Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று! இன்று ! நாளை! – தொடர் 28. (இட ஒதுக்கீடு - 2) 34

அதிரைநிருபர் பதிப்பகம் | February 13, 2014 | , , , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்புக்குரியவர்களுக்கு:

கடந்த வாரம் வெளியான இத்தொடரின் இட ஒதுக்கீடு பற்றிய பகுதியை வரவேற்று உள்ளூரிலிருந்தும் உலகெங்கிலுமிருந்தும் பல சகோதரர்கள் கருத்துக்களை இணைய தளத்திலும் அலைபேசி மூலமாகவும் மின் அஞ்சல் மூலமாகவும் தெரிவித்து இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்ல கடமைப் பட்டு இருக்கிறோம். ஆனாலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – அதிராம்பட்டினம் கிளையின் தளத்தில் இந்தக் கட்டுரையை அவர்களுடைய இயல்பான பாணியில் விமர்சித்தும் தொடர்ந்து பல கேள்விகளோடு அவர்களின் மனதில் ஊறிப்போன கேலிகளையும் பதிவு செய்து இருந்தார்கள். 

அந்த தளத்தில் எவ்வளவுதான் நம்மை இழிவாக குறிப்பிட்டு இருந்தாலும் விவாதத்துக்குட்பட்ட பேசுபொருளான கட்டுரையில் நாம் அந்த இயக்கத்தின் செயல்பாடுகளை பாராட்டி குறிப்பிட்டிருந்த வரிகளை வாபஸ் பெற விரும்பவில்லை. விரும்ப மாட்டோம். நடுநிலை வேடமிட்டு அல்லது அவர்கள் குறிப்பிட்டு இருப்பதுபோல் வஞ்சகப் புகழ்ச்சியாக நாம் அவர்களைப் பாராட்டி எழுதவில்லை. அவரவர் உள்ளங்களில் இருப்பதை அல்லாஹ் ஒருவனே அறிவான். 

பெரும்பாலானவர்களின் எண்ணங்களையே எழுத்தாக வடிவெடுத்ததே அல்லாமல் அந்த தளத்தில் விமர்சனத்தை எழுதியவர்/கள் தங்களது பெயர் குறிப்பிடப்படாத சகோதரர்/கள் பதிவு செய்து இருப்பது போல் நமது மனதில் கள்ளமோ களங்கமோ இல்லை. அனைவருக்கும் இருக்கும் எண்ணங்களை கருத்துச் சுதந்திர அடிப்படையில் தெளிவாக பதிக்கப்பட்டது. அவற்றை அனைவருமோ / ஒரு சாரோ ஏற்க வேண்டுமென்று கட்டாயம் இல்லை; இதில் கருத்துத் திணிப்பும் இல்லை. மாற்றுக் கருத்துக்களே ஜனநாயகத்துக்கு வலு சேர்க்கும். ஆகவே விமர்சனத்தை இரு கரம் நீட்டி வரவேற்கிறோம்; அவர்கள் சுட்டிக் காட்டியதில் உண்மைகள் இருந்தால் அவைகளை நாமும் ஏற்றுக் கொள்வோம்; நம்மைத் திருத்திக் கொள்வோம்; தவறு இருந்தால் வருத்தம் தெரிவிக்கவும் தயங்க மாட்டோம். அதே நேரம் இத்தகைய தன்மைகளை பதிலுக்கு அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கவும் மாட்டோம்; ஏமாறவும் மாட்டோம். 

தெளிவாக நினைவூட்டுகிறோம் பொது வாழ்வுக்கோ / பொதுப் பணிக்கோ வருகிறவர்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படுவது இயல்பு. அப்படிப்பட்ட விமர்சனங்கள் எழுப்பப்படும்போது அவற்றை கண்ணியமான முறையில் எதிர்கொள்ளும் தன்மை படைத்தவர்களாக இருக்க வேண்டும். அதைவிட்டு தரிகெட்டத்தனமாக, தனிப்பட்ட முறையில், விமர்சனங்கள் செய்தவர்கள் மீது அவதூறுகளை அவிழ்த்து விடுவது அண்மைக்காலமாக மிக அதிகமாக காணப்படுகிறது. 

அந்த தளத்தின் விமர்சனங்களில் ஒன்று இட ஒதுக்கீடு தொடர்பான வரலாற்று சம்பவங்களின் அடுக்குகளை ஒரு தொலைக் காட்சியின் காணொளி நிகழ்ச்சியிலிருந்து அவர்கள் பாசையில் சொல்லப் போனால் “ஆட்டையை”ப் போட்டதாக சொல்லி இருக்கிறார்கள். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். வரலாற்று சம்பவங்களும், புள்ளி விபரங்களும் மேற்கோளுக்காகப் பயன்படுத்தப் படும்போது அதை அப்படியேதான் பயன்படுத்த முடியும். உதாரணமாக வரலாற்று நூல்களில் திப்பு சுல்தானுடைய தந்தையின் பெயர் ஹைதர் அலி என்று இருந்தால் அதை அவ்வாறேதான் எழுத முடியும். ஒரு தளத்தில் ஹைதர் அலி என்று வந்தே விட்டதே என்று நாம் எழுதும்போது திப்பு சுல்தானின் தந்தையின் பெயரை மாற்றி எழுத முடியுமா? 

இது ஒரு புறம் இருக்க, அந்த தளத்தில் குறிப்பிடும் கேப்டன் டிவி ஒரு காணொளி நிகழ்ச்சியாகும். காணொளி நிகழ்ச்சியில் கூறப் படுவதை உரை நடையாக எப்படி காப்பி அண்ட் பேஸ்ட் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. ஒருவேளை, அவர்கள் அப்படி செய்து பழக்கப் பட்டு இருக்கலாம் அதனால் இப்படி அடுத்தவரைக் குற்றம் சாட்ட ஒரு வாய்ப்பு இருக்கும் என்பதை நாம் மறுக்க விரும்பவில்லை. நாம் எழுதியது உரை நடை மாறாக காணொளி அல்ல. அதே நேரம், உரை நடையைத்தான் காணொளி நிகழ்ச்சியின் வர்ணனையாக பின்னணியில் சொல்வது சுலபமாக இருக்கும். அந்த வகையில் அவர்கள் குறிப்பிட்டுள்ள கேப்டன் டிவி தான் மற்றோர் தளத்தில் வந்த இடஒதுக்கீடு பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய உரை நடையைப் பகுதியை தனது வர்ணனைக்குப் பயன்படுத்தி இருக்கிறது. இதை நாம் குற்றம் சொல்லவில்லை ; குறை காணவில்லை. காரணம் வரலாற்றை சொல்வது உள்ளது உள்ளபடிதான் சொல்ல முடியும். பல நேரங்களில் அது அப்படியே இருக்க வாய்ப்பு உண்டு என்பது பொதுவான புரிந்துணர்வு. ஆனாலும் நாம் கேப்டன் டிவியிலிருந்து “ஆட்டையை” ப் போடவில்லை. அப்படியே போட்டிருந்தாலும் கூட வரலாற்று செய்திகள் யாருடைய தந்தை வீட்டு சொத்தும் அல்ல. அவை பொதுவானவ. 

இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டம் அறிவிக்கப் பட்டபோது அது பற்றிய வரலாறு – அதாவது இந்த இட ஒதுக்கீடு ஏற்கனவே இருந்தது பின்னர் பறிக்கப் பட்டது – என்கிற உண்மை சம்பவங்கள் பல ஊர்களின் ஐக்கிய ஜமாத் தளங்களில் வெளியாயின. முகநூலிலும் பலரால் பதிவிடப் பட்டது. ஒரு உதாரணமாக “ இட ஒதுக்கீடு – சிந்தனையும் வரலாறும் “ என்கிற தலைப்பில் கட்டுரைகள் பல தளங்களில் வெளியாயின. குறிப்பாக http://www.pnotimes.com/ என்கிற பரங்கிப் பேட்டை தளத்தின் பேராசிரியர் ஒருவரால் இது பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் பதிவிடப் பட்டு வெளிவந்துள்ளன என்று அந்த ஊரைச் சேர்ந்த எமது எழுத்தாள நண்பர் ஒருவர் பரிந்துரையாக கூறியதால் நாமும் படிக்க நேரிட்டதை தொடர்புடைய வரலாறு என்பதால் நமது கட்டுரைக்கு வலு சேர்க்க அதைப் பகிர்ந்து இருக்கிறோம். 

இதே கட்டுரை பின்னர் வேறு பல ஊர்களின் தளங்களிலும் வெளிவந்தன. மேற்கண்ட தளத்தில் உள்ள குறிப்புகளைத்தான் கேப்டன் டிவியும் தனது வர்ணனைகளில் பயன்படுத்தி இருக்கிறது. அந்த தளத்திற்குரிய இயக்கத்தினர் தரம் தாழ்ந்து இயல்பாகவே தாக்குவதற்காகவோ அல்லது நம்மிடம் குறை காணும் நோக்கத்திலோ ஏதோ கயவர்களை உயிருடன் பிடிப்பதுபோல் பூதாகரமாக்கி காட்டி இருப்பது விந்தையே. வரலாற்று நிகழ்வுகளை மேற்கோளாகக் காட்டுவது எவ்வகையிலும் வெட்டி ஒட்டும் வேலையாகாது மீண்டும் பதிலாக வைக்கிறோம். பொதுவாக அந்த இயக்கத்தினருக்கு எதிரான சில தளங்களிலும் முகநூலிலும் வந்தவைகளைத்தான் “இந்த போராட்டத்தை எதிர்த்து கருத்திட்டவர்கள் பட்டியலிட்டார்கள்.” என்று குறிப்பிட்டுப் பட்டியலாக்கி பதிந்து இருக்கிறோம்.

மேலும் , எந்த அளவுக்கு அந்த இயக்கத்தின் மீது ஏற்பட்ட சந்தேகங்களை குறிப்பிட்டோமோ அதே அளவுக்கு சற்றும் குறைபடாமல் "இன்றைய அரசியல் காலக் கட்டத்தில் முஸ்லிம்களைப் பொருத்த வரை தட்டிக் கேட்ட காலம் போய் அதனால் தொடர்ந்து தட்டுக் கெட்டே நிற்பதால் அதட்டிக் கேட்கும் காலம் அவசியமாகிவிட்டது. காரணம், நியாயம் , நேர்மை, நீதி, சமத்துவம், சரிநிகர் என்பதெல்லாம் அரசியல்வாதிகள் வாயில் போட்டுத் துப்பும் பாண் பராக் அல்லது வெற்றிலை பாக்கு என்கிற நிலைமைக்கு வந்துவிட்டது. முஸ்லிம்கள் வெறும் ஓட்டு வங்கிகள் என்கிற நிலைமை தவிர, அவர்களை கை தூக்கிவிட ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் தகர்க்கப்பட்டே வந்து இருக்கிறது. முஸ்லிம்களை எப்படியெல்லாம் கறிவேப்பிலை போலப் பயன்படுத்தித் தூக்கி எறியலாமென்றே அரசியல் கட்சிகள் கணக்குப் போட்டு வைத்து இருக்கின்றன. தவிரவும் முஸ்லிம்களை நேரம் கிடைக்கும்போது கருவறுக்கவும் அரசியல் வேட்டை நாய்கள் வாய் பிளந்து கொண்டே இருந்து இருக்கின்றன. இனியும் இளிச்சவாயர்களாக இருந்து ஏமாறத் தயாரில்லை என்று ஒரு இயக்கம், தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இதை முன்னெடுத்து நடத்தி வக்கிரபுத்தி உடையவர்களுக்கு சாவுமணி அடிக்க இந்த மாதிரியான ஒரு அறப் போரை துவக்கி விதை தூவியது வரவேற்கத் தகுந்த காய் நகர்த்தல்தான் என்பதை மனசாட்சி உள்ளோர் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.". என்றும் குறிப்பிட்டு இருக்கிறோம். அந்த இயக்கத்தின் மீது நமக்கு காழ்ப்புணர்ச்சி இருந்து இருந்தால் முகநூலிலும் மற்ற தளங்களில் இவர்களை விமர்சித்து வந்த பல மாறுபாடான- மரியாதைக் குறைவான கருத்துக்களை மட்டும் எடுத்து எழுதி இருக்க முடியும். 

அடுத்து புத்தகம் போட்டு விற்பனை செய்வதாக ஒரு குற்றச் சாட்டை சொல்லி இருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டை மற்றும் அதில் உள்ள உண்மைகளை படைத்த அல்லாஹ் அறிவான். இதுபற்றி நாம் அதிக விளக்கம் சொல்ல விரும்பவில்லை. உண்மையான தாவாப் பணிக்காக அர்ப்பணிக்கப் பட்ட ஒரு பணியை களங்கப் படுத்தும் அந்த நண்பர்களின் முதுகுக்குப் பின்னால் பார்த்தால் “முதுகு அரித்தால் சொரிவது மார்க்கத்தில் கூடுமா? “ என்று மூவாயிரம் நூல்கள் போட்டு அதற்கும் அதை வெளியிடும் இயக்கத்திற்கு சேர்த்து விலை வைத்து இருப்பதும் “தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்கலாமா? விளக்கெண்ணெய் தேய்க்கலாமா – ஆராய்ச்சி” என்ற தலைப்பில் ஐந்தாயிரம் சிடிகளும் அடுத்த மாநாட்டில் விற்பனை செய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் காட்சிகளையும் காணலாம். தேவை இருக்கிறதோ இல்லையோ பெயர் போட்டால் விற்பனையாகும் என்று உப்புக்குப் பெறாத தலைப்புகளில் எல்லாம் நூல் வெளியிட்டு பணக்காரர்களின் பட்டியிலில் இடம் பிடித்திருப்பவர்கள் யார் என்று சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. அதே நேரம் விவாதத்துக்காக ஒன்றைப் பொதுவாகச் சொல்வதானால் புத்தகங்கள் எழுதியவர்கள், அதை வெளியிட்டு விற்பனை செய்யாவிட்டால் உலகில் இதுவரை ஒரு புத்தகம் கூட வெளியாகி இருக்காது என்பதையும் சொல்ல விரும்புகிறோம். 

கட்டுரையை விமர்சித்த பெயரில்லாத நபரோ/நபர்களோ ஒன்றை மீண்டும் வேதனையுடன் சொல்ல விரும்புகிறோம். நீங்களும் நாங்களும் விரோதிகளல்ல. ஆனால் உங்களின் கருத்தை ஏற்காதவர்கள் அல்லது விமர்சிப்பவர்களை நீங்கள் உடனே கொச்சை மொழியில் அர்ச்சனைகள செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பது நீங்கள் எங்கே படித்த மார்க்கம் என்பது உலகெங்கும் புரியாத புதிர். உங்களின் போராட்டத்தை நாங்கள் அடிப்படையில் வரவேற்றே கருத்திட்டு இருக்கிறோம். அதே நேரம் வெள்ளி ஜூம்ஆவில் உங்களை விமர்சித்த சம்சுதீன் காசிமி அவர்களையும் கண்டித்து இருக்கிறோம். எனவே மனசாட்சியின்படி நாங்கள் நடுநிலையாக இருக்கிறோமா இல்லையா என்பதற்கான சான்று அவர்களிடமிருந்து எங்களைப் போன்றோர்க்கு தேவை இல்லை. எங்களுடைய உள்ளத்தை அறிந்த இறைவன் அப்படி எங்களுக்கு உள்நோக்கம் இருந்தால் அதற்காக நாங்கள் பதில் சொல்ல வேண்டியது இறைவனுக்கே தவிர இயக்க மயக்கத்திலிருப்பவர்களுக்கு அல்ல என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறோம். 

இந்த சமுதாயத்தின் வாழ்வாதாரமான ஒரு பிரச்னையில் ஒவ்வொருவரும் தனித் தனி மூலையில் பிரிந்து போய் நின்று கொண்டு தனிப்பட்ட காரணங்களால் பெரிய அரசியல் கட்சிகளால் சமுதாயம் பழி வாங்கப் படுகிறதே- பகடைக்காய் ஆக்கப்படுகிறதே என்பதுதான் எங்களைப் போன்றோரின் ஆதங்கமும்; கவலையும். அனைவரும் இணைந்து கேட்டால் அல்லது ஒரே நிலையில் நின்று போராடினால் இந்த அரசியல்வாதிகளை நம்மைப் பார்த்து அச்சப்பட வைக்கப் பட முடியுமே இதுபற்றி ஏன் யாரும் சிந்திக்க மறுக்கிறார்கள் என்பதுதான் எங்களின் இந்தப் பதிவின் கருவாகும். அதைவிட்டு யாருக்கும் பினாமியாக இருந்து இத்தகை சிந்தனைத் தூண்டலை ஏற்படுத்தும் தளம் நடத்த வேண்டிய அவசியத்தை அல்லாஹ் எங்களுக்கு விதிக்கவில்லை.

எங்களைப் போன்றோர் ஒரு விஷயத்தில் கவலைப் படுகிறோம். தனிப் பட்ட சில காரணங்களால் சிலருக்கு சில உலகப் பொருள்கள் பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம். உதாரணமாக சிலருக்கு கோழி கறி பிடிக்கலாம்; சிலருக்கு ஆட்டுக் கறி பிடிக்கலாம் நிறங்களில் சிலருக்கு கருப்பு பிடிக்கலாம்; சிலருக்கு வெள்ளை பிடிக்கலாம். பூக்களில் சிலருக்கு ரோஜா பிடிக்கலாம்; சிலருக்கு மல்லிகை பிடிக்கலாம். ஆனால் இந்த சமுதாயத்தில் அனைவருக்கும் பிடித்து- அனைவரும் ஒரே கொள்கையில் நிற்க வேண்டியதும் பின்பற்ற வேண்டியதும் ஈமானோடு இஸ்லாத்தில் ஓரிறைக் கொள்கையும் (குர்ஆன்-ஹதீஸ்) கருத்தும்தான். ஆனால் துரதிஷ்டவசமாக பிரியவேண்டிய கருத்துக்களில் நாம் இணைந்து இருக்கிறோம். இணைந்து இருக்க வேண்டிய ஓரிறைக் கொள்கையும் அதன் நம்பிக்கையும் (ஈமான்) இஸ்லாமியர்களாய் பிரிந்து நின்று தனித்தனியாக கச்சை கட்டி முஷ்டி மடக்கி நிற்கிறோம். குர்ஆன் வசனங்களை மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைப் புரிந்து கொள்வதில், விளங்கிக் கொள்வதில் நமக்கு சிறு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நம்மை ஒன்று இணைக்கும் ஓரிறைக் கொள்கையில் இருந்து கொண்டு ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பாவிக்கும் போக்கைப் பார்த்து வேதனைப் பட்டதன் விளைவே முந்தைய பதிவு. நாங்கள் விமர்சித்தது பொதுவாக எல்லா இயக்கங்களையும் அதனால் ஏற்பட்ட மயக்கங்களைத்தான். ஆனால் அண்மையில் ஒரு பெரும் போராட்டத்தை துவக்கி நடத்தியவர்கள் என்ற முறையில் அந்த இயக்கத்தின் மேல் காய்த்த மரம் கல்லடி படுமென்ற வகையில் சில விமர்சனங்கள் கூடுதலாக இருந்து இருக்கலாம். 

கலைஞர் ஆட்சியில் மூன்றரை சதவீதம் இட ஒதுக்கீடு தரப்பட்டபோது , அவரை அந்த இயக்கம் ஆதரித்து, அவருக்கு அழுத்தம் கொடுத்த காரணத்தால் பெற்றுத் தந்தது என்பதை வரலாறு மறக்காது. நாமும் மறுக்கவில்லை. நமது கவலை அப்படி அந்த இயக்கம் கலைஞருடன் கை கோர்த்த நேரத்தில் மனித நேய மக்கள் கட்சி அவருக்கு எதிர் அணியுடன் இணைந்து இருந்தது. இப்போது மனித நேய மக்கள் கட்சி கலைஞர் அமைத்துள்ள கூட்டணியில் இடம் பெற்றுள்ள போது அந்த இயக்கம் அதற்கு எதிரணியான அதிமுக அணியை ஆதரிக்க தயாராகி வருகிறது என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பு (இதில் மாற்றமும் இருக்கலாம்). இப்படி இரு பெரும் மக்கள் சக்தி படைத்துள்ள முஸ்லிம்களின் இயக்கங்கள் மாறி மாறி தேர்தலுக்குத் தேர்தல் நீ இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன் என்று நமது சமுதாய வேட்பாளர்களையே தோற்கடிக்க தோள் தட்டுவது ஒரு வேதனை என்பதுதான் நமது கவலை அதைத்தான் கடந்த வாரப் பதிவு ஆணி வேறாகச் சொல்கிறது. இப்படிப் பட்ட நிலை இல்லாமல் இருந்து இருந்தால் முத்துபேட்டை பேரூராட்சியும் மேட்டுப் பாளையம் நகராட்சியும் நம்மவர் கைகளைவிட்டு நழுவி இருக்குமா? சேப்பாக்கத்திலும் வாணியம்பாடியிலும் துறைமுகம் தொகுதிகளிலும் நம்மவர் தோற்க நாமேதானே காரணம்? இதற்கு தனிப்பட்ட வெறுப்புகள்தானே காரணம்? தனி மனிதர்களின் ஈகோதானே காரணம்? அகம்பாவம் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டதா?

அதற்கு அடுத்து , சமுதாயம் கல்வியில் பின் தங்கி இருக்கிறது – கல்வியில் நமது இளைஞர்களுக்கு இன்னும் சரியான ஆர்வமில்லை. இதற்காக இயக்கங்கள் உருப்படியாக முன்னெடுக்கும் முயற்சிகளை செய்யவில்லை என்பதையும் நாங்கள் சுட்டிக் காட்டி இருக்கிறோம். வேலை வாய்ப்புக்குத் தேவையான கல்வியில் ஆர்வம் காட்டாமல் வேலை வாய்ப்பை மட்டும் கொடு என்று கேட்பது எவ்வகையில் பொருந்தும் என்று கேட்பது இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தல்ல. மாறாக, நம் சமுதய மாணவர்களை படிப்பதற்கு - மேலும் படித்து அறிவை வளர்ப்பதற்கு ஊக்கப் படுத்தும் Motivation என்கிற முறையில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி சுட்டிக் காட்டுவதால் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் என்று திசை திருப்புவது மடமையே. 

படிக்கிற மாணவர்களை படிக்க விடாமல் அந்த மாநாட்டுக்கு வா இந்த மாநாட்டுக்கு வா என்று அழைத்து அவர்களை அலைக் கழிப்பது- படிப்பில் நாட்டமில்லாமல் செய்வது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஒரு தனிப்பட்ட இயக்கம் மட்டுமல்ல எல்லா இயக்கங்களுமே செய்கின்றன என்று மீண்டும் மீண்டும் பகிரங்க விமர்சனமாகவே இங்கே வைக்கிறோம். மாணவர்களின் கரங்களில் கொடுக்கப் பட்டுள்ள கல்வி எனும் உணவுப் பொட்டலங்களை இயக்கங்கள் எனும் பருந்துகள் அடித்துக் கொண்டு போகின்றன; இதனால் கல்விப் பசியால் இந்த சமுதாயம் துடிக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. மக்களை சிந்திக்கவிடாமல் வைத்து இருப்பதும் எதிர்கால சந்ததிக்கு விதைக்கும் துரோகத்தின் ஒரு அங்கம். 

அடுத்து ஜெயலலிதா எப்போது இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசினார் என்று ஒரு கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பான ஜனரஞ்சகமான பேச்சுகளைப் பேசி, மக்களுக்கு புரியவைத்தவர்களில் முக்கியமானவர் - தலையாய இடம் பெற்றவர்தான் சகோதரர் பி.ஜே; இட ஒதுக்கீடு சிந்தனையை சாதாரண மக்கள் மனங்களிலும் விதைத்து மாற்றங்களை கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர்களில் சகோதரர் பி.ஜே.யும் ஒருவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அவர் முன்னொரு காலத்தில் பேசிய அல்லது எழுதிய ஒரு கருத்தையே இதற்கு பதிலாகத் தருகிறோம். 

“முஸ்லிம்களுக்கு கருணாநிதி ஆட்சியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. அதை கூடுதலாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை வைத்தது. யார் இடஒதுக்கீட்டை உயர்த்தி தருவார்களோ அவர்களுக்குத்தான் முஸ்லிம்களின் ஓட்டு. அவர்களின் வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம் என்று கூறியபோது ஜெயலலிதா எழுத்துப் பூர்வமாகவோ அல்லது தேர்தல் அறிக்கையிலோ கூறாத காரணத்தாலும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய காரணத்தாலும் திமுகவை கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தது. ஆனால் (இறைவனின் நாட்டம்) திமுக தோல்வி அடைந்தது அதிமுக வெற்றியடைந்தது. தேர்தல் அறிக்கையில் சொல்ல மறுத்த ஜெயலலிதா முஸ்லிம்களின் ஓட்டு கிடைக்காமல் போய்விடும் என்பதை காலம் கடந்து உணர்ந்தவர், திருச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக இருந்த மர்யம் பிச்சையை ஆதரித்து திருச்சியில் நடந்த பிரச்சாரகூட்டத்தில் தி.மு.க., அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருந்தாலும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், அது முறையாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இவ்வாறு தெரிவித்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது ஆனால் இதுவரை முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தொடர்பாக வாய் திறக்கவில்லை. - ஆதாரம் : “onlinepj –January 2012 தீன்குலப் பெண்மணி –தலையங்கம்.

மேலும், காரைக்கால்காரன் வாந்தி என்றெல்லாம் எழுதப்பட்டு இருக்கிறது. எங்களைப் பொறுத்த வரையில் எழுப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலை அளிக்காமல் இப்படி மக்கள் மன்றத்தில் அருவருப்பான வார்த்தைகளால் அர்ச்சனை செய்து விடுவது மட்டும் அந்தக் கேள்விகளுக்கு தீர்வாகிவிடாது. மாற்றுக் கருத்தைச் சொல்பவர்களுக்கு அவர்கள் மூலம் கிடைக்கும் இப்படிப்பட்ட அர்ச்சைனைகள் தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. இப்படி மாற்றுக் கருத்தை வெளியிடுபவர்கள் ஒரு காலத்தில் எல்லோரும் ஒன்றாக இருந்து பிரிந்து போனவர்கள்தான் என்பதை உணர வேண்டும். காரைக்காலைச் சேர்ந்தவர் ஒன்றும் எங்களுக்கு வேண்டியவரல்ல. நாங்கள் அவருக்கு வக்கீலுமல்ல. ஆனால் அவரது கேள்விகள் சம்பந்தப் பட்டவர்களால் பண்பாட்டோடு பதில் அளிக்கப் பட வேண்டியவை என்பவை பொதுவாக இருப்பவர்களின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு. அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழித்து அவதூறுகளை சொல்வது அவர் சொன்ன குற்றச்சாட்டுகளை உண்மை என்றே ஆகிவிடும். மாறாக, வைத்துள்ள விமர்சனங்களுக்கும் போராட்டத்தில் உள்நோக்கம் இருக்கிறது என்பதற்கும் சரியான முறையில் பதில் அளித்து இருந்தால் அது விளக்கம் பெற உதவியாக இருந்து இருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக அந்நிலை ஏற்படாமல் மடையர்கள் என்றெல்லாம் எழுதி இருப்பது இறைவனிடத்தில் முறையிடப்பட வேண்டிய ஒன்றாகும். இறைவா! இவர்கள் செய்வது தவறு என்று தெரியாமலேயே செய்கிறார்கள் இவர்களை மன்னித்துவிடு யா அல்லாஹ்! 

நாம் நடை முறைச் செய்தி என்கிற முறையில் ஒரு நடுநிலையான அலசலையே நாம் பதிவாக தந்தோமே தவிர யாரையும் பகமையாக்கிக் கொள்ளவோ யாரையும் புண்படுத்தவோ அல்ல. எங்களது சாடல் இல்லாத எழுத்துக்களால் யாரேனும் ஒரு தனி மனிதம் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்கான வருத்தத்தை இங்கே பதிகிறோம். அதே நேரம் கேட்க வேண்டிய கேள்விகளை எங்களின் மனதில் நியாயம் என்று உணர்த்த கேட்டுக் கொண்டேதான் இருப்போம். உண்மையின் வேர்கள் கசப்பானவைதான் ஆனால் உண்மை உண்மைதான். சமுதாயத்தை பகடைக் காயாகப் பயன்படுத்தி எதிர்த்துப் பேசுபவர்களின் மீது கரடுமுரடான வார்த்தை வன்முறைகளை வீசும் குரோத உணர்வுகளை ஒழித்துக் கட்டும் வரை எழுத்துப் பணி இறைவன் நாடினால் தொடரும். 

மீண்டும் ஒன்றை சொல்ல விரும்புகிறோம்...!

சமுதாயத்தில் பல மறுமலர்ச்சிகளை ஆரம்ப காலங்களில் ஆரம்பித்து அதில் பல வெற்றிகளைப் பெற்றவர்களால் பல்வேறு பிரிவுகளுக்குப் பின்னர் ஒரு இயக்கம்- ஒரு காலத்தில் அதன் அமைப்பளர்களில் ஒருவர்மீது பாசமும் பற்றும் கொண்டு அவரின்மேல் முஹப்பத் (பிரியம்) வைத்து அலைந்த ஒரு பட்டாளத்தை வைத்திருந்த இயக்கம்- இன்று கால மாற்றத்தில் பலர் அந்த இயக்கத்திலிருந்து பிரிந்து போய்விடக் காரணம் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத, செய்யாத, நடைமுறைப் படுத்தாத, ஊக்கப்படுத்தாத, வழியில் பிறரை விமர்சிக்கிறோம் என்று கேவலமான போக்கை கையாள்வது, அவ்வியக்கத்தின் மீது நல்லெண்ணம் உள்ளவர்களையே முகம் சுளிக்க வைத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை, இவைகளை அந்த இயக்கத்தின் மீது இன்னும் உண்மையான நேசம் கொண்டுள்ள சகோதரர்கள் உணர வேண்டுமென்று கோரிக்கை வைக்க ஆசைப் படுகிறோம். ஆக்கபூர்வமான எந்த இயக்கத்தின் அனைத்து செயல்பாடுகளையும் கருத்துக்களையும் என்றும் ஆதரிப்போம். அதே நேரம், முஸ்லீம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கு எதிரானதாகவும், மார்க்கத்துக்கு விரோதமாக நடைபெறும் விஷயங்களை அஞ்சாமல் விமர்சிப்போம்; அதிலிருந்து ஒதுங்க மாட்டோம். 

எது எப்படியோ ஒற்றுமையையும் கல்வி வளர்ச்சியும் வலியுறுத்தி எழுதப் பட்ட ஒரு நற்சிந்தனைப் பதிவு மாறுபட்ட மனவேறுபாடுகளை மேலும் வளர்த்துவிட ஏதாவது ஒருவகையில் காரணமாக இருந்திருந்தால் எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களை மன்னிப்பானாக! 

அதிரைநிருபர் பதிப்பகம்

34 Responses So Far:

Anonymous said...

விழுதுகள் வாய்க்குமுன்
ஆலமரம்
வேர்களின் வழியிலேயே
உயிர் வளர்க்கும்

விழுதுகள்
தொங்கிச் சில காலம்
சுகித்தப் பின்னரே
தாங்கி நிற்கத் தயாராகும்
கால ஓட்டத்தில்
பூக்கவும் காய்க்கவும்
புதிது புதிதாக
மொக்குகள் துளிர்க்கவும்
இன்னும்
மழை பொய்த்த வேளையிலும்
இலையுதிர்க் காலத்திலும்
நீர்ப்பிடிப்பு நாடி
ஊர் முழுதும்
வேர் ஊர்ந்து
நீர் குடித்து
மரம் வளர்க்கும்
நிலம் பிடித்து
நிலை நிறுத்தும்

வேர்களின் உழைப்பு
விழுதுகள் அறியா
மரம் வளர்ந்த மார்க்கம்
விருட்சம்தானே விளக்க வேண்டும்

கிளையொடித்து
குலை குழைத்து
கூடழித்துக் களிக்காமல்
விருட்ச இயல்பு தங்க
தாங்கக் கற்க வேண்டும்
விழுதுகள்!

Sabeer Ahmed

sheikdawoodmohamedfarook said...

// சமுதாயத்தின் மறுமலர்ச்சியே ஆரம்ப காலத்தில்ஆரம்பித்து..........முகம் சுழிக்கவைக்கிறது // சலீம் என்ற தறுதலை/ கட்டுரையாளரின் உளறல்/சம்சுதீன் விஷமி/ புத்தகம் போட்டுகாஸுபார்ப்பவர்கள்/ பண்பாடுதெரியாதகத்துக்குட்டி/காரைக்காலான்/என்றெல்லாம் கொச்சைபடுத்துவதையும் மனிதர்களுக்கு இழிவான பட்டப்பெயர்களை சூட்டி அழைப்பதையும் இஸ்லாம் ஏற்றுக்கொள்கிறதா? என்ற என் சந்தேகத்திற்கு இயக்கதலைவரோ அல்லது மற்றபொறுப்பாளரோ விடைகூறவேண்டுகிறேன். நம்நாடு ஜனநாயக நாடு.எல்லோருக்கும் தங்கள் கருத்துகளையும் பிறர் கருத்துக்களை முறையாக மறுத்தும் கூற எல்லா குடிமகனுக்கும் உரிமை உண்டு. தங்களுக்கு வௌவாத கருத்தை சொன்னால் அவர்களை எச்சறிப்பதும் பயமுறுத்துவதும் ஜனநாயக மரபுகளை மீறிய செயல்கள்.சட்டத்துக்குஎதிரானவை. எல்லை மீறிய பிரௌன் என்ன ஆனான் என்ற வரலாற்றையும் நீங்களே பாமரனாய் கிடந்த எங்களுக்கு படித்துக்கொடுத்தீர்கள் -எடுத்து சொன்னீர்கள் என்பதை இப்பொழுது நாங்கள் நினைவுபடுத்த வேண்டிநிலைக்கு உங்களை ஆக்கி கொள்ளாதீர்கள்.அஸ்ஸலாமு அலைக்கும்.

sheikdawoodmohamedfarook said...

2007 -ம் ஆண்டில் கிடைத்த இடஒதுக்கீட்டை2008-ம் ஆண்டில் ''கிடைத்தஇடஒதுக்கீடு''என்று சொன்ன கேப்டன் டி.வி. அலுவலகத்தின் முன்ஏன் ஆர்பாட்டம் செய்யவில்லை.அதையே சொன்ன கட்டுரையாளரை ' கப்பிபேஸ்ட்' என்கிறீர்கள்.'வாய்க்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டியா?

Ebrahim Ansari said...

2007- 2008 தவறுகள் திருத்தப் படலாம். ஆனால் வன்முறை வார்த்தைகள் கொட்டபட்டால் அள்ள முடியாது.

மார்க்கம் என்பது பிரிந்தவர்களை இணைக்கக் கூடியது . இந்த மார்க்கத்தை வைத்து மனிதர்களை பிரிக்கும் முயற்சியை இறைவனே பார்த்துக் கொண்டிருக்கிறான்.

Yasir said...

மயக்கத்தில் இருப்பவர்களுக்குகூட எளிதில் புரியும்படியான விளக்கம்/பதில்...இஸ்லாம் சொல்லித்தராத வகையில் அதனை எழுதியவர் விரைவில் கலிமாச் சொல்லி உண்மையான இஸ்லாத்தில் இணைவார் என்று எதிர்ப்பார்க்கின்றேன்...உங்களின் காது புடைக்கும் கோபம்/ஈகோ போன்றவற்றினால்தான் இன்று சமுதாயம் 70 கூட்டமாக தமிழ்நாட்டுலேய பிரிந்து போய் கிடக்கின்றது..வல்ல அல்லாஹ் நாம் அனைவரையும் காப்பாற்றுவனாக

sheikdawoodmohamedfarook said...

//புத்தகம் போட்டு விற்பனை//இங்லாந்தின் வெளிஈட்டுக்கம்பெனியானMac Milan& coஉரிமையாளர் மேக்மில்லன் பல ஆண்டுகளுக்குமுன் பிரிட்டிஷ் பிரதமராய் இருந்தார்.அந்த அவர் தாத்தாக்குதாத்தாதொடங்கிய நிறுவனம்.இன்றைக்குநூற்று அயும்பது ஆண்டுகள் தாண்டிவிட்டது.'சீனா சென்றாகிலும் கல்' என்ற நபியை பின்பற்றும் நாமோ 'புத்தகம் போட்டுகாஸுபார்ப்பவர்கள்'' என்று கிண்டல் அடிக்கிறோம் . நாமும் நன்றாகத்தான் நம் நபியே பின் பற்றி நடக்கிறோம் போல்தெரிகிறது!

sheikdawoodmohamedfarook said...

//முதுகு அரித்தால் சொறிவது மார்கத்துக்கு கூடுமா? கூடாதா?//என்று கச்சையே கட்டிசர்ச்சையில் இறங்கிகொண்டிருக்கும்போது மேலை நாட்டில் Edward De Bono என்பவர் LATERAL THINKING என்ற புத்தகத்தை எழுதி சிந்தனைஉலகில்புதிய மாற்றம் அல்லது புரட்சிபண்ணி இருக்கிறார்.அதுமட்டுமல்ல LATERAL என்ற சொல்ஆங்கிலஅகராதிக்குபுதியவரவு.1970 இந்த சொல்ஆங்கிலதாயின் மடியில்'மலர்ந்தும் மலராத பாதிமலர் போலபிறந்துவளர்ந்தது/.இதன் பொருள்''மாற்றியோசி! '' அதாவது அறச்சமாவையே திரும்ப திரும்பஅறைக்காமே வேறே புதிய பார்வையே புதியவழிகளில் போட்டு முன்னுக்குவர வழி தேடு.முதுகுஅறிச்சா பேரன் வேரளுலே நகமிருக்கான்டுபாருங்களேன்.இதற்க்கு ஏன் ஒருபுக்கு? சர்ச்சையெல்லாம்?

Ebrahim Ansari said...

இந்த பதிலுரையில் ஒரு விஷயம் விடுபட்டுப் போய் இருக்கிறது.

இட ஒதுக்கீடு தொடர்பான அவர்களின் போராட்ட நிகழ்வின் அலசலை விமர்சித்த அன்புச் சகோதரர், தேவை இல்லாமல் கோவையில் இருந்து பேச வரும் ஒரு பேச்சாளரைப் பற்றி தொடர்பு இல்லாமல் குறிப்பிட்டு இருக்கிறார் . இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

நமக்குத் தெரிந்தவரை கோவைப் பேச்சாளரும் இவர்களிடமிருந்து பிரிந்தவர்களில் ஒருவர்தான். அவர் அவர்களுடன் இருந்த போது துபாயில் நான் இருந்த வீட்டுக்கு வந்து இருக்கிறார்.

இந்த மாதிரி விஷயங்களுக்கு உதாரணம் காட்ட, கோவை வரை சென்று இருக்க வேண்டிய அவசியமில்லைஎன்று அதிரை நண்பர் ஒருவர் அலைபேசி மூலம் ஒரு கதையைக் கூறினார்.
அதிர்ச்சியாக இருந்தது. அதைப் பற்றி வீரபாண்டிகட்டபோம்மன் பாணியில் வசனம் எழுதுவதாக இருந்தால்

"அந்தக் கதையை இங்கு விடாதே அப்பனே! ஆசிரியையே வளைத்துப் போட்டு பின் வெட்டி விட்ட கதையின் கதா நாயகர்கள் உங்களிடம் உங்கள் அருகிலேயே உண்டு . வேறு ஏதாவது இருந்தால் கூறு "

என்றுதான் எழுதவேண்டும்.

ஆனால் இப்படித் தனிப்பட்டோரின் வாழ்க்கையை இழுத்துப் பே வதானால் எல்லோரிடமும் எல்லா தரப்பிலும் இப்படி தவறுகள் நிகழ்ந்து இருக்கலாம்.

இன்று அவர்களிடமிருந்து பிரிந்து தனியாக ஒரு இயக்கம் நடத்தி வரும் ஒரு முன்னாள் முக்கியஸ்தர்- இஸ்லாம் ஒரு இனிய மார்க்க நிகழ்ச்சிகளில் மைக்கைப் பிடித்தபடி வலம் வருபவரை - இப்படி ஒரு வகையான குற்றச்சாட்டைக் கூறித்தான் அவர்களோடு இருந்தபோது வெளியேற்றினார்கள்.

ஆகவே தவறுகள் எந்த சூழ்நிலையில் எப்படி நடந்ததோ அது எல்லாத் தரப்பிலும் இருக்கலாம்.

இதை விவாதித்தால் நமது பல்லைக் குத்தி நாமே முகர்ந்து பார்ப்பது போலவும் மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புவது போலவும் அமைந்துவிடும். ஆகவே தனிப்பட்ட வாழ்வின் விமர்சநங்களை தவித்துக் கொண்டு கருத்தை கருத்தோடு மோதவிடலாம் .

இதனால் அவர்கள் மூலம் நாமும் நம் மூலம் அவர்களும் தெளிவு பெற வாய்ப்பு உண்டு.

வருத்தங்களை மறப்போம்! சமுதாயத்துக்கு வலு சேர்ப்போம். !

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

//இட ஒதுக்கீட்டிற்காக சிறை நிரப்பும் போராட்டம் தேவையா என்று இவர்கள் கேட்க வரும் கேள்வி என்னவென்றால், சிறைகளை நிறைக்க வேண்டுமா? என்பது தான். இந்த மெத்த படித்த அறிவாளிகளுக்கு பொது அறிவு சற்றும் கிடையாது என்பதற்கு இவர்களின் கேள்வி சான்று. இவ்வளவு இலட்சம் மக்களை எந்த சிறைகளிலும் அடைக்க முடியாது, அடைக்கவுமில்லை.//

சிறையில் அடைக்க முடியாதது தெரிந்தும் அப்போ ஏன் சிறை நிரப்பும் போரட்டம்ன்னு பேரு வச்சிங்க (வேற பேரு எதுவும் உங்க மண்டைக்கு உதிக்கலையா?) உங்களின் பொது அறிவு தன்மையை சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...



அந்த கட்டுரை மீதான அதிருப்தியை அங்கே பதிந்து விட்டேன்.
அவ்வியக்கத்தில் இருந்து கண்ணிய பேச்சும் எழுத்தும் இனியாவது எதிர்பார்ப்போமாக!

Noor Mohamed said...

அநாகரிகமான, அசிங்கியமான, தரமற்ற, தரக்குறைவான வார்த்தைகளை பயன் படுத்தி எழுதப் பழக வேண்டுமானால் த த ஜ வின் இணைய தளங்களை படித்தால் பழகிக் கொள்ளலாம். மாற்றார்கள் இவர்களின் தளங்களை படிக்கும்போது, தரக்குறைவாக எழுதுவதுதான் தூய இஸ்லாம் என என்னும் அளவுக்கு இஸ்லாத்தின் தூய வடிவில் என்ற பெயரில் தீய வார்த்தைகளை அள்ளி வீசுவதுதான் த த ஜ வின் தனித் தன்மை.

த த ஜ தளங்களில் கண்ணியமான முறையில் எடுத்துக் கூறும் பாக்கியத்தை அந்த மக்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என நாம் துஆ செய்வோம்.

Ebrahim Ansari said...

தம்பி ஜகபர் சாதிக் ! ஜசாக் அல்லாஹ் ஹைர்.

இல்லாததை இட்டுக் கட்டுவதற்கு உதாரணமாக குர்பானி கறி விற்று இலாபம் பார்ப்பது தொடர்பாக நான் முகநூலில் இட்ட கருத்தில் தவ்ஹீத் ஜமாத்தை பெயர் சொல்லிக் குறிப்பிட்டு இருக்கிறேனா என்று பாருங்கள். நான் பொதுவாக எல்லா இயக்கங்க்ளும்தான் இப்படி செய்கின்றன என்றுதான் குறிப்பிட்டு இருக்கிறேன். தப்லீக் அதெல்லாம் செய்வதில்லை என்பதை நிறுவுவதே என் நோக்கம். எந்த இயக்கத்தையும் நான் பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை. மேலும் அந்த முக நூல் பதிவில் இன்னும் இரண்டு சங்கதிகளை குறிப்பிட்டு இருக்கிறேன். அப்படியானால் அவைகளை உண்மை என்று சகோதரர் ஒப்புக் கொள்கிறாரா? .

மேலும் விமர்சனம் என்று வந்தால் இரு கட்சிகளையும் சொல்வதே முறை. அந்த முறையில் அவர்கள் மீது சமுதாயத்தில் ஒரு சாராரிடம் உலவிய சந்தேகங்களின் பட்டியலே நாம் குறிப்பிட்டவை. இதே சாராம்சத்துடன் தமிழகம் முழுதும் நோட்டீசுகள் விநியோகிக்கப் பட்டன என்பது அவர்கள் அறியாததா? அவற்றுள் நாகூரில் இருந்து வந்த நோட்டீஸ் பல செய்திகளைச் சொல்லின. நாம் அவற்றை எல்லாம் குறிப்பிடவில்லை.

பொதுவில் அந்தப் பதிவு ஒரு செய்தி விமர்சனமே தவிர தவ்ஹீத் ஜமாத்தை தாக்குவதற்காக எழுதப் பட்டதல்ல என்பதை மீண்டும் கூறுகிறேன்.

sabeer.abushahruk said...

எந்தக் கட்டுரையின் பேசுபொருளையும் விமரிசிக்க யாருக்கும் உரிமை உண்டு. ஆனால்,

தராதரம் பார்க்காமல்,

"நாம் களியாட்டம் போட்ட காலங்களில்கூட ஒழுக்கமாக வாழ்ந்தார்களே" என்றுகூட யோசிக்காமல்,

படிக்கவேண்டிய காலங்களில் படித்து; உழைக்க வேண்டிய காலங்களில் உழைத்து முன்னேறி

மார்க்க நடைமுறைகளை இயன்றவரை நிறைவாகச் செய்து

சமூக நேம்பாட்டுக்கு தொண்டாற்றி வரும் மனிதர்களை விமரிசிக்கு முன்,

படிக்காமல் ஊர் சுற்றி

தண்ணியடித்துக்கொண்டு தறிகெட்டு அலைந்து

பாலியல் முறைகேடுகளில் லயித்து

பணபலம் கொண்டு தன்னைச் சுற்றி இருந்தோரையும் வழிகேட்டில் செலுத்தி வாழ்க்கையைக் கடந்தவர்கள்

தற்போது திருந்தி வாழ்வதாகச் சொன்னாலும் மொழியை உபகரணமாக உபயோகிக்காமல் ஆயுதமாக உபயோகிக்கும் வரை இவர்களுக்கும் இயக்கங்களுக்கும் பின்னடைவு நிச்சயம்.

படிக்கவில்லையெனினும் படிச்சவங்கமாதிரி நாகரிகமாக நடக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

sabeer.abushahruk said...

விழுதுகளே,

இந்த நிருபர்கள்தான் வேர்கள் என்பது நினைவில் நிற்கட்டும். விருட்சம் வளர்க்க வியர்வை சிந்தியது நாங்கள். எங்களைப் புறக்கணித்து நன்றி கொல்வதைக்கூட அல்லாஹ்வுக்காக பொறுப்போம் ஆனால் விதண்டாவாதமும் வீண் ஜம்பமும் அழிவை நோக்கியே நகர்த்தும் என்பதும் ஞாபகம் இருக்கட்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அவர்கள் பாசையில் சொல்லப் போனால் “ஆட்டையை”ப் போட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.///

ஓ அதனால்தான் ! எல்லாமே தனித் தனியாக அதற்கு தன்னிலை விளக்கம், வேறு யாரிடமிருந்து ஏற்றுக் கொள்வதில்லை , அன்று சரி என்றது இன்று (ஆராய்ச்சி முற்றிப் போய்) சரியாகப் படாமல் போனது !

எதுவானாலும்,

ஒன்றன் பின் ஒன்றாக (மீண்டும்) தெளிவு கிடைத்து தவ்ஹீத் சிந்தனையோடு சமுதாய அக்கறையுடன் (தனிமனித துதியின்றி) மாறுவார்கள் என்று எதிர்பாப்போம் !

தனிமனித வழிபாட்டை தவிடுபொடியாக்கியவர்கள் இன்று தனிமனித திருப்திக்காக இயக்க மயக்கத்தில் தங்களது தனித் தன்மையை இழக்கிறார்கள் !

!!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இது இயக்க மயக்கத்திலிருப்பவர்களை விமர்சிப்பதற்கு மட்டுமல்ல, நல்லெண்ணமும் நன்னோக்கும் கொண்ட இருபாலர்களின் வருகையை பெற்றிருக்கும் தரமான தளம், மேலும் இருபாலருக்கும் மேலதிக விபரங்கள் அறிய வேண்டும் என்பதற்கே !

இணைய நுட்பத்தாலும், செயலாலும் நுணுக்கங்கள் அறிந்தவர்களின் பின்னனி கொண்ட இந்த தளத்தினை தொடர்ந்து வயது பேதமின்றி நேசிக்கப்படும் அனைவருக்கும் தெரியும், இங்கே தடம் பதிப்பவர்கள் யார் யார் என்று !

தனிமனித சாடலே வேண்டாமென்று சொல்கிறோம், அதேபோல் தனிமனித சாயலும் வேண்டாம் என்றுதான் சொல்கிறோம் !

வேர்கள் வேர்கள்தான் ! அவர்களின் வேர்வைகள் என்றைக்கும் படைத்த இறைவனின் திருப்திக்கா மட்டுமே சிந்திக் கொண்டேதான் இருக்கும் !!

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum!,
I have been keeping myself always away from the dirty blogs and misconceived websites for quite a long time. The reason is that they have the practice of challenging every body and indulging in mudslinging on the face of those who propose constructive and decent comments on their views and ideals.
They call themselves that "We are the ONLY true followers of Islam" and proclaim that ALL others are sinners, "persons of the Hell" and "Kafirs". They forget one important thing that a person is a true Muslim or not is judged by ALLAH only. We are not the authority empowered to declare anybody as "Kafir or Murthad".
Every time they quote the verses of the Holy Quran to curse or to banish a fellow Muslim. But miserably they often forget that those verses are also meant for them.
Kakka, actually I was forced to go through their website after reading this blog post. Lo my God, they proved their worth. They are such an unscrupulous, arrogant and atrocious group of uncultivated, uncivilized, barbarian like guys who are disillusioned in their heart by their "what we call" mentors.
They really don't deserve any feedback or response for their so called response to your well balanced, more matured and the very important "need of the hour" article. let us all remain silent and leave the rest to the will of Allah.
Let us pray Allah to guide them properly and forgive their sins they commit through their words and deeds (I think that they are not aware of).
I request you my dear Imbrahim Ansari Kakka and Mr.P.Bahurdeen to go ahead with your meticulous and dedicated works.
You know one thing? Adirain Nirubar is really the most popular blogspot read by people from various countries and from people of various ideologies.
We are here to read, learn and understand those pertinent dedication and sacrifices contributed by our forefathers.
May Allah offer you good health, strength and wisdom to pursue your noble efforts.
Wassalam
N.A.Shahul Hameed

sabeer.abushahruk said...

//You know one thing? Adirain Nirubar is really the most popular blogspot read by people from various countries and from people of various ideologies.
We are here to read, learn and understand those pertinent dedication and sacrifices contributed by our forefathers.//

அ.நி.:

ப்ளீஸ் மேற்கண்ட என் ஏ எஸ் சார் அவர்களின் கருத்தைத் தமிழில் பதியவும். புரிய வேண்டியவர்களுக்குப் புரியனும்ல?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அ.நி.:

ப்ளீஸ் மேற்கண்ட என் ஏ எஸ் சார் அவர்களின் கருத்தைத் தமிழில் பதியவும். புரிய வேண்டியவர்களுக்குப் புரியனும்ல?//


காக்கா:

நம்முடைய மொழிபெயர்ப்பை ஏற்றுக் கொள்ளப்படுமா ?

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும்!
நான் கூறியவை அனைத்தும் உண்மை. வெறும் புகழ்ச்சி அல்ல.
N.A.Shahul Hameed

sabeer.abushahruk said...

தெரியும் சார்.

நானும் ஃபிஸிக்ஸ்தான்.

நிரூபிக்கபடாதவற்றைப் போதிக்கும் பழக்கம் உங்க்ளுக்கோ கற்றுகொள்ளும் ஆர்வம் எங்களுக்கோ இருந்ததில்லை.

ஏன்னா, படிச்ச படிப்பு அப்படி.

Unknown said...

Assaalamu Alaikkum

Dear brothers and sisters,

I have been observing few of our brothers have done revolution by learning, practicing islam by identifying themselves as uniquely successful muslims, with pride, unncessary debating with limited knowledge with narrow mindedness, and breaking the hormonious relationship with their fathers and mothers, uncles and their relatives by having own aggressive way of practicing(?) islam, reinventing and inventing their own ideologies by partially interpreting Quran out of context, apparently blaming, scolding and attacking the dignity of fellow scholars(ulamas), making separate path for themselves.

A person has different way of understanding and practicing(?) same religion in home and making conflicts with his blood relatives. I dont think such a personality will establish peace and harmony in the society he/she lives with.

May Allah save us from conflicts and help us establishing peace and harmony among us.

Thanks and best regards

B. Ahamed Ameen from Dubai.

ZAKIR HUSSAIN said...

நானும் பார்த்தேன் அந்த பதிவை. அந்த வலைப்பூவில் எழுதியவர் அ.நி & இப்ராஹிம் அன்சாரி அண்ணன் அவர்களின் கருத்தில் மட்டும் வேறுபடவில்லை.



அ.நி யில் எழுதும் அனைவர் மீதும் கோபமாக ' நிருபர்களின் உளரல் / வசமாக மாட்டிய அறிவாளிகள் / புத்தகம் போட்டு காசு பார்த்தவர்கள் [ அப்படி அவர் பார்த்த மாதிரி தெரியவில்லை, அப்படியே பார்த்திருந்தாலும் "அதிரைtntj" ஏன் ஆத்திரப்படவேண்டும். மொத்தத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு தீக்குளிக்கும் தொண்டர்கள் போல் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள்.



இயக்கத்தில் பிரச்சினை இல்லை / தலைவரிடத்திலும் பிரச்சினை இல்லை. பதில் எழுதும்போது 'தூற்றி' எழுதும் பாணியில் எழுதும் இவர்கள்......ஹிந்தாவை மன்னித்த பெருமானார் வழியில் வாழ்வதாக சொல்வது மிகப்பெரிய ????.

முதன் முதலில் தவ்ஹீத் ஜமாத்தை விமர்சித்தால் , விமர்சித்தவர்கள் எதிரியாக பார்ப்பது ' இவன் தப்லீக், இவன் தர்கா பார்ட்டி ,
இவன் சுன்னத் ஜமாத் " என்று சொல்வதை தவிர்க்க வேண்டும்.

இப்படி முத்திரை குத்துவதால் மார்க்கம் வளர்கிறதோ இல்லையோ , சண்டைகள் வளரும்.

Unknown said...

ததஜ அல்லாத மற்றவர்களை வசைபாடுவதற்காக மட்டுமே உள்ள அவர்களின் அதிரை வலைதளத்தை யாரும் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்கு பதில் கொடுத்து வசைபாட்டு தளத்தை பார்க்க வைத்துவிட்டீர்களே. அவர்களை சீண்டாவிட்டாலும் நீண்ட நாட்களாகவே அ.நி.,ADT மற்றும் அதிரையில் தவ்ஹீத் பயான் செய்யும் ஒரு ஆலிமை வம்புக்கு இழுப்பதை காண்கிறோம். அவர்களுக்கு பதில் கொடுத்து நேரத்தை வீணடிக்காமல் தங்கள் வேலையை பார்ப்பதால் வயிற்றெரிச்சல்.தவ்ஹீத் பிரச்சாரத்தை மொத்தமாக குத்தகை எடுத்தவர்களல்லவா?

'ஒருவர், தான் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும்' என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற ஹதீஸை எழுதி விட்டு,கேள்வி ப்பட்ட பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளதை காணமுடிகிறது. ஒரு முஸ்லிமின் கண்ணியத்தை காப்பது மற்ற முஸ்லிமின் கடமை,முஸ்லிம்கள் ஒரு கட்டடத்தின் செங்கற்கள் போன்றவர்கள் என்ற ஹதீஸ்களும்,ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள் என்ற குர் ஆன்வசனமும் மற்றவர்களுக்குதான். ததஜவினர்களுக்கல்ல

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

முந்தைய பதிவில் http://adirainirubar.blogspot.in/2014/02/28-2.html தமிழக முஸ்லீம்கள் பெரும்பாலவர்களின் நியாயமான ஆதங்கமே பிரதிபலிதிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

மேலும் அந்த பதிவின் இறுதியில் கேட்கபட்ட கேள்விகள் தமிழகத்தில் உள்ள அனைத்து இயக்களுக்கும் நறுக்கென்று கேட்கப்பட்ட கேள்விகள் என்பதும் அந்த பதிவை வாசித்த அனைவரும் அறிந்ததே.

உண்மை கசக்கத்தான் செய்யும் என்பது யாவரும் அறிந்ததற்கு ஏற்ப. கேட்ட கேள்விகளுக்கு பதியப்பட்ட இந்த தளத்தில் தங்களின் தக்க பதிலை தர திராணியற்று, உண்மையின் கசப்பை உணர்ந்த ஓர் இயக்கம், இந்த தளத்தில் வந்த இட ஒதுக்கீடு பதிவிற்கு பதில் என்ற பெயரில் தனிமனித சாடல்கள், நாகரீகமற்ற வார்த்தை பிரயோகங்களை பதிவிட்டுள்ளார்கள். அல்லாஹ் போதுமானவன்.

அந்த முன்றெழுத்து இயக்கத்தில் நிர்வாகத்தில் இருந்த ஒரு சிலர் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தி நீக்கப்பட்டார்கள், ஒரு சிலர் பொருளாதார மோசடி சென்று சொல்லி நீக்கப்பட்டார்கள், ஒரு சிலர் கொள்கை விரோத போக்கு என்று நீக்கப்பட்டார்கள், ஆனால் அவ்வியக்கத்தின் அனுதாபியாகவோ அல்லது உறுப்பினராகவோ இருந்த பலர் தானாக அந்த இயக்கத்தை விட்டு வெளியேறி உள்ளார்கள் கடந்த 10 வருடங்களாக, இப்படிப்பட்டவர்கள் வெளியேறியதற்கு காரணம் இவர்களின் தனிமனித தாக்குதல் அனுகுமுறை, விமர்சனம் என்ற பெயரில் சக முஸ்லீம் இயக்கங்களை கடும் வார்த்தைகள் கொண்டும் விமர்சனம் செய்யும் போக்கும், ஷஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படும், ஒரு சில ஹதீஸ்களுக்கு எங்கள் ஜமாத் சொல்லும் நுட்பமான விளக்கங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரும் முஷ்ரிக் (இணை வைப்பாளர்கள்), காஃபிர், முனாஃபிக் என்று பத்வா கொடுக்கும் அனுகுமுறையுமே முக்கிய காரணங்கள்.

இன்று அந்த முன்றெழுத்து இயக்கத்தை ஏன் அதில் இருந்தவர்கள் விமர்சிக்கிறார்கள்? அவர்களின் நியாயமான விமர்சனங்கள் என்ன? அந்த இயக்கத்தில் ஒரு காலகட்டத்தில் அனுதாபியாக இருந்தவர்கள் ஏன் மார்க்க ரீதியாக அவ்வியகத்தின் அன்மைகால தடுமாற்றங்கள் பற்றி வன்மையாக விமர்சிக்கிறார்கள்? என்பதை அந்த இயக்கத்தில் உள்ள உறுப்பினர்களும், இன்னும் அனுதாபிகளாக உள்ளவர்கள் அனைவரும் நிதானமாக நேரம் கொடுத்து கேட்டு உணரவேண்டும்.

சத்தியம் நிலைத்திருக்கும்... மீடியா தன்வசம் உள்ளது என்ற அகம்பாவத்தில் உள்ள அசத்தியம் அழிந்தே தீரும்.

யா அல்லாஹ்.. எங்களுக்கும் மாற்று கருத்துள்ள இயக்கங்களில் இருக்கும் சகோதர சகோதரிகள் அனைவரையும் நேர் வழியில் இருக்க செய்வாயாக.

adiraimansoor said...

காக்கா மிக அருமையான நடு நிலையான பதிவு மிக சரியான பதிவு அதிகமாக எழுத நேரமில்லை

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும்!
அவர்கள் தங்களின் tntj.in இலும் லிங்க் கொடுத்துப் பெருமைப் பட்டிருக்க்றார்கள். அதுதான் எனக்கு மிகவும் வேதனையைக இருந்தது.
வஸ்ஸலாம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

கருத்து வேற்றுமை பொதுவாக சகஜமே.அதில் தவறு கண்டால்,அதை சுட்ட நாகரீக வார்தைகள் உண்டு.ஆனால்,சகோ இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்கள் எழுதிய விஷயங்கள் தவறு அல்ல.சரியாகவே அலசி இருக்கிறார்கள்.அவ்வாறு எழுதக் கூடியவர்களும் அல்ல.எனவே த த ஜ சகோதரர்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்.

எந்த இயக்கத்திலும் மெம்பர் இல்லாத நான் நடு நிலையாக கேட்டுக் கொள்கிரேன்.

sheikdawoodmohamedfarook said...

இடஒதுக்கீடு கேட்டு சிறைநிறப்பும் போராட்டம் நடத்தியபோது அரசு அவர்களைஒரு மணிநேரமாவது சிறையில் அடைத்து வெளியே விட்டிருந்தால்'' நாங்கள் 'சமுதாய நலனுக்காக' சிறைசென்ற தியாகிகள்!'' என்று தம்பட்டம் அடிக்கலாம். அந்த ஆசை கை நழுவிபோனதால் வந்த ஏமாற்றத்தின் விளைவே இந்தக்கோபம்!.

Unknown said...

"இடஒதுக்கீடு கேட்டு சிறைநிரப்பும் போராட்டம்" காவல் துறை அனுமதியுடன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான்கு இடங்களில் நடைபெற்றது.எப்படி கைது செய்வார்கள்?

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பான பேராசிரியர் என் ஏ எஸ் அவர்கள்

// I request you my dear Imbrahim Ansari Kakka and Mr.P.Bahurdeen to go ahead with your meticulous and dedicated works.
You know one thing? Adirain Nirubar is really the most popular blogspot read by people from various countries and from people of various ideologies.//

கடந்த 14 th வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை சுற்றிலும் அறிஞர்கள், பேராசிரியர்கள், உலகெங்கிலும் இருந்து வந்த மார்க்க நல்ளுபதேசத்தோர் கூடி இருந்த அவையில் - குமபகோணத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் மூன்று நாட்களாக நடைபெற்ற " அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய எட்டாம் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு இந்த நிமிடம்தான் வந்தேன். வந்ததும் தங்களின் கருத்தைக் கண்டதும் பேருவகையும் பெருமிதமும் கொண்டேன். மாஷா அல்லாஹ். ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

மாநாடு தந்த உற்சாகத்துடன் தாங்கள் தந்திருக்கும் இந்த அன்பான கருத்தை ஏற்று இன்ஷா அல்லாஹ் எவரையும் புண்படுத்தாமல் எங்களின் பணி இன்னும் தரத்துடன் தொடர அல்லாஹ் துணை இருப்பானாக!

எனக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களும் இதையே எனக்கு அறிவுறுத்தினார்கள்.

அதே போல் அன்புத்தம்பிஅர அல அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என்றும் அருகதை உள்ளவனாகவும் இருக்கும் ஆற்றலை அல்லாஹ் தருவானாக!

மற்றும் சகோதரர் எம் . கே. அபூபக்கர் அவர்களின் அன்பான கருத்துக்கும் ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

என்றென்றும் என் இதயத்தில் இருக்கும் தம்பி ஜாகீருக்கும் சபீர் அவர்களுக்கும், நெறியாளர் அவர்களுக்கும், தம்பி தாஜூதீனுக்கும் சொல்கிறேன் " சின்ன நூல் கண்டு நம்மை சிறைப் ப்டுத்திவிடாது" ( இது சிவசங்கரியிடமிருந்து காபி & பேஸ்ட்).

மாநாடு பற்றிய தொகுப்பு இன்ஷா அல்லாஹ் விரைவில்.

ZAKIR HUSSAIN said...

//" சின்ன நூல் கண்டு நம்மை சிறைப் ப்டுத்திவிடாது" ( இது சிவசங்கரியிடமிருந்து காபி & பேஸ்ட்).//



அது எப்படி நீங்கள் சிவசங்கரியின் வார்த்தையை பயன்படுத்துவது??.

அப்புறம் சிவசங்கரியின் ஆதரவாளர்கள் ' ஏற்கனவே சிவசங்கரி சொன்னது என்று சொல்லி 'வசமாக மாட்டிக்கொண்டார் , பர்தா [ முகத்திரை ] கிழிந்தது " என எழுதினால்........

Shameed said...

// இன்ஷா அல்லாஹ் எவரையும் புண்படுத்தாமல் எங்களின் பணி இன்னும் தரத்துடன் தொடர அல்லாஹ் துணை இருப்பானாக!

எனக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களும் இதையே எனக்கு அறிவுறுத்தினார்கள். //

அங்கே பேராசிரியரையோ விரட்டிவிட்டார்களே !!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.