Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 5 13

அதிரைநிருபர் பதிப்பகம் | December 05, 2015 | ,


அழைப்புப் பணி என்கிற அல்லாஹ்வின் பொருத்தம் நிறைந்த பணிக்கு பல அழகிய முகங்கள் இருக்கின்றன. அதில் ஒரு முகம், ‘ மக்கள் தொண்டே மகேசன் தொண்டு ‘ என்கிற அடிப்படையில் செய்யப்படும் மனித இன நன்மைகளுக்கான சமூக சேவை என்கிற முழுநிலவையொத்த முகமுமாகும். 

அன்னை தெரசாவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க இயலாது. கிருத்துவ மதத்தின் ஒரு சேவையாளராக இன்னொரு நாட்டிலிருந்து இந்நாட்டுக்கு வந்த அவர், தனது தன்னலமற்ற சேவைகளால் தான் பின்பற்றிய மற்றும் உபதேசித்த மதத்தையும் தன்னோடு கூடவே எளிய மக்களிடம் எடுத்துச் சென்றார். தொண்டின் அடிப்படையில் அவர் ஏற்படுத்திக் கொண்ட தொடர்பும் சேவைகளும் , இந்த மண்ணில் அவருக்கு அன்னை என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தது.அன்னை என்றும் அம்மா என்றும் அழைக்கப்படுவோர் ஆயிரம்பேர் இருந்தாலும் அன்னை தெரசாதான் பலருக்கு பெற்றெடுக்காத அன்னையாக வாழ்ந்தார். 

இளம்வயதில் துறவறம் பூண்டு இந்த நாட்டில் புகுந்த அவர் , ஒரு மதப் பிரசாரகராக பணியாற்றியதைவிட ஒரு சேவையாளராகவே பணியாற்றி மக்களின் இதயத்தில் புகுந்தார். . அவரது சேவைகள், அவரது நோக்கத்தை நோக்கி மக்களைத் தானாகவே திருப்பிவிட்டது என்பதே நாம் இங்கு குறிப்பிட வேண்டிய செய்தி. அரவணைப்பும் அடைக்கலமும் தேவைப்படுகிற மக்களைத் தேர்ந்தெடுத்து அவர் தொண்டாற்றினார். 

அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதைக் கூட நாம் வேறு காரணங்களைக் கூறி புறந்தள்ள இயலும் . ஆனால் அவருக்கு “பாரத ரத்னா” என்கிற பட்டம் வழங்கப்பட்டதற்கு அவரது தொண்டுள்ளமும் அர்ப்பணிப்புமே காரணங்கள் ஆகும்.. 

குஷ்ட நோயாளிகளை தனது கரங்களால் தொட்டுத் தூக்கினார்; கடும் காச நோயாளிகளுக்கு. தனது கரங்களாலேயே மருந்துகள் தந்து கவனித்துக் கொண்டார்; நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஏழை எளியோருக்கும் சாக்கடை ஆறாக ஓடும் சேரிகளில் வாழ்ந்த சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கும் அனாதைக் குழந்தைகளுக்கும் அடைக்கலம் தந்த ஆலமரமாகத் திகழ்ந்தார். 

இலவச கல்வி நிலையங்கள் முதல் முதியோர் இல்லம் வரை நடத்தி எளிய மக்களின் இதயத்தை வென்று இன்றளவும் போற்றிப் புகழப்படுகிறார். அதே நேரம், தான் எந்த வேலையாக இந்த நாட்டுக்கு வந்தாரோ அந்த வேலையையும் எவ்வித சிரமமும் இல்லாமல் நிறைவேற்றிக் கொண்டார். இதற்காக அவருக்கு எதிராக சங்க பரிவார் போன்ற அமைப்புகள் எழுப்பிய எதிர்க்குரல்கள் யாவும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயின; மக்களிடம் அந்த எதிர்ப்புகள் எடுபடாமல் மக்களே அந்தப் பழிகளை உடைத்துத் தூள்தூளாக்கினார்கள்; அன்னை தெரசாவுக்குத் துணை நின்றார்கள். 

அன்னை தெரசாவைப் போலவே எண்ணற்ற கிருத்துவ மிஷின்கள் தங்களின் மதத்தை உலகம் முழுதும் பரவச் செய்தன. அதற்காக அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் மக்கள் தொண்டு என்பதுதான். அது ஒரு கேடயமாகவோ அல்லது ஒரு போர்வையாகவேகூட கருதப்படலாம். ஆனால் கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள், அநாதை இல்லங்கள் ஆகியவைகளை அமைத்து கிருத்துவ இயக்கங்கள் ஆற்றிய பணிகளால் கிருத்துவ மதம் குறிப்பாக குடிசைகளில் பரவிப் பல்கியது என்பதை யாரால் மறுக்க இயலும்? 

இஸ்லாத்தின் அடிப்படையில் ஒரு இறைநம்பிக்கையாளனுடைய கடமைகளை இரண்டு வகைகளாகச் சொல்லலாம். அவற்றுள் முதன்மையானது படைத்த இறைவனை வணங்குவது. இரண்டாவதாக அந்த இறைவன் படைத்த மற்ற உயிர்களை நேசித்து அந்தப் படைப்புகளுக்கும் தேவைப்படும் உதவிகளைச் செய்வது ஆகும். ஆக, படைத்தவனை வணங்குவது, படைப்பினங்களுக்கு உதவுவது ஆகிய இரண்டு காரியங்கள் இறைவனுக்கும் பொருத்தமானவை. 

படைத்தவனை வணங்குவதில் நாம் செலுத்தும் அக்கறைக்கு அடுத்தபடியாக படைப்பினங்களின் மீது நாம் செலுத்தும் அன்பிலும் அரவணைப்பிலும் இறைவனின் அருள் நம் மீது பொழியப்படும் என்பது ஒரு பக்கமிருந்தாலும் நமது அத்தகைய செயல், அழைப்பு என்கிற இறைவனின் கட்டளைக்கே ஆணிவேராக அமைந்துவிடும் என்பதை நாம் உளமார உணரவேண்டும்.

ஒரு இறைநம்பிக்கையாளனின் வாழ்வின் ஒவ்வொரு இயக்கமும் நடவடிக்கையும் அசைவும் அம்சமும் இறைவழிபாட்டின் அடையாளம்தான். ஐவேளைத் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற அடிப்படைக் கடமைகளை அழகுபடுத்துவது எல்லா மனிதர்களை நேசிப்பதும் அவர்களுக்குத் தேவையானவற்றை தேவையான நேரங்களில் செய்வதும்தான். ஒவ்வொரு வேளை தொழுகைக்குப் பிறகும் நாம் செய்யும் சதகா என்கிற தர்மம், நோன்புக் காலங்களைத் தேர்ந்தெடுத்து செய்யும் ஜகாத், ஹஜ் கடமையை நிறைவேற்றுமுன்னும் பின்னும் நாம் செய்யும் தர்மங்கள், பாவங்களைப் போக்கிக் கொள்ள ஏழைகளுக்கு உணவளிப்பது, குர்பானிக் கறியை ஏழைகளுக்கும் பங்கிடுவது ஆகிய நமது செயல்கள் ஒவ்வொரு வகை இறைவழிபாட்டையும் கடமையையும் ஒவ்வொரு வகையான தர்மம் பின் தொடர்கிறது என்பதன் அத்தாட்சி ஆகும்.  

முரசொலி அடியார் என்ற அப்துல்லாஹ் அடியார் இஸ்லாத்தை ஊன்றிப் படித்து ஆராய்ந்து ஏற்றுக் கொண்டவராவார். பின்னாளில் அழைப்புப் பணியாளராகி தான் உணர்ந்த அனுபவங்களை, ‘ நான் காதலிக்கும் இஸ்லாம்’ என்ற தலைப்பில் நூலாக எழுதினார். அவ்வாறு அவர் எண்ணற்ற நூல்களை எழுதி இருக்கிறார். அவற்றுள் ஒரு நூலில் கீழ்க்காணும் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில் அப்படியே தருகிறேன். 

“மனித குலத்தின் துன்ப துயரங்களில் பங்கேற்கும் செயல்களிலும் அழைப்புப்பணி இருக்கிறது.

நான் மதுரைச் சிறையில் இருந்தபோது, ஒரு காட்சி! அங்கிருந்த மூன்றாம் வகுப்புக குற்றவாளி ஒருவன் பரட்டைத்தலை கொண்டவனாக தூய்மையற்றநிலையிலும்- நோயுற்ற நிலையிலும் இருந்தான். கேட்பாரற்று சிறைச்சாலை அறைக்குள்ளேயே கிடந்தான். காரணம் அவன் ஒரு முடவன். 

இன்னொரு கைதி- கழுத்தில் சிலுவை உடையவன்- அந்த நோயாளியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். முடிதிருத்தம் செய்து நல்லுடை அணிவித்தான். தன கைகளாலேயே உணவு ஊட்டினான். நடக்கப் பழக்கினான். சில நாட்கள் கழித்து அவர்கள் இருவரும் நாங்கள் இருந்த அறை வழியாக நடந்து சென்றனர். முடவனாக இருந்த அந்தப் பரட்டைத்தலை நோயாளியின் கழுத்தில் இப்போது ஒரு சிலுவை தொங்கியது “ - என்று கூறுகிறார். 

அருவருப்பு இல்லாமல் அன்பு காட்டுதலும் அரவணைப்பும் அழைப்புப்பணி என்பதுதான் இந்த சம்பவத்திலிருந்து நம் அறிவதாகும். உடையவனை மட்டும் நேசிக்காதே! உயிர்களை நேசி ! என்பதுதான் நாம் படித்துக் கொள்ளும் பாடம். உறவினனுக்கு மட்டும் உதவாதே! உலகோர் அனைவருக்கும் உதவு ! என்பதுதான் நமக்கு சொல்லப்படும் செய்தி. தொழுவதால் மட்டும் நன்மை இல்லை! தொண்டாலும் நன்மை உண்டு என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டியது. 

அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் வர இருக்கிறது. அந்ததேர்தலில் ஒரு வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் என்பவரும் போட்டியிடுகிறார். இவருக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக பல கருத்துக்களைப் பேசி வருகிறார். ஒருவேளை யூதர்களின் ஆதரவாளராக இப்போதே அடையாளம் காட்டிக்கொள்பவராக இருக்கலாம். 

அப்படிப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கே அழைப்பு விடும் அளவுக்கு வீரியமுள்ள ஒரு கருத்தை ஒரு இஸ்லாமிய இளம்பெண் சமூக வலைதலங்களில் பதிந்து இருக்கிறார். உலகமெங்கும் அந்தப் பெண்ணின் கருத்து பலரைக் கவர்ந்து இருக்கிறது. அத்துமீறுவோரை நோக்கி எவ்வாறு அன்போடு தனது நிலையை எடுத்து வைக்க வேண்டும் என்பதற்கு அந்த பெண்ணின் பதிவுகள் உதாரணமாகத் திகழ்கிறது. இதோ! அதை நாமும் இங்கு அவரது வார்த்தைகளிலேயே பகிர்வதில் பெருமையடைகிறோம்.

’’டியர் டொனால்ட் ட்ரம்ப், 
என்னுடைய பெயர் மார்வா. 
நான் ஒரு முஸ்லிம்.

முஸ்லிம்கள் அனைவரும் அடையாள அட்டை ஒன்றை அணிய வேண்டும் என நீங்கள் கூறியதாக நான் அறிந்தேன். அதனால் நானே ஒரு அடையாள அட்டையை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளேன். 

என்னை பார்த்த உடனேயே நான் ஒரு முஸ்லிம் என்று எளிதில் அடையாளம் கண்டுகொள்ள இயலாது. ஆகவே நான் இப்போது தேர்வு செய்துள்ள அடையாள அட்டை என்னை ஒரு முஸ்லிம் என்று பெருமை கொள்ளச் செய்யும் என்று நம்புகிறேன். 

அதற்கு பெயர் ‘அமைதி’ என்ற அடையாள அட்டை. இந்த அமைதி என்ற அடையாளத்தை தேர்வு செய்ததற்கு காரணம், என்னுடைய இஸ்லாமிய மதம் அமைதியை மட்டுமே போதிக்கிறது என்பதனால் அதனைத தேர்ந்தெடுத்துள்ளேன் .

இந்த இஸ்லாமிய மார்க்கம்தான் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க என்னைத் தூண்டியது.

ஒற்றுமையை ஏற்படுத்திக்கொள்ள சிந்திக்க வைத்தது.

இந்த இஸ்லாமிய மதம் தான் ’ஒரு அப்பாவியை கொலை செய்வது என்பது ஒட்டு மொத்த மனித குலத்தையே கொல்வதற்கு சமமானது’ என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்தது.

அதேபோல், முஸ்லிம்களாகிய நாங்கள் அனைவரும் எங்கு இருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் நான் அறிந்தேன். 

நல்லது!

நான் இந்த நேரத்தில், புற்றுநோய் குறித்து பொதுமக்களிடமும் பள்ளியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். நீங்கள் என்னை அங்கு வந்து சந்திக்கலாம். 

அல்லது, எங்களுடைய கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் வீடில்லாத ஏழை எளிய மக்களுக்கு நாங்கள் தினந்தோறும் சான்ட்விச் போன்ற உணவுகளை தயாரித்து வழங்கி வருகிறோம். மதவேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் இந்த உணவை வழங்குகிறோம். நீங்கள் அந்தப் பள்ளிவாசலுக்கு வந்து என்னை சந்திக்கலாம். 

இவை அனைத்தையும் பார்த்த பிறகாவது முஸ்லிமாக இருக்கும் நான் உங்களைவிட சிறந்த அமெரிக்கராக இருக்க தகுதியானவள்தான் என்பதை நீங்கள் உணர முடியும். 

நான் கடந்து செல்லும் பாதையில் நீங்களும் நடந்துவந்தால் உங்களைவிட சிறந்த மனிதராக நான் இருப்பேன் என்பதை நீங்களே கண்கூடாக காண்பீர்கள். 

அஸ்ஸலாமு அலைக்கும். 

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட இந்த பதிவை இதுவரை சுமார் 92,000 பேர் விரும்பியுள்ளதுடன், 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பகிர்ந்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பார்ப்போம் அந்தப் பண்பான வாசகங்களை. 

Dear @realdonaldtrump,

My name is Marwa, and I am a muslim.

I heard you wanted us to start wearing ID badges, so I decided to choose one for myself. I am not easily identifiable as a #Muslim just by looking at me, so my new badge will let me display proudly who I am.

I chose the peace sign because it represents my #Islam. The one that taught me to oppose #injustice and yearn for #unity. The one that taught me that killing one innocent life is equivalent to killing humanity.

I heard you want to track us as well. Great! You can come with me on my Cancer Awareness walks at the local middle school, or you can follow me to work where it’s my job to create happiness.

You can also see how my local mosque makes PB&J sandwiches for the homeless and hosts interfaith dinners where everyone is welcome.

Maybe then, you’ll see that me being Muslim doesn’t make me any less American than you are.

Maybe if you walk in my footsteps, you can see that I am not any less human than you are.

Salaamu alaikum (Peace be unto you)

Marwa Balkar’s post has gone viral with over 92,000 likes and 80,000 shares.

மார்வாவின் இந்தக் கடிதம்தான் அழைப்புப் பணியின் மாதிரி வடிவம். மார்வாவின் இந்தப் பதிவு, ஒரு இளம் முஸ்லிம் பெண்ணின் துணிச்சலான பதிவு. அதுவும் அகிலத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான தேர்தல் களத்தில் வேட்பாளராக இருக்கும் ஒருவருக்கு, அவரது தவறான பிரச்சாரத்துக்கு பதிலடியாக மட்டுமல்ல பண்போடு அவரை இஸ்லாத்தின் பெருமைகளையும் சேவைகளையும் எடுத்துச் சொல்லி அறிமுகபடுத்தும் ஆன்மீகத் தூதாகவும் இதை நாம் எடுத்துக் கொள்ளலாம். 

மனிதநேயத்தின் அடிப்படையிலான அழைப்புப் பணி பற்றிய பல வரலாறுகள், சிந்தனைகள் ஏராளம் உள்ளன. 

இன்ஷா அல்லாஹ் விவாதிக்கலாம். 
(தொடரும்)
இபுராஹீம் அன்சாரி

13 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

ஆம், கூட்டம் போட்டு மேடையேறி இஸ்லாத்தின் வரலாற்றைச் சொல்லி அழைப்பதால் சாதிக்க முடியாததை மக்கள் சேவை சாதிக்கும் என்று தெளிவான ஆதாரத்துடன் விளக்கியுள்ளீர்கள். உண்மை!

அமைதிக்கான அடையாளமான முகமன்னை நாம் தினமும் கூறி வருகிறோம். அதுதான் நம் அடயாள அட்டையாகக் கொள்ள முன்வந்த கடிதம் அருமை.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

sabeer.abushahruk said...

சென்னை மக்களுக்கு முஸ்லிம்கள் ஆற்றிய மீட்புப் பணிகூட ஒரு மாபெரும் அழைப்புப்பணியாக உருவெடுத்திருப்பதை மாற்றுமத சகோதரர்களின் கருத்துகள் உறுதிபடுத்துகின்றன.

இந்தப் பேரிடரில் முஸ்லிம்கள் ஆற்றிய களப் பணியின் தாக்கத்தைத் தாங்கள் இந்தத் தலைப்பில் கீழ் அத்தியாயமாகத் தர வேண்டும் என்பது என் விருப்பம்.

Ebrahim Ansari said...

வ அலைக்குமுஸ் சலாம் தம்பி சபீர்!

//இந்தப் பேரிடரில் முஸ்லிம்கள் ஆற்றிய களப் பணியின் தாக்கத்தைத் தாங்கள் இந்தத் தலைப்பில் கீழ் அத்தியாயமாகத் தர வேண்டும் என்பது என் விருப்பம்.//

மாஷா அல்லாஹ்! அது எப்படி நமது மனங்கள் இப்படி ஒத்துப் போகின்றன என்று வியக்கிறேன்.

அடுத்த அத்தியாயத்தை நெறியாளருக்கு சற்று முன் அனுப்பிவிட்டேன். நீங்கள் தந்துள்ள இழைதான் பேசு பொருளாக எழுதி இருக்கிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா எங்கிருந்தாலும் எங்கள் உள்ளம் இங்குதான் இருக்கிறது... !

தற்போதைய அவசிய அத்தியாவசிய இணைய டெக்னிகல் உதவிகளை மாநகர் மழை பேரிடரில் இருப்போருக்கு வழங்கி வருவதால் அந்தப் பக்கமும் கால் பதிக்க வேண்டிய நிர்பந்தம்...

சனிக்கிழமை அதிகாலைகளில் உங்கள் பதிவை சுவாசிக்காமல் லிஃப்ட் இறங்கியதில்லை...!

Ebrahim Ansari said...

தம்பி அபு இப்ராஹீம் அவர்களுக்கு,

தெரியும். நான் குறிப்பிட்டு சொன்னது இன்று வெளிவந்துள்ள அத்தியாயம் பற்றியல்ல. அடுத்த வாரத்துக்கான அத்தியாயம் பற்றி. அதை நேற்றிரவு முழுதும் இருந்து எழுதி அனுப்பிவிட்டேன். அனுப்பிய பின்பு பார்த்தால் தம்பி சபீர் அவர்கள் நான் என்ன எழுதினேனோ அந்த விபரங்களை எழுதச் சொல்லிக் கேட்டு இருக்கிறார்கள் என்பதை.
எனக்கு உண்மையிலேயே ஆச்சரியம்.

மெயில் செக் பண்ணுங்கள் அத்தியாயம் ஆறு - ஆறாக ஓடி வந்து இருக்கும்.

Ebrahim Ansari said...

பெரியவர் எஸ். முகமது பாரூக் அவர்கள் அலைபேசி மூலமாக என்னை அழைத்து அவர்களது கருத்தாகப் பதிய சொன்னது.

" வெள்ளிக் கிழமைகளில் பஜ்ர் தொழுத உடன் இறைச்சிக் கடைகளுக்குப் போவதை மாற்றி ஒரு பையில் கொஞ்சம் பழங்களை வாங்கிக் கொண்டு மருத்துவ மனைகளுக்குப் போய் அங்கிருக்கும் நோயாளிகளுக்குக் கொடுத்து அவர்களை நலம் விசாரித்து வரலாமே! "

Ebrahim Ansari said...

நமது அனைவரின் மரியாதைக்குரிய பெரியவர் எஸ். முகமது பாரூக் அவர்கள் கூறி இருப்பது நல்ல அருமையான யோசனை. இந்த நன்மையை செய்து இறைவனின் அருளை அள்ளிக் கொள்ள விரும்புபவர்கள் இதை மேற்கொள்ளலாம். அவ்வாறு நலம் விசாரிக்கும் போது சாதி மத இன பேதம் இருக்கக் கூடாது என்பதை கவனித்துக் கொள்ளவேண்டும்.

அழைப்புபணியை மேற்கொள்ளும் வழிமுறைகள் பற்றி எழுதும்போது இவை பற்றி எல்லாம் விரிவாக எழுத இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.
ஏற்கனவே மருத்துவ மனைகள் பற்றி குறிப்பிட்டும் இருக்கிறோம்.

sheikdawoodmohamedfarook said...

ஜாவியாநர்சாவையும்மருத்துவமானையில் தங்கி இருப்போருக்கு கொடுத்து நலம்விசாரிக்கலாம்.

sheikdawoodmohamedfarook said...

மாற்றுமதத்தவர்களுக்கும், மருத்துவ மனையில் தங்கியிருக்கும் நோயாளிகளுக்கும்நோன்புக்கஞ்சிகொடுத்து சன்மார்க்கத்தையும் சகோதரத்துவத்தையும்விதைக்கலாம்..

sheikdawoodmohamedfarook said...

அழையாமல்விருந்துக்குவரும்பசித்தோர்களை விறட்டி அடிக்காமல் முகம்சுழிக்காமல்இன்முகம்காட்டிஅன்புடன்அழைத்து விருந்து கொடுக்கலாம்

Unknown said...

உலகத்தில் ஆயிரம் மார்க்கங்கள் மனிதனை நல்வழிப்படுத்தும் நோக்கோடு தோற்றுவிக்கப்படுள்ளன. பொதுவாக மார்க்ககோட்பாடுகள் படைத்த இறைவனை வணங்க-அடிபணிய வற்புறுத்தினாலும் அதன் முடிவான பயன் சகமனிதனிடம் உரிமைகளில் சரியாகவும் அன்பாகவும் இருப்பதே. இந்த முடிவான பயன் மார்க்கத்தை பேணுகிறேன் என்பவரிட்த்தில் வெளிப்படவில்லையானால் அவர் இறைவனுக்கு வழிபடவில்லை. Religion is not applied!!!

crown said...

//இந்தப் பேரிடரில் முஸ்லிம்கள் ஆற்றிய களப் பணியின் தாக்கத்தைத் தாங்கள் இந்தத் தலைப்பில் கீழ் அத்தியாயமாகத் தர வேண்டும் என்பது என் விருப்பம்.//

மாஷா அல்லாஹ்! அது எப்படி நமது மனங்கள் இப்படி ஒத்துப் போகின்றன என்று வியக்கிறேன்.

அடுத்த அத்தியாயத்தை நெறியாளருக்கு சற்று முன் அனுப்பிவிட்டேன். நீங்கள் தந்துள்ள இழைதான் பேசு பொருளாக எழுதி இருக்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். நானும் இதைத்தான் கேட்க இருந்தேன் .சோலி காரணமாய் கருத்திட தாமதம் ஆகிவிட்டது.மீடியாகளின் துஷ்பிரயோகம் மற்றும் இருட்டடிப்பு காரணமாய் நம்மவர்களுக்கு மாற்று மதத்தினரிடையே ஏற்பட்ட அவப்பெயரை மழை வந்து நம் மனிதாபிமானதை தூவி சென்றுவிட்டது. எல்லாம் அல்லாஹ் நாட்டம்.மக்கள் பணியே தாவாவின் ஆணி வேர் என்பதை மிக ஆழமாய்,உதாரணத்துடன் படைத்த ஊக்கம் தரும் ஆக்கம்.

Ebrahim Ansari said...

Wa Alaikkumus salam.

தம்பிகள் அமீன் ! கிரவுன் தஸ்தகீர் ஜசக்கல்லாஹ் ஹைரன்.

அன்புக்கும் ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு