Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று ! இன்று ! நாளை ! - தொடர் - 9 17

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2013 | , , , , ,

எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ஒரு தொடக்கம் இருந்திருக்க வேண்டும். குறிப்பாக அரசியல் நிகழ்வுகள் ஒரே ஒரு தொடக்கத்தில் மட்டுமல்ல தொடர்ந்த சில காரணங்களாலேயே நிகழ்வுறும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து (திமுக) ‘ மூன்றெழுத்தில்  என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்’ என்று பாடி கைதட்டல் பெற்ற எம்ஜியார் நீக்கப் பட்டதன் பின்னணியில் பல காரணங்கள் அரசியல் நோக்கர்களால் பட்டியலிடப்பட்டன. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் என்கிற முப்பெரும் பொறுப்பில் ஒருவரான  பொருளாளர் பதவியில் இருந்த எம்ஜியார் நீக்கப் பட்டது ஏன்? 

முதலாவதாக, அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியை முதல்வராகக் கொண்டுவர எம்ஜியார் ஆற்றிய அரும்பணியை முன்னர் எழுதப்பட்ட அத்தியாயத்தில் குறிப்பிட்டேன். அவ்விதம் எம்ஜியாரால் முதல்வராக்கப் பட்ட கருணாநிதி,  தன்னிடம் எல்லா அரசு நடை முறைகளிலும் ஆலோசித்து செயல்படுவார் என்று எம்ஜியார் எதிர்பார்த்தார். ஆனால் அவ்விதம் நடைபெறவில்லை. வழக்கம்போல் கருணாநிதி ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்காவிட்டாலும் அலட்சியப் படுத்திய நிகழ்வுகள் அங்கும் இங்குமாக நடைபெறத் துவங்கின. குறிப்பாக சில அரசு அதிகாரிகளின் பதவி மற்றும்   இடமாற்றங்களில் எம்ஜியாரின் பரிந்துரைகளுக்கு பால் வார்க்கப் படவில்லை.  இதனால் உள்ளங்களில் சில உரசல்கள் தீப்  பொறிகளாக பல திசைகளிலும் தெறித்து விழுந்தன. தூபம் போடும் பலர் சுற்றிலும் புகைவதை விசிறி  வைத்து வீசிவிடத் தொடங்கினர். இதில் வழக்கம்போல பல பார்ப்பன சக்திகள் அதிகம்.    

இந்த நிலையில் , மதுரையில் கட்சியின் மாநில மாநாடு நடை பெற்றது இந்த மாநில மாநாட்டில் இரண்டு விஷயங்கள் அப்போது குறிப்பிடப்பட்டதை மறக்க முடியாது. ஒன்று,  மாநில மாநாட்டின் செயற்குழுவுக்குப் பிறகு நடைபெற்ற  விருந்து. இதில் பரிமாறப் பட்ட அசைவ ஐட்டங்கள். நடப்பன ஊர்வன பறப்பன என்று பல ஐட்டங்கள். இதைப் பற்றி பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின. கருணாநிதி இதற்கு அடித்த கமெண்ட்: “ சில பத்திரிகைகள் செயற்குழுவில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானங்களைப் பார்த்தன. பல பத்திரிகைகள் நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலையைப் பார்த்தன” என்று கூறினார்.  இரண்டு,   எம்ஜியார்  பேசும்போது மாநில சுயாட்சிக்காக இராணுவத்தைக் கூட சந்திக்கத் தயார் என்று    வீராவேசமாகப் பேசியது.

இந்த மாநாட்டில் கருணாநிதி பேசும் முன்பே எம்ஜியார் பேசிவிட்டார். எம்ஜியார் பேசி முடித்ததும் கருணாநிதி பேசும் போது  கூட்டம் கலைந்து செல்ல ஆரம்பித்தது. புரட்சி நடிகரின் பேச்சை கேட்க காத்திருந்த கூட்டம் முத்தமிழ்வித்தகர் மு. கருணாநிதியின் பேச்சை கேட்கக் காத்திருக்காமல் களைய ஆரம்பித்ததும் முதல்வருக்கு அதிர்ச்சி. உடனே ஒரு ஓரங்க நாடகத்தை அரங்கேற்றினார். தலை சுற்றுகிறது என்று மயங்கி விழுந்தார். உடனே தலைவரின் பேச்சுப் பாதியிலேயே நிறுத்தப் பட்டது. உண்மைக காரணம் கூட்டம் இல்லாததே. கருணாநிதியின்  ரீங்காரம் போய் ஓங்காரம் உண்டாகி ஆங்காரம் ஏற்பட்டது.  அப்போது அவர் மனதில் உருவானதுதான் எம்ஜியாரை விலக்கிவிட வேண்டுமென்ற திட்டம். நீட்டிய இடத்தில் கையெழுத்திட நெடுஞ்செழியன் பக்கத்துணையாக இருந்தது அசட்டு தைரியத்துக்கு கட்டியம் கூறி அரசியல் வித்தகரின்  விநாச காலத்தின் விபரீத புத்திக்கு விதை போட்டது. 

அடுத்து கோவை செயற்குழுக் கூட்டம். மக்களின் வாயில் சாராயத்தை ஊற்ற வேண்டுமென்றார் திருக்குவளையார். இல்லை வேண்டாம் என்றார் நாடோடி மன்னன். ஏற்கனவே  இருந்த இறுக்கத்துக்குள்   இரும்பால் செய்த பிளவுக் கோடாலி  இடையில் புகுந்து இப்படி   அப்படி நெம்பிவிட ஆரம்பித்தது. 

அடுத்தபடியாக, கருணாநிதிக்கு சொந்தமான மேகலா பிக்சர்ஸ் தயாரித்த ‘எங்கள் தங்கம்’  படத்தில் எம்ஜியார் நடித்ததற்கான சம்பள பாக்கி ரூபாய் ஒன்றரை இலட்சத்தை தனது சார்பாக வங்க தேச யுத்த நிதிக்குக் கொடுக்கச் சொல்லி இருந்தார் எம்ஜியார். அதன்படி யுத்த நிதிக்குக் கொடுத்துவிட்டதாக கணக்குக் காட்டி கணக்கை சரி செய்தனர் கருணாநிதியின் மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தார். ஆனால் இதை முறையாக படிவங்கள் மூலம் செலுத்தத் தவறியதால் எம்ஜியாருக்கு அந்தப் பணத்துக்கான வருமானவரியைக் கட்டும்படி வருமானவரித்துறை நோட்டிஸ் விட்டு அதற்குரிய வரியையும் கட்ட வைத்து எம்ஜியாரை எரிச்சல்பட வைத்து. . 

இதைத் தொடர்ந்து தனக்கு ஒரு அமைச்சர் பதவி வேண்டுமென்று கேட்க ஆரம்பித்தார் எம்ஜியார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டு அமைச்சராக இருக்கக் கூடாது என்று சட்டம் பேசினார் கருணாநிதி. திரைப்  படத்தில் பலவகையிலும் ருசிகண்ட எம்ஜியார் பூனை இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தன்னை நம்பி இருக்கும் வகைக்கொரு கதாநாயகிகளை வாழ்விழக்கச் செய்துவிட்டு அமைச்சர் பதவி என்கிற அலங்காரத்தை சூடிக் கொள்ள எம்ஜியார் விரும்பவில்லை. திரை  உலக வாழ்வை இழக்காமலேயே அமைச்சராக்க கருணாநிதி நினைத்தால் நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் அமைச்சரவையில் அங்கம் தந்து தன்னை அருகில் அமர்த்திக் கொள்ள கருணாநிதி விரும்பவில்லை என்று எம்ஜியார் ஆத்திரப் பட்டார்; ஆதங்கப் பட்டார். ‘நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது அங்கு சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது’  என்றும் ‘ நான் ஒரு கை பார்க்கிறேன்! நேரம் வரும் கேட்கிறேன்!  பூனையல்ல புலிதான் எனப் போகப் போகக் காட்டுகிறேன் ‘  பல்லவி பாடி இதயத்தின்  எரிச்சலைத் தீர்த்துக் கொண்டார். 

இதற்கிடையில் எம்ஜியாருக்குப் போட்டியாக எம்ஜியாரைப் போல் நடை உடை பழக்கி கருணாநிதி,  தனது மகன் மு. க. முத்துவை திரைப்  படத்தில் அறிமுகப் படுத்தி பிள்ளையோ பிள்ளை என்று திரைப் பட சந்தைகளில் கூடையில் வைத்துக்  கூவத் தொடங்கினார். ஆனால் எங்கள் வீட்டுப் பிள்ளை என்று ஏழைகள் கொண்டாடிய எம்ஜியாரின் புகழ்ச் சூரியனுக்கு முன்,  மு க முத்து என்ற பனித்துளி கன  நேரத்தில் காணாமல் போனதுதான் மிச்சம். அதிலும் பிள்ளையோ பிள்ளை படத்தை ரசிகர்களின் அரவமே இல்லாமல் அரசியல் செல்வாக்கால் மட்டுமே நூறு நாட்கள் ஓடச்செய்து அதன் நூறாவது நாள் விழாவில் எம்ஜியாரையும் கலந்து கொண்டு பாராட்டச்செய்தார். ஆனால் எம்ஜியார் பேசும்போது “ நடிப்புலகில் அவரவரும் தனக்கென்று ஒரு தனி பாணியை வைத்து நடித்தாலே வெற்றி பெறலாம். பிறரைப் போல் நடிக்க முயற்சிப்பது எடுபட்டு வெற்றி பெறாது; மக்கள் ரசிக்க மாட்டார்கள்” என்கிற பொருள்படப் பேசி குத்திக் காட்டியதால் பிளவுகள் அதிகரித்தன.   

இதுதான் தருணம் என்று கணியூர் குடும்பம் என்று திராவிட வரலாற்றில் குறிப்பிடப்படும் கே. ஏ. மதியழகன் மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ணசாமி ஆகியோர் எம்ஜியாரைத்  தூண்டி விட்டனர். கிருஷ்ணசாமியை ஆசிரியராகக் கொண்ட   “தென்னகம்“ என்கிற பத்திரிக்கை எம்ஜியாருடைய நிகழ்ச்சிகளுக்கும் பேச்சுக்களுக்கும் முன்னுரிமை கொடுத்து கருணாநிதியை இருட்டடிப்பு செய்யத் தொடங்கியது. அதுவரை கருணாநிதிக்கு அடித்த ஜால்ராக்களை அப்பத்திரிகை வசதியாக மறந்தது.  மயிலாப்பூர் மாங்கொல்லை என்ற இடத்தில் நடைபெற்ற மதியழகனும் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் கருணாநிதி கணக்குக் காட்ட வேண்டுமென்று எம்ஜியார் வெளிப்படையாகப் பேசினார். அவ்வளவுதான்! காத்திருந்த பத்திரிகைகள் எம்ஜியாரை கரை படாத கரங்களுக்கு சொந்தக் காரர் என்பதாகவும் கருணாநிதியை ஊழல பேர்வழி என்றும் சித்தரித்து தங்களின் பக்கங்களை நிரப்பிக் கொண்டன. தினமலர் போன்ற பத்திரிகைகளும் மக்கள் குரல் போன்ற அதுவரை அட்ரஸ் தெரியாத பத்திரிகைகளும் நன்றாகக் கல்லாக் கட்டின. 

மக்கள் மன்றத்தின் இடையே தனது திரைப்படங்களில் ஒழுக்க சீலராகவும், மது அருந்தாதவராகவும், புகைப் பிடிக்காதவராகவும், ஏழைக்கு  உதவும் குணம் படைத்தவராகவும், வயோதிகர்களை அதுவும் குறிப்பாக தாய்மார்களை வணங்கும் குணம் படைத்தவராகவும் காட்டிக் காட்டி தனக்கென ஒரு செல்வாக்கை வளர்த்த எம்ஜியார் சொல்வது வேதவாக்கு என்று மக்கள் எண்ணத் தொடங்கினர். ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த  உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை’ என்றும், ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்’  என்றெல்லாம் எம்ஜியார் பாடிய திரைப் பாடல்கள் ஏதோ கதைக்காக என்று எண்ணாமல் உண்மை என்று இன்றும் எண்ணும் ஒரு கூட்டம் தன்னை பின்தொடரும் என்று எம்ஜியார் போட்டக் கணக்கு அவருக்கு கருணாநிதியை எதிர்க்கும் துணிச்சலை தந்தது. மயிலாப்பூரைத் தொடர்ந்து திருக்கழுக் குன்றத்திலும் கூட்டம் போட்டுப் பேசவைத்தது. இரண்டாம் உலகப் போருக்கு செர்பிய இளவரசன் சுட்டுக் கொல்லப் பட்டது உடனடிக்  காரணமானது போல் திமுகவின் இரண்டாம் பிளவுக்குக் காரணமாக அமைந்தது.        

1972 அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி ஆகாசவாணி! செய்திகள்!  வாசிப்பது சரோஜ்  நாராயணசாமி!   என்று செய்தி வாசிப்பவர் மிகவும் மகிழ்ச்சி ததும்பும் குரலில் செய்தி வாசித்தார். தி மு கவிலிருந்து எம்ஜியார் நீக்கிவைக்கப் பட்டிருப்பதான செய்திதான் அது. பட்டி தொட்டியெங்கும் அதிர்ச்சி. பார்ப்பன முகாம்களில் ஆனந்தம். திராவிட இயக்கமொன்று பெரும்பிளவைச் சந்தித்ததில் அதிகாரவர்க்கத்தினருக்கு ஆனந்தம் பரமானந்தம். ஆனால் இந்தச் செய்தியை முடிவெடுக்க கருணாநிதி எத்தனை இரவுகள் சிந்தித்தாரோ தெரியாது ஆனால் என் இதயத்திலிருந்து அண்ணாவின் இதயக்கனியை  அறுத்து எறிந்துவிட்டேன் என்று அறிக்கை வெளியிட்டார். 

கல்லடி சொல்லடி என்பார்களே அவற்றை முதலமைச்சர் என்கிற முறையில் கருணாநிதி சந்தித்தார். பல  இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. வெகுண்டெழுந்த எம்ஜியாரின் ரசிகர் கூட்டம் வேலி தாண்டிய வெள்ளாடுகள் ஆயினர். பேருந்துகள் ஓடவில்லை. பள்ளிகள் பூட்டப்பட்டன. வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.  பல தரப்புக்  கதம்ப மலர்கள் ஒரு மாலையாகி எம்ஜியாரின் கழுத்தில் சூட்டப்பட்டன. செம்மொழி அறிஞர் என்று இன்று  புகழப்படும் கருணாநிதியின் மீது செம்மொழி அறியாத வசவுகள் மற்றும் வாசகங்கள் சூட்டப்பட்டன. சுவரொட்டிகள் இவற்றிற்கு சுருதி கூட்டின. புறநானூற்று தாய்மார்களும் அகநானூற்று அன்னைமார்களும் கருணாநிதிக்கு எதிராக ஒப்பாரிப் பாட்டுப் பாடி பொரிந்து தள்ளினர். 

சில அரசியல் கட்சிகள் அதிலும் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் எம்ஜியாரைத் தாங்கள் இயக்கத்துள் இழுக்கவும் வலை வீசின. தலைநகர் டில்லியில் இருந்த தங்களின் அலுவலகங்களுக்கு அழைத்துப் போயின. அத்தகைய கட்சிகள் நினைத்ததெல்லாம் ஒரு புகழ் வாய்ந்த திரைப்பட நடிகர் நமது கட்சிக்குள் வந்தால் கட்சிக்கு இலாபம் என்ற வகையிலேயே கணக்குப் போட்டன. 

ஆனால் எம்ஜியார் அனைவரின் கணக்கையும் பொய்யாக்கினார். 1972 அக்டோபர் மாதம்  17 ஆம் நாள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பெயரில் தனிக் கட்சி கண்டார். முன்னர் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியின் கருப்பு சிவப்புக்கு  இடையே வெள்ளை நிறம் கொடுத்து அதில் அண்ணாவின் படத்தைப் பொறித்தார். இந்த யோசனையை எம்ஜியாருக்கு வழங்கியவர் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் எம் கல்யாண சுந்தரம் என்று கூறப்படுகிறது. 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவான செய்தி அறிந்த மக்கள் வெள்ளம சென்னை  லாயிட்ஸ் சாலையில் இருந்த எம்ஜியாரின் அலுவலகம் மற்றும் இல்லங்களை நோக்கி ஆதரவு கோஷத்துடன் படை திரண்டனர். கே. ஏ. மதியழகனும், அவரது சகோதரர் கிருஷ்ணசாமியும் எம்ஜியாருக்கு வலது கரமாக செயல்பட்டனர். அத்துடன் நாராயணசாமி முதலியார் என்கிற சட்ட மேதையும் துணை நின்றார்.  . 

1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவராவதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டதை இங்கு குறிப்பிடவேண்டும். அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை ..சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைத்தாரே   தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்பியதில்லை.  ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை  கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு. எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது. அந்தப் பிளவுக்கு கண்ணதாசனும்  சம்பத்தும் காரணமாக இருந்தார்கள்.  அவர்களைப்  பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து அவர்களுக்குக்  கிடைக்கவில்லை.

ஆனால் இதற்கு எதிரிடையாக  எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தவர்கள்.

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள். காலம் காலமாக கட்டியாண்ட எம்ஜியார் ரசிகர் மன்றத்தினர் இதில் முதலிடம் வகித்தார்கள். 

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும். இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள். சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.சென்னையில் இருந்து மதுரை வரை இரயிலில் எம்ஜியார் பயணம் செய்த நிகழ்வு, இரயில நின்ற இடங்களிலெல்லாம் திரண்ட மக்கள் வெள்ளம்   இந்திய இரயில்வே வரலாற்றில் இதற்குமுன் என்றும் காணாதது.  

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று பலர்  எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது. அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது. எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

அதனால் எம்.ஜி.ஆருடைய விலகல்  காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று அரசியல் வித்தகர்கள் நம்பினார்கள். மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார். விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராகவும் ஆர்வமுடையவராகவும்  விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் நடத்திக்  காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு” - என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத பாமர கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை. யாரோடு  உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. 

கண்ணதாசன் கூறுகிறார் “ எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.”

அ தி மு கவின் வரலாற்றுச் சிறப்புடைய திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், ஆகியவை  செப்பேட்டில் செதுக்கப்பட  வேண்டிய ஒன்றாகும். சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும். திமுகவுக்கு மூன்றாவது இடத்தைப் பெற்றுத்தந்த திண்டுக்கல்,  திண்டு எம்ஜியாருக்கு கல் கருணாநிதிக்கு என்று பறை சாற்றி, எதிர்கால அரசியல் எப்படி அமையப் போகிறது என்று கட்டியம் கூறியது. பலர் எம்ஜியாரை  நோக்கிப் படை எடுத்து வந்தனர். அனைவரையும் அரவணைத்தார். . 

இந்த நேரத்தில்  கருணாநிதி அவர்களைப் பற்றி மீண்டும் இன்னும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவதும் அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை  குறிப்பிடுவதும் பொருத்தமாகும் என்று கருதுகிறேன்.

கருணாநிதி கட்சி மற்றும் அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி. பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார். கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. க. சுப்புவை அப்படித்தான் இழுத்தார். இன்னொரு உதாரணம் ஏ.கே. சுப்பையா. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி கருணாநிதிக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம். நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று தலைமைசெயலகத்தில்  இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள். நினைவாற்றல் நிரம்பப் பெற்றவர். ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, எழுதப் படாத சட்டம்  ஒன்றை தனக்குள் வைத்திருந்ததுதான். .

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவுவது பேரளவுக்கல்ல தனது உதவி  முழுதும் பயனாளிக்குப்  பயன்படும்படி  செய்வார்.  அவருக்கு  அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார். சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டபடி கருணாநிதி,  பிறருக்கு உதவும் விஷயத்தில் சுத்த சைபர்.  இரண்டு பேருக்கும்  இடையிலே பேதம் இது  கருணாநிதியினுடைய சுபாவம் அது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த      பலவீனத்தினால்தான், கருணாநிதியின் மிகப் பெரிய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் எம்ஜியார் என்கிற இதயக்கனி உயிரோடு இருந்தவரை மீண்டும் முதல்வர் பதவி அவருக்கு  எட்டாக்கனியாக இருந்தது. கருணாநிதிக்குப் பல கஷ்டங்கள் தோன்றின. 

இன்னும் சுவையான செய்திகளுடன் இன்ஷா அல்லாஹ் தொடரும். 

ஆக்கம்: P. முத்துப் பேட்டை  பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.

17 Responses So Far:

Unknown said...

அரசியலில் கருணாநிதி ஒரு சாணக்கியர் என்றாலும் M.G.R. விஷயத்தில் அவர் நடந்து கொண்ட விதத்தில் சுயநலம் மேலோங்கி நின்றதுதான் காரணம். மேலும் எம்.ஜி.ஆர்.- பற்றி பேரறிஞர் அண்ணா அரசியல் மேடையில் பேசும்போது, தம்பி , நீ மேடையில் பேசவேண்டாம், உன் முகத்தை மட்டும் காட்டு ஓராயிரம் ஓட்டுக்கள் விழும். என்று சொன்னார்.

இப்படி தி.மு.க. வளர ஆரம்பகால முதல் அடிவேராக செயல் பட்ட M.G.R. - ஐ
அண்ணாவின் மறைவுக்குப்பிறகு இப்படி தன் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து, கணக்கு கேட்ட ஒரே காரணத்திற்க்காக அவர் பலம் தெரியாமல் நீக்கி யானை தன் மேலேயே மண்ணை வாரிப்போடுவதுபோல் தன் கட்சியின் முன்னேற்றத்தின் சரிவுக்கு காரணமானார்.

இந்த இடத்தில் சாணக்கியத்தனம் என்பதைவிட அயோக்கியத்தனம் தான் அரங்கேறி இருக்கின்றது என்று சொல்ல வேணும். இதுதான் எம். ஜி. ஆர். உயிரோடு இருந்தவரை கருணாநிதிக்கு எட்டாக்கனியாகவே இருந்தது முதல்வர் பதவி.


அபு ஆசிப்.

adiraimansoor said...

//அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள்//

மிக அற்புதமான அரசியல் ப்லாஷ் பேக் செய்திகள்
என்னை கவர்ந்த எம் ஜி ஆர் என்று நானும் எம் ஜி ஆருக்கு கொடி பிடித்தவந்தான் உண்மையிலேயே எம் ஜி ஆர் ஒரு சகாப்த்தம்தான்.

ஆனாலும் இன்றுவரை கருனானிதி இவ்வளவு சொத்துக்கள் சேர்ப்பதற்கு நமதூர் மக்களும் ஒரு காரணம் ஏனெனில் அன்று முதல் இன்றுவரை அதிராம்பட்டினம் தி.ம்.க். கோட்டை

கருனானிதிக்கு செருப்பு மாலை போட்டதுபோல் நமதூர் சுவர்களில் நான் வரைந்த கார்ட்டூன்கள்
தி.ம்.கவின் ஆதரவாளர்களை என் வீட்டிற்கு படை எடுக்க வைத்த சம்பவங்கலெல்லாம் உங்கள் இருவரின் ஆக்கம் உருவாக்கத்தின் பயனாக இப்பொழுது என் நினைவில் நிழலாடுகின்றன.

ஆனால்

ஆர் எஸ் எஸ்சை தமிழகத்தில் தவழவிட்ட முட்டால்தனமும் எம்.ஜி.ஆரையே சாரும்.

என்ரு பாசிச கொள்கைக்கு தூபம் போட்டானோ அன்றே அ.தி.மு.கவை விட்டு நான் வெளியேறிவிட்டேன். மலரும் நினைவுகள்

adiraimansoor said...

// ரீங்காரம் போய் ஓங்காரம் உண்டாகி ஆங்காரம் ஏற்பட்டது.//
படித்ததில் பிடித்தது
மிக அருமையான வார்த்தை பிறையோகம் வாழ்த்துக்கள்

Unknown said...

எம் ஜி யார் அவர்கள் தி மு க பொருளாலராக இருந்த அந்த நேரத்திலேயே தி மு க வில் கணக்கு கேட்டவர் .இதையும் தி மு க வினர் விட்டு வைக்க வில்லை பெருளாலரே கணக்கு கேட்கிறார் என்ற விமர்சனமும் தி மு க வால் கட்டவிழ்த்து விடப்பட்டது .

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

தாங்கள் இந்த அத்தியாயத்தில் விவரிக்கும் நிகழ்வுகள் தமிழக அரசியலில் நடந்தேறியக் காலகட்டத்தில் நாங்கள் சுறுசுறுப்பான சிறுவர்களாக இருந்தோம். பள்ளிக்கூட வகுப்பறையின் ஜன்னல் வழியாக உள்ளே வைத்திருக்கும் கரும்பலகையில் ஒட்டியிருக்கும் ரிஸல்ட் பார்த்து “ப்பாஸ்” என்று குதூகலித்தக் காலம்.

அப்போதெல்லாம் எம் ஜீ ஆரை பிடிக்காதச் சிறுவர்களே கிடையாது. அவர் வாயசைத்தப் பாடல்கள் எல்லாம் கதைக்காகத்தான் என்று நம்பி நம்பியாரையும் அசோகனையும் மனோகரையும் திட்டித்தீர்த்த வயது. நீங்கள் சொல்லும்போதுதான் அவை கதைக்காக மட்டுமல்ல காரியமாகவும்தான் பாடப்பட்டன என்பது தெளிவாக விளங்குகிறது.

அற்புதமான இத்தொடர் நீண்டு நிறைவடைய வாழ்த்துகள்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

Shameed said...

அற்ப்புதமான பிளாஷ் பேக் .

திண்டு எம்ஜியாருக்கு கல் கருணாநிதிக்கு சூப்பரோ சூப்பர்

Ebrahim Ansari said...

ஆர் எஸ் எஸசை தமிழ் நாட்டில் புக விட்ட எம்ஜியார் அடுத்தடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறார் தம்பி மன்சூர் அவர்களே!

அது மட்டுமல்ல கருணாநிதியை விமர்சித்தது போல் எம்ஜியாரும் தீர விசாரிக்கப் படுவார் விமர்சிக்கப் படுவார். அவரால் ஏற்பட்ட இன்றைய பின் விளைவுகளும் விலாவாரியாக விவரிக்கப் படும். காத்திருங்கள்.

அடுத்து-

விந்தை! வினோதம்! பொருளாளரே கணக்குக் கேட்பது. பணமும் பொருளும் வைத்து இருப்பவர்தான் கணக்குக் காட்ட வேண்டும் என்று பொருள்பட அபூ யூகிப் ( யார் இது புதுசா இருக்கு?) அவர்கள் கேட்டிருப்பது மிகச் சரியான சிந்தனை மற்றும் கேள்வி. ஆனால் அனுதாபம் தேட இதுவே அன்று அரசியல் வழியாக இருந்தது.

கணக்குக் கேட்டேன் வெளியே அனுப்பிவிட்டார்கள் என்று சொல்லி அனுதாபம் பெறுவது சினிமாவை மட்டும் உண்மை என நம்பும் சிந்தனை உடையவர்கள் மத்தியில் சுலபமாக இருந்தது. எடுபட்டது.



m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இயல்பிலேயே ரத்தத்தின் ரத்தமென்றாலே ஒதுங்கியேதான் இருப்பேன், ஏனோ தெரியவில்லை !

அவர் பேச ஆரம்பித்தாலே சடப்புடமா வரும் எனக்கு ! அதுவும் ஏன்னு தெரியலை...

ஒரே ஒரு டவுட்டு ! குடும்பத்திற்காக உழைபப்து தப்பா !?

Unknown said...

//ஒரே ஒரு டவுட்டு ! குடும்பத்திற்காக உழைபப்து தப்பா !?//

என் சகோதரர் அபு இப்ராஹிமுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால். கிட்டத்தட்ட 40 வருடங்களாக நான் தி.மு. க என்ற கட்சியில் ஏனோ லயித்து இருக்கின்றேன். எங்கள் வாப்பாகூட தி.மு. க. தான். ( அதிராம்பட்டினத்தில் இன்றைய தினம் வரை மெஜாரிட்டி தி, மு. க. தான் ).

ஆனால் கேட்டியளே மேலே உள்ள ஒரு கேள்வி ஒன்று.

இதற்க்கு பதில் உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும். இருந்தாலும் சொல்கின்றேன். குடும்பத்திற்காக உழைப்பது தவறில்லை. அந்த உழைப்பில், அவர் எடுத்துக்கொண்ட வேகம், அவர் போட்ட முதலீடு, அல்லது முதல் அல்லாத உடல் உழைப்பு, எடுத்துக்கொண்ட காலம், ( ஒரு 60 வருட காலம் என்றே வைத்துக்கொள்வோம்) அவர் குடும்ப ஆரம்ப வருமானம், இவை அனைத்தையும் கைவைத்துச்சொல்லுங்கள், ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரும் பணக்கார குடும்பம் என்று சொல்லும் அளவுக்கு இவர் ஒன்னும் பில் கேட்ஸ் மூளையைக்கொண்டவருமல்ல, மு, க , ஸ்டாலின் மு. க. அழகிரி, ஒன்றும் பரம்பரை பரம்பரை பணக்காரரின் வாரிசும் அல்ல.

நம்புடைய மூளையை வைத்து கால்குலேசன் பண்ணினாலே தெரியும் கண்டிப்பாக இவ்வளவு செல்வம் தவறான வழியில் அல்லாமல் வேறு நேர்மையான வழியில் வந்தது என்று சொல்வர்தர்க்கு சாத்தியக்கூறுகளே இல்லை. தயாநிதி மாறன், கலாநிதி மாறன், ஒன்றும் பரம்பரை பரம்பரையாக வரும் கோடீஸ்வர வீட்டு வாரிசுகளும் அல்லர்.

வேறு அதிகமாக சொல்வதற்கு பதிலாக தம்பி அபு இப்ராஹிமின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

அபு ஆசிப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அ.கா. காக்கா:

தங்களின் பதிலுரை மு.க.வின் உழைப்புக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தும் தானே !

மு.க.விடமிருக்கும் 'வருமான'த்தைப் பற்றிச் சொல்லவில்லை ! எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ பெரிய கட்சியைக் கட்டிக் காப்பவர் அவரின் அவ்வ்வ்வ்வ்வ்வ்ளோ பெரிய கூட்டுக் குடும்பத்தை எப்ப்ப்ப்ப்ப்டி செழிக்க்க்க்க்க்க வைத்திருக்கிறார் !

இன்னும் எறும்பாக இருக்கிறாரே...!

வருமானம் எப்படி வந்தாலும் பரவாயில்லை என்று குடும்பத்திற்காக உழைக்கிறோம்னு சொல்லும் யாவருக்கும் இது பொருந்தும்.

அரசியல் பேசும் பதிவானதால்தான் அந்தக் கேள்வியைக் கேட்டேன் !

Ebrahim Ansari said...

// குடும்பத்திற்காக உழைப்பது தவறில்லை. அந்த உழைப்பில், அவர் எடுத்துக்கொண்ட வேகம், அவர் போட்ட முதலீடு, அல்லது முதல் அல்லாத உடல் உழைப்பு, எடுத்துக்கொண்ட காலம், ( ஒரு 60 வருட காலம் என்றே வைத்துக்கொள்வோம்) அவர் குடும்ப ஆரம்ப வருமானம், இவை அனைத்தையும் கைவைத்துச்சொல்லுங்கள், ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரும் பணக்கார குடும்பம் என்று சொல்லும் அளவுக்கு இவர் ஒன்னும் பில் கேட்ஸ் மூளையைக்கொண்டவருமல்ல, மு, க , ஸ்டாலின் மு. க. அழகிரி, ஒன்றும் பரம்பரை பரம்பரை பணக்காரரின் வாரிசும் அல்ல.//

அவர் போட்ட முதலீடு திருவாரூரிலிருந்து சேலத்துக்குப் போகும்போது ஒரு தகரத்தால் ஆன பெட்டிதான். ஆனால் மந்திரி குமாரி படத்துக்கு வாங்கிய அட்வான்ஸ் சம்பளத்தில் மணியார்டர் அனுப்பித்தான் மழையில் ஒழுகிக் கொண்டிருந்த வீட்டுக்கு தென்னங்கீற்று வாங்கிப் போடச் சொன்னாராம். நிறையத் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதினார். ஓரளவு சம்பாதித்தார். சில திரைப் படங்களைத் தயாரித்தார். இவற்றுள் பல படங்கள் பெரிய வெற்றியைத் தந்துவிட வில்லை.

இவற்றை எல்லாம் மீறி திரட்டப்பட்ட செல்வத்தின் பின்னணியில் பதவியின் துஷ்பிரயோகம் இல்லை என்று சொல்ல முடியவில்லையே.

எறும்பு போல உழைத்தார். உழைக்கிறார். மாற்றுக் கருத்து இல்லை. பலருக்கு உதாரணம்தான். ஆனால் எம்ஜியார் அல்ல சிவாஜி கேட்ட ஒரு பாடலின் வரிகள்தான் எனக்குக் கேட்கத் தோன்றுகிறது.

நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள் – உங்கள்
ஆசை நெஞ்சைத்
தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்

அழகாகத் தோன்றும் ஒரு
கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும
மரியாதை கண்டேன்
சதிகாரக் கூட்டம் ஒன்று
சபையேறக் கண்டேன்
தவறென்று என்னைச் சொல்லும்
பரிதாபம் கண்டேன்

கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே
கோவிலை இடிப்போன் சாமியைப் போலே
வாழ்கின்றான்
ஊழல் செய்பவன் யோக்கியன் போலே
ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே
காண்கின்றான்

சட்டத்தின் பின்னால் நின்று
சதிராடும் கூட்டம்
தலைமாறி ஆடும் இன்று
அதிகார ஆட்டம்
என்றைக்கும் மேலிடத்தில்
இவர் மீது நோட்டம்
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்

நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம் இவரை விடாது
சொல்கின்றேன்
பல நாள் திருடன்
ஒரு நாள் சிறையில்
பாவம் செய்தவன்
தலைமுறை வரையில்
பார்க்கின்றேன்
= கண்ணதாசன்.


m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இவற்றை எல்லாம் மீறி திரட்டப்பட்ட செல்வத்தின் பின்னணியில் பதவியின் துஷ்பிரயோகம் இல்லை என்று சொல்ல முடியவில்லையே. //

இந்தக் கருத்தில் சந்தேகமில்லை ! இருப்பினும், குடும்பத்திற்காக உழைப்பதினால் நம்மவர்களுக்கும் இவரைப் பிடித்துப் போனதில் ஆச்சர்யமில்லை...

தலைவரு நிச்சயம் ஆறுலிருந்து - ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில் வருவார் பாருங்கள் ! :)

KALAM SHAICK ABDUL KADER said...

கறுப்புச் சிவப்புக் கொடியிலிருந்து கறுப்புச் சிவப்பு வெள்ளைக் கொடி உருவான வரலாறு; அதற்கான காரணம் ஒரு தகராறு என்று கறுப்பு வெள்ளை காலத்திலிருந்து இன்று வண்ணப்பட காலம் வரைக்கும் நீண்டு வளர்ந்த ஓர் ஆக்கம் கண்டு வியந்தேன்; இந்த ஆக்கம் எழுதிய சகோதரர் அவர்களின் தற்பொழுதைய வயதை வைத்து யோசித்தேன்:
தி.க. , தி.மு.க வரலாறும், அ.இ.அ.தி.மு.க உருவாகும் காலம் வரைக்கும் உள்ள எல்லாச் செய்திகளையும் வரிசைப் படுத்தி - நினைவில் நிறுத்தி இவரால் எப்படி எழுத முடிந்தது!

அன்பு நண்ப மன்சூர்!

அதிரை தி,மு,க. கோட்டை என்றாலும், என்றைக்கு ஆர்.எஸ்.எஸ் கூட்டணியை விரும்பினாரோ அன்றைக்கே கருணாநிதியின் சுயநலம் தெரிந்து நிறைய பேர் விலகி விட்டார்கள்! இப்பொழுதும் மோடி ஆட்சியைப் பிடித்து விடுவார் என்ற கணிப்பில் ஒரு பக்கமும், கனிமொழி மற்றும் வழக்குகளைக் காப்பாற்ற காங்கிரஸின் தயவில் ஒரு பக்கமும் என்று தள்ளாடிக் கொண்டிருப்பதும் யாம் அறிவோம். மோடியை ஆதரித்தால் , முஸ்லிம் கட்சிகள்/ இயக்கங்களின் ஆதரவை இழப்பார்.

பொதுவாக எல்லாக் கட்சியினரும் முஸ்லிம்களின் வாக்கு வங்கி மீது மட்டுமே கண்ணாக இருக்கின்றனர் என்பது தான் உண்மையிலும் உண்மை! அதற்காக வேடமிடலாம்; இயககங்கள்/ம்முஸ்லிம் கட்சிகளை நாடலாம்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

காலஞ்சென்று விட்ட முதல்வர்களின் வரலாறு மூலம் சுவையும் சுய நலமும் அறிய முடிகிறது. அவங்க செயலில் அருவருப்பு இருந்தாலும் நீங்கள் சொல்ல இனிக்கிறது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அவங்க செயலில் அருவருப்பு இருந்தாலும் நீங்கள் சொல்ல இனிக்கிறது. //

MHJ >> "I LIKE" 1 click !

Unknown said...

இயல்பிலேயே ரத்தத்தின் ரத்தமென்றாலே ஒதுங்கியேதான் இருப்பேன், ஏனோ தெரியவில்லை !

அவர் பேச ஆரம்பித்தாலே சடப்புடமா வரும் எனக்கு ! அதுவும் ஏன்னு தெரியலை...

ஒரே ஒரு டவுட்டு ! குடும்பத்திற்காக உழைபப்து தப்பா !? நல்ல kaalvi

Anonymous said...

M.G.R.க்கு போட்டியாக தன் மகன் மு.க.முத்துவை M.G.R போல் நடிக்க செய்து/
/புலி போல பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக முடிந்தது.

M.G.R. இருக்கும் வரை முன. கனா கோட்டை பக்கம் தலைவைத்து படுக்க முடியவில்லை. ஒருவேளை M.G.R.உயிரோடு இருந்திருந்தால்
முன.கானா. உடன் பிறப்புக்கு கடைசி கடிதம் எழுதி விட்டு மூட்டை
முடிச்சுகளை கட்டிக் கொண்டு திருவாரூர் வண்டியே பிடிக்க எக்மோர் ஸ்டேஷனுக்கு ஓட்டமும் நடையுமாய் இந்த தள்ளாத வயதில் ஓடும் நிலை ஏற்பட்டிருக்கும்.

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு