"இறந்து போனவர்களின் நற்செயல்களைப் பற்றியே நினைவுகூருங்கள்" என்ற கருத்துப்பட நபிமொழியொன்று உண்டு. நல்லதுபற்றிப் பேசுவதால், நன்மையின் பக்கம் நாட்டம் உண்டாகின்றது. தீமையைப்பற்றிப் பேசுவதால், சில வேளை தீமையின் பக்கம்கூட நம் கவனம் செல்லக் கூடும். எனவே, நன்மைகளை நினைவுகூர்வதே நமக்கு நன்மை பயக்கும். இவ்வடிப்படையில், எனது வாழ்க்கையில் சந்தித்த நல்லவர்களைப்பற்றி அதிரை வரலாற்றில் பதிவு செய்து வைப்பது நலம் என்ற நோக்கில், மிகச்சிலரைப்பற்றி எனக்குத் தெரிந்த சில தகவல்களை மட்டும் பதிவு செய்ய விழைகின்றேன்.
இத்தொகுப்பைப் படிக்கும் வாசகர்களுக்கு, இவர்களைவிட இன்னும் பலரும் நினைவில் நிழலாடலாம். அவ்வாறு இருந்தால், அவர்களைப்பற்றிக் கட்டாயம் பின்னூட்டம் இடுமாறு அன்புடன் கோருகின்றேன். இதில் இடம் பெறாதவர்கள் கெட்டவர்களா என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். நினைவாற்றல் குறைந்த எனது சிற்றறிவில் நிலைத்திருப்பவர்கள் பற்றிய தொகுப்பே இது.
மர்ஹூம் அப்துஸ்ஸலாம் ஹாஜியார் கடல்கரைத் தெரு
நான் இவர்களைச் சந்தித்தபோது, நன்கு பழுத்த பழம் போன்று, வயதான நிலையில் இருந்தார்கள். அப்போதும், உள்ளூரில் நடந்தே வியாபாரம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். இவர்களின் வணிகப் பொருள்கள்: தொப்பி, மிஸ்வாக், அத்தர், சுர்மா போன்றவை. பொருள்களின் அடக்க விலையை முதலில் சொல்லி, இலாபமாகத் தமக்கு நாலணாவைச் சேர்த்துத் தருமாறு வாங்குபவர்களிடம் சொல்லிவிடுவார்கள். இப்பெரியார், நம் தஸ்தகீர் சகோதரர்களின் பாட்டனார் என்பது குறிப்பிடத் தக்கது!
மர்ஹூம் அஹ்மது தம்பி கடல்கரைத் தெரு
இவர்களை, 'தூண்டிமுள் யாவாரி' என்றுதான் மக்கள் அழைப்பர். இவர்களின் சம்பாத்தியம், தூண்டிமுள் விற்பது. அதிரையை ஒட்டிய கடலோரப் பகுதிகளுக்குச் சென்று, அங்கெல்லாம் வாழ்ந்த மீனவச் சமுதாயத்திடம் தூண்டிமுள் விற்பார்கள். இவர்கள் வியாபாரத்திற்காக வெளியூர் செல்லும்போதும், உள்ளூரில் இருக்கும்போதும், எப்பொழுதுமே இஸ்லாமியப் பிரச்சாரம்தான் செய்துகொண்டிருப்பார்கள். ரயிலில் ஏறி அமர்ந்துவிட்டால், அந்தக் 'கம்பார்ட்மென்டில்' இருப்பவர்களோடு மிகத் தோழமையுடன் மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிடுவார்கள். இதுவன்றி, உள்ளூரிலும் அவ்வப்போது பள்ளிவாசல்களில், யாருடைய அனுமதியையும் எதிர்பார்க்காமல், தமக்குத் தெரிந்தபடி 'பயான்' செய்வார்கள். இவர்களின் அணுகுமுறை, சிலருக்குப் பிடிக்காது. என்றாலும், அத்தகையவர்களிடமும் அன்புடன் நெருங்கிப் பழகுவார்கள். ஊரிலும் வெளியூர்களிலும் தம்மிடம் தம் வணிகப் பையை எப்போதும் வைத்திருப்பார்கள். இவர்கள், 'புஷ்ரா ஹஜ் சர்வீஸ்' உரிமையாளர் அப்துர்ரஸ்ஸாக் ஹாஜியாரின் தாய்மாமாவார்கள்.
இதே தெருவில், 'அபூசாலிஹ்' என்ற இன்னொருவரும் இருந்தார்கள். இவர்களை அத்தெருவாசிகள், 'அபுசாலி மாமா' என்று அன்போடு அழைப்பார்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு உடையவர்; துணிச்சலானவர். இவர்களைப்பற்றிக் கூடுதலாக எனக்குத் தெரியாது. மொத்தத்தில், நல்ல மனிதர்களுள் இவரும் ஒருவர்.
மர்ஹூம் அப்துஹை சின்ன நெசவுத் தெரு
கடைதெருவில் நாட்டு மருந்துக் கடை நடத்தி, மக்களுக்கு மருத்துவப் பணி செய்த ஆள் இவர்கள் ஒருவர்தான். இவர்களின் உறவினர் ஒருவர் மூலம் நான் கேட்ட செய்தி: இவர்களின் மரணப் படுக்கையின்போது, வீட்டுப் பெண்களைத் தமக்கு 'யாசீன்' ஓதும்படிக் கேட்டார்களாம். அதன்படி, அவர்கள் ஓதி முடித்தபோது, 'போதும்' என்பது போல் கையால் சைகை காட்டி, வானத்தின் பக்கம் ஒரு விரலை உயர்த்தியபின், இவர்களின் உயிர் பிரிந்ததாம்!
மர்ஹூம் மீராசாஹிப் மேலத்தெரு
இவர்களைச் சிறுவர் சிறுமியர், 'மிட்டாய் மீராசா' என்றே அழைப்பர். காரணம், இவர்களின் தோளில் கனத்த பை ஒன்று தொங்கும். அதில் நிறைய மிட்டாய் இருக்கும். அந்த மிட்டாய்களைப் பிள்ளைகளுக்குக் கொடுத்து,"சொல்லுங்கள், லாயிலாஹ இல்லல்லாஹ்!" என்று கூறிக்கொண்டே போவார்கள். இவர்கள் ஓட்டிக்கொண்டு வரும் சைக்கிளில் ஒரு வேட்டைத் துப்பாக்கி தொங்கும். ராணுவ வீரர் போன்ற உடை அணிந்திருப்பார்கள். முன்பு ராணுவத்தில் பணி புரிந்திருக்கக்கூடும். இவர்களின் உறவினர்கள் ஒரத்தநாட்டிலும் இருப்பதாகக் கேள்வி. இவர்கள் மேலத்தெரு ஜின்னா, மலக்கா மஜீத் ஆகியோரின் தந்தை ஆவார்கள்.
மர்ஹூம் அல்ஹாஜ் முஹம்மது அலிய் ஆலிம் (பாகவிய்) நடுத்தெரு
குர்ஆனை முறையாகத் 'தஜ்வீது' சட்டப்படி மனனம் செய்த 'ஹாஃபிஸ்'. இரு அரபிக் கல்லூரிகளில் பயின்று, மார்க்கச் சட்டங்களில் தேர்வு பெற்ற 'ஆலிம்'. அரபிக் கல்லூரியில் பட்டம் பெற்று ஊருக்கு வந்த தொடக்க காலங்களில், புரட்சிகரமாக மார்க்கச் சட்டங்களை மக்களுக்குத் தம் செயல்பாடுகளால் எடுத்துரைத்து, உண்மையை உணர்த்திய அறிஞர். அதற்கு ஓர் உதாரணம்: நாட்டு நடைமுறையில் உள்ள ஐவேளைத் தொழுகைகளுக்குப் பின் ஓதும் கூட்டு துஆ தொழுகையில் உள்ளதன்று என்பதை உணர்த்த, தாம் இமாமாக நின்று தொழவைத்த தொழுகை ஒன்றில் 'சலாம்' கூறித் தொழுகையை முடித்தவுடன் அவர்கள் எழுந்துவிட்டதை நான் கண்டுள்ளேன். ஆண் மக்களை 'அம்போ' என்று விட்டுவிட்டுப் பெண் மக்களுக்கே வீட்டையும் சொத்தையும் கொடுக்கும் ஊர்ப் பழக்கத்தை வன்மையாகச் சாடியவர்கள் இவ்வறிஞர். 'அலி' என்று தமது பெயர் அனர்த்தப்படாமல் இருக்க, உச்சரிப்புச் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக, 'அலி' என்பதை, 'அலிய்' என்று எழுதி மாற்றம் வருத்திய மனிதர் இவர். சில காலம், நமதூர் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியில் 'தீனியாத்' ஆசிரியராகப் பணியாற்றிச் சேவை செய்துள்ளார்கள். அதனால், இந்தத் தலைமுறை மாணவர்களுள் பலருக்கு மிகவும் அறிமுகமானவர்கள் இந்த 'அலியாலிம்சா'. கொள்கை விஷயத்தில் அவர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களின் 'வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு' என்ற மறைவற்ற பேச்சு (Frank talk) பலருக்குப் பிடிக்கும். குறிப்பாகத் தம்பி ஜமீலுக்கு. "அலிய் ஆலிம்சா, 'மப்ரூக் கார்கோ' உரிமையாளர் அப்துல் கரீமின் பாசமிகு தந்தையாவார்"
மர்ஹூம் ஷரஃபுத்தீன் ஹாஜியார் தட்டாரத் தெரு
'ஒற்றுமைச் சகோதரர்கள்' என்ற பெயருக்குச் சொந்தமானவர்கள், இவர்களும் இவர்களின் தம்பி (மர்ஹூம்) அப்துல்ஹாதி அவர்களுமாவர். அண்ணனும் தம்பியும், சொல்லி வைத்தாற்போன்று, அடுத்தடுத்துச் சில நாட்களில் இறந்தனர். பணக்காரராக இருந்தும், சிறிதளவும் பெருமையில்லாத அற்புத மனிதர்! கொழும்பில் இருந்த 'ஏ.எஸ்.எம். ஹாஜியார் & சன்ஸ்' என்ற நிறுவனத்தின் உரிமைப் பங்குதாரராக இருந்த இவர்களிடம் பணி புரிந்த ஒருவர் சொன்ன தகவல் ஒன்று: கம்பெனியில் வேலை செய்த பணியாளர்களுள் எவரேனும் தவறு செய்தால், அதை இவர்கள் திருத்தும் பாணியே வேறு. "ஏன் இப்படிச் செய்தாய்?" என்று கேட்கமாட்டார்களாம். "தம்பி இப்படிச் செய்திருக்கலாமே?" என்று கேட்டு, தவறிழைத்தவர் தன் தவற்றை உணரும்படிச் செய்வார்களாம்!
மர்ஹூம் ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் ஆஸ்பத்திரித் தெரு
இவர் காலத்தில் இருந்த ஊர்த் தலைவர்களுள் இவர் குறிப்பிடத் தக்கவர். ஏன்? இவர்களின் வீடு இருக்கும் ஆஸ்பத்திரித் தெரு முனையிலிருந்து நடுத்தெருவின் கடைசியிலிருக்கும் மரைக்கா பள்ளிக்கு நடந்தே வந்து, தம் நண்பர்களுடன் அமர்ந்து, தம் விவேகமான கருத்தாடல்களால், அவர்களைச் செவிமடுக்கச் செய்பவர். சிக்கலான சமூகப் பிரச்சினைகளுக்குத் தமது 'இராஜ தந்திரமான' ஆலோசனைகளைக் கொண்டு தீர்ப்பு வழங்க உதவிய முதிர்ந்த அறிவாளி. மத்தியஸ்தம் செய்வதில் நுணுக்கமானவர். சிரிக்க வைப்பார்; சிந்திக்கவும் வைப்பார்.
மர்ஹூம் அப்துர்ரஹீம் கீழத்தெரு
கடைத்தெருவில் வியாபாரியாக இருந்தாலும், கடமையான தொழுகையை, அதனதன் நேரத்தில், பள்ளிவாசலுக்கு வந்து தொழுதுவந்த நல்ல மனிதர். நம் 'கணினிச் செம்மல்' தம்பி ஜமீலின் பெரிய வாப்பா.
மர்ஹூம் சோமப்பா நடுத்தெரு
'சோமப்பா' என்றவுடன், இன்றுகூட, எங்களுக்கு அவித்த கொண்டைக் கடலைதான் நினைவுக்கு வருகின்றது! 'சேகு முஹம்மது அப்பா' என்ற இயற்பெயர்தான், 'சோமப்பா' எனச் சுருங்கிவிட்டது. அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் மரைக்கா பள்ளியை நோக்கி வந்து, 'பாங்கு' மேடைக்குப் போய், 'சலவாத்' ஓதத் தொடங்கிவிடுவார்கள். பகல் வேளைகளில், வீட்டிலிருந்து கொண்டைக் கடலையை அவித்துக்கொண்டு கிளம்பி, தாம் செல்லும் வழியிலிருக்கும் வீடுகளுக்கும் பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து, பாசத்தைப் பொழிவார்கள். இவர்களின் சந்ததிகள் (சின்னமச்சி வீடு) வளமாக வாழ்வதற்கு, இப்பெரியாரின் துஆவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
மர்ஹூம் அல்ஹாஜ் அப்துஷ்ஷகூர் ஆலிம் தட்டாரத் தெரு
நாங்கள் பள்ளி-கல்லூரி மாணவர்களாக இருந்த காலங்களில் எங்களுக்கு மார்க்க வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்கள். 'அப்துஷ்ஷுக்கூர் ஹாஜியார்' என்றே பிரபலமான இவ்வறிஞர், தேர்ந்த மார்க்க அறிஞர் (ஆலிம்) என்பது பலருக்குத் தெரியாது! தாய்மொழியான தமிழைத் தவிர, ஆங்கிலம், அரபி, உர்தூ முதலிய மொழிகளிலும் புலமை பெற்றவர். 'தப்லீக்' என்ற தீனுடைய உழைப்பில், உண்மையிலேயே 'உழைத்தவர்' என்று சொல்வதற்கு மிகப் பொருத்தமானவர். உலக நாடுகள் பலவற்றுக்குச் சென்று தீனுடைய உழைப்பைச் செய்தவர். தனிமையில் இவர்களிடம் பேசும் வாய்ப்பு எனக்குப் பல முறை கிட்டியது. அந்நேரங்களில் இவ்வறிஞரின் வழிகாட்டல்கள் எனக்குப் பயனுள்ளவையாக இருந்துள்ளன. பேணுதல், ஈடுபாடு என்பவற்றை இவர்களிடம் நான் நேரில் கண்டுள்ளேன்: கற்றுள்ளேன்.
என் நினைவில் வந்தவர்களைத் தொகுத்தேன். இதில், உண்மையாளராகவும், உழைப்பாளராகவும், எளிமையாளராகவும், உண்மையுரைப்பதில் துணிச்சலானவராகவும், சேவையாளராகவும், அன்பாளராகவும், செழுமையிலும் செம்மையாளராகவும், நுண்ணிய அறிவாளராகவும், வணக்கவாளியாகவும், சிறார்களிடம் அன்பு பாராட்டுபவராகவும், சிறந்த சிந்தனையாளராகவும் இருந்தவர்களைப் பற்றிய சிறு சிறு அறிமுகத் தகவல்களைத் தந்துள்ளேன். நம் வாசகர்கள் தம் பெற்றோர் அல்லது பெரியோர் மூலம் அறிந்த நல்லவர்களைப் பற்றியும் பின்னூட்டம் இடுங்களேன், பார்ப்போம். அத்தகையவர்கள் மறைந்த மாண்பாளர்களாக இருக்கட்டும்.
அதிரை அஹ்மது
19-10-2010
19-10-2010
14 Responses So Far:
அதிரை அஹமது காக்காவுக்கு !
அல்ஹம்துலில்லாஹ் ! மறைந்த நம் ஊர் பெரியவர்களின் நற்க்குனங்களைrயும்அவர்களின் பொது செயல்பாடுகள் மற்றும் மார்க்க ஞானங்களையும் அழகுற பழமை மணம் மாறாமல் தந்திருக்கின்றீர்கள்.
எனக்கு தெரிந்து நற்குணமுள்ள சில பண்பாளர்கள் :
1. முஹம்மது சாலிஹு - நடுத்தெரு (என் நண்பர் மன்சூர் அவர்களின்
தந்தை)
இவர்கள் அதிராம்பட்டினத்தில் தீனை வளர்த்த வேகமும் விவேகமும் வேறு யாருக்கும் இனி வருமா என்பது சந்தேகமே! அப்படி அதிரையின் தீனுக்காக அல்லாஹ் நியமித்த காவல் துறை என்று ஊரே சான்றிதழ் கொடுத்த
ஒரு மதிப்புமிக்கவர்களாக உயிர் வாழ்ந்த காலம் முழுதும் தீனுக்காக வாழ்ந்து சென்ற ஒரு சிறந்த இறை அச்சமுள்ள மார்க்கம் பேணிய பண்பாளர்.
2. அரபு காக்கா அவர்கள் (மதிப்பிற்குரிய மறைந்த ஏ .எம் .எஸ் அவர்களின் தந்தை)
இவர்கள் அந்தக்காலத்தில் தொழகை இல்லாதவர்களை அவர்களை பள்ளிவாசலுக்காக வர வைப்பதற்கு , யார் தொழ வருகின்றார்களோ அவர்களுக்கு ஒரு வக்துக்கு 50 பைசா என்று அன்றே கொடுத்து ஊக்கப்படுத்தியவர்கள் .
நாங்கள் இமாம் ஷாபி பிரைமரி நர்சரி பள்ளி மாணவர்களாக இருந்தபோது மேலத்தெரு குத்பா பள்ளியின் நிர்வாகியாக இருந்த வாத்தியார் அப்பா என்கிற அண்ணாவியர் அப்பா அவர்கள் சுமார் 400 ஆண்டுகால பள்ளியை ஒரு பூஞ்சோலையாக மாற்றியிருந்தார்கள் மேலும் அவர்கள் கிணறு வெட்ட நீரோட்டம் பார்ப்பதில் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். நோன்பு திறக்க வெடி வெடித்ததெல்லாம் அவர்கள் காலத்தோடு முடிந்துவிட்டது. பழைய மிஹ்ராபிற்கு பின்புறமிருந்த சுவைமிகுந்த மௌலம் பழ மரம் ஒன்று இன்னும் நினைவில் மட்டுமே இருக்கிறது, மரம் வெட்டப்பட்ட பின்பு அதுபோன்றதொரு மரத்தையோ பழத்தையோ மீண்டும் எங்கும் பார்க்க முடியவில்லை. அவர்கள் வளர்த்த இட்லி பூ மற்றும் செம்பருத்தி செடிகள் இன்னும் கண்ணுக்குள். வாத்தியார் அப்பா அவர்களுடைய பேரர்கள் பலர் என்னுடன் இமாம் ஷாபியில் படித்த பள்ளித்தோழர்கள் அப்பாவின் கண்டிப்பின் காரணமாக வேளை தவறாமல் வக்த்து தொழுகைகளை பேணக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அதேகாலகட்டத்தில், மேலத்தெருவை சார்ந்த வாத்தியாரப்பா (அல்லது வாத்தியப்பா) என்கிற இன்னொரு பெரிய மனிதரும் இருந்தார்கள் அனைத்து வக்த்து தொழுகைகளையும் ஜமாஅத்துடன் தொழக்கூடியவர்கள் குறிப்பாக, அரிக்கேன் விளக்குடன் அவர்கள் இஷா மற்றும் சுபுஹூ தொழுகைக்கு வருவதே மிக மரியாதையை ஏற்படுத்துவதாக இருந்தது. அவர்களுடைய வீடு இன்றைய சித்தீக் பள்ளியின் வலப்பக்கமிருந்தது. அவர்களுடைய வீட்டில் பெனியன்காய் என்கிற மரமொன்றும் இருந்தது
அதேபோல், இமாம் ஷாபி பள்ளியின் நிறுவனர் முஹம்மது சேக்காதி அவர்களும், எங்கள் நண்பர் குழுவால் அன்புடன் மாமா என்று அழைக்கப்பட்ட KSM முஹம்மது இஸ்மாயில் அவர்களும் பல நல்ல விஷயங்களுக்காக நினைவுகூறத்தக்கவர்களே.
அதிரையின் கல்வித் தந்தையை பற்றியும் தனியான ஒரு பதிவில் நினைவுகூறுமாறு அஹமது காக்கா அவர்களை அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.
//மர்ஹும்ரஹ்மத்துல்லாஹாஜியார்தட்டாரதெரு//இவர்கள்ஆரம்பத்தில்கடல்கரைதெருவில்வாழ்ந்தவர்கள். இவர்கள்கடல் தெருவில் இருக்கும் போது அதிகம் நான் பார்த்ததில்லை பெரும்பாலும் வெளியூரிலேயேஇருப்பார்கள்.[அப்பொழுது என்வயதுஏழு-ஏட்டாகஇருக்கும்] .மதராஸ்அல்லதுகொழும்பாகஇருக்கலாம். வக்கூப்சொத்து ஒன்றைஒருவர்அபகரித்துகொண்டத்தில்அவருடன்ஏற்பட்ட கருத்துவேறுபாட்டில்கடல்தெருவைவிட்டுகுடும்பத்தோடு வெளியானதாக பரவலானசெய்தி! கடல்தெருவைவிட்டுExitஆனாமுதல்குடும்பம்இதுவே! ஆஸ்பத்திரிதெருவுப்பக்கம்நான்போனால்அவர்கள் மனைவிஎன்னைகூப்பிட்டு விசாரித்துக்கொள்வார்கள். Exitமுன்நோன்புகாலங்களில்சகுருக்கு 'எழும்பி விட்டீர்களா?'' என்றwake-up.call பெண்களிடையே அங்கும்இங்கும் பரிமாற்றம் நடக்கும். அதுஒருஇனிமையானகாலம். வெள்ளைமனமும்மனிதாபிமானமுத்திரையும் மாசுபடியாத.பொற்காலம்.''உங்ககூட்டில்என்னகறி? எங்கூட்டில்தோளிபொடிஅவியல்!'' போன்றகறி விசாரணைகள்வீட்டுக்குவீடு நடக்கும். இப்பொழுதுபோல்நிலக்கரிஊழல்,2Gஊழல்விசாரணைஎல்லாம் கிடையாது.அப்போவெள்ளகாரதொரைநம்மைஆண்டான்!அவன்போட்ட தொப்பிக்குபேர்தொரைதொப்பி!இப்போயுள்ளபோலிசுக்குஅப்போ''சேவுவன்''என்றுபேர்.''சேவகன்''என்பதே'சேவுவன்'யெனமருவிற்று!
மேலத்தெரு யூசுபாக்கா மளிகைக் கடையின் கணக்குப் பிள்ளையும், அவரின் மருமகனுமாயிருந்த முஹம்மது ஆலம் (மொம்மாலம்) அவர்கள் அண்மையில் இறந்தவர். மேலத்தெருவின் 'ஒளிவிளக்கு' என்று அவரைக் கூறலாம். கரண்டைக்கு மேல் கைலி, தலையில் தொப்பி, கனிவான பேச்சு, ஜும்மாப் பள்ளியில் நேரம் தவறாத ஜமாஅத்துத் தொழுகை, ஊரில் எல்லாத் தெருவாசிகளுடனும் நட்புறவு, இப்படி ஒரு முன்னுதாரண வாழ்க்கையை வாழ்ந்து மறைந்த அந்த 'மொம்மாலம்' காக்காவை மறக்கத்தான் முடியுமோ?
//மர்ஹும்ரஹ்மத்துல்லாஹாஜியார் நடுத்தெரு//என்றுநானஎழுதியதுபிழை. ஆஸ்பத்திரிதெருஎன்றுதிருத்திக்கொள்ளவும்.
நன்மக்களை அதிலும் நம்மக்களை நாம் என்றென்றும் நினைவுகூர்வோம்.
//மர்ஹும்அஹமதுதம்பி//இவர்களை''தூண்டிமுள்''ஆலிம்சாஎன்றேஅழைப்பார்கள். இவர்களின்இயர்பெயர்அஹமதுதம்பிஎன்பதுஇப்பொழுதுதான் எனக்குதெரிகிறது. சுபுஹுதொழுகைக்குபோகும்போது ''அஸ்ஸலாத்து ஹைருன்மினன்அவுன்' என்றுசற்றுஓசையுடன்சொல்வதுடன்''தூக்கத்தைவிடதொழுகையே மேலானது!''என்றும்சொல்லிக்கொண்டேபோவார்கள்.இவர்கள்கையில் எப்பொழுதும்ஒருதுணிமூட்டைஇருக்கும்.அதன்யுள்ளேஎன்னஇருக்கிறது என்றுஎனக்குதெரியாது.பெரும்பாலானநாட்களில்அவர்களைஊரில்காண முடியாது.என்வீட்டுக்காரஅம்மாளிடம்''தூண்டிமுள்ஆலிம்சாவுக்குஎன்ன வருமானம்?தோட்டம்தொறவுஏதும்உண்டா?''என்றுகேட்டேன்! ''இதுதெரியாதா?அவர்களுக்குதூண்டிமுள்யாவாரம்!அவர்கள்கையில் வைத்திருக்கும்மூட்டையில்பலவகையானதூண்டில்கள்இருக்கும்!''என்ற பதில்வந்தது. பெரும்பாலானஹாஜியார்களுக்குஎல்லாம்பட்டப்பெயர்வைத்த நம்ஊறார்''தொழுகைக்குவா!தொழுகைக்குவா!''என்று தூண்டி-தூண்டி தொழ கூப்பிட்டதால் ''தூண்டிமுள்ஆலிம்சா'' என்றுபெயர்வைத்துவிட்டார்களோ? ' யென நினைத்தேன். அதேகாலத்தில்கடல்கரைதெருவில்'சேட்மாமா''என்றுஎல்லோராலும் அழைக்கப்பட்டஒருநல்லமனிதர்''அஸ்ஸலாத்துஹைருன்மினன்அவுன்-தூக்கத்தைவிடதொழுகையேமேலாது!''என்றுவொவ்வொருவீட்டுவாசலி லும்ஓசையுடன்கூறிதொழுகைக்குஅழைத்தார்கள்.இந்தஇருவருக்கும்ஓர் நல்லிடம்கொடுக்கஎல்லாம்வள்ளஅல்லாஹ்வைவேண்டுவோம்.ஆமீன்.
பலஆண்டுகளுக்குமுன்நம்ஊரில்திடீரெனகலராபரவியது! எங்கள்வீட்டில்[கடல்கரைதெரு]என்தங்கைக்கும்என்சிறிய தாயார்மகனுக்கும்மேமுதலில் காலராகண்டது. அடுத்தடுத்து காட்டுதீபோல் அதுஊரெங்கும்பரவியது. நம் ஊரில் வயது வித்தியாச மின்றி தெருவுக்கு மூனுநாலு 'போய்'விட்டதாக செய்திகள் பறவின! என் சிறிய தாயாரின் மகனும்அதில்ஒன்று.இத்தனைக்கும் சளைக்காது பஞ்சாயத்து போர்டு சுகாதாரஇலாக்கபோர்க்காலநடவடிக்கை எடுத்துதயக்கமின்றிசெயலாற்றியது.அப்பொழுது அரசுதுறையில் மனிதர்கள் பணியாற்றினார்கள் .வௌவொருநாளும்வந்துவீட்டைசுற்றி மருந்துதொளிதார்கள்.தெருக்கள்சுத்தம்செய்யப்பட்டன.பஞ்சாயத்துசேர்மன்னாகஇருந்தவர் மர்ஹும்S.M.S. ஷேய்க்ஜலாலுதீன் அவர்களின் தந்தையாவார். கடல்கரைதெருவில்மீ.சே.சித்திக்முஹமதுமரைக்கார்.கா.மு.கதர்மொஹின் ஆகியஇருவருமேஎல்லாமையத்துகளையும்குழியில்இறங்கிஅடக்கம் செய்தார்கள்.கடல்கரைதெருவில்மட்டும்ஒரேநாளில்பதினோருமையத்து.மையத்துஎண்ணிக்கைகூடக்கூடமையத்துக்குவரும்சிவிலியன்கள் குறைந்து கொண்டே போனார்கள். ஆனால் குழிவெட்டு வோரும்கபான் இடும்லபைமார்களும்களைதுப்போனார்களேதவிரஉயுருக்கு அஞ்சவில்லை! பதினோராவது மையத்துமுடிந்ததும் சந்ததூக்கைதூக்கி வெட்டிகுளத்தில் வீசிவிட்டு வீடுவந்தார்கள். எத்தனையோபிள்ளைகள் தாயற்றுபோயினர்! எத்தனையோதாய்கள் பிள்ளைகளை பறிகொடுத்தார்கள் .அந்தப்பதினோன்னுனோடு ஓய்ததுஓலம். காவன்னாவும்மீயன்னாசீனாவும் இரவு ஒரு மணிவரையில் எங்கள்வீட்டிலிருந்துஎன்தங்கைக்கு ஒதிபார்த்துவிட்டுவீட்டுக்குபோனார்கள் .மீ.சே.சொன்னது''பிள்ளைக்குநிறையசுடுதண்ணிகொடுங்கள்'' .மீ.சே.சித்திக்மரைக்காயர்.யார்என்றால்சுடுதண்ணிமரைக்கருடைய மைத்துனர்.அந்தஅபாயநேரத்தில் கடைசி வரைகை கொடுத்து நின்றவர்களை நாம்மறவாதுநம்இறுதிமூச்சுவரைநினைவு கொள்வோம். அவர்களுக்கஅல்லாவிடம்கைஏந்துவோம்.
அப்பொழுது அரசுதுறையில் மனிதர்கள் பணியாற்றினார்கள் - நல்ல குட்டு
நான் மேலே குறிப்பிட்டுள்ள நல்லோர்கள் குறித்து இணைப்புச் செய்திகள் சில:
1. மாஹூம் அண்ணாவியார் அப்பா அவர்களின் பெயர் செய்யது முகமது அண்ணாவியார் என்பதாகும்.
2. மர்ஹூம் வாத்தியப்பா அவர்கள் 'அகமது ஜலாலுதீன் காக்கா' என்று அழைக்கப்பட்டுள்ளார்கள்
3. முஹமது சேக்காதி என்பதற்கு பதிலாக மர்ஹூம் குழந்தை சேக்காதி என்று வாசிக்கவும்.
மர்ஹூம் செய்யது முகமது அண்ணாவியார் மற்றும் மர்ஹூம் அகமது ஜலாலுதீன் காக்கா ஆகியோர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த இன்னொரு பெருந்தகை மர்ஹூம் ஷரீப் அப்பா அவர்கள்.
ஷரீப் அப்பா அவர்களின் தரிப்பிடமாக மேலத்தெரு குத்பா பள்ளியே திகழ்ந்தது.
மேலும் தன் பேரர்களான மீரா என்கிற சாகுல் ஹமீது (தற்போது சென்னையில் ஆசிரியராக பணிபுரிகிறார்) மற்றும் மவ்லவி அப்துல் மஜீத் (தற்போது மேலத்தெரு பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளியின் இமாமாக விரும்பி பணிபரிகிறார்) ஆகியோருக்கு தேவையான மார்க்கக் கல்வியை ஊட்டி வளர்த்தவர்கள்.
இரு சாமானியர்களை பற்றிய நினைவுகள்:
1. நண்டுவெட்டி வெப்பல் என்கிற பெயரில் காடாக கிடந்த இடம் பிலால் நகராக உருமாறிய பிறகு அதாவது முஸ்லீம்கள் கணிசமாக குடியேற ஆரம்பித்த நிலையில் அங்கு ஒரு தொழுகை பள்ளியை ஆரம்பிக்க வேண்டும் என தன் சக்திக்கு மீறிய கடும் முயற்சிகளை செய்து அல்லாஹ் உதவியால் சாதித்து காட்டியவர் மர்ஹூம் (இடுப்புக்கட்டி) அப்துல் கபூர் அவர்கள், இறுதியில் தான் உருவாக்கிய பள்ளியிலேயே புனித ரமலானில் அன்னாரின் உயிர்பிரிந்தது. இன்று கட்டப்பட்டுள்ள புதிய பிலால் பள்ளியை நிர்வகிப்பது அவர்களின் மருமகன் அஹமது கபீர் அவர்கள்.
2. பாவா என்கிற மர்ஹூம் முஸ்தபா அவர்கள், நமது முன்னோர்களுக்காக பல வருடங்கள் குத்பா பள்ளியில் குழி வெட்டியவர் மேலும் ரமலானுடைய காலங்களில் ஸஹருக்கு மக்களை எழுப்புவதற்காக பாட்டுப்பாடி தப்ஸ் அடித்து சேவையாற்றியவர். அவரது இறப்புக்குப்பின் குழி வெட்ட ஆள் கிடைக்காமல் அள்ளாடியபோது தான் அவரது தேவையையும் சேவையையும் உணர்ந்தோம். உணரும் வரை நமக்கு அவர் வெறும் பாவாவாகவே தெரிந்தார்.
இடுப்புக்கட்டி அப்துல் கபூர் என்பதற்கு பதிலாக மர்ஹூம் (இடுப்புக்கட்டி) அபூபக்கர் என திருத்தி வாசித்திக் கொள்ளவும்.
Post a Comment