ஆம், இது பலருக்குப் புதினமாகத் தோன்றலாம். இது அதிரை வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒன்றாகும். நாங்கள் உயர்நிலைப் பள்ளிக் கூடத்தில் படித்துவந்த காலத்தில், “இந்தி ஒழிக! இந்தி ஒழிக!” என்று தமிழ்நாடு முழுவதிலும் மக்களாலும் மாணவர்களாலும் கூக்குரல் ஒலிக்கப்பட்டிருந்த நிலையில், எங்கள் மூத்தோர் இந்தி படிப்பதன் கட்டாயம், வேலை வாய்ப்புகள் பற்றியெல்லாம் ஆர்வமூட்டவே, பள்ளி மாணவர்கள் அந்த மொழியைக் கேவலப்படுத்திக் குரலெழுப்பியபோதும், என்னைப் போன்ற ஒரு சிலர் மட்டும் அந்த மொழியின் மீது காதல் கொண்டோம்.
அத்துடன் நிற்கவில்லை. அதில் ‘ட்யூஷன்’ படிப்பதிலும் ஆர்வம் கொண்டு, இந்தி வாத்தியார் (பிராமணர்) கீழத்தெரு வீட்டுக்குப் போய் ‘ட்யூஷன்’ படித்தோம். இது, ஹிந்தி மொழியைக் கற்ற அனுபவம். அந்த நேரத்தில் என்னிடமிருந்த மொழி ஆர்வத்தில், குர்ஆனின் ஹிந்தி மொழிபெயர்ப்பை பம்பாயிலிருந்து தருவித்துப் படிக்கத் தொடங்கினேன். அந்த நூல் இன்றுவரை எனது நூலகத்தில் உள்ளது!
தலைப்பில் காணும் ‘உர்து’ப் பள்ளிக்கூடம் எந்தச் சூழலில் தொடங்கப்பட்டு நடந்து வந்தது? நாங்கள் சின்ன்ன்ன்னப் பருவத்தில் இருந்தபோது நடந்த நிகழ்வு அது.
நடுத்தெரு மரைக்கா பள்ளிக்குச் செல்லும் வீதியில், இப்போது மேலத்தெரு ஜமாலாக்கா வைத்திருக்கும் ரொட்டிக் கடைக்கு நேராக உள்ள இப்போதையப் புது வீடுதான் உர்துப் பள்ளிக்கூடத்தின் அமைவிடம். அது மூன்று நீளமான அறைகளைக் கொண்ட ‘கிட்டங்கி’. ஒவ்வொரு பருவத்திலும் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களைப் பாதுகாத்து வைக்க உதவும் Godown. அதன் வராந்தாவில்தான் உர்துப் பள்ளி நடந்துவந்தது. அப்பள்ளி நிறுத்தப்பட்ட பின்னரும், பல்லாண்டுகளாக அப்பள்ளியின் கரும்பலகை சுவரில் இருந்ததை நான் கண்டுள்ளேன்.
நாகூரிலிருந்து புலம் பெயர்ந்தவர் என்று சொல்லப்பட்ட - ‘ஹஸன் தாரா மொவ்லானா’ என்று அறியப்பட்ட - அந்தக் காலத்து ‘சேலாசக் கைலி’ உடுத்திய - நெடிய உருவம்தான் பள்ளியின் உஸ்தாது. எங்கள் காக்காமார், மாமாமார் எல்லாரும் அந்தப் பள்ளியில் பாடம் படித்தவர்கள்தாம். மொழி என்ற வகையில் உர்துவும் ஹிந்தியும் (லிபி)யைத் தவிர வேறுபாடற்ற மொழிகள்தானே? என்னைவிட வயதில் மூத்தவர்கள் அந்தப் பள்ளிக்கூடத்தில் உர்து படித்த அனுபவத்தால் தான், பிற்காலத்தில் பம்பாய்க்குப் போய் ‘சக்கைப் போடு’ போட்டுச் சம்பாதித்தார்கள்.
இந்தப் பள்ளிக்கூடம்தான் அவர்களை உர்து மொழியை எழுதப் படிக்கத் தகுதியானவர்களாக உருவாக்கிற்று. பெண் பிள்ளைகளுக்கு இந்தப் பள்ளியில் சேர்ந்து படிக்க அனுமதியிருக்கவில்லை! பாவம்!
எங்கிருந்தோ வந்தவர்! நமதூரில் வந்து வாழத் தொடங்கிய பின்னர், தமது மொழியான உர்துவைப் பொது மக்களுக்குப் படித்துக் கொடுக்கும் ஆசிரியப் பணியைத் தொடங்கி, மொழிச் சேவையும் மார்க்கச் சேவையும் செய்த ஹசன்தாரா மவ்லானா இந்த மண்ணிலேயே மறைந்தார்கள். அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை உயிரோடிருக்கும் பாக்கியம் பெற்ற அதிரைவாசிகள் தமக்குக் கிடைத்த கல்விச் செல்வத்தை, உர்து மொழியைப் பேசவும் எழுதவும் திறமை பெற்றுள்ளதை, அதற்கு உதவியாருந்த தம் ஆசானை நன்றியுடன் நினைவுகூர்கின்றார்கள்.
இப்படி, பிறமொழி பேசிய ஆசிரியப் பெருந்தகைகள் இன்னும் பலர் இந்த மண்ணில் சேவையாற்றியுள்ளனர். சுல்தான் வாத்தியார், தலைப்பாகை கட்டிய ஒன்றைக்காசு வாத்தியார், உர்து வாத்தியார் (செய்யது அஹ்மது) முதலானோர் இந்த மண்ணில் கல்விச் சேவை புரிந்துள்ளனர். நாம் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்லவே, அந்த மொழி நம் மீது திணிக்கப்படாதவரை.
இக்காலத்தில் இளம் மவ்லவிகள் வெளியூர் மதரசாக்களில் சென்று பயின்றும் உர்து மொழியைக் கற்றுக் கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த மொழியறிவைப் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் அந்த மொழியை மறந்துவிடுகின்றனர்.
இத்தாலிப் பழமொழியொன்று இவ்வாறு கூறுகின்றது:
“இரண்டு மொழிகளைக் கற்றவன் இரண்டு மனிதர்களுக்குச் சமமானவன் ஆவான்.” இது எத்துணை உண்மையானது என்பதை வெளிநாடுவாழ் மக்கள் உணர்வார்கள் அன்றோ?
அதிரை அஹ்மது
9 Responses So Far:
பன்மொழி அவசியம் குறித்த அருமையான பதிவு.
அரசியல்வாதிகளின் வெற்றுக் கூச்சலை பொருட்படுத்தாமல் நாம் இந்தி கற்க வேண்டும்.நம் வேதம் திருக் குர்ஆன் மற்றும் நம் தலைவர் அண்ணல் நபிகள் ஸல் அவர்களின் மொழியாகிய அரபியும்,உலக மொழி ஆங்கிலமும்,தாய் மொழி தமிழும் ஆக நாம் 4 மொழிகளை இன்ஷா அல்லாஹ் கற்று புலமை பெற வேண்டும்.
அருமை! அருமை!!
ஒரு பதிவுக்குள் பல்வேறு வரலாற்று புதையல்களை தோண்டி எடுத்து பகிரும் அஹமது காக்காவிடமிருந்து இன்னும் பல அரிய வரலாற்று செய்திகளை எதிர்பார்க்கின்றோம்.
//இக்காலத்தில் இளம் மவ்லவிகள் வெளியூர் மதரசாக்களில் சென்று பயின்றும் உர்து மொழியைக் கற்றுக் கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த மொழியறிவைப் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் அந்த மொழியை மறந்துவிடுகின்றனர்.//
உர்து தெரிந்த இளம் மவ்லவிகள் மூலம் மீண்டும் உர்து வகுப்பு தொடங்கி நடத்தினால் வட இந்தியா,மற்றும் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் நம் இளைஞர்களுக்கு பயனாக இருக்கும். உர்து மொழி தெரிந்தவர்கள் அதனை மறக்காமல் இருக்க உதவியாக இருக்குமே! அதற்கு ஏற்பாடு செய்யலாமா?
கூடுதல் மொழிகளைக் கற்றுக்கொள்வதன் மூலம், சுருங்கிப்போய்விட்ட இப்பூமியின் எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்றாலும் தன்னம்பிக்கையோடு செல்ல முடியும்.
உருது எழுத்துருக்கள் அரபியை ஒட்டி இருப்பதால் குர் ஆன் ஓதத் தெரிந்த முஸ்லிமுக்கு கற்றுக் கொள்வதும் இலகுவாகும்.
சிறப்பான பதிவுக்கு நன்றி.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா.
மொழி வெறி விதைத்த காலத்திலேயே, உயர்ந்து நிற்க உதவிட இன்னொன்றாக இருந்த உர்து மொழி கற்றச் சூழலாலும் அதனை அதிரை வரலாற்றுச் சுவடுகளை ஆவணப்படுத்த உதவும் மிகச் சிறப்பான பதிவு.
இன்று அதிகமான நாடுகளில் பேசப்படுவது French, இதை இப்போது நம் பள்ளிகளில் அறிமுகப்படுத்தினால் இன்ஷா அல்லாஹ் வரும் தலைமுறை பல மொழி கற்றவராவார்கள்.
Assalamu Alaikkum
Respected brother Mr. Ahmed,
Thanks a lot for information regarding older language teaching legends. I would like to remember and appreciate my beloved English language teachers Mr. Liyaqath Ali sir, Mr.Aliyar sir, Mr. A Fransis sir, Mr. Iqbal sir, Mr. Ali sir, Mr. Bargath sir, Mr. Batcha sir, Mr. S. Parthasarathy sir (taught English along Physics), Mr. Mohideen sir. And arabic teachers Mr. Jakir Hussain and Humayun khan.
May Allah bless them all.
B. Ahamed Ameen from Dubai
//இன்றுஉலகில்அதிகம்பேசப்படுவதுfrench.....//தம்பிஅப்துல்மாலிக்சொன்னகருத்தையேநான்கூறவிரும்புகிறேன். சர்வதேசஅளவில்ஆங்கிலமும்பிரெஞ்சும்இருகண்களைப்போல.ஆனால் உருதுமொழியோஒருகுறிப்பிட்டமதத்தவராலும்குறிப்பிட்டஎல்லைக் குள்ளும்மட்டுமேதன்ஆதிக்கத்தைசுருக்கிகொண்டது.எனவேஅதைகற்க செலவிடும்நேரத்தைபிரெஞ்சைகற்கசெலவிட்டால்பலன்பெறலாம்என்பது எனதுகருத்து.
//இன்றுஉலகில்அதிகம்பேசப்படுவதுfrench.....//தம்பிஅப்துல்மாலிக்சொன்னகருத்தையேநான்கூறவிரும்புகிறேன். சர்வதேசஅளவில்ஆங்கிலமும்பிரெஞ்சும்இருகண்களைப்போல.ஆனால் உருதுமொழியோஒருகுறிப்பிட்டமதத்தவராலும்குறிப்பிட்டஎல்லைக் குள்ளும்மட்டுமேதன்ஆதிக்கத்தைசுருக்கிகொண்டது.எனவேஅதைகற்க செலவிடும்நேரத்தைபிரெஞ்சைகற்கசெலவிட்டால்பலன்பெறலாம்என்பது எனதுகருத்து.
இந்த கருத்து மேற்கத்திய நாடுகளை நோக்கி செல்பவர்களுக்கு சரியாக இருக்கலாம். ஆனால் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி செல்பவர்களுக்கு உர்து தான் சரி. ஏனெனில் இந்திய துணைகண்டம் முழுவதும் உர்துவும் ஹிந்தியும் தான் ஆட்சி செய்கிறது. ஆகவே, உர்து தான் வேண்டும்.
Post a Comment