தொடர் -20
கடற்கரைப்பக்கம் காலார நடந்தவன், முத்துக்கள் அடங்கிய சிப்பிகள் கிடைத்தால் எவ்வளவு மகிழ்வானோ அத்தனை மகிழ்வெனக்கு. இந்திய சுதந்திரப் போராட்டத்தில், ஈடுபட்ட தியாகிகளின் வரலாறுகளை தேடத் தொடங்கிய அனுபவத்தையே நான் அவ்வாறு உணர்கிறேன். இந்திய தேசிய உணர்வு அற்றவர்கள் என்று மூடர்களால் முத்திரை குத்தப் பட்டு பரப்புரை செய்யபப்டும் ஒரு சமுதாயம் , வரலாற்றால் விளம்பரப் படுத்தப்படும் மற்ற எல்லோரையும் விட வீரத்திலும் தியாகத்திலும் விலை மதிக்க முடியாத தொண்டுகளை ஆற்றி இருக்கிறது என்று அறிய, அறிய அதைப் பகிரப் பகிர நெஞ்சமெல்லாம் இனிக்கிறது. எண்ணிலடங்கா இஸ்லாமியத் தியாகிகள் என்கிற தலைப்பிட்ட பட்டியல் இதோ இன்னும் தொடர்கிறது. இதற்கு மேலும் தொடரும் இன்ஷா அல்லாஹ்.
ஹாஜி கருத்த ராவுத்தர் :-
தமிழகத்தின் தென் புறத்தில் , உத்தம பாளையத்தில் கல்விச் சோலை அமைத்து கல்விப்பணிக்காக கல்லூரியை அமைத்துத் தந்த ஹாஜி கருத்த ராவுத்தர் என்பதுதான் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்கு தெரியும். ஆனால் அவர் ஒரு மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரராகவும் பரிணமித்தார் என்பதை இங்கு பகிர்வதில் பெருமைப்படுகிறேன்.
முதலாவதாக, எந்த ஒரு அரசியல் போராட்டம் என்றாலும் அதற்கு உரிய செலவுகளை செய்வதற்கு நிதி வேண்டும்.
“பொருள் கொண்ட பேர்கள் மனம் கொள்வதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை”
என்று ஒரு பாடல் உண்டு. பணமும் மனமும் படைத்திருந்த மாமனிதர்கள் மிகச் சிலரே. அவர்களின் மதிக்கத்தக்க மாண்பு பெற்றிருந்த செல்வந்தர் ஹாஜி கருத்த ராவுத்தர் அவர்கள். காந்தியார் அறிவித்த கள்ளுக்கடை மறியல் போராட்டம், பொதுக் கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் உட்பட்ட அனைத்துப் போராட்டங்களுக்கும் நடைமுறை செலவுகளுக்கு தனது இரும்புப் பெட்டியைத்திறந்து பணத்தை அள்ளி இறைத்தவர் ஹாஜி கருத்த ராவுத்தர் ஆவார். நாட்டின் சுதந்திரத்துக்கு முன் தான் தேடிவைத்திருந்த செல்வம் பெரிதல்ல என்பதை பலமுறை தேவைக்குக் கொடுத்து நிரூபித்தவர்.
இவரது அஞ்சாத நெஞ்சுக்கு ஒரு உதாரணம் என்னவென்றால் ஹாஜி கருத்த ராவுத்தர் பிறந்து வாழ்ந்த கம்பம் பள்ளத்தாக்கில் சுதந்திர இயக்கத்தை ஒடுக்குவதற்காக, கதர்த் துணியை விற்கக் கூடாது என்று ஆங்கில அரசு தடை வித்தித்து இருந்தது. ஆனால் இந்த செப்படி வித்தை ஹாஜி கருத்த ராவுத்தரின் நெஞ்சில் கனல் வீசிக் கொண்டிருந்த சுதந்திர உணர்வின் முன் செல்லுபடியாகவில்லை. உத்தம பாளையத்தில் தானே ஒரு கதர் விற்பனை நிலையத்தை அரசின் அடக்குமுறை உத்தரவுக்கு அஞ்சாமல் துவக்கினார். மராட்டிய மாநிலத்தில் இருந்து கதர் துணிகளை தடைகளை மீறி வரவழைத்து அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் தட்டுப்பாடின்றி கதராடை கிடைக்க வழிவகுத்தார்.
வானளாவிய அதிகாரம் படைத்ததாக மார் தட்டிக் கொண்ட ஆங்கில அரசின் அடக்குமுறைகள் கூட ஹாஜி கருத்த ராவுத்தரின் செல்வாக்குக்கு முன் செல்லாக்காசாகின என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வைச் சொல்கிறார்கள். 1922- ல் , பெரியகுளம் தாலுகாவின் காங்கிரஸ் மாநாட்டை நடத்தும் பொறுப்பு ஹாஜி கருத்த ராவுத்தர் அவர்களுக்கு காந்திஜியால் வழங்கப் பட்டது. மாநாடு நடத்தப் பட்டதன் முக்கிய நோக்கம் கிலாபத் இயக்கத்தை ஒடுக்குவதற்காக ஆங்கில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அறிவித்தும் - எதிர்த்தும் மக்களுக்கு அந்த நடவடிக்கைகளை விமர்சனம் செய்து அவர்களது கவனத்துக்குக் கொண்டு வருவதே ஆகும்.
அன்னாளில் சுதந்திரப் போராட்ட வீரர்களை தனது உணர்வுகரமான உரையாற்றலால் வீரம் கொப்பளிக்க வைத்தவர்களில் சேலம் வரதராஜுலு நாயுடு அவர்கள் முக்கியமானவர். ஹாஜி கருத்த ராவுத்தர் நடத்திய மாநாட்டிற்கு தலைமை தாங்க வரதராஜுலு நாயுடு அவர்கள் அழைக்கப் பட்டு இருந்தார். தலைவர் வந்து மாநாட்டுப் பந்தலில் அமர்வதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு ஒரு கனத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கஷ்டப்பட்டு மேடையேறி தலைவரின் கையில் ஓர் கட்டளை இடப்பட்ட காகிதத்தைத் திணிக்கிறார். அதில் குறிப்பிட்டிருந்தது என்ன வென்றால் இந்த மாநாட்டில் வரதராஜுலு நாயுடு உரையாற்றக் கூடாது அப்படி உரையாற்றினால் உடனே கைது செய்யப்படுவார் என்ற எச்சரிக்கைதான் அந்தக் காகிதத்தின் உள்ளடக்கம்.
காகிதத்தை வாங்கிப் படித்த வரதராஜுலு நாயுடு எழுந்தார்; மைக்கைப் பிடித்தார். கண்ணியம் மிக்க ஹாஜி கருத்த ராவுத்தர் அவர்களே! என்று அழைத்து தனது உரையைத் தொடங்கி, கிலாபத் இயக்கம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலை முதலிய விஷயங்களை அலசி ஆழமான உரையை சற்றும் அஞ்சாமல் அயராமல் ஆற்றி அமர்ந்தார். கைது செய்ய வந்த காவல்துறை , ஹாஜி கருத்த ராவுத்தர் என்ற அரண் அங்கே அமர்ந்து இருந்ததால் அவரை மீறி தனது விலங்குகளை வைத்து வித்தை காட்ட இயலவில்லை. அந்த அளவுக்கு ஆங்கில அரசின் கட்டளையையும் காவல்துறையையும் கட்டிப் போட்டது ஹாஜி கருத்த ராவுத்தரின் கடைக்கண் பார்வையாகும். மாநாடு முடிந்து, உத்தம பாளையத்தின் எல்லை தாண்டிய பிறகே வழிமறிக்கப் பட்டு கைது செய்யப்பட்டார் வரதராஜுலு நாயுடு என்பது வேறு விஷயம். இப்படி தனது செல்வத்தாலும் செல்வாக்காலும் சுதந்திரப் போராட்டத்துக்கு துணை நின்றவர் ஹாஜி கருத்த ராவுத்தர் ஆவார். பின்னாளில் ஹாஜி கருத்த ராவுத்தர் அவர்களுடைய கல்விப்பணிக்காகவும் சமுதாயம் அவருக்காக துஆச் செய்யக் கடமைப் பட்டு இருக்கிறது.
ஹாஜி முகமது மெளலானா:-
“மதுரைவாசி ஹாஜி முகமது
மவுலானா பெயர் மங்குமோ
அவர் மனதிலே துயர் தங்குமோ!
மகிழ்வினோடு சிறையில் வாழும்
மாட்சி தன்னை எண்ணுவீர் ! -"
என்று பாடினார் கம்பம் பீர் முகமது பாவலர். இந்தப் பாடல் மதுரையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஹாஜி முகமது மெளலானா அவர்களின் தியாகத்தின் பானை சோற்றுக்குப் பதமாகும்.
1886-இல் பிறந்த முகமது மெளலானா தனது தொடக்கக் கல்வியை ஆங்கில வழிக்கல்வி மூலம் பெற்று பின்னர், பார்ஸி மொழியும், உருது மொழியும் கற்றார். மதுரை முனிச்சாலைப் பகுதியில் சௌராட்டிர சமூகத்தவர் மிகுதியாக இருந்த காரணத்தால் அவர்களுடன் பழகிய ஹாஜிமுகம்மது, மேடையேறி சௌராட்டிர மொழியில் பேசும் திறமையும் பெற்றார். ஹாஜியின் தந்தை இறைப்பற்றுடன் நாட்டுப்பற்றும் மிகுந்தவராக இருந்ததால் அந்நாளில் சுதந்திர தாகம் நிறைந்தவர்கள் வாங்கிப் படிக்கும் சுதேசமித்திரன் நாளிதழை வாங்கி வந்தார். அதனை, ஹாஜிமுகமது அவர்களும் படித்து அன்றாடம் நாட்டின் நடப்புகளை கவனித்து அறிந்து வந்தார். 1910 இல் முதன்முதலில் அன்னிபெசண்ட் துவக்கிய ஹோம்ரூல் இயக்கத்தில் சேர்ந்து போராட்டத்தில் பங்கு கொண்டார்.
ஆங்கிலேயக் கப்பல் கம்பெனிக்கு எதிராக வ. உ. சி, கப்பல் கம்பெனி தொடங்கியதும் அதனால் கைது செய்யப்பட்டதும், நெல்லையில் இதனால் மக்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பும் இவற்றை உற்று நோக்கிக் கொண்டிருந்த மௌலானாவின் நாட்டுப்பற்றின் ஆர்வத்தை அதிகமாக்கின.
1908- மார்ச் 13-ஆம் நாள் விபின் சந்திரபாலரின் பிறந்தநாள் விழா நெல்லையில் கொண்டாடப்பட்ட போது ஆங்கிலேயரின் அடக்குமுறையும், அதனைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் முகம்மது யாசீன் என்ற இளைஞர் இறந்ததும் மௌலானாவை இன்னும் பெரும் கவலைக்குள் ஆழ்த்தியது. அந்நியரின் அடக்குமுறைக்கு எதிராக ஆத்திரம் கொண்டார். துப்பாக்கி ஏந்தி வெள்ளையனை விரட்டும் வீரனாகத் தன்னைத்தானே கற்பனை செய்து கொண்டார். இவ்வாறு இளமையிலேயே தனது உணர்வுபூர்வமான ஆர்வத்தை நாட்டு நலனுக்காக அமைத்துக் கொண்டார்.
“சொல்வல்லான் சோர்விலான் இவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது “ எனும் இலக்கணத்துக்கேற்ப சிறந்த நாவன்மை படைத்த முகமது மெளலானா அவர்கள் பேசத்தொடங்கினால் கூட்டம் வாய் பிளந்து கேட்கும் நாவன்மை படைத்தவராகத் திகழ்ந்தார். இவரது பேச்சு பொருள் பொதிந்ததாகவும், இலக்கிய ரசனையுடனும் உலக நடப்புகள், நாட்டு நடப்புகள் இவற்றைத் துல்லியமாக விளக்கும் வகையில் இருக்குமென்பதால், இவரது பேச்சை மக்கள் விரும்பி இவருக்கென்று ஒரு கூட்டம் கூடும். பல அறிஞர்களின் எழுத்துக்கள், பேச்சுக்கள் இவைகளிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டி பேசும் பாங்கு அந்த நாளில் மிக அரிதானது. அரசை எதிர்த்து அழுத்தமான குற்றச் சாட்டுக்களை முன்வைத்துப் பேசிய முறைகள்- அந்த சண்டமாருத எழுச்சி மிக்க சொற்பொழிவுகள் ஆங்கில அரசுத் தரப்பினரை அச்சம் கொள்ள வைத்தன. அரசு இவரை தனது இரகசிய கவனத்தின் பட்டியலில் வைத்துக் கொள்ளத் தொடங்கியது.
1921இல் நிலக்கோட்டையில் கள்ளுக்கடை மறியல் நடந்தது. கள்ளுக்கடை வைத்து காசு பார்த்துக் கொண்டிருந்த கள்ளுக்கடை அதிபர்கள் இந்த மறியலை எதிர்த்து உள்ளூர் குண்டர்கள் சிலரை ஏவிவிட்டு சத்தியாக்கிரகிகள் மீது தாக்குதல் நடத்தியதால், அங்கு ஓர் கலவரம் உருவாகி, சமூக விரோதிகளால் பல கடைகள் சூறையாடப்பட்டன. காவல்துறையோ சுதந்திரப் போராட்ட தொண்டர்கள் மீது கொள்ளை வழக்கைப் பதிவு செய்து வழக்கு நடத்தினார்கள். அந்த வழக்கில் ஹாஜி முகமது மெளலானா அவர்களும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். வழக்கு செஷன்ஸ் கோர்ட்டுக்குப் போனபோது இவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். ஆகவே அரசு அடுத்த சந்தர்ப்பத்தை நோக்கி இருந்தது.
தஞ்சாவூரில் சென்னை மாகாண காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அதில் இவர் பேசிய உணர்வூட்டும் பேச்சுக்காக, மக்களைத் தூண்டிவிட்டார் என்ற கோழைத்தனமான குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தரப்பட்டது. சிரித்த முகத்துடன் சிறை சென்றார்.
மீண்டும் 1932-ல் மதுரையில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் ஹாஜி முகமது மெளலானா கைது செய்யப்பட்டு, இன்னொரு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
தீவிரமான மதப் பற்றும் பேணுதலும் ஒழுக்கமும் உள்ளவராக ஹாஜி முகமது மெளலானா அவர்கள் திகழ்ந்தார். அதில் சிறிதும் குறையாத அளவுக்கு நாட்டுப்பற்றும் மிகுந்தவர். இவர் மதுரை நகராட்சியின் தலைவராகவும் , துணைத் தலைவராகவும் பதவி வகித்தும் தொண்டாற்றினார். எந்த நேரத்திலும் மத ஒற்றுமைக்காகப் பாடுபட்டு வந்தவர்.
இவரது இடைவிடாத பணிகளுக்கிடையிலும் ஒவ்வொரு வேளையிலும் தொழுகை நடத்தத் தவற மாட்டார். சிறையிலும்கூட சிறை அதிகாரிகளிடம் போராடி சிறையில் இருந்த முஸ்லிம்களுக்காகத் தொழுகைக்கென்று தனியிடம் கேட்டு வாங்கி, பாய், விளக்கு, தண்ணீர் ஆகியவை கிடைத்திட வழிவகுத்தவர் என்று சிறைச்சாலைக் குறிப்புகள் இவரது செயல்களுக்கு சான்று பகர்கின்றன. முகமது மெளலானா சாஹிப் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!
மாஷா அல்லாஹ் இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது சகோதரர்களே! இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம்.
இபுராஹீம் அன்சாரி
================================================================
எழுத உதவியவை:
எஸ் கே. அமீர் பாட்சா – இந்திய விடுதலையில் இஸ்லாமியரின் பங்களிப்பு
எம். கவுது முகையதீன்- ஹாஜி கருத்த ராவுத்தர் – ஒரு பார்வை.
நன்றி: பேராசிரியர் .மு. அப்துல் சமது.
13 Responses So Far:
அன்றைய நல் மக்களை அறிய தந்தமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.
ஹாஜி கருத்த ராவுத்தர், ஹாஜி முகம்மது மெளலானா போண்றோரின் நற்குணங்களை அல்லாஹ் நமக்கும் தருவானாக!
வரலாறு மறந்ததை
அகழ் ஆராய்ச்சி செய்து
எங்களுக்கு தரும் காக்கா
மிக்க நன்றி
ஹாஜி கருத்தராவுத்தர் /ஹாஜிஒஹம்மதுமௌலான/ வெள்ளையன் குண்டுக்கு பலியான முஹமது யாஸின்/ இவர்களை எல்லாம் எனக்குயார் என்று தெரியாதுங்கோ! தேசியக்கொடிபிடித்து 'வந்தேமாதரம்!' சொல்லி அடிபட்டு செத்ததிருப்பூர் குமரன் பாடம் மூனாம் கிளாஸ்லே சொன்னாங்கோ மனப்பாடம்செஞ்சுகிட்டோநுங்கோ!' 'சுட்டேன்! சுட்டேன்! துப்பாக்கியில் குண்டுகள் தீரும் வரை சுட்டேன்!'' என்று மணியாச்சி ரயிலடியில் ஆஸ்துரையே சுட்டவாஞ்சிநாதனை ஒரு ஸினிமா படத்திலே சொன்னாங்கோ! தெரிஞ்சு கிட்டோன்னுங்கோ ! நீங்க சொல்ற சாயம்பூசின ஆசாமீங்களே என் ஒரேஆத்தா தலைமேலே கை வச்சு சத்தியமா சொல்றேன் தெரியவே..................... தெரியாதுங்கோ ! என்னை போட்டுசதா தொல்லை படுத்தாதீங்க! உட்டுடுங்க!
முன்பு இருந்த இஸ்லாமியர்கள் வெள்ளைக்காரனின் அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் தனது சொத்து / குடும்பம் எல்லாவற்றையும் இழக்க தயங்காமல் முன் வரிசையில் நின்று போர் செய்தனர்.
இப்போது ??
மௌலானாக்கள், கல்விப்புரவலர்கள், செல்வந்தர்கள், சாமானியர்கள் என சமுதாயமே ஒன்றுகூடி வெள்ளையனை விரட்டிய வரலாற்றை படிக்கும் போது ஏன் இந்த சமுதாயம் இப்படி தன் சக்திக்கும், எண்ணிக்கைக்கும் மீறி போராடியது என்ற வியப்புக்குறி இயற்கையாய் எழுகிறது.
வெள்ளையனோ, கருப்பனோ எவனுடைய அநீதியும் எக்காலத்திலும் சமமே என கருத நம் மரபணு தூண்ட மறந்ததேன்? என்ற கேள்விக்குறியும் எழவே செய்கிறது!
ஆனால், காக்கா உங்களுடைய மறைக்கப்பட்ட வரலாற்றின் ஆய்வுகள் இனி முஸ்லிம்களின் மரபணுக்கள் விழித்தெழ செய்யும் என நம்புகிறேன், இன்ஷா அல்லாஹ்.
//முன்பு இருந்த இஸ்லாமியர்.......முன்வரிசையில் நின்று..........இப்போது?// மருமகன் ஜாகிர் ஹுசைன் சொன்னது// இப்போது எல்லா மதத்தவரும் இனத்தவரும் தன் குடும்பத்துக்கு சொத்து சேர்க்க முன்வரிசையில் நின்று ஓட்டு கேட்கிறார்கள்! பாவம் தொண்டர்கள்! ''வாழ்க! ஒழிக!'' கோஷம் போட்டு தொண்டை கட்டிப் போச்சு! பனங்கல்கண்டு போட்டு பசும்பால் குடித்தால் தொண்டை சரியாகும்! காஸு?
ZAKIR HUSSAIN சொன்னது…
//முன்பு இருந்த இஸ்லாமியர்கள் வெள்ளைக்காரனின் அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் தனது சொத்து / குடும்பம் எல்லாவற்றையும் இழக்க தயங்காமல் முன் வரிசையில் நின்று போர் செய்தனர்.
இப்போது ??//
இப்போதும் முன் நிற்கின்றார்கள் முஸ்லிம் சகோதரர்களின் காலை வாரிவிடுவதற்க்கு
பட்டியல் நீள்கிறது, நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால், இவர்களில் யாரைப்பற்றியும் எதுவும் எங்களுக்குத் தெரியாதவாறு பார்த்துக்கொண்டனர் சதிகாரர்கள், பாடநூல்களை வடிவமைத்த துரோகிகள்.
வெளுத்து வாங்கும் காக்கா அவர்களுக்கு அல்லாஹ் ஆத் ஆஃபியா.
ஹாஜி கருத்த ராவுத்தர், ஹாஜி முகமது மெளலானா போன்ற மாவீரர்கள் இன்றைக்கு இல்லையே என்பதை நினத்து மனவேதனயும் கைசேதமும் அடையவேண்டியுள்ளது இப்பொழுது உள்ள தலைவர்கள் அல்ல ஈகோவாதிகளினால் நம் சமுதாயம் பெரும் வீழ்ச்சியை நோக்கி பயனித்துக் கொண்டிருக்கின்றது அல்லாஹ் எல்லோரையும் காப்பாற்றுவானாக
ஹாஜி கருத்த ராவுத்தர், ஹாஜி முகமது மெளலானா போன்ற மாவீரர்கள் ///இன்றைக்கு இல்லையே என்பதை நினத்து மனவேதனயும் கைசேதமும் அடையவேண்டியுள்ளது இப்பொழுது உள்ள தலைவர்கள் அல்ல ஈகோவாதிகளினால் நம் சமுதாயம் பெரும் வீழ்ச்சியை நோக்கி பயனித்துக் கொண்டிருக்கின்றது அல்லாஹ் எல்லோரையும் காப்பாற்றுவானாக//தோழ்ர் மன்சூர் அவர்களே! னல்ல வேளை அவர்கள் போய்ச் சேர்ந்து விட்டார்கள். இல்லாவிட்டால் ஒன்று அவர்களையும் ஏதாவது இயக்கத்தில் சேர்த்து இருப்பார்கள் அப்படி சேராவிட்டால் இவருக்கு ஓரினச் சேர்க்கை இருந்தது அல்லது பெண் தொடர்பு இருந்தது யென்று களங்கப் படுத்தி இருப்பார்கள். அல்லாஹ் அவகளை தன்பால் யெடுத்துக் கொண்டான் தப்பித்தார்கள்.
இப்படி பெரிய மனிதர்களை களங்கப் படுத்துவதைப் பற்றி கவலைப்பாடாமல் அதற்காகவே ரூம் போட்டு யோசிப்பார்கள் போல சில அவதாரங்கள் உலவி வருகிரர்கள்.
தம்பிஅதிரை மன்ஸூர் சொன்னது//ஹாஜிகருத்த ராவுத்தர் ஹாஜிமௌன போன்ற........// அவர்கள் மட்டுமல்லஇந்திய விடுதலைக்கு தியாகம்செய்த மற்ற தியாகிகளும் இப்பொழுது இல்லாமல் அப்பொழுதேபோனதே நல்லது!.இன்றும் அவர்கள்வாழ்ந்திருந்தால் இன்றைய கேவலமான அரசியல்நிலைகண்டுஆற்றாது அழுதுகண்ணீர்சிந்தி ஆலமரம் புளியமரம் தேடி தூக்கில் தொங்கி இருப்பார்கள். நல்ல மரணம்தழுவிய அவர்களுக்கு அல்லாஹ் நல்லிடத்தைகொடுக்க துவா செய்வோமாக!
மாஷா அல்லாஹ் அளப்பரிய பணி தங்கள் ஆற்றி வருவது...அல்லாஹ் நன்மையை நல்கட்டும்
Post a Comment