அளவற்ற
அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
''ஷைத்தான்
உங்களில் ஒருவரது அனைத்துக் காரியங்களிலும், வருகை தருகிறான்.
அவன் உணவு உண்ணும் போது கூட வருகிறான். உங்கள் ஒருவரது உணவு கீழே விழுந்து விட்டால்
அதை அவர் எடுத்து,அதன் தூசியை
அகற்றி விட்டு,பின்பு
அதை சாப்பிடட்டும்! ஷைத்தானுக்காக அதனை விட்டு விட வேண்டாம். சாப்பிட்டு முடித்து விட்டால்
தன் விரல்களை சூப்பட்டும்! தன் உணவில் எதில் பரக்கத் உள்ளது என அவர் அறியமாட்டார் என்று
நபி (ஸல்)கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 752)
''ஒருவரின்
உணவு இரண்டு நபர்களுக்குப் போதும். இரண்டு பேர் உணவு நான்கு நபர்களுக்குப் போதும்.
நான்கு நபர் உணவு,
எட்டு நபர்களுக்குப் போதுமாகும்'' என நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 756)
'பானத்தில் ஊதுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
''பாத்திரத்தில்
தூசியை நான் பார்க்கிறேன்'' என்று ஒருவர்
கேட்டார். ''அதை எடுத்துப்
போடுவீராக'' என்று நபி(ஸல்) கூறினார்கள். ''ஒரே மூச்சில் குடிப்பதால் நான் தாகம் தீர்க்க முடிவதில்லை'' என்று அவர் கூறினார். ''உன் வாயிலிருந்து குவளையை எடுப்பீராக
(விட்டு, விட்டுக்
குடிப்பீராக)'' என்று நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ
(ரலி) அவர்கள் (திர்மிதீ)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 765)
'நபி(ஸல்) அவர்கள், பாத்திரத்தில் மூச்சு விடுவதையும், அல்லது அதில் ஊதுவதையும் தடை செய்தார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 766)
''நபி(ஸல்) அவர்களுக்கு ''ஸம்ஸம்'' தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தேன். அவர்கள் நின்ற நிலையிலேயே
குடித்தார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 767)
''உங்களில் எவரும் நின்று கொண்டு தண்ணீர் குடிக்க வேண்டாம்.
மறந்து (குடித்து) விட்டால் அவர் வாந்தி எடுக்கட்டும்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள்
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 772)
''தன் வேட்டியைத் தரையில் பட இழுத்து நடப்பவனை, மறுமை நாளில் அல்லாஹ் பார்க்க
மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 792)
''வேட்டியில் இரண்டு கணுக்கால்களுக்கும் கீழிறங்கி
இருப்பின், அது நரகில்
உள்ளதாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள்
(புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 793)
'மூன்று
நபர்களிடம் அல்லாஹ் மறுமை நாளில் பேசமாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான்.
அவர்களை தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு கடும் வேதனை உண்டு'' என்று
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை இதைக் கூறினார்கள்.
அப்போது நான், '(அந்த மூவரும்) நட்டமடைந்து விட்டார்கள். கவலை அடைந்து
விட்டார்கள். இறைத்தூதர் அவர்களே! அவர்கள் யார்?'' என்று கேட்டேன். 1)வேட்டியை
(அணிந்திருக்கும் போது) தரையில் பட பூமியல் தொங்க விட்டுச் செல்பவன் 2) தான் செய்த
உதவியை சொல்லிக் காட்டுபவன் 3) பொய் சத்தியம் செய்து தன் சொத்தை விற்பனை செய்தவன்
என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூதர்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 794)
'தன்
வேட்டியைத் தொங்க விட்டவராக ஒருவர் தொழுது கொண்டிருந்த போது, அவரிடம் நபி(ஸல்)
அவர்கள் ''நீர் சென்று, உளுச் செய்வீராக' என்று கூறினார்கள். அவர் சென்று உளுச்
செய்தார். பின்பு வந்தார். ''நீர் சென்று, உளுச் செய்வீராக'' என்று நபி(ஸல்)
கூறினார்கள். அவர்களிடம் ஒருவர் ''இறைத்தூதர் அவர்களே! அவரிடம் உளுச் செய்ய
ஏவுகிறீர்கள். பின்பு அவர் விஷயமாக மவுனமாக இருக்கிறீர்கள் என்ன காரணம்?'' என்று கேட்டடார்.
''அவர் தன் வேட்டியை தொங்க விட்டவராக தொழுது கொண்டிருந்தார். நிச்சயமாக அல்லாஹ்
(ஆடையை) தொங்க விட்டுத் திரிபவரின் தொழுகையை ஏற்கமாட்டான்'' என்று நபி(ஸல்)
கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (அபூதாவூது)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:
797)
''நபி(ஸல்)
அவர்கள் பட்டை எடுத்து அவர்கள் அதனை தமது வலது கையில் வைத்தார்கள். தங்கத்தை
எடுத்து தமது இடது கையில் வைத்தார்கள். பின்பு, ''நிச்சயமாக இந்த இரண்டும் என்
சமுதாயத்தின் ஆண்களுக்குத் தடை செய்யப்பட்டதாகும்'' என்று கூறியதை நான்
பார்த்தேன். (அறிவிப்பவர்: அலீ(ரலி)
அவர்கள் (அபூதாவூது)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 807)
'நபி(ஸல்)
அவர்கள் தன் படுக்கைக்கு வந்தால் வலது புறத்தில் (படுத்து) உறங்குவார்கள். பின்பு
''அல்லாஹும்ம அஸ்லம்து
நஃப்ஸீ இலய்க, வவஜ்ஜஹ்து வஜ்ஹீ இலய்க, வஃபவ்வழ்து அம்ரீ இலய்க, வஅல்ஜஹ்து ளஹ்ரீ
இலய்க, ரஹ்ப தன் வரஹ்பதன் இலய்க, லா மல்ஜஅ வலா மன்ஜயி மின்க இல்லா இலய்க, ஆமன்து
பிகிதாபிகல்லஃதீ அன்ஸல்த வநபிய்யிக ல்லஃதீ அர்ஸல்த'' என்று கூறுவார்கள். (புகாரி)
துஆவின்
பொருள்:
இறைவனே!
என்னை உன்னிடம் ஒப்படைக்கிறேன். என் முகத்தை உன்னிடமே முன்னோக்குகிறேன். என்
காரியத்தை உன்னிடமே ஒப்படைக்கிறேன். என் முதுகை உன் பக்கமே ஒதுங்கச் செய்கிறேன்.
உன்னை ஆதரவு வைத்தவனாக, அஞ்சியவனாகவே (இவ்வாறு செய்தேன்). உன்னிடமே தவிர
ஒதுங்குமிடமோ, பாதுகாப்போ கிடையாது. நீ இறக்கிய உன் வேதத்தையும், நீ அனுப்பிய உன்
நபியையும் நான் நம்புகிறேன். (அறிவிப்பவர்: பரா இப்னு ஆஸிப்(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 814)
'உன்
படுக்கைக்கு நீ வந்தால் தொழுகைக்கு நீ உளுச் செய்வது போல் உளுச் செய்து கொள்.
பின்பு உன் வலது புறமாகப் படு. பின்பு
(மேற்கண்ட துஆவைக்) கூறு. அதையே நீ பேசுவதில் கடைசியானதாக ஆக்கிக் கொள் என்று
நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 815)
''நபி(ஸல்)
அவர்கள் இரவில் தன் படுக்கைக்கு வந்து, தன் கன்னத்தின் கீழ் கையை வைப்பார்கள்.
பின்பு, ''அல்லாஹும்ம பிஸ்மிக்க
அமூத்த வஅஹ்யா'' என்று கூறுவார்கள். விழித்து விட்டால், ''அல்ஹம்து லில்லாஹில்லஃதீ
அஹ்யானா பஹ்தமா அமாதனா வஇலய்ஹின் நுஷுர்''
என்று கூறுவார்கள். (புகாரி)
தூங்கும்
முன் துஆவின் பொருள்:
இறைவனே
உன் பெயராலேயே தூங்குகிறேன். விழிப்பேன்.
எழுந்தபின்
துஆவின் பொருள்:
எங்களை
உறங்கச் செய்தபின் விழிக்கச் செய்த, அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனிடமே
திரும்புதல் உள்ளது.(அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 817)
'ஒருவர்
ஒரு இடத்தில் அமர்ந்து, அந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூரவில்லையானால், அவருக்கு
அல்லாஹ்விடமிருந்து ஒரு இழப்பு ஏற்படும். மேலும் அல்லாஹ்வை நினைவு கூராமல் ஒருவர்
படுத்தால் அவருக்கும் அல்லாஹ்விடமிருந்து ஒரு இழப்பு ஏற்படும்' என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:
819)
'உங்களில்
ஒருவர் சபையில் அமர்ந்திருப்பவரை எழுப்பி, அந்த இடத்தில் அவர் உட்கார வேண்டாம்.
எனினும் சபையில் (நெருக்கி அமர்ந்து) விசாலமாக்குங்கள்'' என்று நபி(ஸல்)
கூறினார்கள். (இப்னு உமர்(ரலி) அவர்கள் தமக்காக யாராவது தமது இருப்பிடத்திலிருந்து
எழுந்து இடம் தந்தால், அந்த இடத்தில் அமர மாட்டார்கள்). (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 825)
''உங்களில்
ஒருவர் ஒரு சபையில் இருந்து எழுந்து, பின்பு (அதே இடத்தில் அமர) மீண்டும் வந்தால்,
அவரே அதற்கு மிகத் தகுதியானவர் ஆவார்''என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 826)
'ஒருவர்
ஜும்ஆ நாளன்று (வெள்ளிக்கிழமை) குளித்து, இயன்ற அளவுக்கு தன்னை சுத்தமாக்கி,
எண்ணெய் தேய்த்து, தன் வீட்டில் உள்ள நறுமணம் பூசி, பின்பு வீட்டை விட்டு வெளியேறி
(பள்ளியில் அமர்ந்துள்ள) இரு நபர்களுக்கிடையே இடைவெளி எதையும் ஏற்படுத்தாமல்,
பின்பு தன் மீது கடமையாக உள்ள தொழுகையை தொழுது, பின்பு இமாம் உரை நிகழ்த்தும் போது
மவுனமாக இருந்து கேட்டால், அவரின் இந்த ஜும்ஆவிற்கும், வரஉள்ள ஜும்ஆவிற்கும் இடையே
உள்ள குற்றங்களை (அல்லாஹ்) மன்னிக்கிறான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஅப்துல்லா என்ற ஸல்மான் பார்ஸீ (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 828)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
தனது அடியாருக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா? அவனல்லாதோரைப் பற்றி அவர்கள் உம்மை அச்சுறுத்துகின்றனர். அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டானோ அவருக்கு நேர் வழி காட்டுபவன் இல்லை.
அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டுகிறானோ அவரை வழி கெடுப்பவன் இல்லை. (அல்குர்ஆன்: 39:36,37)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ்
வளரும்...
அலாவுதீன் S.
7 Responses So Far:
சகோதரர் அலாவுதீன் அவர்களே !
ஒவ்வொரு நாளும் மனித வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அண்ணல் நபி(ஸல்} அவர்களின் வாழ்வின் கருத்துப்பெட்டகங்களை திறந்து காட்டி
நடைமுறை வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை சொல்லி வரும்
தாங்கள் எங்களை நல்வழிப்படுத்துவதோடு தங்களையும் மெருகேற்றிக் கொள்கின்றீர்கள்
உங்களின் நோக்கம் துன்யாவிலும் ஆகிறத்திலும் பலன் தரட்டும்.
அபு ஆசிப்.
ஜசாகல்லாஹ் கய்ரன்!!!.இப்பதிவைப் படிப்பவர்கள், நமது வீடுகளிலும் இது போன்ற குர் ஆன்,ஹதீஸ் விளக்கங்களை,அதற்கென நேரத்தை ஒதுக்கி, நம் மனைவி,மக்கள் ஒன்றாக அமர்ந்து படித்து வருவோமானால்,இன்ஷா அல்லாஹ்,நமது வீடுகளும் சொர்க்கப் பூஞ்சோலையாகிவிடும். அல்லாஹ் அதற்கு தவ்பீக் செய்வானாகவும், ஆமீன்...
ஜஸாக்கல்லாஹ் ஹைரன் ! காக்கா...
பள்ளி நாட்களில், புதுப்பள்ளியில் 'கோயா ஹஜரத்' அவர்களிடம் ஒவ்வொன்றாக மணப்பாடம் செய்த ஞாபகம் வருகிறது !
வேட்டியை கொஞ்சூண்டு சீக்கசீக்க உடுத்திச் சென்ற சிறுவயது நாட்களில் எங்கள் மரியாதைக்குரிய அலீ ஆலிம் (மாமா) அவர்களின் எச்சரிக்கையும் உடணுக்குடன் அதனைச் சரி செய்யச் சொல்லும் கண்டிப்பும் அப்படியே நிழலாடுகிறது !
ஜஸாக்கல்லாஹ் க்ஹைர், அலாவுதீன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்தப் பதிவின் தலைப்பையே எனது கருத்தாகப் பதிய விரும்புகிறேன்.
அமைதியற்ற உள்ளத்துக்கு அருமருந்து. இந்த ஒரு மருந்தே உலகோர் கரங்களில் கொடுக்கப் பட்டு இருக்கிறது.
ஜசாக் அல்லாஹ் ஹைர் சகோதரர் அலாவுதீன் அவர்களே!
சுன்னத்தை ஹயாத்தாக்கத் தந்தமைக்கு நன்றி காக்கா!
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)!
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
Post a Comment