Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எதில் கஞ்சத்தனம்..! 46

ZAKIR HUSSAIN | August 17, 2013 | , , ,

நம்மில் சிலர் எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க என்பதின் மின்னலே இதை எழுதத் தோன்றியது.

கந்தையானாலும் கசக்கி கட்டு - இந்த பழமொழியின் அர்த்தம் - கிழிஞ்சி போய் கடாச வேண்டிய துணியானாலும் , படித்துறையில்  501 பார் சோப் போட்டு துணி துவைப்பவனிடம் ஓசி வாங்கி துவைச்சு போட்டுக்கோ!! [ யாருக்கும் அந்த துணியை கொடுத்திடாதே...! அவன் அதை போட்டுக் கொண்டு 'கேன்ஸ்" திரைப்பட விழாவில் ஆஸ்காருக்கு அடித்தளம் போட்டுடுவான்]  இனிமேல் பழமொழி எழுதும்போது ' பிஞ்சி போன துணியை டைலரிடம் கொடுத்து தைத்து / அயன் செய்து போடுங்கப்பா என்று எழுதர மாதிரியாவது எழுதச் சொல்லனும். அதற்கு முன்னாடி துணியை தொவச்சிடுங்கப்பா என்று எதுகை / மோனையில் யாராவது கவிஞரிடம் சொல்லி எழுதச் சொல்ல வேண்டும்.

ஆக ஆரம்பத்திலேயே சுபிட்சமான எந்த பழமொழியையும் படித்து கொடுக்காததால் இப்போதும் சிலர் எங்கள் வீட்டில் நாய்க்கு கூட கண் தெரியவில்லை, பூனைக்கு ஹார்ட்டில் ஓட்டை என்று புலம்பும் சமுதாயத்தையே உருவாக்கியிருக்கிறது.

இதில் வெளிநாட்டில் வேலைக்கு சேர்ந்து வாழும் வாழ்க்கை இருக்கிறதே, சிலரை பார்க்கும் போது அவர்களுக்கு ' மெமரி சிப்" இருக்கும் இடம் தெரிந்தால் கழட்டி மாட்டனும் போல் தோனும்.

நம் ஊர் பகுதியை சார்ந்தவர் இறந்து போன செய்தி கேட்டு போய் பார்க்க போயிருந்தேன் [இது 10 வருடத்துக்கு முன் நடந்தது]. அவர் படுத்து கிடந்த இடம் அட்டைபெட்டியை மடக்கி பாய்போல் உபயோகப் படுத்தியிருந்தார், கவலைப்பட்டேன். பிறகு கேள்விப்பட்டேன் ஊரில் பெரிய வீடு எல்லாம் இருக்கிறதாம். மற்றவர்கள் வாழ ஏன் இப்படி கஞ்சத்தனம் ?

ஒரு மனுசன் எத்தனை வருசம்தான் மத்தவங்களுக்காக வாழ்வது???..

சுகாதார விசயத்துக்கு முதலில் வருவோம். சிலருக்கு ஊரில் நல்ல வீடு இருக்கும், வீட்டில் உள்ளவர்கள் ஒரு சீரியல் விடாமல் பார்த்து முனைவர் பட்டம் வாங்கி பட்டிமன்றத்தில் திறமையாக பேசும் அளவுக்கு பெண்கள் எல்லாம் வீட்டில் இருப்பார்கள்.

ஆனால் இவன் பல்லைப் பார்த்தால் ரொம்ப நாள் மராமத்து பார்க்காத முதலாம் குலோத்துங்க சோழனின் பாழடைந்த குதிரைலாயம் மாதிரி இடிந்து, மஞ்சள் பூத்து போயிருக்கும். காரணம் பல்தேய்க்கும் பிரஸ் வாங்கினால் இவர்களின் சொத்து தேய்ந்து விடும் என்ற சயன நிலையில் இருப்பது தான்.


டூத் பிரஸ் வாங்குவதிலும் தன் பல்லுக்கு எது தேவை என்பதில் கவனம் செலுத்துவதில்லை. எது சீப் என்பதில் தான் கவனம். யாராவது புதிதாக வாங்கி கொடுத்தால் தனக்கு தேவை 'Hard’  என்று தெரிந்தும்  “soft” பிரஸ்ஸை வைத்து பல வருடம் குப்பை கொட்ட நினைப்பது.

இந்த பட்ஜெட் ஏர்லைன் வந்ததில் நிறைய பேர் மிச்சப்படுத்துகிறேன் என்று கூட வருபவர்களை அடிமைகள் போல் நடக்க விடுகிறார்கள்.

சமீபத்தில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஊர் ராமநாதபுரம் மாவட்டம், அவர் எடுத்த டிக்கட்டுக்கு [ஏர் ஆசியா] அது சென்னைக்குத்தான் போகும். ஏன் நீங்கள் திருச்சிக்கு எடுக்க கூடாது என்று தெரியாமல் கேட்டு விட்டேன்.

அதற்கு அந்த ஆள் கொடுத்த விளக்கம் இருக்கிறதே, கருட புராணத்தில் உள்ள அந்த கூபம், அக்னி குண்டம் போன்ற தண்டனைகள் ரொம்ப ரொம்ப "லைட்' என்பேன். இதில் என்ன ஹைலைட் தெரியுமா?. அவருக்கும் அவர் மனைவிக்கும் 35 வயதுக்குள் இருக்கும். இருவரும் நிறைய லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு சென்னையில் இறங்கி, ஆட்டோ எடுத்து , சிங்கபெருமாள் கோயில் அருகில் பஸ் ஏறி  லொங்கு லொங்குனு ராமநாதபுரம் போய் சேர குறைந்தது 10 மணி நேரம் ஆகலாம் [அதுவும் இரவு நேரம்]. இதில் அவர் மிச்சப்படுத்துவது எவ்வளவு தெரியுமா வெறும்  1700 ரூபாய்தான். பெண்களை கூட அழைத்து செல்லும் கணவான்களே.இது மிச்சமா செலவா உங்களுடைய அலுப்பு, அசெளகரியம் எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறதே. ஏன் உங்களுக்கு அந்த கணக்கு மட்டும் தெரியாமல் போனது.

இதில் அந்த ஆள் எடுத்த டிக்கட்டில் 'ச்'சாப்பாடும் சேர்த்து.. 'ச்'சாப்பாடும் சேர்த்து என்று ..அந்த சாப்பாட்டுக்கு 'ச்" போட்டு ரொம்ப கேவலப் படுத்திவிட்டார்.

கோயிலில் உண்டக்கட்டி , தர்ஹாவில் நார்சா சோறு வாங்கி சாப்பிடுவதை ஏதோ ஒலிம்பிக் சாதனை மாதிரி பீத்துபவர்களை ஸ்கேன் செய்யும் கருவி கண்டு பிடித்தால் நல்லது [ தூர இருக்கலாம்ல ]

இன்னும் சில பேர் சிம்பிளாக இருக்கிறேன் என்று பெயர் வாங்குவதற்காகவே சில "திருவாளியத்தன்" வேலை எல்லாம் செய்வார்கள். எனக்கு தெரிந்து ஒரு ஆள், நல்ல வசதியான மனுசன் , சென்னையிலும், அவரது ஊர் பகுதியிலும் பல கோடி சொத்து வைத்திருப்பவர், ஆனால் அவரது செருப்பு அவரது கால் அச்சு பதிந்து ரோட்டை அவரது கால் தொட சில மைக்ரோ மில்லிமீட்டர் அளவு அடர்த்தி  குறைந்திருக்கும். ஆனால் தான் ஒரு மிகப் பெரிய பொருளாதார மேதை மாதிரியும் , தன்னுடைய இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் வானத்தை பொத்துக்கொண்டு லாபமாய் கொட்டுகிறது என சொல்லிக் காண்பிப்பதில் வல்லவர்.  சமயங்களில் நான் நினைப்பது உண்டு, தனக்கு இருப்பதோ இரண்டு கால்கள்,இதைச் சரியாக பாதுகாக்க காரணம் சொல்லும் இவர் இவ்வளவு சொத்தையும் பாதுகாப்பாரா??

வாழ்க்கை முழுக்க வாழ வேண்டும் என்ற ஏற்பாட்டில் இருந்து, வாழ ஆரம்பிக்கும்போது வாழ்வின் விழிம்பில் நிற்பது தெரியாமலே போய் விடுகிறது.

எப்போது நமக்காக வாழப்போகிறோம்!

இன்னும் சில குடும்பத்து பெண்கள் திருமண விருந்துகளில் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சாப்பாடு எடுத்து போகிறேன் என்று நடந்து கொள்வது மிகவும் வருந்தக்கூடிய விசயம். அவர்கள் வீட்டின் ஆண்கள் சம்பாதித்த கெளரவத்தை ஒரு ப்ளேட் பிரியாணிக்கும், சில இறைச்சி துண்டுகளுக்கும் விற்று விடுவது வருந்தாமல் என்னதான் செய்வது.

கூட்ட நெரிசலில் இப்படி சாப்பாட்டுக்கு பேயாக அலைவதை யாரும் கண்டு கொள்வதில்லை என்னும்  இவர்களின் நடத்தை கஞ்சத்தனத்தின் டாப் 10 வரிசையில் முதலிடம் பெறும்.

சிலர் சோப் போடுவது இயற்கையானது அல்ல, அது கெமிக்கல், பக்க விளைவுகள் / தூர விளைவுகளைத் தரும் என்று அடம் பிடிப்பதால் அநியாயத்துக்கு தானும் "நேத்திக்கட கிடாய்" மாதிரி நாறிப்போய் தான் இருக்கும் இடத்தையும் " மொச்ச" நாத்தம் நாற வைத்து சாகடிப்பார்கள். இங்கு சிலர் தான் போட்டிருக்கும் ட்ராக் சூட் / முழு அங்கி ஜிப்பா [இஸ்லாத்தை கடை பிடிக்கிறேன் என்று டிராமா வேறு] சிலர் அலையும் போது பக்கத்தில் நடக்கும்போது எப்படியாகப்பட்ட சாதுவும் கிரிமினல் ஆகி விடுவான்.

இந்த குரூப்தான் பல்விளக்கும் பிரஸ் பன்றி முடியில் செய்ததது என்று கொஞ்ச நாள் லந்து கொடுத்த குரூப். இப்போது அப்படி ஆதாரம் இல்லை என்றவுடன் கப்சிப்.

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு சிலர் 'டீ குடிங்க" என்று சொல்வதிலேயே அவர்களின் மனதின் விசாலம் தெரியும். எனக்கு தெரிந்த ஒருவர் [சொந்தக்கார பெண்மணி] டீ குடியேன் என்று சொல்வதிலேயே அவருடைய சோம்பேரித்தனம் / “இவன் டீ வேணாம்னு சொல்லனும்” எனும் எண்ணம் எல்லாம் பம்பாய் ஸ்டாக் எக்ஸேஞ்சில் பங்குவிலை ஒடும் டிஜிட்டல் டிஸ்ப்லே மாதிரி நம் கண்முன்னே தெரியும். பிறகென்ன பரவாயில்லை இப்போதுதான் டீ குடித்தேன் என்று சொல்லி விடுவதுதான்.

இந்த ஆக்கத்தின் மூலம் என் வேண்டுகோளை நமதூர்க் காரர்களுக்கு வைக்கிறேன்.


கல்யாணத்துக்கு செய்யும் செலவில் நம் கண்முன்னே கையேந்தி யாசகம் கேட்பவர்களுக்கு முதலில் சாப்பாட்டை கொடுத்து விடுங்கள். அயர்ன் கலையாத சட்டையுடன் , உயர்தர சென்ட் போட்டு வருபவர்கள் கொஞ்சம் பொறுமை கடை பிடிக்கட்டும்.  1986-ல் என் கல்யாணம் நடைபெற்ற போது  எங்கள் பூர்வீக வீட்டை இடித்து புதிதாக கட்டிக் கொண்டிருந்தோம் , கான்க்ரீட் போட்டு சிமென்ட் பூசாமல் அப்போது இருந்த வீட்டில்  காலை 11.30 மணிக்கே சாப்பாட்டுகாக காத்திருந்த யாசகம் கேட்கும் அந்த ஆட்களனைவருக்கும் அந்த வீட்டில் பந்தி பரிமாறப்பட்டு உணவளிக்கப்பட்டது. அதற்கு காரணம் இருந்தது என் வாப்பா சொன்ன வார்த்தைதான் ' வாழ்க்கையின் ஆரம்பமே தர்மத்தில் இருக்கட்டுமே" எனும் சொல்தான்.

கல்யாண விருந்து பட்ஜட்டில் ஏழைகள் 100 - 150   பேருக்கு உணவளிப்பதால் நாம் ஏழையாகிவிட மாட்டோம். அந்த ஏழைகளின் வயிற்றுப்பசி தீர்வதால் அவர்களின் திருப்தி இறைவனிடத்தில் இருந்து உங்களுக்கு பல விதமான நன்மைகளை தரும் [ இன்ஷா அல்லாஹ் ]

ZAKIR HUSSAIN

46 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அதிரை POST
அவரசம்: 0 நெகட்டிவ் இரத்தம் தேவை!
http://adiraipost.blogspot.com

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். வரிக்குவரி விலா நோக சிரிக்கவைத்தாலும் எல்லாம் சிந்திக்கவைக்கும் மருத்துவ , சுகாதர யோசனை!வாழ்த்துக்களும் ,பாராட்டும். (இதுமாதிரி எழுத ஏதாவது அவார்ட் அ. நி வைத்திருக்கீங்களா?)சூப்பர்,சிக்சர் அடிச்ச மருவராக்காவுக்கு ஒரு ஜே!

crown said...

பிஞ்சி போன துணியை டைலரிடம் கொடுத்து தைத்து / அயன் செய்து போடுங்கப்பா என்று எழுதர மாதிரியாவது எழுதச் சொல்லனும். அதற்கு முன்னாடி துணியை தொவச்சிடுங்கப்பா என்று எதுகை / மோனையில் யாராவது கவிஞரிடம் சொல்லி எழுதச் சொல்ல வேண்டும்.
------------------------------------------------
பீய்ந்த துணியானாலும் கழுவி காய்ந்தபின் போடு!(எங்கே கவிகாக்கா சும்மா எடுத்துவிடுங்க)!

crown said...

கோயிலில் உண்டக்கட்டி , தர்ஹாவில் நார்சா சோறு வாங்கி சாப்பிடுவதை ஏதோ ஒலிம்பிக் சாதனை மாதிரி பீத்துபவர்களை ஸ்கேன் செய்யும் கருவி கண்டு பிடித்தால் நல்லது [ தூர இருக்கலாம்ல ]
------------------------------------------------
விசில் அடிக்க தெரிந்தவங்க விசில் அடிங்க.எனக்கு விசில் அடிக்கத்தெரியாது.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

//வாழ்க்கையின் ஆரம்பமே தர்மத்தில் இருக்கட்டுமே" எனும் சொல்தான்.//

ஜாகிர், உங்கள் வாப்பா சொன்னது இந்த உலகத்தில் வாழ்பவர்கள் பின்பற்றுவதற்கு மட்டுமல்ல. இறப்புக்குப்பின் உள்ள மறு வாழ்விலும் இது தொடர்ந்து இந்த தர்மத்திற்கு காரணமானவர்கள் பின்னே தொடர்ந்து வருமே அதை யோசனை செய்துதான்.

" golden words to be followed "

அபு ஆசிப்.

crown said...

கல்யாண விருந்து பட்ஜட்டில் ஏழைகள் 100 - 150 பேருக்கு உணவளிப்பதால் நாம் ஏழையாகிவிட மாட்டோம். அந்த ஏழைகளின் வயிற்றுப்பசி தீர்வதால் அவர்களின் திருப்தி இறைவனிடத்தில் இருந்து உங்களுக்கு பல விதமான நன்மைகளை தரும் [ இன்ஷா அல்லாஹ் ]

--------------------------------------------------------------
இது ஹைலைட்" இதை எழுதிய உங்களுக்கு அல்லாஹ் மேலும் பரகத்தையும்,ரஹ்மத்தையும், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்தையும் தருவானாக ஆமீன்.

crown said...

எனக்கு இந்த(car) காரைப்பிடிச்சிருக்கு, அந்த(car) காரைப்பிடிச்சிருக்குன்னு சும்மா சிரிச்சிக்கிட்டே இருக்கிறீயே! உன் பல் காரை'ப்பிடிச்சிருக்கே அதை யோசிச்சாயா இதைப்பார்த்து ஆறு பேர்?( எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நாலுபேர்னு சொல்லுறத பார்த்து சளிச்சு போச்சு அதான் சும்மா சேஞ்சுக்கு)சிரிக்க மாட்டாங்களா?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஜாஹிர் காக்காவின் வழக்கமான அழகிய படிப்பினை நிறைந்த கட்டுரை. ப்ரச்சினை என்னான்டாக்கா, நம் மக்களுக்கு எது சிக்கனம்? எது கெஞ்சத்தனம்? என சரிவர இரண்டிற்கும் உள்ள‌ வித்தியாசம் தெரியாமல் இருப்பது. எல்லாக்கஞ்சத்தனத்தையும் சிக்கனம், சேமிப்பு என்று நினைத்துக்கொண்டு காலத்தை கடத்திக்கொண்டிருக்கிறோம்/கொண்டிருக்கிறார்கள்.

நல்ல வேளை ஒவ்வொரு மாதமும் பல் துலக்கும் பிரஸை மாற்றும் பழக்கம் இருந்து வந்தாலும் கொஞ்சம் அசட்டையால் இரண்டு வாரத்திற்கு முன் வாங்கிய புது பிரஸை மாற்றாமல் இருந்தேன். உங்க கட்டுரையை படித்ததும் இன்னக்கே மாத்திர்ரேன் பல்லும் கொஞ்சம் வலிக்கிது.....

Unknown said...

கஞ்சத்தனம் சிக்கனம் இரண்டிற்குமுள்ள வித்தியாசமென்ன ?

கஞ்சத்தனம் : இதன் பொருள் ஒரு பொருளை அதன் நியாயமான விலை என்ன என்று நமக்கு தெரிந்தும் ( விற்பவன் கொஞ்சமாவது லாபம் வைக்கத்தான் செய்வான் இது உலக நியதி ) அவன் எவ்வளவு லாபம் வைத்திருப்பான் என்று நம் அறிவுக்கு பட்டு இதற்க்கு மேல் நாம் குறைத்துக்கேட்டால் அவன் வியாபாரம் செய்வதில் அர்த்தமே இல்லை என்று தெரிந்தும் அதை அடி மாட்டு விலைக்கு கேட்டு விர்ப்பவனை வெறுப்பேத்தி அவன் மோசமாக மனதில் ( நம்மை சாவு கிராக்கி ) நினைக்கும் வரையோ அல்லது வெளிப்படையாக சொல்லும் வரையோ நடந்து கொண்டு நாலு பேர் பார்க்க அசிங்கப்படுவது.

மேலும் இதுபோலும் வேறு வகைகளிலும் பணத்தை சராசரி மனிதன் இவ்வுலகில் வாழவேண்டும் என்பதற்குக்கூட ( அதாவது அடிப்படை தேவைகளுக்குகூட ) யோசனைக்கு பிறகே , இறுதியாக நாலு பேர் சொல்லுக்கு இடமாகி விடக்கூடாதே என்று வேண்டா வெறுப்பாக செலவு செய்வது.

இப்படியாக சிறுக சிறுக மிஞ்சும் தொகையையோ அல்லது பொருளையோ , தமக்கே மீண்டும் செலவுக்கு வைத்துக்கொள்ள வேணும் என்று மனதில் எழும் எண்ணமே கஞ்சத்தனம்.

சிக்கனம் என்பது, ஊதாரித்தனத்தின் எதிர்ச்சொல். அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.

அதாவது. ஒரு பொருளை வாங்கும்போதோ, அல்லது வேறு யாருக்கு எதுவும் கொடுக்கும் போதோ காரண காரியத்தை நியாயமான முறையில் எடைபோடுவது. .

ஒருவனிடம் ஒரு பொருளை வாங்கும்போது நம் அறிவு சொல்கின்றது. இது நியாயமானது. இதற்குமேல் கொடுப்பது முட்டாள்தனம் என்று சொல்லி அந்த நியாய மான விலையில் பொருளை வாங்கி , அதிகம் கொடுத்து ஏமாறாமல் இருப்பதோடு, இரண்டு பொருள்தான் நமக்கு தேவை என்று இருக்கும்போது,
தேவையற்ற முறையில் காசு இருக்கின்றது என்பதற்காக தேவைக்கு அதிகம் வாங்காமல். காசை சிக்கனப்படுத்தி , அடிப்படை தேவையை மட்டும் பூர்த்தி செய்து , நாம் அதிகமாக கொடுத்து வாங்க இருந்த பொருளுக்குண்டான காசை வேறு அவசிய தேவைகளில் பயன்படுத்துவது. சிக்கனமாகும்.

அபு ஆசிப்.

KALAM SHAICK ABDUL KADER said...

\\வாழ்க்கை முழுக்க வாழ வேண்டும் என்ற ஏற்பாட்டில் இருந்து, வாழ ஆரம்பிக்கும்போது வாழ்வின் விளிம்பில் நிற்பது தெரியாமலே போய் விடுகிறது.|\

ஆஹா. சூப்பர்!
தேடல் என்னும் தேடலைத் தேடித் தேடியே தேய்ந்துபோன மனிதனின் உச்சகட்ட விரக்தி!

KALAM SHAICK ABDUL KADER said...

தொழிலிலும், வணிகத்திலும் ஓர் உத்தி உண்டு. ஆம். எந்த விடயத்திற்கு எப்படிச் செலவு செய்வது? இதில் நீங்கள் கொடுத்திருக்கும் இந்த ஆக்கம் மிகவும் பயனுள்ளது; இதனைச் சுருக்கமாகச் சொல்கிறேன்:

“மிகவும் அவசியமான- அவசரமான தேவை; அதனால் நம் தொழிலும் வணிகமும் உயர்வடையும் என்றிருந்தால், அதில் நாம் பணம் செலவு செய்வதில் தயங்க வேண்டா”

காட்டு: தொழிலை அடைய நேர்காணலுக்குச் செல்லுகின்றீர்கள் என்றால், அத்தருணம், பேருந்தில் சென்று காசை மிச்சப்படுத்தலாம் என்று எண்ண வேண்டா. வாடகை உந்தில் சென்று விரைவாக குறிப்பிட்ட இடத்தை அடைந்து முற்கூட்டியே அமைதியாக அந்த நேர்காணலைச் சந்திக்க வேண்டும்.

இதேபோல், வணிகத்திலும் ஓர் அவசரமான விடயம் தீர்க்கப்பட வேண்டும் என்றால் அங்கும் காசை மிச்சப்படுத்த வேண்டா.

“ஒரு கடிதத்தில் எழுதுவதை விட நேரில் சென்று வினவிவிட்டு வா” இது எனக்குச் சொல்லப்பட்ட ஓர் அறிவரை. யான் வணிகம் கற்றுக் கொண்ட வேளையில்..

sabeer.abushahruk said...

ஒரு சீரியஸான விஷயத்தை சிரிக்கச் சிரிக்கச் சொல்வதில் நீ எப்போதுமே கில்லாடி. அதிலும் இந்த ஆக்கம் ஆரம்பம் முதல் ஆர்ப்பாட்டமான அமர்க்களமான காமெடியில் துவங்கி இடைவேளைக்குப் பிறகும் தொய்வில்லாமல் சிரிக்க வைத்து ஊடாலே 'வாழைப்பழத்தில் ஊசி'யென மெஸேஜையும் மண்டைக்குள் செலுத்தி விடுகிறது.

கஞ்சத்தனத்திற்கும் சிக்கனத்திற்கும் கடுகளவே வித்தியாசம். அந்த எல்லைக்கோடு, வசதிவாய்ப்புகளைப் பொறுத்து மாறுபடும். 2 கோடி ரூபாய் சொத்துள்ளவன் பெயிண்ட் கொட்டிப்போன பழயை அம்பாசடரை மாற்றாமல் சிக்கனம் செய்தால் அது கஞ்சத்தனம். சொற்ப மாதச் சம்பளக்காரன் சிறுகச் சிறுக சேமித்து ஒரு ட்டிவியெஸ் ஃபிஃப்டி வாங்கினால் அது சிக்கனம்.

படிக்கட்டுகளுக்குப் பிறகு பழைய ஜாகிரை முழுக்க முழுக்க வெளிக்கொணர்ந்த ஆக்கம்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Zakhir Hussain,

Your style of expressing some people's attitudes and behaviour is funny and thoughtful.

The stingy attitude is undesirable in Islam too.
If a person is stingy(kanjoos), how can he/she be generous to provide zakat.?

You didn't mention the lifestyle of sharing bunker beds(average 8 people living in a single room) in foreign life living even though the brothers are able to spend little extra money to live in better conditions.

Being stingy is stupidity which will ruin the self and surroundings.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எப்படியாப்பட்ட சீரியஸான பார்டிகளையும் கலகலக்க வைக்கும் ! கைப் பக்குவம் !

ஒரே ஒரு பழமொழிக்கு மறந்து போன 501 பார் சோப்பு (விளம்ர கான்டராக் ஏது இருக்கோ ?) வம்புக்கு இழுத்து... சிரிப்பை அடக்க தினறினேன் !

பல் துலக்குவது பற்றி ! சிலருக்கு பிரஸ்ஸுன்னா அலர்ஜி இன்னும் சிலருக்கோ பல்பொடின்னாலே அலர்ஜி !

//ரொம்ப நாள் மராமத்து பார்க்காத முதலாம் குலோத்துங்க சோழனின் பாழடைந்த குதிரைலாயம் மாதிரி இடிந்து, மஞ்சள் பூத்து போயிருக்கும். காரணம் பல்தேய்க்கும் பிரஸ் வாங்கினால் இவர்களின் சொத்து தேய்ந்து விடும் என்ற சயன நிலையில் இருப்பது தான்.//

அருமை !

Shameed said...

//சிலர் சோப் போடுவது இயற்கையானது அல்ல, அது கெமிக்கல், பக்க விளைவுகள் / தூர விளைவுகளைத் தரும் என்று அடம் பிடிப்பதால்அநியாயத்துக்கு தானும் "நேத்திக்கட கிடாய்" மாதிரி நாறிப்போய் தான் இருக்கும் இடத்தையும் " மொச்ச" நாத்தம் நாற வைத்து சாகடிப்பார்கள். //

ஒரு பெரிய மனுசனே அநியாயத்துக்கு இப்படி போட்டு இப்படி சாகடிக்க கூடாது

Shameed said...

டூத் பிரஸ் போட்டோ இந்த அளவுக்கு கிளோஸ் அப்பில் இப்போதான் பார்க்கின்றேன்.போட்டோ எடுக்க வேண்டும் என்பதற்க்காகவே பிரஸ்ஸை கடிச்சி மெண்டு துப்புன மாதிரி இருக்கு

Shameed said...

கட்டுரயின் ஆணிவேர்களில் சில

//அவர்களுக்கு ' மெமரி சிப்" இருக்கும் இடம் தெரிந்தால் கழட்டி மாட்டனும் போல் தோனும்.//

//சீரியல் விடாமல் பார்த்து முனைவர் பட்டம் வாங்கி பட்டிமன்றத்தில் திறமையாக பேசும் அளவுக்கு பெண்கள் எல்லாம் வீட்டில் இருப்பார்கள்.//

//பல்தேய்க்கும் பிரஸ் வாங்கினால் இவர்களின் சொத்து தேய்ந்து விடும் என்ற சயன நிலையில் இருப்பது தான்.//

//இன்னும் சில பேர் சிம்பிளாக இருக்கிறேன் என்று பெயர் வாங்குவதற்காகவே சில "திருவாளியத்தன்" வேலை எல்லாம் செய்வார்கள்.//

//கால் அச்சு பதிந்து ரோட்டை அவரது கால் தொட சில மைக்ரோ மில்லிமீட்டர் அளவு அடர்த்தி குறைந்திருக்கும்.//

//ஆண்கள் சம்பாதித்த கெளரவத்தை ஒரு ப்ளேட் பிரியாணிக்கும், சில இறைச்சி துண்டுகளுக்கும் விற்று விடுவது//

//சிலர் சோப் போடுவது இயற்கையானது அல்ல, அது கெமிக்கல், பக்க விளைவுகள் / தூர விளைவுகளைத் தரும் என்று அடம் பிடிப்பதால் அநியாயத்துக்கு தானும் "நேத்திக்கட கிடாய்" மாதிரி நாறிப்போய் தான் இருக்கும் இடத்தையும் " மொச்ச" நாத்தம் நாற வைத்து சாகடிப்பார்கள். //


//சிலர் அலையும் போது பக்கத்தில் நடக்கும்போது எப்படியாகப்பட்ட சாதுவும் கிரிமினல் ஆகி விடுவான்.//

//வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு சிலர் 'டீ குடிங்க" என்று சொல்வதிலேயே அவர்களின் மனதின் விசாலம் தெரியும்.//

//என் வாப்பா சொன்ன வார்த்தைதான் ' வாழ்க்கையின் ஆரம்பமே தர்மத்தில் இருக்கட்டுமே" எனும் சொல்தான்.//

ZAEISA said...

சகோ.,ஜாகிரின் தொடர் வரணும் இல்லையென்றல்.............இப்படிக்கு,லஸ் கரே தொய்பா {இல்லாத ஒன்றுதானே} என்று எழுதலாமென்றிருந்தேன்.வந்து விட்டது.ஆயுசு நூறு[.இதுவும் புளிச்சுப்போன பழமொழிதான்]ஆகவே,தமது தொடர்ஒன்று தொடர வேண்டுகிறேன்.

sabeer.abushahruk said...

ஜாயிரு,

நீ காமெர்ஸ் படிச்சவன். இப்டி எல்லோரையும் தூண்டிவிட்டு பழசையெல்லாம் கடாசச் சொல்லி, அவங்க உன்பேச்சைக் கேட்டு கடாசும்போது அதை அப்படியே லவட்டி பாதி விலைக்கு விற்கிற கம்ப்பெனியோடு ஏதும் ரகசிய ஒப்பந்தம் வச்சிருக்கியோ என்கிற சந்தேகம் கம்ப்பெனிக்கு எழுகிறதே என்று zaeisa அப்பா கேட்கச்சொன்னார்கள்.

sabeer.abushahruk said...

மேலும் ரெண்டுல எது உன்னோட ப்ரெஷ் என்றும் கேட்கச் சொன்னார்கள்.

ஆக்கத்துக்காக, நாய் வளர்க்கிற பக்கத்த்து வீட்டு சைனாகாரிட ப்ரெஷ்ஷை ஃபோட்டோ எடுத்ததா உடாதே.

காதரு, சிலபேர் மண்டைல கொஞ்சமா முடி வச்சிருப்பது சிக்கனமா கஞ்சத்தனமா?

sabeer.abushahruk said...

//பீய்ந்த துணியானாலும்
கழுவி காய்ந்தபின் போ//

கிரவுன், என்னய சும்மா இருக்க விடவே மாட்டியலா?

பிய்ந்த துணியானாலும்
கழுவி காய்ந்தபின் போடு

நைந்த நைட்டியானாலும்
நைஸ் நூலில் தைத்துப் போடு

அழுக்குக் கைலியானாலும்
உள்மடிப்பில் ஒளிச்சு வச்சி உடுத்து

மஞ்சப்புடிச்ச கஞ்சிப்பிராக்கா
மேட்ச் கலர்ல சட்டைப்போட்டு கவர் பண்ணு

தேஞ்ச பிரஷ்ஷைகூட
கேட்பார்சொல் கேட்டு வீசாமல்
சீப்பு க்ளீன் பண்ண யூஸ் பண்ணு

ஜட்டியில ஓட்டையா யாருக்குத் தெரியப்போவுது
கலர் வேட்டி உடுத்திக்கோ

பிஞ்ச செருப்பைக்கூட
ஊக்குக் குத்தி மேனேஜ் பண்ணு

என்ன ஒன்னு, இதையெல்லாம் செஞ்சிட்டு கோலாலம்பூர்காரன் கண்ணுல மட்டும் பட்டுடாதே.

ZAEISA said...

சகோ.,ஜாகிர்.கவிஞரின் துணை இல்லாமல் பேரம் பேசியிருக்க முடியாது.இனி பேசுவதாக இருந்தால் அல்லாஹ்டகாவலா பேசிமுடிச்சுகிடுங்க.எங்களுக்கென்ன.....அப்பவே தெரியும் பாஸ்,பாஸுன்னு கூப்பிடும்போதே..

Unknown said...

//காதரு, சிலபேர் மண்டைல கொஞ்சமா முடி வச்சிருப்பது சிக்கனமா கஞ்சத்தனமா?//

இது அறிவாளிகளைப்பார்த்து கேட்க வேண்டிய கேள்வி என்பதால்தான்
என்னைப்பார்த்து கேட்டியோ ?

Unknown said...

//என்ன ஒன்னு, இதையெல்லாம் செஞ்சிட்டு கோலாலம்பூர்காரன் கண்ணுல மட்டும் பட்டுடாதே.//

இப்படி ஐடியா கொடுத்து ஜாகிருடைய இந்த பதிவின் நோக்கத்தையே வீனடிச்சுட்டியே !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அப்பாவை பேராண்டிகளுக்கு தேடுது !

எப்போ அப்பா ஒரு பதிவோட வருவீங்க !

கிண்டல் பார்டிங்களுக்கு உங்கள் சுண்டல் வரிகளோடு வாங்க அப்பா !

குடைக் கம்பு தொப்பியும் புதுசா அனுப்பி வைக்கவா !?

sabeer.abushahruk said...

சரிப்பா, இவன் சொல்றானே என்று கேட்டுத்தான் பார்ப்போமே:

பகிரங்க/பம்மாத்து அறிவிப்பு:

எப்படி நீலம் போடுவது என்கிற ட்டெக்னி தெரியாததாலும்; எப்படி க்ளொரக்ஸ் போட்டு வெளுப்பது என்கிற விவரம் போறாததாலும் என் வெள்ளை வேட்டிகள் மூனன்னம் நீல மற்றும் வெள்ளைத் தேமல்களோடு காட்சியளிப்பதால் அவற்றைப் பழையன எனக் கருதி பொதுவில் வைக்கிறேன். ஆர்வமும் அவசியமும் உள்ளவர்கள் 27ந்தேதிக்குள் என் முகவரியில் வந்து பெற்றுக்கொள்ளவும். (27ந்தேதி ஊட்டுக்காரி வந்துட்டா மூனு வேட்டியையும் மூவெட்டு இருவத்திநாலும் துண்டா கிழிச்சி கிட்ச்சென்ல புடிதுணியாக யூஸ் பண்ணிடுவாங்க)

Anonymous said...

//ஆனால் இவர்கள் பல்லை பார்த்தல் மஞ்சள் பூத்து//

அது டூத்ப்ரெஷ் போட்டு விளக்குன பல் அல்ல! சூ பாளிஷும் சூ பிரஷும் போட்டு விளக்குன பல்லு! அது அப்புடித்தான் இருக்கும்.விஷயம்தெரியாமே இதையெல்லாம்போய் ஒரு பெரிய கொறையா பாக்கப்புடாது!

.From.S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Anonymous said...

கொப்பும் கிளையுமா நின்ன கடல்கரைத் தெரு சின்ன புளியமர குச்சியே ஒருத்தர் ஒடிச்சு ஒடிச்சு பல் விளக்கி. மரத்தையே மொட்டை அடிச்சுட்டார்.
அதே பாக்க பக்க ஒரே பரிதாபமா இருந்துச்சு போங்க!

ஒருநாலு வருசத்துக்கு அப்புறம் அங்கே போன போது மரம் தளதளன்னு நின்னுச்சு!''

''என்ன காக்கா! புளிய மரத்துக்கு தண்ணி கிண்ணி ஊத்தி வளக்குரியாலா?
'மரம் தளதளன்னு வளந்துருக்கே''ன்னு கேட்டேன்'

.''ஒ! அதா? தெரியாதா?! அவரு மௌத்தா போயி மூனு வருசத்துக்கு மேலே ஆச்சேன்னு'' சொன்னாரு!.

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

sabeer.abushahruk said...

//குடைக் கம்பு தொப்பியும் புதுசா அனுப்பி வைக்கவா !?//

ஹாஹாஹா. நல்லா கேளுங்கண்ணே கேளுங்க! என்னய "பாஸு"ன்னு கூப்பிட அவன் மறந்தாலும் இவுக எடுத்துக்கொடுக்கற ட்டெக்னிக்க பார்த்தியலா?

காதரு, நீ எப்பவும் எனக்கு அறிவாளிதான்டா. நான் எம்பூட்டு தடவை பார்த்திருக்கேன் பளிச்சுனு...உச்சில.

அப்புறம், ஜாகிர்ட்ட இன்னும் ஒன்னு எழுதிக்கேட்டா தருவான் கஞ்சத்தனம்லாம் பண்ணமாட்டான். அதுனால இத இப்பிடிக்கா கொண்டுபோய்டுவோம்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மிக அருமை!

உங்கள் கைவண்ணத்தில் கஞ்சத் தனம் பற்றிய குசும்பு ரொம்ப தாராளமாய் கொட்டிக்கிடக்கு.

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

வாழ்க்கை முழுக்க வாழ வேண்டும் என்ற ஏற்பாட்டில் இருந்து, வாழ ஆரம்பிக்கும்போது வாழ்வின் விழிம்பில் நிற்பது தெரியாமலே போய் விடுகிறது.அருமையான வரிகள் கஞச தணத்திற்க்கும் சிக்கணத்திற்க்கும் வித்தியாசம் தெரியாமல் தேய்ந்த செருப்பையும் பிரஷ்ஷையும் மார்த்தமல் இருப்பவர்கள் இதை படித்த பிறகாவது திருந்தட்டும்

Unknown said...

//கந்தையானாலும் கசக்கி கட்டு //

இதன் உள் அர்த்தம் நீ சொல்வதல்ல ஜாகிர்.

மேலோட்டமாக பார்த்தால் ஏதோ கஞ்சத்தனத்தின் உச்சகட்டம் போல் தெரியும்.ஆனால் நன்றாக ஊன்றிக்கவனித்தால் அது சுத்தத்தின் உச்சத்தையே சொல்ல வருகின்றது என்று புரியும்.

கந்தை என்பதை விடு. கசக்கு என்பதை எடுத்துக்கொள் அதைத்தான் அது அங்கு பிரத்தியேகமாக சொல்ல வருகின்றது. எங்கு சென்றாலும் தூய்மைக்கு முதலிடம் கொடு. அது சமூதத்தில் உன்னை உயத்தும் என்று அதற்க்கு அர்த்தம்.

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

காதரு,

நீ சொல்றது சரிதான். அந்தப் பழமொழி சுத்தமாக உடுத்த வலியுறுத்துவதுதான், மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதற்காக கதாநாயகன் வந்து காப்பாற்றுவதற்குள் வில்லனால் கிழிக்கப்பட்டக் கதாநாயகியின் உடையளவிற்குக் கந்தையானபிறகும் கசக்கிக் கட்டினால்...சுத்தமாயிருக்கும் ஆனா கந்தையான துணி வழியே ...தெரிஞ்சிடுமேடா.

அதனால்தான், நம்மாளு சொல்றான், கந்தையானாலும் கசக்கி, தைத்து கட்டு என்று சொல்கிறான்.

அப்துல்மாலிக் said...

//வாழ்க்கை முழுக்க வாழ வேண்டும் என்ற ஏற்பாட்டில் இருந்து, வாழ ஆரம்பிக்கும்போது வாழ்வின் விழிம்பில் நிற்பது தெரியாமலே போய் விடுகிறது.// 100% True

நல்ல ஆக்கம் காக்கா, நடைமுறைகளை நமக்கிடையே ஒன்றிருக்கும் செயல்களை அலசுவதுக்கும் ஒரு தனிதிறமை வேணும்....

ZAKIR HUSSAIN said...

கிரவுன்...விசில் அடிக்கிற அளவுக்கா எழுதரேன்???..

எம் எஸ் எம் நெய்னாமுஹம்மது...அதற்காக 2 வாரத்துக்கு ஒரு பிரஸ் வாங்கத்தேவையில்லை..எங்கே உங்கள் ஆக்கத்தை காணோம்...நாங்கள் எல்லாம் காத்திருப்பது தெரியவில்லையா??

கவியன்பன் ..உங்கள் எழுத்துக்கள் அனைத்தும் கவித்துவம்..உங்கள் பதிலை படிக்கும்போது ஒரு பேராசிரியரின் முதிர்ச்சி தெரிகிறது. கல்லூரி முடித்த காலத்தில் உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்ததா?

Bro Ahamed Ameen...infact we can write lot of episode on human behaviour..i personally interviewed at least 3000 persons [ one to one basis ] for my business which involves money / property / business managements.

அபு இப்ராஹிம் ..பல் பொடியே அலர்ஜினா அந்த ஆள் அட்ரஸ் கொடுங்க ...ஒரு 60 கி.மீ ரேடியசில் உள்ளே வராமல் இருக்கலாம்ல.

சாகுல்..என் ஆக்கத்தை இப்படி அழகாக தனித்தனியாக விமர்சித்தமை கண்டு மகிழ்ச்சி. நம்ம ரியாஸ் என்னடான்னா என் தமிழையே தனித்தனியா பிச்சி பிச்சி போட்டிருக்கான்.

Brother ZAEISA...நீங்கள் சபீரிடம் பேசியதாக சொன்னான். எனது ஆக்கத்தை படிக்க காட்டும் உங்களைப்போன்றவர்களின் ஆர்வமே மீண்டும் எழுதத்தோன்றுகிறது.

அப்துல் காதிர் ...நீ கொடுத்த விளக்கம் பற்றியும் இந்த ஆக்கத்தில் எழுதலாம் என்றிருந்தேன். அதிகம் எழுதுவதை தவிர்க்கவே எழுதவில்லை. ஆம் நீ சொல்வதும் உண்மைதான் சிக்கனம் என்று மற்றவனை பிழைக்க விடாமல் பேரம் பேசுவதும் தவறுதான்.







ZAKIR HUSSAIN said...

சபீர் ..சத்தியமாக அந்த போட்டோவில் உள்ள பிரஸ் இன்டர்நெட்டில் சுட்டது. உண்மையை தவிர வேறதுவும் இல்லை. பொதுவாகவே என்னிடம் பிரஸ்/சோப்/ பேஸ்ட் / சென்ட் எல்லாம் ஒரு 5 பேர் உபயோகிக்கும் அளவுக்கு ஸ்டாக் இருக்கும். .....பாஸ்...நான் அவசரப்பட்டு எப்டி இயற்கையிலேயே அழகா
இருக்கேன்னு சொல்லிட்டேனா பாஸ்.

எம் ஹெச் ஜே..உங்கள் விமர்சனம் எப்படி ஹக்கூ மாதிரி Short & Sweet ஆக இருக்கிறது.


அப்துல் மாலிக் சரியான வரியை சுட்டியிருக்கிறீர்கள் [ கவியன்பன் அவர்களும் , என் கே எம் அப்துல் வாஹித் அண்ணன் அவர்களும் ]

அன்புக்குறிய எஸ் முஹம்மது ஃபாரூக் மாமா அவர்களுக்கு....எப்படி சரித்திரப்புகழ் வாய்ந்த புளிய மரங்கள் வீழ்ச்சி அடைந்தது என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள். புளிய மரத்தில் என்னென்ன விசயங்கள் இதுவரை பேசப்பட்டிருக்கும் என்று ஒரு தொடர் எழுதலாம்.

ZAKIR HUSSAIN said...

எங்கே இப்ராஹிம் அன்சாரி அண்ணனை காணோம்...Busy??

Ebrahim Ansari said...

//எங்கே இப்ராஹிம் அன்சாரி அண்ணனை காணோம்...Busy??//

அன்பான தம்பி ஜாகிர்! மூன்று நாட்களாக இணையதளத்தின் பக்கமே வரமுடியாமல் சில காரியங்கள்- உடல் உபாதைகள்- . இன்று அதிரையில் திருமணம் இன்றில் கலந்துவிட்டு நேற்று எனது தொடருக்கு பதில் என்ன வந்திருக்கிறது என்று பார்த்தால் எனக்கும் மற்றோருக்கும் ஒரு சீரிய சிந்தனைப் பரிசு .

வரிக்கு வரி ரசித்தேன் என்று சொன்னால் அது புகழ் மொழியல்ல! உண்மை.

கண்ணாடி காணாமல் போய்விட்டதால்( ஆற்றில் விழுந்து விட்டது- சுழல் சுருட்டிக் கொண்டு போய்விட்டது. காவிரி நீர் வந்ததது கடலுக்குள் என் கண்ணாடியை அடித்துக் கொண்டு போகத்தானா?) எனது தொடர் கட்டுரையும் எழுத முடியவில்ல. புதுக் கண்ணாடி சோதித்து வாங்கிப் போட்டு நான் மீண்டும் ஆஜர.

இரண்டு வாரம் தொடர் எழுதமுடியாமல் போனதற்கு நெறியாளர் உட்பட அனைவரிடமு வருந்துகிறேன். இனி தொய்வில்லாமல் தொடர் வரும். இன்ஷா அல்லாஹ்.

என்னைத்தேடிய தம்பி ஜாகிருக்கு ஒரு நன்றியையும் சொல்வேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாகிர் காக்கா,

இப்போது தான் இந்த பதிவை முழுமையாக வாசித்தேன். ஒரு சில வரிகள் ஊசி போட்டது போல் இருந்து.

யாருக்காவது ஆபீசில் இருக்கும்போது தூக்கம் வந்தால், சுறுசுறுப்பு ஏற்பட ஜாகிர் காக்காவின் பதிவுகளை வாசியுங்கள். இது என் அனுபவம்.

Anonymous said...

//கஞ்சத்தனம் - பல ஆண்டுகளுக்கு முன் படித்த ஜோக்.//

ஒரு ஆசிரியர் தன் வீட்டில் மாணவர்களுக்கு இரவு டியூஷன் சொல்லி கொடுத்தார். விளக்கு எரிந்து கொண்டிருந்தது. டியூஷன் ஆரம்பித்ததும்,
''நான் நடத்தும் பாடம் உங்கள் எல்லோர் காதிலும் விழுகிறதா?'' என்றார்.

எல்லா மாணவர்களும்'' விழுகிறது சார்! விழுகிறது சார்'' என்றார்கள்.

''விளக்கை அணைத்து விட்டு பாடம் நடத்தினாலும் உங்கள் காதில் விழும் அல்லவா?' ஆசிரியார்' கேட்டார்.

.''விழும் ஸார்! விழும் ஸார்'' என்று மாணவர்கள் கத்தினார்கள்.

''அப்படியானால் வீணாக விளக்கு ஏன் எரியணும் 'சுவிட்ச் ஆப்' செய்து விடுங்கள்!'' என்றார்.

இருட்டில்பாடம்நடந்தது, கொஞ்ச.நேராம் ஆனதும் ''அய்யோ! அய்யோ! என்னை தேள் கொட்டி விட்டது!. வலிக்குது. சீக்கிரம் விளக்கை போடுங்கடா! விளக்கை போடுங்கடா!'' என்று வாத்தியார் கத்தினார்.

ஒரு மாணவன் பதில் குரல் கொடுத்தான். ''நீங்கள் கத்துறதுதான் எங்கள் காதிலே விழுதே ஸார்! எதுக்கு ஸார்விளக்கு போடணும்?" என்று

S.முஹம்மதுபாரூக்அதிராம்பட்டினம்

KALAM SHAICK ABDUL KADER said...

வாஷிங் மெஷின் வாரிவிடும். அதனால் கைதான் கைகொடுக்கும்

1) ஏரியல் கலந்த தண்ணீரில் முதலில் ஊற வைக்கவும்+ 1 சொட்டு நீலம் மட்டும் இடவும்(இரவில்)

2) பின்னர் சிறிது நேரம் கையால்(காலையில்) டிடர்ஜெண்ட் பிரஷ் போட்டு அழுத்தித் தேய்க்கவும்

3) க்லோரக்ஸ் ஒரு மூடி மட்டும் புதிய தண்ணீரில் ஒரு வாளியில் போட்டு கலக்கிய பின்னர், நீங்கள் ஸ்டெப் 1 & 2 சொன்னபடி துவைத்தக் கைலியை இந்த வாளியில் இட்டு ,மேல் முனைகளில் விரித்து வைத்துக் கொண்டு உள்ளே கைலியை அழுத்து எடுக்கவும். பின்னர் நன்றாகப் பிழ்ந்து விட்டு - (இறுக்கமாக) நன்றாக உதறி விட்டால்

திட்டுத் திட்டான தேமல் போன்ற வண்ணச் சித்திரம் எல்லாம் உங்கள் கைலியில் இருக்காது

நிற்க.
உங்க ஊட்டுக்காரவொ வந்ததும், நான் எழுதிய கஞ்சி செய்முறையும், இந்தக் கைலி துவைக்கும் முறையும் சரிதானா என்று கேட்டுக்கோங்க.

KALAM SHAICK ABDUL KADER said...

\\கவியன்பன் ..உங்கள் எழுத்துக்கள் அனைத்தும் கவித்துவம்..உங்கள் பதிலை படிக்கும்போது ஒரு பேராசிரியரின் முதிர்ச்சி தெரிகிறது. கல்லூரி முடித்த காலத்தில் உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்ததா?\\

ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா, அன்புத் தம்பி ஜாஹிர் ஹுஸைன். உள்ளத்தில் உள்ள உணமையை உள்ளபடியே உணரும் ஆற்றலை அல்லாஹ் உங்கட்கு வழங்கியிருக்கின்றான் என்பதை உங்களின் மறுமொழிகளில் காண்கிறன்.
முன்னர் பலமுறை என் கவிதைகட்குப் பின்னூட்டம் \மறுமொழி எழுதும் பொழ்தும் அக்கவிதையின் முத்தாய்ப்பான விடயத்தைச் சட்டென உணர்ந்துச் சொல்லியிருக்கின்றீர்கள்;இப்பொழுது உண்மையில் என் உள்ளத்தில் இருந்த “பேராசிரியாகும்” எண்ணத்தையும் மிகச் சரியாகவே கணித்தும் எழுதியிருக்கின்றீர்கள்; இதனாற்றான், உங்களை “உளவியலார்” என்றழைத்தேன்; இப்பொழுது பட்டம் சூட்டக் கூடாது என்ற கருத்து நிலவுவதால் அன்புத்தம்பி என்றே அழைக்கிறேன். என் வாழ்க்கையில் நான் எதுவாக இருக்க வேண்டும் ஆசைப்பட்டேனோ அந்த மூன்றில் ஒன்று தான் பேராசிரியர் கனவு! அல்ஹம்துலில்லாஹ்.

Ebrahim Ansari said...

கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்தால்தான் பெராசி ரியர் என்கிற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இங்கு சகோதரர் அப்துல் கலாம் பின் ஷேக் அப்துல் காதர் அவர்கள் தனது அறிவுபூர்வமான கவிதைகளால் போதிப்பது தார்மீக அடிப்படையில் அவருக்கு பேராசியருக்குரிய தரத்தை வழங்கும்.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் சகோதரர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களின் உளம்நிறைவான ஆசிகட்கு தமியேனின் பணிவான நன்றிகள்; ஜஸாக்கல்லாஹ் கைரன்.

Anonymous said...

இன்னொரு கஞ்சன் கதை!

ஒரு மளிகைக் கடை வியாபாரி மிளகு மூட்டைகளை வீட்டில் அடுக்கினார். மனைவியிடம் சொன்னார். ''மகன் வந்ததும் மூட்டைகளை பிரித்து சுத்தம் செய்து வைக்கச் சொல்'' என்று கடைக்கு போய்விட்டார்'

பகல் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்து உட்காந்தவருக்கு மிளகுரச வாடை மூக்கைத் துளைத்தது. கொஞ்சம் அள்ளி குடித்து விட்டு ''மிளகு ரசமா வச்சே!'' என்றார்.

''ஆமாங்க!'' என்றாள் மனைவி.

''அடிப்பாவி! மிளகு விக்கிற விலைக்கு மிளகு ரசம் வச்சியா? மிளகு வாங்குன காசு ஒன் அப்பன் ஊட்டு முதல்னு நெனச்சு மிளகு ரசம் வச்சியோ! மிளகு ரசம்!''ன்னு மனைவி மேலே பொறியா பொறிஞ்சு தள்ளினார்.

''போதும் நிறுத்துங்க! விஷயம் தெரியாமே வார்த்தையே கொட்டாதிங்க. உங்க' மிளகுலே ஒன்னுகூட எடுக்கலே!. மிளகைச் சுத்தம் பண்ணுன மகன் கையே கழுவித்தான் இந்த மிளகு ரசம் வச்சேன்! சொல்லுறது வெளங்குதா?'''

"கேக்குறேனே! பதிலே காணோம்'' பொண்டாட்டி சீறினாள்.'

'ரெம்பத்தான் பீத்திக்கிடாதேடி! அப்புடி சிக்கனமா குடும்பம் நடத்த தெரிஞ்சவளா இருந்தா அவனோட ஒரு கையை மட்டும் கழுவி இன்னிக்கி ரசம் வச்சுட்டு, நாளைக்கி இன்னொரு கையை கழுவி ரசம் வைப்பே! ரெண்டு கையேயும் ஒரே நாளுலே கழுவி ரசம் வச்சுட்டு நாக்கு வங்காளம் வரையுளும் போவுது'' என்றார் கஞ்ச புருஷன்.

''பதினாறு வருஷமா உங்களோட குடும்பம் நடத்தி குப்பை கொட்டுன வங்க நான்! நாளு புள்ளே மூனு ஆணு ஒரு பொண்ணு பெத்து ரெண்டு பேத்தி ரெண்டு பேரன் எடுத்துட்டு உங்க குணம் தெரியாமே இருப்பேன்னு' நெனச்சியோலோ? கேட்டுகோங்க! நான்இன்னைக்கி வச்சரசம் அவன் கையே கழுவி வைக்கலேங்க!. அவனோட ஒரு விரலைக் கழுவித்தான் ரசம் வச்சேன். நாளைக்கி அடுத்த விரல்!. சொல்லுறது மண்டையிலே ஏறுதா? மண்டையிலே எறுதான்னு கேட்டேன்! காதுலே உளுவுதா'' பொண்டாட்டி போட்ட போடுலே புருஷன் செலையா நின்னுட்டான்!

பொண்டாட்டினா இவ தான்யா பொண்டாட்டி. மத்தவலெல்லாம் கின்டாட்டி!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.