Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எண்ணிலடங்கா இஸ்லாமிய தியாகிகள் 8

அதிரைநிருபர் பதிப்பகம் | April 05, 2014 | , ,

தொடர் -21
யார் இவர்கள்? ஏன் கத்துகிறார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? நாட்டைப் பிரித்துக் கொடுத்த போது போனவர்களோடு சேர்ந்து ஏன் இவர்களும் போகவில்லை? என்றெல்லாம் அடிப்படை அறிவு இல்லாதவர்களால் இந்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களைப் பார்த்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கேள்விகளை எழுப்புபவர்கள் யார் என்றால் 

அவர்கள்தான் கால்நடைகளை மேய்த்துக் கொண்டு கணவாய்கள் தாண்டி வந்தவர்கள். 

வரலாற்று உண்மைகளை தங்களுக்கு வக்கணையாக வர்ணம் பூசி மறைத்துவிட்டு வர்ணாசிரமக் கொள்கைகளை வளர்த்தவர்கள். 

ஆங்கில அரசு நாட்டை ஆண்ட போதும் அதற்கு முன் மொகலாயர் ஆண்ட போதும் அவர்களின் அடிவருடிகளாக பாதம் பணிந்து கிடந்தது பதவி சுகத்தில் திளைத்தவர்கள். 

நாட்டின் சுதந்திரத்துக்காக தங்களது உயிர் உடல் உடைமைகளை அர்ப்பணித்த முஸ்லிம்களின் தியாக வரலாறுகளுக்கு முன் வந்து நிற்கத் தகுதியற்றவர்கள்தான் முஸ்லிம்களை நோக்கி யார் நீ என்று கேள்வி எழுப்புகிறார்கள். உன்னை இரண்டாம்தர குடிமகனாக்குவேன் என்றும் வாக்குரிமையைப் பறிப்பேன் என்றும் வரிந்து கட்டிக் கொண்டு பொறுப்பின்றிப் பேசும் கருப்பு உள்ளத்தவருக்கு பதில் அளிக்கவே எண்ணிலடங்கா இஸ்லாமிய தியாகிகள் என்கிற இந்த தியாகப் பட்டியலை இன்னும் நீடிக்கிறோம். நாம் மட்டும் படித்தல்ல நம்மை நோக்கி கேள்வி விரல் நீட்டும் பாதகர்களும் படிக்கவே இந்தப் பதிவுகள். 

உமர் சுப்ஹானி:-

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கு , உலகில் வேறெங்கும் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்களுக்கு இல்லாத பல சிறப்புக்கள் உள்ளன . தங்கள் மீது ஆதிக்கம் செலுத்தியவர்களை ஆயுதங்களைக் கொண்டும் இந்தியர்கள் எதிர்த்து இருக்கிறார்கள். ஆயுதங்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத கை ராட்டையைக் கொண்டும் எதிர்த்து இருக்கிறார்கள். ஆட்சியாளர் தந்த பட்டம் பதவிகளைத் துறந்து தியாகம் செய்தும் எதிர்த்து இருக்கிறார்கள். கப்பலோட்டி எதிர்த்து இருக்கிறார்கள். அந்நியத் துணிகளை புறக்கணித்தும் எரித்தும் எதிர்த்து இருக்கிறார்கள். பள்ளி, கல்லூரிகளைப் புறக்கணித்தும், ஒத்துழையாமை இயக்கம் நடத்தியும் உப்புக் காய்ச்சியும் எதிர்த்து இருக்கிறார்கள். கிஸ்தி, திரை, வரி, வட்டி, கப்பம் போன்றவைகளை கட்ட மறுத்தும் எதிர்த்து இருக்கிறார்கள். இத்தகைய அவ்வளவு எதிர்ப்பிலும் போராட்டங்களிலும் தியாகங்களிலும் முஸ்லிம்களின் ரத்தமும் ஏராளமாக சிந்தப் பட்டு இருக்கிறது; சொத்து சுகங்கள் அழிந்து இருக்கின்றன; தூக்குமேடையில் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட நிகழ்வுகளுக்கும் பஞ்சமில்லை. முஸ்லிம்களின் இந்த சுதந்திரத்துக்கான பங்கை குறிப்பிட்டுக் காட்டுகிற பிரபல் எழுத்தாளர் அண்மையில் மறைந்த குஷ்வந்த் சிங் அவர்கள் பெருந்தன்மையுடன் முஸ்லிம்கள் இந்நாட்டின் மக்கள் தொகையில் இருந்த சதவீதத்துக்கு அதிகமாகவே தியாகம் செய்தனர் என்று குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட தியாகிகளின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர்களில் ஒருவர் உமர் சுப்ஹானி அவர்களுமாவார்.

அன்றைய நாட்களில் பம்பாய் மாநகரில் இயங்கிக் கொண்டிருந்த மிகப் பெரிய ஒரு பஞ்சாலையின் அதிபராக உமர் சுப் ஹானி அவர்கள் திகழ்ந்தார். அன்றைய சுதந்திரப் போராட்டத்துக்கு பொருளாதார ரீதியில் ஆதரவளித்த முஸ்லிம்களுக்கிடையேயான பெரும் பணக்காரர்களில் உமர் சுப்ஹானி அவர்களும் ஒருவர். 

சுதந்திரப் போராட்ட செலவுக்களுக்காக நிதி திரட்டியாக வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது. விஜயவாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இந்த நிதி திரட்டளுக்கான இலக்கு ஒரு கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஒரு கோடி ரூபாயையும் நாடு முழுதும் இருந்த வசதி படைத்த பணம் படைத்தவர்களிடமிருந்து பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிதிக்கு “திலகர் நினவு சுயராஜ்ய நிதி” என்று பெயரும் சூட்டப்பட்டது. 

இந்த நிதி திரட்டலுக்கு தொழில் அதிபர்களான காட்ரெஜ் ரூபாய் மூன்று இலட்சமும் ஜெய நாராயணன் மல்தானி ரூபாய் ஐந்து இலட்சமும் ஆனந்த் லால் ரூபாய் இரண்டு இலட்சமும் காந்திஜியிடம் வழங்கினார்கள். நாட்டின் பல திசைகளில் இருந்தும் பணம் இந்த நிதிக்காக குவிந்து கொண்டு இருந்தது. 

அந்த நேரம் , நாம் இந்த அத்தியாயத்தின் கதாநாயகனாக கண்டு வருகிற உமர் சுப்ஹானி அவர்கள் காந்திஜியை சந்தித்தார். அவரது கையில் ஒரு காகித உறை இருந்தது. அந்த உறையை காந்தியடிகளின் கரங்களில் புன்முறுவல் பூத்துக் கொண்டே வழங்கினார் உமர் சுப்ஹானி.

 உரையைப் பிரித்த காந்திஜி திடுக்கிட்டார். ஆச்சரியத்தால் காந்தியின் கண்கள் அகல விரிந்தன. காரணம் அந்த உறைக்குள் இருந்தது உமர் சுப் ஹானியின் பங்களிப்பாக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை. காங்கிரஸ் மாநாட்டின் இலக்காக வைக்கபப்ட்ட ஒரு கோடி ரூபாயையும் தனி ஒருவராகத் தரும் மனப் பாங்கு உமர் சுப் ஹானி என்கிற உண்மை முஸ்லிம் இடமிருந்து வெளிப்பட்டது. நாட்டின் சுதந்திரத்துக்கான ஆக்கப் பணிகளுக்கு முன் ஒரு கோடி ரூபாய் என்பது அந்தப் பெருமகனுக்கு 1921-ல் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. 

ஆயினும் இந்தப் புனிதப் பணிக்கு பலரும் பணம் தர விரும்புவர். 

ஆகவே ஒருவரிடமிருந்தே முழுத்தொகையையும் பெற்றுக் கொள்ள காந்திஜிக்கு மனம் வரவில்லை. நாட்டின் பல பாகங்களில் இருந்து நிதி வருவதால் மிக அதிகமான சுமையை ஒருவரே சுமக்க வேண்டாம் என்று உமர் சுப்ஹானி அவர்களிடம் எடுத்துச் சொல்லிவிட்டு ஒரு கோடிக்குரிய காசோலையை உமர் சுப்ஹானி அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு அவரது பங்காக சில இலட்சங்களை மட்டுமே வழங்கும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்கி சில இலட்சங்களை வாரி வழங்கினார் அந்தப் பஞ்சாலை அதிபர். இந்த செய்தி ஆங்கில அரசுக்கும் தெரிய வருகிறது. ஆலை அதிபராக இருப்பதால்தானே இத்தனை செல்வத்தை எங்களை எதிர்ப்பதற்காக வழங்கத் துணிந்தாய் வா! வாய்ப்பு வரும்போது உன்னை கவனிக்கிறோம் என்று கருவிக் கொண்டிருந்தது ஆங்கில அரசு. உமர் சுப் ஹானி அவர்களுடைய பெயர் சிகப்பு மையால் அன்றே கோடிடப்பட்டது.

அந்த நேரம் , நாடெங்கும் அந்நியத் துணிகள் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை பம்பாயில் நடத்தத் தகுந்த ஒரு இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார் காந்திஜி. அப்போது காந்திஜிக்கு உமர் சுப் ஹானி அவர்களின் நினைவு வந்தது. அவரை அழைத்துவரச்சொல்லி , அந்நியத் துணிகளை உங்களின் பஞ்சாலையில் வைத்து தீக்கனல் மூட்டலாமா என்று கேட்டார். காந்தியின் கரங்களைப் பற்றிக் கொண்ட உமர் சுப் ஹானி அவர்கள் இத்தகைய ஒரு புனிதப் போராட்டத்துக்கு பயன்படாத எனது பஞ்சாலை அதை விட வேறு எந்த நல்ல காரியத்துக்கு பயன்படப் போகிறது பாபுஜி ! ஆகவே தாராளமாக ஏற்பாடு செய்யுங்கள் என்று போராட்டத்துக்கு தனது இடத்தைத் தர முழுமனதுடன் சம்மதம் சொல்லி பச்சை விளக்கு காட்டினார். 

அந்நியத் துணிகளை தீயிட்டுக் கொளுத்தும் அந்த உணர்வு பூர்வமான போராட்டத்தின் புது வடிவம், காந்திஜி தலைமையில் பிரம்மாண்டமான- பல கோடி ரூபாய் மதிப்புள்ள உமர் சுப்ஹானி அவர்களுடைய பஞ்சாலையில் நடைபெற்றது. தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அந்தத் தீயில் பலர் அன்னியத்துணிகளை அவிழ்த்து எறிந்தனர். பதிலுக்கு சுதந்திர தாகத்தின் அன்றைய அடையாளமான கதராடையை கட்டிக் கொண்டனர். எதோச்சாதிகார ஆங்கில அரசால் தனக்குத் தொல்லைகள் வருமென்று உணர்ந்து இருந்தும் அடிமை உணர்வை அலட்சியப் படுத்திவிட்டு சுதந்திர உணர்வை சுடர்விடச் செய்த உமர் சுப்ஹானி அவர்கள் தனது பங்குக்கு அன்றைய முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள அன்னியத்துணிகளையும் தீயிட்டு எரிக்க வழங்கினார். 

இப்படி ஒரு முறை அல்ல இன்னொரு முறையும் அந்நியத் துணிகள் உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் எரியூட்டப்பட்டது. இப்படி சுதந்திரப் போராட்டத்தின் ஒரு வடிவத்துக்கு நிதியும் களமும் அமைத்துக் கொடுத்த உமர் சுப்ஹானி அவர்களுக்கு ஆங்கில அரசு கொடுத்த இன்னல்கள் ஏராளம். அனைத்தையும் அச்சமின்றித் தாங்கினார். 

இன்றைக்கு யாராரோ அச்சம் என்பது மடமையடா என்று தேர்தல் பிரச்சார மேடைகளில் எழுதிவைத்து முழங்குகிறார்கள். இப்படி முழங்குகின்றவர்கள், பொதுவாழ்வில் சுருட்டிய வரலாறைத்தான் நாம் கண்டு கொண்டு இருக்கிறோம். உமர் சுப்ஹானி அவர்களைப் போல் தனது சொத்துக்களை நாட்டுக்காக இழந்தவர்களை நாம் சுதந்திர இந்தியாவில் காண முடியவில்லை.

இவ்வளவு தியாகங்களின் வடுக்களைத்தாங்கிய வாரிசுகளைத்தான் காவிக் கூட்டங்கள் தேசப் பற்றற்றவர்கள் என்று முத்திரை குத்துகின்றன. இப்படி முஸ்லிம்களை கருவருக்கக் காத்து இருக்கும் கூட்டத்தோடு கை கோர்க்கும் முஸ்லிம்களும் இருக்கிறார்களே என எண்ணும் போது நமது இதயம் இரத்தக் கண்ணீர் வடிக்கிறது. 

இந்த வரலாற்றுப் பெருஞ்சுவர் இன்ஷா அல்லாஹ் இன்னும் நீளும். 

இபுராஹீம் அன்சாரி

8 Responses So Far:

Unknown said...

முஸ்லிம்களே இந்திய விடுதலையின் உணமையான தேசபிதாக்கள் என்பதை உணர்த்தும் தங்களின் வரலாற்று ஆய்வையும், உமர் சுபஹாணி போன்ற விடுதலை வித்துக்களின் பெயர்களை முதன்முதலாக அறியும்போது ஏற்படும் சிலிர்ப்பு காவிகளிடமிருந்து இன்னுமோர் இந்திய விடுதலைக்கு ஏங்குகிறது

sheikdawoodmohamedfarook said...

adirai ameen சொன்னது''காவிகளிடமிருந்து இன்னுமோர் விடுதலைக்கு ஏங்குகிறது// முதலில் காவிகளின் வெற்றிக்கு கைகொடுப்போரை விடுதலை செய்யும் முயற்ச்சியில் இறங்குவோமாக!

sheikdawoodmohamedfarook said...

அன்றைக்கு சுபுஹானி அவர்கள் காந்திஜி கையில் கொடுத்த ஒரு கோடிரூபாய் செக்கை போல் இன்றைக்கு தமிழ் நாட்டு கட்சி தலைவர் ஒருவர் கைலே கோடிரூபாய் செக்கை நிதி கொடுத்தால் அதை மனைவி கணக்கில் வங்கியில் போட்டு விட்டு போராட்டத்தை ஒருமாதிரியாஒப்பேத்திஇருப்பார்!

sabeer.abushahruk said...

புதையுண்டு போன வரலாற்று உண்மைகளைத் தோண்டியெடுத்து அறியத்தரும் காக்கா தங்களுக்கு அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

adiraimansoor said...

///இவ்வளவு தியாகங்களின் வடுக்களைத்தாங்கிய வாரிசுகளைத்தான் காவிக் கூட்டங்கள் தேசப் பற்றற்றவர்கள் என்று முத்திரை குத்துகின்றன. இப்படி முஸ்லிம்களை கருவருக்கக் காத்து இருக்கும் கூட்டத்தோடு கை கோர்க்கும் முஸ்லிம்களும் இருக்கிறார்களே என எண்ணும் போது நமது இதயம் இரத்தக் கண்ணீர் வடிக்கிறது. ///

காக்கா மிக மிக சிந்திக்க வேண்டிய விஷயம்
ஒட்டு மொத்த முஸ்லீம்களும் (எல்லா இயக்கங்களும் முஸ்லீம் லீக் உள்பட) இந்த ஒரு முறை ஓட்டு புறக்கணிப்பு அல்லது நோட்டோ அதுவும் இல்லையென்றால் புதிதாக உறுவாகி இருக்கும் ஆம் ஆத்மியை யாவது ஆதரித்து அவர்களுக்கு கொஞ்சம் சான்ஸ் கொடுத்து பார்க்கலாம்
காரணம் இந்த கட்சியின் கான்சப்ட்டே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கின்றது
அவர்கள் வந்தால்தானே அவரகளைப்பற்றி தெரிந்து கொள்ளலாம் முழுக்க முழுக்க நரேந்திர மோடியை குறிவைத்து செயல் படும் ஆம் ஆத்மியின் பிரச்சார வீட்டியோக்கள் அவர்களை பற்றிய நல்ல அபிப்ராயம் வெளிபடுத்துகின்றது

கீழே உள்ளா சில வீடியோக்களை பாருங்கள்

https://www.youtube.com/watch?v=mOwSnUX_8Po

https://www.youtube.com/watch?v=n0I_pk4ITLo

https://www.youtube.com/watch?v=9E0UCe-bkew

https://www.youtube.com/watch?v=pGSD5t94LYY

https://www.youtube.com/watch?v=G5HsZCDtZc8

https://www.youtube.com/watch?v=c2e_Rg3NO1c

https://www.youtube.com/watch?v=BNM8PO3Gywg

https://www.youtube.com/watch?v=E6BDHrWwRTo


இப்னு அப்துல் ரஜாக் said...

இந்தியாவுக்கு பாடுபட்டு பாடுபட்டு நாம் உழைத்ததுதான் மிச்சம்.காவிகளோ கெடுத்ததுதான் உச்சம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

புதையுண்டு போன வரலாற்று உண்மைகளைத் தோண்டியெடுத்து அறியத்தரும் காக்கா, தங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நல்லதையே நாடிடுவானாக!

Shameed said...

இன்றைய கால தலைவர்களின் (தொண்டர்களும்)கேடுகெட்ட மட்டரகமான மூன்றாம் ரக தலைவர்களை நினைத்து மனம்வருந்திக்கொண்டிருக்கும்போது அந்தகால தியாகிகளை பற்றி படித்ததும் மனதுக்கு ஆறுதலகா இருந்தது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு