![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicW9bFOr3XFXBG920AkJCoZES6K9gL5Ht1umCfofr4oPF08wMZ2N-2djATwCQIMVBuWqeXnTltY8zT_GHrQoxWqUADW0A3T2a8W7uIQ1KMCK0dcgLJp4PqhH4pe6x6wME7GBJBiAwmf9c/s320/kaasu.jpg)
நவீனங்களும் தலை தூக்கிய பின்பு இன்றைய சூழ்நிலையில் பணத்தேவைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் பன்மடங்கு கூடிவிட்டன. நாணயத்தின் மதிப்பும் நாளுக்கு நாள் நலிந்து கொண்டிருப்பதால் நம்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பெருந்தொகை தேவைப்படுகிறது என்பது என்னவோ உண்மைதான் அதுபோல இந்த சூழலில் காசு பணம் இருந்தால் எதையும் வாங்கி விடலாம் என்கிற எண்ணம் ஒவ்வொருவரிடத்திலும் மேலோங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மையே.!
காசிருந்தால் எதையும் வாங்கிவிடாலாம் என்று சொல்வதற்கு பொருத்தமாக இன்றைய காலகட்டத்தில் நடக்கும் பல சம்பவங்களை உதாரணங்களாகச் சொல்லலாம்.அதில் முதலாவதாக சொல்லப்போனால் ஒருமனிதனின் குணம், குடும்பம்,கோத்தரம், பழக்கவழக்கம்,நடவடிக்கை,செயல், சமுதாயத்தார் மத்தியில் உள்ள பெயர் புகழ் இதை பார்த்து மதித்த காலம்போய் இப்போதைய காலகட்டத்தில் பணக்கார்களையும், பெரும் செல்வந்தர்களையும் மதிக்கும் காலமாக பணக்காரர்களுடன் பழக்கவழக்கம் வைத்துக் கொள்வதையும் அவர்களை தனது நண்பர்களாக சொல்லிக் கொள்வதையும் கௌரவமாகவும் பெருமையாகவும் நினைக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்வதானால் மனிதர்களை மதிப்பது என்பது அவனது காசுபணத்தை வசதிவாய்ப்பை பொருளாதாரத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.
அடுத்து இதில் பெரும்கொடுமையும் வேதனைப்படக்கூடிய விஷயம் என்னவென்று சொன்னால் பணக்காரர்கள் செய்யும் பெரிய தப்புக்கள்,குற்றங்கள் கூட சிலசமயத்தில் நியாயமாக்கப்பட்டு அவர்களுக்கு சாதகமாக பேசப்படுகிறது. அதே தவறை ஒரு சாதாரண நடுத்தர மனிதன் செய்தால் அதை பெரும்குற்றமாக கருதப்படுகிறது.அப்படியானால் அந்த சூழ்நிலையில் காசுபணம் உள்ளவர்களை பொருத்தமட்டில் காசுபணம் இருப்பதால் செல்வந்தர்களாக இருப்பதால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்பதாகத்தானே அர்த்தமாகிறது.?
அடுத்து பார்ப்போமேயானால் காசுபணம் கைநிறைய வந்தவுடன் சிலர் தனது கடமைகளை செய்ய மறந்துவிடுகிறார்கள். பெற்றோர்களை உடன்பிறந்தோர்களை உறவினர்களை சிறுவயதில் வறுமையில் இருந்தபோது பழகிய நண்பர்களை இப்படி நெருங்கிய கடமைப்பட்டவர்களைக் கூட மறந்து விடுகிறார்கள். எத்தனைதான் காசிருந்தாலும் உண்மையான அன்பு பாசத்தையும் இரத்தபந்த உறவுகளையும் உண்மையான உயிர் நட்புக்களையும் எத்தனைகோடியை அள்ளிக் கொடுத்தாலும் வாங்கிட முடியுமா.? ஆனால் அதை காசைவிட்டு எறிந்தால் எல்லாம் வாங்கிட முடியும் என நினைக்கிறார்கள்.இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாற்றுடன் பல உதாரணங்களை சொல்லிக் கொண்டு போகலாம்.
எனவே இப்படியான குற்றச்சாற்றுகளுக்கு நாம் ஆளாகிவிடாமல் இறைவன் நமக்கு காசுபணத்தை தாராளமாக தரும்போது நமக்குள் தன்னடக்கமும் தாராள குணமும் பிறரையும் சமமாக மதிக்கும் பரந்த மனப்பான்மையும், நல்லெண்ணமும் வளரவேண்டும். ஒன்றைமட்டும் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். இவ்வுலகில் நாம்மட்டுமல்ல இந்த காசுபணமும் யாருக்கும் நிலையானது அல்ல. அது எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு ரீதியில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நம்மைவிட்டு போய்விடலாம். ஆகையபடியால் அது நம்மிடத்தில் இருக்கும்போது இந்தக் காசுபணத்தை எப்படி நல்வழியில் நாம் செலவு செய்யப்போகிறோம் என்கிற பயம்தான் மனதில் வரவேண்டுமேயன்றி திமிர்த்தனம் இம்மியளவும் வந்துவிடக் கூடாது. காசுபணம் இருக்கிறது என்கிற மமதையில் நாம் செய்யும் தவறுகளால் அந்தக் காசுபணம் ஒருநொடியில் காணாமல்போய் விட வாய்ப்பு உள்ளது. எனவே காசுபணம் எவ்வளவுக்கு அவசியமானதாக இருந்தாலும் அதை கடவுளுக்கு நிகராக மதித்து விடக்கூடாது. அதனைக் கொண்டு எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்கிற எண்ணம் துளிகூட மனதில் வளர்ந்து விடக் கூடாது.
ஆகவே நாம் எத்தனை கோடிக்குச் சொந்தக்காரர்களாக இருந்தாலும் இந்த காசுபணமும் பகட்டான வாழ்க்கையும் நிலையானது அல்ல என்பதை உணர்ந்திட வேண்டும். இதைவிட நிலையானவை நாம் செய்யும் நற்காரியங்களிலும் பிறரை மதித்து நடப்பதிலும் தானதர்மம் செய்வதிலும் பிற நல்ல செயல்பாட்டிலும் தான் இருக்கிறது என்கிற நம்பிக்கையுடன் இறைவனின் பயமும் நம்பிக்கையும் வந்து விட்டால் காசுபணத்தைக் கொண்டு இவ்வுலகில் நாம் நினைத்தது எல்லாவற்றையும் வாங்கிவிட முடியாது என்கிற எண்ணம் மனதில் துளிர்விட்டு வளர்ந்து தன்னம்பிக்கையுடன் தலைக்கனம் இல்லாத நேர்மையான வாழ்க்கை வாழ வழிவகுக்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.
அதிரை மெய்சா
4 Responses So Far:
பணத்தால் தற்காலிக சந்தோஷங்களைத் தவிர நிரந்தர அமைதியை வாங்கவே முடியாது.
குட் ஷாட், மெய்சா.
காசிருந்தால் நம்முடைய ரூஹை கைப்பற்றும் மலக்குள்மெவுத்தையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்று நம்புகிறவர்கள் இருந்தாலும் ஆச்சரியமில்லை.
நல்ல நினைவூட்டல் காக்கா
அஸ்ஸலாமுலைக்கும்.அருமையான எழுத்து காசு கொடுத்து கேட்டாளும் இதுபோல் நல் உபதேசம் கிடைப்பது அறிது!காசு அவசியம் ஆனால் அதுவே நம்மை வசியம் செய்யும் கருவியானால் உள்ளத்திலும் ,வாழ்விலும் மாசு புயலாய் வீசும்! வாழ்கை வீழும்.காசு இருப்பதின் பயனே கொடுத்து உதவுவதில்தான் உள்ளது!
இது ஒரு விழிப்புணர்வூட்டும் கட்டுரையே அன்றி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை. புரிந்து கருத்து பதிந்து ஊக்கமளித்த நண்பன் சபீர் சகோ.தாஜுதீன் Crown மற்றும் இக்கட்டுரையை வாசித்த அனைவர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
Post a Comment