ஊரில் மழையாமே ! என்றாலே போதுமே, அதிரைநிருபரின் ஆஸ்தான கவி அவர்களின் கவிதைகள் தான் மனதில் கரைபுரண்டு ஓடும் ! வாநிலை அறிவிப்பு நிலையம் சொல்லும் ஆருடம் பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் ! அதனை சிலர் பழிக்கவும் செய்யலாம். எது எப்படியிருப்பினும் அதிரையில் நல்ல மழை ! :)
இங்கு பதிக்கப்பட்டிருக்கும் பச்சைப் பசேல் படங்களுக்கும் தலைப்பில் இருக்கும் போஸ்டர் செய்திக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள் !
படங்களில் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டியிருப்பது போன்ற பிரம்மை ஏற்பட வில்லை என்றால், அதிரை மன்சூர் அவர்கள் எழுதிய 'கண்கள் இரண்டும்' தொடரை இடரில்லாமல் படிக்கத் தவறி விட்டீர்கள் என்று பொருள் கொள்ளப்படும் !
ஊரில் மழையாமே
மற்றொரு மழை நாளில்...
மடித்துக் கட்டிய லுங்கியும்
மடக்குக் குடையுமாய்
தெருவில் நடந்த தினங்கள்...
கச்சலில் கட்டிய
புத்தக மூட்டையும்..
"அடை மழை காரணமாக
பள்ளி இன்று விடுமுறை"யென-
தேனாய் இனித்த
கரும்பலகையும்...
சற்றே ஓய்ந்த
மழை வரைந்த
வானவில்லும்...
சுல்லென்ற
ஈர வெயிலும்...
மோதிரக்கல் தும்பியும்...
கருவேலும்
புளிய மரமும்
சேமித்த மழையும்
கிளையை இழுக்க
சட்டென கொட்டி
நனைந்த உடையும்...
க்ஷைத்தானுக்கு கல் எறிந்த பின்
சுப்ஹுத் தொழ
ஜன்னல் தட்டிய நண்பனும்...
வரப்பு வழியும்
பல்ல குளமும்
வேட்டி அவிழ்த்து
உடம்பு தேய்க்கையில்
சட்டென தெரிந்த
நண்பனில் ???? ...
மழையில் நனைந்த
"இன்று இப்படம் கடைசி"யும்...
கன்னி வைத்து காதிருந்த
உப்பளங்களும்...
பள்ளியில் போட்ட
குட்டை போல
கால்களை இழுத்து நடந்த
தற்காலிக ஓடைகளும்...
முட்டாள் சாதகத்தால்
பாம்பை அழைக்கும்
நுழலும்...
மழையில் நணைந்த இரவில்
குழல் விளக்கில்
முட்டி முட்டி பால் குடிக்கும்
விட்டிலும்...
மழை நீருடன்
முயங்கிச் சிவந்த
தண்டவாளத் தடமும்...
தட்டுத் தடுமாறிய நடையும்...
சென்னை ரயிலுக்கு
வழிவிடுகையில்
கை காட்டிய குழந்தையும்...
மழையால்
ஊரில்
இயல்பு வாழ்க்கை பாதிப்பாமே?
பொய்யும் புறமும்-
கடனும் பற்றாக் குறையும்-
சன்டையும் சச்சரவும்-
வெட்டிப்பேச்சும் வீண் வம்பும்
என்ற-
இயல்பு வாழ்க்கையை விட
மழையால்
பாதிக்கப்பட்ட வாழ்க்கை
மேல் அல்லவா?
சபீர் அஹ்மது அபுசாஹ்ரூக்
அதிரைநிருபர் பதிப்பகம்
11 Responses So Far:
ஆஹா எனக்குள் மழை
ஆஹா சபீர் காக்காவின் அழஹாதிய கவி வரிகள்.
ஊரில் மழைக்கால இரவு நிலா அந்த கார் மேகப்போர்வைக்குள் புகுந்து, புகுந்து உலகோடு கண்டு விளையாட்டு விளையாடும். அதை அப்படியே அழகுற தன் மேனியில் படம் பிடித்து தெரு குளங்கள் ஊருக்கே காட்டி மகிழும். அதை ரசிக்கும் எம் கண்ணுக்கு குளுவும்......
ஆஹா...
அற்புதமான மழைப்படங்கள். மழை(லை)த்துப்போனேன். ஒவ்வொரு படமாகப் பார்த்துவர கணினியின் திரை ஈரமானதுபோலவும் என் மூக்கு நுனியில் சாரல் அடித்ததுபோலவும் ஒரு பிரம்மை ஏற்பட்டதற்குக் காரணம் படங்களின் யதார்த்தமே.
அபு இபு,
மழை பெய்யும்போதே எடுத்ததா அல்லது மழையை நிறுத்தி வைத்துப் போஸ் கொடுக்கச் சொல்லி எடுத்ததா?
பாராட்டு யாருக்கு? இபுவுக்கா அவனின் அபுவுக்கா?
மழை என்றாலே மனத்துள் வெள்ளம்போல் குதூகலம் பொங்கி வழியும்.
இரவின் இருளில்
மழை பெய்வதில்லை
அதன்
பேச்சுச் சப்தம் மட்டுமே
கேட்டுக் கொண்டிருக்கும்
மட்டுமல்ல
கைதட்டல்களோடான
தேர்ந்த
மேடைப் பேச்சாக அட்டகாசமாகவோ
சிறுபிள்ளைகளின்
தேர்வு நேர
மன்னச் சப்தமாகச் சீராகவோப்
பேசிக்கொண்டிருக்கும்
விடிகாலையில் விழிப்பதற்குள்
சாளரங்களின் கதவிடுக்குகளில்
கதிரவன் கசிய
வெளியே
காற்று கருவுற்றிருக்கும்
சாரலோ தூறலோ
மண்ணில்
ஈரமிருக்கும்
மழை
நனைத்தாலும் அழகு
மழையை
நினைத்தாலும் அழகு
மழையைக்
காண்பதுபோல்தான்
கேட்பதுவும் மகிழ்ச்சி!
மொத்தத்தில்
மழை பெய்தாலும் பிடிக்கும்
பேசினாலும் பிடிக்கும்!
இன்னொன்று
சட்டென ஒரு மழையிரவு:
இடி மின்னல் நடத்திய
ஒளியும் ஒலியும்
முடிவதற்குள்
திரை இறங்கியது...
மழை!
கூறையில் நடத்திய
தாளக் கச்சேறி முடிந்து
மூட்டை முடிச்சுகளோடு
ஊருக்குப் போனது...
ஓடை!
பள்ளம் நோக்கிப்
பாய்ந்த வெள்ளத்தில்
படிப் படியாய்
மூழ்கிப் போனது
பக்கத்து வீட்டு
பாப்பாவின்...
கத்திக் கப்பல்!
கட்சி பேரம் பாராமல்
மழை நீர் சேகரித்தன
கூறை வீட்டின்...
தட்டு முட்டு சாமான்கள்!
மின்னல் வெட்டுக்குப் போன
மின்சாரமும்
ஜன்னல் சாத்தி வந்த
சம்சாரமும்
இன்வெர்ட்டரின் இயலாமையால்
வேகம் குறைந்த மின் விசிறியும்
என மழை வகுத்தது...
கோட்பாடுகள்!
விடிகாலையில்-
உப்பளங்களில்
உணவு கொத்தின...
உல்லான்கள்!
மற்றுமொன்ற்.
ஊரில் மழையென்றாலே
உவகை ஒட்டிக்கொள்ளும்
மனம் வெளுத்துச்
சுத்தம் செய்யும்
மார்க்கச் சொற்பொழிவாய்
சாலை யெல்லாம்
சலவை செய்யும்
சில்லென்ற மழைப்பொழிவு
மலைப்பா யுள்ளது
மலையில் பெய்யும்
மழையைப் படமெடுத்த
கலையின் நேர்த்தி
தொலைக்காட்சியில்
மழை கண்டு
அலைபேசியில் ஊரழைத்தால்
தொலைபேசியில்
சப்தமாய் மழை
சாளரம் வழியாக
சாரலாய் மழை
கூரையின் நுனியிலும்
குட்டிக்
குற்றாலமாய் மழை
கத்திக் கப்பல்களும்
காகிதக் கப்பல்களும்
கரை சேரவில்லையாம்
கனுக்கால் வரை மழை
மின்சாரம் வெட்டுப்பட
முட்டை விளக்கின்
மட்டுப்பட்ட வெளிச்சத்தில்
முகங்களில் மழை
அடைமழை காலத்தில்
குடையின்மேல் மழை
தடைபட்ட தூரலில்
உடையெல்லாம் மழை
முகிழ் முயங்கி
மழை பொழிந்து
மண் ணடைந்து
மடை வழிந்து
கட லடைந்து
கலக்கும்
வரை
நீரை
மழை என்றே அழை!
//ஊரில் மழைக்கால இரவு நிலா அந்த கார் மேகப்போர்வைக்குள் புகுந்து, புகுந்து உலகோடு கண்டு விளையாட்டு விளையாடும். அதை அப்படியே அழகுற தன் மேனியில் படம் பிடித்து தெரு குளங்கள் ஊருக்கே காட்டி மகிழும். அதை ரசிக்கும் எம் கண்ணுக்கு குளுவும்......//
எம் எஸ் எம்,
கவிதைக்கு மேற்சொன்ன ரசனைதான் ஆணிவேர். இதோ மற்றொரு வடிவத்தில் உங்கள் ரசனை?
மழையிரவு!
ஒற்றை விளக்கேந்தி
உலாப்போகும் நிலா
கற்றை ராப்போதில்
கார்மேகப் போர்வைக்குள்
கண்டும் ஒளிந்தும்
உலகோடு விளையாடும்
சற்றேனும் குறையாமல்
மொத்தமாய் அவ்வெழிலை
ஊருணியில் ததும்பும்
நீரினில் படம்பிடித்து
தெருக்குளங்கள் உருவாக்கும்
பிம்பத்தைக் காண்பது
இன்பத்தைக் கூட்டும்
கண்டாலே குளிரும் எம்
கண்களோ சிலிர்க்கும்!
கவிக் காக்கா.... சான்ஸே இல்லை...! ஊரில் மழையென்றால் உங்கள் காட்டில் வெள்ளம்...
எப்படித்தான் கரைபுரண்டு பொங்குதோ ! மாஷா அல்லாஹ்...!
தேடிச் சென்று கவிதை வாசிக்க வேண்டியதில்லை, நம்மை நாடி வந்து சுவாசிக்க வைக்கும் வித்தை உங்களிடமே...
கிரவ்னு : கவிதை வெள்ளப் பெருக்கு இங்கே - நீ எங்கே இருக்கே ? அணைபோடு உன் எழுத்து துணையோடு...
மறக்க வேண்டாம், ஜாஹிர் காக்காவின் வேண்டுகோள் ஒன்று பென்டிங்கில் இருக்கு... :)
Assalamu Alaikkum
Dear brother Abu Shahruk,
Your over pouring poetic lines are cool and chill, make us to feel the raining now.
Pictures are complementing and assisting to experience the chillness to our eyes.
Keep it up
B. Ahamed Ameen from Dubai.
அருமை வரிகள்.. அதற்கு தகுந்த சில்லென்ற படங்கள்..
மழை அருகில் இருந்தால் கதைக்க துணை தேவையில்லையாமே கவிஞரே உண்மையா?
ஊரில் மழை பெய்கிறதோ இல்லையோ உன் கவி மழைக்கு பஞ்சமில்லாமல் நனைந்து கொண்டு இருப்பது மனதிற்கு சந்தோசமாகத் தான் இருக்கிறது நண்பனே !
Post a Comment