Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று! இன்று! நாளை?- 1 16

அதிரைநிருபர் பதிப்பகம் | May 22, 2013 | , , , ,


தமிழக சட்டமன்றத்தின்  இவ்வாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும்  கூட்டத் தொடர் அண்மையில் நிறைவுற்றது. ஒரு அரசியல் நோக்கர் என்கிற முறையில், இப்போதெல்லாம் நடைபெறும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற நிகழ்வுகளை உற்று நோக்கிப் பார்க்கும்போது மனதில் பல ஒப்பீட்டு நினைவலைகள் எழுகின்றன. அவைகளை நமக்குள் அன்புடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவைத்தர எண்ணினேன்.

சட்டமன்றம்  கூடப் போகும் நாளைப் பற்றி ஊடகங்கள், பத்திரிகைகள் பரபரப்பு செய்தியாக முக்கியத்துவம் கொடுத்து சட்டமன்றம் கூடி சலசலப்பை ஏற்படுத்தும் முன்பே இவர்கள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தும் சடங்கை செய்துவிடுவார்கள். மானியக் கோரிக்கைகள் வர இருக்கின்றன – மசோதா தர இருக்கிறார்கள் - பரபரப்பான சூழ்நிலையில் சட்டமன்றம் கூடுகிறது- எதிர்க் கட்சிகள் வரிந்து கட்டுகின்றன- ஆளும் கட்சி ஒரு கை பார்க்க தயாராகிறது- அப்படி இப்படி என்று ஏதோ ரேக்ளா ரேசுக்குத் தயார் ஆவது போல செய்திகளை வெளியிடுவார்கள். 

பரிதாபத்துக்குரிய மக்களும் ஆஹா! சட்டமன்றம் கூடுகிறது – நமக்கு ஆகுமான பல நல்ல திட்டங்கள் வரப்  போகின்றன- என்று வாயில் ஈ போவதுகூடத் தெரியாமல் வாயைப் பிளந்து கொண்டு காத்திருப்பார்கள். சட்டமன்றம் கூடும் நாள் வரும். அன்று எதிர்க் கட்சிகள் சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று ஆரம்பிப்பார்கள். காரணம் சட்டமன்றத்தின் கேண்டீனில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தரும் தேநீரில் சர்க்கரை அதிகமாகப் போடுகிறார்கள் எதிர்கட்சிக் காரர்களுக்கு உப்பை அள்ளிப் போடுகிறார்கள் என்பது போல சில காரணம் இருக்கும். அதையும் மீறி உள்ளே போனால் சபாநாயகர் எதிர்கட்சிக்காரர்களை கூட்டாக  வெளியேற்றினார் என்றும் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே போடப்பட்டனர் என்றும்  எதிர்க் கட்சியினர் கோஷம் போட்டு வெளிநடப்பு செய்தனர் என்றும் - ஒரு குறிப்பிட்ட கட்சி உறுப்பினர் விவாதம் நடைபெறும்போது கடந்த வருடம் அவர் சாப்பிட்ட மட்டன் கறியில் ஒரு  பிசிறு பற்களுக்கிடையில் சிக்கிக் கொண்டிருந்ததை குச்சியால் குத்தி நோண்டிக் கொண்டிருந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி தொடர் முழுதும் நீக்கப் பட்டு இருப்பர் இல்லாவிட்டால் இவர் பல்லைக் கடித்தார் உதட்டைத் துருத்தினார்- என்று ஏதாவது குற்றம் சாட்டப்பட்டு தொடர் முழுதும் வெளியேற்றப்படுவார். 

கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை செலவு செய்து கோடான கோடி மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து தேர்ந்தெடுத்து சட்டமன்றத்துக்கு அனுப்பினால் சக்தியில் கல்லைப் போட்ட சங்கதிதான் நடக்கிறது. ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் வெட்டுப் பகை குத்துப் பகை- ஏட்டிக்குப் போட்டி. ஒன்றிலும் அனுசரணை ஒத்துப்போதல் தென்படுவதே இல்லை. தனிவாழ்வுபற்றிய விமர்சனங்கள், சட்டமன்றத்தின் தரத்தை குறைத்துவிடுகின்றன. மக்கள் நாளை நம்மைப் பார்த்து கேள்வி கேட்பார்களே என்கிற உணர்வு ஒரு துளி கூட இல்லை. சத்தம் கொஞ்சம் சூடு பிடித்தால் குழாயடி கூட வெட்கப்படும். சந்தைக்கடை கூட தற்கொலை செய்துகொள்ளும். எதிர்க் கட்சி உறுப்பினர்களை வெளியேற்றுவதில் ஏகபோக உரிமை சபாநாயகருக்கு. 

யார் இந்த சபாநாயகர்? வானளாவிய அதிகாரம் தனக்கு உண்டு என்று பறைசாற்றும்  சபாநாயகரும் ஒரு தொகுதியிலிருந்து மக்களால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப் பட்ட எம். எல் ஏ தான். ஆனால் அதே போல் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை சபாநாயகர் விரும்பினால் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் அவருக்கு வழங்கப் பட்டு இருக்கிறது. இந்த அதிகாரத்தை வைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மிரட்டப் படுகின்றனர். மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு சட்டமன்ற உறுப்பினரை பதவி நீக்கம் செய்தால் மக்களுக்கு என்ன மரியாதை? ஜனநாயகத்தின் யோக்கியதைதான் என்ன?

சட்டசபை வளாகத்தில் சபை நடவடிக்கைகளில் சற்றும் நாகரீகமோ சாதுர்யமோ  காணப்படுவது இல்லை. பழிவாங்கும் படலம் மாறி மாறி அரங்கேறுகிறது. மக்கள் பிரச்னைகள் புறந்தள்ளப் படுகின்றன. மக்களுக்கு பாராளுமன்ற சட்ட மன்றங்களின் மீது சபை நடவடிக்கைகளைக் காணும்போது நம்பிக்கைகள் பொய்த்துப் போகின்றன. 

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் 
தொகையறிந்த தூய்மையவர்”  என்று வள்ளுவர்  வரையறுக்கிறார்.

தூய அறிவாளர்கள் சொல்லின் பொருள் அறிந்து அவையின் தன்மை அறிந்து தாம் சொல்லப் போவதையும் நன்றாக  அறிந்தே எதையும் சொல்ல வேண்டும் என்பதே இதன் பொருள். 

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன 
கெடுப்பார் இலானும் கெடும் “  -என்பதும் வள்ளுவன் வாக்கே. 

இடித்துரைத்து சொல்லித்திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன் தன்னைக் கெடுப்பவர் இல்லாவிட்டாலும் தானாக கேட்டுப் போவான் என்பது இதற்குப் பொருள். 

ஆளும் கட்சியின் குறைபாடுகளை எதிர்க் கட்சிகள் எடுத்துரைக்கும் போது அதனை சீர்தூக்கி சரிசெய்து கொள்வது ஆளும் கட்சியின் கடமை. அதைவிடுத்து தான்தோன்றித்தனமாக ஆளும் கட்சி செயல்ப்படுமானால் அக்கட்சி அடுத்த தேர்தலில் மக்களால் தூக்கி எறியப்படும். இவை நாம் கண்டு வரும் வரலாற்றுப் படிப்பினைகள். 

இதைத்தான் அறிஞர் அண்ணாதுரை அவர்கள் 1957-62 சட்டமன்ற நிகழ்ச்சியில்  “ஆளும் கட்சி யானையின்  பலம் கொண்டதாக இருந்தாலும் அதை சரியான பாதையில் செலுத்த அங்குசம் என்ற ஒன்று வேண்டும்” என்று ஆளும் கட்சியை நோக்கி நறுக்கென்று மனதில் படும்படி சொன்னார். மேலும்,    

அதே 1962 ல் அண்ணா அவர்களின் கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம் பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றசாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்தைக்  கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்த நெடுஞ்செழியனை நோக்கி வைத்த குற்றசாட்டு, அண்ணாதுரையின் கட்சிக்கு  நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்பதாகும்  ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் கேலியுடன் தெரிவித்த குற்றசாட்டை மறுத்து “நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்.”

என்று நெடுஞ்செழியன் நயம்பட உரைத்தாராம். பின்னர் அது உண்மையில் நடந்தது. 

மற்றொருமுறை அரசின் மானியக் கோரிக்கைமீது அண்ணா பேசும்போது அன்றைய காங்கிரஸ் அமைச்சர்களில் ஒருவர் இத்தனை கோடி ரூபாய்களை மக்கள் நலனுக்காக செலவழிக்கிறோம் என்றார். இதற்கு பதில் அளித்த அண்ணா “ பத்து பேர் கையிலிருந்து மாறிய ஐஸ் கட்டியைப் போலத்தான் அரசின் திட்டங்கள் மக்களைப் போய் சேரும் சமயத்தில் இருக்கின்றன” என்று இடித்துரைத்தார். அன்றாவது பத்து பேர் கை மாறிய ஐஸ் கட்டியாகத் திட்டங்கள் மக்களைப் போய்ச் சேர்ந்தன. இன்றோ காற்றைக் கையில் பிடித்து காட்டாறு வெள்ளத்தில் கோட்டாறு மண்ணெடுத்து கூட கோபுரமும் மாட மாளிகையும் கட்டி கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். இன்றைக்கு அரசின் திட்டங்கள் கடலில் கரைத்த சந்தனமாக அல்லவா போய்விட்டன? வருங்காலத்தில் சந்தனமும் இல்லாமல் வெறுங்கையை வைத்து கரைப்பதுபோல் கட்சி நாடகம் நடத்துவார்கள் அரசியல்வாதிகள். 

காங்கிரஸ் ஆட்சியில் ஒருமுறை அவை நடவடிக்கைகள் நடைபெறும்போது ஒரு ஆளும் கட்சி  உறுப்பினர் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த எதிக் கட்சி உறுப்பினர் இப்படித்தூங்கலாமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்குக் கலைஞர்  கூறிய கருத்து  அவையில் சிரிப்பலைகளை எழுப்பியது. கலைஞர் கூறினார் “ தூங்கலாம் ஆனால் குறட்டை விடக்கூடாது. தூங்குவது அவர் உரிமை குறட்டைவிட்டால் மற்றவர்களுக்கு இடையூறு. உரிமைப் பிரச்னை  “ என்றார். 

சட்டமன்றத்தில் அரசியல் நாகரீகம் பற்றிப் பேசும் புண்ணியவான்களுக்கு  கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் தொடர்புடைய ஒரு நிகழ்வை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 

சென்னை இராஜதானி சட்ட மன்றத்தில் காங்கிரஸ் ஆளும் கட்சி. இருபத்தி ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் குழு கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களை எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுத்து இருந்தது. சிறந்த எதிர்க் கட்சித் தலைவராக அவர்கள் பணியாற்றி வந்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு அப்போது திரு. அனந்தன் நம்பியார் உட்பட இரண்டே   இரண்டு உறுப்பினர்கள்.   கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஒரு உரிமைப் பிரச்னை கொடுக்கப் பட்டு இருந்தது. அதை இன்னொரு நாள் எடுத்துக் கொள்வோம் என்று சபாநாயகர் கூறினார். 

இதற்குக் காரணம் இன்னொரு கம்யூனிஸ்ட் உறுப்பினர் வேறொரு தொழிலாளர் பிரச்னை காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததால் அவைக்கு வரமுடியவில்லை. எனவே கம்யூனிஸ்ட் கட்சி தந்திருந்த உரிமைப் பிரச்சனைய வழி மொழிய ஆள் இல்லை. ஒரு தீர்மானத்தை ஒருவர் முன் மொழிந்தால் மற்றொரு உறுப்பினர் வழி மொழிய வேண்டும். ஒரு உறுப்பினர் வர முடியாத நிலையில் வழிமொழிய முடியாமல் தீர்மானம் தள்ளுபடியாகக்  கூடிய நிலை ஏற்பட்டது. அப்போது யாருமே எதிர்பார்க்காமல் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் எழுந்து நான் வழி மொழிகிறேன் என்று கூறி சபையை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள். 

அப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் “இஸ்லாமியர்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஒத்துவராதே – ஏணி வைத்தாலும் எட்டாதே – எப்படி நீங்கள் வழிமொழிந்தீர்கள்?” என்று கேட்டார்கள். கண்ணியத்துக் குரிய காயிதே மில்லத் அவர்கள் சொன்னார்கள் “ எந்த ஒரு உறுப்பினரும் தனது கருத்தை இந்த அவையில்   பதிய    உரிமை உடையவர்கள். எதிர்பாராத சூழ்நிலையில் அவர்களின் கருத்து பதிவுசெய்யப் படாவிட்டால் அது ஜனநாயகத்தை ஊனமாக்கிவிடும். எனவேதான் வழிமொழிந்தேன். இங்கே இஸ்லாம் கம்யூனிசம் என்கிற பேச்சுக்கு இடமில்லை “ என்றார்கள். இஸ்லாத்தின் சகிப்புத்தன்மைக்கும் சகோதரத்துக்கும்  சான்று பகர்ந்த சம்பவம் அது. 

இதனால்தான் கண்ணியத்துகுரிய காயிதே மில்லத் அவர்களைப் பற்றி கலைஞர்  ஒருமுறை குறிப்பிட்ட போது “ அரசாள்வோர் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டியவை கனிவு! துணிவு! பணிவு!  நான் கனிவைகற்றுக் கொண்டது காயிதே மில்லத்திடம்! துணிவைக் கற்றுக் கொண்டது பெரியாரிடம்! பணிவைக் கற்றுக் கொண்டது அண்ணாவிடம்!  “ என்றார். 

இதேபோல் மற்றொரு சம்பவம் இங்கு நினைவு கூறத் தக்கது. கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் எதிர்க் கட்சித் தலைவராக பணியாற்றியபோது கல்வி அமைச்சராக பணியாற்றியவர் கோவை அவினாசிலிங்கம் அவர்களாவார். ஒரு விருந்தில் இருவரும் சந்திக்க நேர்ந்தது. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டதுடன் பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது காயிதே மில்லத் இடம் கல்வி அமைச்சர் “ இஸ்மாயில் சாஹிப்! உங்கள் மகன் இஞ்சிநீரிங் கல்லூரியில் நன்றாகப் படிக்கிறாரா ?” என்று கேட்டார்.  “ ஆமாம்! ஆமாம்! ஆனால் அவன் இஞ்சினியருக்குப் படிப்பது உங்களுக்கு எப்படித்தெரியும்? என்று  வியப்புடன் கேட்டார் காயிதே மில்லத். 

“எனக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்? அவருக்கு கல்லூரியில் இடம் கொடுத்ததே நான்தானே? (அவினாசிலிங்கத்தின் சொந்தக் கல்லூரி) விண்ணப்பத்தைப் பார்த்ததும் உங்கள் மகன் என்று தெரிந்தது. எதிர்க் கட்சித்தலைவரான உங்கள் மகனை நிராகரிக்க முடியுமா? உடனடியாக கொடுத்துவிட்டோம் என்று மகிழ்வுடன் கூறினார் திரு.  அவினாசி லிங்கம். பேச்சை அத்துடன் முடித்துக் கொண்ட கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அடுத்த நாள் தனது மகனை அழைத்து  "இன்றிலிருந்து நீ கல்லூரிக்குப் போக வேண்டாம் அந்தப் படிப்பையும் தொடர வேண்டாம்" என்று நிறுத்திவிட்டார். 

பலர் வற்புறுத்திக் கேட்டும் இப்படி மகனின் படிப்பை இடை நிறுத்தியதற்கான  காரணத்தை  உடனே அவர் கூறவில்லை. பல குடும்ப உறுப்பினர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு காரணத்தைச் சொன்னார் . அது, “ நான் எதிர்க் கட்சித் தலைவர் என்பதால் என் மகனுக்கு சீட் கொடுத்ததாக கல்வி அமைச்சர் சொல்கிறார். அப்படிப் பட்ட தயவு நமக்கு தேவை இல்லை.” 

இப்படிப்பட்ட பண்பாளர்களை இன்று ஹாங்காங்கில் வலை வாங்கி வந்து வங்காள விரிகுடாக் கடலில் இரட்டை மடி வீசி அரித்து சலித்துப்  பார்த்தாலும் சட்டமன்றங்களில் நாம் காண முடியுமா?

இன்ஷா அல்லாஹ் தொடரலாம். 
முத்துப் பேட்டை P. பகுருதீன் B.Sc;

16 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா !

நீண்ட நாட்கள் எதிர்பார்த்த சப்ஜெக்ட்...

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களின் ஒவ்வொரு அரசியல் மூவ்மெண்டும் சரித்திர புகழ் மிக்கவை !

அவர்களைப் பற்றி வாசிப்பதில் எனக்கு அலாதி பிரியம் !

அனைத்துக் கட்சியினராலும் நேசிக்கப்பட்ட ஒரே தலைவர் !

அரசியல் எதிரிகள் சபைகூட எழுந்து நிற்கும் இந்த தலைவரைப் பார்த்து !

Unknown said...

அன்று நடந்தது சட்டமன்றம்
இன்று நடப்பது சண்டை மன்றம்.
அதற்கும் இதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

அன்று சட்டமன்றத்தில் இருந்தது.
நாகரிகம்,
பண்பாடு
கலாச்சாரம்,
கடமை உணர்வு
நேர்மை
எதிர்க்கட்சிகளை மதிக்கும் தன்மை
உறுப்பினர்களின் உண்மை செயல்பாடு
பொதுநலன் கருதி பேசுவது
மக்கள் குறை நீக்கம்
எதிர்க்கட்சிகளை மதிக்கும் தன்மை
உண்மை ஜனநாயகம்
அனைத்திர்ற்கும் மேலாக " எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளியற்றம் (அவர்கள் என்ன மிருகங்களா என்று கேட்பது காதில் விழுகிறது.) என்ற ஒரு அநாகரீக எதிர்க்கட்ச்சிகளை வஞ்சிக்கும் செயல்பாடு இல்லாமை இருந்தது.

இன்று

மேலே சொன்னவைகளை எதிர்ப்பதமாக மாற்றிக்கொள்ளவும்.

அபு ஆசிப்.

Aboobakkar, Can. said...

இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தமிழகத்தில் இரண்டாக உடைந்தபோது ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்லிகொண்ட நாம் இன்று ஒருநாளைக்கு பத்து பேரை வைத்து பத்து 'ஷோ 'ஓட்டும் மலை விழிங்கி அரசியல் வாதிகளிடம் சிக்கி தவிப்பதுகண்டுமனம் வேதனைப்படுகிறது.

sabeer.abushahruk said...

மெய்சிலிர்க்க வைக்கின்றது இந்தப் பதிவில் சித்தரிக்கப்பட்டுள்ள அந்தக் கால அரசியல் நிகழ்வுகளும் அரசியல்வாதிகளின் நற்போக்கும்.

மதிப்பிற்குரிய காயிதே மில்லத் அவர்களின் அரசியல் வாழ்ழ்க்கையைப் பற்றியப் புத்தகங்களை இக்கால அரசியல்வியாதிகளாகிய கற்கால மனிதர்களுக்குத் தந்து படிக்கச் சொல்ல வேண்டும்.

சிறப்பானப் பதிவுக்கு நன்றி காக்கா.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சிறப்பான பதிவு.

காயிதே மில்லத் அவர்களின் நற்குணங்கள் இன்றைய லீக்கர்களிடம் இல்லாமல் பல பிரிவுகளாக கட்சி பெயரளவுக்கு மட்டுமே இருக்கிறது,

Shameed said...

மெய்சிலிர்க்க வைக்கின்றது அந்தகாலத்து செய்திகள்

Ebrahim Ansari said...

இந்நாள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் நாட்டமுடைய நம்மவர் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.

இன்று நண்பர் பகுருதீன் அவர்களுடன் நெறியாளர் தம்பி அபூ இப்ராஹீம் அவர்களை அலைபேசி மூலம் அறிமுகப்படுத்திப் பேசியபோது இந்தத் தொடர் இன்னும் நான்கு ஐந்து வாரங்களுக்கு வரலாமென்று பகுருதீன் அவர்கள் தெரிவித்தார். அவ்வளவும் வரலாற்றுப் பொக்கிஷங்களாகவே இருக்கும். இன்னும் காமராசர் பக்தவத்சலம் இராஜாஜி ஓமந்தூர் ரெட்டியார் ஆகியோரும் வர இருக்கின்றனராம்.

பல மறக்க முடியாத தொடர்களின் வரிசையில் இதுவும் இடம் பெறும் .

அடுத்து நாம் யாரும் எதிர் பாராத ஒரு ஒப்பீட்டுக் கட்டுரைத் தொடரை அவர் எழுதி நம்மை மகிழ்வில் ஆழத்த இருக்கிறார் - இன்ஷா அல்லாஹ்- என்றும் தெரிந்துகொண்டேன். காத்திருப்போம்.

Unknown said...

ஒரு காயிதே மில்லத் போன்ற அரசியல்வாதி ஒருவர் இருந்தால் கூட
இன்று சட்டசபையின் கண்ணியம் என்றால் என்ன என்பது இன்றைய உறுப்பினர்களுக்கு தெரிந்து இருக்கும்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்றால் என்ன விலை ? என்று கேட்கக்
கூடியவர்கள்தான் இன்றைய சட்டமன்றத்தை அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றார்கள் . எதிர்க்கடசிகளை எதிரிக்கட்சிகலாகப்பார்க்கும் நிலைதான் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

//இதனால்தான் கண்ணியத்துகுரிய காயிதே மில்லத் அவர்களைப் பற்றி கலைஞர் ஒருமுறை குறிப்பிட்ட போது “ அரசாள்வோர் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டியவை கனிவு! துணிவு! பணிவு! நான் கனிவைகற்றுக் கொண்டது காயிதே மில்லத்திடம்! துணிவைக் கற்றுக் கொண்டது பெரியாரிடம்! பணிவைக் கற்றுக் கொண்டது அண்ணாவிடம்! “ என்றார். //

கனிவு! துணிவு! பணிவு!
நம் சட்டமன்றத்தில் இன்றைய பொழுதில், மேற்ச்சொன்ன மூன்று பண்புகளும்
எந்த உறுப்பினரிடமும் கற்பனை செய்து பார்க்கமுடியாத பண்புகள்.
நாம் தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் அப்படி. ( வேறு வழி !)

நான், சபீர், ஜாகிர், மற்றும் நம் குடும்ப ( A.N.) உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு சென்றால்தான் உண்டு .

முடிந்தால் பார்க்கலாம்.

Unknown said...

தேனில் விரல் விட்டவின் விரலை சூப்பாமல் இருக்கமாட்டான்.
அதுபோலத்தான் இன்றைய அரசியல் நிலையும்.
இன்றைய அரசியலுக்கு வந்தவன் காசு பார்க்காமல் இருக்கமாட்டான்.

ஏனனில், இவன் காசை போட்டு காசை எடுக்கும் ஒரு வியாபாரமாகத்தான்
இதை இன்றைய அரசியல் வாதி பார்க்கின்றான். இவனிடம் போய் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்றெல்லாம் பேசினால் நம்மையே ஒரு மாதிரியாகத்தான் பார்ப்பார்கள்.

என்று அரசியல் ஒரு வியாபாரமாகத்தலை எடுத்ததோ, குடும்ப அரசியல் தலை எடுத்ததோ, அரசியலின் அரிச்சுவடி கூட தெரியாமல், மக்களின் அன்றாட பிரச்சினையைப்பற்றி தெரியாமல், பள்ளிக்கூடத்திற்கு வெயிலுக்கு கூட ஒதுங்காதவனெல்லாம், பணம் ஒன்று இருந்தால் போதும் , அரசியலுக்கு தகுதியானவன் என்றாகிவிட்ட இந்தக்காலத்தில், இவர்கள் அரசியல் எங்கே ?

எதிர்க்கட்சி தலைவர் மகன் என்ற முறையில் கல்லூரியில் கிடைத்த சீட்டை
கூட தூக்கி எறிந்த காயிதே மில்லத் எங்கே ?

தூய அரசியலை இனி நம் கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாதோ என்ற
கால கட்டத்தில் நாமெல்லாம் இருக்கின்றோம் என்பதை அனைவரும் நினைவில் கொள்க !.

அபு ஆசிப்.

Yasir said...

தெரிந்திராத பல பண்பாளர்களைப் பற்றிய அறிவுத்தகவகள்/சிந்தனையைத் தூண்டும் எழுத்து...தொகுதளித்தமைக்கு நன்றி சகோதர்.முத்துப் பேட்டை P. பகுருதீன் அவர்களே

Ebrahim Ansari said...

சகோதரர் அப்துல் காதர் அவர்களின் அன்பான கருத்து

//தூய அரசியலை இனி நம் கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாதோ என்ற
கால கட்டத்தில் நாமெல்லாம் இருக்கின்றோம் என்பதை அனைவரும் நினைவில் கொள்க !.//

மனம் தளராதீர்கள். இன்று போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம் ஆடுகின்ற விந்தை - உப்புக்கல்லை வைரமென்ன்று சொன்னால் நம்பி ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் புலம்பி என்ன? கலங்கி என்ன தோழா ரெம்ப நாளா? என்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் நீண்ட காலத்துக்கு முன்பே கைவிட்டு சென்ற கேஸ்தான் இது.

ஆனால் மக்களின் பொறுமை ஒரு எல்லை வரைதான். கர்நாடகம் சமீபத்தில் மெய்ப்பித்து இருக்கிறது.

பொறுமை மீறிய மக்கள் புரட்சிகளில் இறங்கிய வரலாறுகள் உள்ளன. கண்துடைப்பாகத் தரப்படும் இலவசங்களை மக்களே மறுக்கும் காலம் ஒன்று வந்தால் கால்வாசி வியாதிகள் குணமாகிவிடும்.

து ஆச செய்வோம்.


அப்துல்மாலிக் said...

எனக்கு ஒன்றுமட்டும் புரியவேயில்லை, ஏதாவது ஒரு தீர்மானம்/சட்டம் ஆளுங்கட்சி கொண்டுவந்தால் அது தேவையில்லை என்று வாதாடி தன் கொள்கையில் வெற்றிபெற முயற்சி செய்யனுமே தவிர வெளிநடப்பு செய்தால் மட்டும் வெற்றிபெற முடியுமா?

எதெற்கெடுத்தாலும் வெளிநடப்பு என்ற வார்த்தையை ஈஸியாக செய்துவிட்டு வந்துடுறாங்க (அது எந்த கட்சியாக இருந்தாலும்), அப்போ மக்களால் தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் மெம்பர்கள் எப்படி தன் தொகுதி மக்களுக்காக போராடி சலுகைகளை வாங்கிகொடுக்கமுடியும்?

Unknown said...

வரலாற்று தகவல் தந்தமைக்கு நன்றி
காயிதே மில்லத் எளிமையை வாழ்க்கையிலும் துணிவை மக்களின் துயர் துடைப்பதிலும் கடமையை கண்ணியமான செயலிலும் வாழ்ந்து காட்டிய மாபெரும் தூய்மையான அரசியலின் அடையாள சின்னம்
பாராளு மன்றத்தில் ஆட்சி மொழி குறித்த தீர்மானத்தில் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் இலக்கண இலக்கியத்தின் சிறப்பையும் எடுத்துக்கூறி ஆட்சி மொழிக்குரிய தகுதி தமிழுக்கு மட்டுமே உண்டு என்ற பச்சை தமிழர்
சீன இந்திய போரின் பொது தனது மகனையே இராணுவத்துக்கு அனுப்ப முன் வந்த தேசபற்றாளர்

ஒரு விவாதத்தின் பொழுது காயிதே மில்லத் முஸ்லிம்களுக்கு மட்டுமே பேசுகிறார் இங்கு(இந்தியாவில்) இருக்க பிடிக்கவில்ல என்றால் பாகிஸ்தானுக்கு போய்விட வேண்டியது தானே என்று கூறிய அன்றைய உள்துறை அமைச்சரும் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்ட பட்டேலிடம்
இந்தியாவில் பிறந்த எவரையும் வெளியே போக சொல்ல எவருக்கும் உரிமை இல்லை என்று முகத்தில் அரைத்தார் போல் உரிமை குரல் எழுப்பிய தேசியவாதி

அன்றைய தினம் அகில இந்திய முஸ்லிம் லீக் """"டான்�� பத்திரிக்கையில் வரவுகளின் பங்கு தொகையாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கென ரூபாய் 17 லட்சம் ஒதுக்கப்பட்டு அதை பெற்றுக்கொள்ளுமாறு காயிதே ஆஜம் ஜின்னாஹ் அவர்களும் நவாப் லியாகத் அலிகானும் கேட்டுக்கொண்டபோது தலைவர் காயிதே மில்லத் கூறிய வார்த்தைகள், அந்த 17 லட்சம் ரூபாயை விட எனது லட்சியம் உயர்வானது, அது எங்களுக்கு தேவையில்லை. நீங்கள் கொடுக்கும் பணத்தைக் கொண்டு நாங்கள் இந்தியாவில் முஸ்லிம் லீகை வளர்க்க விரும்பவில்லை. அப்படியே எங்களுக்கு பணம் தேவைப்பட்டால் இந்திய சகோதரர்களிடம் கேட்டு பெற்றுக்கொள்வேன் என்று கூறிய தன்மானத்தின் அடையாளம் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்
-------------
இம்ரான்.M.யூஸுப்

Unknown said...

//எதெற்கெடுத்தாலும் வெளிநடப்பு என்ற வார்த்தையை ஈஸியாக செய்துவிட்டு வந்துடுறாங்க //

வெளி நடப்பு

என்னைப்பொருத்தவரை வெளிநடப்பு என்பது கோழை அரசியல்வாதிகளின் ஆயுதம். ஆளும் கட்சியை சபை முடியும் வரை நேருக்கு நேர் நின்று வாதங்களை எதிர்கொள்ள திறன் இல்லாமல் , ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். மக்கள் தம்மை தேர்ந்தெடுத்தற்கு, நன்றிக்கடனாக அவர்களுக்கு ஆளும் கட்சியிடம் துணிவாக நின்று குரல் கொடுத்து நல்ல திட்டங்களை தொகுதிக்கு பெற்றுத்தர திராணி இல்லாமல் , நன்றிக்கெட்டத்தனமாக பொறுப்பற்ற முறையில் நடந்து கொல்வதர்க்குப்பெயர்தான் " வெளிநடப்பு"

கொள்கையற்ற அரசியல்வாதிகளின் " இலக்கணம்"
மக்கள் தம்மை தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கு செய்யும் துரோகம்.
ஆளும் கட்சியிடம் அது ஒரு M.L.A. வாக இருந்தாலும் சரி துணிந்து நின்று
பிரட்ச்சினைகளை எதிர் கொள்ளும் திராணி உள்ளவன்தான் மக்களிடம் ஓட்டு
கேட்டு வரவேணும். துணிவற்றவன் அரசியலை விட்டு ஒதுங்கிவிடவேனும்.

இது நம் சட்ட சபையில் நடைபெறுவது எப்போது ?
லஞ்சமற்ற அரசியல் உருவாகும்போது .

லஞ்சமற்ற அரசியல் எப்போது உருவாகும்.?
படைத்த இறைவனின் சட்டம் அமுலாகும் நேரம்..

படைத்த இறைவனின் சட்டம் எப்போது அமுலாகும் ?
அது அவன் நாட்டத்தில்.

அவன் நாடினால் அது நடக்கும்.
ஒரு தூய்மையான அரசியலை எதிர்நோக்கிக்கத்திருப்போம்.

அபு ஆசிப்.

Unknown said...

//மதிப்பிற்குரிய காயிதே மில்லத் அவர்களின் அரசியல் வாழ்ழ்க்கையைப் பற்றியப் புத்தகங்களை இக்கால அரசியல்வியாதிகளாகிய கற்கால மனிதர்களுக்குத் தந்து படிக்கச் சொல்ல வேண்டும்.//

சபீர்,

கற்பனையில் கூட எண்ணிப்பார்க்காதே
இதேபோல் கண்ணியமான அரசியல் வாதிகளின் வாழ்க்கைப்புத்தகங்களைஎல்லாம் இவனுவோ வாங்குவானுவோ.
கண்டிப்பாக நமக்கும் இந்தப்புத்தகத்திர்க்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி
குறைந்த விலையில் கொடுத்தாலும் வாங்கமாட்டானுவோ.

Unknown said...
This comment has been removed by the author.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.