Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையின் பூர்வ குடிமக்கள் 26

அதிரைநிருபர் பதிப்பகம் | April 22, 2014 | , ,

முன்பு ஓர் இழையில், தஹ்லா மரைக்காயர் என்பவரைப் பற்றி எழுதிய நினைவு.  இந்த தஹ்லா மரைக்காயர், கீழக்கரையிலிருந்து புலம் பெயர்ந்து வந்து, அதிரையில் பதிந்து வாழ்ந்த பூர்வ குடிமகனாவார்.  இவர் அதிரைக்கு வந்து, இங்குப் பல சீர்திருத்தப் பணிகளை முன்னின்று நடத்தியவர். முதன் முதலில் அதிரையில் குதிரைச் சவாரியைப் பயண வாகனமாகப் பயன்படுத்தியவர்!

வண்டிப்பேட்டைப் பகுதியில் அமைந்துள்ள ஆலடிக்குளம் இவரால் வெட்டப் பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடப்பட்டது.  இக்குளத்தின் தென்மேற்கு முனையில், பெண்கள் படித்துறை ஒன்றை அமைத்து, அதில் குளிக்கும் பெண்கள் ஆண்களால் பார்க்க முடியாத அளவுக்குச் சுவர் எழுப்பி, அச்சமின்றி ஆனந்தமாகப் பெண்கள் குளிக்கப் படித்துறையைக்  கட்டிப் பொதுநலச் சேவை புரிந்தவர்.

சென்னையில் அண்மைக் காலம்வரை, அதாவது ஓர் ஐம்பதாண்டுகள்வரை, O.S. சதக் தம்பி மரைக்கார் என்ற பெயரில் ஒரு கப்பல் கம்பெனி இருந்தது.  தஹ்லா மரைக்காயர் இந்நிறுவணத்தாரின் உறவுக்காரர் ஆவார்.  பிற்றை நாட்களில் சதக்தம்பி மரைக்காயர், தமது வாணிப வசதிக்காக நாகூரில் குடிபெயர்ந்து செட்டில் ஆனவர்.

அந்நாட்களில் தமிழ்நாட்டின் போலீஸ் உயர் அதிகாரியாக இருந்த அருள் என்பாரின் மகளை முஸ்லிமாக்கி மணந்துகொண்டார்!  கப்பல் கம்பெனி உரிமையாளர் என்பதாலும், அன்றையப் பணக்காரர் என்பதாலும், இத்திருமணம் எவ்வித எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் இன்றி, அமைதியாக நிறைவேறி, காவல்துறை மேலதிகாரி அருளின் மகள் இஸ்லாமிய மார்க்கத்தின் ஓர் அங்கமாகிப்போனார்!

‘வாவன்னா’ குடும்பத்து முத்துச் சாவடிகள்: 

காயல்பட்டினத்திலிருந்து புலம் பெயர்ந்து அதிரைக்கு வந்து வாழத் தொடங்கிய பூர்வீகக் குடும்பங்களுள் ஒன்று, ‘வாவன்னா’ குடும்பம். இக்குடும்பத்தின் பூர்வ குடிமகனாக இருந்தவர் ‘பாகிர் சாஹிப்’ என்பார்.  இன்று காயலில் இருக்கும் ‘சாலையார்’ குடும்பத்தைச் சேர்ந்தவர்.  அந்தக் குடும்பப் பெயர் மாறி, மூத்த குடிமகனாரான பாகிர் சாஹிப் அவர்களின் பெயரில் நிலை பெற்றது.  அப்படியானால், ‘பாவன்னா குடும்பம்’ என்றல்லவா ஆகியிருக்கும்?  அது என்ன ‘வாவன்னா குடும்பம்?’ என்ற கேள்வி, வாசகர்களின் மனத்தில் எழக்கூடும். 

பெரும்பாலும் பாமரர்களாகவே இருந்த அன்றைய அதிரை மக்கள், ‘பாகிர்’ باقر என்பதை ‘வாக்குறு’ என்றே மொழிந்தனர்.  அதனடிப்படையில் வந்ததே ‘வாவன்னா’ எனும் பெருங்குடிப் பெயர்.  இக்குடும்பத்தார் பெரும்பாலும் முத்து வாணிகமே செய்துவந்தனர்.  இவர்களுக்குச் சொந்தமான ‘முத்துச் சாவடிகள்’ பல ஊர்களில் இருந்தன.  முத்து (Pearl) வாணிபத்தில் அப்பொருளின் சந்தை மதிப்பைத் தீர்மானிக்கும் வணிகர்களாக முன்னணியில் ‘வாவன்னா’ குடும்பத்தினர் நின்றனர்.

மன்னார்குடி, கும்பகோணம், மதுரை, கேரளத்தின் கோழிக்கோடு, ஆந்திராவில் காக்கிநாடா, இலங்கையின் கொழும்பு, சீனங்கோட்டை போன்ற ஊர்களில் ‘வாவன்னா’ குடும்பத்தாருக்குச் சொந்தமான முத்துச் சாவடிகள் இருந்தன.  இவர்களின் பணியாளர்கள் விலை உயர்ந்த முத்துப் பரல்களைச் சுமக்கும் தொந்தரவே இல்லாமல், தம் வேட்டி மடிப்புகளில் வைத்துக்கொண்டு, முத்து வாணிபத்துக்காகப் பல ஊர்களுக்குச் சென்றுவருவார்கள்.

சில நாட்கள் முன்பு, ‘வாவன்னா சார்’ அவர்கள் என்னிடம் ஒரு விட்டடித்தார்கள்.  “நமது வாவன்னா குடும்பத்தவர்களைக் கணக்கெடுத்தால், அது ஒரு ECG Report போல வரும்.  அதாவது, அந்த ரிப்போர்ட்டில் நடுக் கோட்டுக்கு மேல் உச்சியை நோக்கிய உயர்வும், நடுக் கோட்டிற்குக் கீழே அதல பாதாளத்தை நோக்கிய தாழ்வும் இருக்கும்.  அதாவது, சிலர் மிகச் சிறந்த அறிவாளிகளாகவும், இன்னும் சிலர் அடிமுட்டாள்கள் என்று அறிவிக்கும் தாழ்நிலையிலும் இருப்பார்கள்” என்றார்கள்.  அந்த நகைச்சுவையைக் கேட்டு, என்னால் சிரிப்பை அடக்க முடியாத நிலை!  “நம் குடும்பத்தார், யாரையும் ஏமாற்ற மாட்டார்கள்;  ஆனால், இவர்கள் ஏமாறுவார்கள்” என்று கூறி, வாவன்னா குடும்பத்துப் பாமரத் தன்மையையும் மிகத் துள்ளியமாக மதிப்பிட்டார் ‘வாவன்னா சார்’.

அண்மையில், ‘அபூசுஹைமா’ (மர்ஹூம் அலியாலிம்சாவின் மகன்) இந்தக் குடும்பத்தின் வரைபடம் (Genealogy chart) ஒன்றை உருவாக்கி என்னிடம் காட்டினார்.  செவிவழித் தகவலாகத் தான் கேட்டறிந்ததை அடிப்படையாக வைத்து, ‘எக்ஸெல்’ ஷீட்டில்  உருவாக்கியது அந்தச் ‘சார்ட்’. வாசகர்களாகிய உங்களுக்குத் தந்த சிரமத்தைப் பெரிது படுத்தாமல், பதிவைப் பெரிது படுத்திப் பாருங்கள். இதோ, அந்தப் பதிவு:


பல்லாண்டுகளுக்கு முன்பு, ‘சலாமத் பதிப்பக’ உரிமையாளர் மர்ஹூம் அப்துர்ரஹ்மான் ஹாஜியார் ‘அதிரைக் கலைக்களஞ்சியம்’ என்ற பெயரில் ஒரு தொகுப்பை வெளியிட்டிருந்தார்.  அதில் பூர்வீக அதிரையில் வெளியூர்களிலிருந்து வந்து குடியமர்ந்த குடும்பத்தார் பட்டியலை வெளியிட்டிருந்தார். ‘மரைக்கா’ குடும்பத்தார் நாச்சிகுளத்திலிருந்தும், ‘கோனா’ வீட்டார் கோட்டைப் பட்டினத்திலிருந்தும், இன்னும் சில இப்போதைய அதிரைக் குடும்பத்தார் எங்கிருந்து அதிரைக்கு வந்து ‘செட்டில்’ ஆனவர்கள் எனும் பட்டியலைக் கொடுத்திருந்தார். 

அதிரையின் வணிகச் செம்மல்களாக இருந்த முதற்குடி மக்கள், இலங்கை, பர்மா, மலாயா, சிங்கப்பூர், இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்குச் சென்று பல்லாண்டுகள் அங்கே தங்கி வாணிபம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், அச்செல்வந்தர்கள் தம் சொத்துகளைப் பாதுகாக்கும் பொறுப்பை, வெளிநாடுகளுக்குச் செல்லும் நிர்பந்தமில்லாத மரைக்கா குடும்பத்தாரிடம் விட்டுச் சென்றார்கள்.  நாளடைவில் அச்சொத்துகளின் பெரும் பகுதி, பாதுகாவலர்களான மரைக்காமாரின் சொத்துக்களாக மாற்றம் பெற்றது, என்றொரு தகவல்.

மரைக்காமாரின் ஒத்துழைப்புடன், ஊரில் இருந்து மதச் சடங்குகளில் வருமானத்தைக் கண்ட லெப்பைகளும், பூர்வ குடிமக்களின் கடும் உழைப்பால் வந்த சொத்துகளின் உரிமையாளர்களாக வந்ததும் மற்றுமொரு தகவல்.

தஞ்சையின் சரபோஜி மஹாராஜா தன் பிரதிநிதியாக அ. மு. க. உதுமான் மரைக்காயர் என்பவரை ஆட்சிப் பொறுப்பாளராக நியமித்திருந்தார்.  அவரும் தன்னை நம்பிப் பொறுப்பை ஒப்படைத்த சரபோஜி மன்னருக்கு விசுவாசமாக நடந்து வந்தார்.  தனக்காக ஏதேனும் ஒரு சொத்தைத் தனதாக்கிக் கொள்ள வாய்ப்பிருந்தும், மன்னரின் பிரதிநிதி என்ற சிறப்புப் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றி வந்தார் உதுமான் மரைக்காயர்.

ஒரு தடவை சரபோஜி மன்னர் இப்பகுதிக்கு வருகை தந்தபோது, மன்னரின் ஆட்சிப் பிரதிநிதி என்ற அடிப்படையில், உதுமான் மரைக்காயர் தன் பேத்தியைத் தோலில் சுமந்தபடி மன்னருடன் கிராமங்களின் சுற்றுப் பயணத்தில் இணைந்து சென்றார்.

இன்றும் அதிரையின் அடையாள கிராமமாக இருக்கும் ‘தொட்டியம் பள்ளி’ என்ற கிராமத்தில் மன்னர் சுற்றிப் பார்த்து வந்தபோது, உதுமான் மரைக்காயரின் பேத்தி திடீரென்று அழுதது.  மன்னர் திரும்பிப் பார்த்து, “மரைக்கார், குழந்தை ஏன் அழுகின்றது?” என்று கேட்டார்.  அதற்கு உதுமான் மரைக்காயர், “ராஜா எல்லாருக்கும் நிலத்தைப் பிரித்துக் கொடுக்கிறாரே, எனக்கு ஒன்றும் இல்லையா?” என்று கேட்டு அழுகின்றது என்று பதில் கூறினார்.  அதுவரை உதுமான் மரைக்காயர் மன்னரின் பிரதிநிதியாக இருந்தும், தனக்கென்று எந்தச் சொத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை.

சரபோஜி மஹாராஜா, “மரைக்கார், நாம் நிற்கும் இந்த நிலத்தின் கண்ணுக்கு எட்டிய அளவு உமக்குச் சொந்தம்;  எடுத்துக்கொள்ளும்” என்றார்.  குழந்தை அழுததற்குக் காரணம், உதுமான் மரைக்காயர் அக்குழந்தையைக் கில்லிவிட்டதுதான் என்பது மன்னருக்குத் தெரியாத மரைக்காயரின் வேலைதான் என்பது மன்னருக்குத் தெரியாது!  நேரடியாக, மன்னரிடம் கேட்காமல், குழந்தையின் அழுகையைக் காரணமாக வைத்து, உதுமான் மரைக்கார் சொத்துரிமை பெற்றார்.  அண்மைக் காலம் வரை அக்கிராமப் பகுதி, அ. மு. க. குடும்பத்துச் சொத்தாகவே இருந்துவந்தது என்ற தகவலை என்னிடம் கூறினார் மர்ஹூம் புலவர் பஷீர் அவர்கள். 

அதிரையின் முதல் குடிமகன்களுள் மகுதூம் சின்ன நெய்னா லெப்பை ஆலிம் ஒருவர்.  இவர் காயல்பட்டினத்து சதக்கத்துல்லா அப்பா என்ற பேரறிஞரின் ஆசிரியரும் ஆவார். இந்த அறிஞர் கட்டியதுதான் நமதூர் பெரிய குத்பாப் பள்ளி.  இவர், இப்போது சென்னையில்  அஹமது அன்கோ என்ற பெயரில் முன்னேற்ற நிறுவனத்தின் உரிமையாளர் இக்பால் ஹாஜியாரின் மூதாதை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?        

வளர்ப்புகள்: பொதுவாக, அதிரையின் முஸ்லிம் பெருங்குடியினர் தம் வணிகத்திலும், வீட்டுப் பணிகளிலும் தமக்கு உதவியாளர்களாகப் பொருளாதாரத்தின் அடித்தட்டு மக்களாக இருந்தவர்களை அந்தந்தக் குடும்பத்து வளர்ப்புக்கள் என்று சிலரை வைத்திருந்தனர்.  அத்தகைய சமூக அடித்தட்டு மக்களின் காப்பாளர்களாக இருந்து, அந்த மக்களின் சுகதுக்கங்களில் பங்கு கொண்டு, அவர்களின் பொருளாதாரத் தேவைகளை முடித்துக் கொடுத்தார்கள்.  அவரவர் தகுதிக்கு ஏற்ப, நிலங்களையும் பிரித்துக் கொடுத்துள்ளார்கள். அக்குடுங்களின் காப்பாளர்களாக இருந்து, அவர்களின் சுக துக்கங்களில் முன்னிலை வகித்தார்கள் என்ற உண்மையும் செவிவழிச் செய்திகளாக நிலைபெற்று வருகின்றது.

இது பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது, நாம் பகிர்ந்து கொள்ளலாம், இன்ஷா அல்லாஹ்.

அதிரை அஹ்மது

26 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

அதிரை இஸ்லாமியபூர்வகுடியினரின் வரலாற்றை இன்றைய தலைமுறைக்குதெளிவாக எடுத்து கூறி இருக்கும்அனா காக்காவை வாழ்த்தவயதில்லை எனவேஅஸ்ஸலாமு அலைக்கும். எந்த ஆண்டுகளில்அதிரையில்இஸ்லாமியர்களின் வரவு தொடங்கியது என்பது தெரியவில்லை .''அதிரை கலை களஞ்சியம்'புத்தகத்தை மீண்டும் வெளியிட்டால் அதிரை இஸ்லாமியர்களின் சரித்திரம் அறியஎல்லோர்க்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

Unknown said...

அதிரையின் பூர்வீக குடிமக்களின் வரிசையில் சொல்லப்படவேண்டிய குடும்பங்கள் அவர்களின் சிறப்பம்சங்கள் இன்னும் எத்தனையோ.
அனைத்தும் இங்கு அஹமது காக்கா அவர்களின் கைவண்ணத்தில்
உலா வரும் என்று நினைக்கின்றேன்.

அபு ஆசிப்.

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைகும்
காக்கா அதிரையில் பிறந்து அதிரையில் வளர்ந்து அதிரையின் வரலாறு தெரியாமல் இருக்கும் என் போன்றோர்களுக்கு உங்களது அதிரையின் வரலாற்று சுவடுகளும் குடும்பங்களின் பூர்வீகமும் அறியதந்தீர்கள் மட்டுமல்லாது மேலத்தெரு குத்பா பள்ளியின் பூர்வீகம் பற்றியும் எத்தனை பேருக்கு தெரியும் மாஷா அல்லாஹ் அதன் பூர்வீகத்தையும் மிக அழகாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளீர்கள்
ஜஸாக்கல்லாஹ் கைரன்

adiraimansoor said...

அபூசுஹைமா’ தனக்கே உண்டான பிரத்தியேக வரைகலையை பயன் படுத்தி வரைந்துள்ள இந்த சாட் அவரின் கடந்தகால சென்னை வாழ்க்கையையும் அவரின் அலுவலகத்தையும் எனக்கு நினைவூட்டியது

sheikdawoodmohamedfarook said...

//O.S.சதக்தம்பி Marikkar அருள் என்னும் பெரிய போலீஸ் அதிகாரியின் மகளை திருமணம் செய்து கொண்டார்// அவரை நம் இஸ்லாமிய ஜாதியில் இருந்து' தள்ளி' வைப்பார்களே! செய்தார்களா? மாற்று மதத்தவர்கள் கலிமா சொல்லி இஸ்லாத்தை தழுவினாலும் அவர்களிடம் சம்பந்தம் ஜாடி செய்து கொள்ள மாட்டார்களே? அவர் பெண்ணோ மாப்பிள்ளையோ கேட்டுபோனால்''உண்டுக்லாம் ! திண்டுக்லாம்! உடுத்திக்கலாம்! களஞ்சுக்கலாம்! ஆனா அந்த ரத்த ஒறவு மட்டும் வாணாம்'' என்றும் ''உங்க ரத்தமும் எங்க ரத்தமும் ஒன்னாகுமா?'' என்றும் சொல்லிஇருப்பார்களே?[ மேலேகண்ட இந்த வாசகம்வெறும்கற்பனையல்ல;உண்மை]

sheikdawoodmohamedfarook said...

//O.S.சதக்தம்பி maricayarபெரிய கப்பல் கம்பனி சொந்தக்காரரும் பணக்காரரும் ஆனதால் திருமணம் எதிர்ப்பும் எதிர்பார்ப்புமின்றி நிறைவேறியது// அனாகாக்கா சொன்னது.'' பணம்என்றால்'பிணமும் வாய் பிளக்கும்'' என்பார்கள். ஆனால் பணம் என்றதும் அப்போது பிணமும் வாய் மூடியது. பணத்துக்கு எப்போதும் ஒரு பவர்தான்.அது வாய் மூடவும் வைக்கும்.வாயே திறக்கவும் வைக்கும்.

Unknown said...

கி.பி. 8 ஆம் நூற்றாண்டு முதல் முஸ்லிம் மக்கள் அதிராம்பட்டினத்தில் வாழ்ந்துவந்தததற்கான ஆவணச் சான்று உள்ளதாக, பேராசிரியர், முனைவர் ராஜா முகம்மது என்ற கல்வெட்டு ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி 'அதிரை வரலாறு' எனும் தனித் தளத்தில் காண்க.

Unknown said...

அந்த trend எல்லாம் இப்பொழுது மாறிப்போய்விட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா? நானறிந்தவரை, நம் 'அதிரை அறிஞர்' புலவர் அஹ்மத் பஷீர் அவர்கள்தாம் இப்புரட்சியில் முதல் நிலை வகித்தவர். தம்முடன் படித்த பிராமணப் பெண்ணை முஸ்லிமாக்கி த் திருமணம் செய்து, புரட்சி செய்தவர். அந்தத் தாயின் அருமந்தப்பிள்ளைதான், அண்மையில் மறைந்த அஹ்மத் ஆரிஃப்.

நான் மதீனாவில் இருந்தபோது, அந்தத் தாயாரும் புலமைத் தந்தையும் ஹஜ்ஜுக்கு வந்திருந்தார்கள். அதிலிருந்து எங்களுக்கிடையில் தொடர்பு நெருக்கம் வலுப பெற்றது. தன் கணவருக்கு முன்னால் அந்தத் தூய அன்னையார் இறந்து சிறந்தார்.

நம்மூரில் எத்தனை பிராமணப் பெண்கள் முஸ்லிம்களாகித் தூய இஸ்லாத்தில் உறுதியாக வாழ்கின்றனர் என்பது தெரியுமா?

அவர்களுள் ஒரு பெண் எங்கள் குடும்பத்தில்..!

sheikdawoodmohamedfarook said...

//அவர்களுள் ஒரு பெண் எங்கள் குடும்பத்தில்//அஹமத் காக்கா சொன்னது.Conguratulations காக்கா!இது போல் எல்லா இல்லங்களிலும் ஆல்போல் பெருகிபேதமின்றி வாழ எல்லாம் வள்ள அல்லாஹ் அருள் செய்வானாக!ஆமீன்.

Ebrahim Ansari said...

பன்னூல் அறிஞர் காக்கா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

தாங்கள் தந்திருக்கும் குறிப்புகள் மேலோட்டமாக இருந்தாலும் பல வரலாற்று செய்திகளைத் தோண்டித் துருவிப் பகிரத் தூண்டுகிறது.

மர்ஹூம் புலவர் பஷீர் அவர்கள் தொடர்பான செய்தியை நான் கேள்வியுற்று இருக்கிறேன். ஆனால் அவர் பிராமணர் என்பது அறியாத செய்தி. அதே போல் உங்க குடும்பச் செய்தி எனக்கு தெரியாது. மாஷா அல்லாஹ்.

இப்படி அதிரையின் வரலாற்று செய்திகளை தங்கள் மூலமே கேட்கவும் படிக்கவும் ஆசை. நிறைவேறுமா? இன்ஷா அல்லாஹ்.

Ebrahim Ansari said...

//நம்மூரில் எத்தனை பிராமணப் பெண்கள் முஸ்லிம்களாகித் தூய இஸ்லாத்தில் உறுதியாக வாழ்கின்றனர் என்பது தெரியுமா? //

நம் ஊரில் மட்டும்தானா? எனக்கும் ஒரு ஐந்தாறு விபரங்கள் தெரியும். பரங்கிப் பேட்டை, அய்யம்பேட்டை ஆகிய ஊர்களில் என்னுடன் படித்த நண்பர்கள் அவ்விதம் மணம் முடித்து, இன்று அவர்கள் வீட்டுக்குப் போனாலும் மறைப்புக்குப் பின்னால் நின்று வாங்க என்று சலாம் சொல்லி வரவேற்கிறார்கள்- தலயில் முக்காடுடன்.

நானும் தம்பி தாஜூதீனும் சீர்காழியில் இப்படி ஒரு மங்கை நல்லாளைக் கண்டு அவர் கையால் உண்டு மகிழ்ந்தோமே!

Yasir said...

அதிரையின் வரலாற்று செய்திகளை தங்கள் மூலமே கேட்கவும் படிக்கவும் ஆசை. நிறைவேறுமா? இன்ஷா அல்லாஹ்.

sheikdawoodmohamedfarook said...

மைத்துனர்இப்ராஹிம்அன்சாரிஅவர்களே! புலவர்பஷீர்அவர்கள் பிராமணர்அல்ல! அவர் ஒரு முஸ்லீம்!அ.மு.க.குடும்பத்தைசார்ந்தவர்.தட்டாரதெருவில் அவர் பூர்வீகவீடுஉண்டு.அவர் பிராமணப்பெண்னை காதலித்து இஸ்லாத்திற்க்கு கொண்டுவந்து திருமணம் செய்து கொண்டார்.

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

//////நம்மூரில் எத்தனை பிராமணப் பெண்கள் முஸ்லிம்களாகித் தூய இஸ்லாத்தில் உறுதியாக வாழ்கின்றனர் என்பது தெரியுமா? //
காக்கா மார்களே என்னுடைய மருமகளும் அந்த இனத்தை சார்ந்தவள்தானே
திருமணமாகிய அடுத்த நாளே மதரஸாவிற்கு மதரசாவிற்கு அனுப்பி மூன்றுமாதம் இஸ்லாமிய அடிப்படை கல்வி கற்ற பின்னரே வீட்டுக்கு அழைத்து வந்தேன்
இது நடந்து மூன்று ஆன்டுகள்தானே ஆகின்றது
அல்ஹம்துலில்லாஹ் & மாஷா அல்லாஹ் இன்று என் மருமகள் பியூர் இஸ்லாமியப்பெண்

adiraimansoor said...

//////நம்மூரில் எத்தனை பிராமணப் பெண்கள் முஸ்லிம்களாகித் தூய இஸ்லாத்தில் உறுதியாக வாழ்கின்றனர் என்பது தெரியுமா? //
காக்கா மார்களே என்னுடைய மருமகளும் அந்த இனத்தை சார்ந்தவள்தானே
திருமணமாகிய அடுத்த நாளே மதரஸாவிற்கு மதரசாவிற்கு அனுப்பி மூன்றுமாதம் இஸ்லாமிய அடிப்படை கல்வி கற்ற பின்னரே வீட்டுக்கு அழைத்து வந்தேன்
இது நடந்து மூன்று ஆன்டுகள்தானே ஆகின்றது
அல்ஹம்துலில்லாஹ் & மாஷா அல்லாஹ் இன்று என் மருமகள் பியூர் இஸ்லாமியப்பெண்

இப்னு அப்துல் ரஜாக் said...

சுவாரஸ்யமான தகவல்கள்.வெல்டன் சாச்சா

sabeer.abushahruk said...

மிகவும் சுவாரஸ்யமானத் தகவல்கள்.

நன்றி காக்கா.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதிரையர்களின் அரிய ஆதிமூலத் தகவல்களுக்கு நன்றி காக்கா.

Ebrahim Ansari said...

//மைத்துனர்இப்ராஹிம்அன்சாரிஅவர்களே! புலவர்பஷீர்அவர்கள் பிராமணர்அல்ல! அவர் ஒரு முஸ்லீம்!அ.மு.க.குடும்பத்தைசார்ந்தவர்.தட்டாரதெருவில் அவர் பூர்வீகவீடுஉண்டு.அவர் பிராமணப்பெண்னை காதலித்து இஸ்லாத்திற்க்கு கொண்டுவந்து திருமணம் செய்து கொண்டா//

மச்சான் அவர்களே!

எனக்குத்தெரியுமே.

sheikdawoodmohamedfarook said...

முன்பெல்லாம் மாற்று மதத்திலிருந்து வந்துஇஸ்லாத்தை தழுவியவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு மாப்பிளை -பெண்சம்பந்தம் கிடைப்பது மிகமிக கஷ்டம் !இப்பொழுதும் கூட 'நாங்கள்மேல்ஜாதி குடும்பம் அவர்கள் மட்டஜாதி குடும்பம்''என்ற வர்ணாஸ்ரம கொள்கைகளை கடைபிடிப்போர்தான் நிறைய உண்டு! இருப்பினும்இக்கட்டுரையின் மூலம் காண்பது ஒரு புதியசூரியன் உதிக்கப்போகும் அறிகுறியாக இங்கொன்றும் அங்கொன்றும் ஒளிகீற்றுகள் கீழை வானத்தில்தென்படுகிறது. மலரத்துடிக்கும் புரட்சிப்பூக்களே!மௌனம்காத்ததுபோதும் மலர்ந்து காட்டுங்கள்! குறிப்பு:மருமகன்கள் ஜாகிரும்,சபீர் அபு சாருக்கும் வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லையே?

sheikdawoodmohamedfarook said...

//புலவர் பஷீர்தொடர்பான செய்திகளை நான் கேள்வியுற்று இருக்கிறேன்! ஆனால் அவர் பிராமணர் என்பது நான்அறியாத செய்தி// இதை சொன்னது மைத்துனர் இப்ராஹீம்அன்ஸாரி அவர்களே! அவரை தவிர வேறு யாருமல்ல!

adiraimansoor said...

///இருப்பினும்இக்கட்டுரையின் மூலம் காண்பது ஒரு புதியசூரியன் உதிக்கப்போகும் அறிகுறியாக இங்கொன்றும் அங்கொன்றும் ஒளிகீற்றுகள் கீழை வானத்தில்தென்படுகிறது. மலரத்துடிக்கும் புரட்சிப்பூக்களே!மௌனம்காத்ததுபோதும் மலர்ந்து காட்டுங்கள்! ///

பாரூக் காக்கா

இன்ஷா அல்லாஹ் உங்கள் துஆ கபூல் ஆகி உங்கள் என்னம் போல் அந்த சூரியன் உதித்து இந்த பூமியை பிரகாசிக்க செய்யும்

Unknown said...

/புலவர் பஷீர்தொடர்பான செய்திகளை நான் கேள்வியுற்று இருக்கிறேன்! ஆனால் அவர் பிராமணர் என்பது நான்அறியாத செய்தி//

என்ன புதிய புராணம் பாடுகின்றீர்கள்? அ மு க குடும்பத்தார் யாராவது பார்த்தால், வருத்தப்படப் போகிறார்கள். பிராமண சமுதாயத்திலிருந்து வந்தப் புனிதவதி, அவர் மனைவிதான்; அவரல்லர்.

அபூ சுஹைமா said...
This comment has been removed by the author.
adiraitruth said...

அதிரை வரலாற்றில் ஒரு இலையைக் கண்டோம். இன்னும் பல இலைகளை காண அவா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.