றால் இல்லை என்றுதான் எல்லோரும் ஒரு குரலில் கூற முடியும்//.

MashaAllah an article that exemplifies the true selfless loving soul The Mother.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com


Thanks for sharing

Unknown said...

Dear brother Mr. MSM Naina Muhammad,

//"உம்மாட‌ வ‌துவாப்பேரு எதுவும் வாங்காம‌ல் து'ஆவை ம‌ட்டும் வாங்கி வ‌ந்தாலே ஏழ்மையில் அவன் இருந்தாலும் எல்லா வ‌ள‌ங்க‌ளும் நிர‌ம்ப‌ப்பெற்ற செல்வந்தனாகவே க‌ருத‌ப்ப‌டுவான் இன்ஷா அல்லாஹ்."//

Its absolutely true. Its my experience too. Getting well wishes of our mothers ensures prosperity.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Shameed said...

இது கட்டுரையா அல்லது கவிதையா என்று பட்டிமன்றம் வைக்கலாம்
கலக்கி விட்டீர்கள் தாய்மையை பற்றி

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

அருமையான தொகுப்பு.

மர்ஹூம் அஜ்வாத் லோடுதம்பி அவர்கள் செக்கடிப்பள்ளியில் ஒரு பகுதில் பள்ளி வைத்து ஓதிகொடுத்தார்கள், அந்த பள்ளியில்தான் நானும் ஓதி முடித்தேன், அந்த மாதிரி வேளையில் கேட்ட ஹதீஸ்களில் இதுவும் ஒன்று.

பாராட்டுக்கள், மீண்டும் மீண்டும் தொடர வேண்டும்.

வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

Ebrahim Ansari said...

அன்புள்ள நண்பர் பகுருதீன் அவர்களே! பாராட்டுக்கள். து ஆ. தொடரும் என்று போட்டு இருக்கிறீர்கள். எதிர்பார்க்க வைக்கும் தொடர்களில் ஒன்றாக ஆக்கிவைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.

இன்று இஷாவில் நாம் சந்தித்தபோது கூட சொல்லவில்லையே.

sabeer.abushahruk said...

முதற்கண்:

பகுருதீன் காக்கா(?)வுக்கு அதிரை நிருபர் வாசகர்கள் சார்பாக வரவேற்பும் முகமனும் (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அஹ்லன் வசஹ்லன்.)

இங்கே பெரும்பாலானவர்கள் அம்மா பிள்ளைகள்தான். அதனால், தங்களின் இந்த ஆக்கம் எங்களைக் கவர்ந்துவிடுவது கடினமல்ல. 

இருப்பினும் தாங்கள் கையாண்டிருக்கும் மொழி நடையில் மென்மையும் தாய்மையின் பரிவும் இருக்கக் காண்கிறோம்.

தாய்மையைப் பற்றிச் சொல்லத் துவங்கியிருக்கும் தாங்கள் எந்த தைரியத்தில் அடுத்த பதிவில் நிறைவுறும் என்று சொல்கிறீர்களோ!
இரண்டு பதிவுகளில் சொல்லி முடிக்கிற விஷயமா "அம்மா?"

இன்னும் எழுதுங்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வரவேற்புக்கு வாசலிலேயே இருப்பவன் கொஞ்சம் வேலையாக இருந்துவிட்டேன்... அதனாலென்ன, அ.நி.ஆஸ்தான கவி அவர்களின் வரவேற்போடு நாங்களும் வரவேற்கிறோம் !

அழகான எழுத்து நடை, தடையில்லா மின்சாரம் கிடைத்த திருப்தி வாசித்து முடித்ததும்.

அதுமட்டுமல்ல,

இரண்டு பதிவுகளில் சொல்லி முடிக்கிற விஷயமா "உம்மா?"

இருந்தாலும்,

"அம்மா"ன்னா 'அரசி'யலம்மான்னு நெனச்சுடுவாங்களோன்னுதான் நம்மூரு "உம்மா"ன்னு சொன்னேன்...

KALAM SHAICK ABDUL KADER said...

\\மண்ணாக இருந்த மனிதனை தந்தையிடம் தரிக்கச்செய்து, தாயின் கருவறையில் உதிக்கச் செய்து ஒப்படைக்கிறான்.\\

காமிராக் கவிஞர் (சுட்டும் விழிச் சுடர்) ஷா.ஹமீத் அவர்கள் கேட்ட வினாவை அடியேனும் கேட்கிறேன்: “கவிதையா? கட்டுரையா? “ என்று விவாத களம் அமைக்கும் வித்தை விதைத்து விட்டீர்கள்.

முனைவர் இ.அ. காக்கா அவர்கள் இன்னும் அறிஞர்களை இத்தளத்திற்கு அறிமுகம் செய்து வையுங்கள்; கவிவேந்தர் சொல்வது போல் நாங்கெலல்லாம் அறிவுப்பசியுடன் அலைகின்றோம்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உம்மா குணம் பற்றிய உயர்ந்த தகவல்கள்.
வாழ்த்தும் வரவேற்பும்,முகமனும்!

Yasir said...

உம்மா என்றால் ச்சும்மா இல்லை என்பதற்கேற்ப...தாயின் தன்னிரகற்ற பாசத்தை சொல்லி ஏங்க வைக்கும் ஆக்கம்...அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் தொடர்ந்து எழுதுங்கள்

نتائج الاعداية بسوريا said...

பத்து மாதம் சுமந்து, நம்மை பெற்றடுத்தவள் தாய். பேணி வளர்ப்பவள் தாய்.
உலகிலுள்ள அனைத்து உயிரினும் பிரரினும் உயர்ந்தவள் தாய்.

அந்த தாய்க்கு இணையாக, பிறந்த நாட்டையும் . பேசும் மொழியையும்
உவமைப்படுத்துகிறோம்.

அந்தத்தாயைப்பற்றி சில வரிகளில்,:

உன் வீடு நிலைப்படி உன் தலையைப்பதம் பார்த்து நீ வலியால் துடித்தால்
உன் மனைவி கேட்பாள் ,
ஏன் பார்த்து வரத்தெரியாது, கண்ணை எங்கே வைத்து இருந்தீர்கள் ?

ஆனால் தாய் கேட்பாள்,
மகனே வலிக்குதா ?

கவிதை :

தாயே !

நீயே ஒரு கவிதை
உன்னைப்பற்றி
எதற்கு கவிதை.

வீட்டில் என்னையின்றி
எரியும் விளக்கு.

உன்னை கருவில் சுமந்த பெண்ணையும்
உன் கருவை சுமக்கின்ற பெண்ணையும்
உன் உயிர் உள்ளளவும் நேசி.

உள்ளத்தின் உள்ளே வைக்கவேண்டிய
ஒரு உன்னதம்.

பாசத்திற்கு உயிரைக்கொடுப்பது சுலபம்.
ஆனால் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு
பாசம் கிடைப்பதுதான் கஷ்ட்டம்.

அம்மா!
நீ உலகில் சுடர்விட்டு ஒளிவீச
தன்னை திரியாக்கிக்கொள்பவள்.

உலகில் இறக்கத்தான் பிறந்தோம்
ஆதலால் தாயின் மீது இரக்கத்தோடு
இருப்போம்.

அபு ஆசிப்.

KALAM SHAICK ABDUL KADER said...

அம்மா என்னும் அன்பை நேசி:

அம்மாவின் வியர்வையினால் வெந்த இட்லி
......அளித்திட்டச் சுவைக்குத்தான் ஈடும் உண்டோ?
அம்மாவின் வியர்வையினால் அனைத்தும் உண்டோம்
......அம்மாவின் அன்புநம்மை அணைக்கக் கண்டோம்
அம்மாவின் அடக்கத்தைக் கண்டு தானே
.....அடக்கமவள் அடக்கத்தைக் கேட்கும் தானே
அம்மாவின் பண்புகண்டு பண்பு கூட
..... அவளுக்குப் பணிவிடையைச் செய்யும் தானே!


அன்புக்கு முகவரியை உலகில் கேட்டால்
......அம்மாவின் முகத்தைத்தான் உலகம் கூறும்
பண்புக்கும் பணிவுக்கும் விளக்கம் கேட்டால்
.....பாரிலுள்ளோர் அம்மாவைச் சுட்டிக் காண்பர்
இன்பத்தில் துன்பத்தில் இணையும் உள்ளம்
.....ஈடில்லா அம்மாவின் அன்பு வெள்ளம்
என்புக்கும் தோலுக்கும் அம்மா ஈந்த
.....இணையில்லாக் குருதியாலே நாமும் வந்தோம்!


வலியென்றால் உயிர்போகும் நிலையில் நாமும்
....வலியென்றால் உயிர்தருவாள் அம்மா மட்டும்
வலியொன்றை அனுபவித்து அவளும் ஈன்று
...வாஞ்சையுடன் அவ்வுயிரை நோக்கும் காலை
வலியென்றால் என்னவென்று கேட்பாள் நாளை
...வலிக்குமேலே வலியையும்தான் பத்து மாதம்
வலியெல்லாம் சுமந்தவளே அம்மா என்று
....வல்லோனும் சொல்லிவிட்டான் மறையின் கூற்றில்!

கல்லறையில் உறங்குகின்றாய் என்றன் அம்மா
......கருவறையில் சுமந்தவளே என்றன் அம்மா
செல்லறையின் செல்லுக்குள் குருதிச் செல்ல
.....செய்திட்டத் தியாகங்கள் என்ன வென்பேன்!
சில்லறைகள் காணாத காலம் கண்டாய்
...செல்வத்தில் இருக்கின்ற நேரம் நீயும்
கல்லறைக்குள் போய்விட்டாய் என்ன செய்ய?
...கர்த்தனவன் கட்டளையும் அஃதே தானோ!

தலையணையும் படுக்கைகளில் இருந்தும் என்ன
....தானாக நித்திரையும் வருதல் இல்லை
தலையணையாய் உன்தொடையில் படுக்க நீயும்
....தந்தசுகம் தலையணையும் தரவே இல்லை
மலையனைய துயரங்கள் என்றன் முன்னே
....மனக்குழப்பம் தந்துவிட்ட போதும் என்னை
நிலைகுலையாத் துணிவுடனே வாழ வேண்டி
....நீதந்த அறிவுரைகள் மறவேன் அம்மா!

என்முகமும் காணாமல் புதைத்த அன்று
...எப்படித்தான் துடித்தேனே நானும் என்று
உன்மனமும் அறியாமல் நீயும் மீளா
..உறக்கத்தில் சென்றுவிட்டாய் என்றன் அம்மா
தன்சுகத்தை உறக்கத்தை மறந்து நீயும்
...தவிப்புடனே என்னையும்தான் பாது காத்துப்
புன்சிரிப்பை மருந்தாக்கி வளர்த்தத் தாயே
...புண்ணியங்கள் செய்துவந்த தாயும் நீயே!


படிக்கட்டுப் படிக்கட்டாய் முன்னே ஏறும்
....படித்தரங்கள் எல்லாமும் உன்னைக் கூறும்
நடிக்கின்ற உலகத்தில் உன்றன் அன்பில்
....நடிப்பில்லா உளத்தூய்மை கண்டேன் நானே
வடித்திட்டக் கண்ணீரால் என்னை அன்பாய்
...வாரிமுத்தம் தந்திட்டப் பொழுதைத் தேடித்
துடிக்கின்ற என்னுள்ளம் அறிய வேண்டும்
..தொடர்ந்துநீயும் கனவினிலே வரவும் வேண்டும்!

Unknown said...

என் இனிய நண்பர் கலாம் அவர்களே,

உங்கள் கவிதையின் சூட்சுமத்தை கொஞ்சம் சொல்லித்தாருங்களேன்
கவிதை வடிப்பது எப்படி ?
சொல்லைக்கோர்ப்பது எப்படி ?
சொல் நயம் எப்படி ?
அதை கருவுக்கு தகுந்தார்ப்போல் பயன் படுத்துவது எப்படி ?

இந்த பின்னூட்டத்திலேயே எனக்கு பாடம் நடத்துங்களேன் .

ரொம்ப இம்சை பண்றேனோ ?
மன்னிக்கவும்.

அபு ஆசிப்.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பு நண்பரும், என் ஆருயிர் நண்பனின் மாமாவுமாகிய அப்துல் காதிர் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்,

எல்லார்க்கும் ஆசானாகி- கவிதைப் பாடமும், கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை என்னும் ஆய்வும் எழுதியுள்ள அதிரை அஹ்மத் காக்கா அவர்களை அணுகுங்கள், மரபுப்பா இயற்ற விரும்பினால். புதுக்கவிதை வனைய விரும்பினால் உங்களின் உற்ற நண்பர்- கவிவேந்தர்- ஆஸ்தான கவி- கவிநிலவு- நிஜ கவி இராஜா - சபீர் அவர்களை அணுகுங்கள்.

உங்களின் ஆர்வம் கண்டு மகிழ்வுடன் என் உளம்நிறைவான நன்றியை அறிவிக்கிறேன்; ஜஸாக்கல்லாஹ் கைரன்.

Adirai pasanga😎 said...

தாயின் மகத்துவம் குறித்த அருமையான பதிவு- ஜஜாகல்லாஹு கைரன்

தாயின் மகத்துவத்தை விளக்கும் குர் ஆன் வசனங்கள், நபிமார்களின் வரலாறுகளை இக்காலக் குழந்தைகள் குறைவாகவே அறிந்துள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு இவைகள் போதுமான அளவு எடுத்துக்கூறப்படவில்லை. இதற்கு பெற்றோரும் ஒரு காரணம்.. இதன் விளைவாகவே பிற்காலத்தில் தாய்தந்தையர் அனாதை விடுதிக்கு அனுப்பபடும் அவலங்கள் நிகழ்கின்றது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இம்மை மறுமை வாழ்வு செழிப்பானதாக இருக்க அனைவரும் அனைத்து செயல்களிலும் மார்க்கத்தை பேண வேண்டும். சொல்லிலும் செயலிலும்.

Unknown said...

சபீர்,

நீனாச்சும் கவிதை இயற்றக்கற்றுத்தாடா

அபு ஆசிப்.

crown said...


படிக்கட்டுப் படிக்கட்டாய் முன்னே ஏறும்
....படித்தரங்கள் எல்லாமும் உன்னைக் கூறும்
நடிக்கின்ற உலகத்தில் உன்றன் அன்பில்
....நடிப்பில்லா உளத்தூய்மை கண்டேன் நானே
வடித்திட்டக் கண்ணீரால் என்னை அன்பாய்
...வாரிமுத்தம் தந்திட்டப் பொழுதைத் தேடித்
துடிக்கின்ற என்னுள்ளம் அறிய வேண்டும்
..தொடர்ந்துநீயும் கனவினிலே வரவும் வேண்டும்!
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். கண்ணீரை வரவழைக்கும் ஈரவரிகள். அம்மா! கனவிலாவது உன்னை என் இமைகள் மூடி சுமக்கவேண்டும் அதற்காகவாவது தினம் என் கனவில் வர என் எண்ணக்கனவை நிசமாக்குவாயா? இல்லை இந்த எண்ணக்கனவை வெறும் கனவாக்குவாயா? அருமையான கவிதை! ஒவ்வொரு வரிகளும் உயிரின் மேல் வருடிச்செல்கிறது! செல்லெல்லாம் சில்லன சில்லிடுகிறது.மயிர்கால்கள் உயிர் பெற்று எழுகிறது.



KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் மகுடமே! வார்த்தைச் சித்தரே!! அஸ்ஸாலாமு அலைக்கும்,

நேற்றிரவு எழுதி முடித்த இப்பாடல் என்னும் என் கவிக்குழதையை என் வலைப்பூத் தொட்டிலில் இட்டுள்ளேன்; அங்கு இடப்பட்டதை இங்கு முன் வாசல் வழியாகப் பதியக்கூடாது என்ற நெறிமுறைக்குக் கட்டுப்பட்டவனாகப் பின்வாசல் என்னும் பின்னூட்டத்தில் விட்டேன்; நீ உறுதியாய் வருவாய் என்று எதிர்பார்த்தேன்;அல்ஹம்துலில்லாஹ் என் கணிப்பு என்றும் தவறாது என்பதை இம்முறையும் உன் வருகையும் வாழ்த்தும் உறுதியாகச் சொல்லி விட்டன; உன் உணர்வுநிறையும் வாழ்த்துக்கு என் உளம்நிறையும் நன்றிகள்= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

KALAM SHAICK ABDUL KADER said...

இனிய நண்பர் அப்துல் காதிர், அஸ்ஸலாமு அலைக்கும்,

அடியேன் கற்பித்தலில் ஆர்வமுள்ளவன் என்பதை நீங்கள் நேரில்-ஊரில் கண்டிருக்கின்றீர்கள்; ஆயினும், அணமையில் என் எழுத்துக்களில் ஒற்றுப்பிழைகள் அதிகம் இருப்பதைக் கண்டு கற்றுக் கொடுத்த ஆசான் அதிரை அஹ்மத் அவர்கள் தான் தமிழிலக்கணம் முழுமையாய் அறிந்தவர்கள் என்பதாற்றான் நான் விலகிக் கொண்டேன்; இப்பாடம் நடத்தும் அளவுக்கு நான் தேர்ச்சிப் பெற்றவனுமல்லன்; யானே கற்றுக்குட்டியாக இருக்கும் பொழுது இவ்விடயத்தில் முழுமையாக என்னால் பாடம் நடத்திட இயலாதது என்பதாலும்; தலைவர் இருக்கத் தொண்டன் துடிக்கலாமா என்பதாலும் தான் விலகிக் கொண்டதுடன் உங்கட்கு அழகிய வழியையும் காட்டினேன்; நீங்கள் விரக்தியுடன் இருப்பதாக உணர்கிறேன்; அதனால் இம்மறுமொழியை இட்டேன். உங்களின் உற்ற நண்பர் கவிவேந்தர்- ஆஸ்தான கவி- கவிநிலவு- நிஜ கவி இராஜா அவர்ள் உங்கட்கு எளிமையும் புதுமையும் நிறைந்த “புதுக்கவிதை” படைக்கும் முறைகளைக் கற்றுத் தருவார்கள். உங்களின் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். இன்னும், இத்தளத்தில் யான் ஒரு பார்வையாளனாகவே இருந்து வருவேன் என்று முடிவு செய்து விட்டேன்; இனிமேல் என் பதிவுகள் வாரா; பின்னூட்டங்கள் மட்டும் எழுதுவேன். இந்நிலையில் யான் எப்படி இத்தளத்தில் பாடம் நடத்துவது? இன்னுமொன்றை அறியத் தருகிறேன் “இலக்கணம் என்றால் கைப்பு ”என்று அதிகமானோர் விரும்பாமலிருப்பதால் தொடர்ந்து இங்கும் வேறொரு தளத்திலும் நடத்தப்பட்ட இலக்கண்ப்பாடங்கள் தொடர்ந்து நடைபெறவில்லை என்பதையும் கருத்திற் கொண்டு யான் இம்முடிவை எடுத்துள்ளேன். தவிர, உங்களை விரும்பாமல் ஒதுக்கி விட்டேன் என்றெல்லாம் வீணான எண்ணங்களை ஷைத்தான் உருவாக்காமல் என்றும் நம் இனிய நட்புத் தொடரட்டும், இன்ஷா அல்லாஹ்!

குறிப்பு: இந்தப் பின்னூட்டத்தில் எத்தனை ஒற்றுப்பிழைகள் இருக்குமோ என்று அஞ்சி அஞ்சி எழுதினேன்.

Anonymous said...

அன்பிற்குரிய கவியன்பன் காக்கா அவர்கட்கு:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

தங்களின் “இத்தளத்தில் யான் ஒரு பார்வையாளனாகவே இருந்து வருவேன் என்று முடிவு செய்து விட்டேன்; இனிமேல் என் பதிவுகள் வாரா” என்னும் சொற்றொடர் வருத்தத்தைத் தருகிறது. இந்த முடிவில் இந்தத் தளத்தின்மீது தங்களுக்கு அதிருப்தி இருப்பதாக ஓர் உள்ளர்த்தம் தொணிப்பதால் அது என்னெவென்று அறிவித்து தங்களின் முடிவுக்கு வலு சேர்ப்பதே நியாயமானது. முடிவை பொதுவில் அறிவித்திருப்பதால் காரணத்தையும் இங்கே பொதுவில் அறிவிப்பதே இத்தளத்து நிர்வாகிகள், பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு தங்களின் மீதான அபிப்ராயத்தை மேன்மையாக்கும்.

தவிர,

//இன்னுமொன்றை அறியத் தருகிறேன் “இலக்கணம் என்றால் கைப்பு ”என்று அதிகமானோர் விரும்பாமலிருப்பதால் தொடர்ந்து இங்கும் வேறொரு தளத்திலும் நடத்தப்பட்ட இலக்கண்ப்பாடங்கள் தொடர்ந்து நடைபெறவில்லை//

தொடர்ந்து நடைபெறாததற்கான காரணமாகத் தாங்கள் சொல்லும் “கைப்பு” எவ்வகையில் சரியென்றுத் தெரியவில்லை. மேலும், இறை வசனங்களைத் தவிர, மனிதன் வகுத்த எந்த இலக்கணமும் மாற்றத்திற்குள்ளாவதேயாகும். நீங்கள் சொல்லும் காரணம் சரியென்றால் இதுநாள்வரை இங்கு வெளிவந்து கொண்டிருந்த, நீங்கள் நிறுத்துவதாக அறிவிக்காவிட்டால் இனியும் வரவிருந்த தங்களின் இலக்கணச் சுத்தமான கவிதைகளை இந்தத் தளம் ஏன் வெளியிட்டது.

குற்றமிருப்பின் திருத்திக்கொள்ளவே மேற்கண்ட கேள்விகள்.

உணர்வலைகளின் அதிர்வுகளை புரிந்தமைக்கு நன்றி.

நெறியாளர்
www.adirainirubar.in

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பு நெறியாளர் அபூஇப்றாஹிம் அவர்கட்கு, வ அலைக்கும் ஸலாம்.

1)
உங்கள் தளத்தின் கட்டுப்பாடும், நெறிமுறைகளும் மிகவும் போற்றத்தக்கவை; இதுபோன்ற நிபந்தனைகள்- கட்டுப்பாடுகளை வலைத்தளங்கள்/ இணையக் குழுமங்கள்/ இணைய இதழ்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன என்பதும் யான் அறிவேன். “எங்கள் தளத்திற்கு மட்டும் பதியப்பட வேண்டும்; வேறு எந்தத் தளத்திலும் பதிந்திருக்கக் கூடாது” என்ற விதியானது பொதுவாக எல்லா வலைத்தளங்கள்/ இணையக் குழுமங்கள்/ இணைய இதழ்கள் விடுக்கும் நிபந்தனைதான்; அதுபோன்றே நீங்களும் விதித்திருந்தாலும், ஏற்கனவே கவிவேந்தர் அவர்கள் அனுமதித்திருந்தார்கள் என்றே என் சொந்த வலைத்தளத்தில் “கல்வி” என்னும் தலைப்பிலான கவிதையை இட்டிருந்தேன்; பின்னர் உங்கள் தளத்தில் பதிய அனுப்பியிருந்தேன்; என் சொந்தத்தளத்தில் இட்டக் கவிதையை எடுத்து விட்டால் உங்கள் தளத்தில் பதியலாம் என்ற உங்களின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு முதன்முறையாக என் சொந்தத் தளத்திலிருந்து அக்கவிதையையும் அங்குப் பின்னூட்டமிட்டிருந்த என் அருமை வாசகரின் பின்னூட்டத்தையும் சேர்த்து நீக்கி விட்டுத் தான் மனம் வருத்தத்துடன் உங்கள் தளத்தில் “கல்வி” என்னும் கவிதையைப் பதிவிற்காக அனுப்பி விட்டு “ நீங்கள் பதிந்தாலும் பதியாவிட்டாலும் இதுவே என் இறுதி அனுப்பீடு ஆகும்” என்றும் மின்மடலில் எழுதியிருந்தேன்.

2)
இங்குப் பின்னூட்டத்தில் என்னிடம் கவிதையிலக்கணம் கற்றுத் தருமாறு இனிய நண்பர் அப்துல்காதிர் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கு என் இயலாமைக்குரிய காரணமாகவும், இனிமேல் இத்தளத்தில் தொடர்ந்து பங்களிப்பாளாராக இருக்க இயலாமையைச் சொல்ல வேண்டியதிருந்ததால் அம்மறுமொழியினூடே என் நிலைமையைச் சொன்னேன்.

இலக்கணப் பாடம் நடத்தியவர்களே ஒரு முறை “இலக்கணம் என்றால் கைப்பு என்பதால் பின்னூட்டங்கள் அதிகம் வருவதில்லை” என்ற ஐயத்தை எழுப்பியிருந்த காரணத்தால் யானும் அவ்வண்ணம் யோசித்தேன்;அதுவும் கவிதையிலக்கணம் கற்றுத் தர வேண்டும் என்று இனிய நண்பர் அப்துல் காதிர் அவர்கள் கேட்டுக் கொண்டதால் அடியேனும் இச்சொல்லைப் பயன்படுத்த வேண்டியதாகி விட்டது.

இவ்விளக்கம் போதுமானது என்று நினைக்கிறேன்.

என்றும் நட்புடன்,

அபுல்கலாம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு