Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரைக் கடல் 17

அதிரைநிருபர் பதிப்பகம் | November 09, 2014 | , , ,


அதிரைக்  கடலின்  அலையைக்  காண
  ஆட்டோ  ஏறிச்  சென்றோமே
குதிரைப் பாய்ச்சல்  போலக்  கிளம்பிக்
  குதித்துச்  சென்ற(து)  ஆட்டோவும்.

மாலை  மதியக்  குளிரைப்  பெற்று
  மனத்துக்  கினிய  உணர்வோடு
சாலை  கடந்து,  சோலை  புகுந்து
  சரியாய்க்  கடலின்  கரைவந்தோம்.

கரையை  மோதும்  அலையைக்  கண்டு
  காலைக்  கழுவ  ஆமினம்மா
தரையில்  நின்று  தாவிச்  சென்று
  தண்ணீ  ருக்குள்  கால்விட்டாள்.

வங்கக்  கடலின்  சீற்றத்  தாலே
  வந்த  சுனாமிப்  பேரலையின்
பங்கம்  மனத்தில்  வரவே  வாப்பா,
  “பார்த்துப்  போம்மா!”  என்றார்கள்.

சின்னக்  குட்டி  பாத்திம்  மாவின்
  சிரித்த  முகமோ  மாறிற்று
கன்னத்  தில்கை  வைத்துக்  கொண்டு
  கடலைப்  பார்த்து  வியப்புற்றாள்!

சுண்டல்  பொதியைக்  கண்டான்  ஹாமிது
  சூடாய்த்  தின்ன  விரும்பியவன்
சண்டை  பிடித்து  வாங்கித்  தின்று
  சாந்திக்  கடலில்  இறங்கினனே.

இருட்டு  வருமுன்  வீடு  திரும்ப
  எண்ணங்  கொண்டார்   எல்லாரும்
திருட்டு   நரிகள்   நண்டு  பிடிக்கத்
  தேடி  வருமுன்  திரும்பினரே!

அதிரை அஹ்மது

17 Responses So Far:

crown said...

சுண்டல் பொதியைக் கண்டான் ஹாமிது
சூடாய்த் தின்ன விரும்பியவன்
சண்டை பிடித்து வாங்கித் தின்று
சாந்திக் கடலில் இறங்கினனே.
------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சாச்சா! என்னே ஒரு மொழிக்கையாளுமை!!!தகிக்கும் கடலாய் இருந்தவன் கடலை(சுண்டல்)வாங்கிக்கொடுத்தவுடன் அமைதி''க் கடலாய் மாறிபோனான்!!!!!!!!!!!!!!!!!அருமை!!!!அருமை!!!!!
------------------------------------------------------------------------

crown said...

அ''திரை''க்கடல் அறிவால் ஆர்ப்பரிக்குது!!!அஹமது சாச்சா''கையவச்சா மொழி மணக்குது அல்ஹம்துலில்லாஹ்! கவியரசு ஏதாவது சில வரிகள் கடலைப்பற்றி!!!! தயவு கூர்ந்து எழுதுங்கள்!!!!!

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

காக்கா,

அற்புதமான பாடல்; அழகான கற்பனை; அநாயசமான மொழியாடல்; ஆனந்தமான சந்தம்!

மழைவிழும்பொழுதினில் குளத்தில் குளித்ததுபோல் குதூகலமாயிருக்கிறது வாசிக்க!

பாப்பா பாடல்கள்தான் என்றாலும் என்னைப்போன்ற பாப்பா உள்ளம் (ஹிஹி) கொண்டவர்களுக்கும் பிடித்துப்போவதில் ஆச்சர்யமில்லை.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

Aboobakkar, Can. said...

பொறி அரிசியை ஊறவைத்து அதில் தேங்காய்ப்பூ துருவல் மற்றும் சர்க்கரைபோட்டு கலந்த அந்த இனிப்பு பெரட்டளை ஒரு டிப்பன் பாக்ஸில் எடுத்துகொண்டு புதன் கிழைமைகளில் நமதூர் கடலுக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது டிப்பன் பாக்ஸில் அங்குள்ள உப்பை அள்ளி நிறைத்துக்கொண்டு மேலும் அங்கே ரோடுகளில் வளர்ந்த உமிழி கீரையை பறித்து வந்து கலையில் உமிழி கீரை புட்டு சாப்பிட ஞாபகம் சற்றே என்னை பின்நோக்க வைத்துவிட்டன .

Yasir said...

எங்களை குழந்தைப் பருவத்திற்க்கே அழைத்துச் செல்லும் பாடல்கள் இவை.....அதனைத் தொடர்ந்து தருவதற்க்கு வாழ்த்துகள்

Yasir said...

///பொறி அரிசியை ஊறவைத்து அதில் தேங்காய்ப்பூ துருவல் மற்றும் சர்க்கரைபோட்டு// அதிலும் இளந்தேங்காய போட்டால் இன்னும் சுவை

sabeer.abushahruk said...

கிரவுன்,
எதுக்கு 'தயவு' எல்லாம்?
உத்தரவு!

காக்கா,

பேப்பரைக் கொஞ்சம் இங்கிட்டுக் காம்பிங்க ப்ளீஸ். காப்பியடிச்சாவது கலக்கிடுவோம்ல!

சட்டை யில்லா படகுக் காரன்
சவாரி போகக் கூப்பிட்டான்
சொட்டை மாமா காசு தர
சுகமாய்ப் பயணம் போயினமே

கடலின் கரையில் கருவை நிழலில்
கூடியிருந்தக் கூட்ட மதில்
சபீராக்கா ஜாயிராக்கா அபு இபுவோடு
சபையின் நடுவே தஸ்தகீரும்

கடலைக் காட்டி கவிதை சொல்லி
கலகல வெனவே சிரித்தனரே
கரையில் சேர்த்த அலையில் நுரையும்
கண்கவர் வெள்ளைப் பஞ்செனவே

தூரக் கடலை வானம் தொடுவதை
ஓரக்கண்ணால் பார்த்த ராத்தா
பாரம் இறக்கி வைப்பது போன்று
நேரப்படவே பெரு மூச்சுவிட்டாள்

ஆடை நனைய ஆசை நிறைய
அழமற்ற கரை தனிலே
வாடை வீசும் மாலைக் காற்றில்
வழுக்கிவிழாமல் விளை யாடினமே

sabeer.abushahruk said...

முன்பொரு முறை எழுதியது:

கருவேலங் காட்டினிடை
காலார நடந் ததுண்டா...
கண்கொத்திப் பாம்பு பயம்
கையோடு கூடவர...?

உப்புக் குவியல்கள்
உப்பளக் காணல் நீர்...
உற்று நோக்கியதுண்டா
ஓரிரு முறையேனும்...?

பாத்தி கட்டிப் பராமரிக்கும்
உப்புப் படிகத்தை -
ஒற்றை விரல் கொண்டு
பொத்துப் பார்த்ததுண்டா...?

உமுறிக்கீரை ஒடித்து
உவர்ப்பு நீர் ருசித்ததுண்டா...?

வேட்டிமீன் விளையாடும்
சேற்றுக் கடற்கடையில் -
வேட்டி சட்டை படபடக்க
தோனியோட்டம் ரசித்ததுண்டா...?

துணைக்குச் சென்ற தம்பி வைத்து
அடையாளம் கண்டதுண்டா
தூரத்துத் துப்பட்டியை...?

sabeer.abushahruk said...

கிரவுனுக்காக:

கடல்:

ஓடும்போது கொட்டும்போதும்
ஒல்லியாக இருந்த நீர்
ஒரே இடத்தில்
படுத்துக் கிடந்ததால்
உப்புக் கூடி
உடல் பெருத்துக்
கடலானது.

எழுப்ப வேண்டாம்
எழுந்தால்
ஆழி பேரலையாய்
அழித்து விடும் உலகை!

ஆள்கடல் முதல்
அலையுடுத்தி வரும் கடல்
கரை வந்ததும்
நுரைப் பூச்சூடி
கால்களைத் தொடும்
கலிமா சொல்லாதப் பெண்டிரைப்போல்!



crown said...

கிரவுனுக்காக:

கடல்:

ஓடும்போது கொட்டும்போதும்
ஒல்லியாக இருந்த நீர்
ஒரே இடத்தில்
படுத்துக் கிடந்ததால்
உப்புக் கூடி
உடல் பெருத்துக்
கடலானது.
-----------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது போல் இது என்றும் நினைவில் இருக்கும் கவிஞரே! எழுதிய வரிகள் ஒப்புக்கு இல்லாமல் ஒப்புக்கு(என் ஒப்புக்கு)எழுதியது ( நம் மூர் மொழியில் சொன்னால் உங்கள் உகப்பு(அன்பு)க்கு முன் கரிக்காமல் இனிக்கவே செய்கிறது!

crown said...

ஆள்கடல் முதல்
அலையுடுத்தி வரும் கடல்
கரை வந்ததும்
நுரைப் பூச்சூடி
கால்களைத் தொடும்
கலிமா சொல்லாதப் பெண்டிரைப்போல்!
--------------------------------------------------------------------
ஆழ் என இருக்கனுமோ கவிஞரே! கண்டீரே இங்கே கலிமா சொல்லாத பெண்டீரை அலைகளாய் இப்படி குறையாய் அலையும் பெண்களை நுரைவழி சொன்ன உருவகம் .அசத்தல் போங்க!!!!!!அல்ஹம்துலில்லாஹ்!!!
--------------------------------------------------------------------

crown said...

கடலின் கரையில் கருவை நிழலில்
கூடியிருந்தக் கூட்ட மதில்
சபீராக்கா ஜாயிராக்கா அபு இபுவோடு
சபையின் நடுவே தஸ்தகீரும்
---------------------------------------------------------------
கூட்டமதில்......மதிக்கூட்டம் என கொள்ளலாமா?அதில் மதில் மேல் பூனைபோல் மத்தியில் புத்தியில் சிறியவன் என்னை வைத்தது உங்கள் பெருந்தன்மை!

Yasir said...

//கடலின் கரையில் கருவை நிழலில்
கூடியிருந்தக் கூட்ட மதில்
சபீராக்கா ஜாயிராக்கா அபு இபுவோடு
சபையின் நடுவே தஸ்தகீரும்// காக்கா என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்....உங்களைப்போன்றோரின் நிழல் படுவதே சந்தோஷம் தான்

Yasir said...

//அஸ்ஸலாமு அலைக்கும்.உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது போல் இது என்றும் நினைவில் இருக்கும் கவிஞரே! எழுதிய வரிகள் ஒப்புக்கு இல்லாமல் ஒப்புக்கு(என் ஒப்புக்கு)எழுதியது ( நம் மூர் மொழியில் சொன்னால் உங்கள் உகப்பு(அன்பு)க்கு முன் கரிக்காமல் இனிக்கவே செய்கிறது!/// வ அலைக்க முஸ்ஸ்லாம்... எப்படி இப்படியெல்லாம் தமிழின் அபூ கலீமாவே

crown said...

Yasir சொன்னது…

//அஸ்ஸலாமு அலைக்கும்.உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது போல் இது என்றும் நினைவில் இருக்கும் கவிஞரே! எழுதிய வரிகள் ஒப்புக்கு இல்லாமல் ஒப்புக்கு(என் ஒப்புக்கு)எழுதியது ( நம் மூர் மொழியில் சொன்னால் உங்கள் உகப்பு(அன்பு)க்கு முன் கரிக்காமல் இனிக்கவே செய்கிறது!/// வ அலைக்க முஸ்ஸ்லாம்... எப்படி இப்படியெல்லாம் தமிழின் அபூ கலீமாவே
-------------------------------------------------------------------------
எல்லாப்புகழும் அல்லாஹுக்கே!

Ahamed irshad said...

கடல்'ஐ பற்றிய கவிதை அற்புதம் காக்கா... பின்னூட்டங்களும் இன்னும் ரசிக்க வைக்கிறது....

Shameed said...

உப்பு நீர் பற்றி அஹ்மத் காக்காவின் இனிப்பான கவிதை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.