Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயரின் வாரிசுகள் - தொடர் - 8 29

அதிரைநிருபர் பதிப்பகம் | November 30, 2013 | , ,


இந்திய மண்ணில் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து முதல் கல்லை எடுத்து வீசிய அலைகடல் அரிமா முஹம்மத் குஞ்ஞாலி மரைக்காயர் அவர்களின் மறைவுக்குப் பிறகும் அவர் தொடங்கி வைத்த அரும் பணி ஓய்ந்து விடவில்லை. போர்த்துக்கீசியர்கள் ,  அவர்கள் எவ்வளவுதான் குடம் குடமாமாய் குடித்திருந்தாலும் அவர்களின்  இரவுத்தூக்கம் பறி போனது. அதைப்  பறித்தவர் , வரலாற்றில் இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் என்று குறிப்பிடப் படும் இன்னொரு திருமகன் ஆவார்.  கடற்படையை வெற்றிகரமாகக் கையாள்வதிலும் வெற்றி பெறுவதிலும் எதிரிகளை மிரண்டோட வைப்பதிலும் வெற்றிக்  கொடி நாட்டுவதிலும் தன்னிரகற்ற தலைவராகத் திகழ்ந்தவர் இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் ஆவார். 

வரலாற்றுக் குறிப்புகளின்படி இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர் முதல் குஞ்ஞாலி மறைக்காயருடைய உறவினராகவோ அல்லது சீடராகவோ அல்லது அவரிடம் பயிற்சிபெற்றவராகவோ இருந்து இருக்கலாம். இவருக்கு சுதந்திர உத்வேகத்தைத் தூண்டிய ஒரு நிகழ்வைத்தான் நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

கேரளத்தின் கண்ணனூர் நகரத்தின் முக்கிய வீதியில் தனது கணவனின் இறந்து போன பிணத்துடன் ஒரு முஸ்லிம் பெண் கதறிக் கொண்டிருந்தார். 1564- ல் மெஸ்கிட்டோ என்ற கொடிய போர்ச்சுக்கீசியனால் கடலில் வைத்துக் கொலை செய்யப்பட்டு  கண்ணனூர் கடற்கரையில் ஒதுங்கிய அவளது கணவனின் பிணம்தான் அந்தப் பெண்ணின் கரங்களில் இருந்தது. இப்படி அந்நியரால் முஸ்லிம் ஆண்மக்கள் கொல்லப் படுவதை சகித்துக் கொண்டு கேளாக் காதினராக இருக்கவேண்டுமா என்ற கண்ணீரில் தோய்த்தெடுத்த அந்தப் பெண்ணின் கேள்விதான் இரண்டாம்   குஞ்ஞாலி மரைக்காயரை வேள்விக் களத்தில் இறக்கிவிட்டது. இந்த அநியாயத்துக்குக் காரணமானவர்களை ஒழித்துக் கட்ட வீர சபதம் எடுத்தார். சமர்க்களத்துக்கு சங்க நாதம் ஊதினார்.  

1570 ஆம் ஆண்டு போப்பூர் நதிக்கரையில் அமைந்து இருந்த சாலியன் கோட்டைப்யில்  நடைப்பெற்ற போரை  இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர் தலைமை தாங்கி நடத்தி போரில் வெற்றிக் கனியைப் பறித்தார். மேலும் கண்ணனூர் துறை முகத்துக்குள் புகுந்து அங்கு நின்று கொண்டிருந்த இருபது போர்த்துக் கீசியக் கப்பல்களைக் கடுமையாகத் தாக்கி, அளவிட முடியாத சேதத்தை அவர்களுக்கு விளைவித்தார். இதனை முன்னிட்டு கோவாவில் இருந்து டீ-லிமா என்கிற பரங்கித்தலையனின் தலைமையில் வந்த போர்த்துக்கீசிய கடற்படையையும் எதிர்த்து முறியடித்து ஓடவைத்தார். அதன் பின்னர், டிமேல்லோ என்பவனின் தலைமையில் வந்த மற்றொரு கப்பற்படையையும் எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றனர். இந்தப் போரில் டிமேல்லோ படுகாயம் அடைந்தான். படுகாயம் அடைந்தவன் படுக்கக்கவில்லை. மாறாக, தலைமறைவானான். அந்த வெற்றிக் கனியின் ருசி அதன்பின் 65 ஆண்டு காலம் அந்நியரின் கடல் ஆதிக்கத்தை முறியடித்து குஞ்ஞாலி  மரிக்காயரின் முன் மண்டியிட வைத்தது. அத்தனை ஆண்டுகளும் போர்த்துகீசியரின் பேச்சு மூச்சையே காணோம். அதன் பின்னர் பொன்னானியில் தனக்காக ஒரு கோட்டையை இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் கட்டினார். ஆனால் தான் கட்டிய கோட்டையில் நீண்ட நாள் வாழ இறைவன் அவருக்கு வாழ்நாளை அளிக்கவில்லை. கோட்டை கட்டி முடிக்கப் பட்ட சில நாட்களிலேயே  இறைவன் தன்பால் அவரை அழைத்துக் கொண்டான். 

இந்த இடத்தில் ஒரு செய்தியை குறிப்பிட விரும்புகிறேன். குஞ்ஞாலி மரைக்காயர் கோட்டை கட்டிய பொன்னானி என்கிற இடம் கேரளத்தில் இன்றைய மஞ்சேரி பாராளுமன்றத் தொகுதியில் இருக்கிறது. இந்தத் தொகுதி இந்திய முஸ்லிம் லீகின் கோட்டையாக இன்றுவரைத் திகழ்கிறது. தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப்  அவர்கள் மூன்று முறைகள் தொடர்ந்து கேரளத்தின் இந்தப் பாராளுமன்றத் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். இத்தனைக்கும் தேர்தல் பணிகளுக்காக, அவர் ஒரு முறை கூட அந்தத் தொகுதியின் பக்கம் சென்றவரல்ல  என்பது நவீன கால வரலாறு. இந்த வரலாறு இன்று வரைத் தொடரக் காரணம் குஞ்ஞாலி மரைக்காயர் கட்டிய கோட்டையும் அவர் விதைத்து விட்டுச் சென்ற வித்துக்களும்தான் என்பதை மறுக்க இயலாது.    

இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயரின் தீரத்தை பாராட்டும் வண்ணம் கொச்சினில் உள்ள கொச்சின் பல்கலைகழகத்தின் அறிவியல் மற்றும் தொழில் கல்விப் பிரிவின் கப்பல் கட்டும் பொறியியல் தொடர்பான பிரிவு இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர் உடைய பெயரில் தொடங்கப்பட்டு திகழ்ந்து வருகிறது. 

Cochin University of Science and Technology in Cochin, Keral has got its new Marine Engneering Department named after Kunjali II as Kunjali Marakkar  School of Marine Engineering.   

மேலும், முதலாம் குஞ்ஞாலி மரைக்காயருக்கு தரத்தவறிய  கவுரவத்தை இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயருக்கு வழங்கிய இந்திய கடற்படை, மும்பை கொலாபாவில் உள்ள கடற்படை சார்ந்த பயிலரங்கத்துக்கு அவர் பெயரை சூட்டி இருக்கிறது.  

The India Navy shore- based naval air training centre at Colaba, Mumbai is named Maritime Academy INS Kunjali II in honour of the second Marakkar.   

இரண்டாம் குஞ்ஞாலிப் புயலுக்குப் பிறகு கடலில் உருவான மற்றொரு புயல் சின்னமே  மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் ஆவார். கோழிக் கோட்டின் சாமுத்திரி மன்னன் அந்நியரின் கைப் பாவையாய் ஆகி தனது  ஆளுமைக்கு உட்பட்ட கடல் மற்றும் கடற்கரைப் பிரதேசத்தை போர்த்துகீசியருக்கு தாரைவார்த்ததை இந்த நாட்டுக்கு ஏறபட்ட அவமானம் என்ற சுதந்திர உணர்வுடன் சீறினார் மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர். அதே உணர்வுடன் சாமுத்திரி மன்னன்  தனக்கு அளித்திருந்த கடற்படைத் தளபதி என்கிற பதவியை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு வெளியேறினார். இந்த மண்ணை க் காக்கும் சக்தியாக அந்நியரை எதிர்த்துப் போராட முஸ்லிம்களின் சக்தி மட்டும் போதாது அத்துடன்  இந்துக்களின் சக்தியும் தேவை என்று இருமதத்தவரையும் ஒன்றுதிரட்டி  ஒன்றிணைத்து ஒட்டுமொத்த     மக்கள் சக்தியாக சாமுத்திரி மன்னனுக்கும் போர்த்துகீசிய ஆக்கிமிப்பாளருக்கும் எதிராக  உருவெடுக்கவைத்தார். 

1572 ல் போர்த்துக்கீசியரின் கொலைவெறி வன்முறைப் படை, முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும் இந்துக்களின் கோயில்களையும் கொள்ளையிட்டு கோழிக் கோடு, திருக்கோடி, கப்பக்காடு, பொன்னானி ஆகிய துறைமுகங்களுக்குப் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது. அந்நியரின்  இந்த அழித்தொழிப்பு ஏற்படுத்திய அந்நிய எதிர்ப்புணர்வால் தூண்டப்பட்ட மூன்றாம் குஞ்ஞாலி  மரைக்காயர்  முதன்முதலாக 1586 - ல் அன்னியர் படையை வெற்றி கொண்டார். அதனைத் தொடர்ந்து 1592 –ல் பொன்னானி முதல் கோவாவரை இருந்த கடல் பிரதேசத்தை தனது கைக்குள் அடக்கி அந்தப் பகுதி என்றாலே   மூன்றாம் குஞ்ஞாலி என்று சொல்லும் அளவுக்கு தனது விரல்நுனியின் ஆதிக்கத்தில் வைத்து இருந்தார். அப் பகுதிகளில் அன்னியர் புகவே அஞ்சினர். மீறிப் புகுந்தோர் கதிகலங்க அடிக்கப் பட்டனர்.  

1597- ல் போக்கிடம் இல்லாத போர்த்துக் கீசியருடன் பொல்லாங்கு கொண்ட சாமுத்திரி மன்னனின் மண்ணாங்கட்டிப் படையும் கைகோர்த்துக் கொண்டு மூன்றாம் குஞ்ஞாலி அவர்களின் கோட்டையை முற்றுகை இட்டன.  மூன்று மாதங்கள் இந்த முற்றுகை நீடித்தது. அதுவரை பொறுமையாக இருந்த மூன்றாம் குஞ்ஞாலியின் எதிர்பாராத திடீர் தாக்குதலால் நில குலைந்து போன எதிர்ப் படையினர் தோற்றுப் போய் கொச்சியை நோக்கி ஓடி அங்கு தஞ்சம் புகுந்தனர். சாமுத்திரியின் படையோ கோழிக் கோட்டை நோக்கி போட்டது போட்டாற்போல் புறமுதுகிட்டு ஓடியது. போர்த்துக்கீசியனின் இந்தத் தோல்வி கோவாவில் கொடிபோட்டு ஆண்டுகொண்டிருந்த அவர்களின் கவர்னருக்கு கவுரவப் பிரச்னை ஆகிவிட்டது. ஒரு சிற்றரசுக்குக் கூட சொந்தக்காராக இல்லாத மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் தங்களை ஓட ஓட  விரட்டுவதைக் கண்டு ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்களின் கவர்னர் பெரும் தாக்குதலுக்குத் திட்டமிட்டு தனது ஒட்டு மொத்தப் படையின் பெரும்பகுதியை அனுப்பி வைத்தான். 

மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர், தனக்கும் உதவ ஒத்த கருத்துடைய சில குறுநில மன்னர்களின் உதவிகளை நாடியபோது  உல்லல் ராணியும் மாதுரையை ஆண்டுகொண்டிருந்த நாயக்கரும் முன் வந்தனர். உல்லல் ராணி உணவுப் பொருட்களையும் படைக் கலங்களையும் மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவை போர்த்துக்கீசியரால் வழிமறிக்கப் பட்டு வழிப்பறி செய்யப் பட்டன. மதுரை  நாயக்கரின் உதவி வந்து சேருவதில் காலதாமதம் ஏற்பட்டது. 

மீண்டும் ஒரு உக்கிரமான போர் மூண்டது. இருதரப்பிலும் பல உயிர்கள் வெட்டி சாய்க்கப் பட்டன. மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயரின்   கோட்டைக்குள் அன்னியப் படைகள் புகுந்தன.  கோட்டைக்குள் இருந்த பெண்களையும் குழந்தைகளையும் பணயப் பொருளாக  அன்னியர் பிடித்துக் கொண்டதால் வேறு வழி இன்றி போர்த்துக்கீசியனின் அடிவருடியாக மாறிவிட்ட சாமுத்திரி மன்னனுடன் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் சம்மதிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப் பட்டார். அப்படி ஒரு சமாதானத்துக்கு வந்த மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயரை போர் தர்மத்தை மீறி ,  போர்த்துக் கீசியப் படை சுற்றி வளைத்து கைது செய்து கடற்கரைப் பிரதேசத்தை தனது கைகளுக்குள் வைத்திருந்த அவருடைய வீரத்தின் விளை நிலமான அவரது கைகளில் விலங்கிட்டது. மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் உடைய கோட்டை கொத்தளங்கள் இடித்துத் தரை மட்டமாக்கப் பட்டன. பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப் பட்டன. அதற்குப் பின் நடந்த சம்பவங்கள் கண்ணீரால் எழுதப் பட வேண்டியவை. 

மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் மற்றும் அவரது முக்கிய சீடர்கள் ஆகியோர் கைகளில் விலங்கு மற்றும் கால்களில் சங்கிலி பூட்டப்  பட்டு யாருக்கும் தெரியாமல் கோவாவுக்கு கொண்டு செல்லப் பட்டனர். தங்களை ஓட  ஓட அடித்த மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் மற்றும் அவரது தோழர்கள் பிடிக்கப் பட்டு கோவாவுக்கு கொண்டுவரப் படுவதை அறிந்த வெறி கொண்ட போர்த்துக்கீசியர்கள் பழிவாங்கும் உணர்வோடு கோவா கடற்கரையில் திரண்டனர். கப்பலில் இருந்து கைகளில் விலங்கு பூட்டப்பட்டு  இறக்கப் பட்ட மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் உடைய தோழர்கள் நான்கு பேர்களை இரக்கமற்ற பாவிகள் சாகும்வரை கல்லாலேயே அடித்துக் கொன்றனர். முன்பு வாஸ் கோடகாமாகாமாவால் நடுக் கடலில் சிந்தவைக்கப் பட்ட முஸ்லிம்களின் ரத்தம் கோவாவின் கடற்கரையில் மீண்டும் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்த குற்றத்துக்காக சிந்தப் பட்டது. அப்போது மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் மட்டும் கொல்லப் படவில்லை. அதற்குக் காரணம் இருந்தது. 

மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் உடைய தலையை மக்கள் மன்றத்தின் நடுவில் கொலைக்  களத்தில் வைத்து துண்டிக்க வேண்டுமென்பதே போர்த்துக் கீசியரின் விருப்பமாக இருந்தது. அதன்படி மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் தனிமைச் சிறைக் கொட்டடிக்கு கொண்டு செல்லப் பட்டார். வாஸ்கோடகாமா வந்து இறங்கிய காலம் தொட்டு ஒரு நூற்றாண்டு காலம் அந்நிய சக்தியை தாய்மண்ணில் கால்பதிக்கவிடாமல் எதிர்த்துப் போராடிய வம்சத்தின் வாரிசு மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. நாட்டுக் காக ஷஹீத் ஆவதில் மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயருக்கு வருத்தம் ஒன்றுமில்லை. ஆனால் அந்நியரை எதிர்க்க வேண்டிய சாமுத்திரி மன்னன்  அவர்களின் அட்டூழியத்துக்குத் துணை நின்றதே மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயருக்கு வருத்தம் தந்த விஷயமாக இருந்தது.  தன் சாவால் கூட அந்நிய ஆதிக்கம் என்கிற அநியாயத்தை தடுத்து நிறுத்த முடியாத கையறு நிலையே அவரது கவலைக்குக் காரணம். 

தனிமைச்சிறையில் இருந்த மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயரைத் தேடி ஒரு பாதிரியார் வந்ததாக சிறைக் காவலன் செய்தி சொன்னான். யார் என்று எட்டிப் பார்த்தபோது ஒரு வெள்ளை உடை அணிந்த பாதிரியார் நின்று இருந்தார். மூளைச்சலவை செய்ய இவர்கள் உபயோகிக்கும் முதல் வார்த்தை மகனே! என்பதுதான். வீரனும் – வித்தகனும் ஆன  மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயரை மகனே என்று புன்சிரிப்புடன் அழைத்த பாதிரியார் மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயரும் அவரது கூட்டத்தினரும் கிருத்துவ மதத்தை தழுவிக் கொண்டால்  , உயிர்ப் பிச்சை வாங்கித் தருவதாக ஆசைகாட்டினார். மீண்டும் கடற்படைத்தளபதியாக பதவி வாங்கித்தருவதாகவும் ஆசை காட்டினார்.  ஒரு வீரத்தாயால்  இரத்தத்தின் நாடி நரம்புகளில் இஸ்லாமிய ரத்தம் செலுத்தப் பட்ட மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் அப்படி ஒரு நிலைக்கு நான் ஆளாகி வாழ்வதை விட போர்த்துக் கீசியரின் கொலைவாள் எனது கழுத்தை முத்தமிடுவதையே நான் விரும்புகிறேன். உடனே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று பாதிரியாரை முகத்தில் அடித்து திருப்பி அனுப்பினார். வீரன் வீரனாகவே மடிய விரும்புவான் . மாற்றாருக்கு முன் மண்டியிடுவதைக் காட்டிலும் மரணமே மேல் என்று அந்த வீரர் முடிவுசெய்தார். 

அதன்பின் அன்று ஒருநாள் கோவா நகரமே விழாக் கோலம் கொண்டது. இசையும் நாட்டியமும் எங்கும் ஒலித்தன. கவர்னரின்  கண் முன்னே கூடி இருந்த கூட்டத்தின் நடுவே  மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் கொண்டுவரப் பட்டு நிறுத்தப் பட்டார். தீட்டிய அரிவாலும் கொலை மேடையும் தயாராக இருந்தன.  கைகால்களில் விலங்கிடப் பட்டு மரண தண்டனை மேடையின் மேல் ஒரு பஞ்சு மெத்தையின் மேல் ஏறுவது போல் வீரமாக நிமிர்ந்து  நின்றார் மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர்.  அவரது வாய்மட்டும் கலிமாவை உச்சரித்துக் கொண்டு இருந்தது.. தனது தலையை கொலை மேடையின் மீது வைத்தார். அந்நிய ஆதிக்க சக்தியின் அரிவாள் அவரது கழுத்தில் இறங்கியது. அந்நிய ஆட்சியின் கீழ் அடிமைப் பட்ட பாவத்தால் நிரப்பப்பட்ட அந்த கோவாவின் மண்ணில் ஒரு வீரப் பரம்பரையின் உண்மை வீரனின் இரத்தம் சிந்தப் பட்டு இந்திய  மண்ணோடு கலந்தது. 

இன்றைக்கும் சிதிலமடைந்த கண்ணனூர் கோட்டை  மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயருடைய வீரத்துக்கு சான்று பகர்ந்துகொண்டு இருக்கிறது. அந்தக் கோட்டையை கடல் அலைகள் அமைதியாக முத்தமிட்டுச் செல்கின்றன.  அவர் அங்கேயே அடக்கம் செய்யப் பட்டார். அவரது  மண்ணறையின் அருகிலேயே அவரது வீரத்தாயின் மண்ணறை இன்றும், இந்திய சுதந்திரத்துக்கு முஸ்லிம்கள் செய்த தியாகத்துக்கு சான்றாகத்திகழ்ந்துகொண்டு இருக்கிறது. கண்ணுள்ளோர் கண்ணனூர் சென்றால் இன்றும் காணலாம். ஆனால் இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுதியவர்களுக்கு மட்டும்தான் கண் அவிந்து போய்விட்டது. 

இன்னும் பல சரித்திரங்கள் வர இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்...!

குறிப்பு:  குஞ்ஞாலி மரைக்காயர்களுடைய இந்த வரலாற்றுப் பதிவை இங்கு வடித்துத் தர  உதவியோர்கள் : சத்திய மார்க்கம் வலைத்  தளம் -  மஹதி எழுதிய குஞ்ஞாலி மரைக்காயர் வரலாறு- பேராசிரியர் மு. அப்துல் சமது அவர்கள் எழுதிய தியாகத்தின் நிறம் பச்சை என்கிற நூல் – இன்னும் சில வரலாற்றுக் குறிப்புகள் . எழுதும்போது விழுந்தவை பல சொட்டுக் கண்ணீர்த் துளிகள். 

இப்ராஹீம் அன்சாரி

29 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Eena Aana kaka, instead appreciating this historical bloody hidden incident my eyes leave tears and honour the ancestors of our nation's real heroes. If had given barat ratna award to them, the barat ratna award would have admired/renowned instead the real heroes. May Allah bless and honour all of them in the real and endless heaven. Aameen.

whatever syllabus missed/hidden in our school days are being taught here nicely with crystal clear by my beloved bro. Ibrahim Ansari kaka. May Allah bestow you good health and long life. Aameen.

The episode to be continued until becomes a famous book. In shaa Allah.

Unknown said...

//வீரன் வீரனாகவே மடிய விரும்புவான் . மாற்றாருக்கு முன் மண்டியிடுவதைக் காட்டிலும் மரணமே மேல் என்று அந்த வீரர் முடிவுசெய்தார். //

இன்றைய பார்ப்பனன்களுக்கு, வெள்ளையர்களுக்கு இந்தியாவை காட்டிக்கொடுத்தவர்களின் பரம்பரையில் வந்தவர்களுக்கு முஸ்லிம்களின் உண்மை தியாகம் அவர்களின் சுதந்திர தாகத்தின் உத்வேகமும் எங்கே தெரியப்போகின்றது ?

சிறையிலிருந்து விடுதலை பிச்சை கேட்டவர்களுக்கெல்லாம் இந்த வீரம்
வெகு தூரம்.

அபு ஆசிப்.

Aboobakkar, Can. said...

மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் அன்பின் இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களால் அவ்வப்போது தங்கமுலாம் பூசி சமுதாய மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப்படுவது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம்.

ZAKIR HUSSAIN said...



//வீரன் வீரனாகவே மடிய விரும்புவான் . மாற்றாருக்கு முன் மண்டியிடுவதைக் காட்டிலும் மரணமே மேல் என்று அந்த வீரர் முடிவுசெய்தார். //
--------------------------------------------------------------------------------------------------------------------



"LION OF DESERT"உமர் மொக்தாரின் " We don't surrender...We will die"

என்ற வசனம் ஞாபகத்துக்கு வந்தது. உமர் மொக்தாரின் வாழ்க்கையை காட்ட ஒரு திரைப்பட நிறுவனம் தேவைப்பட்டது. இந்திய சுதந்திரத்துக்கு பாடுபட்டவர்களை உலகுக்கு எடுத்துக்காட்ட எங்கள் இப்ராஹிம் அன்சாரி அண்ணன் தேவைப்படுகிறார்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

குஞ்ஞாலி மரைக்காயர் அவர்களின் வம்சாவழிகளின் வீரம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

நயவஞ்சகர்களாலும் நாட்டின் பெரும்பான்மை மக்களாலும் அதிகார வர்க்கத்தாலும் அரசாங்கத்தாலும் பலவிதங்களிலும் ஆதரிக்கப்பட்ட; துப்பாக்கி, பீரங்கி போன்ற போர் தளவாடங்களில் முன்னணி பெற்ற பறங்கியனை எதிர்க்கவே எக்கச்சக்க 'தில்லு' தேவைப்படும்போது எதிர்த்துப் போர் செய்ய எத்துணை வீரம் வேண்டியிருக்கும்!!!

மாஷா அல்லாஹ்...

இந்த வரலற்றைப் போதிக்காமல், 'கோபியர் பின்னால் அலைந்த கண்ணனைப் பற்றியும்;

அந்தப்புர மனைவியின் கூந்தல் மணத்தின் ஆதாரம் என்ன என்ற ஆய்வை அரசியலாக்கியதைப் பற்றியும்; பொண்டாட்டியைத் தவிக்கவிட்டு பரத்தையிடம் கிடந்தவனின் உயிருக்காக மதுரையை எரித்ததையும்; கட்டிய மனைவியைச் சந்தேகித்து தீக்குளிக்கச் சொன்னதையும்; பொண்டாட்டியையே சூதாடித் தோற்றுவிட்டு போர்தொடுத்த பேடிகளையும் அல்லவா வரலாறு என்று போதித்தனர்!

வெட்கம்.

sabeer.abushahruk said...

காக்கா,

நாமும் மர்ரைக்காயர்தாமே? ஏன் கேட்கிறேன் என்றால் நம்மூரில் நிறைய மரைக்காயர்கள் உள்ளனரே அப்படியென்றால் நாமெல்லாம் அந்த வீரத்திருமகனாரின் வம்சாவழியா அல்லது பெயர் மட்டும்தானா?

ஒரு நப்பாசையில் கேட்டேன்; தப்பாசையா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஸஹீத் மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர் அவர்களின் தேசப்பற்றின் உண்மை வரலாறுகளை அறிய மெய்சிலிர்க்கிறது.

இப்படிப்பட்டவர்களை இருட்டடிப்பு செய்து இல்லாததை எழுதியவர்கள் நயவஞ்சக வரலாற்றுக் கயவர்களே!

ZAKIR HUSSAIN said...

//நாமும் மர்ரைக்காயர்தாமே? ஏன் கேட்கிறேன் என்றால் நம்மூரில் நிறைய மரைக்காயர்கள் உள்ளனரே . அப்படியென்றால் நாமெல்லாம் அந்த வீரத்திருமகனாரின் வம்சாவழியா //

பாஸ்....புரிஞ்சுதான் பேசறீங்களா?.....குஞ்சாலி மரைக்காருடைய வீரம் எங்கே?...நம்முடைய வீரம் எங்கே?.

நம்மடவனுக்கு பிரச்சினை என்றாலே முதலில் தெரு / எந்த இயக்கம் / எந்த குடும்பம் - அவனுடைய பேங்க் பேலன்ஸ் எல்லாம் செக் பன்னிட்டுதான் களத்தில் இறங்குவோம்...அதுதான் நம்முடைய பழக்கம்...நல்ல நேரம் குஞ்சாலி மரைக்காரருடன் இருந்தவர்கள் அந்த அளவு பொல்யூட் ஆகவில்லை.





Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
காக்கா,

//நாமும் மர்ரைக்காயர்தாமே? ஏன் கேட்கிறேன் என்றால் நம்மூரில் நிறைய மரைக்காயர்கள் உள்ளனரே அப்படியென்றால் நாமெல்லாம் அந்த வீரத்திருமகனாரின் வம்சாவழியா அல்லது பெயர் மட்டும்தானா?

ஒரு நப்பாசையில் கேட்டேன்; தப்பாசையா?//



அப்பாவா போயும் இன்னும் குசும்பு கொறையல உங்களுக்கு

sabeer.abushahruk said...

ஜாயிரு,

நீ சும்மாயிரு. காக்கா சொல்லட்டும்.

ஹமீது,

அப்பா அப்பாண்டு ச்சும்மா இந்த டகால்ட்டி வேலைலாம் வாணாம். பாயிண்ட்ல பேசுங்க.

sabeer.abushahruk said...

ஜாயிரு/ஹமீது,

கொஞ்சூண்டு நப்பாசை இருக்கு, வீரத்திற்கும் நம் வம்சாவழிக்கும் தொடர்பு உண்டு என்று, அந்த தொட்டுக்கத் தொடச்சுக்கல்லதானே அப்பர் கோதையார்லாம் போனோம். ?

காக்கா நீங்க சொல்லுங்க.

sabeer.abushahruk said...

ஹமீது,

அப்பர் கோதயார்னு சரியா வாசிங்க. புள்ளிய வுட்டுட்டு வேணும்னே அப்பா கோதயார்னுலாம் வாசிக்கப் படாது.

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//ஹமீது,

அப்பர் கோதயார்னு சரியா வாசிங்க. புள்ளிய வுட்டுட்டு வேணும்னே அப்பா கோதயார்னுலாம் வாசிக்கப் படாது.//



இந்நாள் அப்பா கூட நாங்கள் முன்னாள் அப்பர் கோதையார் போய் இருந்தோம்

அப்பப்பா என்ன குளிர் அங்கே அப்போ

Ebrahim Ansari said...

தம்பி சபீர்/ ஜாகிர்/ சாகுல்

சற்று வெளி அலைச்சல். இப்போதுதான் இந்தப் பின்னூட்டங்களைப் பார்க்க/ படிக்க முடிந்தது.

இன்ஷா அல்லாஹ் விரிவான பதில் நாளை.

நப்பாசை/ தப்பாசை/ கூடவே அப்பாசையும் சேர்ந்து கொண்டதா? சந்திக்கலாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஏனுங்க ! மரைக்கா'ஸ் இங்கே இருக்கிறதை யாருக்கும் புலப்பட வில்லையா ?

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும்,

எழுதிய உங்கட்கும் வழிந்தக் கண்ணீரைப் போலப் படித்ததும் யானும் கண்ணீர் வடித்தேன்; இதுதான் எழுத்தின் தாக்கம்; கருவின் உள்ளே புதைந்துக் கிடக்கும் வீரமும், சோகமும், தியாகமும் கலந்துச் செதுக்கிய ஓர் ஆக்கம் என்ப்தாற்றான் இந்த உணர்ச்சிப் பிழம்புகள் உருவாகினவா?

சென்ற வாரம் அபுதபியில் நடந்த காயிதேமில்லத் பேரவைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பேசிய கேரள முஸ்லிம் தலைவர்கள் சொன்னார்கள் “ காயிதேமில்ல்த் (ரஹ்) மஹான்; அ மஹான் ஜனிச்ச தமிழ்நாட்டு முஸ்லிம்களை எங்கள்ட ஜீவிதம் வரைக்கும் நேசிக்கும்” என்றனர். அதற்கு மறுமொழி கொடுத்த அமீரகக் காயிதே மில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் அஷ்ரஃப் அவர்கள் சொன்னார்கள்.,” கேரள முஸ்லிம்கள் எங்கள் தலைவர்க்குக் காட்டிய மரியாதைக்கு நாங்கள் தான் கடப்பாடு உடையவர்கள் “ என்று. பாராளுமன்றத்தில் இனத்திற்காகவும், மொழிக்காகவும், சமுதாயத்திற்காகவும் பாடுபட்ட ஓர் ஒப்பற்றத் தலைவர்க்கே இந்த அளவுக்கு மரியாதையைக் கேரளத்து முஸ்லிம்கள் வைத்துள்ளனர் என்று எண்ணி அந்த உருக்கத்தின் நெருக்கத்தில் - நெக்குருகிக் கண்ணீர் உகித்தேன். இப்பொழுது இந்த ஆக்கத்தின் நாயகர் மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர் அவர்களின் வீரத்திற்கு அந்தக் கேரள மக்கள் இன்னும் எவ்வளவு மரியாதையை வைத்திருப்பர் என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரளக் கிளையின் பொருளாளர் குஞசாலி என்று மட்டும் தான் நினைத்தேன்; ஆனால், தங்களின் ஆக்கத்திலிருந்துதான் முதலாம் குஞ்சாலி மரைக்காயரும், மூன்றாம் குஞ்சாலி மரைக்காயரும் பற்றிய விவரங்கள் அறிந்தேன்.

அறிவுச் சுரங்கத்திலிருந்து அரிய தங்கக் கருத்துகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன; தங்களின் இந்த உழைப்பின் பலனால், தங்கட்கு நீண்ட ஆயுளையும் அல்லாஹ் வழங்கி இன்னும் எங்கட்கு நிரம்ப வரலாறு, பொருளாதாரம் மற்றும் அரசியல் பாடங்கள் நடத்திட வேண்டும் என்பதே என் அவாவும்; துஆவும்.

KALAM SHAICK ABDUL KADER said...

\\ஏனுங்க ! மரைக்கா'ஸ் இங்கே இருக்கிறதை யாருக்கும் புலப்பட வில்லையா\\

என் வாப்பா அவர்களை என் வாப்பா அவர்களின் பிறந்த் வீட்டுக்கு (நடுத்தெரு) அருகில் உள்ளவர்கள் “மரைக்கான் காக்கா” என்று அழைப்பதைக் கேட்டு, என் வாப்பா அவர்களிடம் நான் கேட்டேன். “ஏன் வாப்பா உங்களை மரைக்கான் காக்கா என்று அழைக்கின்றார்கள்” என்று. அவர்கள் சொன்னார்கள் பொதுவாக அது ஒரு மரியாதைச் சொல்தான் என்றாலும், குறிப்பாக நம் முன்னோர்கள் இலங்கைக்குக் கடல்மார்க்கமாக வணிகத் தொடர்பு ஏற்படுத்தி அரிசி போன்ற உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்தனர் என்பதால் பொதுவாகவே இந்தத் தெருவில் உள்ளவர்களை அப்படிக் குறிப்பிடுவார்கள்; ஆனால் நான் இலங்கையில் சென்று வணிகம் செய்தவன் தானே ஒழிய மரக்கலம் எல்லாம் என்னிடம் இல்லை” என்றார்கள். அதுபோல், என்னுடன் புகுமுக வகுப்பில் பயின்ற வகுப்புத் தோழன் நாகூர் நண்பன் இன்னும் அவனுடைய பெயருடன் (பிடிவாதமாக) மரைக்காயர் என்றே வைத்துக் கொண்டுள்ளான்; அவனுடைய முன்னோர்கள் நாகப்பட்டினத்திலிருந்து கடற்மார்க்கமாக வணிகம் செய்தவர்கள் என்பதையும் உறுதி செய்தான்;இதனால் அவர்கள் ஊரில் அனைத்து ஆண் மக்களின் பெயரிலும் “மரைக்காயர்’ ஒட்டிக் கொள்ளும்.

sabeer.abushahruk said...

தங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறோம் காக்கா.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி சபீர் மற்றும் அனைத்து சகோதரர்களுக்கும்,

சுருக்கமாக,

முதலாம் குஞ்ஞாலி மரைக்காயர் அவர்களைப் பற்றிய அத்தியாயத்தில் இது பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன். அந்தப் பகுதி மீண்டும்,

"ஆரம்பமாக , இந்த வரலாற்று நாயகனின் பெயரில் ஒட்டிக் கொண்டு இருக்கும் மரைக்காயர் என்கிற பெயர் பற்றி நாம் விளக்கம் பெற வேண்டிய கடமை இருக்கிறது. காரணம், நாம் பிறந்த மண்ணின் வாசம் இந்தப் பெயரின் பிற்பகுதியில் ஒளி வீசுகிறது. இதைப் பற்றிய விளக்கம் ஓரளவுக்கு உலகறிந்ததே. கடல் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த முஸ்லிம்களின் ஒரு பிரிவினருக்கான அடையாளப் பெயர் இது. மரத்தைக் கொண்டு கப்பல்கள் செய்து அதை நாடெங்கும் ஓட்டிச்சென்று திரைகடலோடி திரவியம் தேடிய ஒரு உழைப்பாளர் கூட்டத்துக்கான பெயரே மரைக்காயர் என்பதாகும். இந்தப் பெயருடைய வர்த்தகப் பிரிவினர் இந்தியாவின் தென் பகுதி கடற்கரை ஓரங்களிலும் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் விரவி வாழ்ந்து வருகின்றனர். "

அந்த வகையில் நமது முன்னோர்களும் மரக்கலம் கொண்டு கடல் வணிகம் செய்தவர்கள் என்பதால் அதிரையைச் சேர்ந்த நாமும் மற்றும் பாண்டிச்சேரி, காரைக்கால், நாகூர், கீ ழக்கரை, காயல் பட்டினம் ஆகிய ஊர்களில் வாழ்ந்து வருபவர்களில் மிகப் பெரும்பான்மையோரும் மரைக்காயர் என்று அழைக்கப் படுகிறார்கள்.

வாஸ்கோடகாமா போன்ற கொடியவன் கோழிக்கோட்டின் கடற்கரையில் கொலைவெறியுடன் வந்து இறங்கிய சம்பவம் - அதைத் தொடர்ந்த அடக்குமுறைகள் - அந்தப் பகுதியில் குஞ்ஞாலி மரைக்காயர்கள் உருவாகிட காரணங்களாக அமைந்தன.

ஒருவேளை வாஸ்கோடகாமா வழிதவறி அதிரையின் கடற்கரையிலோ அல்லது மல்லிபட்டினம் கடற்கரையிலோ வந்து இறங்கி அவனது ஆக்கிரமிப்பைத் தொடங்கி இருந்தால் இங்கும் அத்தகைய அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வீரர்கள் உருவாகி இருந்து இருக்கலாம்

ஆனால் நடுக்கடலில் உயிர்த்தியாகம் . செய்யும் வாய்ப்பையும் தொடர்ந்து முதல் சுதந்திரப் போராட்ட வீரராக உருவாகும் வாய்ப்பையும் கேரளத்துக்கே அல்லாஹ் வழங்கினான்.இருந்தாலும் நாமும் அவர்களைச் சார் ந்த மரைக்காயர் என்று வழங்கப் பட்ட வம்சமே. யார் கண்டது அந்தப் படையில் நமது ஊரைச் சார்ந்தவர்களும் இடம் பெற்று இருந்து இருக்கலாம்.

அண்மையில் சகோதரர் சி. என் என் .என் சலீம் அவர்கள் முக நூலில் ஒரு கருத்தைத் தெரிவித்து இருந்தார்கள். அதன்படி முஸ்லிம்கள் இலங்கை, கேரளம் மற்றும் இதர பகுதிகளில் எங்கு வாழ்ந்தாலும் தங்களுக்குள் திருமண உறவு பந்தங்களை விரிவான முறையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கூறி இருந்தார்.

அவரது எண்ணம் விரிவானதுதான். ஆனால் தம்பி ஜாகீர் இட்டுள்ள பின்னூட்டம் கவனிக்கத் தக்கது. அதுவும் திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள தெருப் பாகுபாடுகள் பார்க்கும் நமது ஊர் மற்றும் கீழக்கரையினர் நிச்சயம் கவனிக்க வேண்டும்.

Ebrahim Ansari said...

//அந்தப்புர மனைவியின் கூந்தல் மணத்தின் ஆதாரம் என்ன என்ற ஆய்வை அரசியலாக்கியதைப் பற்றியும்; பொண்டாட்டியைத் தவிக்கவிட்டு பரத்தையிடம் கிடந்தவனின் உயிருக்காக மதுரையை எரித்ததையும்; கட்டிய மனைவியைச் சந்தேகித்து தீக்குளிக்கச் சொன்னதையும்; பொண்டாட்டியையே சூதாடித் தோற்றுவிட்டு போர்தொடுத்த பேடிகளையும் அல்லவா வரலாறு என்று போதித்தனர்!//

நல்ல சாட்டையடி .

ஆனால் பட்டியலில் சில குறைகள்.

அணில் பிள்ளை, மூஞ்சுறு , குரங்குகள் எல்லாம் உதவி மண் சுமந்து ஒரு பெரிய பாலத்தை சேது சமுத்திரக் கடலில் கட்டியதையும் அதே காரணத்தால் அதை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டுமென்றும் அந்த அணில் பிள்ளையும் குரங்கும் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் கோரும் அண்ணா பெயரில் உள்ள கட்சியின் அவலமான சிந்தனை இன்றைய வரலாற்றுப் பரிணாமம். வெட்கக் கேடான பரிணாமம்.

Ebrahim Ansari said...

தம்பி ஜாகீர் அவர்கள் சொன்னது:

//வீரன் வீரனாகவே மடிய விரும்புவான் . மாற்றாருக்கு முன் மண்டியிடுவதைக் காட்டிலும் மரணமே மேல் என்று அந்த வீரர் முடிவுசெய்தார். //
--------------------------------------------------------------------------------------------------------------------



"LION OF DESERT"உமர் மொக்தாரின் " We don't surrender...We will die"

என்ற வசனம் ஞாபகத்துக்கு வந்தது.

எனக்கும் ஒன்று நினைவுக்கு வந்தது. நினைவுக்கு வந்தவரின் பெயர் சதாம் உசேன்.

தூக்குமேடையில் நின்ற நேரத்தில் சிரித்த முகத்துடன் தன் கழுத்தை இறு க்கப் போகும் அந்தக் கயிற்றைத் தொட்டுப் பார்த்து -தன் உடல் எடையைத் தாங்கும் அளவுக்கு அந்த தூக்குக் கயிற்றுக்கு பலம் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்து , அருகில் நின்ற தூக்கில் இடுவோநிடமும் விசாரித்துத் தெரிந்துகொண்டு தன் கழுத்தில் அந்தக் கயிற்றை மாட்டிக் கொண்ட காட்சி மனதை விட்டு அகலாது.

Ebrahim Ansari said...

கருத்திட்ட அணைத்து சகோதரர்களுக்கும் ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

நீங்கள் அனைவரும் தரும் ஆர்வமே இன்னும் உற்சாகத்தோடு இன்னும் பல செய்திகளைத் தோண்ட வியக்கும் தூண்டுகோலாக திகழ்கின்றன.

crown said...

இன்றைக்கும் சிதிலமடைந்த கண்ணனூர் கோட்டை மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயருடைய வீரத்துக்கு சான்று பகர்ந்துகொண்டு இருக்கிறது. அந்தக் கோட்டையை கடல் அலைகள் அமைதியாக முத்தமிட்டுச் செல்கின்றன. அவர் அங்கேயே அடக்கம் செய்யப் பட்டார். அவரது மண்ணறையின் அருகிலேயே அவரது வீரத்தாயின் மண்ணறை இன்றும், இந்திய சுதந்திரத்துக்கு முஸ்லிம்கள் செய்த தியாகத்துக்கு சான்றாகத்திகழ்ந்துகொண்டு இருக்கிறது. கண்ணுள்ளோர் கண்ணனூர் சென்றால் இன்றும் காணலாம். ஆனால் இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுதியவர்களுக்கு மட்டும்தான் கண் அவிந்து போய்விட்டது.
--------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.முத்தாரம் மேற்கண்ட வரிகள்.தீரம் மிக்க வீரம்! கண்களில் ஈரம் வரவழைத்தது.அறிஞரின் எழுத்தில் மிளிரும் முன்னோர்களின் வரலாறு!.

அலாவுதீன்.S. said...

அன்புச்சகோதரர் இபுராஹிம் அன்சாரி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தங்களின் : மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாற்றுத் தொடர் உண்மையை வெளிக்கொண்டு வரும் உண்மையான தொடராக வெளி வந்துக் கொண்டு இருக்கிறது.

திப்புசுல்தான் வரலாறை வெளியிடும்பொழுதுக் கூட கற்பனை என்றே வெளியிடுகிறார்கள். அவாள்களின் கற்பனையை உண்மை என்று வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இஸ்லாத்தின் ஒளியைக் கண்டு மிரண்டு போய் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சுதந்திரத்திற்கு முன்பிலிருந்தே பொய்ப் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

தங்களின் சாட்டையடி பலரது மனதை தட்டி எழுப்பட்டும் உண்மை உலகை வலம் வரட்டும்.

வல்ல அல்லாஹ் தங்களுக்கு நல்லருள் புரியட்டும். வாழ்த்துக்கள்.!

Anonymous said...

//கண்ணுள்ளோர் கண்ணனூர்சென்றால்//

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை எழுதியவர்கள் மாவீரன் மூன்றம் குஞ்சாலி மரைக்காயரின் மண்ணறைக்கே மண்ணறை கட்டிவிட்டார்கள். இதுதான் இந்தியனின் சிறப்புதண்மை. நாட்டுபற்று என்னும் நல்ல மரத்தில் விழுந்த புல்லுருவிகள் இந்த ஆசிரியர்கள்.

S.முஹமதுபாரூக் அதிராம்பட்டினம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

குஞ்ஞாலி மரைக்காவின் வாள் வீச்ச்சு... இன்று இருந்திருந்தால் 'அ'வாள் பற்றி பேச்சு இருந்திருக்காதோ ?

வரலாறு எனக்கு பிடித்த பாடம், ஆனால் கோளாறுகள் நிரைந்த வரலாறுகள் படித்து விட்டு இந்த சொல்லாறாக பாயும் வரிகள் பாலாறாக இதயத்தில் நிறைகிறது

Yasir said...

பொய்களால் நிரப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள் இந்த மெய் வரலாற்று செய்திகளுடன் மீண்டும் புதுப்பிக்கப்ட வேண்டும்...

Ebrahim Ansari said...

//குஞ்ஞாலி மரைக்காவின் வாள் வீச்ச்சு... இன்று இருந்திருந்தால் 'அ'வாள் பற்றி பேச்சு இருந்திருக்காதோ ?//

தம்பி! நீங்க எத்தனை வாள் கொண்டு சுழற்றி னாலும் அவற்றை எதிர் கொள்ளும் தைரியம் அவாள் கையில் இருக்கும் வேப்பங்குச்சிக்கு இருக்கிறது. புதுவை நீதிமன்றத் தீர்ப்பைப் பார்க்கவில்லையா?

ஆகவே கூர்மையான வாளையும் விட கையில் உள்ள தண்டம் சக்தி வாய்ந்தது. ஆணிவேர்களில் ஊடுருவி சல்லிவேர்களில் சமுதாயத்தை அரிக்கச் செய்யும் சக்தி அவாளுக்கு உண்டு. காரணம் காட்ட வேண்டியதைக் காட்டிப் பெற வேண்டியதைப் பெறும் ப்லேக்சிபில் மைன்ட் பெற்றவர்கள்.

ஆங்கிலேயநிடமிருந்து சுதந்திரம் வாங்கிவிட்டோம். ஆனால் பட்டைகளிடமிருந்து?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.