Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மாண்புமிகு மந்திரிக்கு..! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | February 14, 2012 | , , ,

உயர் திரு.C .C . பாட்டில் அவர்கள். 
மாண்புமிகு மந்திரி
பெண்கள் மற்றும் குழந்தை நலவாழ்வுத்துறை
கர்நாடக அரசு

இன்று நம்நாட்டில் நடக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிலும் குறிப்பாக கற்பழிப்பு போன்ற குற்றங்களின் அதிகரிப்பிற்கும், காலத்தின் கட்டாயம் என்ற பெயரில் பெண்கள் அணியும் கவர்ச்சியான, உடலை உரித்துக்காட்டும் மெல்லிய ஆடைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாய், ஆந்திர மாநில காவல்துறை இயக்குனர் கூறியிருப்பதற்கு, நீங்கள் தெரிவித்து இருக்கும் பதிலை (02 - 01 - 2012 ) டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழல் வாயிலாக படிக்க நேர்ந்தது.

ஆம்! நீங்கள் சொல்வது உண்மைதான். இன்று, மருத்துவமனைகள் மாட மாளிகைகளாகி விட்டதாலும், கல்வி கடை வியாபாரம் ஆகிவிட்டதாலும், காலச்சக்கரத்தின் அச்சில் அமர்ந்து அதன் வேகத்தோடு சேர்ந்து சுழலவும், கணவன் மனைவி இருவரும் பணியிலமர்ந்து பொருளீட்டவேண்டும் என்பது அவசியமாகிவிட்டது.

இன்றைய சூழலில், மருத்துவம், கல்வியியல் போன்ற மதிப்பிற்குரிய சேவைத்துறைகளுக்குக் கிடைக்கும் இடங்களைக்கூட விட்டுவிட்டு, கணினி மற்றும் தொழில்நுட்பத் துறையினைத் தேர்ந்தெடுக்கும் மாணவியர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதன் விளைவாக, "ஏராளமான பெண்கள் தகவல் தொழில்நுட்பத்துறையிலும், கால் சென்டர் என்றழைக்கப்படும் அழைப்பு மைய்ய பணிகளிலும் பணிபுரிகின்றனர். அதிலும் இரவுநேர பணிக்கு வரும் பெண்கள் தங்கள் உடை விஷயத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் எனவும், இது போன்ற பணிகளுக்கு அதாவது பெண்களும் ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் இடங்களில், பெண்கள் தங்கள் உடலினை எந்த அளவுக்கு மறைக்க வேண்டும் என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்" என்று  நீங்கள் அறிவுறுத்தியிருக்கிறீர்கள். 

"இன்று,  ஒழுக்கம், கலாச்சாரம் போன்ற விழுமம் சார்ந்தவைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருக்கிறது. விழுமம் பற்றி அக்கறையே இல்லாத சில ஆண்கள் மத்தியில் நாகரீகம் என்ற போர்வையில் ஆடைக்குறைப்பு, கவர்ச்சியான கவர்ந்திழுக்கும் ஆடைகளை அனிதலால் அனைத்து விழுமங்களையும் ஆழக்குழி தோண்டி புதைத்துவிட்டு அவர்கள் பெருங்குற்றம் புரிய காரணியாய் அமைந்துவிடுகிறது" என்றும் எச்சரித்துள்ளீர்கள்.

"பல நூற்றாண்டுகளாக நாம் பெண்களுக்கு மரியாதைக்கும் பெருமைக்குமுரிய உயர் பதவிகளை தந்திருக்கிறோம். அவர்களுக்கு கௌரவமான நிலைகளுக்கு உயர்த்தியிருக்கிறோம். போற்றுதலுக்குரியவர்கள் என்று பேணியும் வருகிறோம். ஏன், 'நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவ வாக்குக்கேற்றார்போல நாட்டின் உயிர்ப்பிடிப்பான ஆறுகளுக்கும்,நதிகளுக்கும் பெண்களின் பெயரையல்லவா சூட்டி மகிழ்கிறோம்" என்று சூளுரைத்திருக்கிறீர்கள்.

ஆனால், திட்டவட்டமாய் சட்டங்கள் போடும் நிலையில் இருந்தும், " உடை விஷயத்தில் நான் யாரையும் வற்புறுத்தவில்லை; ஏனென்றால் பல்வேறு கலாச்சாராம், பண்பாடு,பாரம்பரியத்தின் அடிப்படையில் அடையாளங்களாய் பெண்களின் உடை இருந்து வருகிறது; வெகுவான பெண்கள் சேலைகளையும், வேறு சிலர் சல்வார் போன்ற உடைகளையும்,  இன்னும் சிலரோ மேற்கத்திய தொற்றினால் இடுப்பில் கூட நிற்காத 'ஜீன்ஸ்' அணிகிறார்கள். எந்த உடை பாதுகாப்பானது என்று உணர்கிறார்களோ / நினைக்கிறார்களோ அவைகளையே அணிந்துகொள்ள அவர்கள் முடிவு செய்யட்டும்" என்று ஏனோ நழுவுகிறீர்கள்?

இந்த நல்ல தருணத்தில் இஸ்லாத்தில் பெண்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் பற்றியும், நீங்கள் பெரிதும் கவலைப்படும், பெண்களின் கற்பொழுக்கத்திற்கும், அவளின் பாதுகாப்பிற்கு அரணாய் இருக்கும் ஆடை இலக்கணம் (ஹிஜாப்) பற்றியும் அகிலமனைத்திற்கும் அதிபதியாகிய எல்லாம் வல்ல இறைவன் இட்ட கட்டளைகள் என்ன?

அகிலத்திற்கு அருட்கொடையாய் வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இது சம்பந்தமாய் போதித்தவை என்ன? 

அவற்றில் சிலவற்றை உங்களுக்கு அறிமுகம் செய்வது கடமை என்று உணர்கிறேன்.

நம்நாடு பல மதங்களும், கலாச்சாரமும், பண்பாடும் கொண்டதுதான். நபி(ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

"எந்தவொரு மதத்திற்கும் ஒரு விஷேச ஒழுக்கப்பண்பு உண்டு. இஸ்லாத்திற்குரிய ஒழுக்கப்பண்பு வெட்கமாகும்" என்று கூறியிருக்கிறார்கள்.

இறைவசனமோ, " மேலும் (நபியே) முஃமினான (நம்பிக்கைகொண்ட) பெண்களிடம் கூறும்; அவர்கள் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக்கொள்ளட்டும்; தங்களது அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்;..... (சூரா அந்நூர்:31) 

"நபியே! உங்களது மனைவிகள், உங்களது புதல்விகள் மற்றும் முஃமின்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறுவீராக! அவர்கள் தங்கள் முந்தானைகளை தம்மீது போட்டுக் கொள்ளட்டும். இது அவர்களை அறியப்படுத்துவதற்கும் அவர்கள் தொல்லைகளுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கும் மிகவும் ஏற்ற முறையாகும்." (அஹ்ஸாப் :59) 

இன்று நாம் கவலைகொள்ளும் விஷயத்திற்கு  மேற்சொன்ன இறைவசனமும் நபிமொழியும், பட்டுத்தெறித்தாற்போல விடையளிக்கிறது, எந்தவொரு பெண் தன் அழகை மறைத்து (கண்ணியமாக உடையணிந்து),  தீய எண்ணங்களோடு தன்னை நோக்கி வரும் பார்வைகளை விட்டு  தன் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளும் பொருட்டு, அவளின் கற்பு பாதுகாக்கப்படுகிறது.

இன்னும் மேற்சொன்ன இறைவசனத்தில் , "பெண்கள் தங்களின் மார்புகள் மீது முந்தானைகளைப் போட்டுக்கொள்ளட்டும்" என்று கட்டளையிடப்படுகிறது. எந்த ஒரு தொல்லைக்கும் ஆளாகாமல் இருக்கும் பொருட்டு ஒரு தீர்க்கமான உறுதியான தீர்வினையும் அந்த இறைவசனம் தெரிவிக்கிறது. பெண் என்பவள் மதிப்பிற்குரியவள். ஆகவே அவள் மறைப்பிற்குரியவள் என்ற உங்கள் வாதம், இங்கு அட்சரம் பிசகாமல் இறைவசனத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

"பெண்கள் தங்களின் மார்புகள் மீது முந்தானைகளைப் போட்டுக்கொள்ளட்டும்"  என்ற இறைக்கட்டளை அருளப்பட்டபோது, பெண்கள் தங்களின் மெல்லிய ஆடைகளை கைவிட்டுவிட்டு, கம்பளி போன்ற கனமான ஆடைகளைக் கொண்டு போர்த்திக்கொண்டனர் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் உறுதிசெய்கிறார்கள். (ஆதாரம் - அபூதாவுத்) 

மெல்லிய ஆடைகள் பெருங்குற்றத்திற்கு பேருதவி செய்கிறது என்கிறீர்கள், இஸ்லாமோ இதில் ஆச்சர்யப்படுவற்கு ஏதுமில்லை என்கிறது. உடலின் அமைப்பினை வெளிக்காட்டும் மெல்லிய துணியை ஆடை என்று சொல்லவே இல்லை; மாறாக இது நிர்வாணத்திற்கு சமம் என்று சாடுகின்றது.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள், " பிந்திய காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள். அவர்கள் ஆடை அணிந்த நிர்வாணிகளாக இருப்பார்கள். அவர்களின் தலைகளின் மேல் ஒட்டகங்களின் திமில் போன்றவை இருக்கும். அவர்களைச் சபியுங்கள். நிச்சயமாக அவர்கள் சபிக்கப்பட்டவர்களே." (ஆதாரம் - அத்தபரானி)

பல நூறாண்டுகளாக பெண்களைப் பேணி பாதுகாக்கும் நாம், அவர்களை சாபத்திற்குள்ளனவர்களாக ஆக்குவது முறையாகுமா? பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நலவாழ்வினை ஏற்படுத்திதரும் உன்னதமான பொறுப்பில் இருக்கும் நீங்கள், அவர்களின் உடை விஷயத்தில் இறைவனின் சட்டத்தையே அழகான தீர்வாக தருவது கடமையல்லவா? அதுவே அவர்களுக்குத்தரும் உண்மையான கௌரவம் அல்லவா?

அன்புடன்

புதுசுரபி

12 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மகளிர் மானம் காக்க மாண்பான விண்ணப்பம்!

//திட்டவட்டமாய் சட்டங்கள் போடும் நிலையில் இருந்தும், உடை விஷயத்தில் நான் யாரையும் வற்புறுத்தவில்லை என்று ஏனோ நழுவுகிறீர்கள்?//

இரு சக்கர வாகன ஓட்டியின் உயிர்காக்க தலைக்கவசம் போட கட்டாயப்படுத்தும் அரசு, உடலை உரித்தது போல் காட்டி விபச்சாரத்துக்கு வழிவகுக்கும் உடைக்கு மட்டும் தடை விதிக்க யோசிப்பது ஏனோ?

"ஹிஜாப்" அணிந்த ப்Fரான்ஸ் பெண்களை கைது செய்ய முனைந்த அந்நாட்டு பெண் போலீஸ், விசாரணையின் போது உடலை மறைப்பதின் மகிமை உணர்ந்து அந்த பெண் போலீஸ் பல இஸ்லாத்தில் இணைந்துவிட்டதாம். இத்தகைய இஸ்லாத்தின் மாண்பை 'பாட்டில்' உட்பட உலகமே உணர வேண்டிய காலம் எப்போது?

ZAKIR HUSSAIN said...

To Brother புதுசுரபி...

உடை விசயத்தில் இதுபோன்ற சட்டங்கள் சாத்தியமே. சில பல்கலைகழகங்களின் காம்பவுன்ட்டுக்குள் இது போன்ற நல்ல விசயங்கள் சட்டமாக்கப்பட்டிருக்கிறது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நம் தூய மார்க்கத்தை எத்திவைக்க எடுத்துக் கொண்ட களம் அருமை !

அவசியம் இதேபோல் பொதுவில் மக்களுக்காக வேலை செய்யும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இதே போல் தொடர்ந்து அடிக்கடி சுட்டிக் காட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

அவசியமான பதிவு அதுவும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டிய ஒன்று.

கொடுமை என்னவென்றால் பெண்மையின் புனிதம் போற்ற இஸ்லாம் வலியுறுத்திய ஹிஜாப், அரசியல் அயோக்கியர்களும் கேடுகெட்ட ஒரு சில அரசு அதிகாரிகளும் கயவர்களுக்கும், விபச்சாரிகளுக்கும், போர்வையாக போர்த்தி அதன் புனிதத்தை கெடுக்கும் வேலையில்தான் ஈடுபடுகிறார்கள்...

ஏன் ? அவர்களுக்கு சனல் (ஈரச்)சாக்கு, வேறு விதமான துணிகள் (கருப்போ, வெள்ளையோ, காவியோ கிடைக்க வில்லையா திருடர்களையும், தீவிரவாதிகளையும், விபச்சாரிகளையும் போர்த்திக் கொண்டு போக ?

இன்னொரு விஷயம் கடந்த சில வருடங்களாக நம்மவர்களே மறந்த விசயத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என்று ஒரு கேடுகெட்ட தினத்தை நாள் குறித்து வைத்து விமர்சனம் செய்யும் கலாச்சாரம் பெருகிவருகிறது...

தத்தமது வீட்டில் இவ்வகையான அனாச்சாரங்கள் நடக்காமல் காத்துக் கொண்டாலே போதும் இப்போதைக்கு, அதன் உறுதியைப் பார்த்து அடுத்தவர்கள் திருந்த முன்னுதாரனமாக இருப்பொம் இன்ஷா அல்லாஹ் !

இப்னு அப்துல் ரஜாக் said...

அர்த்தமுள்ள இஸ்லாம்,
அர்த்தமுள்ள கருத்துக்கள்.
அசத்துங்கள் சகோ அமுதசுரபி

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

அழகிய கடிதம்!

சகோதரர்: மந்திரிக்கு எழுதிய அழகிய கடிதம் அவர் பார்வைக்கு சென்று சேர வேண்டுமே?

sabeer.abushahruk said...

புதுசுரபியின் ஆக்கம் பாராட்டத்தக்கது. தொடர்பான பதிவு கீழே:

ஊன தினம்:

இரண்டாவது மாதத்தின்
இரண்டுங்கெட்டான் தினம்...
காதலர் தினம் - ஒரு
கலாச்சார ரணம்!

வெள்ளைக்காரன் கண்டெடுத்த
கருப்புக்கறை தினம்!
பண்பாடு கலாச்சாரம்
புண்படும் விழாக்காலம்!


காமுகர் மனம்
கண்டெடுத்த தினம்...
வக்கிரத்தின் வடிகாலாய்
வந்துசேர்ந்த தினம்!

கலவியென்று களித்தது
கற்காலக் காதல்...
குளவியெனக் கொட்டுவது
தற்காலக் காதல்!

வெள்ளையனை வெளியேற்றி -அவன்
கொள்கைதனில் புரையோடி
கலாச்சாரக் காதல்கூட
விபச்சாரம் ஆகியதே!

அன்னைக்கென்றொரு தினம்
அப்பனுக்கென்றொரு தினம்
நண்பனுக்கென்றொரு தினம்
நல் உழைப்பாளிக்கென்றொரு தினம்

இறைவன் படைப்பிலே
எத்தினமும் நல்தினம்,
இவர்கள் யார் இவ்வுலகில்
இஷ்டம்போல் பகுத்துரைக்க?

காதலர்தினம் எனும்
கண்றாவிப் புறக்கணிப்போம்,
காதலென்றால் காமமில்லை
அன்பென்று அறிய வைப்போம்!

இந்தியனுக் கென்றொரு
இன்றியமையாப் பொறுப்புண்டு
இளைய சமுதாயத்தின்
இதய ஊனம் களைய வேண்டும்!

காதலர் தினம்...
கன்னியர்க்குக் கண்ணிவெடி
காளையர்க்குக் கள்ளுகுடி
பெற்றோருக்குப் பேரிடி
பொதுப்பாதையில் ஒரு புதைகுழி!



- சபீர்


THANKS: www.sathyamarkam.com

KALAM SHAICK ABDUL KADER said...

//சகோதரர்: மந்திரிக்கு எழுதிய அழகிய கடிதம் அவர் பார்வைக்கு சென்று சேர வேண்டுமே??//

Ye. Letters to Ministers can be filtered or hidden. My letters to Ex.President Dr.A.P.J.A.Kalam had not yet been replied. His personal secretary was a Hindu. Anyway, INSHA ALLAAH, we shall wait for prompt response.

How have you been Mr.Rafeeque? I could not see your messages in Facebook. I always like your article. Now you have come to our site.

புதுசுரபி said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
கருத்துத்தெரிவித்த / தெரிவிக்கவிருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி,
இப்படி பேசிய அமைச்சர், சட்டசபையில் தவறான காட்சியினைப் பார்த்ததிற்காக பதவியிழந்தார். போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருந்த அமைச்சரின் பொறுப்பற்ற செயலால், பதவியிழப்பு; அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்;

@சகோ:அபுல் கலாம் -- நன்றி சகோதரரே! அல்ஹம்துலில்லாஹ், நலமாய் இருக்கிறேன். நிறைய நேரமதை எடுத்துக்கொள்வதாலும், தேவையற்ற சர்ச்சைகள் வழிவதாலும் ஃபேஸ்புக்கிலிருந்து சிறிது காலம் (ஏறத்தாழ 6 மாதங்கள்) விலகியிருந்தேன். கடந்த ஓரிரு வாரத்திற்கு முன், குழந்தைகளின் கதைசொல்லும் நிகழ்ச்சிக்கு Judge ஆக சென்றிருந்த புகைப்படத்தைனை பிரசுரித்திருந்தேன்.. பழைய நண்பர்களெல்லாம் வரவேற்றனர்; ஆனால் இன்னும் என்னவோ ஏதோ தயக்கம் தான்......

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தேவையற்ற சர்ச்சைகள் வழிவதாலும் ஃபேஸ்புக்கிலிருந்து சிறிது காலம் (ஏறத்தாழ 6 மாதங்கள்) விலகியிருந்தேன்....//

//பழைய நண்பர்களெல்லாம் வரவேற்றனர்; ஆனால் இன்னும் என்னவோ ஏதோ தயக்கம் தான்......//

சகோதரரே:

விலகியே இருங்கள், நமெக்கென்று ஓரு ஃபேஸ்புக் தெள்ளத் தெளிவாக இருக்கிறது அதுதான் அல்குர்ஆன் மனிதகுலம் அனைத்துக்கும் அருளப்பட்ட அருட்கொடை... அதுதான் என்றுமே நம் faceமுன்னால் இருக்கட்டும் இதயத்தினை இறுக்கமாக அனைத்து பாதுகாக்கட்டும் இன்ஷா அல்லாஹ் !

faceBook பற்றி (சொல்லாமல் இருக்க முடியலையே...)

அதில் நட்பு வளர்க்கிறோம், என்று 90% நன்மையிருப்பாதாக நினைத்துக் கொண்டு அதில் கலந்திருக்கும் 10% விஷத்தினை கண்டுகொள்வதில்லை...

நம் நண்பர்கள் என்றுமே நல்லவர்கள் அவர்களால் எவ்வித தீயதும் நம்மை வந்தடையாது ஆனால், ஊடுருவும் வேவுக் கண்களால், ஈட்டிகளால் நம் கணினி மட்டுமல்ல சிந்தனைகளும் சிதறடிக்கப்படுவது என்னவோ மெய்.

ஒரு காலத்தில் விடுமுறையை கொஞ்சம் ஜாலியாக கழிக்க, பள்ளி, கல்லூரி வார விடுமுறை, பரீட்சை விடுமுறை, வேலை விட்டு வந்த நேரங்கள் என்று தேடுவோம் ஆனால் ஒன்று மொத்த வாழ்கையும் இணையத்திலேயே கழிகிறது.

ஃபோனில் பேசுவதாக இருந்தாலும் பார்வை கணினித் திரையில் காது கொடுப்பது ஃபோனில், பேசுவது என்னவென்று மூளைக்கே தெரியாத அபத்தம்...

பேசி முடித்தமும் என்ன பேசினோம் யாருடன் பேசினோம் என்ற குழப்பம்...

இருக்கிறதா இல்லையா !? (என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்)

புதுசுரபி said...

@ m.nainathambi.அபுஇபுறாஹிம் /

உண்மைதான்.... அதனாலேதான் அதன்மேலொரு வெறுப்பு வந்தது....
“ஃபேஸ்புக்கில் முகம் பார்க்கலாம்” என்ற எனது கட்டுரையில் ‘ஆபத்து நிறைந்த கத்தி’ என்று தான் சொல்லியிருந்தேன்..

ஃபேஸ்புக்கில் செலவழித்த நேரத்தினை வேறொரு ஆக்கப்பூர்வமான பணியில் ஈடுபடுத்தியுள்ளேன்.. துஆ செய்யுங்கள் - இன்ஷா அல்லாஹ் விரைவில் உங்களனைவரின் கவனத்திற்கும் கொண்டுவருகிறேன்.

Yasir said...

//செலவழித்த நேரத்தினை வேறொரு ஆக்கப்பூர்வமான பணியில் ஈடுபடுத்தியுள்ளேன்.. துஆ செய்யுங்கள் - இன்ஷா அல்லாஹ் விரைவில் உங்களனைவரின் கவனத்திற்கும் கொண்டுவருகிறேன்./// Allahu Akbar..we will be waiting brother...Allah Bless you

KALAM SHAICK ABDUL KADER said...

ஜஸாக்கல்லாஹ் கைரன். சகோதரர் ரஃபீக். இக்கவிமுகம் உங்கட்கு அறிமுகம் ஆனது “முகநூல்” என்பதால் நினைவுபடுத்தினேன். அடியேனும் அங்குச் சில மாதங்களாகச் செல்லவில்லை;எனக்கும் நேரம் கிடைப்பதில்லை

1) எனது சொந்த வலைத்தளம்:http://kalaamkathir.blogspot.com/
2) அதிரை நிருபர் மற்றும் அதிரை எக்ஸ்பிரஸ் என்ற எங்களூரின் இணையதளங்கள்
3) எனது தனி மின்மடல்

இவைகளில் மட்டும் தான் தற்பொழுது என் விரல்கள் கணினியில் சொடுக்கி வருவதால், முகநூலின் பக்கம் என் முகம் நோக்கவில்லை.

இருப்பினும், இறைமறுப்பாளர்களான (முக நூல் நண்பர்கள்)

கவிமதி, தமிழச்சி, வேலுச்சாமி போன்றோர்க்கு நான் விட்ட வினாக்கட்கு இன்று வரை மறுமொழி தராமல் பதுங்கிக் கொள்வதால், பதில் ஏதும் உண்டா என காண்பதற்கும்,

எனது யாப்பிலக்கண/ மரபுப்பா ஆசான்களின் பார்வையிலும், என் கவிதையின் இரசிகர்களான முகநூலில் முத்தானக் கவிதைப் படைக்கும் அன்பர்களின் பார்வையிலும் என் கவிதைகள் பட்டு, அதற்கான அவர்களின் அறிவுரைகள்/ திருத்தங்கள்/ கருத்துரைகள் பெறப் படவும் அப்பக்கம் செல்வதில் தப்பில்லை.

முகநூலில் தவறவிட்ட உங்களை இப்பக்கம் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி;புதிய படைப்புகளுடன் வாரீர்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.