Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 21 [அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி)] 12

அதிரைநிருபர் பதிப்பகம் | December 11, 2013 | , , ,

அல்லாஹ்வின்  திருப்பெயரால்.
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களின் மூத்த மகள் ஜைனப் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களையும், அவர்களின் கணவர் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்பதில் எந்த அளவுக்கு இறுதி வரை உறுதியாக இருந்தார்கள் என்பதையும் முந்தைய பதிவில் கண்டோம் படிப்பினைகளையும் அறிந்தோம்.

இந்த வாரம், இஸ்லாமிய வரலாற்றில் பிரசித்திப் பெற்ற ஓர் உத்தமர், அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எத்திவைத்த ஆரம்ப காலக் காலகட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற ஓரு முஸ்லீம், கண் பார்வையில்லாத உன்னத நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களும் நாம் பெரும் படிப்பினைகள் பற்றியும் பார்க்கலாம்.

பிறக்கும்போதே கண் பார்வையின்றியே பிறந்த அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அருமை மனைவி அன்னை ஹதீஜா(ரலி) அவர்களின் தாய் மாமா கைஸ் இப்னு ஸைது அவர்களின் மகன். இவரின் தாயார் பெயர் ஆத்திக்கா. “கண் தெரியாதவரின் தாயார்” அதாவது உம்மு மக்தூம் என்று அன்றைய கால கட்டத்தில் அழைக்கப்பட்ட அப்துல்லாஹ் அவர்கள் தாயாருக்கு, அதுவே வரலாற்றிலும் பெயராகிப்போனது. மக்கள் தன்னுடைய மகனின் குறையை வைத்து தன்னை அழைப்பதை பொருட்படுத்தாமல், அந்த சீமாட்டி தன் பிள்ளையை அன்பும் பாசமும் காட்டி அவருடைய அகக் கண்ணை வலுப்படுத்தும் விதமாக வளர்த்து ஆளாக்கினார்கள்.

கண் பார்வை இல்லை என்றாலும் தன்னுடைய அகக் கண்ணால் வாழ்வில் கண்ணுள்ள ஒருவர் சாதிப்பதைவிட அதிகமாகவே சாதித்து அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் அவர்கள் வாழ்துள்ளார்கள் என்பதை விளக்க அவர்களின் வரலாற்றில் நடைபெற்றுள்ள உருக்கமான, நெகிழ்ச்சியூட்டும் பல சம்பவங்களே சாட்சி. மக்காவில் அல்லாஹ்வின் இறுதித்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் ஏகத்துவ அழைப்புப் பணி ஆரம்பித்த காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற மிக சொர்ப்பமானவர்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கும் ஒரு சிலரில் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களும் இருந்த்துள்ளார்கள் என்பது வரலாறு.

அதுபோல் கண் பார்வையற்றவர், பாவம், தெரியாமல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருப்பார் என்றுகூட எண்ணி இரக்கப்படாமல், கண்ணுள்ள பிலால்(ரலி), அம்மார்(ரலி), யாசிர்(ரலி) ஆகியோரை சித்திரவதைப் படுத்தியதற்கு நிகரான தொந்தரவுகளையும் தண்டனைகளையும் அப்துல்லாஹ் உம்மி மக்தூம்(ரலி) அவர்களுக்கு கொடுக்க மக்கத்துக் குரைசிக் காபிர்கள் தவறியதில்லை. அனைத்து இன்னல்களையும் அல்லாஹ்வுக்காக பொறுத்துக்கொண்டு மக்கா வாழ்க்கையில் தொடந்திருந்தார்கள்.

ஓரிறைக் கொள்கையை எத்தி வைத்து ஏகத்துவப் பிரச்சாரத்தை மக்களிடையே சொல்லி வந்த அந்த காலகட்டத்தில், இஸ்லாத்தை அந்த சமூகத்தில் நிறத்தால், உணர்வுகளால், குலத்தால் ஏன் அங்கஹீனத்தால் சமூக அந்தஸ்துகளிலிருந்து ஒதுக்கப்பட்ட மக்களே இஸ்லாத்தை ஏற்றிருந்தார்கள். அவர்களுக்கு சமூக பரிஸ்காரம் செய்யப்பட்டு ஊரிலிருந்து ஒத்துக்கப்பட்டார்கள். குலம் கோத்திரம் என்று தங்களின் கெளரவத்தை விட்டுக் கொடுக்காத அன்றைய மக்கத்து மக்கள் இஸ்லாத்தில் இணைய மறுத்தனர். காரணம், பிலால்(ரலி) அம்மார்(ரலி) யாசிர்(ரலி), மிக்தாத்(ரலி) அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) ஆகிய இன்னும் சிலரும் அன்றைய குரைஷி காஃபிர் சமூகத்தினரால் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்களாக கருதப்பட்டார்கள். 

ஒரு சந்தர்ப்பத்தில் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மக்கத்து குரைஷிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு நாள் தூய இஸ்லாத்தை மக்கத்து குரைஷித் தலைவர்களிடம் சபையில் எத்திவைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில்தான் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவ்வழியாகச் சென்றார், நபி(ஸல்) அவர்களின் உபதேசம் தனது காதுகளுக்கு கேட்பதை உணர்ந்த அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்கள், அந்தச் சபைக்கு  வந்தார்கள். “அல்லாஹ்வின் திருத்தூதர்(ஸல்) அவர்களே  அல்லாஹ் உங்களுக்கு அறிவித்தவற்றை எனக்கு நீங்கள் கற்றுத்தாருங்கள்” என்று உரிமையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வினவினார்கள். நம் உத்தம நபி(ஸல்) அவர்களின் உன்னத தோழரல்லவா, கண் பார்வை தெரியாத காரணத்தால் அந்த சபையில் யார் யார் எல்லாம் உள்ளார்கள் என்பதும் அந்த சபையின் முக்கியத்துவமும் அவருக்கு தெரியவில்லை. 

குரைஷிக் குலத்தினரிடம் முக்கியமாக ஏகத்துவப் பிரச்சாரம் செய்யும் போது இவர் வருகிறாரே, என்ற அதிர்வுடன் தன் முகத்தை கொஞ்சம் திருப்பிக்கொண்ட நபி(ஸல்) அவர்கள், தன்னுடைய பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தன் முகத்தை திருப்பிக் கொண்டார்கள் என்பது அருமைத் தோழர் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்களுக்கு தெரியாது என்றாலும், அல்லாஹ் இதனை கண்காணித்து, நபி(ஸல்) அவர்களுக்கு அறிவுரைக்கூறும் விதமாக சூர அபஸாவை அருளினான். (பார்க்க அல்குர்ஆன் அத்தியாயம் 80 வசனம் 1 முதல் 11 வரை). அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்களுக்காக இறக்கப்பட்ட இவ்வசனங்களில் இஸ்லாத்தை ஏற்றவர் எவராக இருந்தாலும் அனைவரும் அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் தூதர் முன்னிலையில் சமம் என்பதை இந்த மனித சமுதாயத்திற்கு உணர்த்தும் விதமாக அல்லாஹ் உபதேசித்துள்ளான் என்பதை உணரலாம்.

மேல் குறிப்பிட்ட திருமறை வசனம் இறங்கிய பின்பு அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்கள் மேல் மேலும் அன்பு பாசம் அக்கறையை அதிகப்படுத்தினார்கள். காரணம் கண் பார்வையில்லாத இந்த தோழருக்காக அல்லாஹ்வே திருமறை வசனம் இறக்கிவிட்டான் என்று. இதன் பொருட்டு நபி(ஸல்) அவர்கள் முஸ்ஹப் இப்னு உமைர்(ரலி) அவர்கள் தலைமையில் தூய இஸ்லாத்தை மதினாவில் எத்திவைக்க மார்க்கப் பிரச்சாரகர்களாக குர்ஆனை ஓதி கற்றிருந்த அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் அவர்களையும் சேர்த்து நபி(ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். மதீனா அன்சாரிகளிடம் மார்க்கப் பிரச்சாரம் செய்து அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மேல் அளவு கடந்த பாசம் அன்சாரி தோழர்களுக்கு ஏற்பட அல்லாஹ்வின் உதவியால் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) போன்ற தோழர்களின் முந்தைய மார்க்கப் பிரச்சாரங்கள் ஒரு காரணம் என்று சொன்னால் மிகையில்லை. 

நபி(ஸல்) ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தவுடன் மஸ்ஜித் நபவி கட்டிய பின்பு, பிலால்(ரலி) அவர்களையும் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்களையும் பாங்கு சொல்லவும் இகாமத் சொல்லவும் நியமித்தார்கள். பிலால்(ரலி) அவர்கள் பாங்கு சொன்னார் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்கள் இகாமத் சொல்வார்கள். இவர் பாங்கு சொன்னால் பிலால்(ரலி) அவர்கள் இகாமத் சொல்வார்கள்.

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நபி(ஸல்) அவர்களிடம் கற்ற அந்த தோழருக்கு நீண்ட நாள் ஆசை, தான் அல்லாஹ்வின் பாதையில் போரிட வேண்டும், ஆனால் நபி(ஸல்) அவர்கள் கண் பார்வை தெரியாதவர் என்பதால் அவருக்கு எதிரி யார் என்று தெரியாது, சிரமமாக இருக்கும் என்பதால், அவரை போருக்கு அழைத்துச் செல்லவில்லை. ஆனால் ஒரு மிகப்பெரிய பொறுப்பை அந்த உன்னத தோழருக்கு வழங்கினார்கள். போர் காலங்களில் நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் இமாமத் பொறுப்பை கண் பார்வை தெரியாத அந்த உன்னதத் தோழர் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களுக்கு வழங்கி கண்ணியப்படுத்தினார்கள். இது போன்று நபி(ஸல்) 10க்கும் மேற்பட்ட போர்களின் போதும் மதீனாவின் இமாமாக நபி(ஸல்) நியமித்துவிட்டு சென்றுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, மரணித்த பின்பும் சரி அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்களுக்கு மனதில் ஒரே உறுத்தல், தான் போரில் கலந்து கொள்ள வேண்டும், போரிட்டு அதிலுள்ள நன்மையை அள்ள வேண்டும், ஆனால் அதற்கான வாய்ப்பு தனக்கில்லை என்ற ஏக்கம் உறுத்தல் அவர்களின் மனதில் இருந்து வந்தது. அமீருல் முஃமினீன் கலீபா உமர்(ரலி) அவர்கள் ஆட்சி காலத்தில் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவர்கள் மீது ஒரு போர் நடைபெற்றது. முஸ்லீம்கள் தரப்பில் ஆட்கள் அதிகம் தேவை என்ற தகவல் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்களின் காதில் விழுந்தது. 

உடனே அவர் கலிபா உமர்(ரலி) அவர்களின் சபைக்கு சென்று “நானும் போருக்கு வருகிறேன், நபி(ஸல்) அவர்கள் இருக்கும் போது என்னால் போருக்கு செல்ல முடியவில்லை, நானும் வருகிறேன், என்னிடம் நம் அணியின் கொடியை கொடுங்கள், கொடியை கையில் வைத்திருக்கும் எனக்கு எதிரி யார் என்று தெரியாது. போரில் வெற்றியா தோல்வியா என்று தெரியாது, என் உயிர் இருக்கும் வரை இஸ்லாமிய கொடியை தூக்கி உயரப் பிடித்துக் கொள்வேன், எனக்கு அனுமதி தாருங்கள் அமீருல் முஃமினீனே” என்று ஒரு உருக்கமான கோரிக்கையை வைத்தார் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்கள். கலீபா உமர் (ரலி) அவர்களும் அனுமதி வழங்கினார்கள்.

முர்ததுகளுக்கு எதிரான அந்த போர் நிறைவுக்கு வந்தது, ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தலைமையில் முஸ்லீம்கள் வெற்றியடைந்தார்கள், அதில் 8,000 முஸ்லீம்கள் ஷஹீதானார்கள். 80க்கும் மேற்பட்ட உடல் காயங்களுடன், இஸ்லாமியக் கொடியை கட்டி அனைத்தவர்களாக நம் உத்தம நபியின் உன்னத தோழர் இயல்பிலேயே கண் பார்வையற்ற அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்கள் அந்த போரில் ரத்தவெள்ளத்தில் காட்சியளித்தவர்களாக வீர மரணம் அடைந்து அவர்கள் நீண்ட நாட்களாக விரும்பிய ஷஹீத் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொண்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இந்த உத்தம தோழரின் வாழ்வில் இருந்து நாம் பயன் பெரும் படிப்பினைகள் ஏராளம்.

கண் தெரியாத அந்த ஸஹாபி குர்ஆனில் தேர்ச்சி பெற்று மார்க்கப் பிரச்சாரம் செய்து இஸ்லாத்தை பரப்பியுள்ளார். மேலும் மார்க்கத்தை கற்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்களின் தொடர்பில் உள்ளவராக இருந்துள்ளார். இருப்பினும் அவர் இஸ்லாத்திற்காக போரிட்டு மரணிக்க வேண்டும் என்று எண்ணம் வைத்து ஷஹீதாகி உள்ளார். இது போன்ற உத்தமர்கள் சிரமப்பட்டு, கஷ்டப்பட்டு, தியாகம் புரிந்ததால் அல்லாஹ் இந்த மார்க்கத்தை நமக்கும் எத்தி வைக்க கருணையாளன் அருளியிருக்கிறான்.

தியாகத்தால் வளர்ந்த இந்த தூய இஸ்லாமிய மார்க்கதில் உள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம், இம்மார்க்கத்திற்காக எந்த வகையில் நம்முடைய அர்ப்பணிப்புகளை செய்துள்ளோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ் நமக்கு கண் பார்வையை தந்திருக்கிறான், உடலில் எந்த ஒரு ஊனமும் இல்லாமல் வைத்துள்ளான், செல்வத்தை தந்திருக்கிறான், அறிவை தந்திருக்கிறான், ஆளுமை திறனை தந்திருக்கிறான், பிள்ளைச் செல்வங்களை தந்துள்ளான், குறைந்த பட்சம் இவைகள் அனைத்தும் இருந்தும் நம்முடைய மார்க்க அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும், இந்த மார்க்கத்தின் வளர்ச்சிக்காகவும் நாம் இதுவரை என்ன செய்துள்ளோம் இது நாள் வரை?

நமக்கு இருந்த முன்னோர்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்காக பட்ட கஷ்டங்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். உடல் உறுப்புகளில் குறையில்லாத நாம் தூய இஸ்லாமிய வளர்ச்சிக்காக நம்மை நாம் தயார் படுத்திக்கொள்ள வேண்டும், இதற்காக அர்ப்பணிக்க வேண்டும். 

யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்....
M தாஜுதீன்

12 Responses So Far:

Unknown said...

கண் பார்வையற்று முமீன்களின் கொடியை போர்க்களத்தில் உயர்த்தூக்கிப்பிடித்த அந்த கொள்கை சஹாபியின் ஈமான் நமக்கும் வர அல்லாஹ் அருள் புரியட்டும்.

எந்த சஹாபியின் வருகையால் அல்லாஹ்வின் தூதர் தன் முகத்தை திருப்பிக்கொண்டார்களோ , அந்த சஹாபிக்காகவே அல்லாஹ் தன் திருமறை வசனமான " அபச வத வல்லா" வை இறக்கி இறைத்தூதரின் தவற்றை உணர்த்தி புரிய வைத்தான்.

அந்த நிகழ்வுக்குப்பின் ஒவ்வொரு முறையும் அந்த சஹாபி சபைக்கு வரும்போதெல்லாம் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அவர்களைப்பார்த்து " யாருக்காக அல்லாஹ் என்னை கோபித்துக்கொண்டானோ அவரின் வரவு நல்வரவாகட்டும்" என்று வாயார புகழ்பவர்களாக இருந்தார்கள்.

அபு ஆசிப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இத்தகைய உரைகல் தொடர் அதிரைநிருபரில் வெளிவருவதை நினைத்து மகிழ்கிறோம் !

வாசித்ததும் சிந்திக்க மட்டும் வைக்க வில்லை நம்மையே உரசிப் பார்க்கவும் வைக்கிறது... குறைந்த பட்சம் வாசித்த சில மணிநேரங்கள் அல்லது சில நாட்கள் சம்பவங்கள் நம்மை ஆட்கொள்வது மட்டுமல்ல ஏன் நாம் இபப்டி என்றும் உறுத்தவும் செய்கிறது !

இதுதான் உண்மை !

sabeer.abushahruk said...

மெய்சிலிர்க்க வைக்கும் தியாகங்களை உள்ளடக்கிய தொடர்.

ஜஸாகல்லாஹ் க்ஹைர்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வாசித்ததை சிந்தித்து அதன் படி வாழ்வை அர்ப்பணிக்க மனதிடகார்த்தத்தை அல்லாஹ் தருவானாக!

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

sheikdawoodmohamedfarook said...

//கண்பார்வைதெரியாதவரின்தாயார்//இன்றும்கூட இழிவானபட்டப்பெயரைவைத்து ஒரு குடும்பத்தையோ,ஒருதனி மனிதரையோ அழைப்பதில் மகிழ்ச்சி யடையும் இஸ்லாமியர்கள் நம்மூரில் நிறையவே உண்டு! பிறர் மனவேதனையில்சுகம்காணும் இந்த sadist களுக்குஅல்லா இறையவே வேதனைகள் வைத்து இருக்கிறான் என்பதை இந்த மூடர்கள் அறியவில்லை போலும்!.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
கண் பார்வையற்று முமீன்களின் கொடியை போர்க்களத்தில் உயர்த்தூக்கிப்பிடித்த அந்த கொள்கை சஹாபியின் ஈமான் நமக்கும் வர அல்லாஹ் அருள் புரியட்டும்.

எந்த சஹாபியின் வருகையால் அல்லாஹ்வின் தூதர் தன் முகத்தை திருப்பிக்கொண்டார்களோ , அந்த சஹாபிக்காகவே அல்லாஹ் தன் திருமறை வசனமான " அபச வத வல்லா" வை இறக்கி இறைத்தூதரின் தவற்றை உணர்த்தி புரிய வைத்தான்.

அந்த நிகழ்வுக்குப்பின் ஒவ்வொரு முறையும் அந்த சஹாபி சபைக்கு வரும்போதெல்லாம் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அவர்களைப்பார்த்து " யாருக்காக அல்லாஹ் என்னை கோபித்துக்கொண்டானோ அவரின் வரவு நல்வரவாகட்டும்" என்று வாயார புகழ்பவர்களாக இருந்தார்கள்.இத்தகைய உரைகல் தொடர் அதிரைநிருபரில் வெளிவருவதை நினைத்து மகிழ்கிறோம் !

வாசித்ததும் சிந்திக்க மட்டும் வைக்க வில்லை நம்மையே உரசிப் பார்க்கவும் வைக்கிறது... குறைந்த பட்சம் வாசித்த சில மணிநேரங்கள் அல்லது சில நாட்கள் சம்பவங்கள் நம்மை ஆட்கொள்வது மட்டுமல்ல ஏன் நாம் இபப்டி என்றும் உறுத்தவும் செய்கிறது !

இதுதான் உண்மை !மெய்சிலிர்க்க வைக்கும் தியாகங்களை உள்ளடக்கிய தொடர்.வாசித்ததை சிந்தித்து அதன் படி வாழ்வை அர்ப்பணிக்க மனதிடகார்த்தத்தை அல்லாஹ் தருவானாக!//கண்பார்வைதெரியாதவரின்தாயார்//இன்றும்கூட இழிவானபட்டப்பெயரைவைத்து ஒரு குடும்பத்தையோ,ஒருதனி மனிதரையோ அழைப்பதில் மகிழ்ச்சி யடையும் இஸ்லாமியர்கள் நம்மூரில் நிறையவே உண்டு! பிறர் மனவேதனையில்சுகம்காணும் இந்த sadist களுக்குஅல்லா இறையவே வேதனைகள் வைத்து இருக்கிறான் என்பதை இந்த மூடர்கள் அறியவில்லை போலும்!.ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், இந்த பதிவை வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா

Yasir said...

மெச்ச தக்க தொடர் நண்பர் தாஜூதீன் அவர்களே..ஈமானை வலுவாக்கி சுயபரிசோதனை செய்துகொள்ள தூண்டும் ஆக்கம்...அல்லாஹ் உங்களுக்கு செழிப்பான வாழ்வைத் தருவானாக ஆமீன்

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன்!

இப்படிப்பட்ட கருத்துக் கருவூலங்களை படிக்கவும் அமைதி வேணும். அந்த அமைதியுடன் படித்து கருத்திட தாமதம்.

வெறும் வார்த்தைகளால் மெய்சிளித்துப் போனேன் என்று சொல்லவில்லை. உண்மையும் அதுதான்.

தம்பி அபூ இப்ராஹீம் அவர்கள் சொல்லி இருப்பது போல் நம்மை நாமே உரசிப் பார்க்கும் இந்த உரைகல் தொடர் மனசாட்சியின் மறுபக்கம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இபுறாஹீம் அன்சாரி காக்கா,

//மனசாட்சியின் மறுபக்கம்.//

மிகச் சரியாக சொன்னீர்கள்.

மீண்டும் நினைவூட்டுகிறேன், இந்த தொடருக்கான கரு கொடுத்ததே நீங்கள் தானே, இந்த பதிவின் மூலம் வாசிப்பவர்கள் பயன்பெற்றால் அதில் கிடைக்கும் நன்மையில் உங்களுக்கும் பங்குண்டு. இந்த பதிவை நெறிபடுத்தி வெளியிட உதவும் சபீர் காக்கா, மற்றும் நெறியாளர் காக்காவுக்கும் நன்மையில் பங்குண்டு.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நண்பர் யாசிர்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களின் கருத்துக்கும் து ஆ வுக்கும் மிக்க நன்றி.

ஜஸக்கல்லாஹ் ஹைரா..

Ssmc said...

ஸலாம். செய்திகளை ஹதீஸ் எண்ணுடன் ஆதாத்துடன் வெளியிடவும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு