Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அம்மா நினைவுகள்! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | October 01, 2014 | , , , , , , ,

அம்மா நினைவுகள்
அற்றுப்போன ஆள் உண்டா -அவள்
அன்பில் நனையாமல்
விட்டுப்போன ஆண் உண்டா

எல்லா பிறப்பிற்கும்
அஸ்த்திவாரம் அம்மா
நல்லா வளர்த்தெடுத்து
ஆளாக்கும் அம்மா

கால்மடக்கி உதைத்த உதை-நான்
கருவறையில் வதைத்த வதை
பொறுப்பதிலே பூமி அவள்

வயிற்றைவிட்டு வந்த பின்னர் -அம்மா
தோள்களில் தொற்றிக்கொண்டேன்
எட்டெடுத்து வைக்கு முன்னர் -அம்மா
இடுப்பினிலே இடம் பிடித்தேன்

எது நடக்க மறந்தாலும்
எனக்காகத் தான்நடந்தாள்
கண்கண்ட காட்சிக்கெல்லாம்
கதைசொல்லித் தான்தந்தாள்

தட்டெடுத்துத் தந்த சோற்றில்
தாயன்பைப் பிசைந்துவைத்து
ஊட்டிவிடும் விரல்களில் -தாயின்
ஒட்டுமொத்த உயிரிருக்கும்

நான் உண்ண மறுக்கயிலே
மீந்துபோன பருக்கைகளே
தாய் உண்ண உணவாகும்
தாய் அன்பே உயர்வாகும்

உடன் அனைத்து உறங்க வைக்கும்
அம்மா அரவனைப்பில்
கருவறையின் கதகதப்பாய்க்
கணக்கிலடங்கா அருளிருக்கும்

நுங்குக் கோந்தை வண்டி ஓட்டி
எங்கு சுற்றி வந்தாலும்
தங்குமிடம் தாய்மடியே

தாய்மடியில் தலைசாய்க்க
நோய்நொடிகள் பலமிழக்கும்
உச்சிமோந்த முத்தத்திலே
பச்சிலையின் குணமிருக்கும்

கனிந்த முகம் மாறாமல்
கிழிந்த சட்டை தைத்துத்தரும்
புதுப் புடைவை விற்றேனும்
புத்தகங்கள் வாங்கித்தரும்

அம்மா அடித்துவிட்டால்
அற்பநேரம் வலியிருக்கும்-அதில்
ஆன்மாவை மேம்படுத்த
ஆயிரம் வழியிருக்கும்

அம்மா சொல்லித்தந்த
எல்லா ஒழுக்கத்திற்கும் தலை
அல்லாஹ் பெரியவன் என்னும்
ஆன்மீக வழிகாட்டல்!

படைத்தவன் அருட்கொடையில்
பிடித்தது என் அம்மா - என்னுடன்
இருப்பதனால் தானே -வாழ்வில்
விருப்பமும் என்பேன் நான்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

15 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

'அம்மா' அரசியல் செய்யத் தெரியாத அம்மா(வுக்கு) !

உருகும் கவிதை.... அழகிய தாலாட்டு..

ஆருயிர் அம்மா (கண்) உறங்குவதில்லை தனது மக்களை நினைத்து !

அரசியல் அறியா அம்மாவுக்கு பாதிப்பென்றால் (சில)பிள்ளைகள் போராடுவதே இல்லை !

இப்னு அப்துல் ரஜாக் said...

இந்த அம்மா

நல்ல அம்மா

ஜெயிலுக்கும் போகாத

பெயிலுக்கும் அலையாத

அம்மா !

நம் அனைவரின் அம்மா - வாழ்க

Unknown said...

தந்தையின் எழுத்தை பெயரில் சேர்த்துக்கொள்ளும் நாம்
ஒருநாள்கூட தந்தை நாடு ,தந்தை மொழி என்று சொல்லுவது
இல்லை.ஹதீஸ்களில்,ஒரு மனிதன் தாயுக்கு மிகவும் கடமை
பட்டவன்என நபி(ஸல்) மூன்றுமுறை அறிவிக்கிறார்கள்,நான்காவது
இடம்,தந்தை என்கிறார்கள். மேலும்,ஒருவன்,தாய்,தந்தை இருவருமோ
அல்லது ஒருவரயோ பெற்றும் சொர்க்கம் செல்லாதவன்,நாசமடைவானாக
என்று மலக்குகள் கூற நபி(ஸல்) ஆமீன் கூறியுளார்கள்.
ஹதீஸ்களில்,சில பாவங்களுக்கு உலகில் தண்டனை உண்டு
அதில் முக்கியமானது இருவரயும் கவனிக்காமல் விடுவது என குறிப்பிட
படுகிறது.
ஒரு கவிங்கன் இப்படி எழுதினான்
தான் கட்டிய இல்லதிதிற்கு
அன்னை பெயரை வைத்து
அன்னையை முதியோர்
இல்லத்தில் வைத்தான் என்று
நம் வரலாறு அறியாதவன் மனிதன் அல்ல,என் தாயை
நினைக்க வைத்த உங்களையும்,கவிதையையும்
மனதார வாழ்துகிறேன்

Shameed said...
This comment has been removed by the author.
N. Fath huddeen said...

ஜோ! இந்த நேரத்தில் எந்த அம்மாவைப் பற்றிச் சொல்கிறீர்கள்?
"என் அம்மா" என்றால் தலைப்பை கொஞ்சம் மாற்றி போடுங்களேன் இப்படி: "உம்மா நினைவுகள்" என்று!

///வயிற்றைவிட்டு வந்த பின்னர் -அம்மா
தோள்களில் தொற்றிக்கொண்டேன்
எட்டெடுத்து வைக்கு முன்னர் -அம்மா
இடுப்பினிலே இடம் பிடித்தேன்

இந்த வரிகளை நான் பன்மையாக பார்க்க விரும்புகிறேன்.

வயிற்றைவிட்டு வந்த பின்னர் -அம்மா
தோள்களில் தொற்றிக்கொண்டோம்
எட்டெடுத்து வைக்கு முன்னர் -அம்மா
இடுப்பினிலே இடம் பிடித்தோம்///

பிடித்த வரிகள்:

தட்டெடுத்துத் தந்த சோற்றில்
தாயன்பைப் பிசைந்துவைத்து
ஊட்டிவிடும் விரல்களில் -தாயின்
ஒட்டுமொத்த உயிரிருக்கும்

Shameed said...

அம்மா என்றதும் பெங்களூர் நினைப்பு வந்து கட்டுரையை படித்தால் உம்மாவின் நினைப்பு வந்தது

sabeer.abushahruk said...

சகோஸ்,

உம்மா நினைவுகள்தான்.

ட்ரெண்டுக்கேற்ப அம்மா என்று போட்டதே அறக்கப்பறக்க வரவைக்கத்தான்.

Ebrahim Ansari said...

எங்கு நோக்கினும் கேட்கினும் அம்மா என்ற அலறல் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்த அலறல்கள் எல்லாம் உளறல்கள் .

சில வார்த்தைகளுக்கு உண்மை அர்த்தமும் அதன் புனிதமும் தெரியாமல் போய்விட்ட நேரத்தில்

உண்மை அர்த்தத்தையும் புனிதத்தையும் புரியவைக்கும் கவிதை.

தமிழ்நாட்டில்தான் இப்படிப் பட்ட பட்டப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. பல நாடுகளை வென்ற அலெக்சாண்டரை சரித்திரம் மாவீரன் என்று அழைக்கிறது. தமிழ்நாட்டில் இருபது அடியாட்களை கூட வைத்திருந்தால் அவனுக்குப் பெயர் மாவீரன்.

மாங்காய் மடையனுக்கு மதியழகன் என்று பெயர் சூட்டப்படுவதும் இங்கே தான்.

இன்று தீர்ப்பின் நகலைப் படித்துப் பார்த்த போது உம்மாவின் பொட்டிபீஸ் மேல்துணியை போர்த்திக் கொண்டால்தான் தூக்கமே வரும் என்று பழகியவர்களுக்குக் கூட அந்த வார்த்தை எவ்வளவு தரமற்றதாகப் போய்விட்டது என்று எழும் வேதனையைத் தடுக்க இயலவில்லை.

N. Fath huddeen said...

இறந்துவிட்ட நம் தாய்களுக்கும் தந்தைகளுக்கும்

அல்லாஹும்மக்பிர்லி ஆபாயினா வ உம்மஹாதினா.

இப்போது நாம் இதைத் தான் (துஆ) செய்ய முடியும்.

ZAEISA said...

அம்மா நினைவுகள் என்றதுமே ஏக்கர்களும்,எண்டர்பிரைசஸ்கள் பட்டியல் காணும் ஆவல்தான் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும்.இப்பவுள்ள ட்ரெண்ட் ல நிறைய பேருக்கு தன்னை பெத்த உம்மாவை நினைக்க வச்சுட்டிய ..........ஜசக்கல்லாஹ் ஹைர்

Your One Stop Pre-Post Press Printing Solutions Destination said...

தன்னலம் பாரா “அம்மா” பாசத்தை சொல் கொண்டு வடித்து மனதை பிழிந்து எடுத்து இருக்கின்றீர்கள்

/தாய்மடியில் தலைசாய்க்க
நோய்நொடிகள் பலமிழக்கும்
உச்சிமோந்த முத்தத்திலே
பச்சிலையின் குணமிருக்கும்// வாவ் உண்மையும் கூட

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சபீர் காக்காவின் உம்மா பற்றிய கவிதை என்னை கண்ணீர் வடிக்கச்செய்தது.

சென்ற ஆண்டு என் அருமை உம்மாவை இழந்து விட்டு பிறர் அறிந்தும் அறியாமலும் தவியாய் தவித்துக்கொண்டிருக்கிறேன்.

கணவன், பிள்ளை குட்டிகள் வயிறார சாப்பிட்டு விட்டு எஞ்சியதை உண்டு மிஞ்சிய காலத்தை கழித்த உம்மாவே இனி நான் உனை எங்கு காண்பேன்?

திருச்சியிலிருந்து மருத்துவர்களெல்லாம் நம்பிக்கை இழந்து மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் ஊர் திரும்பும் நண்பகல் வேளை நடுவில் கிடத்தப்பட்ட உம்மா உட்கார்ந்து கொண்டு வேதனையோடு சற்று கண் அயர்ந்த என்னை பார்த்து சொன்னது "யாந்தம்பீ! உக்காந்துக்கிட்டே தூங்குறா? நல்லா படுத்துக்கிட்டே தூங்கே" என்று இறக்கும் தருவாயிலும் கூட பிள்ளை நலன் பேணும் உம்மாவுக்கு என்றும் என் இனிய துஆக்கள் சென்றடையட்டுமாக.....ஆமீன்.

Unknown said...

தெரசா நினைவுக்கு வருகிறார்
தன் அறக்கட்டளைக்கு நிதியுதவி
கேட்டு பணக்காரர் ஒருவரிடம்
தன் கையை நீட்டினார்,அந்த கை
களுக்கு எச்சில் மூலம் பரிகாரம்
செய்யப்பட்டது தெரசா அந்த கையை பின்புறம் மறைத்துக்கொண்டு எனக்கு
வழங்கியதை நான் பெற்றுக்கொண்டேன்,என் அறக்கட்டளைக்கு நிதியுதவி
செய்யுங்கள் என அடுத்த கையை
நீட்டினார் அந்தகைக்கு அவருடைய
சொத்தில் பாதி அறக்கட்டளைக்கு
கிடைத்தது
கவிங்கன் அதனை இப்படி வரைகிறான்
அன்னை தெரசாவே நீ
கருவுற்றிருந்தால் சில குழந்தைக்கு
தாயாகி இருப்பாய் கருமைவுயுற்றதால் அனைவருக்கும் தாயாகி விட்டாய்

sabeer.abushahruk said...

அன்புச் சகோதரர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உம்மா நம்முடன் இருக்கும்போது அவர்கள் இருப்பின் அருமை பெரும்பாலான நம்மவர்களுக்குப் புரிவதில்லை. அவர்கள் இறந்துபோன பிறகு அவர்களை எண்ணி கலங்குகிறோம்.

ஒரு மனிதனுக்காக யார் இறைவனிடம் துஆச் செய்தால் அது கபூல் ஆவதற்கு அதிகவாய்ப்புகள் உல்ளதோ அது பெற்ற அன்னையே என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

உம்மாவை இழந்தவர்கள் அவர்களின் ஆகிர வாழ்விற்காக துஆ செய்யுங்கள.

உம்மா இருக்கப்பெற்ற பேரதிர்ஷ்டசாலிகள் உம்மாவை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள், வசதி வாய்ப்பு காசு பணத்தைக் கொண்டல்ல...

உம்மா முகத்தை அடிக்கடி பாருங்கள்;
உங்கள் முகத்தை உம்மா நன்றாகப் பார்க்க விடுங்கள்;
உம்மா உம்மா என்று வாய் நிறைய அடிக்கடிக் கூப்பிடுங்கள், உங்களைத் தொட விடுங்கள், முடிந்தால் என்னைப்போல் அப்பப்ப மடியில் படுத்துக்கொள்ளுங்கள், கால்களைப்பிடித்து விடுங்கள் இன்னும் மெல்ல அனைத்து உச்சிமோந்து விடுங்கள்!

ஏனெனில், இவற்றால் கிடைக்கும் நிம்மதியை (அல்லாஹ்வைத்தவிர)எந்தக் கொம்பனுக்கும் எதுவும் வேறு யாரும் தந்துவிட முடியாது, முடியாது, முடியவே முடியாது.

உம்மா நினைவுகளில் கலந்துகொண்டு கருத்திட்ட உங்கள் அனைவரின்மீதும் அதிரை நிருபர் சொந்தங்கள் மீதும் மற்றும் ஈமான்கொண்ட அனைவர்மீதும் உங்கள் உம்மாவின் துஆ நிலைக்கட்டுமாக.

வஸ்ஸலாம் (கிரவுன் எங்கே?)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///உம்மா நினைவுகளில் கலந்துகொண்டு கருத்திட்ட உங்கள் அனைவரின்மீதும் அதிரை நிருபர் சொந்தங்கள் மீதும் மற்றும் ஈமான்கொண்ட அனைவர்மீதும் உங்கள் உம்மாவின் துஆ நிலைக்கட்டுமாக.///

ஆமீன்...!

வஸ்ஸலாம் (கிரவுன் எங்கே?)

அதானே?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.