Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 10. 15

அதிரைநிருபர் பதிப்பகம் | January 09, 2016 | ,


அண்மையில் சென்னையிலும் திருவள்ளூர் காஞ்சி மாவட்டங்களிலும் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் மக்கள் குடிவாழ்ந்த வீடுகளிலிருந்து மிக்சி, கிரைண்டர், பீரோ, பிர்ட்ஜ் போன்ற வீட்டுப் பொருள்களை அடித்துக் கொண்டு போய் வங்ககடலில் சேர்த்தது பற்றி மட்டும் நாம் பேசுகிறோம். ஆனால் இந்த வெள்ளம் சிலவற்றை இந்த சமுதாயத்துக்காக விட்டுவிட்டும் சென்று இருக்கிறது. அவ்வாறு வெள்ளம் விட்டுச் சென்றவை அகரினைப் பொருள்களல்ல உயரின உயிர்களாகும். 

அந்த உயிர்களுக்கு உணர்வு இருக்கிறது; முக்கியமாக பசி இருக்கிறது; நோய் இருக்கிறது; அன்றாட சுயதேவைகளுக்கு உதவ ஆள் தேவை இருக்கிறது. மரணத்துக்கான அழைப்பு மடல் வரும்வரை மனதுக்கு ஆறுதல் தேவை இருக்கிறது. அனாதையான குழந்தைகள், ஆதவற்ற முதியோர்கள்தான் அவர்கள். அச்சமூட்டிய வெள்ளம், விட்டுச்சென்ற எச்சங்களில் இவர்கள் முக்கியமானவர்கள்., உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் உயிருடையோராகவே இவர்கள் இருந்தாலும் உண்மையில் இவர்கள் அரவணைக்கப்பட்டு ஆதரிக்கப்படாத வரை நடமாடும் பிணங்களே.

கடந்த வாரம் அனாதைக் குழந்தைகளை ஆதரிப்பதைப் பற்றி எழுதப்பட்ட அனைத்து காரணங்களும் அனாதையான முதியவர்களையும் பெற்றெடுத்த பிள்ளைகளாலும் சொந்தங்களாலும் புறக்கணிக்கப்பட்டு செயற்கையாக அனாதையாக்கப்பட்ட முதியவர்களையும் ஆதரிப்பதற்கும் பொருந்தும். 

வெள்ளப் பேரிடர் நிகழ்வுகளைத் தொகுத்த நியூஸ் செவன் தொலைக் காட்சியின் செய்தியாளர்கள் தங்களின் அனுபவங்களைத் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியைக் காணும் வாய்ப்புக் கிடைத்தபோது அங்கு ஒரு உண்மைக்கதையாக வெளிப்பட்டது. அந்தக் கதையை கண்ணீருடன் வெளியிட்டவர் செய்தி சேகரிப்பாளர் செல்வி. பவதாரணி அவர்களாவார்,. அந்தக் கதை நிறைவுறும்போது ஒரு அழைப்பாளன் கம்பீரமாக தனது காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாமே என்ற பெருமித உணர்வு ஏற்பட்டது. 

அந்தக் கதை இதுதான். 

ராஜா அண்ணாமலை புரத்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. இரண்டு தளங்கள்வரை தண்ணீர் உட்புகுந்துவிட்டது. குடும்பங்கள் மாடிப்படிகளில் குடியேறின. வெள்ளம் வீடுகளுக்குள் வந்து இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் அந்தக் குடியிருப்பு சில தன்னார்வ முஸ்லிம் இளைஞர்களின் பார்வையில் பட்டது. மிகவும் கஷ்டப்பட்டு நீந்திச் சென்று அங்கு குடியிருந்த மாடிப்படிவாழ் மக்களை சந்தித்து தங்களது கரங்களில் இருந்த உணவு, தண்ணீர் ஆகியவற்றை உடனே வழங்கியதுடன். தாங்கள் கொண்டு வந்த அரிசி முதலிய பொருள்களைவைத்து அங்கிருந்த மொட்டைமாடியில் சமையல் செய்ய ஆரம்பித்தனர். 

அந்தக் குடியிருப்பில் இருந்தவர்களில் ஒரு வயதான ,பிராமண தம்பதிகளும் அடக்கம். . அவர்களது முதுமையும் இயலாமையும் பல்லாண்டுகளாக அவர்களோடு ஒட்டிக் கொண்டு இருக்கும் பல்வேறு நோய்களும் அந்த வெள்ளத்தில் அவர்களை மிகவும் வாட்டி எடுத்துவிட்டன. பாரம்பரியமான ஆச்சாரமும் ஐதீகமும் ஆன்மீகமும் கொண்ட பின்னணியில் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த முதியோர்களின் பிள்ளைகள் அமெரிக்கா, லண்டன் என்று வசித்து வருகிறார்கள். அவர்களுடைய உறவினர்கள் அருகில் இருக்கும் மந்தைவெளியில் வசித்து வருகிறார்கள். வெளிநாட்டிலிருந்து பிள்ளைகள் தொடர்பு கூட கொள்ள இயலாத நிலைமை; உறவினர்கள் வந்து பார்க்கவோ தங்களுடன் அழைத்துப் போய்வைத்து பராமரிக்கவோ இயலாத சூழ்நிலைகள். வேலைக்காரப்பெண்ணும் வந்து போக இயலாத நிலை. இந்த சூழ்நிலையில் முஸ்லிம் இளைஞர்களின் கைகளால் சமைத்த உணவை வாங்கி சாப்பிட அவர்களது ஆச்சாரம் தடுத்தது. அவர்களைப் பொறுத்தவரை பசி வந்திட பத்தும் பறந்து போகச் செய்ய அவர்களது ஐதீகம் மறுத்தது. இதைப் பார்த்த முஸ்லிம் இளைஞர்கள் அவர்கள் என்னதான் சாப்பிடுவார்கள் என்று கேட்டறிந்து வேறு ஒரு பகுதியில் தொண்டுப்பணி ஆற்றிக் கொண்டிருந்த தங்களது இயக்கத் தோழர்களிடம் வாட்ஸ் அப்பில் 
விபரங்களைச் சொல்லி அந்த வயதான தம்பதிகளுக்கு அவர்கள் கேட்ட உணவை பெரும் கஷ்டங்களுக்கிடையில் வரவழைத்து அவர்களின் பசி போக்கினார்கள். அதுமட்டுமல்ல; அவர்களது மருந்துகளும் மழைவெள்ளத்தில் நனைந்துவிட்டதால் புதிதாக மருந்துகளையும் அதே ரீதியில் தோழர்கள் மூலம் வாங்கிவரச் செய்து அவர்களை போர்வை முதலியவற்றைக் கொடுத்து பொன் போல் போற்றிப் பாதுகாத்தார்கள். 

இரண்டு நாட்கள் இவ்வாறே முஸ்லிம் இளைஞர்கள் அந்த வயதான தம்பதிகளை கவனித்துக் கொண்டார்கள். வெள்ளம் வடிந்ததும் அவர்களுடைய வீட்டுக்குள் சென்று வீட்டையும் சுத்தம் செய்து கொடுத்தார்கள். பூஜை அறையை சுத்தம் செய்வதற்காக பிரத்யேகமாக ஒரு பிராமண தன்னார்வத் தொண்டரையும் தங்களின் அணியில் சேர்த்துக் கொண்டார்கள். 

மூன்று நாட்கள் கழித்து, மந்தைவெளியில் இருந்த அவர்களது உறவினர்கள் மிகுந்த கவலையுடனும் பரபரப்புடனும் அவர்களை ஆவலுடன் தேடிவந்தார்கள். முதியோர் நலமாக இருப்பதைக் காண    அவர்களுக்கெல்லாம் மகிழ்வும் நிம்மதியும் ஏற்பட்டது. கொஞ்ச நாட்களுக்கு தங்களுடன் மந்தைவெளியில் வசிக்கலாம் வந்துவிடுங்கள் என்று என்று அந்த வயதானவர்களின் உறவினர்கள் அழைத்தபோது அந்த வயதான தம்பதிகள் சொன்ன வார்த்தைகள் , “ நாங்கள் ஏன் வரவேண்டும் ? இறைவன் எங்களை கவனிப்பதற்காக இந்த முஸ்லிம் பிள்ளைகளை எங்களிடம் அனுப்பி வைத்தான். இந்தப் பிள்ளைகள் இருக்கும்போது நாங்கள் எங்களது இருப்பிடத்தைவிட்டு விட்டு வரவேண்டிய தேவை இல்லை . இந்தப் பிள்ளைகள் இன்னும் எங்களுடைய பராமரிப்புத் தேவையான அளவுக்கு எங்களைப் பார்த்துக் கொள்வார்கள் “ என்று சொன்னார்கள். உறவினர்கள் திரும்பிச்சென்றார்கள். பிராமணர்களுக்கு முஸ்லிம்கள் பிள்ளைகளாகி சொந்தமானார்கள். அங்கே இஸ்லாத்தின் தன்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.  

நாகரிகம் வளர்ந்துவிட்டதாக சொல்லப்படும் இன்றைய உலகமயமாக்கலின் காலத்தில் , பெற்றோரைப் பிரிந்து வாழவேண்டிய நிலை இருதரப்பு இளம் தம்பதிகளுக்கு அவசியமாகிவிட்டது. இதனால் பராமரிக்க ஆள் இல்லாத முதியவர்களின் எண்ணிக்கை ஊரெங்கும் அதிகமாகிவிட்டது என்பது நிதர்சனம்; யதார்த்தம். உள்ளூரிலேயே வாழும் குடும்பங்களில் கூட முதியோர்கள் “ பெருசு” என்று பட்டம் கட்டி அலட்சியப்படுத்தப்படுவதும் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று எண்ணப்படுவதும் சகஜமாகிவிட்டது. தலைமுறை இடைவெளி என்று ஏற்படுத்தப்படும் இடைவெளி சொந்தங்களை தூரத்தில் கொண்டுபோய் வைத்துவிடுகிறது. பெற்ற பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் முதியோரைப் படுத்தும்பாடுகளின் பல சோகமான கதைகள் குடும்ப மானம் கருதி வெளிவராமலேயே இருக்கின்றன. 

கோயில்களின் வாசல்களில், தர்காக்களின் படிக்கட்டுகளில், தேவாலயங்களின் புறப்பகுதிகளில்  தங்களை அனாதைகள் என்று பட்டம்கட்டிக் கொண்டு அமர்ந்து பிச்சை எடுத்து சாப்பிடும் பலர் உண்மையில் அனாதைகள் அல்ல. தாங்கள் வளர்த்த கடா இவர்களின் மார்பில் பாய்ந்த காரணத்தால் மனம் வெறுத்து வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டு கண்காணாத ஊரில் உட்கார்ந்து காலத்தை ஓட்டுபவர்கள் இவர்களில் பலர் இருப்பார்கள். 

அண்மையில் முத்துப் பேட்டை தர்காவில் ஒரு முதியவர் அனாதையாக இறந்து கிடந்தார். அவர் அந்த தர்ஹாவுக்கு வந்து ஆறு வருடங்களாகின்றன. தர்ஹாவுக்கு வந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு சேவுகப் பெருமாள் என்ற தனது பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்டு இஸ்லாத்தைத்தழுவினார். அங்கு பகிரப்படும் நேர்த்திக் கடன் சோற்றுப் பொட்டலங்களை வாங்கிசாப்பிட்டுக் காலம் கடத்தினார். அவரது இறுதிச் சடங்குகளை செய்ய ஏற்பாடுகள் செய்தபோது - அவர் இறந்து கிடந்த இடத்தில் அவரது சொற்பமான சொந்த உடமைகளை பிரித்துப் பார்த்த போது சுற்றிலும் நின்றவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இறந்தவர் ஒரு அனாதையல்ல என்பது முதல் உண்மை; மனைவியை இழந்த அவர் , மகன் மற்றும் மருமகளால் நடத்தப்பட்ட கொடுமைகள் தாங்காமல் வீட்டை விட்டு மனம் வெறுத்து வெளியேறியவர். அடுத்த உண்மை அவர் ஒரு ஒய்வு பெற்ற சுயநிதி தனியார் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றிய எம். ஏ. எம். பில் பட்டதாரியும் என்பதாகும். தனது சொத்துக்களை மகன்பேருக்கு எழுதிவைத்துவிட்ட  பிறகு உருவாகிய குடும்பச் சூறாவளியில் , முத்துப் பேட்டையில் கரை ஒதுங்கியவர்தான் அந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னேறிய ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர். அழுக்கடைந்த உடைகளுடன் அனாதைகோலத்துடன் தாடியும் மீசையும் மண்டிய பிச்சைக்காரரின் தோற்றத்தில் ஒரு மக்கள்கூடும் இடத்தில் மரணித்தது மாபெரும் சமுதாயக் கொடுமையல்லவா? இது ஒரு உதாரணம்தான். 

ஒவ்வொரு முதியவயதுடைய அநாதைப் பிணங்களின் பின்னணியிலும் இவ்வாறு பல உண்மைகள் ஒளிந்து இருக்கும். இந்தத் தலைப்பில் நாம் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால் இத்தகையோரை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு தேடிக் காண்கின்ற புலனாய்வும் ஒரு அழைப்பாளனின் பணியாகும் என்பதே. 

ஒவ்வொரு இயற்கைப் பேரிடருக்குப் பின்னும் இத்தகையோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை ஒரு அழைப்பாளன் அரிச்சுவடிப் பாடமாகப் படித்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு இயற்கைப் பேரிடருக்குப் பின்னும் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இத்தகையோரைத் தேடித் தேடிப் பார்த்து அவர்களை சேர்க்கவேண்டிய இடங்களில் சேர்த்துப் பராமரிக்க வேண்டிய கடமையும் ஒரு அழைப்பாளனுக்கு இன்றியமையாததாகவும் இருக்கிறது. இறைவனின் கட்டளையாகவும் இருக்கிறது. 

முதுமையின் கொடுமைகள் எவ்வாறு இருக்கும் என்று அறிந்திருந்தால்தான் பெருமானார் ( ஸல்) அவர்கள் பல வேதனைகளிலிருந்தும் பாதுகாக்கக் கோரி இறைவனிடம் இவ்வாறு துஆச் செய்ததாக அனஸ் பின் மாலிக் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள். “இறைவா! நான் உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்தும் சோம்பலில் இருந்தும் தள்ளாமையிலிருந்தும் தள்ளாத வயதிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் வாழ்வு மற்றும் மரணவேதனைகளிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன் “ என்று கேட்டார்கள். ( புஹாரி).     

அதுமட்டுமல்லாமல், இந்தியாவைப் பொறுத்தவரை 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் 20 சதவீதத்துக்கு அதிகமானோர் மனநோய், மனச்சிதைவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக லக்னோவில் உள்ள சத்ரபதி சாஹிஜி , புதுச்சேரி ஜிப்மர் ஆகிய பல்கலைக் கழகங்களும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமும்  இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் 1947ஆம் ஆண்டு 32 வயதாக இருந்தது. அது 2011ஆம் ஆண்டு 63.4 ஆக உயர்ந்தது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 7.1 விழுக்காடாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் வெறுத்து ஒதுக்கப்பட்டே இருக்கிறார்கள்; அல்லது போதுமான பராமரிப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

இதேபோல் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள்தொகை ஒட்டுமொத்தமாக 55 விழுக்காடு வரை வளர்ந்துவிடும். அப்போது 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 326 விழுக்காடாகவும், 80 வயதிற்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 700 விழுக்காடாகவும் உயரும் வாய்ப்புள்ளது என்றும் அந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. இவர்கள் அனைவரையும் கவனிக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல அழைப்புப் பணியாளருக்கும் சொந்தமானதாகும். 

முதியவர்கள் மனநலம் பாதிக்கப்படுவதற்குக் காரணம் குடும்பத்தினரின் அரவணைப்பு இல்லாததே! பெற்று வளர்த்த பிள்ளைகளே தங்களைப் புறக்கணிக்கும்போது பெற்றவர்களின் மனநிலை ஒரு பறிகொடுத்தவனின் மனநிலையாகவே இருக்கும். அந்த வேதனையின் உச்சமே மன இறுக்கமாகி மன நோயாக மாறுகிறது என்று மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலைகளை எண்ணிப்பார்க்க அவசர உலகில் பலருக்கு நேரமில்லை. ஆகவே பெற்றபிள்ளைகள் மற்றும் உற்ற உறவுகள் செய்ய மறந்ததை அழைப்புப் பணியாளர்கள் நிரப்பி நிறைவு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. 

பிள்ளைகளைப் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு பல பெற்றோர்கள் தனிமையில் தனி வீட்டில் தவிக்கின்றனர். பலர் வீடுகளில் பெற்றோர் காவல்காரர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. பணம் இருந்தும் உதவிக்கு ஆளில்லை; உறவுக்கும் யாருமில்லை; உபசரிப்புக்கும் யாருமில்லை. இதனைத் தெரிந்து கொண்ட திருடர்கள் அவர்களது பணத்துக்காக குறிவைத்துப் படுகொலை செய்யும்போக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகையோரைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் அழைப்பாளர்கள் அடங்கிய ஒரு அர்ப்பணிப்புப் படை ஊருக்கு ஊர் தேவைப்படுகிறது. 

முதியோர்களை ஒரு தலைமுறையின் விழுது என்று சொல்லலாம். இந்த விழுதுகள் வெட்டி வீழ்த்தப்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். கருணை உள்ளத்துடன் சகோதர மத அமைப்புகள் பல முதியோர் இல்லங்களை நடத்தி வருகின்றன. அனாதையான முதியோர்களை ஆதரிக்கின்றன. திரு. வித்யாசாகர் போன்ற பலரின் பணிகளை இங்கு குறிப்பிடலாம். இரக்கமுடையோருக்கும் ஈகைத்தன்மை படைத்தோருக்கும் தனது சுவனத்தில் இடமளிப்பதாகக் கூறிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட அழைப்பாளர்கள் அந்த வாக்களிக்கப்பட்ட சுவனத்தில் தங்களுக்கும் ஒரு இடம் தேடிக் கொள்ளவேண்டுமானால் முதியோரை அரவணைக்கும் அறப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். 

பலர் வாழ்ந்து செத்துப் போகிறார்கள்; சிலர் செத்த பின்னும் வாழ்கிறார்கள். நாம் செத்த பின்னும் வாழ விரும்பினால் நாம், நமது பெயர் சொல்லும் நல்லறங்களைச் செய்ய வேண்டும். அத்தகைய நல்லறங்களில் முதியோரை அரவணைப்பதும் அடங்கும். குறிப்பாக ஒரு அழைப்புப் பணியாளன் இந்தக் காரியத்தை தலையாயப் பணியாக செய்வது இறைவனின் பொருத்தத்தையும் இஸ்லாத்தை நோக்கிய சமூகத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும். 

இந்தச் செயலில் முற்படுதல் இன்றைய காலத்தின் கட்டாயத் தேவை. இதற்கான முறைபடுத்தப்பட்ட முதியோர் இல்லங்கள் ஆங்காங்கே தேவை. 

இன்ஷா அல்லாஹ் இன்னும் பேசலாம்.    

இபுராஹிம் அன்சாரி

15 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஆழ்ந்து வாசித்து வருகிறேன்... இங்கிருந்து எடுக்கும் குறிப்புகள் சில இடங்களில் எனது கருத்து தெரிவுகளாக சுட்டிக் காட்டவும் செய்கிறேன்...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா

sheikdawoodmohamedfarook said...

//பலர் வாழ்ந்து செத்து போகிறார்கள்;சிலர்செத்தபின்னும் வாழ்கிறார்கள் .// இன்றையநிலையில்முதியவர்களில்பலர்சுற்றத்தால் புறக்கணிக்கப் பட்டு தினம்தினம் செத்து-செத்து பிழைக்கிறார்கள். பிழைத்து-பிழைத்து சாகிறார்கள். முத்துபேட்டை தர்கா நாகூர் தர்காபோன்றவைகள்அவர்களுக்குஅடைக்கலபீடமாகிவிட்டது .

crown said...

இந்த வெள்ளம் சிலவற்றை
இந்த சமுதாயத்துக்காக விட்டுவிட்டும் சென்று இருக்கிறது.
அவ்வாறு வெள்ளம் விட்டுச் சென்றவை,
அகரினைப் பொருள்களல்ல உயரின உயிர்களாகும்.
-----------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.செவிட்டில் அறையும் உண்மை!

crown said...

இறைவன் எங்களை கவனிப்பதற்காக இந்த முஸ்லிம் பிள்ளைகளை எங்களிடம் அனுப்பி வைத்தான். இந்தப் பிள்ளைகள் இருக்கும்போது நாங்கள் எங்களது இருப்பிடத்தைவிட்டு விட்டு வரவேண்டிய தேவை இல்லை
---------------------------------------------
இனம் புரியாத ஆனந்த கண்ணீர்!தண்ணீரில் தன் இனம் என்னும் மாயை அடித்து போகபட்டது!ஆங்கே உணரபட்டது!

crown said...

காக்கா! இதன் ஆய்வுக்கு வேர்"வரை சென்று உங்கள் வேர்வை வர உழைக்கிறீர்கள்!இதன் பலன் எங்காவது ஒரு நாள் பலன் பூ பூக்கும்!அன்று அல்லாஹ்விடம் அதிகமான அருளை பெற்றுக்கொள்வீர்கள்!அதுவரை ஒவ்வொரு செயலுக்குரிய நன்மை வந்துகொண்டே இருக்கும்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

அழைப்புப் பணி முழக்கங்கள் சார்ந்ததல்ல; செயல்கள் சார்ந்தது என்பதை எவ்வளவு அழகாக, தெளிவாக, ஆதாரபூர்வமாகச் சொல்கிறீர்கள்.

இதே பரிமாணத்தில் எல்லா அமைப்புகளும் செயல்படும் பட்சத்தில் இஸ்லாத்தைநோக்கிய ஈர்ப்பு விசை முடுக்கப்பட்டுவிடும்.

ஆக்கபூர்வமான இத்தொடர் இதைப்போல் வலுவாய்த் தொடர்ந்து நன்முறையில் நிறைவுற தங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியதையும் தங்கள் வக்த்தில் பரக்கத்தையும் தந்தருள்வானாக, ஆமீன்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

(மாஷா அல்லஹ்)

sabeer.abushahruk said...

//இறைவன் எங்களை கவனிப்பதற்காக இந்த முஸ்லிம் பிள்ளைகளை எங்களிடம் அனுப்பி வைத்தான். இந்தப் பிள்ளைகள் இருக்கும்போது நாங்கள் எங்களது இருப்பிடத்தைவிட்டு விட்டு வரவேண்டிய தேவை இல்லை //

பெருமிதத்தில் நெஞ்சு விம்முகிறது! இந்த உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்திய என் சகோதரர்களின் செயல் மனித நேயத்தின் உச்சகட்டமாகவே படுகிறது.

அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்.

crown said...

பெருமிதத்தில் நெஞ்சு விம்முகிறது! இந்த உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்திய என் சகோதரர்களின் செயல் மனித நேயத்தின் உச்சகட்டமாகவே படுகிறது.

அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்.
-----------------------------------
அதே!அதே!

Shameed said...

//இத்தகையோரைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் அழைப்பாளர்கள் அடங்கிய ஒரு அர்ப்பணிப்புப் படை ஊருக்கு ஊர் தேவைப்படுகிறது.//ஊருக்கு பல தேவைகள் இருந்தாலும் இது ஒரு முக்கிய தேவை

Ebrahim Ansari said...

அன்பான தம்பி கவிஞர் சபீர் அவர்களுக்கு

வ அலைக்குமுஸ் சலாம்.

//பெருமிதத்தில் நெஞ்சு விம்முகிறது! இந்த உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்திய என் சகோதரர்களின் செயல் மனித நேயத்தின் உச்சகட்டமாகவே படுகிறது.//

தொலைக் காட்சியில் செய்தி சேகரிப்பாளர்களின் வெள்ள நேரப் பகிர்வின்போது அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஏற்பட்ட அதே பெருமித உணர்வு இது. அன்றே நினைத்து குறித்துவைத்தேன் இதைப் பகிரவேண்டும் என்று.

இங்கு பகிரப்பட்டதும் இன்ஷா அல்லாஹ் இனியும் பகிர இருப்பதும் பல உண்மைக்கதைகளைக் கொண்டவை .

தங்களுடைய அன்பான ஆர்வமூட்டும் பின்னூட்டங்கள் - (ஊட்டங்கள்) அனைத்துக்கும் ஜசக்கல்லாஹ் ஹைரா.

Ebrahim Ansari said...

தம்பி கிரவுன்!

நீங்கள் இடுவது பின்னூட்டங்கள் மட்டுமல்ல. பதிவுகளை அலசி ஆய்ந்து உயிர்நாடியான கருத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்து அவைகளை வார்த்தை எனும் தோரணங்களைக் கட்டி அலங்கரிக்கிறீர்கள்.

தொடர்கள் சீரியல்களாக இருக்கலாம் சீரியசாககூட இருக்கலாம்.

அவைகளுக்கு சீரியல் செட் கட்டி ஜொலிக்க வைப்பது உங்களின் பின்னுரைகள்.

ஜசக்கல்லாஹ் ஹைரா.

Ebrahim Ansari said...

மரியாதைக்குரிய மச்சான் அவர்களுக்கு,

தர்ஹாக்கள் என்று இந்தப் பதிவில் நான் குறிப்பிட்டது ஏதோ அனாதைகள் அனைவரும் அங்கு செல்லவேண்டும் என்ற ஊக்கப்படுத்தும் நோக்கில் அல்ல. உற்சாகப்படுத்த அல்ல.

ஒரு நடைமுறை உண்மை என்ற வகையிலேயே அதைக் குறிப்பிட்டேன். அனாதைப் பறவைகள் அடைக்கலமாகும் ஆலமரமாகவே அவை திகழ்கின்றன. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவை உண்மைகள். நான் குறிப்பிட்டதும் ஒரு உண்மைச் சம்பவம். இன்னும் இவ்வாறான சொல்லமுடியாத கதைகளைப் பூட்டி வைத்த நெஞ்சங்கள் இன்னும் எல்லா தர்காக்கள் மற்றும் கோயில்களில் உலவி வருகின்றன.

அவர்களின் மனக்தவுகளை மெல்லத் தட்டித் திறந்தால் இன்னும் பல கதைக் காற்றுகள் வெப்பமாக வீசும்.

தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி.

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி அபு இபுராஹீம் அவர்களுக்கு,

தெரியும். இப்போது துபாயில் பணியும் அதிகம் பனியும் அதிகம்.

இன்ஷா அல்லாஹ் பணிகளுக்கிடையேயும் நாம் பீடுநடை போடலாம்.

ஜசக்கல்லாஹ் ஹைரா.

Ebrahim Ansari said...

அன்புள்ள சாவன்னா!

கருத்தை வரவேற்றதற்கு நன்றி.

இப்போது எல்லா ஊர்களிலும் முதியோர் பிரச்னைகள் சாதி மத இன பேதமின்றி வலுத்து வருகின்றன. ஒன்று முதியோர்களை அரவணைக்க அமைப்புகள் வேண்டும்; அடுத்தது முதியோர்களுக்கு உடல்நல ஆலோசனைகளும் அவர்களது மனக்குறைகளை அன்புடன் விசாரித்து அவற்றை நீக்கும் அறிவுரைகளை வழங்கவும் அமைப்புகள் வேண்டும்.

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக புதிதாக திருமணம் செய்யப்போகும் /செய்துகொண்ட தம்பதிகளுக்கு கவுன்சிலிங்க் வழங்கும் ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

இதே போல முதியவர்களுக்கும் ஆலோசனைகளும் மனதைரியமும் முக்கியமாக யதார்த்தங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவமும் விட்டுக்கொடுத்தலும் வளர்த்துக் கொள்ளும்வகையில் கவுன்சிலிங் நிகழ்ச்சி நடத்த வேண்டும். இதை ஒரு பொதுவான நிகழ்ச்சியாக நடத்தவேண்டும்.

உனது கருத்துக்கு நன்றி.

crown said...

இந்த ஆக்கத்தை படித்து பார்க்கும் போது இந்த கவிதை பிறந்தது.இதோ உங்கள் பார்வைக்கு!
------------------------------------------
முன்பு தர்க!தர்கா!
தகர்க்கபட வேண்டியது என்ற எண்ணமே
மேலோங்கி இருந்தது!
இன்று,
அந்த எண்ணம் சற்றே அடங்கி போய்விட்டது!
சொந்தம் சாகடித்த,
தெருவோர ஆனாதைகளுக்கு
அதன் திண்ணை அன்னை மடியாகவும்,
அண்ணச்சாவடியாகவும் மாறிபோனதால்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.