பெரிய ஜமீன்தாருடைய உயிர், நீதிமன்றப் படிக்கட்டுகளில் பிரிந்து சென்ற செய்தியை கண்ணீர் மல்கக் கைத்தடி சொன்னதும் அந்தத் துன்பத்தில் படிக்கட்டும் பங்கு கொண்டது. ஆனாலும் தொடர்ந்து ஆறுதலாக சொன்னது, “சரி கைத்தடி கண்களை துடைத்துக் கொள் ! மனிதராகப் பிறந்தவர் மறையத்தானே வேண்டும். பெரியவர் இப்படி இறந்ததும் அந்தக் கேசும் முடிந்து போயிருக்குமே!" என்று கேள்வி எழுப்பியது.
“அதுதான் இல்லை, பெரிய ஜமீன்தாரின் மூத்த மகன் செல்வம் பொறுப்பை எடுத்துக் கொண்டார். என் அப்பா உடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டுமானால் அந்த வரப்பையும் வழக்கையும் எங்களுக்கு சாதகமாக வாங்கியே தீருவேன் என்று அவரது சாம்பல் மீது சத்தியம் செய்து நெற்றியில் தீட்டிக் கொண்டு வழக்கைத் தொடர்ந்தார்." என்றது, பெரிய ஐயா மறைத்தாலும் காரை விட்டு கழற்றி விடப்படாத கைத்தடி
“அப்போ வழக்கில் ஜெயிச்சுட்டாரா? “ என்று ஆவலுடன் கேட்டது படிக்கட்டு.
“அடப்பாவி! அவ்வளவு எளிதாக நம்ம கோர்ட் தீர்ப்பு சொல்லி விடுமா? இளைய ஜமீன்தார் செல்வமும் தனது சகாக்களுடன் கோர்ட்டுக்கு வந்தார். அங்கே இதற்கு முன் இருந்த நீதிபதி பதவி உயர்வு பெற்று வேறு ஊருக்குப் போய் விட்டார். இப்போ ஒரு புது நீதிபதி, வக்கீலாக இருந்து ஆளும் கட்சிக்கு ஆதரவான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் பதவி உயர்வு பெற்று வந்து உட்கார்ந்து இருந்தார். இதைப் பார்த்த செல்வம் தவறான கோர்ட்டுக்கு வந்து விட்டோமா என்று சுற்றிப் பார்த்துக் கொண்டார். அந்த நீதிமன்றத்தின் ஆயுத பூஜைக்குக் கூட அடிக்கப் படாத ஒட்டடையையும் நின்று கொண்டிருந்த ஓட்டை வாய் டவாளிப் பியூனையும் வாசலில் கிடந்த ராபர்ட் கிளைவ் காலத்து வருடக் கணக்கான பாதாம் மரத்து உதிர்ந்த இலைகளையும் பார்த்து விட்டு நாம் வரவேண்டிய கோர்ட்டு இதுதான் என்று முடிவுக்கு வந்தார்.
மேலும் எங்கள் ஜமீனுடைய வக்கீலும் ஒரு பீத்தல் கோட்டைப் போட்டுக் கொண்டு மேற்கூரையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தார். அன்று காலை வீட்டில் உப்புமா சாப்பிட்டு இருப்பார் போல எனக்குத் தோன்றியது. காரணம் கோர்டில் அங்கங்கு வெந்து போன ரவாவின் துகள்கள் பொட்டுப் பொட்டாகத் தெரிந்தன. தன் வீட்டில் ஒழுங்காக சாப்பிடக் கூடத் தெரியாத வக்கீல் வழக்கை எப்படி நடத்துவாரோ என்று எனக்கு சந்தேகமும் ஏற்பட்டது. சின்ன எஜமான் பேசட்டும் என்று பல்லைக் கடித்துக் கொண்டு இருந்து விட்டேன்.
நீதிபதி ஏதேதோ பேப்பர்களைப் பார்த்து விட்டு எதிர்க் கட்சி வக்கீல் இடமும் பேசிவிட்டு வழக்கை வரும் பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன் என்று சொன்னார். களைத்துப் போன எல்லோரும் கலைந்து போனார்கள். எல்லோரும் போன பின்பும் அந்தக் கோர்டில் இருந்த ஆங்கிலேயர் காலத்துக் காற்றாடி மட்டும் ஓடிக் கொண்டே இருந்தது. அதை நிறுத்த வேண்டிய பியூன் தலையின் பிடரியில் பேன் இருக்கும் போலத் தெரிந்தது. அதனால் இன்னொரு வாதியின் முன் நின்று பிடரியை சொரிந்து கொண்டிருந்தார்.
கோர்ட்டில் இருந்து வந்துவிட்டோம். அடுத்த வாய்தாவுக்கு நாள் இருந்தது. இடையில் சின்ன எஜமானுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. இருமலில் ஆரம்பித்து நாளுக்கு நாள் உடலும் இளைத்து வந்தது. நடக்க சிரமப் பட்டார். அதுவரைக்கும் சற்று ஓய்வாக இருந்த அவர், காரிலேயே இருந்த என்னைக் கையில் எடுக்க ஆரம்பித்தார். பெரிய ஐயா மாதிரியே நாளடைவில் என் துணை இல்லாமல் நடக்க முடியாத நிலை இவருக்கும் ஏற்பட்டது. மருத்துவரிடம் தினமும் போனார். மருத்துவர் மாற்றி மாற்றி எழுதித்தந்த மருந்துகளாலும் சாயத் தண்ணீர்களாலும் மருந்துக் கடைகள் செழித்தன; மருத்துவமனைகள் கொழித்தன ; என் எஜமானோ இளைத்தார்.
ஆனாலும் ஒரு நம்பிக்கை அவருக்குள் ஓடிக் கொண்டி இருந்தது. இதோ விரைவில் பிப்ரவரி வருகிறது வழக்கு முடிவுக்கு வந்துவிடும் வரப்பும் கைவசமாகி விடுமென்று நம்பி நாட்களை நகர்த்திக் கொண்டு இருந்தார்.
இதோ அன்று பிப்ரவரி இருபத்தி எட்டு. டிரைவரை முன்னெச்சரிக்கையாக அழைத்தார். இன்று தேதி இருபத்தி எட்டு நாளை கோர்ட்டுக்குப் போக வேண்டும். வண்டியை தயார் செய்து வைத்துக் கொள் கடைசி நேரத்தில் வீலில் காத்து இல்லை அது இல்லை இது இல்லை என்று சொல்லாதே என்றார். டிரைவர் எஜமானை ஒரு மாதிரியாகப் பார்த்து சிரித்தார். ஆனாலும் சரியென்று சொல்லி விட்டு சென்றார். எஜமான் என் துணையுடன் மாடிப் படியேறி நாளை சீக்கிரம் எழுந்து விட வேண்டுமென்று மெதுவாக சொல்லிக் கொண்டே கொண்டே படுத்து உறங்கிப் போனார். படுக்கையின் பக்கத்திலேயே நான் நின்று கொண்டே தூங்கினேன்.
அடுத்த நாள் சொன்னபடி கார் கோர்ட் வாசலைத் தொட்டது. காரை அங்கு நிறுத்தி விட்டு சின்ன எஜமான் டிரைவரையும் அழைத்துக் கொண்டு வா பக்கத்து ஓட்டலில் ஏதாவது சாப்பிட்டு விட்டு வரலாமென்று போனார். போகும் போதே தனது பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். இப்படி பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தது ஒரு புதுப் பழக்கமாக எனக்குத் தோன்றியது. காரணம் எங்கள் எஜமான்களின் பாக்கெட்டுகள் எப்போதும் சலவை நோட்டுகளால் பிதுங்கும். இப்போதோ தொட்டுப் பார்த்துக் கொள்ளும் நிலை எனக்கு நிலமையை உணர வைத்தது.
அது மட்டுமல்லாமல், எந்த ஓட்டலுக்குப் போனாலும், எப்போதும் ஏசி ரூமில் உட்காரும் சின்ன எஜமான், சாதாரண மக்களோடு தானும் ஒருவராக ஒரு ஓரமான நாற்காலி தேடி பொது ஹாலில் அமர்ந்தது எனக்கு இதயத்தைப் பிசைந்தது. அப்போது பழைய நினைவில் நான் எப்போதும் எஜமான்களுடன் போகும் ஏசி ரூமை எட்டிப் பார்த்தேன். எட்டிப் பார்த்த எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஏசி ரூமில், எங்களுக்காக வாதாடும் வக்கீலும் எங்களுக்கு எதிராக வாதாடும் வக்கீலும் அடுத்து அடுத்து உட்கார்ந்து ரவா கேசரியும் ஸ்பெஷல் பேப்பர் ரோஸ்டும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். இருவரும் குசு குசுவென்று பேசிக் கொண்டதுடன் பேச்சுக்கு இடையில் கிரிக்கெட்டில் விக்கெட் விழுந்தால் அந்த வீரர்கள் தங்கள் கைகளை உயர உயர்த்தி ஒருவருக் கொருவர் தட்டிக் கொள்வார்களே அதே போல சந்தோஷமாக தட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டதையும் நான் பார்த்தேன். என்னமோ நடக்குது மர்மமா இருக்குது என்று நினைத்துக் கொண்டேன்.
சின்ன ஜமீன்தார் சாப்பிட்டதும், என்னையும் எடுத்துக் கொண்டு ஒரு தட்டுத் தட்டிக் கொண்டு கோர்ட்டின் படிக் கட்டுகளில் என்னை ஊன்றிக் கொண்டே ஏற ஆரம்பித்தார்.
கதையை கேட்டுக் கொண்டிருந்த படிக்கட்டு சொன்னது “இப்படி ஊன்றி ஊன்றித் தானே என்னை உடைத்துப் போட்டு விட்டார்கள். சரி நீ தொடர்ந்து சொல் !“ என்று இரண்டாவது முறையாக தன் உடம்பை தடவி விட்டுக் கொண்டது. .
கைத்தடி கதையைத் தொடர்ந்தது. “தடுமாறிய சின்ன ஜாமீனை ஒருவர் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு போய் அங்கு இருந்த பெஞ்சில் உட்கார வைத்தார். அப்போது நம்முடைய வக்கீலும் ஏப்பம் விட்டபடியே அங்கு வந்தார். வக்கீல் சொன்ன வணக்கத்துக்கு கை தூக்கி பதில் வணக்கம் சொல்லக் கூட சின்ன எஜமானுக்கு தெம்பு இல்லாமல் இருந்தது.“
அப்போது , ஆற்றங்கரையில் உளுத்துப் போய் உடைந்து கிடந்த கோர்ட்டின் முன்னாள் மேஜையும் நாற்காலியும் ஒரு காட்டு சிரிப்பு சிரித்தன.
“ஏன் இப்படி கேவலமாக சிரிக்கிறீர்கள்?“ என்று கோபமாகக் கேட்டது கைத்தடி.
“பின்னே சிரிக்காமல் என்ன செய்ய? நாங்கள்தான் அந்த வேடிக்கையைப் பார்த்தோமே! பிப்ரவரி 29 க்கு வழக்கை தள்ளி வைத்த நீதிபதி சாமர்த்தியமாக நாலு வருசம் கேசை தள்ளி வைத்து விட்டதைக் கூட தெரியாமல் – இன்னும் நாலு வருஷம் கழித்துத்தான் அந்த தேதி வரும் என்று தெரியாமல் இப்படி கோர்ட்டுக்கு வந்தால் நாங்கள் சிரிக்காமல் என்ன செய்வோம்? உங்க எஜமானும் வக்கீலும் லீப் வருஷ விபரம் கூடத் தெரியாதவர்களாக இருந்தார்களே என்று அதைப் பார்த்து சிரிக்காமல் என்ன செய்வோம்?” என்றன உதிர்ந்து , தளர்ந்துபோன மேஜையும் நாற்காலியும்.
கைத்தடி தொடர்ந்தது. “ ஆமாம்! நீங்கள் சொல்வது சரிதான். அப்படித்தான் ஆகிவிட்டது. சின்ன எஜமான் கஷ்டப்பட்டு கோர்ட்டுக்கு வந்த வேதனை அவருக்குத்தான் தெரியும். வாய்தா தேதி தவறாக வந்து விட்டதும் அதுவும் நாலு வருஷம் தாண்டி என்றதும் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது“ என்றது. உடனே படிக்கட்டு , “ அப்படிக் கஷ்டப்பட்டு நடந்து தடுமாறி என் மீதுதானே விழுந்தார் அப்போது என் உடம்பு என்ன வலி வலித்தது தெரியுமா? “ என்று கேட்டது.
“ஹூம் அந்த சோகக்கதையை என் கேக்கிரீர்கள். அவர் கீழே விழும்போது அவர் கையில் இருந்த நானும் ஒரு பக்கமாகப் போய் விழுந்தேன். சமாளித்துக் கொண்டு பார்க்கும்போது சின்ன எஜமானை சுற்றி ஒரே கூட்டம். எனக்குப் பெரிய எஜமான் இதே போல் விழுந்து கிடந்த வேதனையான நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. யாரோ ஒருவர் என்னை எடுத்து சின்ன எஜமான் கையில் திணித்தார். சின்ன எஜமான் என்னைப் பிடிக்கக் கூட திராணியற்றவராய் சோர்ந்து கிடந்தார். அவரது கைகளுக்குள் நான் . ஆனால் அவரது கைகளோ சில்லென்று இருந்தன. கீழே விழுந்த சின்ன எஜமானுடைய உயிரும் கூட்டை விட்டுப் பறந்து போய் விட்டது என்று நான் உணர்ந்து மவுனக் கண்ணீர் வடித்தேன். “ என்று கைத்தடி சொல்லி அழுதது.
ஆக, வரப்பு வழக்கு முடியும் முன்பே இரு தலைமுறையின் உயிர்கள் இவ்வுலகில் இருந்து முடிந்துவிட்டன.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..
ஆக்கம்: P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.
19 Responses So Far:
அன்பு காக்காமார்களே!
இந்த கைத்தடி, படிக்கட்டு மூலம் தாங்கள் சொல்ல வரும் விஷயங்கள் தங்கள்களின் கற்பனா சக்தியை காட்டுவது ஒரு புறமிருந்தாலும், தங்கள்களின், எழுத்து ஓட்டம் இந்த ஆக்கத்தின் ஒவ்வொரு தொடரையும் உற்று நோக்கும்போது தங்கள்களின் வயதை குறைத்துக்கொண்டே வருவது போல் தெரிகின்றது.
கற்பனை ஓட்டம் மிக அருமை.எழுத்தின் மூலம் உயிரற்ற பொருளுக்கு உயிர் கொடுத்து உலவவிடுவது கற்பனையின் உச்ச கட்டம்.
தொடரின் ஒவ்வொரு முடிவிலும் வழக்கு முடிவுக்கு வருவது போன்று இருந்து பின்பு தொடர்ந்து வரும் என்று போடும்போது, வழக்குக்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் (நீதிபதிகள் உட்பட ) இவ்வுலகைவிட்டு பிரிந்தபின்புதான் இதற்க்கு ஒரு வழி வகை வருமோ என்று தோன்றுகின்றது.
அபு ஆசிப்.
காதரு,
எனக்கென்னவோ இது கற்பனையென்றே தோன்றவில்லை. கைத்தடிக்குப் பதிலாக காதரையோ சபீரையோ பாத்திரங்களாக்கியிருந்தால் இந்தப் பதுவு அன்றாட நிகழ்வுகளின் நிதர்சனம் என்பது தாக்கும்.
காதரும் சபீரும் இரண்டு தலைமுறை தாங்கமாட்டார்கள் என்பதால் (ஒருத்தனுக்கு கொட்டிடிச்சி மற்றவன் அப்பாவாயிட்டான்) கைத்தடி காரக்ட்டராகியிருக்கிறது, படிக்கட்டு பக்க வாத்தியமும் மேசை நாற்காலி ஆடியப்ஸாகவும் ஆக்கி நடப்பைக் காட்சிகளாகத் தருகிறார்கள் இரண்டு ஜாம்பவான்களும்.
வெளங்குதாடா என் வென்ட்ரூ
//வக்கீலாக இருந்து ஆளும் கட்சிக்கு ஆதரவான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் பதவி உயர்வு பெற்று வந்து உட்கார்ந்து இருந்தார்.//
இதத்தான் நங்கள் எக்ஸ்ட்ரா லார்ஜ் குசும்பு என்றும்
"நக்கல் அன்லிமிட்டட்" என்றும் எங்க குரூப் பாஷையில் சொல்லிக்கிவோம்.
எக்ஸ்ட்ரா லார்ஜ் குசும்பு
நக்கல் அன்லிமிடெட்
இது மட்டும் என்னவாம் . இதுதான் மண்ணின் வாசனை. கரிசக்காடுக் கதைகள் போல கடற்கரைக் காற்றின் கதைகள். கொடுவா மீனின் கொழுப்பு.
இந்தக்
கண்றாவியையெல்லாம்
காணக் கண்ணிருந்தும்
கிழவர் நிலை முழுதும்
கேட்கச் செவியிருந்தும்
சுவைபட அனைத்தையும்
சொல்ல வாயிருந்தும்;
நல்ல வேளை
நம் நாயகன் கைத்தடிக்கு
உயிருமில்லை - பசிக்கும்
வயிறுமில்லை
இருந்திருந்தால்
விழுந்த முதலாளி
எழுமுன்
எஞ்சிய யாவற்றையும்
ஏதோ ஒரு உறவுமுறை வைத்து
உறிஞ்சி எடுத்திருக்காதா?
வழக்காடு மன்றமதலால்
மேசை நாற்காலிகளுக்கு
முக்கிய வேடமில்லை
இதுவே
பாராளு மன்றமாகவோ
நாடாளு மன்றமாகவோ
கதைக்களம் அமையப்பெற்றால்
நாற்காலி பறந்திருக்கும்
மேசையோ
முஷ்டியோசையை
முழங்கி முழங்கியே மடிந்திருக்கும்
காக்கா,
அடுத்த தயாரிப்பில்
கண்ணீர் துடைக்க கைக்குட்டையும்
நிழல் கூரையிட குடையொன்றும்
கெளரவ வேடத்திலாவது
இணைக்க முடியுமா?
தம்பி சபீர் அவர்களுக்கு,
நண்பர் பகுருதீன் தரப்பிலிருந்து முதுகில் ஒரு பாராட்டுத் தட்டு பார்சலில் வந்துள்ளது. உரியவரிடம் ஒப்படைத்துவிட்டேன்.
இந்தத் தயாரிப்பு இரண்டு மூன்று பாத்திரங்களை மட்டுமே வைத்து தயாரிக்கப் படுவதால் கவுரவ வேடங்களை இடைச்சொருக இயலவில்லையாம்.
வாய்தா போடாமல் வருந்துகிறார்.
//வாய்தா போடாமல் வருந்துகிறார்.//
பரவாயில்லை காக்கா.
இங்கு
அமீரகத்தில்
மழை மிரட்டல் கடுமையாயிருக்கிறது
தமிழ்நாட்டைப் போலவே
சூரியன் உதிக்காமல் கிடக்க
இலைகளெல்லாம்
ஜோடிஜோடியாய்த்
தழைத்து நிற்கின்றன
தாடிக்கு இருந்த மரியாதையையும்
மோடி குழைத்துவிட
சவரம் செய்யாத தாடையில்
சிலிர்க்கிறது மழைக் காற்று
இருப்பினும்
நீங்கள் அறியாததா...
மழையைவிட
இங்கு
வேனல்க்காலம்தான்
அதிகம்
உடை நனைக்கும்!
கைத்தடி பல கதைகளை /சம்பவங்களை நமக்கு சொல்லித்தரும் வாயாடி
//மழையைவிட
இங்கு
வேனல்க்காலம்தான்
அதிகம்
உடை நனைக்கும்!// ஆஹா....எப்படி இப்படியெல்லாம் கவிக்காக்கா...
//கைத்தடி - வாயாடி//
எனக்கும் இந்த மாதிரி தமிழ் பிடிக்கும்
"இந்தப் பதிவின் கரு நல்லாருக்கா உரு நல்லா வந்திருக்கா?""
"சொல்லு பையா, உனக்கு வாப்பாவைப் பிடிக்குமா உம்மாவைப் பிடிக்குமா?"
(அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்காமார்களே)
ஏங்களூரிலும் ஒரு ரமணன் இல்லையே...
தென்மேற்கு பருவக் காற்றையும், வடகிழக்கு காற்றையும்... வாய் கோனாமல் அப்படியே தனி ராகம் போட்டுச் சொல்ல !
மழை...
அமீரகத்தில் !
அமீரகத்தில் மழையில் நனையும் அன்பு சோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.
மழைக்கால மேகம் ஒன்று என் நெஞ்சில் வந்து போனது. மழை பெய்த காலை, அந்த சாலைகள் என் மனதில் இன்னும் ஈரமாகவே நிற்கின்றன. மழை பெய்யும்போது காரின் கண்ணாடி மீது ஓடும வைப்பர் என் மனதிலும் இப்போதும் ஓடுகிறது. வாழ்க அமீரகம்.
//சவரம் செய்யாத தாடையில்
சிலிர்க்கிறது மழைக் காற்று// கவித தாத்தா ஏன் சவரம் செய்யவில்லை? பேரன் பிறந்துவிட்டால் என்ன? என்னைப் போல் தினமும் ஒரு இழுப்பு இழுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நமக்கு கி.......ன் என்று ஒரு முத்திரையைக் குத்திவிட ஒரு கூட்டமே இருக்கிறது. இந்தக் கூட்டம் என்னைவிட உங்களுக்கு அதிகம்.
//. இந்தக் கூட்டம் என்னைவிட உங்களுக்கு அதிகம். //
ஆமாம் காக்கா. கொட்டமடிக்குது கூட்டம். "ஆ வூ ன்னா அப்பா டேய்" ன்றாங்க. "அப்பா"ன்னு கூப்பிட வேண்டியவன் இன்னும் கூப்பிடல.
பல சிரமங்களுக்கு இடையில் சிங்கப்பூரிலிருந்து ஒருத்தன் ஃபோன் பண்ணி, "இனிமே எங்கூடவெல்லாம் சேறுவியா?" ன்றான். கலாய்க்கிறாராமா.
கோலாலம்பூர்காரன், "நல்லாயிருக்கிறியலா?" ன்றான். மரியாதைக்கல்ல; வெறுப்பேத்தறாராம்.
தமாம் பார்ட்டி கைவச்ச வெள்ள பனியன் போடச் சொல்லுது. ரியாத் காரன், "தசுவுமணி எங்கேடா?"ன்றான்
அப்பாக்கே இப்டின்னா அப்பப்பாவுக்கு எப்படிலாம் படுத்துவாய்ங்களோ.
இந்திய வலைத்தளங்களிலேயே முதன் முறையாக... ! அப்படின்னு ஒரு அறிவிப்பு செய்து...
அமீரக மழையில் நனைந்ததையும் வியர்வையாக கொண்டாடும் செயல் வீரர்களுக்கு ஜெபல் அலி கோட்டம், 7 வது ரவுன்டபவுட் வட்டம் சார்பாக போர்வை பேர்த்தப்பட்டது !
இப்பவெல்லாம்... கைத்தடிங்களுக்கு இருக்கிற மெதப்பு இருக்கே ....
பாவம் அந்தக்கால கைத்தடி !
//தமாம் பார்ட்டி கைவச்ச வெள்ள பனியன் போடச் சொல்லுது. ரியாத் காரன், "தசுவுமணி எங்கேடா?"ன்றான்//சோடாபுட்டி கண்ணாடிதான் இனிமே போடணும்.
பேரனோட கொளத்துல அல்லது ஏரியில போய்தான் குளிக்கணும். வீட்டுல ஷோவேர் பாத்ல எல்லாம் குளிக்கக்கூடாது,
குளிக்க போகும்போது கண்டிப்பாக குடைபிடித்துக்கொண்டு வேஷ்ட்டியை கக்கத்திலோ (பேரன் கையில் கூட கொடுத்து கொண்டு வர சொல்லலாம்), அல்லது கையில் மடித்தோ குளிக்கு முன்போ அல்லது குளித்த பிறகோ கொண்டு வரவேணும்.
இவைகளையெல்லாம் நீ ஒழுங்காக கடை பிடித்தால்தான் நீ ஒரிஜினல் தாத்தா இல்லையேல் போலி தாத்தா .
அபு ஆசிப்.
கைத்தடி, படிக்கட்டு அதோடு தொடர்ந்த போலித்தாத்தாவின் கவிக் கருத்தாடல்கள் ரொம்ப சுவராஸ்யமாயிருக்கு!
//அப்பாக்கே இப்டின்னா அப்பப்பாவுக்கு எப்படிலாம் படுத்துவாய்ங்களோ.//
அப்படியெல்லாம் யாரும் படுத்தவில்லை. காரணம் அப்பப்பா யாரையும் அப்பப்பா என்று படுத்தாது காரணமாக இருக்கலாம்.
யார் எப்படிப் படுத்துகிரார்களோ அதற்கு ஏற்றபடியே படுத்தப் படுவார்கள்.
ஒருவேளை தமாம், சிங்கை , மலேசிய, ரியாத்காரர்கள் வரட்டும் வாய்ப்பு என்று இதுவரை காத்து இருந்து இருக்கலாம். வந்த வாய்ப்பை நழுவவிடாமல் நன்றாகப் போட்டு வாங்கலாம்.
Post a Comment