Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மோடியும் முகமூடியும்! - பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள் 8

அதிரைநிருபர் பதிப்பகம் | April 11, 2014 | , , , ,

'பாரத் மா கா ஷேர் ஆயா!’ (பாரத அன்னையின் சிங்கம் வருகிறது) என்ற முழக்கம், 'பாரத் மாதா கீ ஜே’ என்பதையே தூரமாக, ஓரமாக ஒதுக்கித் தள்ளிவிட்டது. மகாராணா பிரதாப், சிவாஜி, சாணக்யா, விவேகானந்தர்... என்ற உதாரணப் புருஷர்களையே உச்சரித்து, அதனுடைய கலிகால வார்ப்பாகத் தன்னையே காட்டிக்கொள்கிறது அந்தக் குரல். 'இன்று காங்கிரஸ் ஒரு பிரிவினைவாத சக்தி. வாக்குக்காக ஒவ்வொன்றையும் பிரித்து வைத்துள்ளது. நான் வளர்ச்சி என்ற தளத்தில் இந்தியாவை ஒன்றுபடுத்த விரும்புகிறேன். என் முழக்கம் இந்தியாவுக்கே முன்னுரிமை’ என்கிறது.

வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை வாங்கித் தந்ததைவிட புதிய பெருமை எதையும் சேர்த்துக்கொள்ளாத காங்கிரஸ் கட்சியைப் பார்த்து, 'காங்கிரஸிடம் இருந்து இந்தியாவை விடுதலை செய்வோம்’ என்கிறது அந்தக் குரல். இந்தியா, இந்தியா என்று பேசுவதையே காங்கிரஸிடம் இருந்து தட்டிப் பறித்து, 'இந்தியாவுக்கு வாக்களியுங்கள்’ என்று நரேந்திர மோடி படத்தைப் போட்டு விளம்பரம் செய்ததில் ஆரம்பித்தன வித்தைகள்!

குஷ்பு ஜாக்கெட் மாதிரி மோடி குர்தா பிரபலம் ஆகிவிட்டது. பி.சி.சர்க்கார் வைத்திருப்பது மாதிரி அவரிடம் மந்திரக்கோல் இல்லை. ஆனால், ஏக இந்தியாவையும் ஒரே நாளில் ஏற்றம் செய்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பை எகிறவைக்கத் துடிக்கிறார்கள். ராஜீவ் காந்தி வரும்போதும் அவரது கழுத்துப்பட்டி பட்டன் போட்ட கோட் 'நவீன இந்தியன்’ மாடலை நம் முன் நிறுத்தியது. மன்மோகன் பிரதமர் ஆகும்போதும், 'பொருளாதார மேதை ஒருவரின் கைகளால் இந்தியா சுபிட்சம் அடையும்’ என நம்பவைக்கப்பட்டது. இதோ வளர்ச்சியின் நாயகனாக, இப்போது நரேந்திர மோடி வாக்கு கேட்கிறார்.

அத்வானி 'தீவிரவாதி’யாக இருந்தபோது, மிதவாதியான வாஜ்பாயை நடத்தி அழைத்து வந்தார்கள். இப்போது அத்வானி மிதவாதியாக இருக்கும்போது, 'தீவிரவாதி’யான நரேந்திர மோடியை நாலு கால் பாய்ச்சலில் ஓடவிடுகிறார்கள். இந்த இடைப்பட்ட 15 ஆண்டு காலத்தில் மதத்தின் மார்க்கெட்டிங் வேல்யூ கூடியிருக்கிறது என்பதன் அடையாளம் இது. அதனை அறுவடை செய்யவே நரேந்திர தாமோதர்தாஸ் மோடி வருகிறார்.

நாளை அல்ல, இன்றைய பிரதமரே அவர்தான் என்று நம்பவைக்கப்பட்ட நரேந்திர மோடியின் பலவித பிம்பங்கள் இதோ:

1. காங்கிரஸ் வெறுப்பும் எதிர்ப்பும்!

காங்கிரஸ் கட்சி வாங்கி வைத்திருக்கும் அளவுக்கு அதிகமான வெறுப்பு, நரேந்திர மோடிக்கு நன்மை. ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், ஆதர்ஷ், நிலக்கரி... என, பணம் விளையாடிய இடங்களில் எல்லாம் கைகள் விளையாடியதால்தான் காங்கிரஸ் மீதான கசப்பு அதிகமானது. விலைவாசி, சீரான விகிதத்தில் இல்லாமல் எகிறியது. பெட்ரோல், டீசல் விலையை நினைத்து நினைத்துக் கூட்டினார்கள். புதிய பொருளாதாரக் கொள்கையால் உய்விக்க வந்திருப்பதாகச் சொன்ன மூன்று பொருளாதார மேதைகளால் (மன்மோகன், ப.சி., மான்டேக்சிங் அலுவாலியா) ரூபாயின் மதிப்பு வீழ்ந்ததுதான் மிச்சம்.

புதிய வேலைவாய்ப்புகள் இல்லை. இருந்த வேலைவாய்ப்பும் பறிபோனது. அந்நிய அச்சுறுத்தல் மிக மிக மோசம். காஷ்மீருக்குள் காலாற நடந்து வந்து தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். சீனா, நமது எல்லைகளையே தனது நாடு என்கிறது. தமிழக மீனவர்களைக் கொல்வதற்காகவே சிங்கள கடற்படைக்குச் சம்பளம் தரப்படுகிறது. இது எதையுமே கேட்காத காங்கிரஸ் மீதான எதிர்ப்பு, எதிரில் இருக்கும் இன்னொருவர் மீதான பாசமாகத்தானே மாறும்?

மோடிக்கு விழப்போகும் ஓட்டுக்களில் பாதி, காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுக்கள். காங்கிரஸை ஒழிக்க வேண்டும் என்பதற்காக விழப்போகின்றவை!

2. 'மிலிட்டரி ரூல் வேணும் சார்!’

'அரட்டை அரங்கம்’ ஆரம்பித்து 'நீயா..? நானா?’ வரை உற்றுக் கவனித்தால் தெரியும். இந்த நாட்டைப் பற்றி கோபம் கொப்பளிக்கப் பேசும் இளைஞர்கள் கடைசியில், 'நம்ம நாட்டுக்கு எல்லாம் ஜனநாயகம் சரியா வராது... மிலிட்டரி ரூல் வேணும் சார். நம்ம நாட்டை ஒரு சர்வாதிகாரி ஆளணும் சார்!’ என்பார்கள். அதற்குச் சுற்றிலும் உள்ள இளைஞர்கள் கைதட்டுவார்கள். இன்று இருக்கக்கூடிய பெரும்பாலான மாணவர்களுக்குத் தெரிந்த பெரிய அரசியல் இதுதான். எல்லா சர்வாதிகாரிகளும் உயிர் விளையாட்டுப் பிரியர்கள் என்ற வரலாறு தெரியாமல் சொல்லப்படுபவை இவை.

'பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது என்றால், இங்கு ஆட்சி நடத்துபவர்களிடம் வீரம் இல்லை; சிங்களக் கடற்படை கொல்கிறது என்றால், நம் மீது பயம் இல்லை’ என்றெல்லாம் மோடி பேசுவது இன்றைய மாணவர்களை, புதிய வாக்காளர்களை ஈர்க்கிறது. சுமார் 1,200 பேர் படுகொலை செய்யப்பட்ட 2002-ம் ஆண்டு குஜராத் நிகழ்வையேகூட, 'மதக் கலவரங்களை அடக்க எடுக்கப்பட்ட யுத்த நடவடிக்கை’ என்று இந்த இளைஞர்கள் நம்பவைக்கப்பட்டார்கள். 'சண்டை போடு, வெற்றிகொள்’ என்ற சினிமா மனோபாவத்தின் பிம்பமாக நரேந்திர மோடி இன்றைய இளைய தலைமுறை முன் நிறுத்தப்படுகிறார். அதனால்தான் அவர் பாட்னாவில் பேசுவதை 'லைவ்’ ஆக நெட்டில் மதுரையில் உட்கார்ந்து கல்லூரி மாணவர்கள் கவனிக்கிறார்கள்!

3. குஜராத் கனவு!

எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதான். 2002-ல் ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, குஜராத்தை இந்தியாவின் சொர்க்கபுரியாக மாற்றிவிட்டார் என்ற நினைப்பு, நாடு முழுவதும் விதைக்கப்பட்டது. குஜராத்திகள் பிறப்பால் தொழில் சமூகத்தினர். பிரிட்டிஷ் ஆட்சி கிழக்கு இந்தியக் கம்பெனி மூலமாக வர்த்தகம் செய்த காலத்திலேயே தொழிற்சாலைகள் தொடங்கியது இந்தப் பகுதியில்தான். ''மோடி, நன்கு சுழலும் தங்கச் சக்கரத்தைப் பெற்றார். அதை நிறுத்தாமல் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருப்பதுதான் மோடியின் சாதனை'' என்றார் சமூகவியலாளர் தீ பாங்கர் குப்தா. இதனை அமர்த்தியா சென் ஏற்றுக்கொள்ளவில்லை. ''குஜராத்தில் புதிய தொழிற்சாலைகள் வந்திருக்கின்றன. நிறைய சாலைகள் அமைத்திருக்கிறார்கள். கட்டுமானப் பணிகள் வேகமாக நடக்கின்றன. ஆனால், ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை இதை வைத்து மட்டுமே அளவிட முடியாது. 1,000 குழந்தைகள் பிறந்தால் மருத்துவ வசதி இல்லாமல் அதில் எத்தனை குழந்தைகள் குஜராத்தில் இறந்துபோகின்றன என்பதைப் பாருங்கள். அது கேரளாவைவிட மூன்று மடங்கு அதிகம். அதேபோல் கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் கேரளா, தமிழ்நாடு, இமாசலப் பிரதேசத்தை விடவும் குஜராத் பின்தங்கித்தான் இருக்கிறது'' என்கிறார் சென். மோசம், மிக மோசம் என்பதையே ஒவ்வொரு மாநிலமும் தங்கள் ஸ்டேட்டஸாக வைத்திருந்ததால் ஏற்பட்ட சலிப்பு, 'குஜராத் முன்னேறிவிட்டதோ... அதே ஃபார்முலா இந்தியாவுக்கும் பொருந்துமோ!’ என்ற நப்பாசை நம்பிக்கையை வளர்த்துவிட்டது!

4. தொழிலதிபர்களின் அதிபர்!

இந்தியத் தொழில் துறை வர்க்கம், தனக்குச் சாதகமான பிரதிநிதியாக மோடியைக் கணிக்கிறது. 'குஜராத்தில் தொழில் முதலீடு செய்யுங்கள்’ என்று மோடி அழைப்பதைப் போல வேறு எந்த மாநில முதல்வரும் அழைக்கவில்லை என்பது மட்டுமல்ல; அடிமாட்டு விலைக்கு நிலங்களையும், 0% வட்டியுடன் நிதி உதவியும் வேறு எந்த மாநிலமும் தர முன்வரவில்லை என்பதும் காரணம். சலுகைக்கு மேல் சலுகைகள் வழங்குவதன் மூலமாக பல்வேறு தொழிற்சாலைகளை மாநிலத்துக்குள் கொண்டுவரும் தந்திரத்தை மோடி கடைப்பிடிக்கிறார். இது தொழில் அதிபர்களுக்குச் சாதகமான அம்சம். ஒரு காலத்தில் பெரு முதலாளிகள் தரப்பு, அனைத்து இந்திய தேசியத்தைக் கட்டமைத்தது போலவே இப்போதும் இணைந்து செயல்பட்டு, மோடிக்கு ஆதரவு தருகிறது!

5. மோடித்துவா!

'நான் ஓர் இந்து தேசியவாதி. இன்னும் எளிதில் புரியும்வகையில் சொல்ல வேண்டுமானால், நான் இந்து என்பதால் இந்து தேசியவாதி’ என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டவர் நரேந்திர மோடி. இந்தியா என்பது பன்முகத்தன்மைகொண்டது. இந்தியாவின் பெருமை என்பதே வேற்றுமையில் ஒற்றுமைதான். ஆனால், 'இங்கு இருப்பது ஒரே ஒரு தேசியம்தான். அது இந்து தேசியம், அதுதான் இந்திய தேசியம்’ என்று சொல்லக்கூடிய தத்துவத்தின் பிரதிநிதியாக நரேந்திரமோடி தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதைப் பெருமையாக நினைக்கிறார். தனிப்பட்ட மோடி எப்படிப்பட்டவராகவும் இருக்கலாம். ஆனால், பன்முகத்தன்மைகொண்ட இந்தியாவின் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறவர், தன்னைப் பச்சையாக 'இந்து தேசியவாதி’ என்று அழைத்துக்கொள்வது சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலானது. சட்டம்-ஒழுங்கு கெடுமானால் நிம்மதி இழக்கக்கூடியவர்கள் பெரும்பான்மையினரும்தான். காங்கிரஸ் கட்சியை இந்திய நாட்டுப்பற்று காப்பாற்றுவது போல, தங்களை இந்து மதப்பற்று காப்பாற்றும் என்று மோடி நினைக்கலாம். ஆனால், மக்கள் நலன் சாராத இந்த மாயமாத்திரைகள், விரைவிலேயே அவலமாகக் கிழிந்து தொங்கும். அயோத்தி அலையில் 1999-ல் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க-வை 2004-ல் வீட்டுக்கு அனுப்பியவர்கள் 'இந்துக்கள்’தானே தவிர... சிறுபான்மையினர் அல்ல. இந்து பிம்பம் ஆட்சிக்கு வரப் பயன்படலாம். ஆட்சியை எப்போதும் காப்பாற்றாது என்பதற்கு உதாரணம்... வாஜ்பாய்!

6. தான், தான் மட்டுமே!

அரசியல் என்பதே, ஒருவரை வீழ்த்திவிட்டு இன்னொருவர் அதிகாரத்தை அடைவதுதான். அதைப் பச்சையாக, பட்டவர்த்தனமாக நடத்துபவராக நரேந்திர மோடி இருக்கிறார்.

சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு அத்வானி ரத யாத்திரை புறப்பட்டபோது, அதனை ஏற்பாடு செய்கிற பொறுப்பில் இருந்தவர் நரேந்திர மோடி. 23 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவம்தான் மோடியை குஜராத்துக்கு அறிமுகம் செய்தது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான 'ஏக்தா யாத்ரா’ என்ற ஒற்றுமை யாத்திரையை முரளி மனோகர் ஜோஷி நடத்தியபோது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மோடி முகம் அறிமுகம் ஆனது. இன்று மோடியால் வீழ்த்தப்பட்டுக்கிடப்பவர்கள் யார்? அதே அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும்தான். அத்வானியிடம் இருந்து 'பிரதமர் வேட்பாளர்’ என்ற மகுடத்தைப் பறித்து, ஜோஷியிடம் இருந்து அவருடைய தொகுதியைப் பறித்து மோடி ஆடியது தவறான ஆட்டங்கள். 'மோடி இல்லாவிட்டால் பா.ஜ.க. ஆட்சிக்கு வர முடியாது’ என்ற பிம்பத்தை உருவாக்கி, மற்ற தலைவர்கள் அனைவருக்குமே அவர்கள் பயப்படும் தொகுதிகளை ஒதுக்கி நரேந்திர மோடி செய்த வேலைகள், நரசிம்மராவ் காலத்தில்கூட காங்கிரஸில் நடக்காதவை.

மோடியை அரசியலுக்கு அழைத்து வந்தவர் சங்கர் சிங் வகேலா. இவர் தனது புல்லட்டில் எப்போதும் மோடியை உட்காரவைத்துக் கொண்டு குஜராத்தை வலம் வருவார். 1995-ம் ஆண்டு தேர்தலில் குஜராத் சட்டமன்றத்தை பா.ஜ.க. கைப்பற்றியபோது சங்கர் சிங் வகேலாதான் முதல்வராக இருந்திருக்க வேண்டும். ஆனால், அத்வானியிடம் இருந்த தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வகேலாவைத் தடுத்து கேஸுபாய் படேலை முதல்வர் ஆக்கினார் மோடி. கேஸுபாய் படேலை வாழ்த்தி... வகேலாவைக் கட்சியைவிட்டுத் துரத்தி... இத்தனையும் அத்வானி ஆசீர்வாதத்துடன் நடத்தினார் மோடி. 2002-ம் ஆண்டு குஜராத் படுகொலையால் தலைகுனிந்த பிரதமர் வாஜ்பாய், முதல்வர் மோடியைப் பதவி விலகச் சொன்னபோதும் தடுத்தவர் அத்வானி. ஆனால், அந்த அத்வானியின் பிரதமர் கனவைக் காவு வாங்கினார் மோடி!

பா.ஜ.க. ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் மோடி ஒரு பக்கமும், மற்ற அனைவரும் இன்னொரு பக்கமும் சக்கரத்தைச் சுழற்றுவார்கள். ஏனெனில், இரண்டாம் நபரோடு அரவணைக்கும் ஆளாக மோடி இல்லை!

7. சிறுபான்மையினர் சினம்!

இந்தியப் பிரிவினைக்குப் பின் நடந்த மிகப் பெரிய மதவெறிப் படுகொலை 2002-ல் குஜராத்தில்தான் நடந்தது. குஜராத் எப்போதும் அமைதிப் பூங்காவாக இருந்தது இல்லை. 1969-ல் 512 பேரையும், 1985-ல் 300 பேரையும், 1992-ல் 152 பேரையும் பலிவாங்கிய குஜராத், 2002-ல் சுமார் 1,200 பேரை (அரசுக் கணக்கின்படி!) புதைத்தது. கரசேவகர்கள் வந்த ரயில்பெட்டிக்குத் தீ வைக்கப்பட்டதால், எதிர்வினையாக இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று விளக்கம் சொன்னாலும், அரசும் போலீஸும் நினைத்திருந்தால், அந்தச் சாவுகளில் பாதியைத் தடுத்திருக்கலாம். 'எல்லாம் முடியட்டும்; இரண்டு நாட்கள் காத்திருப்போம்’ என்று கை கட்டி வேடிக்கை பார்த்தது மோடி அரசு. 'ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் நடந்தது என்பதால் எப்படிச் சமாளிப்பது என்று அவருக்குத் தெரியவில்லை’ என்று விளக்கம் சொல்கிறார்கள்.

'காரில் போய்க்கொண்டு இருக்கிறோம். ஒரு நாய்க்குட்டி மீது நம் கார் மோதி அது இறந்துவிடுகிறது. அப்போது நாம் வருத்தப்படுகிறோம் அல்லவா? அது போன்றதுதான் 2002-ம் ஆண்டு நிகழ்வும்’ என்று இப்போது சமாளிக்கத் தெரிந்தவருக்கு போலீஸைப் பயன்படுத்தத் தெரியாதா? 'ஒன்றின் எதிர்வினை இன்னொன்று’ என்று நியாயப்படுத்தினார் மோடி. இஸ்லாமியர் களையே தன்னுடைய பிராண்ட் அம்பாஸிடர்களாக மோடி நியமித்து பிரசாரம் செய்தாலும், அந்த மக்கள் மனதில் பயமும் பீதியும் படிந்திருப்பது மோடியின் உண்மையான சொரூபம் தெரியும் என்பதால்தான்!

மேலும், என்கவுன்டர் என்ற பெயரால் சிறுபான்மையினரைக் கொன்று தீர்த்த சம்பவங்கள் ரத்தம் உறையவைக்கின்றன. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 32 போலீஸ் உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும் அதிலிருந்து ஜாமீனில் வந்தவர்கள், ஒரு மாநில முதலமைச்சரையே குற்றம் சாட்டுவதும் இதுவரை இந்தியா பார்க்காதது!

8. மர்மங்களின் மனிதர்!

'நான் ஒரு திறந்த புத்தகம்’ என்று எல்லா அரசியல்வாதிகளும் சொல்லிக்கொள்வார்கள். ஆனால், யாரும் திறக்க முடியாத புத்தகமாக மோடி இருக்கிறார். திருமணம் செய்துகொள்ளாதவராக அவரைக் காட்டுகிறார்கள். 13 வயதில் ஜசோதாபென் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர் இவர் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு இரண்டு ஆண்டுகாலம் இமயமலைக்குப் போய்விட்டு, குஜராத் திரும்பினாலும், 32 ஆண்டுகள் தனது சொந்த வீட்டுக்கே வராமல்போனதால் அந்தப் பந்தம் அப்படியே அறுந்தது என்றும் சொல்லப்படுகிறது.

அந்தப் பெண் ஒரு பள்ளியின் ஆசிரியையாக வேலை பார்த்துள்ளார். மோடி, முதல்வர் ஆன பிறகு அவர் யார் பார்வையிலும் படாமல் மறைத்துவைக்கப்பட்டார். அவரை 2002-ம் ஆண்டுக்குப் பிறகு பேட்டி எடுக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். இன்று வரை அவரது இருப்பு, மறைமுகமாக இருக்கிறது. சமீபத்தில்தான் மாதுரி சோனியின் கதை பிரபலமானது. அந்தப் பெண்ணை 62 நாட்கள் குஜராத் உளவுத் துறை வேவு பார்த்தது, ஆந்திர சினிமாக்களை மிஞ்சும் ரியல் மசாலா.

மோடி அரசால் வஞ்சிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஐ.பி.எஸ். அதிகாரிகளான குல்தீப் ஷர்மா, ஸ்ரீகுமார், வன்சரா, சஞ்சீவ்பட், ராகுல் ஷர்மா, ரஜ்னீஷ் ராய் போன்றவர்கள் சொல்லும் கதைகள் பதற்றமானவை.

மோடிக்கு அடுத்த இடத்தில் இருந்த, 'அவருக்கு அடுத்து இவர்தான்’ என்று சொல்லப்பட்ட, அத்வானி மற்றும் அருண் ஜெட்லி ஆசீர்வாதம் பெற்ற குஜராத் வருவாய் துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா, திடீரென ஒருநாள் செத்துக்கிடந்த மர்மம் எத்தனையோ ஆண்டுகள் ஆகியும் இன்னும் விலகவில்லை!

9. கொள்கை என்ன?

'காங்கிரஸிடம் இருந்து விடுதலை’ என்று மோடி முழங்குகிறார். ஆனால், காங்கிரஸில் இருந்து பா.ஜ.க. எந்த வகையில் மாறுபட்டது என்பதை இன்று வரை விளக்கவே இல்லை. மாற்றம், வளர்ச்சி என்று மையமாகப் பேசுகிறாரே தவிர, தன்னுடைய கொள்கை, ஆட்சி நடத்தும் வழிமுறை பற்றி பேசவே இல்லை. புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தி 24 ஆண்டுகள் கடந்துவிட்டன. பொருளாதாரமும் நிதியும் கோமாவில்தான் கிடக்கின்றன. இதே பொருளாதாரக் கொள்கையைத்தான் (1998-2004) பா.ஜ.க. ஆட்சியும் பின்பற்றியது.

ஒரு காலத்தில் சுதேசி, சுதேசி என்று அதிகம் பேசியது பா.ஜ.க-தான். இன்று அதை மறந்தும் சொல்வது இல்லை. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அமல்படுத்தத் துடித்தது காங்கிரஸ் என்றால், 26 சதவிகிதம் முதலீடு வரலாம் என்றது பா.ஜ.க. அரசு. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக்கு வசதியான வழிமுறைகளை பா.ஜ.க. ஆட்சியே பாதைபோட்டுக் கொடுத்தது. காங்கிரஸும் ஆ.ராசாவும் அதற்குள் புகுந்து புறப்பட்டார்கள். லோக்பால், லோக் ஆயுக்தா பற்றி மோடி தெளிவுபடுத்தவில்லை. 'பலவீனமான பிரதமராக இருப்பதால் அண்டை நாடுகள் மிரட்டுகிறது’ என்கிறாரே தவிர, மோடியின் வெளியுறவுக் கொள்கை இன்னும் சொல்லப்படவில்லை. அண்டை நாடுகளுடன் சண்டைக்கு நிற்கப்போகிறோம் என்றால் ராணுவச் செலவு அதிகமாகி, இந்தியாவின் கடன் இரண்டு மடங்கு ஆகும் என்பதைத் தவிர பயன் இருக்காது.

மேடையில் ஏறுகிறார்; கையை வீசுகிறார்; கர்ஜிக்கிறார்; காற்றில் கலக்கிறது வார்த்தைகள். ஆனால், எதுவுமே மனதில் நிற்கவில்லை. வளர்ச்சி, மாற்றம் என்ற வாய்மொழி வார்த்தைகள் மட்டும் போதாதே!

10. யார் பிரதமர்?

இதில் என்ன சந்தேகம்? பா.ஜ.க-வுக்குப் பெரும்பான்மை கிடைத்தால், மோடிதான் பிரதமர். தனிப்பெரும்பான்மையை பா.ஜ.க. அடைய முடியாமல் போனால் மற்ற கட்சிகளின் ஆதரவைத் தேட வேண்டி வரும். அப்போது? 'நரேந்திர மோடியைத் தவிர வேறு யாரை முன்மொழிந்தாலும் நாங்கள் ஆதரிக்கத் தயார்’ என்று கட்சிகள் நிபந்தனை விதிக்கும். அப்போது பா.ஜ.க. என்ன முடிவு எடுக்கும்? ஆர்.எஸ்.எஸ். என்ன அறிவுரை சொல்லும்? இதை எதிர்பார்த்துத்தான் 87 வயதிலும் அத்வானி, காந்தி நகரில் நிற்கிறார். ராஜ்நாத் சிங், ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்றவர்கள் மோடியை சகித்துக்கொண்டு சும்மா இருக்கிறார்கள்.

இப்படி ஒரு சூழ்நிலை உருவாகுமானால் மோடி என்ன மாதிரியான முடிவு எடுப்பார் என்பதைக் கணிப்பது கஷ்டம். மோடி போன்ற ஒரு கேரக்டர் பிரதமர் ஆகிறார் என்பதை நினைத்தால், பலருக்கும் பயமாக இருக்கிறது. அவர் பிரதமர் ஆக முடியாமல்போனால் என்ன ஆகும் என்று யோசித்தால், அந்தப் பயம் இன்னும் அதிகமாகிறது!

ப.திருமாவேலன்

8 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

செருப்படிகள் ஏராளம் !

Ebrahim Ansari said...

//மோடிக்கு அடுத்த இடத்தில் இருந்த, 'அவருக்கு அடுத்து இவர்தான்’ என்று சொல்லப்பட்ட, அத்வானி மற்றும் அருண் ஜெட்லி ஆசீர்வாதம் பெற்ற குஜராத் வருவாய் துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா, திடீரென ஒருநாள் செத்துக்கிடந்த மர்மம் எத்தனையோ ஆண்டுகள் ஆகியும் இன்னும் விலகவில்லை!//

அழகிரி வீட்டு கக்கூசை கழுவிக்குடிக்கும் ஊடகங்கள் இருக்கும்வரை விலகாது.

தனி வாழ்வில் மனைவியை மணம் முடித்து கைவிட்டவர்

ஒரு இளம்பெண்ணை வேவு பார்க்க அரசு இயந்திரத்தை பயன்படுத்தியவர்

முஸ்லிம்களின் மண்டை ஓடுகளைக் கோர்த்து மாலையாகப் போட்டவர்

இன்னும் இவர் வாங்கவேண்டியது ஏராளம்.

Ebrahim Ansari said...

நரேந்திர மோடி எத்தனையோ தேர்தலில் நின்று வாக்கு கேட்டுள்ளார். அத்தனை தேர்தலிலும் தனது மனைவியின் பெயரை பூர்த்தி செய்யாமல் விட்டுள்ளார். தேர்தல் கமிஷனின் நெருக்குதலுக்குப் பிறகு இந்த தேர்தலில் முதன் முதலாக தனது மனைவி பெயரை பூர்த்தி செய்துள்ளார் நரேந்திர மோடி. இது தான் பெண் விடுதலையா?

இன்னொரு புறம் குஜராத்தில் ஒரு பெண்ணுக்காக முழு அரசு அதிகாரிகளும் உளவு வேலையில் ஈடுபடுகின்றனர். யாருக்காக இந்த வேலை? இது தான் பெண் விடுதலையா?

இத்தனையும் செய்து விட்டு டெல்லியில் வந்து இந்நாட்டில் பெண்கள் கொடுமைபடுத்தப்படுகிறார்கள் என்று மோடி வடிக்கும் கண்ணீர் நீலிக் கண்ணீர் அல்லவா?
= Rahul Gandhi.

இப்னு அப்துல் ரஜாக் said...

இன்றைய சூழ்நிலையில் நாம் செய்ய வேண்டியது இரண்டு.

ஒன்று இவன் மற்றும் இவன் வகையறா ஆட்சிக்கு வராமல் - அல்லாஹ்விடம் கை ஏந்துவது,

இரண்டு கைக்கு ஓட்டு போடுவது.(வாக்கு சிதரக் கூடாது )

ஒட்டகத்தையும் கட்டு,அதன் பாதுகாப்புக்கு அல்லாஹ்விடம் துவாவும் செய் என்பது நபி மொழி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஒட்டகத்தையும் கட்டு,அதன் பாதுகாப்புக்கு அல்லாஹ்விடம் துவாவும் செய் என்பது நபி மொழி. //

இந்த நபிமொழியை அறிந்த அழகிய கூட்டம், இன்று தட்டுகெட்டு தடுமாறிப் போய் மூடர் கூடாரமாக மாறி ஓட்டை பிரிக்கிறதே !

sheikdawoodmohamedfarook said...

கட்டிய மனைவியை கைவிட்ட பாதகனை நம்பி ஒட்டு போட்டால் நாட்டையும் நம்மையும் கைவிடுவான்.'' கை சின்னதிற்க்கே ஒட்டுபோடுவோம் !'' என்று கையடித்துக்கொடுப்போம்!

sheikdawoodmohamedfarook said...

// மூடர் கூடாரமாகி ஓட்டையும் பிரிக்கிறதே//தம்பி நைனால்தம்பி அபு இபுராஹிம் சொன்னது./ ஓட்டை மட்டும் பிரிக்கவில்லை! நட்டாற்று வெள்ளத்தில் தத்தளிக்கும் படகில் ஓட்டையும் போடுகிறது!

sheikdawoodmohamedfarook said...

மோடி கூட்டதிற்கு பெண்ணினம் வாக்களிப்பது தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்வதக்குதற்க்கு ஒப்பாகும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு