Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ரியல் எஸ்டேட் - சிந்திப்போம் ! [தொடர் - 1] 5

அதிரைநிருபர் | May 31, 2015 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

முகவுரை:

மனிதன் தன் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவதற்கான வாழ்வாதாரங்களை தேடி அலைகிறான். அதற்காக அவன் பல்வேறு வழி முறைகளை தெரிவு செய்கிறான். மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வழி காட்டும் இஸ்லாம் மனிதன் தன்னுடைய வாழ்வாதாரங்களை எவ் வழியில் தேடிக் கொள்ள வேண்டும் என்ற வழிமுறையையும் சொல்லித் தறுகின்றது.

பொதுவாகச் சொன்னால் இஸ்லாம் எதையெல்லாம் ஹராம் (பாவம்/விலக்கப்பட்டது) என்று சொல்கிறதோ அது போன்ற காரியங்களிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருள் ஈட்டுவதை இஸ்லாம் தடை செய்து ஏனைய வழிகளில் பொருள் ஈட்டுவதை அனுமதித்துள்ளது. சிலர் கேளியாகவோ அல்லது தர்க்க ரீதியாகவோ "நாய் விற்ற காசு குறைக்குமா?" என்று கேட்பதுண்டு. நிச்சமாக நாய் விற்ற காசு நாளை மறுமையில் குறைக்கும்(தீவினையைப் பெற்றுத் தறும்) என்பதில் எந்த இறை நம்பிக்கையாளருக்கும் சந்தேகம் இருக்க முடியாது, அவ்வாறு சந்தேகம் கொள்பவர் இறை நம்பிக்கையாளராகவும் இருக்க முடியாது.

மேலும் சில நேரங்களில் சில காரியங்களை இது அனுமதிக்கப்பட்டதா அல்லது விலக்கப்பட்டதா? என்று தீர்மானம் செய்வதில் குழப்பம் ஏற்படுவதுண்டு. அது சமயம் செய்வதறியாது சிலர் திக்கு முக்காடிப் போவதுமுண்டு. இது போன்ற சூழ்நிலைக்கும் இஸ்லாம் மிகவும் எளிமையான முறையில் வழிகாட்டுகிறது. அதாவது "ஹராமும் தெளிவு, ஹலாலும் தெளிவு இதற்கிடையில் சந்தேகமானதை தவிர்த்துவிடுங்கள்". மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்.. அவர்கள் இதற்கு ஒரு அழகிய உதாரனத்தையும் சொன்னார்கள். அதாவது "உங்களுடைய கால்நடைகளை வரப்பிலே மேய்க்காதீர்கள்!" ஏனெனில் அது வரப்பிற்கு உள்ளே மேய்ந்ததா அல்லது வரப்பிற்கு வெளியே மேய்ந்ததா? என்று இனம் காண முடியாது என்பதற்காக. அதே போலத்தான் நாம் சந்தேகமான காரியங்களில் ஈடுபடும் போது நாம் அனுமதிக்கப்பட்டதை செய்தோமா அல்லது விலக்கப்பட்டதை செய்தோமா? என்று தெரியாது. ஒரு வேலை நாம் ஈடுபட்டது விலக்கப்பட்ட காரியமெனில் அது நாளை மறுமையில் அல்லாஹ்விடத்திலே தண்டனையைப் பெற்றுத்தந்துவிடும்! அல்லாஹ் பாதுகாப்பானாக!

**************************************************************************

ரியல் எஸ்டேட்:


கால ஓட்டங்களுக்கேற்ப மனிதர்கள் பொருளீட்டுவதற்கான புதுப் புது வழிமுறைகளை கையாள்வதுண்டு. சில காலகட்டங்களில் சில வகையான தொழில்கள் கோலோச்சியிருக்கும். அந்த வரிசையில் சமீபகாலத்தில் உச்சத்தில் இருந்த தொழில்களில் ஒன்றுதான் ரியல் எஸ்டேட் தொழில்.

உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கியப் பங்கு வகித்தது இந்த ரியல் எச்டேட் தொழில் என்பது யாவரும் அறிந்ததே. உலகப் பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு உலகின் பல பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் தொழில் வீழ்ச்சி அடைந்திருந்தாலும் இந்தியாவில் குறிப்பாக நமதூரில் என்றும் ஏறு முகம்தான். எனவே தான் நம்தூரில் மட்டும் தோராயமாக வீட்டிற்கு ஒரு தரகர் இருப்பாரோ என்று எண்ணும் அளவிற்கு ஏராளமான ரியல் எஸ்டேட் தரகர்கள் இருக்கிறார்கள்.

விவசாய நிலங்களெல்லாம் வீட்டு மனைகளாக மாறிக்கொன்டிருக்கின்றன. இதற்கு ஒரு முக்கிய காரனம் நமதூரில் இருக்கும் வழக்கம். அதுதாங்க பெண் பிள்ளைகளுக்கு சீதனமாக வீடு கட்டிக் கொடுப்பது. [இப்பழக்கம் பெரும்பாலோரால் விமர்சிக்கப்பட்டாலும் இஸ்லாத்தின் பார்வையில் இதன் நிலை என்ன என்பதை அல்லாஹ் நாடினால் வேறொரு பதிவில் பார்க்கலாம்]. இதனால் ஏறிக்கொன்டே இருக்கும் வீட்டுமனைகளின் விலையும் கூடிக்கொன்டே இருக்கும் தரகர்களின் எண்ணிக்கையும் ஏழைகளை பெரு முச்சு விட வைத்திருக்கிறது. நாமெல்லாம் ஒரு இடம் வாங்கி வீடு கட்ட முடியுமா என்று நடுத்தர வர்க்கத்தினரையும் ஏங்க வைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. இத் தொழிலில் ஏராளமானவர்கள் ஈடுபட்டாலும் இஸ்லாத்தின் பார்வையில் இத் தொழில் அனுமதிக்கப்பட்டதா அல்லது விலக்கப்பட்டதா என்று எத்தனை பேர் சிந்தித்திருப்பார்கள்?

மார்க்க அனுமதி:

இந்த ரியல் எஸ்டேட் தொழிலின் மார்க்க அனுமதி பற்றி பார்ப்பதற்கு முன்னால் ஒரு விசயத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்வோம். மனித சமுதாயத்தின் சுபிட்சமான வாழ்க்கைக்குத் தேவையான தீர்க்கமான சட்டங்களையும், தெளிவான வழிகாட்டுதல்களையும் இஸ்லாம் மனித சமுதாயத்திற்கு வழங்கியுள்ளது. இருப்பினும் மனித சமுதாயத்தின் பெரும்பகுதி இஸ்லாமின் வழிகாட்டுதலை பின்பற்றாமையே இன்று மனித சமுதாயம் சந்திக்கும் அனைத்து இன்னல்களுக்கும் காரனம்.

பதுக்கல்:

அத்தியாவசியப் பொருட்களை தேக்கி வைத்து சந்தையில் அதற்கான தட்டுப்பாடு ஏற்படும் போது விற்பனை செய்யும் வியாபாரத்தை இஸ்லாம் அனுமதிக்க வில்லை. மாறாக இதை பெருங்குற்றமென இஸ்லாம் பரை சாற்றுகிறது. பதுக்கல் இந்திய சட்டத்தின் படியும் குற்றமாகும். இங்கே பதுக்கலைப் பற்றி ஏன் விவாதிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஐய்யம் ஏற்படலாம். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இம்மூன்றும் இவ்வுலகில் ஒரு மனிதன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளாகும். உணவுப் பொருட்களைப் பதுக்குவது கூடாது என்று விளங்கி வைத்திருக்கிற நாம் உறைவிடங்களைப் பதுக்குவதைப் பற்றி சிந்திக்கவில்லை.

ஒரு காரியத்தினால் ஏற்படும் விளைவுகளை நாம் புரிந்து கொன்டோம் என்றால் பின் அது அனுமதிக்கப்பட்டதா அல்லது விலக்கப்பட்டதா என்பதை விளங்குவது எளிமையாகிவிடும். பொதுவாக வர்த்தகத்தில் ஒரு பொருள் எத்தனை கை மாறுகிறதோ அந்த அளவிற்கு அதன் விலை உயரும் என்பது அனைவரும் அறிந்ததே. இங்கே ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நாம் என்ன செய்கிறோம் எதிர்காலத்தில் விலை ஏறும் போது விற்கலாம் என்று வீட்டு மனைகளை வாங்கி பதுக்கி வைக்கிறோம்! நம்மிடத்தில் வருகிற தரகர் அப்படியான ஒரு திட்டத்தோடுதான் நம்மை அனுகுவார். இன்ன இடத்திலே இன்னார் மனை போட்டிருக்கிறர், நல்...ல இடம், இன்னும் ஒரிரு ஆண்டுகளில் இது சென்டராகிவிடும், இப்பொழுது ஒரு இலட்சம் கொடுத்து வாங்கினால் ஒரிரு ஆண்டுகளில் 5, 6 இலட்சம் விலை போகும், அதற்கு முன்னால் இருக்கிற மனை இப்போ 3 இலட்சத்திற்கு கேட்கப்படுகிறது என்று நமக்கு பொடி வைப்பார். மேலும், 40 மனை போட்டார்கள் எல்லாம் போச்சு, அவர்களுக்காக முகப்பில் 4 மனை வைத்துக் கொன்டார்கள், இப்பொழுது ஒரு 7, 8 மனை தான் மீதி இருக்கிறது, நாம் தாமதித்தால் அதுவும் போய்விடும் என்று நம்மை அவசரப்படுத்துவார்.

இப்பொழுது நாம் அந்த மனைய வாங்கப்போகிறோம்! இங்கே நம்மைத் தூண்டியது பண ஆசை! சில ஆண்டுகள் இதைப் பதுக்கி வைத்து பின் விற்றால் நல்ல இலாபம் கிடைக்கும் என்ற பண ஆசை! பணம் சும்மா வங்கியில் தானே கிடக்கிறது அதை இதில் போட்டு முடக்குவோம் என்கிற முடிவுக்கும் நாம் வந்துவிடுகிறோம். நம்முடைய சக்திக்கேற்ப 1, 2, 3, 4 என்று வாங்கி பதுக்கிக் கொள்கிறோம். சில ஆண்டுகளில் நமக்கு பணத் தேவை ஏற்படும் போது வாங்கிய நிலத்தை விற்போம்! அப்பொழுது தரகர் மற்றொருவரிடத்திலே போய் ஒரு வருசம் தான் ஆகிறது ஒரு இலட்சத்திற்கு நான் தான் வாங்கிக் கொடுத்தேன், இப்பொ 4 இலட்சத்திற்கு அந்த ஏரியாவிலேயே மனை கிடையாது, அவங்களுக்கு விற்க மனசு இல்லை, இருந்தாலும் அவசரத் தேவைக்காக கொடுக்கிறார்கள், நான் உங்களுக்கு 3 மனையையும் சேர்த்து 10 இலட்சத்திற்கு முடிச்சுத் தருகிறேன் இன்னும் 2 வருசம் போனா ஒரு மனை 10 இலட்சம் போகும் என்று பழைய சோப்பை மறுபடியும் அப்படியே போட்டு அந்த நிலத்தை வாங்க வைப்பார். இப்படியாக கை மாற்றி, கை மாற்றி அந்த நிலத்தின் விலையை அப்படியே ஏற்றி விடுவார்.

ஒன்றை நாம் உற்று கவனிக்க வேன்டும். அதாவது இங்கே நிலம் ஒரு வியாபாரச் சரக்காக பயன்படுத்தப் படுகிறது! அப்படி என்றால் நீங்கள் விற்பனக்காக வைத்திருக்கிற ஒரு பொருளை விலை ஏறிய பின் விற்கலாம் என்று வைத்திருந்தால் அதற்குப் பெயர் பதுக்கல் அல்லாமல் வேறென்ன?

அடுத்தாக, இப்படி பணம் இருப்பவர்கள் மாறி, மாறி நிலத்தைக் கைமாற்றி விலையை ஏற்றினால் அத்தியாவசியமுல்ல ஏழைகளுக்கு எவ்வாறு வீட்டுமனை கிடைக்கும்? சாமானியர்கள் / ஏழ்மையிலிருப்பவர்கள் எவ்வாறு அதிக விலை கொடுத்து வாங்க சக்தி பெறுவார்கள்? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

**************************************************************************

சிந்தனைக்காக:

அப்படியே சற்று இதையும் சிந்தித்துப் பாருங்களேன்!

மனை போடப்படுகிறது! வாங்கிப் பதுக்கி வைப்பது கூடாது என்று அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக எவரும் வாங்கவில்லை! மனையின் விலையில் பெரிய ஏற்றம் ஒன்றும் இருக்காது! தேவையுடையவர்கள் தனக்குத் தேவையான அளவை தேவையான சமயத்தில் வாங்கிக் கொள்ளலாம்! காலத்திற் கேற்ப, இருப்பிற்கேற்ப விலையில் சிறிய ஏற்ற இறக்கம் மட்டுமே காணப்படும்! ஆனால் ஒவ்வொரு கையாக மாறுவதால் ஒவ்வொருவருக்கும் இலாபம், முத்திரைத் தாள் செலவு, பதிவருக்குக் கொடுத்த இலஞ்சம், தரகருக்குக் கொடுத்த தரவு(கமிஷன்), என்றும் எல்லாம் சேர்ந்து மனையின் விலையை அல்லவா உயர்த்திவிடுகிறது!?

மேலும், அவரவர் பணம் இருக்கிறது என்று 4, 5 வாங்கி பதுக்கி வைக்காததால் எல்லா மனைகளும் விற்றுத் தீர்ந்துவிடாது. அதனால் அதை அடுத்துள்ள தோப்பும், வயலும் மனைகளாக மாறிவிடாது! பேராசையால் இயற்கை அழிக்கப்படாது! விவிசாய நிலங்கள் வெறுமையாக்கப்படாது! விவசாய நிலங்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும்! அதனால் உணவுப் பொருட்களின் உற்பத்தி அதிகமாகும்! அத்தியாவசியப் பொருள்களின் விலை உயராது! முத்திரைத் தாளுக்காக செலவளிக்கும் பணமும், பதிவருக்குக் கொடுக்கும் இலஞ்சமும், தரகருக்குக் கொடுக்கும் தரவும் மிச்சமாகும்! ஆனால் பேராசையின் காரனமாக மனிதன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான்!? இதுதான் எதார்த்தம்.

இப்பொழுது நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்! அதாவது எது இஸ்லாம் அங்கீகரிக்கும் முறையாக இருக்கும்? எது மனித சமூகத்திற்கு நன்மை பயப்பதாக இருக்கும்? எதை நாம் நடைமுறைப்படுத்த வேன்டும்? என்ற முடிவுக்கு இன்ஷா அல்லாஹ் இப்போது நாம் வர முடியும் என்று நம்புகிறேன்.

நிறைவுரை:

இங்கே ரியல் எஸ்டேட் தொழில் சம்மந்தமாக நடைமுறையில் இருக்கின்றவற்றையும் அதனால் ஏற்படுகிற விளைவுகளையும் நான் அறிந்தமாத்திரத்திலே உங்கள் முன் உங்கள் சிந்தனைக்காக விட்டு விடுகிறேன். இவ்விசயத்தில் என்னுடைய நிலைபாடு அவசியமில்லாமல் நிலங்களை வாங்குவதும், விலை ஏறிய பின் விற்கலாம் என்று வைப்பதும் கூடாது, இஸ்லாத்தின் பார்வையில் அது தடுக்கப்பட்டது என்பதே!

மேலும் இங்கே மானுடன் சொத்துக்களை வாங்குவதும், தன்னை வளப்படுத்திக் கொள்ளவதும் கூடாதா? என்ற கேள்வி எழும் அதற்கான பதிலை அடுத்த பதிவில் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்.

இது என்னுடைய சிந்தனையில் உதித்தது! மனிதன் என்ற அடிப்படையில் நானும் தவறிழைக்கக்கூடியவனே. மேலும் என்னுடைய கருத்தாடலே தவிர முடிவனதல்ல. அல்லாஹ்வின் வார்த்தையும் அவனுடைய தூதரின் வழிகாட்டுதலுமே இறுதியானது. இஸ்லாத்தின் ஒளியில் மாற்றுக் கருத்து சொல்லப்பட்டால் அதை ஏற்காமல் மன முரன்டாக இருப்பதைவிட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்!

ம'அஸ்ஸலாம்

அன்புடன்
அபு ஈசா

**************************************************************************

மற்றுமொரு துவக்கவுரை!

ஆன் லைன் வர்த்தகம்...
பங்குச் சந்தை முதலீடுகள்...

இப்படியாகத் தொடரும் (இன்ஷா அல்லாஹ்)...

5 Responses So Far:

Abu Easa said...

ஒறு பொருளைப் பதுக்கினால் கூட அதே பொருளை வேறு கடைகளிலிருந்து கொண்டுவர முடியும். ஆனால் நிலம் அவ்வாறன்று. ஒரு நிலத்திற்கு மாற்றமாக அதே நிலத்தை வேறு எங்கிருந்தும் கொண்டுவர முடியாது

sabeer.abushahruk said...

அவசியமான பேசு பொருள். அபு ஈசாவின் விளக்கமான கட்டுரை.

தொடர வாழ்த்துகள்.

Ibrahim said...
This comment has been removed by a blog administrator.
sabeer.abushahruk said...

சகோ இப்றாஹீம்,

இது அதிரை நிருபர்.

தங்கள் கருத்தைத் திரும்பப் பெற்று அதிரை நியூஸ் தளத்தில் கேட்கவும்.

நன்றி.

இப்னு அப்துல் ரஜாக் said...

அருமையான சிந்தனை.
இஸ்லாம் எப்படி சொல்கிறது என அறிய ஆவலாக உள்ளேன் .
Jasakkallah Khair bro Abu eesaa

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.