அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
அல்லாஹ்வுக்காக நேசித்தல்:
முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில் அவர்களது உதாரணம். இன்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமானது ஒரு பயிரைப் போன்றது. அது தனது குருத்தை வெளிப்படுத்துகிறது. பின்னர் அதைப் பலப்படுத்துகிறது. பின்னர் கடினமாகி அதன் தண்டின் மீது நிலையாக நிற்கிறது. நிராகரிப்பவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதற்காக விவசாயி(கள் எனும் நம்பிக்கையுடையவர்)களை அது மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு மன்னிப்பையும், மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். (அல்குர்ஆன் : 48:29)
"மூன்று குணங்கள் எவரிடம் உள்ளதோ, அவர் அதன் மூலம் இறை நம்பிக்கையின் சுவையை அடைவார். (1) அல்லாஹ்வும், அவனது தூதரும் மற்ற அனைத்தையும் விட ஒருவருக்கு மிக விருப்பமானதாக இருப்பது. (2) ஒருவரை அல்லாஹ்வுக்காக மட்டுமே விரும்புவது (3) இறை மறுப்பை விட்டும் அல்லாஹ் காப்பாற்றிய பின் இறை மறுப்பின் பக்கம் மீண்டும் செல்வதை, நெருப்பில் போடப்படுவதைப் போல் ஒருவர் வெறுப்பது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 375)
''ஏழு நபர்களுக்கு அல்லாஹ், தன் அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத அந்த (மறுமை நாளில்) தனது அர்ஷின் நிழலைத் தருவான்.
- நீதமான அரசன்
- அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபடும் வாலிபர்
- பள்ளிவாசல்களில் தன் உள்ளத்தைப் பறி கொடுத்த மனிதர்
- அல்லாஹ்வுக்காக பிரியம் கொண்டு, அவனுக்காகவே ஒன்று சேர்ந்து, அவனுக்காகவே பிரிந்தும் நிற்கின்ற இருவர்
- அழகும், குடும்பப் பெருமையும் நிறைந்தப் பெண் விபச்சாரத்திற்கு அழைத்தும் ''நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன் என்று கூறும் நபர்
- தன் வலது கை செய்யும் செலவை இட கைக்குத் தெரியாமல் அதை மறைத்துக் கொண்டு தர்மம் செய்கின்ற ஒருவர்
- கலப்பற்ற நிலையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, இதனால் கண்களில் கண்ணீரைச் சிந்தும் ஒருவர்;;;'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 376)
''என் கண்ணியத்திற்காக தங்களிடையே அன்பு கொண்டிருந்தவர்கள் எங்கே? இந்நாளில், என் அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளில் நான் நிழல் தருவேன்'' என்று மறுமை நாளில் அல்லாஹ் கூறுவான்;'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 377)
''என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் இறை நம்பிக்கை கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய மாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு கொள்ளும் வரை நீங்கள் இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டீர்கள். எதை நீங்கள் செய்தால், ஒருவருக்கொருவர் அன்பு கொள்வீர்களோ அதை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? (அது) உங்களுக்கிடையே 'ஸலாம்' கூறுவதைப் பரப்புங்கள் (இதனால் அன்பு கொள்வீர்கள்)'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 378)
''ஒரு மனிதர் ஒரு ஊரில் உள்ள தன் சகோதரரைச் சந்திக்கச் சென்றார். அவர் செல்லும் பாதையில் வானவர் ஒருவரை அல்லாஹ் நிறுத்தினான். வானவரிடம் அவர் வந்த போது ''எங்கே செல்கிறீர்? என வானவர் கேட்டார். ''இந்த ஊரில் உள்ள என் சகோதரனைச் சந்திக்கச் செல்கிறேன்'' என்றார். ''அவரிடம் நீ பயன்படுத்தத் தக்க அருட்கொடை எதுவும் உனக்காக உள்ளதா?'' என்று கேட்டார். ''இல்லை, அல்லாஹ்வின் விஷயத்தில் அவரை நான் நேசிக்கிறேன்'' என்றார். அப்போது வானவர், ''நான் உன்னிடம் வந்த அல்லாஹ்வின் தூதராவேன்'' நிச்சயமாக அல்லாஹ், அவன் விஷயமாக அவரை நீ நேசிப்பது போல் உம்மை நேசிக்கிறான் என்றார்;;;;'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 379)
''ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து, முஆதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உன்னை நான் பிரியப்படுகிறேன். மேலும் முஆதே! உனக்கு உபதேசம் செய்கிறேன். நீ ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் அல்லாஹும்ம அஇன்னீ அலாஃ திக்ரிக வஷுக்ரிக, வஹுஸ்னி இபாததீக'' என்று கூறுவதை விட்டு விடாதே!' என்று கூறினார்கள்.
துஆவின் பொருள்: இறைவா! உன்னை நினைவு கூரவும், உனக்கு நன்றி கூறவும், உன்னை அழகிய முறையில் வணங்கவும் எனக்கு உதவி செய்வாயாக!
(அறிவிப்பவர்: முஆத் (ரலி) அவர்கள் (அபூதாவூது, நஸயீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 384)
"ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.
2 Responses So Far:
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதி பெறுகின்றன.கவனத்தில் கொள்க!அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.
(அல்குர்ஆன் 13:28 )
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதி பெறுகின்றன.கவனத்தில் கொள்க!அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.
(அல்குர்ஆன் 13:28 )
Post a Comment