Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமிய வங்கிமுறையும் முதலீட்டுத்துறையும் தோன்றி வளர்ந்த வரலாறு 10

அதிரைநிருபர் பதிப்பகம் | March 17, 2015 | , , ,



தொடரிலிருந்து

இஸ்லாமிய வங்கிமுறையும் முதலீட்டுத்துறையும்  தோன்றி வளர்ந்த வரலாறு .

இந்தத்தொடரை ஆழ்ந்து படித்துவரும் அன்பர்களுக்கு ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். இந்த அத்தியாயத்தில் நான் பகிர இருக்கும்  தகவல்கள் யாவும் இஸ்லாமிய வங்கி முறைகள் பற்றி  நூல்கள் மற்றும் இணையத்தில் திரட்டிய தகவல்களின் மொழி பெயர்ப்பு ஆகும். கூடிய வரை நன்றாகவே மொழிபெயர்த்து எனது வழக்கமான தமிழ்நடையில் தர முயற்சித்து இருக்கிறேன். இஸ்லாமியப் பொருளாதார இயலில் ஆர்வமுள்ள தனிப்பட்டவர்களுக்கும் மாணவர்களுக்கும் இதில் குறிப்பிடப் போகும் தகவல்கள் பயனுள்ளவைகளாக இருக்குமென்று நம்புகிறேன். பெரும் உழைப்பின் பின்னணியில் திரட்டப் பட்ட  இந்தத்தகவல்களை உங்களின் அன்புக் கரங்களில் சமர்ப்பிக்கிறேன்.

நவீன பொருளாதார இயலின்  வளர்ச்சி -மற்றவர்களோடு போட்டி போட்டு வாழவேண்டிய சூழ்நிலை - அதே நேரம்  , அல்லாஹ் வகுத்த வழிகளில் இருந்தும் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழும் வழிகளில் இருந்தும் நெறி பிறழாமல் இந்த சமுதாயத்தை கொண்டு செல்லவேண்டிய நிலை சமூகத்தின் கல்வியாளர்களுக்கும் மார்க்க அறிஞர்களுக்கும்உதித்த எண்ணம்  தந்த உந்து சக்தியின் காரணமாக இஸ்லாமிய வங்கி முறையும் பலவித ஆராய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் பிறகு இம்முறைகள் சமுதாயத்துக்கு அறிமுகப் படுத்தப் பட்டன.

இதை என் இப்படி “பம்மி பம்மி” சொல்ல நேரிடுகிறது என்றால் நமது கை விரல் நகங்களில் வளர்ந்துள்ள நகத்தை வெட்டினாலே இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று வழக்குக் கூண்டில்  நிறுத்தப்படும்  ஒரு யுகத்தில் வாழவேண்டிய சூழ்நிலை. நான் சொன்னால் வழிகேடில்லை அதையே நீ சொன்னால் வழிகேடு என்று வழக்குரைக்கும்  மாந்தர்களின் நடுவே நடுநிலையில் சில நடக்கும் செய்திகளை நெறி பிறழாமல் சொன்னாலும் வடையைப் பார்க்காமல் வடையில் உள்ள துளையைப் பார்ப்பவர்கள் துரதிஷ்டவசமாக நம்மிடையே உலவுவதால் இந்த முன்னுரை தேவைப்படுகிறது.  வாருங்கள் நமது வேலையைப் பார்ப்போம்.  

இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பின் பல முஸ்லிம் நாடுகளும் முஸ்லிம்கள்           சிறு பான்மையாக வும்  பெரும்பான்மையாகவும்  வாழ்ந்த நாடுகளும்  சுதந்திரம் பெற்றன. இதைத் தொடர்ந்து மற்ற நவீன கல்விகளைப் போல பொதுவான பொருளியல் கல்வியின் தேவை உணரப்பட்டது. பொதுவான பொருளியலில் போதுமான இஸ்லாமிய அடிப்படையின் சாயல் இல்லாததால் இஸ்லாமியப் பொருளாதாரம் என்கிற கோட்பாடுகள் வரையருத்துத் தேவைப்பட்டன. ஆகவேதான் ஷரியா மற்றும் சுன்னாவின் அடிப்படையில் இஸ்லாமியப்  பொருளியல்எனும் எண்ணக்கரு தோற்றம் பெற்றது.

முஸ்லிம்கள் , ஆங்கிலேயர் , பிரெஞ்ச, போர்த்துகீசியர் போன்ற  பிற மத ஏகாதிபத்தியவாதிகளின் அதிகாரத்திற்குள் இருந்த காலத்தில் தம் பொருளாதார நடவடிக்கைகளை இஸ்லாத்தின் வரையறைக்குள் நின்று மேற்கொள்ள முடியாதிருந்தனர். வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளியல் கோட்பாடு ஏனையோர் போன்று முஸ்லிம்கள் மீதும் திணிக்கப்பட்டிருந்தது. தொழுகை, நோன்பு போன்ற இபாதத்களை ஓரளவேனும் சீராக செய்யக்கிடைத்த முஸ்லிம்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இஸ்லாமிய விதிமுறைகளையும், விழுமியங்களையும் பேணுவது மிகச் சிரமமாக இருந்தது. இதுவே ஏகாதிபத்திய கெடுபிடியிலிருந்து சுதந்திரம் பெற்ற முஸ்லிம்களை தனியான இஸ்லாமிய பொருளியல் பற்றி சிந்திக்கத் தூண்டியது.

குர்ஆனும், ஸுன்னாவும் பொருளியலின் அடிப்படைகளைக் கூறியிருந்தன. அவற்றுக்கு வியாக்கியானம் செய்த இமாம்கள் பல்வேறு பொருளாதார கருத்துக்களை முன்வைத்தார்கள். இஸ்லாமிய சட்டத்துறை (ஃபிக்ஹ்)க்கு பங்களிப்புச் செய்த  இமாம்கள் பல்வேறு பொருளியல் கோட்பாடுகளை தனித்தனிப் பிரிவுகளாக சமூகத்தில் முன்வைத்தனர்.

இபாதாத் (வணக்க வழிபாடுகள்), முஆமலாத் (கொடுக்கல் வாங்கல்கள்), முனாக்கஹாத் (விவாகங்கள்), ஜினாயாத் (குற்றங்கள்) என நாற்பெரும் பிரிவுகளாக ஃபிக்ஹை வகைப்படுத்தி இரண்டாம் இடத்தை இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளுக்கு வழங்கினர்.

வாங்கல், விற்றல், பண்டமாற்று, தவணை அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல், முற்பணம் செலுத்தி வாங்கல், அடகு வைத்தல், இரவல் கொடுத்தல், கடன், பங்குடைமை, முதலீடு, குத்தகை இப்படி பல்வேறு தலைப்புக்களில் இமாம்களின் மார்க்க அடிப்படையிலான  ஆய்வுகளும், கருத்துக்களும், தீர்ப்புக்களும் சட்டத்துறை நூற்களில் இடம் பிடித்துள்ளன. எனினும் இவை தனியொரு கலையாக அல்லது ஒரு அறிவுத்துறையாக இஸ்லாமிய பொருளியல் எனும் பெயரில் அறிமுகம் பெற்றிருக்கவில்லை. அவர்களது காலப்பகுதி இதற்கான தேவையை வேண்டி நிற்கவுமில்லை.

நாளுக்கு நாள் வளர்ந்துவரும்  உலகம்,  நுண்கலை அறிவுத்துறைகளிலும் புதுப்புதுத் தத்துவங்களைக் கண்டுபிடித்ததன் விளைவாக சில வேளைகளில் முற்காலத்தில் ஓர்அறிவுத்துறையின் உட்பிரிவாக இருந்த ஒரு பகுதி தனிப்பெரும் அறிவுத்துறையாக பரிணமித்திருப்பதை நாம் காணலாம். உதாரணமாக பொது மருத்துவம் என்கிற துறை அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் நிபுணர் கல்வியை அதற்கான பட்டங்களை வழங்கத்தொடங்கியது.  அது போன்றே இஸ்லாமிய சட்டத்துறையின் உட்பிரிவாக இருந்த பொருளியல் , காலத்தின் தேவைக்கேற்ப இஸ்லாமிய பொருளியலாக பெயர்  சூட்டப்பட்டு ஒரு தனி அறிவுத்துறையாக உருவம் பெற்றது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பொருளாதார ரீதியில் பெரும்  பாதிப்புக்களை சந்தித்த நாடுகள் தம்மை பாதிப்பிலிருந்து மீட்டுக் கொள்ளும் பொருட்டு   முதலீடுகள் செய்வது பற்றி சிந்திக்கவும் ஆரம்பித்தன. இத்தருணத்தில் இலாப நஷ்டத்தை மூலதனத்தின் விகிதத்திற்கேற்ப முதலீட்டாளர்கள் பகிர்ந்துகொள்ளும் இஸ்லாமிய கூட்டு முதலீட்டு முறையை சுதந்திரம் பெற்ற முஸ்லிம் நாடுகளுக்கு அறிமுகம் செய்து வைப்பதில்  அறிஞர்கள் ஆர்வம் காட்டினர். மிக முக்கியமாக வழிகேடர்களின் வழிமுறைகளை தடுத்து நிறுத்தவும், நமக்கு ஏற்ற முறைகளை நாமே உருவாக்கிக் கொள்ளவும்  வேண்டுமென்ற கருத்தில்  இதன் மூலம் நடைமுறையிலுள்ள வட்டியடிப்படையிலான வங்கிகளின் நடவடிக்கைகளுக்கும் வட்டியடிப்படையற்ற ஒரு கூட்டு முதலீட்டு முறையை அறிமுகம் செய்து வைத்தனர்.

அறிஞர்களான அன்வர்குறைஷி, நயீம் சித்தீக்கீ, மஹ்மூத் அஹ்மத், முஹம்மத் ஹமீதுல்லாஹ் ஆகியோரே 1940இன் பிற்பகுதிகளில் இது பற்றி முதன் முதலில் பேசியோராவர். இவர்களைத் தொடர்ந்து 1950களில் இச்சிந்தனைக்கு மார்க்க அறிஞர்களால் பரவலாக உயிர் கொடுக்கப்பட்டது.  பேரரிஞர்முஹம்மத் ஹமீதுல்லாஹ் அவர்களின் பங்களிப்பு இவ்வகையில் நீண்டதாகும். 1940இலும், 1955இலும், 1957இலும், 1962இலும் இது தொடர்பில் அவர்எழுதினார்.  முதன் முதலில் இது பற்றி ஒரு தனியான நூல் அறிஞர் முஹம்மத் உவைஸ் என்பவரால் 1955இல் எழுதப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்துல்லாஹ் அல்-அரபி, நஜாத்துல்லாஹ் சித்தீக்கி, அல்-நஜ்ஜார், பாக்கிர்அஸ்-ஸத்ர்ஆகியோரின்  நூற்கள் 1960களின் பிற்பகுதியில் 1970களின் ஆரம்பப் பகுதியில் வெளிவந்தன.
  • இது வரை காலமும் அறிஞர்பெருமக்களின் தனிநபர்களின்  சிந்தனையாக விளங்கிய இஸ்லாமிய பொருளியல் 1970களில் நிறுவனமயப்படுத்தப்பட்டது        ( Organized status).
  • இதன் ஓர்அங்கமாக இது பற்றி விவாதிக்க,  கராச்சியில் 1970இல் முஸ்லிம் நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு நடைபெற்றது.
  • 1976இல் இஸ்லாமிய பொருளியல் சம்பந்தமான முதல் சர்வதேச மாநாடு மக்காவில் கூட்டப்பட்டது.  இம்மாநாட்டில் 200க்கும் மேற்பட்ட பொருளியல் அறிஞர்கள், சமூகவியலாளர்கள் உலகின் பல பாகங்களிலிருந்தும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. பல வகையிலும் திருப்புமுனையாக அமைந்த இம்மாநாடு இஸ்லாமிய பொருளியல் பற்றி மேலும் பேசவும், எழுதவும், உயர்மட்ட நிலையில் விவாதிக்கவும் வழிகோலியது.
  • பின்னர் 1977இல் சர்வதேச பொருளாதார மாநாடு லண்டனில் நடைபெற்றது.
இம்முயற்சிகள் யாவும் வெறும் எண்ணக்கருவாக இருந்த இஸ்லாமிய பொருளியலுக்கு ஒரு வடிவத்தை கொடுக்க ஆரம்பித்தன. இஸ்லாமிய பொருளியல் கோட்பாடுகளை அனுசரித்து தனித்தியங்கும் வங்கிகள் தோற்றம் பெற்றன.
  • இஸ்லாமிய  வங்கிகளில் முன்னோடி வங்கியாக அமைந்தது 1972இல் எகிப்தில் நிறுவப்பட்ட Nasser Social Bank.
  • பின்னர் 1975இல் Dubai Islamic Bank நிறுவப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் குழுவொன்று இதனை நிறுவியது.
  • பின்னர் 1977இல் Faisal Islamic Bank எகிப்திலும், சூடானிலும் அமையப்பெற்றது.
  • இதே ஆண்டில் குவைத் அரசாங்கம் Kuwait Finance Houseஐ உருவாக்கியது.
  • தற்போது 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பொருளாதார கோட்பாடுகளை பேணி நடக்கக்கூடிய இவ்வாறான வங்கிகள் இயங்கிவருகின்றன. பெரும்பாலானவை முஸ்லிம் நாடுகளில் அமைந்துள்ளன. சில மேற்கு ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், லக்ஸம்பேர்க், சுவிஸர்லேன்ட், யுனைடட் கிங்க்டம் ஆகிய நாடுகளிலும் அமையப்பெற்றுள்ளன. இத்தகைய வங்கிகள் தனியார்வங்கிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • 1981ஆம் ஆண்டு பாகிஸ்தானும், ஈரானும் வட்டியில்லா வங்கி முறையை சட்ட ரீதியாக அறிமுகம்  செய்தன.
இஸ்லாமிய பொருளியல் உதயத்தின் மூலம் பல்வேறு முன்னேற்றகர நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அவையாவன:-

1.   சுய அறிவுத்துறை

தனியான இஸ்லாமிய பொருளியல் நூற்களும், சஞ்சிகைகளும் வெளிவரும் அளவுக்கு ஒரு தனிப் பெரும்  அறிவுத்துறையாக இஸ்லாமிய பொருளியல் பரிணமித்துள்ளது. வேறு பல சஞ்சிகைகள் இத்தலைப்பில் கட்டுரைகள் எழுதிவருகின்றன. பாரம்பரிய பொருளியல், முகாமைத்துவம், வர்த்தகம், கணக்கியல் பற்றி எழுதுகின்ற ஆய்வு சஞ்சிகைகள் இத்துறை பற்றி ஆய்வுக் கட்டுரைகளை இடம்பெறச்செய்கின்றன. Palgraves Dictionary of Money and Finance தற்பொழுது இஸ்லாமிய வங்கி முறை பற்றி ஒரு தனிப் பகுதியையே ஒதுக்கியுள்ளது.

2.   அறிவு முயற்சிகள்:-

பல அறிஞர்கள் இத்துறையில் ஆழமான ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டு ஆக்கபூர்வமான ஆக்கங்களை சமூகத்திற்கு நல்கியதன் மூலம் இத்துறைக்கு அபார அறிவு முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இத்யாதி முயற்சிகள் பற்றி முஹம்மத் அன்வர்கான் மூன்று வால்யூம்களில் தொகுத்துள்ளார்.

3.   பல்கலைக்கழக பாட  நெறிகள்:-

பல்வேறு பல்கலைக் கழங்களிலும்  பெரும் கல்லூரிகளிளும் பாடத்திட்டங்களில்   ஒரு முக்கிய இடத்தை இஸ்லாமிய பொருளியல் பெற்றுள்ளது. மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகமும், இஸ்லாமாபாத்திலுள்ள இஸ்லாமிய பொருளியல் சர்வதேச நிறுவனமும் இத்துறையில் தனியான பட்டம் தரும் பாடப்பிரிவுகளை வழங்கிவருகின்றன. பாகிஸ்தான், ஈரான், சூடான், சவூதி அரேபியா இன்னும் பல இஸ்லாமிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களும் பட்டப்படிப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவே இத்துறையை ஆக்கியுள்ளன. யுனைடெட் கிங்க்டத்திலுள்ள Loughborugh University இத்துறையில் தனி நிகழ்ச்சியொன்றை தன் பாடபிரிவில்  உட்புகுத்தியுள்ளது. லன்டனில் அமையப் பெற்றுள்ள International Institute of Islamic Economics and Insurance தொலைக் கல்வி டிப்லோமா நிகழச்சியின் நெறியொன்றை நடத்துகின்றது. (மலேசியாவில் உள்ள பல்கலைக் கழகத்தின் மூலம் பயின்று இஸ்லாமிய வங்கி முறைகளில் பட்டம் பெறும் முயற்சிகளை எனது நண்பர் வரலாற்றுப் பேராசிரியர் A.K.அப்துல் காதர் அவர்கள் நெறிப்படுத்தி வருகிறார்கள்.)

4.   பல்கலைக்கழக ஆய்வுகள் :-

பெரும் எண்ணிக்கையிலான சர்வகலாசாலைகள் Ph.D க்கான ஆய்வுகளை இஸ்லாமிய பொருளியல், அதன் உப பிரிவுகளை தலைப்பாகக் கொண்டு எழுத அனுமதிக்கின்றன. இவ்வாறு நூற்றுக்கணக்கான ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.

5.   இஸ்லாமிய பொருளியல் ஆய்வு நிலையங்கள்:-

இஸ்லாமிய பொருளியல் ஆய்வு நிலையங்களின் வருகையும், இஸ்லாமிய பொருளியல் துறையின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். ஜித்தா இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் கீழ் இயங்கிவரும் Islamic Research and Training Institute இவற்றுள் முக்கியமானது. நூற்றுக்கணக்கான நூற்களை இது வரை இஸ்லாமிய பொருளியல் பற்றி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் அமைந்துள்ள International Institute of Islamic Thought இத்துறைக்கு அளப்பரிய பங்களிப்பு செய்து வரும் மற்றொரு அமைப்பாகும் . அரபிலும், ஆங்கிலத்திலும் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வெளியிட்டும், கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் நடத்தியும் பணிபுரிந்து வருகின்றது. Association of Muslim Social Scientists உடன் இணைந்து இந்நிலையம் வெளியிட்டு வரும் American Journal of Islamic Social Sciences இன் ஒவ்வொரு இதழும் பெரும்பாலும் இத்துறை சார்ந்த கட்டுரைகளை தாங்கி வருவது கவனிக்கப்படவேண்டியது.

6.   இஸ்லாமிய பொருளியல் தகவல் மையங்கள்:-

இஸ்லாமிய வங்கி முறை, முதலீடு, பொருளியல் தொடர்பான தகவல் மையம் ஒன்றை ஜித்தா இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி ஏற்படுத்தியுள்ளது. இத்தகவல் மையம் இஸ்லாமிய வங்கி தகவல் முறை, இஸ்லாமிய பொருளியல் பற்றிய நூற்கள், முஸ்லிம் நிபுணர்தகவல் முறை, தொடர்புவழி விபரக்கொத்து போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

7.   சட்டத்துறை நூற்கள்:-

இஸ்லாமிய பொருளியல் துறையை மையப்படுத்தி சட்டத்துறை நூற்கள் வெளிவந்துள்ளமை மற்றொரு அம்சமாகும். Fiqh Academy of the Organization of Islamic Countries, Fiqh Academy of India, Islamic Ideology Council of Pakistan, Association of Islamic Banks ஆகிய நிறுவனங்கள் இத்துறை பற்றிய மார்க்கத் தீர்ப்புகள் தழுவிய நூற்களை வெளியிட்டுள்ளன. குவைத்தின் மார்க்க விவகார வக்ஃப் அமைச்சு வெளியிட்டுள்ள ஃபிக்ஹ் கலைக்களஞ்சியம், இஸ்லாமிய பொருளியல் சார்ந்த பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது. லன்டனிலுள்ள Institute of Islamic Banking and Insurance இது தொடர்பில் இரு கலைக்களஞ்சியங்களை இது வரை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு கலைக்களஞ்சியத்திலும், இஸ்தன்பூலில் வெளியிடப்பட்டுள்ள கலைக்களஞ்சியத்திலும் இஸ்லாமிய பொருளியல் தொடர்பான விவகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  

8.   கணக்குத் தணிக்கை  அமைப்புகள்:-

இஸ்லாமிய பொருளியல் வளர்ச்சியின் ஓர்அங்கமாக இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து கணக்குப் பரிசோதனை அவை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக Accounting and Auditing Organization for Islamic Financial Institutions உருவாக்கப்பட்டு பஹ்ரைனில் சிறப்பாக இயங்கிவருகின்றது. இந்நிறுவனம் மிகத் திறமைமிக்க துறைசார்ந்தோரைக் கொண்டு கணக்குப் பரிசோதனை அளவீடுகள் இஸ்லாமிய வங்கிகளுக்கும், முதலீட்டு நிறுவனங்களுக்கும் ஏற்றதாய் அமைத்துள்ளது. 1994இல் அது நூல் வடிவம் பெற்று பின்னர் 1997இல் புதிய பல தலைப்புக்களுடன் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.  இதே வேளை லண்டனிலுள்ள Institute of Islamic Banking and Insurance இஸ்லாமிய வங்கிகளுக்கான கணக்குப் பரிசோதனை முறை நூலொன்றை வெளியிட்டுள்ளது.

9.   துறைசார்ந்தோர்அமைப்பு:-

இத்துறையின் ஒரு வளர்ச்சியாக முஸ்லிம் பொருளியலாளர்களைக் கொண்ட ஓர்அமைப்பு International Association of Islamic Economics எனும் பெயரில் அமைக்கப்பட்டு காலத்திற்குக் காலம் கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் ஒழுங்கு செய்வதில் ஈடுபட்டு வருவதோடு, ஆய்வு பத்திரிக்கை  ஒன்றையும் வெளியிட்டு வருகின்றது.

10. கருத்தரங்குகள், மாநாடுகள்:-

ஒவ்வொரு வருடமும் இத்துறைசார்கருத்தரங்குகளும், மாநாடுகளும் உலகலாவிய ரீதியில் ஏற்பாடு  செய்யப்பட்டு மேலாய்வுகளுக்கு வாயில்கள் திறந்து விடப்படுகின்றன. பிரச்சினைகளுக்கு முடிவு காணப்படுகின்றது. சந்தேகங்களுக்கு தெளிவு காணப்படுகின்றது.

11. இஸ்லாமிய வங்கி முறையும், முதலீடும்:-

இஸ்லாமிய பொருளியல் எண்ணக்கரு தோற்றம் பெற்றதன் பயனாக இஸ்லாமிய முதலீட்டு முறைகளுடன் கூடிய வங்கி முறைகள் அமுலுக்கு வந்துள்ளன. நூற்றுக்கணக்கான முதலீட்டு நிறுவனங்களும், வங்கிகளும் தோன்றியுள்ளதுடன் நாளுக்கு நாள் உலகின் பல பாகங்களிலும் இத்தகைய நிறுவனங்கள் தோற்றம் பெற்ற வண்ணம் இருக்கின்றன.

இஸ்லாமிய பொருளியலின் எண்ணக்கரு தோற்றம், அதற்கு உரு கொடுக்கப்பட்டமை, இதனால் ஏற்பட்ட பல்வேறு நன்மைகள் பற்றியெல்லாம் இது வரை பார்த்த  அதே வேளை இவை  பற்றிய ஒரு மதிப்பீட்டையும் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள், வங்கிகளின் நடவடிக்கைகள் குறித்தும், உலகப் பொருளாதாரத்தின் மீது அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் அறிஞர்கள் மதிப்பீடு செய்தனர். இதன் விளைவாக 1984இல் லண்டனில் ஒரு மாநாடு ஏற்பாடு  செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1986இல் வியன்னாவிலும், தெஹ்ரானிலும், வாஷிங்டனிலும், ஜெனீவாவிலும் இது குறித்த மாநாடுகள் நடைபெற்றன. பின்னர் 1988இல் லண்டனிலும், 1992இல் இஸ்லாமாபாத்திலும் மாநாடுகள் நடைபெற்றன. அதே வேளை இக்காலப்பகுதியில் பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டும், பல்கலைக்கழக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், நூற்கள் வெளியிடப்பட்டும் உள்ளன. இத்தகைய மதிப்பீட்டுப் பணியில் ஈடுபட்ட அறிஞர்களுள் முஹம்மத் அக்ரம் கான் சிறப்பாக குறிப்பிடத்தக்கவர்.

இத்தகைய மதிப்பீடு இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களிடம் சில குறைகளுக்கான  நீக்கங்களை  வேண்டி நிற்கின்றன. அவையாவன:

1.   குறுகிய பார்வை:-

இது வரையும் இஸ்லாமிய பொருளியல், அதன் அகன்று விரிந்த உட்பிரிவுகள் உள்ளடக்கப்படாமல், முராபஹஹ், முஷாரக்கஹ், முழாரபஹ், இஜாரஹ் போன்ற சிலவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்டு எழுதப்பட்டும், பேசப்பட்டும் வருகின்றது. இதனால் இஸ்லாமிய பொருளியல் என்பது வட்டியில்லா வங்கி முறை என அர்த்தம் கொள்ளப்படுகின்றது. பாரம்பரிய வட்டி வங்கிகளுடன் தொடர்பு உடைய முஸ்லிம் செல்வந்தர்களை வட்டியில்லா அமைப்பின் பக்கம் திருப்பும் உடனடி ஆரம்ப முயற்சியாகவே இது அமைந்துள்ளது. இதனால் சில தனவந்தர்கள் மாத்திரம் வட்டி பாவத்திலிருந்து விடுபட்டனரே தவிர நடுத்தர மக்களும், ஏழைகளும் அதிலிருந்து இன்னும் விடுபடவில்லை. எனவே இஸ்லாமிய பொருளியல், அதன் உட்பிரிவுகள் முழுமையாக புரிந்துகொள்ளப்பட்ட நிலையில் இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. இதற்கான ஆய்வுகள் அறிஞர்களால் தொடர்ந்து  செய்யப்பட வேண்டும். சமூகத்தின் சகல நிலையில்உள்ளவர்களுக்கும் இஸ்லாமிய பொருளியல் ஏற்புடையது, நடைமுறைச் சாத்தியமானது என்பது அப்பொழுது மாத்திரமே நிரூபிக்கப்படும்.

2.   முறை பற்றிய குழப்பம்:-

இஸ்லாமிய பொருளியல் என்பது முற்றிலும் வித்தியாசமான தனிப்பெரும் தத்துவங்களையும், நெறிமுறைகளையும் உள்ளடக்கியதாகும். இது பற்றிய ஆழமான அறிவில்லாதோர்மூலம் இஸ்லாமிய முதலீட்டு அமைப்புக்களைக் கொண்டு நடாத்த முடியாது. பெரும்பாலான இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களில் உயர்மட்டம் முதல் அடி மட்டம் வரையிலான சகல ஊழியர்களும், நிர்வாகிகளின் அமைப்பு  கூட இத்துறையில் போதிய கல்வியற்ற  நிலையிலுள்ளனர். குறிப்பாக முடிவெடுக்கும் அதிகாரமுள்ளோர் வட்டி அடிப்படையிலான பாரம்பரிய வங்கிகளில் வேலை  பார்த்து அந்த சிந்தனைகளுடனும், பயிற்சிகளுடனும் இருப்பவர்கள். எனவே இஸ்லாமிய பொருளியல் பற்றி அறை குறை ஞானத்துடனும் பாரம்பரிய வங்கிகளின் அறிவு, பயிற்சிகளுடனும் இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் இயக்கப்படுவதால் பெரும்பாலான கொடுக்கல் வாங்கல்கள் அவர்களுக்கும் தெளிவில்லாமல், வாடிக்கையாளர்களுக்கும் தெளிவில்லாமல் நடந்தேறுகின்றன. உதாரணமாக: இஜாரஹ்வின் அடிப்படையை தெரிந்த நிலையில், அதன் உட்பிரிவுகள் பற்றிய தெளிவு இல்லாமல் நடைபெறும் இஜாரஹ் உடன்படிக்கைகள் பல. இதன் காரணமாக இத்தகைய உடன்படிக்கைகள் பல தவறுகளை  சுமந்த வண்ணம் நடைபெறுகின்றன. இதன் விளைவாக சில பொது நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்குமிடையே பல பிரச்சினைகள் எழுகின்றன. எனவே இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களைச் சார்ந்தோர்இஸ்லாமிய பொருளியல் தொடர்பாக நன்கு அறிவும், பயிற்சியும் முஸ்லிம் மார்க்க  அறிஞர்களால் பெறவேண்டியுள்ளனர்.  இந்த நிறுவனங்களில்  பணியாற்றுவோர் மார்க்க கல்வியைக்  கற்றுத் தேர்வதை கட்டாயமாக்க வேண்டும்.

3.   ஷரீஆ விதிகளைப் பேணுவதில் அசிரத்தை:-

முராபஹஹ், முழாரபஹ், முஷாரக்கஹ், இஜாரஹ் போன்ற உடன்படிக்கைகள் சில பல வேளைகளில் ( பிற மத) ஊழியர்களின் அசிரத்தை காரணமாக அவற்றின் ஷரீஆ விதிகளில் சில பேணப்படாத நிலையில் நடந்தேறுகின்றன. ஆவணங்களில் கையொப்பம் இடுவதன் மூலம் இவ்வுடன்படிக்கைகள் பரிபூரணம் அடைவதில்லை. ஒவ்வோர் உடன்படிக்கையும் அதற்குரிய சகல விதிகளும் முழுமையாக சரியாக பின்பற்றப்பட்ட நிலையில் நடைபெறுவதை நிறுவனங்கள் உறுதி செய்தல் வேண்டும். இல்லையேல் நரகத்தில் இடத்தைப் பதிவு செய்ய நேரிடும்.

4.   அறிவூட்டல் போதாமை:-

இஸ்லாமிய பொருளியல் பற்றி குறிப்பாக முஸ்லிம்களுக்கும், பொதுவாக சகல மதத்தவர்களுக்கும் அறிவூட்டப்பட்டமை போதாத நிலையிலுள்ளது. இதனால் இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் நடைமுறைப் படுத்திவரும் முழாரபஹ், முராபஹஹ், முஷாரக்கஹ் இஜாரஹ் போன்றவை கூட சமூக மட்டத்தில் பிழையாக விமர்சிக்கப்படுகின்றன. பாரம்பரிய வங்கிகளின் வட்டி வீதத்தை விட இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களின் வட்டி வீதம் அதிகம் என்றெல்லாம் விமர்சிக்கப்படுகின்றது. எனவே மக்களை அறிவூட்டுவதையும் ஒரு முக்கிய பணியாக தமது நிகழ்ச்சி நிரலில் ஆக்கிக்கொள்வது முதலீட்டு நிறுவனங்கள் முன்னுள்ள ஒரு முக்கிய பொறுப்பாகும்.

எந்தவொரு அறிவுத்துறையும் காலத்துக்குக் காலம் வளர்ச்சியடையாமலில்லை. இஸ்லாமிய பொருளியலும் இதில் விதிவிலக்கல்ல.  தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விமர்சனங்கள் செய்யப்பட வேண்டும். இப்பொருளியல் தத்துவங்களில் பலவற்றுக்கு உரு கொடுக்கும் நிறுவனங்களாக இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் திகழ வேண்டும். அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புக்களை அவை ஏற்க வேண்டும். ஆக்கபூர்வ விமர்சனங்களை புறந்தள்ளாமல் , அவை தம் வளர்ச்சிக்கு உந்து சக்தியென உள்வாங்கி தம்மை செப்பனிட்டுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வைப் பயந்த நிலையில் ஒவ்வோர் நடவடிக்கையும்  உடன்படிக்கையும் நடைபெற வேண்டும்.

மார்க்கக் கல்வியின் ஒரு அம்சமாக பொருளாதாரப் பாடங்களும் மார்க்க அடிப்படையாளான பொருளாதார கல்விக்கூடங்களும் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய வங்கி மற்றும் முதலீட்டுத்துறையில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் பிரிவுகளும் தொடங்க குரல் எழுப்பவேண்டுமென்பதே இந்த அத்தியாயத்தை நான் நிறைவு செய்யுமுன் வைக்கும் கோரிக்கை.  மேலும் இஸ்லாமிய வங்கி மற்றும் முதலீடுகள் பற்றி விளக்கமான தனித்தொடர் எழுதவேண்டுமென்று சில நண்பர்கள் கேட்டிருப்பதால் விளக்கமான மற்றொரு தொடரைத் தர வல்ல நாயன் உதவிடுவானாக! (தம்பி அபூ இப்ராஹீம் உற்சாகத்தில் குதிப்பது மனக் கண்ணுக்குத் தெரிகிறது)    - இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம்.  

இபுராஹீம் அன்சாரி

10 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//நான்சொன்னால்வழிகேடில்லை நீசொன்னால்வழிகேடு// ''மாமியாஒடச்சாமண்சட்டி,மருமவஒடச்சாபொன்சட்டி''என்றும்சொல்லலாம்.

sheikdawoodmohamedfarook said...

//இஸ்லாமிய பொருளியல் பற்றி குறிப்பாக முஸ்லிம்களுக்கும் பொதுவாக சகலமதத்தவர்களுக்கும் அறி ஊட்ட பட்டது போதாத நிலையில் உள்ளது// இந்தஅறிஊட்டும்பொறுப்பையும் பணியையும் யார் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்??

Iqbal M. Salih said...

அறிஞர் இ.அ.காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும்.
நானிருக்கும் நாட்டில் தனியாக என்று Islamic bank இல்லாமல் சில வங்கிகளில் Lariba sectionஎன்று Islamic home financing வைத்திருப்பார்கள். அதிலிருக்கும் மூன்று optionகளில் Murabahaவைத்தேர்ந்தெடுத்துத்தான் நான் வீடு வாங்கினேன். தனியாகவே, நீங்கள் சொல்லும் Islamic banking systemவங்கிகள் உருவாவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.

Jazakallahu khair for the detailed informations.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பேங்க் என்றாலே எனக்கு அலர்ஜி.

டெபிட் கிரடிட் இன்ட்றெஸ்ட் என்று குழப்பும்போது புரிந்தமாதிரி தலையாட்டிவிட்டு வந்துடுவேன்.

ஆனால், காக்கா அவர்களின் இந்தப் பதிவுபோல தெளிவாகச் சொன்னால் விளங்கும்.

இஸ்லாமிய வங்கியைப் பற்றி உலகமே தற்போது ஆராய்ந்து நடைமுறைப் படுத்தத் தலைப்படுகிறது.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

Ebrahim Ansari said...

தம்பி இக்பால் , மற்றும் கவிஞர் தம்பி சபீர் அவர்களுக்கு

வ அலைக்குமுஸ் சலாம்.

இன்ஷா அல்லாஹ் இன்று உலகம் உணரத் துவங்கி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் ஒரு பதிவாளர் குறிப்பிட்டு இருப்பதைப் போல உலகிலேயே அதிகமானவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு மார்க்கம் ஒன்று உண்டென்றால் அது நம்முடைய மார்க்கம்தான்.

நல்லவைகளை அழைப்புப் பணி மூலம் நாம் எடுத்துரைத்துத் தான் அந்தக் குறையை நீக்க இயலும்.

அதற்கு முன் நமது வாழ்வில் அவற்றைக் கடைப்பிடித்து உதாரணமாக வாழ்ந்தும் காட்ட வேண்டும்.

நம்மில்

EMI கட்டாமல் வாகனம் வாங்கும் நண்பர்கள் எவ்வளவு பேர் இருக்கிறோம்?

தங்களின் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்து எத்தனை பேர் சொல்வார்கள்?


Ebrahim Ansari said...

தம்பி அபு இபு போனதும் தூண்டில் - தூண்டி விடும் தூண்டில் .

//இஸ்லாமிய வங்கி மற்றும் முதலீடுகள் பற்றி விளக்கமான தனித்தொடர் எழுதவேண்டுமென்று சில நண்பர்கள் கேட்டிருப்பதால்//

சொல்லி இவ்வளவு நாளாகிறதே எங்கே காக்கா காணோம் என்று கேட்காமல் கேட்கும் தூண்டில்.

இன்ஷா அல்லாஹ்.

Ebrahim Ansari said...

தம்பி அபு இபு போனதும் தூண்டில் - தூண்டி விடும் தூண்டில் .

தம்பி அபு இபு போடும் தூண்டில் - தூண்டி விடும் தூண்டில் .

என்று படிக்க வேண்டுகிறேன். . தவறுக்கு வருந்துகிறேன்.

Ebrahim Ansari said...

பெரியவர் மச்சான் அவர்களுக்கு,

அறிவூட்டுவது யார் என்று கேட்டு இருக்கிறீர்கள்.

இன்றுவரை புகழ்பெற்ற இஸ்லாமியப் பல்கலைக் கழகங்களில் கூட இஸ்லாமியப் பொருளாதாரம் மற்றும் வங்கி முறைகள் போதுமான அளவுக்குப் பாடமாக வைக்கப்படவில்லை.

யூதர்களும் மேல்நாட்டு பொருளாதார மேதைகள் என்று கருதப்படுபவர்களும் "கக்கி" வைத்த பொருளாதாரம்தான் கற்பிக்கப்படுகிறது.

இதைப் படித்துத்தான் பலர் ஆய்வுப் பட்டங்களும் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

இது மிகவும் சீரியஸாக சிந்திக்க வேண்டிய ஒன்று. நமது கல்வியை நாம் கற்க இயலுகிறதா? குறைந்தபட்சம் நமது கல்வி நிறுவனங்களாவது அவற்றைக் கற்பிக்கின்றனவா? கற்பதற்கு நாம் ஆர்வம் காட்டுகிறோமா? இல்லையே! இல்லையே !இல்லையே !

ZAKIR HUSSAIN said...

இஸ்லாமிய வங்கி / காப்புறுதி நிறுவனம்...வருங்காலத்தில் எல்லோராலும் ஏற்கப்படும் [ மாற்று மதத்தினர் ஆக இருந்தாலும் ] ....

ஆனால் அதை இன்னும் மக்களுக்கு எடுத்துச்செல்ல இப்போதயை கன்வென்சன் வங்கி முறைகள் நிறைய தடைகளைப்போடும் [ அவனுக்கு வியாபாரம் ஆகாது என்றால் சும்மா விடுவானா? ....]

முழுக்க முழுக்க பேராசை பிடித்ததில் விளைந்தது Cumelative Interest [கூட்டு வட்டி] முறை

150,000 கடன் வாங்கினால் 250,000 த்தை திருப்பி தா என்று வாய் / கை கூசாமல் கேட்கும் கூட்டு வட்டியில் எல்லோரும் சிக்கியிருக்கிறோம்.

முஸ்லீம்கள் அதிகம் வேற்றுமை இல்லாமல் / மார்க்க வழிமுறையை பின் பற்றுகிறேன் என்று பெரும் தாடியுடன் வேசம் போட்டுக்கொண்டு பெண்களை படிக்க வைப்பது ஹராம் என்று தாலிபான் தடியன்கள் மாதிரி பேசாமல் மாடர்ன் எக்கனாமியில் இஸ்லாமிக் எக்கனாமி எப்படி சிறந்தது என்று ஆராய்ச்சியிலும் நடைமுறையிலும் இறங்கினால் இஸ்லாமிக் எக்கனாமி மிகப்பெரிய பயனை எல்லோருக்கும் தரும்.

ஏனெனில் இஸ்லாமிக் எக்கனாமி...முழுக்க முழுக்க மனிதாபிமானத்தை அடிப்படையாக கொண்டது.

இக்கட்டான பணத்தேவையில் மனிதாபிமானம் எவ்வளவு முக்கியம் என்பது அனுபவித்தவர்கள் உணர்வார்கள்.

Welldone Brother Ebrahim Ansari for the new highlights in your wonderful article.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி ஜாகிர் அவர்களுக்கு,

//இக்கட்டான பணத்தேவையில் மனிதாபிமானம் எவ்வளவு முக்கியம் என்பது அனுபவித்தவர்கள் உணர்வார்கள். //

மனிதாபிமான சிந்தனை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.