Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நுண்மென், சாளரம் & வறட்டி ரொட்டி ! (தமிழே வளர்க!) 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 08, 2013 | , , , , , , ,

"ஐயா! நான் நுண்மென் நிறுவனத்திற்கு எப்படிச் செல்லவேண்டும்?"

"ஹே! வாட் டூ யூ வாண்ட் மேன்? வாடீஸ் நுண்மென்?"

"மன்னிக்கவும். உங்கள் முகச்சாயலைப் பார்த்தால் தமிழர் மாதிரி தெரிந்தது. அதான் கேட்டேன்".

"சார்! நான் தமிழன் தான்! அதென்ன நுண்மென் நிறுவனம்? புரியும்படியா கேட்டீங்கன்னா தெரிஞ்சா சொல்றேன்".
"அதான் தம்பி. உலக பெரும்பணக்காரர் 'விலைக்குறிப்பு கதவுகளின்' நிறுவனம்!"

உலக பெரும்பணக்காரர் "விலைக்குறிப்பு கதவுகளா"? 

"அதான் தம்பி அமெரிக்கா நிறுவனம். கணிப்பொறிக்கான சாளரம்
இயங்குதளத்தின் தலைமை நிர்வாகி".

"சார்! கொஞ்சம் புரியும்படியா பேசுறீங்களா? நுண்மென், விலைக்குறிப்பு கதவுகள், சாளரம்!! இதெல்லாம் என்ன? எந்த மொழி?" (ஒருவேளை இவன் லூசா இருப்பானோ?)

"தமிழ்தான் தம்பி. என்னிடமுள்ள சமர்த்து பேசியில் நுண்மென் நிறுவன இலட்சினை இருக்கு. அதைப்பார்த்தால் உங்களுக்கு விபரம் புரியும்னு நினைக்கிறேன்".

"சரி காட்டுங்க பார்ப்போம்".

சட்டைப்பையிலிருந்து நோகியா ஸ்மார்ட்போனை எடுத்து அதிலுள்ள லோகோவைக் காட்டுகிறார்.

"அட! மைக்ரோசாஃப்ட்! ஏங்க இப்படி குழப்புனீங்க. மைக்ரோ சாஃட்டுன்னு கேட்டிருக்கலாமே! நேராபோயி லெஃப்ட்ல திரும்பி,ரைட்ல கட் பண்ணுனீங்கன்னா மெக்டொனாட் ரெஸ்டாரன்ட் வரும்,அப்புடியே ரோட்டை கிராஸ் பண்ணி ஆப்போசிட்ல இருக்கிற ஓவர் ஃபிரிஜ்ல ஏறிப்போய், அங்கிருந்து சப்வேயில இறங்கி நடந்தால் மைக்ரோசாஃப்ட் என்ட்ரன்ஸ் வந்துடும்.

தம்பி நான் "தீவிர" தமிழ் பற்றாளர்.தமிழை தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களிடம் தமிழிலேயே பேசவேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறேன்.ரொம்பநன்றி தம்பி.நாம் மீண்டும் சந்தித்தால் கண்டிப்பாக கொட்டைவடிநீரோ அல்லது ரொட்டிக்கடை-உள்ளே பதப்படுத்தப்பட்ட பாலாடை தடவிய வறட்டி ரொட்டியோ சாப்பிட வேண்டும். 

=*=*=*=*=*=*=*=*=*=*=*= 

இது கற்பனையான உரையாடல்தான். பேசப்பட்ட விசயமும் காமெடியாகத்தான் இருக்கிறது. ஆனால் மிகவும் சீரியசான விசயம் இது. சிலரின் அதீத ஆர்வத்தினால் ஒட்டுமொத்த சமூகத்தையும் பின்னோக்கி அழைத்துச் செல்லும் அல்லது பெரும்பாலோரிடமிருந்து அந்நியப்படுத்தும் விசயமும் அடங்கியுள்ளது. இதுகுறித்த கருத்து பரிமாற்றமே இந்த பதிவின் நோக்கம்.

மொழி என்பது தொடர்புச் சாதனம்.வெறும் ஒலியெழுப்பிக் கொண்டிருந்த ஆதி மனிதன் நாளடைவில் தனது உணர்வுகளைத் தெரிவிக்க மொழியைக் கற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மதரீதியில் படைத்தவனே பயிற்றுவித்ததாகச் சொல்லப்படுகிறது.

மனிதனின் தேவைக்கேற்பவே அனைத்தும் படைக்கப்பட்டன.தேவை என்பது மட்டும் இல்லையெனில் உலகம் இத்தனை வேகமாக முன்னேறியிருக்காது. அறிவுத்தேடலின் தொடர்ச்சியால் தேவை உருவாகி கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன.அவ்வாறு மனிதன் கண்டுபிடித்தவற்றுக்குப் பெயரிட்டு அடையாளப்படுத்துகிறான். அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ் என்று சொல்லப்பட்டாலும் கொலம்பஸுக்கு முன்பே அமெரிக்கா இருந்துள்ளது. நியாயமாகச் சொல்வதென்றால் அமெரிக்காதான் கொலம்பசைக் கண்டுபிடித்தது! :) 

அதுபோல் தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிராஹாம்பெல், ரேடியோவைக் கண்டுபிடித்தவர் மார்கோனி என்பர். இதுவேண்டுமானால் சரியாக இருக்கலாம்.ஏனெனில் இவர்கள் இதை அறிமுகப்படுத்தும்வரை அத்தகைய சாதனங்களைப்பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை; அப்பொருட்கள் அதே வடிவில் இருந்திருக்கவும் இல்லை! மார்கோனி தனது கண்டுபிடிப்பிற்கு அஞ்சரைப்பெட்டி என்று பெயரிட்டிருந்தால், ரேடியோவின் பெயர் அஞ்சரப்பெட்டி! கிரஹாம்பெல் டெலிபோனுக்கு அம்மிக்குளவி என்று பெயரிட்டிருந்தால் டெலிபோனை அம்மிக் குளவி என்றே அழைப்போம்! 

ராமதாஸ் என்பதை ராமதாசு என்றும், தட்சினாமூர்த்தியை கருணாநிதி என்றும் மாற்றிக்கொண்டால் மட்டும் இவர்களிடம் தமிழ்பற்று மிகைத்துள்ளதாகக் கருதிட முடியாது. ஏனெனில்,தாசு என்பது தமிழல்ல; தாசன்/தாசர் என்று இட்டுக்கொண்டாலும் ஓரளவு ஒப்புக்கொள்ளலாம். இந்த அரசியல் தலைவர்கள்மேலுள்ள வெறுப்பில் இதைக் குறிப்பிடவில்லை. தமிழை வைத்து செய்யும் மொழி அரசியலைப் அடையாளம் காட்டவே அவ்வாறு குறிப்பிட நேர்ந்தது.

என்னைப் பொருத்தவரை சைக்கிள் என்பதை மிதிவண்டி என்றும்,பைக் என்பதை மோட்டர் சைக்கிள் என்றும், ரயிலை புகை வண்டி என்பதும்கூட தேவையற்றது. சைக்கிள் ஐ சைக்கிளாகவும், மோட்டார் பைக்கை மோட்டார் பைக் என்றும், ட்ரைனை ட்ரைன் என்றும் சொல்வதால் தமிழ் அழிந்துவிடாது. மாறாக, அவ்வாறு இயற்பெயரில் உபயோகித்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்து தமிழர்களை அந்நியப்படுத்தவே செய்யும்.  

தமிழக சட்டமன்றத்தில் நடந்த ஒரு விவாதத்தில் சைக்கிளின் உதிரி பாகங்களுக்குக் தமிழ் பெயர்களைக் குறிப்பிடும்படி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கேட்டபோது, தமிழார்வலர்கள் திணறித்தான் போனார்கள். ட்ரைனை புகை வண்டி என்றல், தற்போது புகையில்லா ட்ரையின் (எலக்ட்ரிக் ட்ரையின், மோனோ ட்ரையின் என்றெல்லாம் முன்னேறிய பிறகும் புகைவண்டி என்பது அர்த்தமற்றதாகி விடுகிறதுதானே!

ஒருபொருள் அதனை உற்பத்தி செய்தவரால் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோ அவ்வாறே அழைக்கப்பட வேண்டும். நமது கண்டுபிடிப்பான இட்லியை அமெரிக்கனும் இட்லி என்று அழைக்கிறானோ அவ்வாறே நாமும் அந்தந்த பொருளை அதனதன் பெயரிலேயெ அழைக்க வேண்டும். இட்லியை ஆங்கிலேயர் பாயில்ட் ரைஸ் கேக் என்றோ ஹாட் ரைஸ் கேக் என்றோ அழைப்பது எப்படி சரியல்லவோ,அதுபோன்றே பிறமொழி சொற்களை நமது வசதிப்படி தமிழாக்கிக் குறிப்பதும் தவறாகும்.நம்மூர் கண்ணாயிரத்தை Thousand Eyes என்றும்,ஆறுமுகத்தை Six Face என்றோ அல்லது Tiger Woods-ஐ புலிக்கட்டை என்றோ சொன்னால் சகிக்க முடியாதுதானே. ஆக, மொழி ஆர்வம் இருக்கலாம் வெறியாக மாறக்கூடாது.

மற்ற மொழிகளைவிட ஆங்கிலம் உலகளாவிய அளவில் பரந்து விரிந்ததற்குக் காரணம், அந்தந்த மொழியில் இருந்த சொற்களை உள்வாங்கி ஆங்கிலமாக்கிக் கொண்டதே. உ.ம். நம்மூரு கட்டுமரத்தை ‘கடமரன்’ என்றே பயன்படுத்துகிறார்கள்.

N.B: மேற்கண்ட உரையாடலில் "விலைக்குறிப்பு (Bill) கதவுகள் (Gates)" என்பது மைக்ரோச்சாஃட் நிறுவனர் பில்கேட்ஸ் (Bill Gates) என்றும் ரொட்டிக்கடை-உள் என்பது Pizza-In என்பதுமாகும் சற்று அதீத கற்பனையில் எழுதியது என்றாலும் தமிழார்வம், தமிழ் வெறியானால் இந்நிலை ஏற்படாது என்று சொல்லமுடியாது. 

அதிரைக்காரன்
N.ஜமாலுதீன்

24 Responses So Far:

Unknown said...

தமிழ் பற்று தமிழ் பற்று என்று சொல்லி சொல்லியே நம்மையெல்லாம் முட்டாளாக்கிய இந்த அரசியல் வாதிகள் நமக்கு, நம் சந்ததிகளின் முன்னேற்றத்திற்கு செய்த துரோகம் மன்னிக்கமுடியாதது.

ஒருமொழியோடு இன்னொரு மொழியின் வார்த்தை கலந்துவிடுவதால் அந்த மொழியின் அசல்தன்மையோ அல்லது அதன் உயிரோட்டமோ அழிந்துவிடாது.இப்படி உலகில் எத்தனையோ மொழிகள் பிற மொழிசொர்க்களை உல் வாங்கி அம்மொழியின் ஆற்றலோ அதன் உயிரோட்டமோ மாறாமல் , மாறாக வளர்ந்தே வந்திருக்கின்றது.

இதன் உட்பொருளை விளங்காமல்தான் , இந்த அரசியல் வாதிகள் ஓட்டுப்பொறுக்கும் நோக்கத்துடன் நம்மையெல்லாம் முட்டாளாக்கி, ஹிந்தி ஒழிக தமிழ் வாழ என்று ஒரு காலத்தில் கோஷம் போட வைத்து, தமிழ் நாட்டைவிட்டு தமிழன் ஊமையாக அடுத்தமாநிலத்திர்க்கு போக வேண்டிய அவல நிலைக்கு தள்ளி விடப்பட்டான்.

இந்த நிலையில் ஆங்கிலத்திற்கு நாம் நன்றி சொல்லியாக வேணும். அது ஒன்றுதான் நம்மை மற்றவருடன் இணைக்கும் பாலமாக அமைந்தது. மற்ற மொழியை கற்றுக்கொள்வதிலோ அல்லது அதன் ஒரு சில வார்த்தைகளை நம் மொழியில் உள்வாங்கி பயன்படுத்திக்கொள்வதிலோ நம் தாய் மொழியின்
உயிரோட்டம் சிதைந்து விடாது என்பது இந்த அரசியல்வாதிகளின் மர மண்டையில் ஏன் கடந்த காலம் ஏற மறுத்ததோ தெரியவில்லை.

ஒரு பொருளை ஒருவன் உலகில் முதன் முதலாக அறிமுகப்படுத்தி தன் ஆராய்ச்சியின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றான் என்றால் அந்தப்பொருளுக்கு அவன் அறிமுகப்படுத்தும் பெயரையும் அதே உச்சரிப்பில் நம் மொழியில் பயன் படுத்துவதுதான் அறிவாளித்தனம். அதுதான் அப்பொருளைப்பற்றிய நம் அறிவையும் வளர்த்துக்கொள்ள, மற்றவர்களுக்கு அதன் பயன் பாட்டை எடுத்துச்சொல்ல ஒரு இலகுவான வழியாகும்.

இதனால் நம் தாய் மொழி சிதைந்து விடும் என்பதெல்லாம் ஒட்டுப்பொருக்கிகளின் சுத்த பேத்தல்.

சகோ ஜமாலுதீன் அவர்களே

உங்களின் இந்த ஆக்கம் மொழியின் மேல் பற்று என்று சொல்லி நாடகமாடி
ஒட்டு ஒன்றையே குறிக்கோளாக கொண்ட அரசியல்வாதிகளுக்கு ,
ஒரு நல்ல பாடம் என்றே கருதுகின்றேன்.

அபு ஆசிப்.


அபு ஆசிப்.

ZAKIR HUSSAIN said...

மொழி மீது பற்று என்பது வேறு , மடத்தனமான வெறி என்பது வேறு.

ஒரு தமிழாசிரியர் தனக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தும் பள்ளிக்கூடம் போய் பாடம் நடத்தினால் அது தமிழ் மீது உள்ள பற்று என்று சொல்லலாம்.

இதையே நானும் தமிழைக்காப்பாற்றுகிறேன் என்று 'ஊரான் வீட்டு" கடையின் போர்டில் தார் வைத்து அழித்தால் அது தமிழ் மீது வெறி. ஆனால் இந்த பரதேசிகள் தமிழ் பள்ளிக்கூடம் இல்லாத இடங்களில் பள்ளிகூடம் நடத்த 10 ரூபாய் நன்கொடை கூட கொடுத்திருக்கமாட்டார்கள்.

தமிழாசிரியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 5 % அல்லது 10 % ஊதிய உயர்வு. தமிழை முக்கிய பாடமாக படிக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 20% பாடம் & தேர்வு கட்டணத்தில் கழிவு தமிழை வளர்க்க உதவும். இல்லாவிட்டால் இன்னும் தமிழ் முனியாண்டி விலாஸ் , ஆரிய பவனில் சப்ளைக்கு சேர்ந்த மாதிரி 'சோரு போடுமா போடாதா " என்ற கேள்விகள் வரும்.

Bro Jamaludeen ...your article is outstanding. ஆப்பிளுக்கு தமிழில் என்ன பெயர் என்று வறுத்தெடுக்கும் சூழலில் நல்ல ஒரு ஆக்கம்.



Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Jamaludeen

Nice article with clear examples.

A great example of growing language is one adapts words and terms from other languages, which is of course English language.
In the same way a growing individual adapts to new trends and developments instead of objecting. I wish our brothers and sisters are adapting and growing globally. Recently a Tamilan was recognized for his achievements and a street was named after him. The guy is not reserved or constrained to Tamil circle.

Thanks and best regards

B.Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நானும் தான் டமில் வழர்க்கலாம்னு...

இது கையடக்க தட்டிலிருந்து அனுப்பியதுன்னு போட்டேன்...

அதைப் பார்த்த ஒரு டமில் எதிரி எங்கூட்டுலயை கையடக்க தட்டை கிண்ணின்னு சொல்லுவாங்கன்னுட்டாரு...

நானும் மல்லாக்க படுத்து ஆலமா டமிலை யோசிச்சு பார்த்தேன்... ஆமா ! ஏதோ தட்டில் விழுந்ததை அனுப்பியது போன்ற உணர்வு !

நாம மட்டும் என்ன இங்கிலீஸுக்கு எதிரியா !? அதனால் "ஐபேடிலிருந்து அனுப்பியதுன்னு" மாத்திட்டேன்

நல்லாத்தானே இருக்கு !!

----------------------------

தமிழை நோவடிப்பது தமிழனா ?
பிற மொழி பேசுபவர்களா ?
இல்லை..!
தமிழனாக வேஷம் போடுபவனா ?

sabeer.abushahruk said...

தம்பி சமாலுதீன், (தமிழ்ப்படுத்துவதால் உங்கள் பெயரின் பொருள் மாறுவதைக் கவனிக்க)

நாலாபுறமும் கட்டுப்போட்டு, உள்ளேயும் எதையும் விடாமல் வெளியே கொண்டு செல்லும் மார்க்கங்களையும் எதிர்த்து தமிழ் வளர்த்தால் "மெல்லத் தமிழ் இனி சாகும்தான்".

வினைச் சொற்களை வேண்டுமானால் தமிழ் படுத்தலாம்; பெயர்ச்சொற்களை? அப்படி அப்படியே தமிழுக்குள் உள்வாங்கிக் கொண்டாலே தமிழ் வ்ளரும்.

அப்படி ஏற்றுக்கொண்டதால்தான் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி....

இல்லேன்னா

அச்சலாமு அலைக்கும் வரக்மத்துல்லாகி என்று நம்பல்கி நிம்பல் சலாம் சொல்ல வேண்டி வரும்.

கலக்கல் பதிவு ஜமாலுதீன்.

sabeer.abushahruk said...

ஆனா அதுக்காக.

தமிழின் வரிவடிவம் அவசியமில்லை என்று கட்டுரை போட்ட தமிழ் இந்து தளக்காரங்களை ஆதரிக்க முடியாது. அவிங்கள சோட்டால அடிக்கனும்.

வரிவடிவம் போனால் தமிழ் கோமா ஸ்டேஜுக்கு போய்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னு "கேட்" பூட்டுறதுக்குலா வா !

வறட்டி / ரொட்டி தமிழ் தேன் கலந்து சாப்பிடலாம் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆங்காங்கே முதலில் உபயோகப்படுத்திய அல்லது கண்டுபிடித்த பொருளை சற்றே புரிந்து கொள்ள அந்த மொழிச் சொல்லை பயன்படுத்துவதில் தப்பே இல்லைங்க! மொழிக்கும் பங்கம் இல்லைங்க!

ஆனால் ஒரேடியாக தாய்மொழியை தள்ளி வைத்து விட்டு மற்ற மொழியை லைக் பண்ணுறாங்களே, இவங்களால் தான் இழுக்கு மொழிக்கு!

Shameed said...

எது எப்படியோ இங்கு (சவூதி)அனைத்து பொருட்களுக்கும் அரபியில் பெயர் சொல்றாங்க உதரணமா கார் உதிரி பாகங்கள் அனைத்திற்கும் அரபியில் பெயர் இருக்கு

எடுத்துக்காட்டு இங்கு அரபு மொழியில் சில காரின் உதிரி பாகங்கள் பெயரை கவி சபீர் அவர்கள் பட்டியல் இடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்

அதிரைக்காரன் said...

பரவலாகப் பேசப்படும் எந்தவொரு மொழியும் பிறமொழிச்சொற்களையும் உள்வாங்கிக்கொண்டால் கூடுதல் பலம்.

தமிழில் புழங்கப்பட்டுவரும் சொற்களை பிறமொழிச்சொல்லால் பேசுவதற்கும் (காட்டு: அம்மா-மம்மி,அப்பா-டாடி, தண்னீர்-வாட்டர்), பிறமொழியில் புழங்கப்படுவதை வலுக்கட்டாயமாக தமிழாக்கம் செய்வதற்கும் (உம்.மொபைல் - செல்பேசி, ஃபேஸ்புக் -முகநூல்) உள்ள முரன்பாட்டைச் சுட்டுவதே என்நோக்கம். கருத்திட்ட சகோதர்களும் இதை தெளிவாக உணர்ந்துள்ளனர்.

வாசித்த, கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

அதிரைக்காரன் said...

பொருளரிந்து பேச/எழுத வேண்டுமென்பதற்காக மொழியாக்கம் செய்வது ஆர்வத்தினாலும், உலக மொழிகளில் புழங்கப்படும் சொற்களுக்கு தமிழில் இணையான சொற்களுண்டு என்பதற்காகவுமே அவ்வாறு வலிந்து தமிழ் மொழியாக்குகின்றனர். தமிழன் உருவாக்காதவற்றுக்கு மொழிரீதியில் உரிமை கொண்டாடுவது மொழி வன்முறை என்றே நான் கருதுகிறேன். Facebook என்பதை முக நூல் என்பது சரியான மொழியாக்கமாக இருக்கலாம். எனினும் முகம் நூல் என்பற்கு தமிழில் வெவ்வேறு அர்த்தங்களும் உண்டு என்ப்தைப்புரிந்துகொண்டால். இப்பதிவிலுள்ள நியாயம் விளங்கும்.

Unknown said...

//கண்டிப்பாக கொட்டைவடிநீரோ //

அதென்ன கொட்டை வடிநீர்? எனக்கென்னமோ நீ எழுதிய மற்றதைவிட, இந்த வார்த்தை என்னை என்னன்னவோ நினைக்க தோன்றிற்று.. அப்புறம் ஓரளவுக்கு சுதாரித்துக் கொண்டு,., அட காப்பித் தண்ணி,, என புரிந்துகொண்டேன்,,

உட்கார்ந்து யோசித்தாயோ..

adiraimansoor said...

நம்பர் ப்லேட்டுகளை தமிழில் தந்த அரசியல் வாதிகளுக்கு செருப்படி கொடுக்கும் பதிவு

வாழ்த்த்துக்கள்ப் ஜமாலுதீன்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

அன்பர்களே எல்லோரும் ஒரே கோரசாக பின்பாட்டு பாடி இருக்கிறீர்கள்[ஒருவரை தவிர]எந்த நாட்டு கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதற்க்கு ஆங்கிலத்திதான் பெயர் சூட்டப்படுகிறது [நீங்கள் அனைவரும் அறிவீர்கள்]ஆங்கிலேயர்களின் ஆதிக்க குணம் , மொழிமீது பற்றுதல் ஆரம்பத்திலேயே இருந்தமைதான் உலக மொழியாக ஆங்கிலம் மாறிப்போனது உங்களைப்போன்றோர் ஏனோ தானோ வெண்று இருப்பதுதான் நம்மொழி புதிய கண்டுபிடுப்புகளுக்கு தமிழ் வார்த்தை சூட்டினால் கிண்டலடிக்கிறீர்கள் உங்களை கொட்டை வடிநீர் என்று தேநீர் கடையில் கேட்கச்சொல்லி யாரும் வற்புறுத்தவில்லை coffee க்கு தமிழாக்கம் [தமிழ் வார்த்தை வேண்டுமா வேண்டாமா?]தேவையே இல்லை என்கிறீரா

Meerashah Rafia said...

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மட்டும் புரிந்தால் எல்லாம் சரி..

சவூதி அரேபியாவை பொருத்தவரை முடிந்தவரை நவீன தொழில்நுட்பத்தையும் அரபிபடுத்தப்பட்டு காக்கப்பட்டுவருகின்றது.

உதாரணம் :
Cellphone-Jawaal
Car-Siyaara
Flight-Thairaan
Bus-Haafla

இதுபோல் அல்லாது பழைய Airtel Customer Care auto response மாதிரி எழிதான மொழிப்பெயர்ப்பு இருந்தும் அதீத ஆங்கில உபயோகத்தை தடுக்கலாம்..

அதிரைக்காரன் said...

சபீர் காக்கா, தமிழை கிண்டலடிப்பதல்ல இப்பதிவின் நோக்கம். மொழிப்பற்று என்ற பெயரால் பிறமொழியில் அறியப்படும் பயன்பாடுகளுக்கும் அல்லது கண்டுபிடிப்புகளுக்கும் வலிந்து தமிழாக்கம் செய்வது சரியல்ல என்பதே என் கருத்து.

கொஞ்சம் காஃபி ஸாரி குழம்பி அருந்திவிட்டு மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாரருங்கள் காக்கா ;)

அதிரைக்காரன் said...

மன்சூர் காக்கா, தசம தட்டுகளை :) தமிழ்படுத்தினால் தமிழால் நாம் நிச்சயம் அந்நியப்படுவோம். இதை நீங்கள் சொல்லியிருக்கும் விதம் சற்று கடுமை என்றாலும் தூயதமிழில் காலணிஅடி என்று சொல்லியிருந்தால் மகிழ்ந்து இருப்பார்கள் ;)

அதிரைக்காரன் said...

தம்பி பேரரசு (மீராசா;), அதிரை நிருபரை சவ்தியில் مراسل صحفي ادرمي என்று சொல்ல மாட்டார்கள்தானே. :)

இந்தப்பதிவில் மொழி ஆர்வத்திற்கும் வெறிக்குமுள்ள நுன்னரசியலை சொல்ல முயன்றேன். இது அனைத்து மொழி வெறியர்களுக்கும் சேர்த்தே.

sabeer.abushahruk said...

சபீர் பாய்,

ஒத்தக் கருத்துகளைப் பின்பாட்டு என்று கீழ்த்தரமாக விமரிசிப்பது நாகரிகமானதா?

தமிழ்மொழி வாழ்வாதாரத்தில் ஒவ்வொரு தமிழனுக்கும் தன்னிறைவு ஏற்படுத்தாதவரை அதை ஒருமொழியாகவும் அதைக் கற்றவரை மொழியறிவில் தேர்ச்சி பெற்றவர் என்று மட்டுமே கருத முடியும்.

கரியமில வாயு என்று கார்பன் டை ஆக்ஸைடையும் பிராண வாயு என்று ஆக்ஸிஜனையும், அதாவது அபரிதமானவற்றை மொழி பெயர்த்தவரை ஏற்புடையதுதான். ஆனால், ட்டங்ஸ்ட்டன், க்ரிப்ட்டோன் போன்றவற்றையும் தமிழ்ப்படுத்த வேண்டுமா என்பதே ஆதங்கம்.

மந்தியை மந்தி என்றும் கபாபை கபாப் என்றும் மூலத்தின் பெயரிலேயே தமிழில் அழைப்பதில் என்ன தவறு?

இப்படியாக, தமிழில் நிறையச் சொற்கள் சேரச்சேர தமிழ் வளரத்தானே செய்யும்?

தமிழைப் பிழைப்பாய்க் கொண்டோரில் பலரும் ட்டீ குடிப்பவரே; தேநீரல்ல.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

உங்களுக்கு ஒத்தக்கருத்தாகப்பட்டது எனக்கு வேறுமாதிரியாக படுகிறது இருந்தும் தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தியதாய் தாங்களும் உங்கள் கருத்தை ஒத்தவர்களும் என்னை தவறாக நினைக்கவேண்டாம் என்று மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன்
இனி விஷயத்துக்கு வருவோம் உங்கள் கருத்துடையவரில் ஒருவர் அரேபியநாட்டில் பனியின் காரணமாய் முதன் முதலாய் சென்று அங்கு வேலைபார்க்கும் சூழலில் காலை உணவாக கடையில் சவர்மா சாப்பிடுகிறீர்கள் அதை தமிழில் எப்படி சொல்ல வேண்டும் என்ற கவலையில்லை சவர்மா என்று கேட்டாலே கொடுக்கிறானே நமக்கு ஏன் தமிழ்படுத்தும் வீண்வேலை என்று விட்டு விடுகிறீர்கள் தங்களின் தாயார் போன்செயது காலையில் எத்துனைமனிக்கு வேலை காலை உணவிற்கு என்ன செய்கிறாய் என்று கேட்க்க [tamil பற்றி don't care ஆத்மியாகிய]தாங்கள் சவர்மா சாப்பிடிகிறேன் என்று சொல்லிவைக்க அப்படின்னா என்னான்னு அவர்கேட்க்க நீங்களும் சொல்லத்தெரியாமல் விடுமா வீட்ல எல்லோரும் சுகமா போன்ற விஷயங்கள் விசாரிக்கப்பட மறுநாள் உங்கள் தாயார் உங்கள்மேல் கவலை பட்டு சொந்தபந்தங்களிடமெல்லாம் ஏதோ வெறும் மாவை திண்டுகொண்டு காலைப்பொழுதை களிக்கிரானாம் என்று மூக்கை சிந்துவதை விரும்புவீர்களா? அல்லது தமிழ்மேல் பற்றுண்டு நீங்கள் இதை உண்டபின் இவை எந்த பொருட்களால் தயார் செய்யப்படுகிறது எப்படி செய்யப்படுகிறது என்று விசாரித்து ஊரில் தமிழ் பண்டிட்களையும் பேராசிரியர்களையும் தொடர்புகொண்டு இது முன் காலத்தில் நம் பழக்க வழக்கங்களில் உண்டா இது ஒத்த வேறு உணவு உண்டா அதன் பெயரென்ன அல்லது இது பெயர் தமிழ்காரர்களுக்கு புரியும்படி சொல்வதனானால் என்ன வார்த்தை சொல்லவேண்டும் என்று கேட்பதுதானே தமிழ் ஆர்வலர்களுக்கு சிறப்பு ?
[அரேபிய] மந்தி =குரங்கு[தமிழாகும்]

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

கவி சபீர் அவர்கள் கூற்று
///தமிழைப் பிழைப்பாய்க் கொண்டோரில் பலரும் ட்டீ குடிப்பவரே; தேநீரல்ல.///

தமிழை பிழைப்பாய் கொண்டோர் tea ஐ அப்படியே டி என்று விட்டுவிடவில்லை தேநீர் என்று தமிழாக்கப்படுத்தினர் மொழிவழக்காய் டி என்றே சொல்கின்றனர் கோவணம் கட்டிய ஊரில் வேட்டியோடு செல்ல வெட்கப்பட்டு

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

நரிக்குறவன் சாகும் பொழுது அவனின் பாஷையும் சாகின்றதாம்! காரணம் computer க்கு கணினி என்று தமிழ் படுத்தியதுபோல் அவன் பாஷையில் மொழிப்படுத்தாததே ??!!!

Anonymous said...

மு.செ.மு. சபீர் காக்கா,

சவர்மாவை, சவர்மா என்று குறிப்பிடுவதில் தவறில்லை; ஏனெனில் அதைக் கண்டுபிடித்தவன் அரபுக்காரன்! பதிவும் இதைத்தான் சொல்கிறது. (வட இந்தியர்கள் கண்டுபிடித்த சப்பாத்தியை மட்டும் ஏன் சப்பாத்தி என்றே சொல்கிறோம்?;)

அதிரைக்காரன்
N.ஜமாலுதீன்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

உங்களுக்கு பதில் நாளை சமூகவிழிப்புணர்வு பக்கத்தில்nijampage blogspot .comஎனது ஆக்கம் படியுங்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.