Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

26

அதிரைநிருபர் பதிப்பகம் | December 12, 2014 | , , ,

தொடர் - பகுதி இருபது

சொந்தக் காரணங்களாலும் சொதப்பல் காரணங்களாலும் இயக்கங்களும் சாதி சங்கங்களும் தோன்றுகின்றன; தோன்றிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் ‘பேசும்போதெல்லாம் நன்றாகப் பேசிவிட்டு பாட்டெழுதும்போது பாட்டை விட்டு விட்டு’ திருவிளையாடல் செய்பவர்கள்தான் துரதிஷ்டவசமாக இன்று தோன்றும் எண்ணற்ற இயக்கங்களின் அண்ணன்மார்களும் பெரிய, சின்ன ஐயாமார்களும் வார்த்தைஜாலம் செய்யும் வாத்யார்மார்களும் ஆவார்கள். உண்மையில் ஒரு சமுதாயம் ஈடேற்றம் பெற என்ன செய்யவேண்டுமென்ற சிந்தனை இல்லாமல் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு , ஒரே பிரச்னைக்காக ஒன்பது இடங்களில்    பிரிந்து நின்று கோஷம் போடும் இயக்கத்தலைவர்கள் நிறைந்த இந்தக் காலகட்டத்தை ஒப்பிடும்போது, பல ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்போனால் தான் பிறக்குமுன்பே     தான் பிறந்த மண்ணில் வாழ இயலாமல் ஜெர்மனிக்கு விரட்டியடிக்கப்பட்ட ஒரு யூத இனத்தின் மைந்தன், 19 – ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தனது மண்ணை மீட்டெடுப்பதற்காக உண்மையில் சிந்தித்தான்; செயல்பட்டான் ; அதில் வெற்றியும் கண்டான்.

ஆம்! சென்ற அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட தியோடர் ஹெசல்தான் அந்த மண்ணின் மைந்தன். இன்றைக்குச் சரியாக 119 ஆண்டுகளுக்கு முன்பு தனது முன்னோர்களின் பூமியை மீட்டெடுப்பதற்கான விதையை ஆழமாக விதைத்தார் தியோடர் ஹெசல். தனது சமுதாயத்தின் தூக்குத்தூக்கி நிலையைக் கண்டு உள்ளம் உருகி உண்மைக் கண்ணீர் வடித்தார்; அந்தக் கண்ணீர் முத்துக்களை எழுத்துக் கேர்வையாக்கி உணர்வு பொங்கும் கட்டுரைகளாகவும் வடித்தார். சொந்த பப்ளிகேஷன் நிறுவனத்தின் மூலம் நூல்களாக வெளியிட்டு, நிலத்தின் தரைமட்ட அளவிலிருந்து தண்ணிலவு இருக்கும் வானளவுக்கு ( From Land to Moon ) உயர்ந்து பணம் பார்த்தாரா என்று தெரியவில்லை.

இவரைப் பற்றி , Michael Shapiro எழுதிய The Jewish 100 – A Ranking of the Most Influential Jews of All Time என்கிற நூலில் இவருக்கு TOP TEN - ல் எட்டாவது இடத்தை வழங்கி சிறப்பிக்கிறார்.

இந்த செயல் வீரன் செய்தது என்ன? இவர் தோற்றுவித்த Zionist Movement தான் இன்றைய இஸ்ரேல் நாட்டைப் பெற்றெடுத்த தாய் என்று சொல்லலாம். நாடு உனக்கு என்ன செய்தது என்று எண்ணாதே ! நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என்ற கேள்வி இவரது நெஞ்சில் அன்றே தோன்றியது. இவரைப் பற்றி ,

More than a decade of creative and commercial writing culminated in 1896 with feverish work on a pamphlet proclaiming the necessity of a Jewish State. Though others before him had urged a return of Zion , it was Theodar Hezl’s visionary article and political devotion in organizing Zionist Movement that led fifty years later to the creation of the State of Israel . என்று நாம் மேலே குறிப்பிட்டுள்ள நூல் குறிப்பிடுகிறது.

தன்னைப் போலவே தனது மண்ணுக்காக சிந்திப்பவர்கள் மாநிலமெங்கும் மண்டி வாழ்வதை தெரிந்துகொண்டார். அவர்களையும் அவர்களுடைய எண்ணங்களையும் மூலவளங்களையும் முதலில் ஒருங்கிணைக்கவேண்டுமென்று உணர்ந்து கொண்டார். அதன்படி உலகம் முழுதுமிருந்து தேர்ந்தெடுத்த ஆறு யூதர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவுக்கு “ உலக யூதர்களின் கூட்டமைப்பு “ என்று பெயர் சூட்டினார்.

இந்தக் குழு, ஒருநாள் சுவிட்சர்லாந்தில் ஒரு உல்லாச விடுதியின் ஓரத்தில் கூடியது. கூடிய குழு சுட்டகோழியும் சுடச்சுடக் காபியும் குடித்துவிட்டுக் கலையவில்லை. தங்களது மண்ணை மீட்க என்னவெல்லாம் செய்யலாமென்று யோசித்தார்கள். அந்தக் கூட்டத்தில் நூறு பக்கங்கள் கொண்ட தியோடரின் திட்ட அறிக்கை ஒன்று அலசப்பட்டு இறுதி வடிவம் தரப்பட்டது. அந்த செயல் அறிக்கை, உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருந்த யூதர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டது. இந்தத்திட்டங்கள் யாவும் வெறும் எண்ணிக்கைத் திட்டங்கள் அல்ல; எண்ணங்களின் திட்டங்கள்; யூதர்களை, இனி இஸ்ரேலை நோக்கி இயக்குவதற்கான திட்டங்கள். இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த ஐம்பது ஆண்டுகளில் இஸ்ரேல் என்ற பெயருடன் ஒரு நாடு உண்மையிலேயே உலகத்தின் வரைபடத்தில் உருவாகிவிட்டது என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தத் திட்ட அறிக்கையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

இந்தத்திட்டத்தின் தலையாய அம்சம் உலகெங்கும் வாழும் பணக்கார யூதர்களிடமிருந்து பணம் திரட்டுவது. அவ்வாறு சமுதாயத்திலிருந்து திரட்டப்பட்ட அந்தப் பணத்தை ஹைபர் மார்கெட் வைக்கப் பயன்படுத்தாமல், சிதறிக் கிடக்கும் யூதர்களுக்காக ஒரு சொந்த நாட்டை உருவாக்கப் பயன்படுத்துவதென்றும் பணம் கொடுத்தாவது உலகத்தில் ஒரு இடத்தை அல்லது ஒரு நாட்டின் பகுதியை யூதர்களுக்காக வாங்கி அதில் யூதர்களைக் குடியமர்த்தி விடவேண்டுமென்றும் அந்த அறிக்கையின் அடிப்படையில் அறுவர் குழு தீர்மானித்தது.

இப்படி நிதி திரட்டிய நேரத்தில் பாலஸ்தீனம்தான் யூதர்களுக்கான நாடு என்பதை அவர்கள் தீர்மானிக்கவில்லை. யூத இன மகனே! உனக்கென்று உறங்க உலகில் ஒரு இடம் அவ்வளவுதான். இந்த நோக்கத்துக்காக பணம் கொட்டோ கொட்டென்று குற்றால அருவிபோலக் கொட்டியது.

எங்கே வாங்கலாம் இடத்தை ? ஐரோப்பாவில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வாங்கலாமா? வேண்டாம்! கிருத்துவர்களை நம்ப இயலாது. எப்போது அவர்கள் கட்டாரியைக் கையில் தூக்குவார்கள் என்பது தெரியாது. இறுதியில், கையில் இருக்கும் முதலும் பறிமுதலாகிவிடும் என்று பயந்தார்கள்.

அமெரிக்காவில் பல மாகாணங்கள் ஆள் இல்லாமல் கிடந்தன. அங்கே போகலாமா என்று சிந்தித்தார்கள். புதிய இடத்தில் வலது காலை எடுத்துவைப்பதற்கு பலர் தயக்கம் காட்டி கருத்துரைத்தார்கள்.

அர்ஜென்டைனா, கென்யா, சிலி போன்ற நாடுகளில் இலகுவாய் இடம் கிடைக்க வாய்ப்பு இருந்தது. ஆனாலும் கனவு தேசமான பாலஸ்தீனையே அனைவரும் விரும்பியதால் எப்பாடு பட்டேனும் பாலஸ்தீனையே அடைவதென்று முடிவு செய்தார்கள். இளித்தவாயர்கள் முஸ்லிம்கள்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள். அதற்காக ஒரு முன்னோட்டமாக, 1897 ல் பாலஸ்தீனில் யூதர்கள் இன்னும் உட்புகவும் வாழ்வும் வசதியான இடங்களைத் தேர்ந்தெடுத்து அறிக்கை தர ஒரு குழுவையும் அனுப்பி வைத்தார்கள். பாலஸ்தீன் நமக்கே என்ற குறிக்கோளின் கட்டிடத்தை இப்படி ஒவ்வொரு செங்கல்லாக எடுத்துவைத்துக் கட்ட ஆரம்பித்தார்கள்.

பாலஸ்தீனோ துருக்கியின் கரங்களில்! அப்போது துருக்கியின் அரசராக இருந்தவர் சுல்தான் (இரண்டாம்) அப்துல் ஹமீது ஆவார்கள். இவரும் யூதர்களுக்கும் கிருத்தவர்களுக்கும் சகல சுதந்திரமும் கொடுத்து கட்டுச்சோற்றுக்குள் எலியை வைத்துக் கட்டியவர்தான்; கொள்ளிக் கட்டையை மடியில் கட்டிக் கொண்டு இருந்தவர்தான். சுல்தான் அப்துல் ஹமீதை தியோடர் தலைமையிலான குழு சந்தித்தது. ‘ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிய’ யூதர்களின் நோக்கம் அறியாத சுல்தான், யூதர்களை இன்னும் அதிகமாக வந்து குடியேற அனுமதித்தார். ஆனால் குடியிருப்புக்கு இடம் கேட்டு வந்த யூதர்களுக்கு குடியேறும் உரிமை மட்டும் போதாதே! அவர்களுத் தேவை ஆட்டின் தலை; ஆட்டின் கொம்பு அல்ல.

ஆகவே, சுல்தானிடம் தங்களின் பணப் பெட்டிகளைத் திறந்து காட்டினார்கள். பணத்துக்கு பதிலாக, பாலஸ்தீனின் ஒரு சில பகுதிகளை தங்களுக்கு விலைக்குத் தர சுல்தானின் சம்மதத்தைக் கேட்டனர். அதற்கு சுல்தான் அப்துல் ஹமீது அவர்கள் அளித்த பதில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.

“பாலஸ்தீன் எங்களின் தனிப்பட்ட சொத்தல்ல ; ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகத்தின் சொத்தாகும். இந்தப் புண்ணிய பூமி - முதல் கிப்லா – எங்களிடம்தான் இருக்க வேண்டுமென்று எங்களது முதல் கலிபா ஹஜரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் கனவு கண்டார்கள். அவர்களது கனவு எங்களது அடுத்த கலிபா ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் காலத்தில் நனவானது. அன்று முதல் ஒரு இடைக்காலம் தவிர பின்னர் சுல்தான் சலாஹுதீன் (ரஹ்) அவர்களின் காலத்திலிருந்தும் நீண்ட காலமாக எனது சமுதாயம் இதற்காக இரத்தம் சிந்திப் போராடி இருக்கிறது. எனவே என் உடம்பில் ஒரு சதைத் துண்டை தந்தாலும் என் நாட்டில் ஒரு சிறு பகுதியைக் கூட விட்டு தரமாட்டேன்” என்று சொன்னார் சுல்தான் அப்துல் ஹமீது. (Sultan Abdul-Hamid and the Zionist Colonization of Palestine: A Case Study from Jerusalem. By Dr. Hala Fattah).

இந்த இடத்தில் சுல்தான் அப்துல் ஹமீது அவர்களை பணத்தால் விலைக்கு வாங்க யூதக் குழு முயற்சி செய்த காரணத்தை நாம் குறிப்பிட வேண்டி இருக்கிறது. பெட்டி நிறையப் பணத்துடன் சுல்தானை யூதர்கள் அணுகிய காலம் , துருக்கி, நிதி நெருக்கடியில் மாட்டி கொண்டு பல ஐரோப்பிய நாடுகளிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வழி இல்லாமல் தவித்த காலமாகும். ஆகவே நிதி நெருக்கடியான சூழ்நிலைகளைப் பயன்படுத்தி சுலபமாக சுல்தானை பணத்தால் வளைத்து விடலாமென்று வந்த யூதக் கூட்டத்துக்கு, ‘ பணம் என்னடா பணம்! பணம்! குணம்தானடா நிரந்தரம்! ‘ என்ற கொள்கை உடைய சுல்தானுக்கு முன், அவர் தந்த சுக்கு மல்லிக் காபியை குடித்துவிட்டு காலிக் கோப்பையை சத்தமில்லாமல் வைத்துவிட்டு இடத்தைக் காலி செய்வதைத் தவிர யூதர்களுக்கு வேறு வழி இல்லை. சுல்தானின் உறுதிக்கு முன் யூதக் காளிகளின் கைகளும் காலி! அவர்களின் ஆசையும் நிராசை! ‘அடுத்த வீட்டை பாருங்க பாவா! ‘ என்று விரட்டப்பட்டார்கள் யூதர்கள்.

கைகளிலோ கனத்த பணப்பெட்டிகள்! இதயத்திலோ பாலஸ்தீனக் கனவு ! என்ன செய்வது? தியோடர் ஹெஸில் மற்றும் அவரது அணி யோசித்தது. பணத்துக்கு மயங்காதவர் யார் இருக்கிறார்கள் என்ற தத்துவம் மனதில் நிழலாடியது. இதே பணத்தை வைத்து என்ன செய்யலாமென்று யூத மூளை யோசித்தது. பணம் பத்தும் செய்யுமென்பது யூதர்களின் பால பாடம்.

யூதர்களைப் பற்றியும் அவர்களது எண்ண சுழற்சியையும் பற்றி நகைச்சுவையாக எழுதிய ஒரு அமெரிக்க எழுத்தாளர் இப்படி எழுதினார். “தான் நினைத்துப் போன ஒரு வாய்ப்பு அடைபட்ட யூதன் அதற்கு மாற்றாக அடுத்த வாய்ப்பை யோசிக்க ஆரம்பித்த நேரம் பார்த்து அவனது உச்சந்தலையில் ஒரு ஆணியை நீங்கள் அடித்து சற்று நேரம் கழித்து அந்த ஆணியை உருவிப்பார்த்தால் அந்த ஆணி ஒரு ஸ்க்ரூவாக உருமாறி இருக்கும்”.

முதுகில் பணமூட்டையைச் சுமந்து கொண்டு திரிந்த தியேடர் ஹெசில் உடைய மனதில் அடுத்துத் தோன்றிய மின்னல்தான் நிலவள வங்கித் திட்டம். நில வள வங்கி ஒன்றைத் தொடங்கி , அதன் மூலம் விவசாயிகளுக்குப் பணத்தைக் கடனாகக் கொடுத்து வட்டி எனும் ஆயுதத்தால் அவர்களை வீழ்த்தி அவர்கள் விழி பிதுங்கும் நேரத்தில் அவர்களது விளை நிலங்களைப் பிடுங்குவது என்பதே இந்தத் திட்டம்.   

இந்தத்திட்டம் செயல்பட்ட விதம் விரைவானது; வேடிக்கையானது. பாலஸ்தீனில் வாழ்ந்த ஏழை விவசாயிகளின் பக்கம் கவனத்தை கொண்டு சென்றது இந்த அமைப்பு. அவர்களுக்கு உதவுவது போன்ற சிந்தனையில் அவர்களின் வீட்டை அல்லது விளை நிலத்தை அடமானம் வாங்கிக் கொண்டு சொத்தின் மதிப்புக்கு மீறி வட்டிக்கு கடன் கொடுத்தனர். வீடு அல்லது விளைநிலம் வட்டியில் மூழ்கிய பொழுது அதைத் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டனர்.

நிலத்தை விற்கும் சிந்தனையில் இருந்த விவசாயிகளுக்கு அவர்கள் எதிர்பார்த்ததைவிடப் பல மடங்கு பணம் கொடுத்து அந்த நிலங்களை எழுதி வாங்கிக்கொண்டனர். உலகத்தின் பல நாடுகளிலும் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் பாலஸ்தீனத்தில் நிலங்களை வாங்கி போட்டிருந்தனர் அவர்களைத் தேடிக் கண்டறிந்து மதிப்புக்கு மீறிய பணம் கொடுத்து ஏமாற்றி அவற்றையும் எழுதி வாங்கிக் கொண்டனர். வாங்கிய வீடுகளில் முன்பு வங்கிக்காகப் பணம் கொடுத்த யூதர்களை ரகசியமாகக் குடி அமர்த்தினர்.

இந்த சூழ்ச்சியை கொஞ்சம் தாமதமாக புரிந்துகொண்ட துருக்கியின் சுல்தான் பத்திரப்பதிவு சட்டத்தைக் கடுமையாக்கினார். எனவே இதற்கு பின்னர்     யூதர்கள் பத்திரத்தை பெயர் மாற்றம் செய்யாமலேயே வீடுகளை வாங்கி, அவற்றை விற்ற முஸ்லிம்களை ரவுடிகளை வைத்துக் காலி செய்தனர். நிலவள வங்கியின் நோக்கமே பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு கடனாசை காட்டி நிலங்களை அபகரித்து அவற்றை யூதர்களின் அனுபவத்தில் கொடுத்துவிடுவதுதான்.

நிலத்தை அடமானத்துக்கு வாங்கியது போக இந்த வங்கிகள் நேரடியாக நிலக் கொள்முதல் திட்டத்தையும் ஆரம்பித்தது. யாரும் நிலங்களை விற்க விரும்பினால் அதை அடமானம் வைக்கக் கூட வேண்டியதில்லை. நேரடியாக வங்கிக்கு விற்றே விடலாம். விற்பனை விலை? எதிர்பாராத இமயமலை விலை.

உள்ளாங்குருவியின் மூளையின் அளவுக்குக் கூட தங்களின் மூளையைப் பயன்படுத்தாத அரபுகள், யூதர்களின் நிலவளவங்கிகளை ஏதோ ‘வாராதுபோல் வந்த மாமணி போல்’ எண்ணிக் கொண்டார்கள். ‘ஒரு யூதனுடன் கை குலுக்கினால் உன் விரல்களை எண்ணிப் பார்த்துக் கொள்’ என்று ஒரு பழமொழி இருப்பதை மறந்துவிட்டார்கள். ஆதாயம் இல்லாமல் ஆற்றைக் கட்டி இறைப்பார்களா? சோழியன் குடுமி சும்மா ஆடுமா? என்றெல்லாம் அரபுகள் சிந்திக்கவே இல்லை.

பாலஸ்தீனத்தின் நிலங்களின் தன்மைகளைப் பார்த்தால் கணிசமான இடங்கள் வெறும் தரிசாகக் கிடந்தன. அவற்றால் எவ்வித விவசாயப் பலனும் இல்லை. இப்படிப் பட்ட தரிசு நிலங்களை எதிர்பாராத உயர்ந்த விலைக்கு எடுத்துக் கொள்ள யூதர்களின் வங்கிகள் முன் வந்தபோது அதன் பின்னால் இருந்த சதியை அரபுகளால் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு படிப்பறிவு இல்லாதது பெருங்குறை. தரிசு நிலங்கள்தானே நல்ல விலைக்குப் போகட்டுமே என்று நினைத்தார்களே தவிர அந்த நிலங்கள் யூதர்களுக்குப் பரிசாகப் போகிறது என்று அவர்கள் நினைக்கவே இல்லை.

நிலங்களை அடமானம் வைக்கும் போதோ அல்லது விற்கும் போதோ யூதர்கள் நீட்டும் இடங்களில் எல்லாம் அவற்றின் விதிகளைப் படித்துக் கூடப் பார்க்காமல் கையெழுத்துப் போட்டுவிட்டு பணத்தை வாங்கித் திணித்துக் கொண்டுப் பறந்தார்கள். இந்த நடவடிக்கையால் பாலஸ்தீனத்தின் ஒரு கணிசமான நிலப்பகுதி யூதர்களின் உடமையாயிற்று.

இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க அரசியலில், பிரிட்டன் மற்றும் துருக்கி ஆகியோரின் உறவில் உராய்வுகள் ஏற்பட்டன. துருக்கி ஜெர்மனின் பக்கம் சாய ஆரம்பித்தது. ஜெர்மனிக்கு தனது ஆளுமைக்குட்பட்ட பகுதியில் இரயில்வே திட்டம் அமைக்க துருக்கி இடம் கொடுத்தது.

இந்த நிலையைப் பயன்படுத்தி, தியோடர் ஹெசில் ஒரு மினி உலக சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார். ஜெர்மனியிடமிருந்து சாதகமான பதில் வராத போது, பிரிட்டனிடம் நெருங்கத் தொடங்கியது யூத சமூகம். அங்கும் அவர்களது கருவி பணம்தான். ஒருவேளை, பிரிட்டனுக்கு ஜெர்மனியுடன் உள்ள பகை இன்னும் வளர்ந்து போர் ஏற்பட்டால் அந்தப் போருக்காக தேவைப்பட்ட பண உதவிகளை யூத சமூகம் பிரிட்டனுக்குச் செய்யும்- பதிலாக துருக்கியிடமிருந்து பாலஸ்தீனை மீட்டு யூதர்களிடம் ஒப்படைக்கவேண்டுமென்பதே பிரிட்டனும் யூதர்களும் சம்மதித்த சிதம்பர ரகசியம்.

ஆண்டாண்டு காலமாக துருக்கியைத் தொடர்ந்து ஆதரித்து வந்த பிரிட்டனின் வரவேற்பறை, இப்போது யூதர்களுக்கு இருக்கைகளைக் காட்டி தலையணைகளைத் தட்டிப் போட்டு அமரச் சொன்னது. ‘ கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி ‘ என்றது. துருக்கிய அரசு, லண்டனுக்கான தனது டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு பிராங்க்பர்டுக்கு அதை புக் செய்தது. இந்த நிலையில் தனது சமுதாயத்துக்காக இவ்வளவையும் சாதித்த தியோடர் ஹெசில் 1904- ஆம் ஆண்டு தனது இறுதி மூச்சை விட்டார்.

அந்தக் காலகட்டத்தில் முதலாம் உலகப் போருக்கான மேகங்கள் ஐரோப்பாவில் சூழ ஆரம்பித்தன. கூட்டணிகள் இடம் மாற ஆரம்பித்தன.

இன்ஷா அல்லாஹ் முதல் உலகப் போர்க் களத்தில் சந்திக்கலாம்.

இபுராஹிம் அன்சாரி

26 Responses So Far:

அப்துல் கபூர் said...

அஸ்ஸலாமு அலைக்கும், இப்ராகிம் அன்சாரி காக்கா.
மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது 'பாலஸ்த்தீனம்' தொடர். எப்போதும் நான் விரும்பிப் படிக்கும் இத்தொடர் எவ்வித இடருமின்றி தொடர வாழ்த்துக்கள்.

Ebrahim Ansari said...

வ அலைக்குமுஸ் சலாம் தம்பி அப்துல் கபூர்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே.

இந்தத்தொடர் சிறந்த முறையில் சென்று கொண்டு இருக்கிறதென்றால் இதன் காரணம் நான்மட்டுமல்ல. அல்லாஹ்வின் அருள். மற்றும் தங்களைப் போன்ற ல்நல்ல உள்ளங்களின் ஒத்துழைப்பு.

இந்தத் தொடருக்கு ஒரு தூண்டுகோலாக தாங்கள் இருந்து அவ்வப்போது அமெரிக்காவிலிருந்து அழைத்து ஆலோசனைகளைச் சொல்லி சிறந்த முறையில் ஒரு மறைமுகப் பங்களிப்பாளராக இருப்பதை நான் நன்றியுடன் சொல்லியே ஆக வேண்டும்.

ஜசாக் அல்லாஹ்.

ZAKIR HUSSAIN said...

To Brother Ebrahim Ansari,

//ஒரே பிரச்னைக்காக ஒன்பது இடங்களில் பிரிந்து நின்று கோஷம் போடும் இயக்கத்தலைவர்கள் நிறைந்த இந்தக் காலகட்டத்தை ஒப்பிடும்போது,....//


இதெல்லாம் நமது குணங்கள். ...எப்படி நாம் முஸ்லீம்னு காண்பிப்பது.....இப்படித்தான் பிரிந்து செயல்பட்டு எந்த பிரச்சினையையும் முடிவுக்கு கொண்டுவராமல் இருக்கிறோம்.

அதிகம் படிக்காத மலைஜாதியினர்/ நரிக்குறவர்கள் போன்றவர்களிடம் இருக்கும் ஒற்றுமை கூட அயன் கலையாத வெள்ளை சட்டையும் /கைலியும் உடுத்தி உயர்தர சென்ட்டும் / உயர்ந்த ஸ்மார்ட்ஃபோனுடன் அலையும் நம்மிடம் ஒற்றுமை இல்லை. இருந்து இருந்தால் எவனிடமும் போய் கேட்கும் அவசியம் இருந்து இருக்காது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் காக்கா….

மிகவும் அற்புதமாக தொடர் நடை போடுகிறது…

எழுத்தும் அதனுள் ஊடுருவி வரும் தமிழும் உவமைகளும் அற்புதம் !

இப்னு அப்துல் ரஜாக் said...

மாஷா அல்லாஹ் காக்கா….

மிகவும் அற்புதமாக இத் தொடர் நடை போடுகிறது…

இப்படியே தொடரட்டும்

அழகு தமிழ் நடை அருமை

இப்னு அப்துல் ரஜாக் said...

/உள்ளாங்குருவியின் மூளையின் அளவுக்குக் கூட தங்களின் மூளையைப் பயன்படுத்தாத அரபுகள்/

சரியான வார்த்தை

இப்னு அப்துல் ரஜாக் said...

/“பாலஸ்தீன் எங்களின் தனிப்பட்ட சொத்தல்ல ; ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகத்தின் சொத்தாகும். இந்தப் புண்ணிய பூமி - முதல் கிப்லா – எங்களிடம்தான் இருக்க வேண்டுமென்று எங்களது முதல் கலிபா ஹஜரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் கனவு கண்டார்கள். அவர்களது கனவு எங்களது அடுத்த கலிபா ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் காலத்தில் நனவானது. அன்று முதல் ஒரு இடைக்காலம் தவிர பின்னர் சுல்தான் சலாஹுதீன் (ரஹ்) அவர்களின் காலத்திலிருந்தும் நீண்ட காலமாக எனது சமுதாயம் இதற்காக இரத்தம் சிந்திப் போராடி இருக்கிறது. எனவே என் உடம்பில் ஒரு சதைத் துண்டை தந்தாலும் என் நாட்டில் ஒரு சிறு பகுதியைக் கூட விட்டு தரமாட்டேன்” என்று சொன்னார் சுல்தான் அப்துல் ஹமீது. (Sultan Abdul-Hamid and the Zionist Colonization of Palestine: A Case Study from Jerusalem. By Dr. Hala Fattah)./

மெய் சிலிர்ப்பூட்டும் வார்த்தை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உவமைகளில் சில சிந்திக்க வைத்தவைகள்....

//இந்தத்திட்டத்தின் தலையாய அம்சம் உலகெங்கும் வாழும் பணக்கார யூதர்களிடமிருந்து பணம் திரட்டுவது. அவ்வாறு சமுதாயத்திலிருந்து திரட்டப்பட்ட அந்தப் பணத்தை ஹைபர் மார்கெட் வைக்கப் பயன்படுத்தாமல், //

//யூதர்களை இன்னும் அதிகமாக வந்து குடியேற அனுமதித்தார். ஆனால் குடியிருப்புக்கு இடம் கேட்டு வந்த யூதர்களுக்கு குடியேறும் உரிமை மட்டும் போதாதே! அவர்களுத் தேவை ஆட்டின் தலை; ஆட்டின் கொம்பு அல்ல.//

//ஒரு அமெரிக்க எழுத்தாளர் இப்படி எழுதினார். “தான் நினைத்துப் போன ஒரு வாய்ப்பு அடைபட்ட யூதன் அதற்கு மாற்றாக அடுத்த வாய்ப்பை யோசிக்க ஆரம்பித்த நேரம் பார்த்து அவனது உச்சந்தலையில் ஒரு ஆணியை நீங்கள் அடித்து சற்று நேரம் கழித்து அந்த ஆணியை உருவிப்பார்த்தால் அந்த ஆணி ஒரு ஸ்க்ரூவாக உருமாறி இருக்கும்”.//

//நிலத்தை விற்கும் சிந்தனையில் இருந்த விவசாயிகளுக்கு அவர்கள் எதிர்பார்த்ததைவிடப் பல மடங்கு பணம் கொடுத்து அந்த நிலங்களை எழுதி வாங்கிக்கொண்டனர். உலகத்தின் பல நாடுகளிலும் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் பாலஸ்தீனத்தில் நிலங்களை வாங்கி போட்டிருந்தனர் அவர்களைத் தேடிக் கண்டறிந்து மதிப்புக்கு மீறிய பணம் கொடுத்து ஏமாற்றி அவற்றையும் எழுதி வாங்கிக் கொண்டனர். வாங்கிய வீடுகளில் முன்பு வங்கிக்காகப் பணம் கொடுத்த யூதர்களை ரகசியமாகக் குடி அமர்த்தினர்.//

அமைதியாக, இன்றைய சூழலையும் அப்படியே அசைபோட்டால் மேற்கோளிட்டவைகள் உரசிக் கொண்டே இருப்பதை உணரலாம் !

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

தியோடர் ஹஸலின் திட்டங்கள் ஏறத்தாழ சாத்தியப்படாத ஒன்று; ஆனால் படிப்படியாக காய் நகர்த்தி பக்காவாகத் திட்டமிட்டு எவ்வளவு பெரிய ஹிமாலயச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

எதிரி முகாம் என்றாலும் பாராட்டியே தீர வேண்டும். அதிலும் தங்கள் எழுத்தில் அந்தாளின் திறமைகள் தெள்ளத்தெளிவாக உணர முடிகிறது.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

sheikdawoodmohamedfarook said...

உலகெங்கும்சிதறிக்கிடந்தயூதர்களுக்காக ஒரே ஒருவன் மட்டுமேசிந்தித்தான்.மற்றவர்கள் ''நீஎன்ன சிந்திப்பது? நான்என்னகேட்பது?''என்றுசொல்லாமல் தேனிக்கள்போல்எறும்பு கூட்டபோல்காக்கைகூட்டம்போல் ஒன்றுகூடினர். அந்தஒற்றுமையின்மறுபெயர்இஸ்ரேல்!. எழுதுவதுபேனாவிலா?அல்லதுதூண்டிலிலா? படிப்பவர்களைதூண்டில் போட்டுஇழுக்கிறதே! முத்துபேட்டைஆற்றில்தூண்டில்போட்டுவிரால்மீன் பிடித்தஅனுபவம்எழுத்தில்தொனிக்கிறது. இது ஒரு வரலாற்றுகட்டுரைபோல் மட்டும் அல்லாமல் இலக்கியத்தின்சுவையையும்தருகிறது!.

sabeer.abushahruk said...

//இது ஒரு வரலாற்றுகட்டுரைபோல் மட்டும் அல்லாமல் இலக்கியத்தின்சுவையையும்தருகிறது!.//

I double this comment

இப்னு அப்துல் ரஜாக் said...

//இது ஒரு வரலாற்றுகட்டுரைபோல் மட்டும் அல்லாமல் இலக்கியத்தின்சுவையையும்தருகிறது!.//

I double this comment/
Me too

sheikdawoodmohamedfarook said...

//இந்தநிலையில்தன்சமுதாயத்துக்காகஇவ்வளவையும் சாதித்ததியோடர் ஹாசல் 1904-ஆண்டு தன் இறுதி மூச்சைவிட்டார்// அவர்இறுதிமூச்சுவிட்டபோதுஸ்விஸ்வங்கியில்அவர் கணக்கில் குறைந்த பட்சம்196000கோடிரூபாயாவது இருந்துஇருக்கனுமே! இருந்துச்சா? இல்லையா?

sheikdawoodmohamedfarook said...

//தான்பிறக்கும்முன்பேதான்பிறந்தமண்ணில்வாழ முடியாமல்ஜெர்மனிக்கு விரட்டியடிக்கப்ட்ட ஒருயூதமைந்தன் தான்பிறந்தமண்ணைமீட்டேடுக்க19-ம் நூற்றாண்டில் சிந்தித்தான்// தன்முன்னோர்வாழ்ந்தமண்ணின்மீதுஅவன்கொண்டபாசம் வைக்கோல் போறில் வீழ்ந்த ஒரு தீப்பொரி போல எங்கும் சுடர்விட்டுபறவியது. சிலமனிதர்கள்மனிதர்களாகபிறப்பதில்லை.மனிதகுலத்திற்கு இருளில்ஒளிதரும் தீபந்தங்களாகபிறக்கிறார்கள்!.

Ebrahim Ansari said...

தம்பி அபு இபு தாங்கள் ரசித்ததை சொன்னீர்கள். ஒரு ரசிகனாக நான் ரசித்தது எழுதும்போதே ரசித்தது இது

//ஆண்டாண்டு காலமாக துருக்கியைத் தொடர்ந்து ஆதரித்து வந்த பிரிட்டனின் வரவேற்பறை, இப்போது யூதர்களுக்கு இருக்கைகளைக் காட்டி தலையணைகளைத் தட்டிப் போட்டு அமரச் சொன்னது. ‘ கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி ‘ என்றது. துருக்கிய அரசு, லண்டனுக்கான தனது டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு பிராங்க்பர்டுக்கு அதை புக் செய்தது.//

Ebrahim Ansari said...

தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்கள் வருக! அஸ்ஸலாமு அலைக்கும். தங்களின் அன்பான கருத்துக்கள் மிகவும் ஆறுதலாக இருந்ததை நான் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். ஜசாக் அல்லாஹ் .

sabeer.abushahruk said...

//அந்தக் கண்ணீர் முத்துக்களை எழுத்துக் கேர்வையாக்கி உணர்வு பொங்கும் கட்டுரைகளாகவும் வடித்தார்.//

//இவரும் யூதர்களுக்கும் கிருத்தவர்களுக்கும் சகல சுதந்திரமும் கொடுத்து கட்டுச்சோற்றுக்குள் எலியை வைத்துக் கட்டியவர்தான்; கொள்ளிக் கட்டையை மடியில் கட்டிக் கொண்டு இருந்தவர்தான். //



// பணம் என்னடா பணம்! பணம்! குணம்தானடா நிரந்தரம்! ‘ என்ற கொள்கை உடைய சுல்தானுக்கு முன், அவர் தந்த சுக்கு மல்லிக் காபியை குடித்துவிட்டு காலிக் கோப்பையை சத்தமில்லாமல் வைத்துவிட்டு இடத்தைக் காலி செய்வதைத் தவிர யூதர்களுக்கு வேறு வழி இல்லை. சுல்தானின் உறுதிக்கு முன் யூதக் காளிகளின் கைகளும் காலி! அவர்களின் ஆசையும் நிராசை! ‘அடுத்த வீட்டை பாருங்க பாவா! ‘ என்று விரட்டப்பட்டார்கள் யூதர்கள்.//

காக்கா,

தப்க்கலுடன் கைகுலுக்க ஆசையாக இருக்கிறது

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர்!

ஒரு சமூகத்தின் தற்போதைய அவலநிலையை சுட்டிக் காட்டி எழுதி இருப்பதை உன்னைப் போல சமூக அக்கறை உள்ளவர்கள் கவனித்துக் குறிப்பிட்டு கருத்துரைப்பதை வரவேற்கிறேன். அங்கங்கே இடைச் சொருகல்கள் தொடருக்கு சுவையூட்டினாலும் சில நேரங்களில் நினைக்கும்போது வேதனையாகவும் இருக்கிறது.

Ebrahim Ansari said...

தம்பி சபீர்! வ அலைக்குமுஸ் சலாம்.

தங்களைப் போன்ற அருமையான கவிஞரகளைப் பெற்றது எமது ஊருக்கும் உங்களை நாங்கள் பெற்றது இந்தத் தளத்துக்கும் பெருமை.
தங்களின் அன்பான ரசிப்புத்தன்மைக்கு ஈடு தரும் வகையில் எழுதுவதும் அதை நீங்கள் ரசித்துப் பாராட்டுவதும் இறைவன் எனக்குத் தந்த பேறாகவே கருதுகிறேன்.
இன்ஷா அல்லாஹ் இந்தத் தொடர் இதே ரீதியில் இலக்கியச் சுவையுடனும் மண்ணின் மணத்துடனும் தொடர அல்லாஹ் அருள்புரிவானாக!

அன்புள்ள மச்சான் - வழக்கம் போல குறும்பு - கருத்துக்கள் கடிக்கும் எறும்பு. சில நேரங்களில் தீப்பிழம்பு. ஜசாக் அல்லாஹ்.

இப்னு அப்துல் ரஜாக் said...

/தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்கள் வருக! அஸ்ஸலாமு அலைக்கும். தங்களின் அன்பான கருத்துக்கள் மிகவும் ஆறுதலாக இருந்ததை நான் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். ஜசாக் அல்லாஹ் ./
அல்ஹம்து லில்லாஹ்
வ இய்யாக் காக்கா

crown said...
This comment has been removed by the author.
crown said...

இந்தத்திட்டங்கள் யாவும் வெறும் எண்ணிக்கைத் திட்டங்கள் அல்ல; எண்ணங்களின் திட்டங்கள்.
---------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.காக்கா வரிக்கு வரி உற்சாகம் தூண்டும் எழுத்து! நமக்கும் ரோசம் வரும் படி உள்ளது!

crown said...

தரிசு நிலங்கள்தானே நல்ல விலைக்குப் போகட்டுமே என்று நினைத்தார்களே தவிர அந்த நிலங்கள் யூதர்களுக்குப் பரிசாகப் போகிறது என்று அவர்கள் நினைக்கவே இல்லை
------------------------------------------------------------------------------------
வட்டி எனும் கோடரி கொண்டே நம்மவர்களின் உரிமையை வெட்டி பறித்துகொண்டுள்ளனர் பாவிகள்!தரிசாய் இருந்தது நிலம் மட்டுமல்ல நம்மவர்களின் மூளையும் தான் .தரிசுக்கு இவ்வளவு பெரிய பரிசா ?என சிந்திக்கும் அளவுக்கு பெரிசா இல்லை நம்மவர் அறிவு! இவ்வளவு சிறிசாஇருந்திருக்கு!

crown said...

அடமானம் வைத்தது நிலத்தை மட்டுமா?தன் நிலையையும் என்றும் அறியாத அட மானகெட்டவர்களே!பொய்யர்கள் வார்தையை நம்பி இப்படியா ஏமாறுவீர்கள்!

Yasir said...

மாஷா அல்லாஹ் காக்கா….

மிகவும் அற்புதமாக இத் தொடர் நடை போடுகிறது…

இப்படியே தொடரட்டும்

Ebrahim Ansari said...

தம்பி கிரவுன்! வ அலைக்குமுஸ் சலாம்.

இன்று பகல் அலைபேசி உரையாடல் அதைத் தொடர்ந்து வழக்கமான கருத்தாடல்கள்.

அனைத்துக்கும் நன்றி. . என்னையும் என் எண்ணங்களையும் அணைத்து விடாமல் , வாரி அணைத்து எழுத்துக்களை உச்சி முகரும் தங்களின் நுகர்வுக்கு நன்றி

மருமகனார் யாசிர் அவர்கள் உற்சாகத்தில் என்னை காக்கா என்று அழைத்து இருக்கிறார்கள். . ஜசாக் அல்லாஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.