Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

"என்பது, தொன்னூறுகளில் என் ஊர்" 20

அதிரைநிருபர் பதிப்பகம் | October 14, 2014 | , , , , , , ,



பழசை தனிமையில் நினைத்துப் பார்த்து நெஞ்சுக்குள் நமக்கு நாமே அவ்வப்பொழுது சிலாகித்துக் கொள்வதை அப்படியே இல்லா விட்டாலும் கொஞ்சமேனும் எழுத்துருவாய் இங்கு கொண்டு வந்து கிறிக்கிக் காண்பிப்பது என்பது சிரமம் தான். இருப்பினும் முயற்சித்துப் பார்ப்போம் என்ற எண்ணத்தில் அவை இங்கே கொஞ்சம் கிறுக்கி காண்பிக்கப்பட்டுள்ளன.

காலை வேளை சுபுஹுத் தொழுகைக்கு பின் ஊரில் நட்சத்திரங்கள் தன் இரவு டூட்டி முடிந்து மெல்ல,மெல்ல வானில் விடை பெற்று மறைந்து போகும். அந்த நீல வானமும் கொஞ்சம்,கொஞ்சமாய் சிவந்து, வெளுத்து விடிய ஆரம்பிக்கும். அதற்கு மரங்களில் அடைக்கலம் புகுந்திருக்கும் காக்கை, மைனா, சிட்டுக்குருவிகள் சுறுசுறுப்பாய் காச்மூச் என்று கத்தி அன்றைய பொழுதை அதற்கேயுரிய பிரத்யேக குரலில் விடியும்முன் வரவேற்கும்.

இவ்வளவு என வரையறுத்து இன்று கேட்டு வாங்கப்படும் பள்ளிக்கூட டியூசன் ஃபீஸ் போல் அல்லாமல் அன்று தானாகவே காலை குர்'ஆன் பள்ளி ஒஸ்தாருக்கு அன்பளிப்பாய் வாரமொருமுறை கொடுக்கப்படும் கம்சுகாசு (கமீஸ் வியாழன்).

நாளை கம்பனில் அயல்நாடுகளிலிருந்து வரும் உறவுகளை இறக்க இன்றே குதிரை வண்டிகள் முன்பதிவு செய்து வைக்கப்படும். மாமா கொண்டு வரும் அந்த கைக்கடிகாரம், மிட்டாய் சாமான்களுக்காக உற்சாகத்தில் அன்றைய இரவே உள்ளம் உறங்க மறுக்கும்.

காலை நாயக்கர் கடை இட்லி,வடை,சட்னி,சாம்பாருக்காக அணியணியாய் பெரியவர் முதல் சிறியவர் வரை அக்கடை நோக்கி நடக்க ஆரம்பிப்பர். குளத்தில் அல்லது தோப்பு போரில் சென்று நன்கு குளித்து வந்த பின் வீட்டில் வேறு காலை பசியாற தயாராக இருக்கும். அருணா பார் சோப்பு, அண்ணா பார் சோப்பும், குருவி சோப்பும் ஒன்றுக்கொன்று சந்தையில் போட்டி போடும்.

பத்திரிக்கைகளை நன்கு படித்து நாட்டு நடப்பு தெரிந்து கொள்வதற்கும் அதனுடைய இலவச வாராந்திர இணைப்புகளை முதல் நபராக பெறுவதற்கும் அப்படியே கடைத்தெருவுக்கும், மையின் ரோட்டிற்கும் கால்கள் அதுவே அழைத்துச்செல்லும்.


பால்காரன் மணியோசையுடன், புதினமாய் வந்திறங்கிய பாக்கெட் பாலும் வீடு வீடாய் கலியாண பத்திரிக்கை போல் போடப்படும் காலம்.

வீட்டுக்கிணற்றில் தனியே குளிர்ந்த நீரில் குளிக்க விருப்பமில்லாமல், நண்பர்களுடன் வேட்டி,டவலு,சோப்பு எடுத்துக்கொண்டு அதை நன்கு ஆலுபரோட்டா போல் மடித்து தெருக்குளக்கரை சென்று அதன் குருவிக்கூடு போன்ற குழிக்குள் திணித்து நண்பர்களுடன் படிக்கரையில் இறங்கி தண்ணீரை மெல்ல,மெல்ல உடல் சிலிர்க்க விளையாட்டாய் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு தற்காலிக அந்த குளிருக்கு தீர்வு காண தொபுக்கடீர் என குளத்திற்குள் குதிக்கும் அந்த உள்ளம் உற்சாகமடைந்து அதற்கு சான்றாக ஆழத்திற்கு சென்று மண் அள்ளி வந்து நண்பர்களிடம் காட்டி மகிழும்.

ஆசையாய் கலர்,கலர் கோழிக்குஞ்சுகளை கடைத்தெருவிலிருந்து வீட்டிற்கு வாங்கி வந்து இசட் பிரிவு பாதுகாப்பு போல் அதை தொட்டு,தொட்டு பாதுகாப்பாய் என்னதான் வளர்த்து வந்தாலும் செத்த நேரம் கண் அசரும் சமயம் அந்த காக்கச்சி கோழிக்குஞ்சை கீச்,கீச் சப்தத்துடன் கவ்விக்கொண்டு போகும் சமயம் அதைக் காணும் எம் கண்களில் கண்ணீர் தானாகவே வந்து அந்தக்காக்கச்சியை கண்டபடி வீடே திட்டித்தீர்க்கும்.

வேட்டிக்குள் அரிசியை வீட்டினருக்கு தெரியாமல் எடுத்து வந்து தெரு ஆச்சிக்கு கொடுத்து வேண்டியதை வயிறு நிரம்ப உண்டும்,திண்டும் மகிழும் பழக்க,வழக்கம் சரியானதாக இல்லாவிட்டாலும் அதை நினைக்கும் இன்று அது என்னவோ ஒரு சாதனையாகவே தெரிகிறது.

தெருவிலும், வீடுகள் இருக்கும் சந்துகளிலும் வீட்டின் அன்றாட சமையலுக்கு அடுப்பெரிக்க வாடியிலிருந்து வந்திறங்கிய தேங்காய் மட்டைகளும், பூக்கமளைகளும், வீடு கட்ட வந்திறங்கி இருக்கும் ஆற்று மணலும் குவியலாய் ஆங்காங்கே கிடக்கும். அந்த ஆற்று மணலே இரவில் சாகவசமாய் உட்கார்ந்து நண்பர்களுடன் அரட்டை அடிக்க பேருதவி செய்யும். அதில் மணல் வீடுகள் கட்டி, களிமண்ணும் எடுத்து விளையாடச்சொல்லும். அப்படியே இரவு அம்புலிமாவை பார்த்து யாரோ சொன்ன "அவ்வையார் அங்கு உரல் இடிக்கும் கதை" நினைவுக்கு வரும். அப்படியே வர இருக்கும் வாழ்க்கைத்துணை பற்றி வெட்கமாய் உள்ளத்தின் ஒரு ஓரத்தில் சிற்றோடை போல் ஓசையின்றி அந்த ஆசையும் அதுவாய் ஓடும்.

அன்றைய சைக்கிள் கடைகளெல்லாம் இன்று எப்படி எமக்கு கண்கொள்ளாக்காட்சி தரும் வண்ண,வண்ண பி.எம்.டபுள்யூ, ஆடி, மெர்சிடஸ் கார்களின் ஷோரூம்கள் போல் ஆசையாய் காட்சி தரும். அதில் வயது, உயரத்திற்கேற்ற கால், அரை, முக்கால், முழு வண்டிகள் வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கும். மணி வாடகை, நாள் வாடகைகள் தேவைக்கும் வசதிக்கும் தகுந்தார்போல் பெயரும், நேரமும் குறிப்பிட்டு எடுத்து உபயோகிக்கப்படும் அதற்கேற்ற வாடகையும் வசூலிக்கப்படும்.

இன்று வாட்ஸ்'அப் போல் அன்று வால்டீப்பு பஞ்சர் பற்றி அதிகம் பேசப்படும். காரணம் பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் சைக்கிள் பயன்படுத்தப்பட்டது.

மாமா கொண்டு வந்து தந்த சீக்கோ, கேசியோ வட்ட, சதுர கைக்கடிகாரங்களின் கண்ணாடிகளில் கீரல் விழுந்து பழசாகி விடாமல் இருக்க கடைத்தெரு வாட்ச் கடைகளில் விற்கும் கலர்,கலர் ஸ்டிக்கரை வாங்கி ஒட்டி மகிழும் காலம் அது.

வரும் பெரிய நோய்நொடிகளுக்கெல்லாம் ஒரு ஆட்டோ வாங்கும் செலவை வைக்கும் இன்றைய ஸ்கேன், ரத்த பரிசோதனைகளின்றி மீராசா, ஹனீபு, இபுறாகிம், ராஜ் டாக்டர்கள் போடும் ஒரே ஊசியில் அல்லாட காவலில் எல்லாம் ஓடிப்போகும்.

அடிக்கடி மின் தடை வருவதாலும், அரை கெரண்டு பிரச்சினைகளாலும் அயல்நாட்டு பெட்டி பிரிப்பில் அந்த சிகப்பு, பச்சை எமர்ஜென்சி லைட்டு அவசியம் இடம் பெறும்.

யாரோ வாங்கி ஓட்டி வந்த டி.வி.எஸ் மோட்டார் சைக்கிளை தட்டுத்தடுமாறி ஓட்டி பின் அதை ஒரு பெரும் சாதனை போல் மனதிற்குள்ளும், வெளியிலும் உள்ளம் சிலாகித்துக் கொள்ளும் காலம் அது.

கம்பூண்டும் வீட்டு, தெரு அப்பாக்களின் அதட்டல்களில் 144 தடை உத்தரவு போட்டது போல் சில சைத்தானிய சேட்டைகள் தன் வாலை பயந்து சுருட்டிக்கொள்ளும்.

ஒரு வகுப்பில் முன்னேறிய சீனியர் மாணவர்களிடம் பாதி விலைக்கு புத்தகங்களும், கோனார் உரையும் வாங்கி படிக்கும். அதன் மூலம் காசு பணம் கொஞ்சம் மிச்சம் செய்யும்.

பள்ளிக்கூடத்தில் ஏதோ தவறுக்காக பெற்றோரை கூட்டி வரச்சொன்ன ஆசிரியருக்கு தெரியாது என எண்ணி தெருவில் சென்ற தெரிஞ்ச ஆளைக்கூட்டி வந்து சிலவேளை தப்பித்தும் சிலவேளை மாட்டிக்கொண்டும் சங்கடப்படும்.

முட்டலாம்பு வைக்கும் வீட்டு மாடாக்குழிகளெல்லாம் இன்று புது வீடுகளாய் ஐஃபோன் சார்ஜ் பண்ணும் அலமாரிகளாக மாறிவிட்டன.

அன்று எட்டணா (50 காசு) காசுகளெல்லாம் நமக்கு இன்றைய எட்டு கிராம் தங்க காசுகள் போல் ஜொலிக்கும். அதை வைத்து வேண்டியதை கடையில் வாங்கி திண்டு மகிழும்.

ஒரு கிலோ ஆட்டுக்கறி எம்பது ரூபாய் என்ற கறிக்கடைகாரரிடம் அந்த கடையில் எழுபது ரூபாய் தானே என வாக்கு வாதம் செய்து பேரம் பேசும்.

கடைத்தெருவில் வாங்கும் முப்பது ரூபாய்க்கு மீனும், பத்து ரூபாய்க்கு காய்கறிகளும் வீட்டின் பகல், இரவு உணவுக்கு போதுமானதாக இருக்கும். (இன்று கருவாப்பிள்ளையும், பச்சமிளகாயுமே பத்து ரூபாய்க்கு தர மறுக்கின்றனர் காய்கறிகடைக்காரர்கள்).

குழல் பணியானும், நானா ஹத்தமும், அரியதரமும், வெங்காயப்பணியானும், பூவடையும், முட்டாசும், மைசூர் பாக்கும், சாதா, பீட்ரூட் ஹல்வாவும் சம்மந்திப்புறங்களை சமாதானப்படுத்த அதிகம் புழங்கும் அக்கால திண்பண்டங்கள். அதில் குறை வந்தால் சம்மந்தமே மாறிப்போகும் கொடுமை.

பாஸ்போர்ட் கிடைத்து விட்டால் அதுவே ஒரு நல்ல அரபு நாட்டு நிறுவனத்தில் சம்பளம், சகல வசதிகளுடன் வேலைவாய்ப்பு கிடைத்து விட்டது போல் சந்தோசப்பெருமூச்சு விடும். பாஸ்போர்ட் காப்பிகள் எடுக்கப்பட்டு அங்குமிங்கும் அயல்நாட்டு சொந்தபந்தங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.அதற்கு அக்கால தோனா.கானாவின் நடமாடும் தபால்துறையே பேருதவி புரியும்.

கருத்த நெகடிவ் ஃபோட்டோக்கள் வீட்டு பத்திரம் போல் பாதுகாக்கப்படும். அதிலிருந்து தேவைக்கு கழுவி காப்பிகள் போட்டப்படும்.

அப்பொழுது குளோபல் வார்மிங் (புவி வெப்பமாகுதல்), நீர் மேலாண்மை பற்றியெல்லாம் அதிகம் பேசப்படவில்லை. காரணம் உலகம் அதன் உண்மை வடிவில் இருப்பதாகவே நம்பப்பட்டது. அதற்கான அதிக கவலைகள் வெளிப்படுத்தப்படவில்லை.

ஆகாச வானி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமியின் குரல் எல்லோருக்கும் பரிச்சயப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்தது. மாநிலச்செய்திகள் சரியான நேரத்தில் கேட்டு ஊர், உலக நடப்புகள் அறியப்பட்டன. புயல்களுக்கு தான் விரும்பிய பெயரூட்டி மகிழாத காலம் அது. காற்றின் வேகத்தின் அளவும், அது கடந்து செல்லும் ஊருமே அன்று வானிலை ஆய்வு மையத்தால் ரேடியோ மூலம் எச்சரிக்கப்பட்டு அறிவிக்கப்படும். பழுதடைந்த ரேடியோக்களும், எமர்ஜென்சி லைட்டுகளும் உடனே சரி செய்ய கொடுக்கப்பட்டன. அது பற்றி அடிக்கடி விசாரிப்புகளும் இருந்து வந்தன.

அந்த கறுத்த விரல் விட்டு எண்ணை சுற்றி வேண்டியவரை அழைக்கும் தொலைபேசி கொஞ்சம் நாகரிகமாற்றத்தில் புதுப்பொலிவு பெற்று வெள்ளை நிறத்திற்கு மாறி சந்தைக்கு வந்தது. டிரங்கால் புக் பண்ணுவது கொஞ்சம் முன்னேறி எஸ்.டி.டி, ஐ.எஸ்.டி என பரிணாமம் பெற்று தொலைத்தொடர்பு வளர்ந்தது.

டி.வி.எஸ். 50 மோட்டார் சைக்கிள் இருந்தாலே அந்த வீடு நிச்சயம் ஓரளவுக்கு வசதியான வீடாகவே கருதப்பட்டு வந்தது.

ஹஜ்ஜுக்கு போய் வந்த சொந்த,பந்த உறவுகள் ஆசையாய் தந்த ஜம்ஜம் தண்ணீரும், பேரிச்சம்பழமும், கண்ணுக்கு சுருமா, தசுமணி, மக்கத்து மோதிரம், தொப்பி, அத்தரு போன்றவை அக்காலத்தின் பெரும் பொக்கிஷங்களே. அதை அணிந்து மகிழ்வதால் ஆனந்தமே.

மாவில் சல்லடை, இடியப்ப உரல், பொரிச்ச முறுக்கு, ஐஸ் பம்பாய் (மூங்கிலில் தலையாட்டி பொம்மையுடன் சுற்றி சிறுவர்களின் கையில் ரயில், தேள், என செய்து விற்கப்படும் மிட்டாய்), ஷிஃபா மருத்துவமனையின் முக்கிய அறிவிப்பு பிரபல இருதய மருத்துவ நிபுணர், உள்ளாங்குருவி, கொக்கு,மடையான், பழைய இரும்பு, பிளாஸ்டிக் வாங்குறது, அருவா, கத்தி சாணெ புடிக்கிறது....பாத்திரம் அடைக்கிறது..குடை ரிப்பேர் பண்றது..பழைய கட்டில், அலிமாலு, பத்தாயம் வாங்குறது..நிலக்கடலை வண்டியின் சப்தம்..பழைய செண்டு பாட்டுலு வாங்குறது...ராலு, மீனு.... போன்ற வியாபார, வர்த்தக தனி நபர், வாகனங்களின் சப்தங்கள் மாறி, மாறி கேட்டுக்கொண்டே இருக்கும் ஊர் முச்சூடும்..... இன்று கண்ட, கண்ட சாமான் சட்டிகளுக்காகவும், கெட்டுப்போக இருக்கும் பழங்களுக்காகவும் உறங்கும் நேரத்தில் கூட ஊருக்குள் வந்து சப்தமாய் ஒலி பெருக்கியில் கூச்சலிட்டு செல்கின்றனர். எல்லோரையும் எரிச்சலடைய வைக்கின்றனர்.

அன்றைய ஆண்,பெண், சிறுவர்,சிறுமியர் தெருவில் விளையாடிய விளையாட்டுக்களை பட்டியலிட்டால் அதுவே ஒரு பெரும் கட்டுரையாக உருவெடுக்கும். அதை படித்த பின் உள்ளமோ இங்கு வந்து "உச்சி உருட்டு" விளையாடும்.

இன்று எங்கு பார்த்தாலும் மனித நேயத்தை குழிதோண்டி புதைக்கும் மத துவேசமும், கேன்சர் போன்ற ஆட்கொல்லி நோய்களும் ஒன்றோடொன்று ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் போல் வெகுவாக மிருக பலத்துடன் வளர்ந்தும் தன் விளையாட்டை சந்துபொந்துகளிலும் அரங்கேற்றி வருகின்றன. பலிகடாக்களாய் அப்பாவி பொது ஜனங்கள். சிறுவர்களைக்கூட ஈவு இரக்கமின்றி ரத்த வெள்ளத்தில் தன் அகோர ஆயுதத்தால் சாய்த்து விடுகின்றன. (சமீபத்திய முத்துப்பேட்டை சிறுவன் மீதான தாக்குதல் சம்பவமே சான்று).

இது போல் இன்னும் ஏராளமாய் எப்படியோ இருந்து வந்த என் ஊர் இன்று எப்படியோ மாறிப்போய் விட்டது. அதைக்கண்ட, அனுபவித்த எத்தனையோ என் மக்களும் அவரவர் போய்ச்சேர வேண்டிய இடமும் போய்ச்சேர்ந்து விட்டனர் நமக்கு முன்னரே.

இங்கு விடுபட்ட பழசுகளை உங்கள் பின்னூட்டம் மூலம் தொடரலாம் நீங்கள்.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது
படங்கள் : பாரிவள்ளல் [நன்றி]

20 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சுப்ஹுக்குப் பின்னே....
நூர்லாட்ஜ் முன்னே...
நிற்கும் ஞாபகத்தை கிளறி விட்டாச்சா MSM(n) !

ஞாபகசக்தி ஒரு அருட்கொடை... நல்லதை மட்டுமே நினைவில் வைத்துக் கொளவதும் பேரானந்தமே...!

பல சந்தர்ப்பங்களில் MSM(n) டைம்மெஷின் மறந்துபோன நிறைய விடயங்களை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் MSM(n)

ZAKIR HUSSAIN said...

டி.வி.எஸ். 50 மோட்டார் சைக்கிள் இருந்தாலே அந்த வீடு நிச்சயம் ஓரளவுக்கு வசதியான வீடாகவே கருதப்பட்டு வந்தது.

இந்த டி வி எஸ் 50 க்கு பின்னால் ஒரு மிகப்பெரிய சரித்திரம் இருக்கிறது.

என் சார்பாக என் பாஸ் உரையாற்றுவார்.

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…
//டி.வி.எஸ். 50 மோட்டார் சைக்கிள் இருந்தாலே அந்த வீடு நிச்சயம் ஓரளவுக்கு வசதியான வீடாகவே கருதப்பட்டு வந்தது.

இந்த டி வி எஸ் 50 க்கு பின்னால் ஒரு மிகப்பெரிய சரித்திரம் இருக்கிறது.

என் சார்பாக என் பாஸ் உரையாற்றுவார்.//



இந்த டி வி எஸ் 50 சரித்திரத்தில் யார் வில்லன் யார் ஹீரோ என்பது எனக்கு இதுவரை புடிபடலே

sabeer.abushahruk said...

//என் சார்பாக என் பாஸ் உரையாற்றுவார்.//

சரி. ஆனா உனக்கு 'சார்பா' உரையாற்றினா தெய்வ குத்தமாய்டாதா?


அது ஒரு கருப்பு வெள்ளைக் காலம். சொல்லிக்காட்டும்போதே மழை பெய்றமாதிரி கோடுகோடாகத் தெரிந்தால் நான் பொறுப்பல்ல.

இவன் தனக்கு ட்டிவிஎஸ் ஓட்டத் தெரியும் என்பதை என்னவோ தனக்கு ஏரோப்ளானே ஓட்டத் தெரியும்ன்ற ரேஞ்சுக்கு உதார் காட்னதால ஒரு நாள் "ஓட்டிக் காட்டுடா" என்று கேட்டேன்.

அவன் வீட்லேர்ந்து டி வி எஸ்ஸை லவட்டிக்கிட்டு ஓட்டிக்கிட்டு வந்துட்டான். ஜோராத்தான் ஓட்டிக்கிட்டு வந்தான். நான் கண்கள் விரிய ஆச்சர்யமா பார்த்தேன். (ஏன்னா, காதக் குடுங்க, எனக்கு டி வி எஸ் கூட ஓட்டத்தெரியாது. இத வச்சி என்ன பசங்க நல்லா ஓட்டுவாங்க)

ஆச்சா! நான் ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்துகொண்டே,
"கலக்குறியடா" ன்னேன்.
"இதென்ன,டபுள்ஸ்லாம் அடிப்பேன்"ன்னான்.
அவன் சொன்ன பந்தாவில் மயங்கி எங்க குடும்பத்திலேயே பாக்க செவப்பா இருந்த சிறுவன் என் மச்சான் பாச்சாவை 'நம்பி' பின்னால உட்கார வச்சேன்.

கெத்தா ஸ்டார்ட் பண்ணி ஓட்னான். முத்தமாத்தெரு வளவு கிட்ட போனதும் ஏதோ கண்ணியில சிக்கின உல்லான் மாதிரி தரதர சரசர கடமுட தடால் புடால்னு
தார் ரோட்ல டி பி எஸ்ஸைக் கொண்டு ஐஸ் ஸ்கேட்டிங் பண்ணி விழுந்துட்டான்.

ஓடிப்போய் தூக்கி என்னாச்சுடான்னு கேட்டப்ப அவன் சொன்ன காரணம் ஞாயமானதா என்று மனசாட்சி உள்ளவங்க சொல்லுங்க.

"ரோட்ல மண்ணு கெடந்து சறுக்கி விட்டுடிச்சிடா"

அப்புறம் என்ன? மச்சான வூட்ல திருப்பி விட்டப்ப மாமி குழம்பிப்போய்ட்டாங்க.

"என் மகன் செவப்புத்தான். ஆனா இவ்ளோவ் செவப்பில்லைய"ன்னு. அம்பூட்டு காயம் ரத்தம்.

மச்சான் ச்செக்கச்செவேல்னு ஆயிட்டான்.

அதுக்கப்புறம் அவன் கூப்பிட்டபோதெல்லாம் "நீ டி வி எஸ்சில் வா நான் பக்கத்லேயே நடந்தெ வரேன்னுட்டேன்.

அம்பூட்டு வேகத்ல போவானாக்கும்

Ebrahim Ansari said...

மாலை நேரங்களில் நூர் லாட்ஜில் இதிலே அம்பது அதிலே அம்பது என்று ஆர்டர் சொல்லி ( அம்பது ஹல்வா அம்பது பீட்ரூட் ஹல்வா) இருவர் சாப்பிடும் நினைவுகள்

எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் மாலையில் பட்டுக் கோட்டைக்கு சைக்கிள் ஊர்வலம்

அந்த நாட்களில் வெளியான ' அனைத்துப் படங்களையும் பட்டுக் கோட்டையில் பார்த்துவிட்டு இரவு பத்துமணிக்கு மேல் ஊளையிட்டுக் கொண்டே சைக்கிளில் ஊர் திரும்பிய நினைவுகள்

இரவு ஒருமணிவரை சேதுரோடு சுமைதாங்கியில் உட்கார்ந்து அரட்டை அடித்த நினைவுகள்,

உயர்நிலைப் பள்ளிக் கூடத்தின் அருகில் இன்றும் இருக்கும் புளியமரத்தடியில் அமர்ந்து அன்பே ஆரமுதே இன்பமே ஈடில்லா ஓவியமே என்று அகரவரிசையில் பலருக்கு அவர்கள் சார்பாக I REPEAT அவர்கள் சார்பாக காதல் கடிதம் எழுதிக் கொடுத்த நினைவுகள்

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!

நன்றி தம்பி நெய்னா! மனங்களை துவைத்து அலசிப் போட்டது போல இருக்கிறது இந்தபப்திவு.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மூத்த காக்காமார் நீங்கள்வொ எல்லாம் சேர்ந்து "அறுவது, எழுவதுகளில் என் ஊர்" என்று உள்ளத்தை உசுப்பேத்தும் உங்கள் கட்டுரையை இங்கு எழுதினால் நாங்கள்வொலும் தெரிஞ்சிக்கிடுவோம்ல.....

sheikdawoodmohamedfarook said...

//TVS50மோட்டார்சைக்கிள்இருந்தாலேஅந்தவீடுவசதியானவீடாகவே கருதப்படும்//மருமகன்ஜாஹிர்ஹுசைன்சொன்னது./50,களில்ஜெர்மனியின்GURUNDIGரேடியோஇருந்தாலேஅது''பணக்காரவோ ஊடு''என்றுகருதப்பட்டது.அப்பொழுதுகடல்கரைதெருவில்மூனுவீட்டில் மட்டுமேரேடியோஇருந்தது.நேயர்விருப்பம்கீயர்விருப்பம்என்றுஎதுவுமே யில்லை.லால்குடிஜெயராமன்/குன்னக்குடிவைத்தியநாதன்/செம்மாங்குடிசீனிவாசஐயங்கார் இவர்களோடு இன்னும் இரண்டு குடிகளும்சேர்ந்துபாடும்சங்கீதமும்அதை அடுத்து குயில் ஒன்றுகூவும்''ஆகாசவாணிசெய்திகள்வாசிப்பதுமீனாம்பாள்''இவைகளை ஒட்டுகேக்கஅந்தவீட்டுஜன்னல்ஓரம்ஒளிந்துநிற்ப்போம்.நாங்கள்நிற்ப்பது வீட்டுக்காரஅம்மாளுக்குதெரிந்தால்''அடவாப்பாBARUKUசுண்டுகடையிலேபோயிஒன்ணரகாஸுக்குநல்லன்னையும்ஒன்ணரகாஸுக்குநச்சிரவம் பெருஞ்சிரவமும்வாங்கிட்டுஅதோடகொஞ்சம்கருவாபட்டையும்கிராம்பும் வாங்கிட்டுவா!தாளிச்சுஊத்துனாமணக்கும்''என்றஉத்தரவுக்குபணிந்தால் மட்டுமேரேடியோகேக்கலாம்.அப்புடியாகொந்தகாலம்அந்தக்காலம். இன்னும்நிறையஈக்கிது.அப்பறம்சொல்றேன்.

Ebrahim Ansari said...

தம்பி நெய்னா !

நான் எழுதியது அறுபது எழுபதுகளில் உள்ளவைதான். அப்படியே நாற்பது அம்பதுக்குப் போகும்போலத் தோன்றுகிறது.

ஆயிரம்தான் சொல்லுங்கள் அசைபோடுவது ஒரு இனிமைதான்.

Aboobakkar, Can. said...

//ZAKIR HUSSAIN சொன்னது…
டி.வி.எஸ். 50 மோட்டார் சைக்கிள் இருந்தாலே அந்த வீடு நிச்சயம் ஓரளவுக்கு வசதியான வீடாகவே கருதப்பட்டு வந்தது.

இந்த டி வி எஸ் 50 க்கு பின்னால் ஒரு மிகப்பெரிய சரித்திரம் இருக்கிறது.

என் சார்பாக என் பாஸ் உரையாற்றுவார்.//

78-80 களில் ஒயிட் ஹவுஸ் கேப்டன் ஜாகிர் ....மில்கி ஒயிட் பேன்ட் அதில் பெரிய பெல்ட் பெண்ட்டிற்கு கீழே ஜிப்பு காப்பிகல்ர் T shirt மேல்வருசை முன்பல்லுக்கு கம்பி இப்படி பந்தா இக்பாலை அசரவைத்த பந்தாவெல்லாம் பண்ணிவிட்டீர்களே ..........இதையெல்லாம் மறக்கமுடியுமா ????

sabeer.abushahruk said...

தம்பி நெய்னா,

புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிப்பார்த்த திருப்தி, மகிழ்வு, ஆறுதல் இந்த உங்கள் பதிவை வாசித்தபோது கிடைத்தது.

sabeer.abushahruk said...

சகோ அபூபக்கர்,

வொயிட் பேண்ட், பெல்ட், பெல்பாட்டத்தில் ஜிப்பின் ஒரு பகுதியை வச்சி தச்சது இப்டி அவன் செஞ்ச எல்லாத்தையும் ஹீரோ ரேஞ்சுக்குப் புகழ்வதை ஒரு விதத்தில் ஒப்புத்துக்கிட்டாலும், அவனோட கோடாலிப் பல்லை அடக்க கம்பி வச்சி கட்டி வைத்தியம் பார்த்ததையும் ஹீரோ ஸ்டைல் ரேஞ்சுக்கு சொன்னா எங்களுக்கெல்லாம் பத்திக்கிட்டு வராதா?

தோள்பட்டை வரை முடி வளர்த்து ஸ்டைலா திரிஞ்ச எங்களையெல்லாம் ஒங்க கண்ணுக்குத் தெரியாதே.

இப்பவே ஒரு பழைய ப்ரொஃபைல் ஃபோட்டோவ வச்சிக் கவர் பண்ணிக்கிட்டு இருக்கான். நீங்க இப்டியெல்லாம் உசுப்பேத்னா, 'ஆயிரம் மலர்களே மலருங்கள்' என்று எவ்வி குதிப்பான்.

அப்புறம் பள்ளிக்கூட புளிய மரத்தடி கவிஞர் அவர்களுக்கு இன்னொரு காதல் கடிதம் இவனுக்காக I REPEAT இவனுக்காக எழுத வேண்டி வரலாம்.

sheikdawoodmohamedfarook said...

50களில்பினாங்கிலிருந்துஎங்கதெருவைசேர்ந்தஒருவர் ராலே சைக்கிள் கொண்டுவந்தார்.பணக்காரஊட்டுகல்யாணப்பொண்ணுக்குகூடஅப்புடியா கொந்தஜோடிப்புஜோடிச்சுஇருக்காது.ஜோடிப்புன்னாஜோடிப்புஉங்கூட்டு எங்கூட்டுஜோடிப்புஅல்ல.''அதைதொட்டுபாக்கணும்!தொட்டுபாக்கநுங்ரா'' ஆசையோடஎன்னைஒத்தவயசுபசங்கஎல்லாம்போயிஎட்டநின்னுபாத்தோம்.யாருமேகிட்டேநெருங்கமுடியலே.ஏழுஅடுக்குபாதுகாப்போஎட்டடுக்கு பாதுகாப்போபோட்டுஈந்துச்சு!அப்போதைய''அம்மா''எங்களுக்குஅதுதான். சைக்கிள்போக்ஸ்கம்பியிலேயெல்லாம்பல்புபோட்டுவெளக்குஎரிஞ்சுச்சு.வௌவொருகம்பியிளும்மஞ்சபச்சைஊதாசெவப்புகலர்லேவெளக்கு. பாக்குரபொம்பளைங்கஎல்லாம்மூக்குலேவெரேலேவச்சு ''என்னாடிபுல்லையலா!பினாங்குலேஇப்புடியாகொந்தசய்க்கிளுமா ஈக்கிதுன்டு''சொல்லிகிடுச்சுவோ.அந்தராலேஅதிராம்பட்டினத்தின்ரோல்ஸ் ராய்ஸ்போல்கருதப்பட்டது.கடைசியில்அந்தசைய்கிளுக்குசொந்தக்காரர் யாரென்றுபார்த்தல்எங்களுக்குரெம்பவேண்டியப்பட்டவர்.அவரைநான்மாமாஎன்றுகூப்பிடுவேன்.தூரநின்றுபார்த்தஎன்னைஅடையாலம்கண்டவர்''அடேபாருக்காடா?வாடாஇங்கே!சைக்கிளைஓட்டிபாக்குரியாடா?''என்றார்இதை என் உச்சியிலேஎவரெஸ்ட்பனி குடிகொண்டது. ஆனால்அப்பொழுதுதான்நான்சைக்கிள்ஓட்டபழகி கொண்டிருக்கிறேன். கீழேவிழுந்துமுட்டிகால்'ஒரப்புண்டு'போச்சு. ''சரி!கடைதெருவுக்குவாரியமீன்வாங்கபோறேன்''என்றார்.ஏறிக்கொண்டேன்.கடைதெருவில்சைக்கிளைபார்த்தவர்கள்தமயந்தியின்சுயவரதிற்குவந்த தேவர்களைபோல''விழித்திமையாநின்றநிலையில்''நின்றார்கள்.என்சட்டைகாலர்தானாகவேநிமிர்ந்துகாதைதொட்டது. MSM கிளறிய பழைய நினைவுகள் முதுமைக்கு பேரின்பம் .இருந்தாலும் 'வில்விட்டுபுறப்பட்டஅம்பும்வாய்விட்டுபுறப்பட்டசொல்லும்திரும்பவராது' என்பதுபோலநம்மைவிட்டுநீங்கியகாலமும்மீண்டும்வருவதில்லை.இது 'ஏண்டிபட்டிமஞ்சகுளிக்கிறா?''என்றானாம்பேரன்.''பழையநெனப்புடா பேராண்டி!''என்றாளாம்பாட்டி.அந்தக்கதைதான்இந்தக்கதை.

ZAKIR HUSSAIN said...

To Brother Aboobakkar, Can.

//78-80 களில் ஒயிட் ஹவுஸ் கேப்டன் ஜாகிர் ....மில்கி ஒயிட் பேன்ட் அதில் பெரிய பெல்ட் பெண்ட்டிற்கு கீழே ஜிப்பு காப்பிகல்ர் T shirt மேல்வருசை முன்பல்லுக்கு கம்பி இப்படி பந்தா இக்பாலை அசரவைத்த பந்தாவெல்லாம் பண்ணிவிட்டீர்களே ..........இதையெல்லாம் மறக்கமுடியுமா ????//

இப்படி ஓ.பன்னீர்செல்வம் 'அம்மா'வை புகழ்ந்ததை விட அதிகமாக புகழ்ந்துவிட்டீர்கள்.

To Shahul...

இந்த கமென்ட்ஸை பார்த்த பிறகுமா தெரியவில்லை

.வில்லன் பாஸ்தான்.....[ அவருக்கு என் மீது பொறாமை ..விடுங்க ...விடுங்க...கொஞ்சம் சிவப்பா பொறந்தது தப்பா போச்சு... ]

அன்புமிக்க பாரூக் மாமா அவர்களுக்கு..

.நீங்கள் சொன்ன ரலே சைக்கிள் நான் சிறுவனாக இருக்கும்போதும் இருந்தது. [ அது இந்திய தயாரிப்பு ] ..இப்போது அதையெல்லாம் எம் எஸ் எம் ஆர்டிக்கிள் இல்தான் பார்க்க முடிகிறது.

To Adirai Nirubar....

எம் எஸ் எம் எவ்வளவோ கஷ்டப்பட்டு இத்தனை விசயங்களை தொகுத்து தந்திருக்கிறார். அதற்கு சரியான படங்களை இணைக்காமல் வெறுமனே 'வாடகை சைக்கிள்" மாதிரி ஏன் வெளியிட்டு இருக்கிறீர்கள்.

சில படங்களை நான் இ-மெயில் செய்திருக்கிறேன். முடிந்தால் இணைத்து விடுங்கள்.

sheikdawoodmohamedfarook said...

//அன்புள்ளமாமாநீங்கள்சொன்னராலேசைக்கிள்இந்தியதயாரிப்பு// இருக்கலாம்!நானேபிராண்டைதவறுதலாய்மாற்றிசொல்லிவிட்டேன்.அது என்னbrandஎன்றுஇப்பொழுதுஉறுதியாகசொல்லமுடியவில்லை.

Unknown said...

அம்பாஸ்டர் காரில் பின்னால் தொங்கிக் கொண்டு போகும் அழகே தனி அழகுதான்.

அதைவிட அழகு அரக்குடா வண்டி படிக்கட்டில் தொங்கிக் கொண்டு போவது.

ஐஸ் பம்பாய்.. (பம்பாய் மிட்டாய்) இப்படி ஏராளம் நெறைய இருக்கு ஆனால் நேரம்தான் ஏராளம் இல்லை.

சபீர் காக்கா உங்களின் காலம் கருப்பு வெள்ளையா? ஈஸ்ட்மெண்ட் கலரா? உங்களை ரொம்பவே கெழவனாக்கிட வேண்டாம். அப்புறம் நாங்களெல்லாம்..!!

என்னப்பா நெய்னா..? பக்கத்திலே இருந்துகிட்டு இதெல்லாம் ஸொல்லவேயில்ல

Shameed said...

//To Shahul...

இந்த கமென்ட்ஸை பார்த்த பிறகுமா தெரியவில்லை

.வில்லன் பாஸ்தான்.....[ அவருக்கு என் மீது பொறாமை ..விடுங்க ...விடுங்க...கொஞ்சம் சிவப்பா பொறந்தது தப்பா போச்சு... ] //

எங்க பாஸ் கருப்பா இருக்காரே தவிர பயங்கரமா கருப்பா இல்லை! எங்க பாஸோட அப்போதைய டிஸ்கோ முடிவெட்டின் ஸ்டைலே தனி அதுவும் வாலிபால் விளையாடும் போது பாஸின் தலை முடி அசைவில் அப்போ நாங்களெல்லாம் அசந்து போவோம்

எங்க பாஸ் கச்சல் கட்டி வாலிபால் விளையாடும் போது நாங்களெல்லாம் தரையில் உட்கார்ந்து பாஸோட ஆட்டத்தை ரசித்து சிரித்துக்கொண்டிருப்போம்


பாஸ் கவலையை விடுங்கள் உங்களுக்கு சப்போர்ட் நான் இருக்கேன்

sheikdawoodmohamedfarook said...

50களில்புதுதெருதங்கவாப்புiமகன்அகமதுஹாஜாRoyal Enfield பைக்கில் படபட என்ற சத்தத்துடன் வந்ததும் அவரின் கம்பீர தோற்றமும் பார்த்தவர்களைபிரமிக்கவைக்கும்.அவர்ஓட்டியஆஸ்டின்மினிமைனர்கார் அதிராம்பட்டினத்துக்குமுதல்காராகஇருக்கலாம்திமுகதொடங்காத காலத்தில்பெரியாரைஅழைத்துவந்துபுதுதெருவில்தி.க.பொதுகூட்டம் போட்டவர்.சிலகாலம்குதிரையிலும்சவாரிசெய்தார்.அதிராம்பட்டினத்து காரர்கள்மு.க.வைசந்திக்கசென்றால்அஹமதுஹாஜாசுகமாய்இருக்கிறாரா? என்றுகேட்பாராம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அசை போட்டு
நம் ஆசை தூண்டும்
அருமை கட்டுரை

N.A.Shahul Hameed said...

Dear MSM(N) Assalamu Alaikkum!
You brought into light the reminiscences of the past 80"s. Uncle Farook took us the the age we cannot even think of or some of us may not have born.
It was in 1976 July I passed my M.Sc., and waiting for the appointment in Jamal Mohamed College (I was the topper among Muslims).
But one day I received a telegram from my Junior in JMC, who was studying in KMC, asking me to go to Adirampattinam. Actually I don't where Adirampattinam is located. But I remember one of my roommates in JMC (Mr.Prabakaran owner of Sri Saraswathi Transport) who hails from Pattukkottai. He used to say, "Hey Shahul there is a Muslim village known as Adirampattinamn near Pattukkottai, where we all used to go for the purchase of foreign goods as well as pure mutton"
So I took the bus to Pattukkottai and met him at night. He took me to my Junior who was staying at 3-D Sethu Road (PMS Ameen Brothers Building). When I reached their house I wanted to wash my face. They went inside and tried to bring a bucket full of water. On seeing a well in front of the house I refused the bucket water and tried to get water from the well.They said, "brother it is salty so you can use this sweet water", but I thought that usually the well waters would be a bit salty just like our home town and so I said, "it is ok, I can manage". But when I goggled the water I was shocked to know that the water was highly concentrated with salt. They laughed at me and offered me the well water.
Then I went meet Prof.M.A.Mohamed Abdul Khadir who asked my juniors to invite me. I thankfully remember Prof.M.A.M, Prof N.M.Hassan and Aliar Sir for introducing me to our great, legendary, gentleman of the era Mr.SMS.
Golden days golden memories. These memories could ever be cherished for the rest of my life.
Thank you for remembering the good old days.
Jazakkallah Khairan
Wassalam
N.A.Shahul Hameed

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஆஹா! சும்மா இருந்த உங்களையெல்லாம் நான் உசுப்பேத்திட்டேன்னா? உற்சாகப்படுத்திட்டேன்னா? இங்கு வந்து தத்தமது இளமைக்கால கருத்து மழை பொழிந்த. எம் உள்ளங்களை குளிரச்செய்த மூத்த காக்காமார்கள் சபீர் காக்கா, ஜாஹிர் காக்கா, ஹமீத் காக்கா, பாரூக் காக்கா, அபு இபுராகிம் காக்கா, இபுராகிம் அன்சாரி காக்கா, சாகுல் சார், அபுபக்கர் காக்கா, நண்பர் ஜாஃபர், இப்னு அப்துல் ரஜாக்.....எல்லோருக்கும் என் நன்றிகளுடன் கூடிய து'ஆக்கள் நிரப்பமாய் சென்றடையட்டுமாக....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.