வாழ்வில் வசந்தம் வீசும் காலங்கள் என்று ஒன்று எல்லோர் வாழ்விலும் வந்து போவதுண்டு. வாழும் வாழ்க்கையின் குறிக்கோள் என்றால் என்ன என்று ஆழ் மனதில் அர்த்தம் புரியாத காலம் அது. நம் செலவினங்களுக்காக நம் சட்டைப்பையை நிரப்பும் காசு பணம் எங்கிருந்து வருகின்றது, அதன் மூல காரணி யார் என்று அறியாத; செலவழிக்க மட்டுமே தெரிந்த வயது அது.
அதுதான் பள்ளிப்பருவம். நம் பெற்றோர்களை உணவு தரும் தாயாக , காசு தரும் தந்தையாக , பள்ளிக்கூடப் புத்தகங்களைக் கடையில் வாங்க காசு தரும் ஒரு காரணியாக மட்டுமே நினைத்து வந்த காலம் அது. இந்தக் காலகட்டங்கள் எல்லோர் வாழ்விலும் உள்ள ஒரு பொதுவான நிலை. ஆனால் ஒன்றிரண்டு நபர்கள் வாழ்வில் இதற்கு நேர்மாறாக வாழும் வாழ்க்கைக்கு தள்ளப்பட்டு, குருவித்தலையில் பனங்காய் என்னும் தன் சக்திக்கு மீறிய பொறுப்புகள், பள்ளியில் பயிலும் காலங்களிலேயே சீரான வாழ்க்கையை இடை மறிப்பதுண்டு.
அப்படி இடை மறித்த, வாழ்வை ஒரு சவாலக ஏற்று வாழ்ந்து, அந்த சவாலுக்கு சாவு மணி அடித்து தன் உன்னத முயற்சியாலும், நண்பர்களின் கலப்படமற்ற தூண்டுகோலாலும் இயற்கையிலேயே தன்னிடம் அமைந்த தன் பண்பாலும், ஏழ்மையிலும் விடா முயற்சியாலும், எல்லாவற்றிற்கும் மேலாக இறைவன் மீது கொண்ட அதீத நம்பிக்கையாலும் வாழ்க்கையில், தன்னை முன்னெடுத்துச்சென்ற; என் வாழ்க்கையில் நட்பு எனும் தோணியில் இன்றளவும் பயணம் செய்கின்ற ஒரு கலப்படமற்ற நட்புக்கு சொந்தக்கார நண்பனின் வாழ்க்கையில் அவன் கடந்து வந்த பாதையின் கசப்பும் இனிப்பும் கலந்த சுவடுகளே இதை நான் எழுதத் தூண்டியது.
அந்த நட்புக்கு ஒரு நன்றி சொல்லி நாம் 30 வருடங்கள் பின்னோக்கிப் பார்ப்போம்.
ஆம், நாங்களெல்லாம் சுதந்திரப் பறவைகளாய் எதிர்காலக் குறிக்கோள் என்ன என்ற கேள்விக்கு இடமில்லாமல், அன்றைய பொழுது நட்பு வட்டாரத்தோடு சந்தோசமாக கழிந்தால் அன்றைய பொழுதின் அர்த்தம் அதுதான் என்ற உணர்வோடு, நாள் கழிந்து விட்டால் இனி அடுத்து சூரியன் உதிக்கும்போது அடுத்த நாள் பற்றிய சிந்தனை. இப்படியாக நட்பு வட்டாரத்தோடு கழிந்து வீடு வந்து சேர்ந்து என்னும் வழக்கத்தில் பொழுது கழிந்து கொண்டிருந்த காலகட்டத்தில்,எங்கள் நட்புகளுக்கிடையில் ஒருவன் மட்டும், அனைத்திலும் அவன் பங்கு இருந்தாலும், மற்றவர்களை விட ஒரு படி மேலே, முன்னேற வேணும், முன்னேற வேணும் என்னும் துடிப்பு அவனிடத்தில் மட்டும் கொஞ்சம் ஓங்கி இருந்தது.
அவனிடம் இருந்த அந்த துடிப்பில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஏனெனில் அவன் வளர்ந்த சூழ்நிலை அப்படி. அவனிடம் மற்ற நண்பர்களைவிட கூடுதல் உந்தித்தள்ளும் உணர்வு இயற்கையிலே இரத்தத்தோடு அவனிடம் ஊறி இருந்தது.இதன் வெளிப்பாடுதான்,.....................
தன் தாயின் அரவணைப்பில் மட்டும், இருந்து கொண்டு, தந்தை இருந்தும் இல்லாமல், தன் உற்றார் உறவினர் தனக்கு ஏணியாக நின்று உதவ, வெறியோடு இச்சமுதாயத்தில், நாமும் பேசப்படுகின்ற ஒரு ஆளாக நின்று, பிறந்தோம், வாழ்ந்தோம், வளர்ந்தோம், வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்னும் மனப்போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்து , கொஞ்சம் கொஞ்சமாக கடின உழைப்பென்னும் ஆயுதத்தை கையில் எடுத்து, பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி என்னும் சாலையில் கால் பதித்தான். ஏழ்மை என்னும் ஆடை அன்றுவரை அவனை விட்டு அகலவில்ல.
கல்லூரி படிப்பு எப்படியும் பள்ளிப்படிப்பைவிட விட பல மடங்கு செலவு என்னும் சுனாமி தாக்கும் ஒரு கல்லூரிச்சாலை.இதில் ஏழ்மை என்னும் ஆடை அணிந்தவன் எப்படி கரை சேர்வான். ஆம் செலவு என்னும் சுனாமியிலிருந்து கரை சேர தோணியாகவும், துடுப்பாகவும் உறவின் முறை என்று சொல்லும் ஒரு பாசமிக்க பந்தம் அவனுக்கு கை கொடுத்தது.
நன்றி கலந்த மனதோடு அதை ஏற்ற அவனோ ஒரு சின்ன தியாகம் ஒன்றை அதன் விலையாக கொடுக்க நேர்ந்தது. அதுதான் அந்த உறவிலேயே தனக்கு முற்றிலும் பொறுத்த மில்லாத துணையை. தன் வாழ்க்கையோடு இணைத்துக் கொள்ளவேனும் எனும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதை முழுமனதோடு ஏற்காவிட்டாலும், நன்றி என்னும் சொல்லுக்கு எதிராக செயல்பட அவன் மனது இடம் தராததால் கரம் பிடித்தான் வாழ்கைத் துணையாக.
அதிரையின் எழுதப்படாத விதியான,
பெண் பிறந்தால் மனைக்கட்டு
ஆண் பிறந்தால் பாஸ்போர்ட்
என்னும் விதிக்கு அவன் மட்டும் விதி விளக்கா என்ன!?. குடும்ப சூழ்நிலை நீ பிறந்த தாயகத்தை விட்டு வெளியேறு என்றது. குடும்பத்தில் பெற்றோருக்கு ஒரே பிள்ளை என்ற செல்லம் இருந்த போதிலும் குடும்பப்பின்னணி அவனை செல்லப்பிள்ளை அல்ல, சுமை தாங்க வேண்டிய பிள்ளை என்று சொல்லி தாயகத்தை விட்டு துரத்தியது. ஒதுங்கினான், ஓடினான், ஓய்வின்றி அலைந்தான் அன்றைய பம்பாய் மாநகரின் எல்லைக்கே ஓடினான். அவன் ஓட்டத்தை தடுத்து நிறுத்த அவன் குடும்பப்பின்னணி இடம் கொடுக்கவில்லை. தஞ்சமடைந்தான் மும்பை நகரில்.
சொல்லவொண்ணா சோதனைகளுக்கிடையில் தன்னை ஈன்ற தாயின் முகம் தன கண் முன்னே நிழலாட, உழைக்க வேணும் என்னும் ஒரு வெறியோடு, இருந்தவனுக்கு இறைவன் விதித்த விதியில் வெளிஉலகில் காலெடுத்து வைக்க இறைவன் தந்த வாய்ப்பு என்னும் கதவு திறக்க , அதை அவன் நன் முறையில் பயன படுத்த தவறவில்லை. சென்றான் சவுதி அரேபியா வென்னும் புனித இல்லங்கள் இருக்கும் தேசம் அங்கு அவன் காட்டிய உழைப்பு அதில் இருந்த வேகம், தேனீ, எறும்பு அனைத்தும் அவனிடம் பாடம் கற்கவேணும் அவன் உழைப்புக்கு முன்னால் என்று சொல்லும் அளவுக்கு தன் உழைப்பில் , சாதுரியமாக, தெளிவாக, அதே சமயம் தீவிரமாக தன் ஊக்கத்தை அதில் செயல் படுத்தினான்.
இது நான் சொல்வது அனைத்தும் மிகை அல்ல நான் கண்ணால் கண்டது. அவன் பணிபுரியும் அலுவலகம் போகும் வாய்ப்பு வாரம் ஒருமுறை எனக்கு ஏற்படும்போது, நான் வார விடுமுறையில் செல்லும்போது, அவன் விடுமுறைக்கு விடுமுறை கொடுத்து உழைத்துக் கொண்டிருப்பான்.
நான் வந்திருப்பதால் எனக்காக கொஞ்சம் பணியிலிருந்து சீக்கிரம் கூட சில சமயங்களில் வந்து நாங்கள் சந்தோசமாக பொழுதைக் கழிப்போம். இப்படி உழைப்பின் உயர்வை உணர்ந்த அவன் அல்ஹம்துலில்லாஹ், அன்று ஆலமரக்கிளையாக இருந்தவன், இன்று பல கிளைகளாக விரிந்து தன குடும்பமெனும் பூமிக்கு நிழல் கொடுக்கும் ஒரு ஆலமரமாக மாறிப்போய் , இன்று சமுதாயத்தில் பேர் சொல்லும் பிள்ளைகளில் அவனும் ஒருவன் என்று சொல்வதிலும், அவன் நண்பன் என்பதிலும் பெருமை அடைபவர்களில் நானும் ஒருவன்.
அப்பொழுதுதான் இடியாக ஒரு செய்தி அவனுக்கு சொல்லப்பட்டது, சில காலமே சென்றிருந்தாலும் விருப்பமுடனோ அல்லது விருப்பமில்லாமலோ இருவரின் கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போடும் நிலை என்பிள்ளைக்கு உருவாகி இருக்கின்றது என்று பெற்ற தாய் பூரிப்பு அடையும் நேரம் அது சொற்ப நேரமே நீடித்த வகையில்.
தன் மனைவி தன் வாரிசை ஈன்றெடுக்குங்கால் மலடி என்ற அவச்சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒன்றுக்கு இரண்டாக ஈன்றெடுத்து, ஒன்று பிறந்து இறந்தும், ஒன்று இறந்து பிறந்தும், தாய் சேய்கள் மூவருமே இவ்வுலகுக்கு விடை கொடுத்தனர் இறைவன் நாட்டப்படி என்ற செய்தி இடியென இறங்கியது அவன் மேல்.
அவன் மனைவி அவன் வாரிசை சுமந்தவலல்லவா.! ஆம் அவன் உடைந்தே போனான். அவன் கலங்கி நின்ற கணம் என் கண் முன்னே இன்றும் நிழலாடுகின்றது.
வாழ்க்கையில் வகை வகையான சோதனைக்கு ஆட்பட்ட அவனுக்கு வாழ்க்கையில் முன்னேறி சாதிக்க வேணும் என்ற வெறியின் முன்னே அச்சோதனைகள் தடையாக இருக்கவில்லை.சோதனைகளை சாதனைகளாக்கிக்காட்ட அவன் மனம் சீரான பாதையில் சாதிக்க வேணும் என்று சிந்தித்து வீறு நடையில் குறைவின்றி பயணித்தது.
ஒவ்வொரு சோதனையிலும், இறை நம்பிக்கையில் தொய்வு விழாமல் ஒவ்வொன்றும் இறைவன் ஏற்பாடே என்னும் ஈமான் சுடர்விட்டு பிரகாசிக்க ,தன் அலுவலக பனியின் ஒவ்வொரு அசைவிலும் தன் திறமையை அல்லாஹ்வின் உதவியோடு நிரூபித்து காட்ட, இவனுக்கு முன்பிருந்த மேலாளரின் இருக்கை , இவனை தேடி வந்ததில் ஆச்சரியம் ஒன்று மில்லை.
இதற்குத்தானே இவ்வளவு காலம் காத்திருந்தான். ஆம் அவன் கட்டுப்பாட்டில்முழு அலுவலகமும் வந்தது.அவன் இல்லையெனில், அங்கு இயக்கமே இல்லை என்னும் நிலையை உருவாக்கிஇவனுக்கு முன்பே அங்கு மேலாளர் பதவியில் இருந்த ஒரு இந்தியர் எல்லா வகையான தடங்களையும் அவனுக்கு கொடுத்து பார்த்து அவன் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருக்க முற்பட்ட போதெல்லாம் தன் திறமையினாலும், தன் தூய கலப்படமற்ற மனதினாலும் அந்த அலுவலக முதலாளியின் நெஞ்சில் நிலைத்தான். அதனால் இவனுக்கு முன்பிருந்த அந்த மேலாளரின் இருக்கை இவன் வசமானது.
உழைப்பு, உழைப்பு, உழைப்பு , இது இவனின் தாரக மந்திரமாக இருந்ததால் , எல்லா தடைக்கற்களையும் , படிக்கற்களாகவே பாவித்தான். எதிர் நீச்சல் என்னும் சவால் இவனுக்கு வெல்லம் தின்பது போல். அந்த மேலாளர் விரித்த வலையில் இவன் விழ வாய்ப்பில்லாமலேயே போனது. அந்த மேலாளர் விரித்த வலையில் அவரே வீழ்ந்தார்.
இப்பொழுது , முழு நம்பிக்கையைப்பெற்ற ஒரு தூய தொழிலாளியாகிப் போனான் இவன். இவன் முதலாளியோ இவனை விட்டால் , இங்குள்ள இயக்கம் அனைத்தும் நின்றுவிடும் என்று எண்ணியவன்,, முழுதுமாகவே இவனிடமே ஒப்படைத்து விட்டு, இந்த அலுவலகத்தில் லாபமோ, நஷ்ட்டமோ , மாதம் எனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி விடு ,மற்ற அனைத்தும் உன்னைச்சார்ந்தது என்னும் நிபந்தனையின் பேரில் இவன் வசம் பரிபூரண காட்டுப்பாட்டுக்குள் வந்தது அலுவலகம்.அந்த அலுவலகத்தில் எல்லமாகிப்போனான் இவன்.
ஆம் தன் தாயை ஏழ்மை நிலையிலே பார்த்தவன் இந்த ஊர் மெச்ச , தன் உதிரத்தை தனக்கு தந்த அந்த தாயை ஊர் கண்ணு படும்படி இன்று வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றான். தன் தாயின் விருப்பத்தின் பேரில் இரண்டாவதாகக் கை பிடித்த மங்கையுடன் வாழ்வை தொடர்ந்தவன்,, அங்கேயும் கட்டில் போட்ட இடங்களில் தொட்டிலும் போடப்பட்டது. இந்த சந்தோஷ தருணம் ஒரு பக்கம் அவன் வாழ்க்கையை அலங்கரித்தாலும், நன்றி மறவாமல் , தனக்கு பொருளாதார உயிர் கொடுத்த தன் உறவின் முறையையும் இன்றும் நன்றி கலந்த பாசத்தோடு அரவணைத்து செல்லும் அவன் பாங்கு ,மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகை இல்லை என்று சொல்வேன்.
சோதனைகளில் துவண்டு விடாமல்,உழைப்பு என்னும் ஆயுதம் ஏந்தும் எவனும் எவரிடமும் கையேந்த வேண்டிய அவசியமே இல்லை என்னும் ஒரு நெஞ்சுறுதி வேணும். , எக்காரணம் கொண்டும் , இறைவனுக்கு மாறாகவோ, அல்லது ,குறுகிய காலங்களில் நிறைய திரட்டிவிடவேனும் என்னும் பேராசையால் உந்தப்பட்டு,தூய்மையற்ற வழியில் செல்வம் திரட்ட முற்பட்டாலோ அது வரும்போல் தெரியும், நம்மை அறியாமலேயே , நம்மை விட்டு பாவக்கறைகளை நம்மிடம் தந்து விட்டு, சொல்லாமல் செல்வோம் என்று வந்த செல்வம் சென்றுவிடும்.
ஆதலால் இளமையில் உழைப்பவன், முதுமையில் சிரிப்பான்,இளமையில் முடங்கியவன் முதுமையில் தவிப்பான்
என்னும் மந்திரம்தான் மேலே நான் பதியும் இந்தப்பதிவு சொல்லும் நீதி போதனை.
இதை ஏற்பவர் வாழ்வோ புரியும் சாதனை !
அதிரைநிருபரில் என் கன்னிப் பதிவின் கதாநாயகனைப்போல்.
(என் முதல் பதிவான என்னோடு நெருங்கிய வாழ்வியல் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலானது)
அபு ஆசிப்
39 Responses So Far:
எங்கள் சபீரின் கதையை சுவாரஸ்யமாகவும் 'நச்ச்' என்று தெள்ளத்தெளிவாகவும் எழுதி இருக்கும் நண்பன் அப்துல்காதருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்! கடைசியில், நாம் கேட்டுக் கொண்டபடி எழுத அமர்ந்துவிட்டான். மகிழ்ச்சி!
சிறுபிராயத்திலிருந்து இன்று வரை உற்சாகம்/ உத்வேகம் என்பதன் மறுபெயர் "சபீர்" என்றால் அது உண்மைதான்!
தம்பி அபூ ஆசிப் அவர்களை இரு கரம் பிடித்து எழுத்துலகுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இரண்டாவதாக இங்கு பதியப் பட்டு இருக்கும் பேசு பொருள் பலருக்கும் வழிகாட்டும் உற்சாகத்தைக் கொடுக்கும் . அந்த வகையிலும் பாராட்டுகிறேன்.
மூன்றாவதாக - முக்கியமாக,உடன் வளர்ந்த ஒரு நண்பனின் கதையை இப்படி உலகுக்குச் சொல்ல வந்த தகுதியைப் பாராட்டுகிறேன். இப்படி எத்தனை நண்பர்களின் உண்மைக் கதையை இன்னொரு நண்பர் உலகுக்கு எடுத்துச் சொல்ல இயலும்? எத்தனை வாழ்வும் செயலும் அதற்கு தகுதி பெற்று இருக்கிறது? .
உழைத்து முன்னேறும் துடிப்பு உள்ளவர்களை- உறவுகளை நேசிப்பவர்களை -நட்பைப் போற்றுபவர்களை இறைவன் ஆசிர்வதிக்கிறான் என்பதே நான் உணர்வது.
இந்தக் கதாநாயகன் அவர்களின் தெருவைச் சேர்ந்தவன் என்கிற முறையிலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எங்களுக்கும் வேண்டியவர்கள் என்கிற முறையிலும் இதில் உள்ள உணமைகளை நான் அறிவேன்.
ஒரு இளைஞன் உழைப்பின் மூலம் முன்னேறி தன்னையும் தனது அனைத்துக் குடும்பத்தையும் அரவணைத்து செல்வதை நோக்கும் போது பலருடைய பரக்கத்தை இறைவன் இவர் கைகளில் கொடுத்து கொடுக்கச்செய்கிறான் என்பதே நான் உணர்வது. இறைவனின் செயலுக்கு இவர் வாழ்வு ஒரு உதாரணம் என்றே நான் கருதுகிறேன். மாஷா அல்லாஹ்!
வாழு ! வாழ விடு! வாழ வை!
உன்னால் முடியும் தம்பி! உனக்குள் இருக்கும் உன்னை நம்பி!
தம்பி அபூ ஆசிப் என்கிற தங்கக் குஞ்சு தோட்டைத் தனது பிஞ்சு அலகால் உடைத்துக் கொண்டு வெளிவந்து இருக்கிறது. இன்னும் நிறைய பதிவுகள் தந்து கொண்டு இருக்க வேண்டுமென்று அதிரை நிருபரின் அனைத்துப் பதிவாளர்களும் கைகோர்த்து விரும்புகிறோம் ; வாழ்த்துகிறோம்.
ரமலானுக்கு 100 நாளுக்கு முன் இங்கே தடம் பதித்து இதன் இறுதி வாக்கில் முதல் பதிவாக முத்தான இனியவரைப் பற்றி முத்திரைப் பதிவாக தந்த மு.செ.மு. காக்கா அவர்களுக்கு அதே விலாசத்தை சார்ந்த எனது வாழ்த்தும் வரவேற்பும்!
சில சிறு கற்கள் வழியில் குறிக்கிட்டாலும் அது ஒரு பெரும் பாறையாக கருதி கடமுட வென்று ஓடும் இவ்வாழ்க்கை என்னும் வண்டியை நல்ல நேர்த்தியான தார் சாலையில் இட்டு இரு சக்கரங்களும் சிரமமின்றியும் எவ்வித சப்தமின்றியும் ஸ்மூத்தாக ஓட போடப்பட்ட கிரீஸ் போல் உள்ளது சபீர் காக்காவின் வாழ்க்கை வரலாறு சாச்சாவின் எழுத்து மூலம்.
திருவாங்கூர் சமஸ்தானத்தில் திறக்கும் அறைகளிலெல்லாம் வைர, வைடூரிய பொக்கிஷங்கள் குவிந்து கிடப்பது போல் அ.நி.லும் மெல்ல, மெல்ல ஒவ்வொன்றாக வெளிப்பட்டு ஒளி வீசி மின்னுகிறது மூத்த சகோதரர் ஃபாரூக் காக்கவிற்குப்பின் சாச்சாவின் எழுத்து. புகழைத்தும் நம்மை படைத்து பரிபாலிக்கும் வல்ல அல்லாஹ்வுக்கே உரியது.
(சாச்சா, என் வாப்பாவிற்கு நீங்கள் சாச்சா மகன் தம்பி, என் மனைவிக்கு மாமி மாப்ளெ மாமா ஆகையால் உங்களை எப்படி கூப்பிடலாம் இங்கு கொஞ்சம் Confuse)
Excellent and well written article about a great person we heard all these through our elders and yes I have seen all these qualities in him when Allah gave me chance stay with him for a short while thanks to abu asif kakka to bring this here in AN , this will inspire many
இப்ராஹிம் அன்சாரி காக்கா!
இந்த கன்னிப்பதிவை நான் இங்கு பதிய
என் நண்பனின் வாழ்வின் கடந்துவந்த சுவடுகள் ஒரு காரணம் என்றாலும்
இந்த பதிவில் வரும் அளவுக்கு ஊக்கம் கொடுத்த, தாங்கள், கவியன்பன் கலாம் , ஜாகிர், மற்றும் பலரின் தூண்டுதலும் என்னை உந்தித்தள்ளியது.
எல்லாப்புகழும் இறைவனுக்கே.
அபு ஆசிப்
//சாச்சா, என் வாப்பாவிற்கு நீங்கள் சாச்சா மகன் தம்பி//
என்னை வயதானவனாகக் காட்டினாலும் முதல் முறைக்கே முன்னுரிமை.
( சாச்சா என்ற அழையுங்கள்.)
அபு ஆசிப்.
Dear Mr. Yaasir,
Thank you for your appreciation on my first and real story based on my friend's life prints.
I hope this story will guide those who are laziness to work by saying no luck no luck.
Abu asif.
காதர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அதிரை நிருபரின் எழுத்தாளர் வட்டத்துக்குள் உள்நுழையும் உனக்கு மனமார்ந்த வரவேற்பும் வாழ்த்துகளும். ஒரு கதைசொல்லியின் திறன் உன் எழுத்தில் மிளிர்கிறது. சம்பவங்களை எழுதும்போது கோர்வைப் படுத்துதல் மிக முக்கியம். அதில் இன்னும் சற்று கவனம் செலுத்து. கடினமான விடயங்களைச் சொல்ல முற்படும்போது நீண்ட வாக்கியங்களாக எழுதுவதைத் தவிர்த்து சிறியச் சிறிய வாக்கியங்களாக எழுது.
அதிகமதிகம் எழுத எழுதவே எழுதுவது வசப்படும்.. வாழ்த்துகள்!
என்ன இது, எடுத்தவுடனே என்னைப் பற்றி எழுதியிருக்கிறாய்? (என்னைப் பற்றித்தானே?) பள்ளிக்கூடம், புதுக்கல்லூரி, சவுதி அரேபியா என நாம் ஒன்றாய் இருக்க அதிக வாய்ப்புகள் கிடைத்ததால்தான் உன்னால் என்னை இந்த அளவிற்கு பக்கத்திலிருந்து அவதானிக்க முடிந்திருக்கிறது. எல்லா மனிதர்களுக்கும் உண்டான பலகீனங்களோடுதான் நானும் வாழ்ந்து வருகிறேன் எனினும் அத்தகையவற்றை இங்கு குறிப்பிடாமல் என் நல்லவற்றை மட்டுமே வெளிச்சொல்லியிருப்பது உன் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
உழைப்பே உயர்வு என்னும் ஒரு சிறந்த வாழ்வியல் தத்துவத்தை உலகிற்குச் சொல்ல என் வாழ்வை உதாரணமாக எடுத்துச்சொன்னதன் மூலம் என்னை மேம்படுத்திவிட்டாய்.
நன்றியும் வாழ்த்துகளும்
பள்ளிப்பாடங்களில் பெரும்பாலான உழைத்து உயர்ந்தவர்களின் வாழ்க்கையே பாடபுத்தகத்தில் இடம்பெரும். அது புது தலைமுறைக்கு ஒரு உந்துதலாக இருக்கும், துன்பம் வரும்போதெல்லாம் முடங்கிவிடாமல் மேலும் முன்னேர இத்தகைய பாடம் ஒரு உந்து சக்தி. சகோ அபு ஆசிப் அவர்களின் நண்பர் (சபீர் காக்கா)போல் நம்மூரிலேயே நிறைய வாழ்க்கையை வென்ற உழைப்பாளிகள் இருக்காங்க, இதுமாதிரியானவர்களின் வாழ்க்கையை ஒரு தொடராக எழுதினால் இப்போதுள்ள சந்ததினருக்கு ஒரு எ.கா அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சகோ அபு ஆசிப் அவர்களின் கன்னி எழுத்தில் சாதிக்கவேண்டிய ஊக்கம் இருப்பது மகிழ்ச்சி.. மேலும் தொடர்ந்து எழுத என் ஆசை...
//உழைப்பே உயர்வு என்னும் ஒரு சிறந்த வாழ்வியல் தத்துவத்தை உலகிற்குச் சொல்ல என் வாழ்வை உதாரணமாக எடுத்துச்சொன்னதன் மூலம் என்னை மேம்படுத்திவிட்டாய்.//
உண்மையைத்தானே என் கன்னி எழுத்தில் வடித்தேன் நண்பா !
அபு ஆசிப்.
இந்த தடை கற்களே படி கற்களாய் கட்டுரையின் சம்பவங்களை நான் லைவ்வாக பார்த்தவன் என்பதால் இந்த கட்டுரையை படிக்கப் படிக்க மலரும் நினைவுகளை மணம் அசை போட்டது .ஒன்று விடாமல் புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள்
அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் சம்பந்தம் இருக்கோ இல்லையோ ஆனால் இந்த அப்துல் காதர்களுக்கும் தமிழுக்கும் ஏதோ ஒருவகையில் நெருங்கிய சம்பந்தம் (தொடர்பு) இருக்கு என்பதற்கு எடுத்துக்காட்டாய் ஒரு சில வார்த்தைகள் இங்கே
"இடை மறிப்பதுண்டு"
"தூண்டுகோலாலும்"
"உந்தித்தள்ளும் உணர்வு"
"ஏழ்மை என்னும் ஆடை"
"பாசமிக்க பந்தம்"
"சொல்லவொண்ணா சோதனைகளுக்கிடையில்"
"சென்றான் சவுதி"
"இருவரின் கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போடும் நிலை"
" தன் வாரிசை ஈன்றெடுக்குங்கால்"
"கலங்கி நின்ற கணம் என் கண் முன்னே இன்றும் நிழலாடுகின்றது"
"அலுவலகத்தில் எல்லமாகிப்போனான்"
"அங்கேயும் கட்டில் போட்ட இடங்களில் தொட்டிலும் போடப்பட்டது"
"இப்போது எல்லோரும் எழுதலாம்"
என்ற கட்டுரையின் தாக்கம் இப்போது அதிரை நிருபரில் ஆரம்பம் ஆகி விட்டது. தமிழ் எழுத்தாம் முதல் எழுத்து "அ"(ப்துல் காதரில்) இருந்து தொடங்கி விட்டது
அஸ்ஸலாமு அலைக்கும் அப்துல் காதர் காக்கா,
உண்மையான நட்பின் வெளிப்பாடு இந்த பதிவு. நம் சபீர் காக்காவை பற்றிய அறியாத பல செய்திகளை படித்தது கண்கலக்கதுடன் சந்தோசமடைந்தேன்.
// சோதனைகளில் துவண்டு விடாமல்,உழைப்பு என்னும் ஆயுதம் ஏந்தும் எவனும் எவரிடமும் கையேந்த வேண்டிய அவசியமே இல்லை என்னும் ஒரு நெஞ்சுறுதி வேணும். , எக்காரணம் கொண்டும் , இறைவனுக்கு மாறாகவோ, அல்லது ,குறுகிய காலங்களில் நிறைய திரட்டிவிடவேனும் என்னும் பேராசையால் உந்தப்பட்டு,தூய்மையற்ற வழியில் செல்வம் திரட்ட முற்பட்டாலோ அது வரும்போல் தெரியும், நம்மை அறியாமலேயே , நம்மை விட்டு பாவக்கறைகளை நம்மிடம் தந்து விட்டு, சொல்லாமல் செல்வோம் என்று வந்த செல்வம் சென்றுவிடும். //
நிறைய சகோதரி சகோதரர்களுக்கு 100% உண்மை காக்கா நீங்கள் சொன்னது.
ஜஸக்கல்லாஹ் ஹைரா.
அவன் காலம் என்னும் கொல்லன் உலையில் அகப்பட்ட விறகல்ல-இரும்பு. அடிமேல் அடி வாங்கினாலும். கூரியவாள் ஆனான். வேல் ஆனான்.. அவன் தாயேயும், தந்தையையும் பேணிய விதம் அறிந்து
அவனை நான் மனதுக்குள் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் என் வெளிவூர் நண்பர்களிடமும் எட்டுதுக் காட்டாய். அவனுக்கும் எனக்கும் அவளவு நெருங்கிய பழக்கம் கிடையாது. என் மகனின் நண்பன்... அது வேறு யாருமல்ல மருமகன் சபீர்அபுஅபுசாருக்கேதான்.
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் என் தந்தை மருமகன் சபீரின் தந்தையிடம் கொடுத்து அனுப்பிய 'கை'கடிகாரத்தை என்னிடம் கொடுக்கும் போது என்னைப் பார்த்து விட்டு சொன்ன வார்த்தை ''இந்தா உன் வாப்பா கொடுத்த
கடியாரம்! இடுப்பில் கட்டிக் கொள்!'' [''குறிப்பு=இங்கே'அவன்-அவன்'என்று சொன்ன தெல்லாம் மரியாதை குறைவாக சொன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு'சஸ்பென்ஸ்'காக போட்ட போடுதானே தவிர வேறு எதுவுமல்ல].
S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்
Assalamu Alaikkum
Dear Abu Asif,
Thanks for sharing a real story of brother Mr. Sabeer AbuShahrukh.
Mr. Sabeer AbuShahrukh mentioned himself in the article
இப்போது எல்லோரும் எழுதலாம்... by Mr. Zakir Hussain that
//எல்லாவற்றிலும் மீண்டெழும்போதுதான் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்னும் கொள்கை வெறியாகிப்போய் முன்னேற்றம் கைவசப்பட்டது.//
A great principle of personal success which should be adopted by any individual who wants success and prosperity.
Its an experience(THE MOTIVATING PAIN) to be felt in addition to repeat the above principle.
Your writing explore the similar principle of "Hard Work Leading to Success".
Keep writing more and more inshaAllah.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
27 வருடங்களுக்குப் பின்னால்....தம்மாமில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென்று வேலை இழந்து, மறுவேலை தேடிக்கொண்டிருந்த என்னிடம், தன் ரீஜனல் மானேஜருக்கு ரெண்டுவரி டைப் செய்து கைக்கடிதம் தந்து அனுப்பினான் சபீர். அந்த வரிகளைப் படித்ததும் என்னை ஏறிட்டுப் பார்த்த ROY VILLY என்ற அந்த வெள்ளைக்காரன் எனக்கு அளித்த மரியாதையே தனி! சபீர் அப்படி என்னதான் டைப் பண்ணியிருந்தான் தெரியுமா?
I SEND MY FRIEND IQBAL TO YOU FOR THE SUITABLE POSITION.
I AM SURE, 'HE IS BETTER THAN ME'.
அந்த வாசகத்துக்கு நான் பொருத்தமானவன் இல்லை என்பதே நிஜமானது என்பதை அறிந்தும் இப்படி எழுதித் தந்திருக்கின்றானே என்பதை நான் உணர்ந்தபோது, தன் பெருந்தன்மையால் என் மனதில் இன்னும் ஒரு படி மேலே உயர்ந்து நின்றான் என் நண்பன். அவன் தான் அப்துல் காதர் எழுதி இருக்கும் தடைக் கற்களைப் படிக்கற்களாக்கிய அதே சபீர்!
//I SEND MY FRIEND IQBAL TO YOU FOR THE SUITABLE POSITION.
I AM SURE, 'HE IS BETTER THAN ME'.//
= சிபாரிசுக் கடிதத்தையும் கவிதையாக எழுத முடியுமா? சபீரால் முடியும் என நினைக்கிறேன்.
ஒருமுறை நண்பர்கள் கூட இருந்த ஒருவரை ஊர் பெரிய மனிதர் அழைத்து உன்னிடம் தனியாக பேச வேண்டும் உன் நண்பர்களை அனுப்பி விட்டு வா என்றாராம் அதற்க்கு அந்த ஒருவர் ஊர் பெரியவரிடம் நீங்கள் எது பேசுவதாக இருந்தாலும் என் நண்பர்களை வைத்துக்கொண்டே பேசுங்கள் நான் என் நண்பர்களை அனுப்பி விட்டு தனியாக உங்களிடம் பேசினால் அது எனக்கு கெவ்ரவமான செயல் அல்ல அப்படியோ நீங்கள் என்னிடம் தானியதான் பேசனும் என்றால் அப்படியாப்பட்ட செய்தி எனக்கு அவசியமே இல்லை என்று சொல்லி நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த அந்த ஒருவர் யார் தெரியுமா
சபீர் தன்
கூட இருந்த நண்பர் யார் என்று யாராச்சும் சொல்லுங்களேன்!!
அஸ்ஸலாமுஅலைக்கும். இந்த ஆக்கம் படித்ததும் உடன் கருத்திட முடியாமல் ஒருவித பதட்ட நிலை எனக்கு. ஆனந்த கண்ணீர். இவரை பற்றி பதினேழுவருடத்திற்கு முன்பு கேள்விப்பட்டு இந்தகதையின் நிஜ நாயகனை பார்க்க துடித்ததுண்டு!ஆனாலும் வாகன வசதி மற்றும் வாரத்துக்கு ஒருமுறை நண்பர்கள் சந்திப்பு என வரும் சூழலில் என்னை அவரிடம் அழைத்துப்போக முடியாத சூழலில் எனக்குத்தெரிந்த நண்பர்கள் இருந்தனர்! நண்பன் நவாசின் மரணத்தில் அவனை அடக்கம் செய்த அந்த தருனம் இந்த கருப்பு தங்கத்தை( கோவமில்லேயே?) நான் பார்த்தேன்! அந்த இறுக்கமான சூழலில் ஏதும் பேசிகொள்ளமுடியவில்லை!காலம் உருண்டோடி இப்ப அவரிடம் நெருங்கி அலாவலாவ முடிகிறது அல்லாஹ்வின் கிருபைதான். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் அவரின் ஆயுளை நீடித்து உடல் ஆரோக்கியத்தை வழங்குவானாக ஆமீன்.
முதலில் நண்பன் அப்துல் காதருக்கு ஒரு சல்யூட்.!
இந்தக்கட்டுரையை வாசித்த மற்றவர்களுக்கு எப்படியிருந்ததோ எனக்குத்தெரியாது. ஆனால் என்கண்கள் மட்டுமல்ல.என் உள்ளமும் சேர்ந்து கலங்கியது.
காரணம் எங்கள் நண்பன் சபீரின் வாழ்க்கை கதையை அறிந்தவனில் நானும் ஒருவன். என்னுடைய கிளாஸ் மேட் என்று சொல்வதை விட அவனுடைய கிளாஸ் மேட் நான் என்று சொல்லிக்கொள்வது எனக்கு பெருமையாக உள்ளது.
அதை விரிவாக சொல்ல வேண்டுமென்றால் அதற்காக ஒரு கட்டுரைதான் எழுத வேண்டும்.
நட்பு வட்டாரங்கள் யாரும் நினைக்காத நமது நண்பன் சபீருடைய வாழ்வில் நடந்த நிகழ்வையே கருவாய் எடுத்து ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல நமது நண்பன் சபீருடைய வாழ்க்கையை சுயசரிதையாய் வடித்ததுடன் அந்த வாழ்க்கைக்கருவையே மையகமாக வைத்து தன்னம்பிக்கையும் நேர்மையான நடத்தைகளும் அயராத உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் எந்தளவுக்கு முன்னேறலாம் என்பதை தெள்ளத்தெளிவாக சொல்லியிருக்கிறாய். வாழ்த்துக்கள் நண்பனே.!
//A great principle of personal success which should be adopted by any individual who wants success and prosperity. //
absolutely.
abu asif.
//கூட இருந்த நண்பர் யார் என்று யாராச்சும் சொல்லுங்களேன்!!//
இதைக் கண்டு பிடிக்க தனிப்படை அமைக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். இந்த சம்பவத்தை எழுதிய சாகுலே உடன் இருந்து இருக்க வேண்டும். சரியா?
Ebrahim Ansari சொன்னது…
//இதைக் கண்டு பிடிக்க தனிப்படை அமைக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். இந்த சம்பவத்தை எழுதிய சாகுலே உடன் இருந்து இருக்க வேண்டும். சரியா?//
அது நான் இல்லை மாமா
உண்மையாக உழைக்க மட்டும் தெரிந்தாலே போதும்; உயர்வை அல்லாஹ் வழங்குவான். எனக்கு வாழ்க்கை இடறிவிடும்போதெல்லாம் விழுந்துவிடாமல் தூக்கி விட கைகள் இருந்தன.
தன் பிள்ளைகளைவிட என்மேல் பாசம் காட்டி வளர்த்த என் யூனுஸ் மாமா.
அந்த பாரபட்சத்தைப் பொறுத்துக்கொண்ட என் பரகத் மாமி.
தான் ஏழ்மையில் இருந்தும் என்னை ட்டெலெக்ஸ் ஆபரேட்டர் கோர்ஸ் படிக்க வைத்த என் முஹம்து அலி. தம் தொழில் சார்ந்த அத்துணை வேலைகளையும் போட்டுவிட்டு என் மகள் படிப்பிற்காக என்னோடு சென்னையில் அலைந்தும் லட்சக்கணக்கில் உதவியும் கைகொடுத்த அதே அலி.
தனக்கு ஆர்வமில்லாவிடினும் எனக்காக தன் தந்தையிடம் தான் படிக்க என்று சொல்லி என்னை BDPSல் கம்ப்யூட்டர் ப்ரொக்ராமிங் படிக்க வைத்த என் ஜாகிர்.
மகளின் மருத்துவப் படிப்பிற்கான செலவுகளுக்காக கலங்கி நின்றபோது குறுகிய காலத்தில் லட்சக்கணக்கில் உதவிய என் நண்பர்கள் இக்பால், நிஜாம்.
முன்பின் தெரியாத என்னைத் தன் ஷார்ஜா வீட்டில் இரண்டு மாதகாலம் தங்க வைத்து அண்ணனைப் போல் மரியாதையாகவும் நண்பனைப் போல் அன்பாகவும் பார்த்துக் கொண்ட யாசிர்.
எள் என்னும் என் எண்ணங்களை எண்ணெயாய் ஆக்கித்தந்த ஹமீது.
என் ஒழுக்கத்திற்கும் மார்க்க ஈடுபாட்டுக்கும் உறுதுணையாக இருந்த ரியாஸ், ஹாஜா, ஆஷிக், காதர்,இர்ஃபான், செய்யது.
என்று நீளும் என் பட்டியலில் உடன்பிறந்தவனைப்போல பாசம் காட்டும் அபு இபுறாகீம் தாஜுதீன் ஆகியோரும் இணைந்து கொள்ள சுகமாகப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
ஃபாருக் மாமா, தாங்கள் என்னை ஒருமையில் அழைப்பதில் உங்களோடான உறவில் நெருக்கத்தையே உணர்கிறேன்.
இபுறாகிம் அன்சாரி காக்கா, ஹமீது குறிப்பிடும் ஆள் ஜாகிர்.
காதர், இது உன் பதிவு. மேற்கொண்டு நீயே ஏற்புரை எழுதிவிடு.
எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் !
எழுத நிறைய இருக்கிறது...
அ.க. காக்கா: நீங்கள் ஆரம்ப காலங்களிலிருந்து அருகில் இருந்து அவதானித்ததை உணர்வுப் பூர்வமாக பதிந்து இருக்கிறீர்கள் !
குறைந்த காலங்களில் மூத்த சகோதரனை, முட்டி மோதவும், கட்டியணைக்கவும் தூண்டும் நெருங்கிய நண்பரை, அதிமுக்கியமாக சிக்கலில் இருக்கும்போது சின்னபின்னாமாக விடாமல் சிற்பங்களை செதுக்குவது எப்படி என்று உளி பிடிக்க கற்றுக் கொடுக்கும் சிற்பி ! (இது மிகைப் படுத்தப்பட்டதல்ல) காத்திருந்தேன் அவர்கள் மீது எனக்கு இருந்த தூய எண்ணைத்தை வெளிப்படுத்த இந்தப் பதிவு நல்லதொரு வடிகால் !
மீன்டும் முதல் வரியிலிருந்து (ஒன்ஸ்மோர் படிங்களேன்) !
எங்கள் துஆ - "யா அல்லாஹ் ! அவர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடு !" இன்ஷா அல்லாஹ் !
அதிரை நிருபர் கவனத்திற்கு,
இதுபோன்ற சக்ஸஸ் ஸ்டோரி கவரேஜ்களை நீங்கள் தொடர்ந்து பதியலாம். அது சுய முன்னேற்றச் சரிதையாகவோ தன் நண்பர் அல்லது தெரிந்தவர்களைப்பற்றிய சரிதையாகவோ இருக்கும் பட்சத்தில் அவற்றை வரிசையாக
இப்பதிவின் தலைப்பான "தடைக்கற்களே படிக்கற்களாய்" என்னும் தொடராகவே பதியலாம். என்னிடமும் ஒரு மிகச் சுவாரஸ்யமான வெற்றிப்பாதை வகுத்துக்கொண்ட நண்பரின் சரிதை உண்டு.
அடுத்த வாரம் எழுதித் தர முயல்வேன்.
இது அப்துல் மாலிக்கின் கருத்தை வழிமொழியவே.
சபீர்,
என் கன்னிப்பதிவை உன் சொந்த வாழ்க்கையை ஆதாரமாகக்கொண்டு எழுதிய மைக்கு இவ்வளவு வரவேற்ப்பும் எழுச்சியும் நிறைந்த பின்னூட்டங்கள் வருமென்று தெரிந்து இருந்தால், இதை அதிரை நிருபரில் அறிமுகமான அன்றே எழுதி இருப்பேன்.
கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஏனனில் உன் அனுமதி முதலில் எனக்கு கிடைக்க வேணும். என் வாழ்வில் நான் எழுதிய முதல் கதையாக இருப்பதால் எத்தனையோ தவறுகள் முன்னுக்குப்பின் முரணான விஷயங்களை பதிந்து விடக்கூடாது என்பதால். கொஞ்சம் யோசனைக்கு பிறகே இதை நான் A.N. வலை தளத்தில் உலாவ விட்டேன்.
உன்னைப்பற்றி அறிந்தவன் என்ற முறையிலும் நீ என் கதைக்கு தேர்ந்தெடுக்க ஒரு நல்ல கரு என்று என் உள் மனது ஆழமாக என்னிடம் பேசியது நீ எழுது எழுது என்று.
அதனால்தான் இந்தப்பதிவு.
என் முதல் கதையை மெச்சி என்னை அடுத்த ஒரு எழுத்துக்கு இட்டுச்செல்லும் அளவுக்கு பின்னூட்டங்கள் மூலம் என்னை ஊக்கப்படுத்திய
அனைவருக்கும் அல்லாஹ் தன அருளை வாரி வழங்கட்டும்.
ஆமீன்.
அபு ஆசிப்.
sabeer.abushahruk சொன்னது…
என்று நீளும் என் பட்டியலில் உடன்பிறந்தவனைப்போல பாசம் காட்டும் அபு இபுறாகீம் தாஜுதீன் ஆகியோரும் இணைந்து கொள்ள சுகமாகப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
-----------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். எனக்கு அருகில் இருக்க கொடுப்பினை இதுவரை இல்லை ! நான் என்ன செய்வேன் காக்கா!ஆனாலும் அந்த குறையை நிவர்த்தி செய்வது என் இரு சகோதரர்கள்., ஆத்ம திருப்திதான். அல்ஹம்துலில்லாஹ்.
வ அலைக்குமுஸ்ஸலாம் கிரவுன்.
அதனாலென்ன கிரவுன்? கலை இலக்கியம் என்கிற என் மற்றொரு பக்கத்தைப் பற்றி பேசு முனைந்தால் அதில் மகுடம் சூடி தலைமை வகித்துக் கொண்டிருப்பது தாங்கள்தானே?
sabeer.abushahruk சொன்னது…
வ அலைக்குமுஸ்ஸலாம் கிரவுன்.
அதனாலென்ன கிரவுன்? கலை இலக்கியம் என்கிற என் மற்றொரு பக்கத்தைப் பற்றி பேசு முனைந்தால் அதில் மகுடம் சூடி தலைமை வகித்துக் கொண்டிருப்பது தாங்கள்தானே?
------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். கலை,இலக்கியம் தாண்டித்தான் நான் வேண்டுவதும் விரும்புவதும், ஒரு நல்ல மனிதனின் நட்பையும் அன்பையும் இதில் ஒளித்துச்சொல்ல என்னிடன் ஏதும் இல்லை அன்பைத்தவிர!
என் இனிய நண்பரும், என் உயிர் நண்பன் தமீம் உடைய மாமாவுமாகிய அப்துல்காதர் அவர்கள் துவக்காமாக எழுதத் துவங்கிய ஆக்கமே துடிப்பும், படிப்பும் நிறைந்த கவிவேந்தர் சபீர் அவர்களைப் பற்றியது என்பது படிக்கப் படிக்க எனக்குள் ஓர் ஆதங்கம்; இவ்வளவுக்கும் ஒரே சமயத்தில் ரஹிமாவில் இருந்திருக்கின்றார்கள்; நான் அல்கோபரில் இருந்திருக்கின்றேன்; அன்பு நண்பன் அதிரை மன்சூர்க்கும் அறிமுகமாகியிருக்கும் இக்கவிமுகம் எனக்கு ஏன் நட்பின் வட்டத்துக்குள் அன்றே வரவில்லை; வந்திருந்தால், இப்படிப்பட்ட மேன்மையும், தூய்மையும், வாய்மையும், ஆற்றலும் மிக்க ஒரு முன்னுதாரணமானவரை முன்னரே நண்பராய்ப் பெற்று நாமும் இவர்களிடம் கற்றிருக்கலாம் என்றே நினைக்க வைத்து விட்டன, உங்களின் வரிகள். ஆயினும், தாமதமாகக் கிட்டினாலும் தரமாகவே எனக்குக் கிட்டிய கவிவேந்தரின் நட்புக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
கவிவேந்தரிடம் எனக்குப் பிடித்தமான ஓர் அரிய பண்பு:
நண்பராக அல்லது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்தாலும், தனக்குச் சரியாகப் படாத அல்லது உடன்படாத கருத்துக்களை நேருக்கு நேராகவே எழுத்தால்- பேச்சால் உடனுக்குடன் திருத்தி தன் கருத்தின் உண்மையை நிலைநாட்டி விடுவார். இஃது எனக்கு அவர்களிடம் ஏற்பட்டு வரும் அலாதியான ஓர் அனுபவம். இதனாற்றான், பொதுவாகவே, என் கவிதைகளை வெளியிடு முன்னர் இவர்களின் மின்மடலுக்கு அனுப்பி விடுவேன்; அதில் குறைகள் இருந்தால் தயங்காமல் சொல்லித் திருத்தம் செய்வார்; தமியேனும் வயது வேறுபாடு பாராமல் உளத்தூய்மையுடன் இவர்களின் திருத்தங்களை ஏற்று அதன்படி மாற்றம் செய்தும் உள்ளேன். தமியேனும் அத்திருத்தங்களை ஏற்பதை இவர்களும் என் உளம்நிறைவான அவர்களின்பால் உண்டாகியிருக்கும் நட்பை எண்ணி அகமகிழ்ந்திருக்கின்றார்கள்.
மேலும், பொது நிகழ்வுகளில் என்னைப் பெயர்ச் சொல்லி அழைக்காமல் “கவியன்பன்” என்று அன்பொழுகும் ஒரு ரீங்காரத்துடன் அழைப்பது ஏன் என்று அவர்களிடமே கேட்டுள்ளேன்; அதற்கு அவர்கள் சொன்ன பதில்: “ உங்களின் மீதுள்ள மதிப்பு என்னை பெயர் சொல்லி அழைக்காமல் உங்கட்குரிய தகுதியைச் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்று என் மனம் நாடுகிறது” என்று நேராகவே சொல்லிய போழ்து என் மனம் இவரின் அன்பை, பண்பை, பெரியவர்களை மதிக்கும் நல்லெண்ணத்தை எண்ணி நாடோறும் மனத்தினில் மதிப்பு என்னும் இருப்பிடத்தில் உட்கார வைத்துள்ளது. இப்பொழுது, இவர்களின் சுயசரிதம் படிக்கப் படிக்க எம் வாழ்வின் படிக்கட்டுகளிலும் இவர்களை முன்னிறுத்தியே என் கண்கள் நிற்கும், இன்ஷா அல்லாஹ், அவ்வளவு ஆழமான அனுபவங்கள் உள,
பேரும் புகழும் கிட்டியபொழுதும் “தன்னடக்கம்” மின்னும் இவரிடம் தன்னைவிட வயதில் குறைந்த அன்புத்தம்பி தஸ்தகீர் அவர்களை “இலக்கிய உலகின் மகுடம்” என்று உளம்நிறைவாய- உளத்தூயமையாய் கூப்பிடும் ஓர் அற்புத மனிதரைக் காண்கிறேன்; இதற்கெல்லாம் அடிப்படையில் உண்டான மார்க்க அறிவும் ஒரு காரணமாகும் என்று நினைக்கிறேன்.
“எழுது எழுதப்படுவாய்;
படி படிக்கப்படுவாய்”
என்பது கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகள்; அதனை உண்மையாய்க் காண வைத்து.
எழுதும் இந்தக் கவிவேந்தரைப் பற்றி இன்று எழுதப்பட்டதும்
படிக்கும் இந்தக் கவிவேந்தரைப் பற்றி இன்று படிக்கப்பட்டதும்
கவிப்பேரரசின் வரிகளே
கவிவேந்தரின் வாழ்க்கையில்..
என்றே ஆகிப்போனது!
ஆழிய நட்பின் இலக்கணமாய்த் திகழும் கவிவேந்தர் சபீர் அவர்கள் வாழிய நீடுழி என்று துஆ செய்கின்றேன்.
அன்பிற்குரிய கவியன்பன்,
தங்களின் துஆவுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் வல்ல அல்லாஹ் எல்லா பாக்கியங்களும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தந்தருள என் துஆ.
//என் கவிதைகளை வெளியிடு முன்னர் இவர்களின் மின்மடலுக்கு அனுப்பி விடுவேன்; அதில் குறைகள் இருந்தால் தயங்காமல் சொல்லித் திருத்தம் செய்வார்; தமியேனும் வயது வேறுபாடு பாராமல் உளத்தூய்மையுடன் இவர்களின் திருத்தங்களை ஏற்று அதன்படி மாற்றம் செய்தும் உள்ளேன்.//
நூற்றிலொரு கவிதையில் மட்டுமே என் அபிப்ராயத்தைச் சொல்லியிருக்கிறேன். அவற்றைத் திருத்தஙகள் என ஏற்றது தங்களின் பெருந்தன்மை. மற்றபடி, குறைகுற்றம் சொல்லமுடியாத புலமைக்குச் சொந்தக்காரரான தங்களின் கவிதைகளுக்கு என்றுமே நான் ரசிகன்தான், அவை ஓர் அற்ப காரணத்திற்காக இங்கு பதியப்படாமல் இருந்தாலும் எங்கெல்லாம் பதியப்படுகின்றனவோ அங்கெல்லாம் தேடி சென்று வாசிப்பதை நீங்கள் அறிவீர்கள.
அன்பிற்கு நன்றி.
ஜஸாக்கல்லாஹ் கைரன, கவிவேந்தரே!
தனிமடல் காண்க. இறையருளால், என் கவிப்பயணத்தின் உலகளாவிய ஓர் இலக்கை உங்களுடன் பகிர்ந்தும், அதற்கான என் படைப்பில் உங்களின் திருத்தமும் வேண்டி நிற்கிறேன்; ஏற்கனவே, அன்புச் சகோதரர்கள். இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் மற்றும் அஹ்மத் அமீன் ஆகியோரின் பார்வைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அப்துல் காதர் சமூகத்திற்கு...
இப்பவும் இங்கு யாவரும் நல்சுகம், அங்குள்ள நலத்திற்கு தாக்கல் எழுதவேண்டியது..
இங்கு பெருநாள் வேலைகளில் வீட்டுக்கு ஒட்டடை அடிப்பதிலிருந்து , வீட்டில் உப்பு , புளி சமாச்சாரங்கள் குறையும் பச்சத்தில் நான் தான் போய் வாங்க வேண்டும் என்ற "வரம்" வாங்கி வந்திருப்பதால் உடனே கருத்து எழுத முடியவில்லை.
இப்போது பெருநாளும் சேர்ந்து கொண்டதால் டிரஸ் எடுக்க நின்ற வலியால் காலில் Knee Guard போடும் அளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பதால் தாமதத்திற்கு மன்னிக்கவும். பெண்கள் ஆயுசுக்கும் அந்த ஒரே டிரஸ்தான் உடுத்தப்போவது மாதிரி டிரஸ்ஸை தேர்ந்தெடுப்பதும், அதற்கு பணம் கொடுக்க ஆண்கள் தேமே என்று நிற்பதும் எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் ' ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று " என்ற பாடல் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும், அவசரப்பட்டு ரிலீஸ் செய்துவிட்டார்கள்.
உன் எழுத்தில் ஏதோ ஒரு ;'இது" இருக்கிறது. தொடர்ந்து எழுதினால் நல்லபடியாக "பத்தி"க்கொள்ள வாய்ய்பு இருக்கிறது. நிறைய எழுது. வழக்கமான தமிழை தவிர்த்தல் நலம் [ முடிந்தால் ].
//இபுறாகிம் அன்சாரி காக்கா, ஹமீது குறிப்பிடும் ஆள் ஜாகிர்.//
இதில் ஆச்சரியம் இல்லை. ஈருடல் ஓருயிராய்க் காணும் இந்த நட்புப் பயணத்தில் ஆச்சரியம் இல்லை. இருவருக்கும் நல் வாழ்த்துக்கள்.
ஜாகிர் ,
நீ லேட்டா வந்தாலும் தக்க காரணத்தோடு வந்ததால் லீவ் லெட்டெர் ( தாமத அனுமதி) இல்லாமல் ஏற்றுக்கொள்கின்றேன்.
அபு ஆசிப்.
Post a Comment