Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இளமையின் ரசனை ஏராளம் - ஏழு மட்டும் இங்கே ! 44

அதிரைநிருபர் பதிப்பகம் | December 16, 2011 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்கினிய வாசக நேசங்களே:

இளமை துள்ளும் எக்காரியமும் ரசிக்கத்தூண்டும் அதன் வேகம் மற்றும் விவேகமும் அதே நேரத்தில் அசர வைக்கும். அவ்வகையில் தனித்திறன் வாய்ந்த இளமையின் புதுமையை அறிமுகப்படுத்துவதில் என்றுமே முன்னோடியாக இருக்கும் அதிரைநிருபர் வலைத்தளம் கண்டெடுத்த மற்றுமொரு நிழற்பட கலைஞன்தான் அசத்தல் காக்கா ஜாகிர்ஹுசைன் அவர்களின் இளைய மகன் அஃப்ஸல் ஹுசைன். 

மலேசியாவில் தந்தையின் தனிப்பட்ட கனிவான கவனிப்பில் வளர்ந்து படித்து வரும் இவர் தமது மூன்றாம் கண்கொண்டு (அதாங்க கேமராவாமே) இறைவனின் படைப்புகளை உற்றுப் பார்ப்பதில் உவகை கொண்டவர் மட்டுமல்ல அப்படியே காட்சிப் படுத்தி ஆவணப்படுத்துவதில் கில்லாடி.

இவரை(யும்) ஊடகத்துறைக்கு அழைத்துவரும் முயற்சியாக இங்கு இவரின் கிளிக்ஸ் பதிவாக மட்டுமல்ல இளயவர் அஃப்ஸலை வரவேற்பதில் மகிழ்கிறோம்...!

அல்ஹம்துலில்லாஹ்.

- அதிரைநிருபர் குழு


எழிலுறக்கம்:
ஆழிப் பேரலை யென
எழாத நீர்நிலை
அக்கினிக் குழம்போ வென
சுடாத வாநிலை 

பச்சை உறை யிட்ட
பெருமலையே தலையணை
பாதத்தில் புல்லுரசும்
பூமியே பஞ்சணை 

ஆரும் சீண்டாத
அமைதியே அதன் துணை
அதனைப் படம் பிடித்தது
அஃப்ஸலின் நல் ரசனை 


பால் வழியும் பாறை: 

ஈரம் இருக்கும் கல்
நீரை நிறுத்தாது
அருவி கொட்டும் பாறையோ
அருகி லிழுக்கும் யாரையும் 

கால் நனைத்துக் கடந்திருப்பர்
கண்விழித்துக் களித்திருப்பர்
அஃப்ஸல் கண்டதால்தான்
அழகாகப் பதிவு செய்தான் 



பசுமைக்கொடி:

கொடிகொண்ட வர்ணங்களாய்
பிடித்திருக்குப் படம்
பசுமைக்கு நடுவே
பாலென சிற்றருவி 

புற்குண்டு பிரித்து
புறப்பட்டதா அருவி
அருவியைக் குழந்தையென
பிரசவிக்கிறதா மலை

அருகிருந்து
அவதானித்த 
அஃப்ஸலுக்கே வெளிச்சம்



வெளிச்ச மழை: 
வெளிச்ச மழை
வீதியில் விழுகிறது
சிலிர்த்த இலை
சிந்தையில் உழுகிறது 

மூடு பனி மயங்கி
மரங்களில் ஒளிகிறது
வானவில் லொன்றை
காணவில்லை மறைக்கிறது 

பச்சைக் கானகத்தில்
வெள்ளை யடிக்கிறது
பசுமை புரட்சி செய்து
வெயிலையே எதிர்க்கிறது 

அஃப்சல் அழகியலில்
அசல் இந்த ஆதாரம்



பசுந் தென்றல்: 

கரும் பச்சையும்
கிளிப்பச்சையும் இரட்டையர் 

இங்கு
வசிக்க வொரு இடம்
வாய்த்துவிட்டால்
கதவில்லா வாயிலும்
கம்பியில்லா சாளரமும்
கூரையில்லா குடிசையுமாய்
வீடு ஒன்று வைக்க வேண்டும்
விடுமுறையைக் கழிக்க வேண்டும் 

படம்பிடித்த அஃஸல்
இடம்பிடித்துத் தருவானா?



மந்தகாச மந்தாரம்:

மேகம் மிதக்கிறதே அது
வானமா தடாகமா

மெல்ல விடிகிறதே அது
கிழக்கா விளக்கா

எத்தனை ஓவியங்கள் அது
வானமா வண்ணத்திரையா

அருமையாய் கைப்பற்றியது 
அஃப்சலா அம்சமா



தோற்ற மயக்கம்: 

பூக்களின் உடை உடுத்தி 
புது வர்ணத்தில் 
இலைகள் 

பச்சையம் இல்லாது 
பயனென்ன 
பார்க்கவும் ரசிக்கவும் 
பயமென்ன

அணிவகுப்பைத் தொடர
அஃசலுக்குத் தயக்கமென்ன

- Z. அஃப்சல் ஹுசைன்

- சபீர்

44 Responses So Far:

Yasir said...

அசத்தல் காக்கா மகன் அஃசலின் அற்புத கேமராவண்ணம் இங்கு கண்கொள்ளா காட்சிகளாக....அதற்கு வலுசேர்க்கும் கவிகாக்காவின் ஆங்கில & தமிழ் கவிதைவரிகள்..கலக்கல்தான்...

Dear Afsal....No words to explain your photography skills & talent...great work man....Allah bless you.......we expect more & more from you in the future

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஸ்கூல்ல படிக்கும்போது பாடம் பார்த்து பாகம் குறி என்று சொல்லித்தாந்தார்கள், பூகோளம் பாடம் வகுப்பு நடக்கும் போதெல்லாம் மேப்பில் சரியாக அந்தந்த நாட்டுக்குரிய பெயரை எழுதச் சொல்லும்போது ஏதோ நாமதான் பங்கு போட்டு பிரிச்சு கொடுத்தோம்கிற நெனப்புல நிறைய அங்கேயும் இங்கேயும் எழுதி வச்சுருகோமுங்க...

ஆனால் இங்கே..

காமிராக் கண் கண்டதோ கொள்ளை அழகு...

கேமராக் காதலர்கள் எல்லோருக்கும் ரசனை ஏனுங்க இப்புடி ஓடுது தாறுமாறா கற்பனைக்கு எட்டுவதெல்லாம் வாண்ணமாக சிக்கிவிடுகிறது அவர்களுக்கு மட்டும் !?

அவைகள் அனைத்தும்... அற்புதம் !

புதுவரவு, வாருங்கள் அஃப்ஸல்... முத்தோர் முன்னால் வந்து உங்களின் தனித் திறன் காட்டுங்கள்...

வாழ்த்தி வரவேற்கிறோம்... !

அடுத்து !

எங்க கவிக் காக்காவுக்கு(ம்) வாசகர் வட்டம் சார்பாக பொன்னாடை போர்த்தி, ஆஹா வேணாம் வேணாம்ங்க... அது கூடாதாம்...

//மேகம் மிதக்கிறதே அது
வானமா தடாகமா

மெல்ல விடிகிறதே அது
கிழக்கா விளக்கா

எத்தனை ஓவியங்கள் அது
வானமா வண்ணத்திரையா//

மாலை மயக்கம் ! அழகோ அழகு... !

//மூடு பனி மயங்கி
மரங்களில் ஒளிகிறது
வானவில் லொன்றை
காணவில்லை மறைக்கிறது //

ஆஹா !
எனக்கெல்லாம் கவிதை(யே) வரமாட்டேங்குதே (அவ்வ்ளோ மயக்கமாக்கும்)!

Yasir said...

அபு இபுராஹீம் காக்கா..நாம ரெண்டுபேரும் ஒரே நேரத்தில் எண்டரை தட்டி இருக்கின்றோம்...கருத்து பதிந்த நேரத்தை பார்த்தீர்களா ?/

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஒரே நேரத்தில் எண்டரை தட்டி இருக்கின்றோம்...கருத்து பதிந்த நேரத்தை பார்த்தீர்களா ?/ //

ஆமா ஆமா !

இதுதான் இளமையின் ரகசியம் !

ஸீக்கிரெட் ஆஃப் அஃப்ஸல் ஃபோட்டோகிராஃபி !

Yasir said...

//go there together to gather toxic free air//....like it :)

Yasir said...

//இதுதான் இளமையின் ரகசியம் !//காக்கா என்னையும் அஃசலையும்தானே சொல்கிறீர்கள் :)

Shameed said...

போட்டோ விற்க்காக கவிதையா கவிதைக்காக போட்டோவா என்று இளமையும் முதுமையும் போட்டி போட்டுள்ளது

வானத்தை விள்ளாய் வளைத்து போட்டோ எடுத்த அப்சலுக்கு வாழ்த்துக்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மலேசிய மைந்தனின் வண்ண வரவு நல்வரவாகுக! Sense &Lense Super!
வண்ணங்களுக்கு வரிகொடுத்த வித்தகருக்கு படமே பாடம் நடத்தியிருக்குமோ!

KALAM SHAICK ABDUL KADER said...

”புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?”
“தாய் எட்டடிப் பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்”

என்ற பழமொழிகளை நிரூபணம் செய்யும் வண்ணம், பிறப்பில் உண்டானச் சிறப்பானக் கலைஞன்; கூடுதலாய்க் கவிஞன்!!

1) விடிந்தும் விடியாத காலை
முடிந்தும் முடியாத ஓய்வுநிலை
தென்றலின் தாலாட்டில்
நீரலைகளின் இசையில்
நிலமகள் உறங்குகின்றள்
வானத்தின் வெண்போர்வைக்குள்..
எப்படி அஃப்சலின் மூன்றாம் கண்
இப்படி பொர்வையினைத் தாண்டி
படம்பிடித்தது; நம்மவர் கண்ணில்
இடம்பிடித்தது?

KALAM SHAICK ABDUL KADER said...

2) நிலத்தாய் வடிக்கும்
மலைகளின் முலைப்பால்
குழந்தைச் செடிகள் குடிக்கும்
ஏராளமானக் குழந்தைச் செடிகள்;
தாராளமாய் அருவிப்பால்

KALAM SHAICK ABDUL KADER said...

4) இலைமறை காயாக
இளமையையும்
இரசிக்கலாம்;
பனியென்னும் மெல்லாடை
கனிதரும் மரங்களின் மேலே

sabeer.abushahruk said...

அ.நி.,
எங்கே உங்கள் அசத்தல் காக்காவையேக் காணோம். இங்கு ஷார்ஜாவில் "ஷார்ஜாவில் தண்ணீர் திருவிழா" ஒன்றை ஐரிஷ் கலைக்குழுவினர்களைக்கொண்டு நடத்துகிறார்கள்.

ஐஸ் சர்க்கஸ், ஃபைரி டேல்ஸ் ஆன் ஸ்டேஜ், பெட் ஷோந், ஐரிஷ் டான்ஸ் என்று எல்லாம் ஐரோப்பிய ஐட்டங்களாகப் போட்டு அசத்திட்டாங்க.

இதுதான் சாக்கு என்று ஷார்ஜாக்காரங்களும் கொண்டுபோன காசை எல்லாம் பிடுங்கிக்கிட்டு விட்டுட்டாங்க.

"இப்படி வேஸ்ட் பண்றதுக்குப் பதிலா அந்த வளையல்களையாவது வாங்கியிருக்கலாம்" என்ற மனைவிக்கு எதிராக பிள்ளைங்கள்ளாம் முறைக்க, நான் ஏ ட்டி எம்மை நோக்கி நடந்தேன்.

எமிரைட்ஸில் இருப்பவர்கள் மிஸ் பண்ணக்கூடாது ஃபெஸ்டிவல் இது.

KALAM SHAICK ABDUL KADER said...

5) நிலமகளின் குழந்தைச் செடிகள்
நீடுதுயில் கலையா வண்ணம்
வானமகள் வழங்கிய
வெண்போர்வை
மூடுபனி

sabeer.abushahruk said...

அஃப்ஸலின் புகைப்படங்களை நல்ல தூண்டில் என்பேன். முதலில் படங்களை மட்டுமே போடுவதாகத்தான் அ.நி. தீர்மானித்திருந்தது. நான்தான் உணர்ச்சி வசப்பட்டு ஆங்கிலக்குறிப்புகள் எழுத அ.நி.யின் கிரியேட்டிவ் ஹெட் அபு இபுறாகிமின் ரசனை இந்த பதிவையே genuine and exclusive ஆக்கி இருக்கிறது.

எனக்குத் தெரிந்து இதற்கு முன் எந்த தளமும் இப்படி ஒரு பதிவைத் தரவில்லை என்றுதான் தோன்றுகிறது.


புதுமைகள் தொடரட்டும்.

sabeer.abushahruk said...

// நிலமகளின் குழந்தைச் செடிகள்
நீடுதுயில் கலையா வண்ணம்
வானமகள் வழங்கிய
வெண்போர்வை
மூடுபனி//

அமீரகக் குளிருக்கு இதமான கவிதை. உங்கள் எல்லா கவிதையையும் வாசித்துவிட்டுத்தான் தூங்கப்போவேன். தொடருங்கள் கவியன்பன்.

KALAM SHAICK ABDUL KADER said...

6) நிலவோடு தாம்பத்யம்
இரவோடு முடிப்பதற்கு
வானமகளின் எண்ணம்
சிவப்பு வண்ணம் பூசி
வெட்கத்தால் பேசி
விரட்டுகின்றாள் கதிரவனை

KALAM SHAICK ABDUL KADER said...

7)
இளமயிலாய்
இளமையில் தோன்ற
இப்பூக்களின் சோலைகள்
சிங்கப்பூர்ச் சேலைகளானதோ?


குறிப்பு: ஏழுப் படங்கட்கும் இரசனைகளை எழுதி விட்டாலும், மூன்றாம் கண்ணும் ஏழாம் அறிவும், கொண்ட இளமை அஃப்சலுடனும், வண்ணங்கட்கு எண்ணங்களை கவிதையாக்கி தமிழ் மற்றும் ஆங்கிலப் புலமையில் தனி முத்திரைப் பதித்த ஆஸ்தான கவிஞர் ச்பீருடனும்
முதியோன் என்னால் போட்டி போட முடியாமல் களைத்து விட்டேன்.

sabeer.abushahruk said...

கவியன்பன்,
கவிதை தானாய் மட்டுமல்ல தேனாய் கூடத்தான் சொட்டியிருக்கிறது. சந்தோஷம்.

மரபாய் அமைந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.

தலைத்தனையன் said...

சிறந்த கொடையே!
சபீர் மாமாவுக்கு போட்டியோ?

காட்சிகளை படமாக்கி
எங்களை உனதாக்கிக்கொண்டாயே!

அவர் களவாடிய எங்கள்
இதயத்தை மீட்க எத்தனிக்கையில்

மீண்டுமொரு இதயத்துக்கு நீ
மல்லுக்கட்டினால், நாங்கள் எங்கே போக?

என்ன இது அற்புதம்? கனவு உலகமா?
கனவுகளின் ஊர்கோலமா?

மாஷா அல்லாஹ்.

ZAKIR HUSSAIN said...

நேற்று ஒரே பிசி ...அநியாயத்துக்கு அழுப்புடன் வந்து படுத்தபோது அ.நி பார்த்தால் அஃப்சலின் போட்டோ வெளியானதை எல்.சி.டி [உரிமை: அரசு மருத்துவமனை ] யில் வீட்டு சுவரில் சபீரின் கவிதையும் அஃப்சலின் போட்டோவும் ..வீடே சுறுசுறுப்பானது....

சபீரின் தமிழ்க்கவிதைகளை படிக்க என் மகனின் முகம் ஒரு அழகான மலரைபோல் மலர்வதைக்கண்டேன்.

To Sabeer,

அன்று ஒரு நாள் பள்ளிக்கூடம் படிக்கையில் பந்துவிளையாடும்போது ....நான் போட்டிருந்த டி.சர்ட்டை [ சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்] , மற்றும் அடிடாஸ் ஷூ வைப்பற்றி விசாரிக்க...அப்படியே நடந்து தர்ஹாவில் உட்கார்ந்து அரட்டை அடித்து அடுத்த நாளும்..ஒரே டீமில் விளையாடி..இப்படி இத்தனை வருடங்களை தாண்டி விட்டோம்....

அப்போது தெரியாது என் மகனின் போட்டோவுக்கு கவிதை எழுதி ஆசீர்வதித்து ஆரம்பித்து வைக்கபோவது நீதான் என்று......

இறைவன் மிகப்பெரியவன்.

ZAKIR HUSSAIN said...

அஃப்சலின் போட்டோவுக்கு கமெண்ட்ஸ் எழுதிய சகோதர்ரகள் யாசிர் , சாகுல் [ எப்படி சாகுல் மாமா ஃபிலிம் கேமாராவில் அவ்வளவு நிச்சயமாக அப்பர்ச்சரை அட்ஜஸ்ட் செய்து பேக்ரவுன்டை ஃபேட் செய்யமுடிகிரது என இன்னும் அஃப்சல் கேட்கிறான் ]

ஜஹுபர் சாதிக். தலைத்தனயன் [ உங்கள் கவிதையிலும் என் மகன் மகிழ்ந்தான் ] கவியன்பன் [ கலாம் அங்கிள் அங்கு தமிழ் புரபொசரா வாப்பா என கேட்டான்...ஒரு முறை அங்கு அழைத்து வருவேன் அவனை..உங்களை எல்லாம் அறிமுகப்படுத்த ]


அபு இப்ராஹிம் உங்கள் கிரியேட்டிவிட்டி என்னை பொறாமைகொள்ள வைக்கிறது....துபாய் வரும்போது எனக்காக கம்ப்யூட்டர் கிளாஸ் ஒரு நாள் ஒதுக்கிவிடவும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இங்கு மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய ஜாஹீர் காக்காவின் மகனாரின் கைங்கார்யம் அவரைப்போல்( ஜஹீர் காக்காவைத்தான்) கைகட்டி கொண்டிருக்காமல் தனிமையிலும் விசில் அடிக்கவும், கைத்தட்டவும் செய்த மாயம் பொய்யல்ல நிஜம். இந்த நிழல் படத்திலேயே இப்படியெல்லாம் நிகழ்த்த முடியுமா? நிசமாய் அருவி வீழ்வதைப்போல் ஒரு பொழிவு, தெளிவு இப்படி கண்ணை பறிக்கும் இயற்கை சிரிக்கும் காட்சியை செயற்கை புகைப்படம் நிசம் போல் காட்ட வைத்த திறன் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்( பெரிய ஜாம்பவான்கள்லெல்லாம்(பெரும் தலைகள்) வாழ்திவிட்டாங்க கடைசியில இந்த சின்ன வாலு வாழ்த்தவந்தேன்)

crown said...

படம்:1.
வெண்மேகம் உலாவரும் காட்சி
மாய பிம்மமாய் வான்வீதியில் சுனாமியா?
ஆனாலும் தரைதனில் தடாகம்
அமைதியாய் தியானத்தில் இருக்கிறதா?
இல்லை அப்சலின் புகைப்படத்திற்கு
அசையாமல் காட்சி(போஸ்) தருகிறதா?
இதை இமைக்காமல் பச்சைமலை இச்சையாக
பார்த்து ரசிப்பதும் புல்லரிக்க வைக்கிறதே!
எம் மயிர்கால்கள் எழுந்து நிற்பது அங்கே
மலேசியாவிற்குத்தெரியுமோ?

crown said...

படம்:2.
வெள்ளி சிறு ஓடை!
அது ஓடயில் புல்லின் சினு,சினுப்பு
நம் கால்களில் சிலு,சிலுப்பு!
ஓடையின் பாதம் பதிந்த சுவடை
அதுவே அழித்துசெல்லும்....
ஆனால் அழிக்கமுடியாத சுவடை
பதிந்துவிட்டார் அப்சல்.

crown said...

"சில்"லென வீழும் அருவி
அப்"சல்" புகைப்படம் எடுக்கத்தானா
பனியாய் இருந்து,
உருகி நீராய் பெருகி விழுகிறது?
மறுபடியும், மறுபடியும் வந்து விழும்
அருவிக்கு சந்தேகம் சரியா நான்
சிக்கினோமா? அவர் கிளிக்கில்?

crown said...

எப்படி எழுதினாலும் இவர்போல்(சபீர்காக்கா) எழுத முடியாது . இதை இவரைத்தவிர சிறப்பாய் எவராலும் எழுதமுடியாது.இவர் சிந்தனையை முடிந்து வைத்துள்ளாரா? இல்லை சிந்தனை தானாய் வந்து ஒட்டிக்கொள்கிறதா? அல்லாஹுக்கே எல்லாப்புகழும்.
வெளிச்ச மழை:

வெளிச்ச மழை
வீதியில் விழுகிறது
சிலிர்த்த இலை
சிந்தையில் உழுகிறது

மூடு பனி மயங்கி
மரங்களில் ஒளிகிறது
வானவில் லொன்றை
காணவில்லை மறைக்கிறது

பச்சைக் கானகத்தில்
வெள்ளை யடிக்கிறது
பசுமை புரட்சி செய்து
வெயிலையே எதிர்க்கிறது

அஃப்சல் அழகியலில்
அசல் இந்த ஆதாரம்

crown said...

படம்:5.
இது பெரும் பண்னையா?
பசும் புல்வெளியின் அன்னை பூமியா?
தென்னை மரத்தின் வகிடு உள்பட
அத்துனையும் காமிராவில்
பதிந்து , தன்னுள் பொதிந்துள்ள
திறமையையை பறைசாற்ற வைத்த காட்சியின்
சாட்சியா?
எப்படி பார்த்தாலும் அழகாய் தோன்ற!
எப்படி எடுத்தார் இந்த புகைப்படம்?

crown said...

படம்:6.
முதன் முதலாய் வான வீதியில் தங்க ஒடை!
இருட்டை இரையாக பாதி கவ்விய,
திவ்விய சூரியன்!
இப்படி மனதை மயக்கும். மந்தகாச சூழ்னிலை
எல்லாம் உம் கேமிராவில்(சரன்டர்) முடங்கி அடங்கினாலும்...
மங்காத புடம் போட்ட தங்கமாய் இந்த படம்
இதயத்தில் இடம் பிடிக்குதே!

crown said...

தம்பி! நீ படம் பிடிக்கத்தான் இந்த பூக்கள் தம்மை வண்ணங்கள் பூசி அலங்காரம் செய்து கொண்டதோ?
மேக்கப் போட்ட பூக்கள் என உன்னால் நான் பாக்கள் எழுதவைத்த உன் காமிர வித்தை! வியத்தகு விலைமதிப்பில்லா பொக்கிஷமே!வாழ்த்துக்கள்.

Kuthub bin Jaleel said...

//அவர் களவாடிய எங்கள்
இதயத்தை மீட்க எத்தனிக்கையில்

மீண்டுமொரு இதயத்துக்கு நீ
மல்லுக்கட்டினால், நாங்கள் எங்கே போக?// -- Fitting words for your budding skills. Welcome Afsal.

Kuthub bin Jaleel said...

//அவர் களவாடிய எங்கள்
இதயத்தை மீட்க எத்தனிக்கையில்

மீண்டுமொரு இதயத்துக்கு நீ
மல்லுக்கட்டினால், நாங்கள் எங்கே போக?// -- Fitting words for your budding skills. Welcome Afsal.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹைய் இலவச சுற்றுலா, டூர் கைடு கவி அவர்களின் அழகிய வர்னனையில்.

வாழ்த்துக்கள் வருங்கால டாக்டரே...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//நேற்று ஒரே பிசி ...அநியாயத்துக்கு அழுப்புடன் வந்து படுத்தபோது அ.நி பார்த்தால் அஃப்சலின் போட்டோ வெளியானதை எல்.சி.டி [உரிமை: அரசு மருத்துவமனை ] யில் வீட்டு சுவரில் சபீரின் கவிதையும் அஃப்சலின் போட்டோவும் ..வீடே சுறுசுறுப்பானது....//

ஜாஹிர் காக்கா,

உங்கள் கருத்தை படித்த பிறகு எங்கள் தங்குமிடத்தில் உள்ள பெரிய LCD டிவியில் அப்சல் எடுத்த புகைப்படங்களை பார்த்த பின்பு மேலும் உணர முடிகிறது அவரின் நுனுக்கங்களை புகைப்படத்துறையில்..

KALAM SHAICK ABDUL KADER said...

To
Dear Afzal,Assalaamu Alaikkum

Oh! Little Super Star
Where you are
I want to ask you now
How did you click the snow?
I am the one who stand in the row
To bliss for your photographic show
Did you learn from your father?
I feel your click touches as feather
Let not anyone steal your capture
None can see like you, the nature

"AFZAL" means the best
Wish you all the best!

அன்புமிகு ஜாஹிர்,
அஸ்ஸலாமு அலைக்கும்

எண்ணத்தில் உதித்த இவ்வரிகள்-அஃப்ஸலின்
கன்னத்தில் முத்தமிட்டு
உச்சிதனை முகர்ந்து
மெச்சிப் புகழ்ந்து
’’மயக்கம் என்ன?
தயக்கம் என்ன?
முன்னேறு சிகரம் நோக்கி’’என்று
முதுகில் தட்டிக் கொடுத்து
பாராட்டுதல் போல்;என்
பா மனதை ஆட்டுதல் போல்
உணர்வான் என்ற நம்பிக்கையில் எழுதிவிட்டேன்

கவிவேந்தர்-உங்கள் பால்ய நண்பர்- சபீர் அவர்கள் என் வர்ணணைகளைப் படித்து விட்டுத்தான் தூங்கப் போனார் நேற்றிரவு என்பது என் கவிதைக் குழந்தைகட்கு அக்கவிவேந்தரின் தாலாட்டாய்க் கருதினேன்; அடியேனும் அவர்களின் பின்னூட்டம் கண்ணுற்றப் பின்னரே கண்ணுறங்கச் சென்றேன்! மரபுப்பாவில் வடித்திருந்தால் இன்னும் தேனாய்க் குடித்திருக் கலாம் என்றே அவர்கள் கருதினாலும், அ.நி.நெறியாளர் அன்புச் சகோதரர் அபூ இப்றாஹிம் அவர்களின் அன்புக் கட்டளைக்கு இணங்கி “மரபுப் பாக்களை மட்டும் மடியில் கட்டிக்கொண்டிருக்க வேண்டா” என்பதனாற்றான் அவ்வண்ணப் படங்கட்கு என் எண்ணம் விரும்பிய வண்ணம் வர்ணணை வர்ணம் தீட்டினேன்; புதுக்கவிதைப் பாட்டிலே,மேலும்,புதுநதியில் அடியேன் புதிதாய்க் கற்றுக் கொண்ட நீச்சலுக்கே உங்கள் தவப்புதல்வன் என்னைத் “தமிழாசானா” என்று கேள்விக் கேட்டு விட்டார் என்பதனால் அவரிடம் என் பதில் இதோ:

பள்ளியிறுதி வகுப்பு முடிந்ததும் “புலவர்”ப் பட்டயம் அல்லது தமிழ் இளங்கலை B.A.(TAMIL LIT.) படிக்க முயற்சிகள் எடுத்தேன்;என் வீட்டார் எதிர்த்தனர்”பாட்டுக் கட்டினால் நோட்டுக் கட்ட முடியாது” என்றனர்;எங்கள் குடும்பம் பாரம்பரியமாக வணிகர் குடும்பமாதலால் “வணிகவியல்” படிக்க வேண்டும் என்ற கட்டளைக்கு இணங்கினேன்;ஆயினும், தமிழின்பால் கொண்ட பற்றும்; எனக்குத் தமிழ்ப்பால் ஊட்டியோர்த் தந்த ஊக்கமும் என்னை ”பா”வின்பால் இன்றும் காதல் கொண்டு கவிதைகள் என்ற பெயரில் கிறுக்கிக் கொண்டும்; ஒற்றுப் பிழைகளைத் தவறாமல் ஒட்டிக் கொண்டும் உள்ளேன். ஆக, நான் ஒரு தமிழாசான் அல்லன். இதனை உங்கள் அன்புச்செல்வனுக்குரிய விடையாகும்

sabeer.abushahruk said...

//அப்போது தெரியாது என் மகனின் போட்டோவுக்கு கவிதை எழுதி ஆசீர்வதித்து ஆரம்பித்து வைக்கபோவது நீதான் என்று......//
 
‘தேன் துளி’ கையெழுத்துப் பத்திரிகையில் முதன்முதலாக உன்னை ‘கோலா லம்ப்பூர் பயணக்கட்டுரை’ எழுத வைத்து பத்திரிகை உலகுக்கு (?) அறிமுகப் படுத்தியதும் நான் தான் அம்பி.

‘ஊரில் மழையாமே’ என உனக்கெழுதிய கவிதையை ஊடகத்தில் பிரசுரித்து (அதிரை எக்ஸ்பிரஸ்) வலையுலகுக்கு என்னை அறிமுகப்படுத்தியதுவும் நீதானே நண்பா.
 
இன்று அஃஸலை அறிமுகப்படுத்தும் வாய்ப்பையும் இறைவன் எனக்கே அளித்தான். அல்ஹம்துலில்லாஹ்.


Afsal,

Apa-la? step on the stage-la and say thanks to your elders-la. come on -la

you know-la,
therima kasi - sama sama :)

(note:after seeing kaviyanban's poem Afsal will change his question as,"Daddy, is kalaam uncle an English professor?"
 
 

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…
//அஃப்சலின் போட்டோவுக்கு கமெண்ட்ஸ் எழுதிய சகோதர்ரகள் யாசிர் , சாகுல் [ எப்படி சாகுல் மாமா ஃபிலிம் கேமாராவில் அவ்வளவு நிச்சயமாக அப்பர்ச்சரை அட்ஜஸ்ட் செய்து பேக்ரவுன்டை ஃபேட் செய்யமுடிகிரது என இன்னும் அஃப்சல் கேட்கிறான்//


இதோ விளக்கம் > அப்போது நானும் நண்பன் ஹாஜாவும் போட்டோ எடுக்கும் போது மரத்தின் ஊடே சூரிய ஒளி புகுந்து வரும்படி பார்த்துக்கொண்டு படம் எடுக்க வேண்டிய ஆளை மரத்துக்கு பக்கத்தில் நிறுத்தி வைத்து ( நிற்கும் ஆள் வெறுத்து போய்விடுவார் ) அப்பர்ச்சரை புல் ஓபன் செய்து சட்டர் ஸ்பீட் 250/1sec வைத்து ஆள் முகம் ஷேடோ இல்லாமல் இருக்க அளிமினியம் பாயில் வைத்து சூரியஒளியை முகத்தில் பிரதி பலித்து மரத்தின் ஊடே புகுந்து வரும் சூரிய ஒளி கேமரா லென்சில் படாமல் இருக்க ஒரு ஆள் குடைபிடித்து கிட்டத்தட்ட மினி சூட்டிங் நடக்கும் அப்படி எடுத்த போட்டோ இரண்டு மாதம் (துபாய் போய் கழுவி வரும்)கழித்து பார்க்கும்போது போட்டோ எடுத்த நினைவுகள் கருப்பு வெள்ளையில் பிளாஷ் பேக் ஓடும்.

sabeer.abushahruk said...

ஹமீது,

இவ்வளவு விளக்கமாச் சொல்றீயலே இதத்தான் நாங்க,

How to set depth of field? எனும் கேள்விக்குப் பதிலா எழுதி மார்க் வாங்கினோம்

Shameed said...

yes அப்பர்ச்சரை ஓபன் செய்ய செய்ய depth of field குறைந்துகொண்டே வரும்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பணிப்பளுவால் தாமதமான என் கருத்துக்கு மன்னிக்கவும்.

தம்பி அப்ஸலின் புகைப்படத்துடன் கூட ஆக்கம் நல்லதோர் தொடக்கம். முன்னேறுங்கள் தம்பி.....

தாயைப்போல பிள்ளை
நூலைப்போல சேலை
"அவரையைப்போட்டா தொவரையா மொழெக்கும்"....என்ற நம்மூர்ப்பழமொழிக்கொப்ப ஜாஹிர் காக்காவின் இளவலே! உன் வருகை இனிய வரவாகட்டும்.....

வாழ்த்துக்களுடன்.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பணிப்பளுவால் தாமதமான என் கருத்துக்கு மன்னிக்கவும்.

தம்பி அப்ஸலின் புகைப்படத்துடன் கூட ஆக்கம் நல்லதோர் தொடக்கம். முன்னேறுங்கள் தம்பி.....

தாயைப்போல பிள்ளை
நூலைப்போல சேலை
"அவரையைப்போட்டா தொவரையா மொழெக்கும்"....என்ற நம்மூர்ப்பழமொழிக்கொப்ப ஜாஹிர் காக்காவின் இளவலே! உன் வருகை இனிய வரவாகட்டும்.....

வாழ்த்துக்களுடன்.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

KALAM SHAICK ABDUL KADER said...

Dear Afzal,

Assalaamu alaikkum,

Jazakkallaah Khairan, Thanks for your love and affection which fill up satisfaction into my heart. Could you please call me to this mobile number: 00971-50-8351499? I wish to show my appreciation thru our conversation.

With Love,
Uncle KALAM

Ahamed irshad said...

ஆஹா சூப்ப‌ர்..ஜாஹீர் காக்காவின் ம‌க‌னார் கேம‌ராவில் புகுந்து விளையாடுவார் போலிருக்கே..புகைப்ப‌ட‌ங்க‌ள் வெகு நேர்த்தி..வாப்பாவின் திற‌மை போல் ம‌க‌னின் திற‌மைக‌ள் இனிதான் ஒவ்வொன்றாய் வ‌ரும் போலிருக்கிற‌து..என‌க்கும் கிடைத்த‌ சில‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் அஃப்ச‌லின் திற‌மையை வெளிச்ச‌ம் போடுகிற‌து..அருமை தொட‌ருங்க‌ள்..


இன்னொன்று இங்கே க‌மெண்ட்ஸ் எல்லாமே ரிவ‌ர்ச்'ல‌ வ‌ருதே..எங்க‌டா க‌டைசி க‌மெண்ட்டுன்னு விர‌லை க‌டிக்கிறேன்..அய்ங்..

புல்லாங்குழல் said...

அருமையான கலை கைவந்திருக்கு அஃப்சல் சில நிமிடங்கள் அந்த படங்கள் காட்டிய இடங்களில் மலையாய், நதியாய், நீர்வீழ்ச்சியாய் அவைகளின் ஊடான ம்னிதனாய் ரஸித்தேன்.

ஜாஹிர் நீ என்னோற்றாய் என சொல்.சொல்லலாம்.

அன்புடன்,

ஒ.நூருல் அமீன்

Shameed said...

அஃப்சல் நாங்கள் எல்லாம் பிலிம் கேமரா நீங்கள் எல்லாம் டிஜிட்டல் கேமரா இன்னும் உங்களின் பல அசத்தல் போட்டோக்களை பார்த்து நாங்கள் எங்கள் மெகா பிக்சலை அதிகப்படித்திக்கொள்ள காத்திருக்கின்றோம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.