Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தரமிழந்து வருகிறதா ? தன்னடக்கமும் மரியாதையும் !? 2

அதிரைநிருபர் பதிப்பகம் | December 21, 2015 | , ,


முன்பொருகாலத்தில் வயதில் சிறியவர்கள் வயதில் பெரியவர்களை முதியோர்களை காணும்போது பயம் கலந்த மரியாதை தன்னடக்கமான பேச்சு பணிவான அணுகுமுறை என அனைத்து நடவடிக்கைகளிலும் பேணப்பட்டு வந்தது. பெரியோர்கள் சொல்லும் உபதேசங்களையும் அறிவுரைகளையும் சிறுவர்கள் இளைஞர்கள் யாவரும் கேட்டு நடந்தார்கள். எனது பேரன் நான் கிழித்த கோட்டை தாண்டமாட்டான். என்றும் எனது மகன் என்சொல்தான் கேட்டு நடப்பான் என்றும் மார்தட்டிக்கொண்டு பெருமையாக சொல்வதை நாம் பார்த்திருப்போம். கேட்டிருப்போம்.

ஆனால் இன்றைய நிலையோ எல்லாம் தலைகீழாகமாறி மலையேறிக்கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.. பெரியோர்கள் பேசாமல் வாய்பொத்தி இருக்கும் நிலை வந்து விட்டது.அக்காலத்தின் மரியாதையும் தன்னடக்கத்துடன் கூடிய நடவடிக்கைகளெல்லாம் காலச்சுழற்ச்சியில் நவீனத்தையும் நாகரீகத்தையும் நாளுக்குநாள் மாறுதலாக கண்டுகொண்டிருக்கும் இக்கால இளைஞர்களிடத்தில் மாறிக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லும்படியாக உள்ளது.

தன்னடக்கமும் மரியாதையும் தடம்புரண்டு கொண்டிருப்பதை நாம் இன்றைய காலத்தில் நடக்கும் பல நிகழ்வுகளிலிருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.பெரும்பாலான இக்கால சிறியோர்கள், இளைஞர்களிடத்தில் தன்னைவிட வயதில் மூத்தவர்களிடம் பேசும்போது தன்னடக்கமில்லாத தலைக்கனமான பேச்சும், பதிலுரைக்கும் போது குரலை உயர்த்தி திமிரான போக்கு,மரியாதை குறைவான நடவடிக்கை எடுத்தெறிந்து பேசுதல், எல்லாம் எனக்குத் தெரியும் என்கிற விதத்தில் விவாதம், மரியாதையில்லாத மமதையான போக்கும் இப்படி நாகரீகம் என்கிற பெயரில் அநாகரீகம் தலைவிரித்து ஆடத்துவங்கி விட்டதை நாம் அனுதினமும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

பெரும்பாலான பெருநகரங்களில் தன்னடக்கமும்,மரியாதையுமில்லாத தரமிழந்த வார்த்தைகளை உபயோகிப்பதை நாம் கேட்டிருப்போம். உதாரணமாக சொல்வதானால் பெரியோர்களை  யோவ் ...பெருசு என்றும் பாட்டிமார்களை ஏ.....கிழவி என்றும் வயதில் மூத்தவர்களை வா..போ...என ஒருமைச் சொல்லிலும் அழைக்கும் பழக்கத்தை ஏற்ப்படுத்திக்கொள்ள தொடங்கி விட்டனர்.இதுமட்டுமல்ல இன்னும் எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம். இப்படி மரியாதைக் குறைவாக நடந்து கொள்வது நமது கலாச்சார அழிவுக்கு முதற்படியாக இருக்கிறது.என்பதை நினைக்கும்போது வேதனையாகத்தான் உள்ளது.

ஒருவரது தன்னடக்கத்தையும் பெரியோர்களிடத்தில் நடந்து கொள்ளும் விதத்தையும் வைத்தே அவர்களது வளர்ப்புமுறை எப்படியென சமுதாயத்தார் அறிந்து கொள்வார்கள். .இதனால் தமது பெற்றோர்களுக்கும் சேர்த்து அவப்பெயர் உண்டாகிறது.தன்னடக்கத்துடன் நடப்பவகளுக்கு சமுதாயத்தாரிடம் எப்போதும் நன்மதிப்பு கிட்டும்.ஒருவரது நடவடிக்கைகளை வைத்தே அவரது இதர குணங்கள் எப்படி இருக்கும் என இதிலிருந்து கணித்து விடுவார்கள்.

சிறுவயதிலிருந்தே ஒருவன் தன்னடக்கத்தையும் மரியாதையையும் பேண வில்லையென்றால் அவனது வாழ்வில் நிறைய பாதிப்புக்களுக்கு ஆளாக நேரிடும். சமுதாய மக்கள்மத்தியில் அவப் பெயர் உண்டாகும். மணம் முடிக்கும் பட்சத்தில் பெண்ணோ ஆணோ மன நிறைவில்லாத வாழ்க்கையாகிவிட நேரிடும். தன்னடக்கமில்லாத இந்தப் பழக்கம் தமது திருமணவாழ்விலும் தொடர்ந்தால் அத்தம்பதியர்களுக்குள் போட்டியும் தாழ்வுமனப்பன்மையும் உண்டாகி மனக்கசப்பு ஏற்ப்பட்டு பிரிவினை உண்டாக வாய்ப்பாகிவிடும்.

அடுத்து பார்ப்போமேயானால் பணிசெய்யும் இடத்தில் தனது மேலாளருடன் பேசும்போதும் பிறரிடம் உதவியை எதிர்பார்த்து செல்லும்போதும்,தன்னுடன் பழகும் சக நண்பர்களின் உறவினர்கள் முன்பும் முதியோர்களிடத்திலும் தன்னடக்கம் முக்கியமாக பேணிட வேண்டும். இல்லையேல் வாழ்நாள் முழுதும் திமிர்பிடித்தவன் என்கிற பெயரையும் சேர்த்து சுமக்கும்படி இருக்கும்.

எனவே தன்னடக்கம்,மரியாதை என்பது ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்கவேண்டிய உயரிய குணங்களில் ஒன்றாக இருக்கிறது. ஒருவரது தன்னடக்கத்தையும் மரியாதையான பேச்சுக்களை வைத்துத்தான் சமுதாயம் நம்மையும் நம்மைச் சார்ந்த உறவுகளையும் மதிக்கிறது.என்பது இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

என்னதான் நவீனமும் நாகரீகமும் முன்னேறிக் கொண்டு போனாலும் தன்னடக்கமும் மரியாதையும் நம்நாட்டுக் கலாச்சாரத்துடன் ஒட்டிப் பிறந்த பிறவிபோலாகும். அதை ஒருபோதும் நம் கலாச்சாரத்துடனும் வாழ்க்கை நெறியுடனும் பிரித்திடலாகாது. நமது கலாச்சார பழக்கவழக்கங்களை கட்டிக்காப்பது ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது.

ஆகவே வயதில் குறைந்த சிறியவர்கள் இளைஞர்கள் பெரியோரிடத்திலும் ,முதியோரிடத்திலும் பேசும்போது தன்னடக்கத்துடனும்,மரியாதையுடனும் நடந்து கொள்வதுடன் அவர்களை கண்ணியப்படுத்த கற்றுக் கொண்டு தன்னடக்கத்துடன் தலை நிமிர்ந்து நடப்போமாக !!!

அதிரை.மெய்சா

2 Responses So Far:

Ebrahim Ansari said...

//எனது பேரன் நான் கிழித்த கோட்டை தாண்டமாட்டான். என்றும் எனது மகன் என்சொல்தான் கேட்டு நடப்பான் என்றும் மார்தட்டிக்கொண்டு பெருமையாக சொல்வதை நாம் பார்த்திருப்போம். கேட்டிருப்போம்.// ஆம். பார்க்கிறோம் ; கேட்கிறோம்.

நான் அறிந்த ஒரு பெரிய மனிதர்; கல்வியாளர்; ஊரே புகழும் அறிவாளர்; பல்துறைகளிலும் ஆலோசனைகளைக் கூறத் தகுதியும் அனுபவமும் வாய்ந்தவர்; மார்க்க சட்டங்களையும் அறிந்தவர். நமது ஊரைச் சேர்ந்தவரல்ல. ஆனால் நான் ஒரு விஷயம் தொடர்பாக அவரை சந்தித்துப் பேசிக் கொண்டு இருக்கும்போது அவரது பேரனைக் கூப்ப்பிட்டு ஒரு செய்தி சொன்னார் . அதற்கு அந்தப் பேரன் அவரை நோக்கிச் சொன்னது

" போங்கப்பா! உங்களுக்கு ஒன்னும் தெரியாது. "

பெரியவர் என்னை பார்த்தார். நான் அவரைப்பார்த்தேன்.

எங்கள் இருவரின் பார்வையில் தம்பி மெய்ஷா எழுதியுள்ள இந்த பதிவின் பேசுபொருள் பரிமாறப்பட்டது

வாழ்க்கை எண்ணும் ஓடம் வழங்குகின்ற பாடம். மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா கீதம்.

sabeer.abushahruk said...

ஆகவே வயதில் குறைந்த சிறியவர்கள் இளைஞர்கள் பெரியோரிடத்திலும் ,முதியோரிடத்திலும் பேசும்போது தன்னடக்கத்துடனும்,மரியாதையுடனும் நடந்து கொள்வதுடன் அவர்களை கண்ணியப்படுத்த கற்றுக் கொண்டு தன்னடக்கத்துடன் தலை நிமிர்ந்து நடப்போமாக !!!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு