Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன ஒதுக்கீடும் இட ஒதுக்கீடும் - உரசும் உண்மைகள் ! - 2 34

அதிரைநிருபர் பதிப்பகம் | March 14, 2012 | , , , ,

குறுந்தொடர் - 2

நாகரிகம் வளர்ந்த நாடுகள் என்று கூறப்படும் மேலை நாடுகளில் கூட சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு உண்டு. உதாரணமாக அமெரிக்காவில் பல ஆண்டுகளாய் அடிமைகளாய் ஒடுக்கப்பட்டு நடத்தப்பட்ட கருப்பினத்தவருக்கு இட ஒதுக்கீடு உண்டு.

நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் மத்திய மாநில அரசுகளில் ‘குரூப் ஒன்று சர்வீசுகள்’ என்ற பகுப்பு கோலோச்சும் அரசுப்பதவிகளாகும். இந்த பதவிகளில் மக்கள்தொகையின் இன சதவீதத்துக்கு அப்பாற்பட்டு பெரும்பான்மையாக அமர்ந்து இருப்பவர்கள் யார்? தனியார் மற்றும் அரசுத்துறைகளில் துறைத்தலைவர்கள், இயக்குனர்கள்,முதன்மை செயலாளர்கள், அமைச்சர்களின் செயலாளர்கள் இப்படி அதிகாரத்தை வைத்திருக்கிற பதவிகள் இன்றும் யாரிடம் இருக்கின்றன. 

மேல்மட்ட சாதியினரிடமும், ஆண்டாண்டு காலமாக ஆளும் வர்க்கமாக இருந்தவர்களிடமும்தானே. அதாவது 75 சதவீத உயர் பதவிகள் மக்கள் தொகையில் 3 சதவீதமே இருக்கக்கூடிய உயர் சாதியினரிடம்தான் இன்றும் இருக்கிறது. சென்று பாருங்கள் தலைநகர் டில்லியில் மற்றும் மாநில தலைநகரங்களில் உண்மை தெரியும். அப்படியே மற்ற சாதியினர் இருந்தாலும் பார்பனீய மனப்பான்மை படைத்தவர்கள்தான் இருக்கிறார்கள். (பார்ப்பனர்கள் என்பது வேறு- பார்ப்பனீயம் என்பது வேறு) 

இந்த நிலையில் அடித்தட்டில் வாழும் தாழ்த்தப்பட்ட, இஸ்லாமியர் உட்பட்ட சிறுபான்மையினருக்கு தரப்படும் இட ஒதுக்கீட்டுக்கு மேல்தட்டு மக்களிடமிருந்து எதிர்ப்புக்குரல் கிளம்புவதுதான் பெரும் வேடிக்கை. சமுதாயத்தில் சமத்துவம்- பொருளாதாரத்தில் சமத்துவம்- வேலைவாய்ப்பில் சமத்துவம்-கல்வியில் சமத்துவம் போன்ற ஒரு மக்கள் அரசின் கோட்பாடுகளை ஒரு நலம்பேணு அரசு (WELFARE STATE) தனது மக்களுக்கு நடைமுறையில் தரவேண்டுமானால் நலிவுற்றோர்க்கு இட ஒதுக்கீடு அவசியம். 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்துக்கள் 16 ன் படி State may discriminate the socially and educationally backward classes for public employments என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அரசுக்கு தனது மக்களில் சமூகரீதியாகவும், கல்வியறிவு ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டுள்ளவர்களை அரசின் வேலைவாய்ப்பைப் பொறுத்தவரையில் பாகுபடுத்திக்கொள்ள அதிகாரம் உண்டு. இதை பாசிடிவ் டிஸ்கிரிமிநேஷன் (உடன்பாடான பாகுபாடு) என்று கூறுவார்கள்.

பலவருட போராட்டங்களுக்கு பிறகு மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது. 1979 வருடம் மண்டல் கமிஷன் தங்களின் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது. 

அதன் பரிந்துரையின்படி இந்தியாவின் 27% (1931-census)  உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசுப் பணிகளில் 27% க்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதைக்கேட்டதும் கொந்தளித்த உயர் சாதியினரின் எதிர்ப்பால் முதுகெலும்பில்லாத அரசுகள் மண்டல் கமிஷன் தந்த அறிக்கையின் தலையில் கல்லைப்போட்டு அதை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தன.  1989- ல் அதை தோண்டி எடுத்த வி.பி.சிங் அரசு, தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டு சட்டத்தைக் தைரியமாக கொண்டுவந்தது. 

பிற்படுத்தப்பட்டோர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அது பொதுப் பட்டியலை பாதிக்கும் எனக் கருதிய பொதுப்பட்டியலை சேர்ந்தோர், பாரதீய ஜனதா கட்சி என்கிற ஒரு பிற்போக்கு மதவாத உயர்சாதியினரின் சுட்டுவிரலுக்கு ஊழியம் செய்யும் தேசியக்கட்சியின் மறைமுக ஆதரவோடு கடுமையாக எதிர்த்தனர்.

ஒரு கல்லூரி மாணவனுக்கு தீ வைத்து அவன் இதனை எதிர்த்து இறந்தான் என்று நாடகமாடினர். வி. பி. சிங் என்ற சிங்கம் பதவி இழந்தது. இட ஒதுக்கீடு நீதிமன்றத்தில் வழக்கானது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிகபட்சம்  ஐம்பது சதவீதத்திற்குள்ளாக நாட்டின் மொத்த இட ஒதுக்கீட்டையும் அடக்கிவிடவேண்டும் என்றும் மீதமுள்ள ஐம்பது சதவீதம் பொதுப்போட்டிக்கு விடப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஒரு உயர்ந்த நோக்கம், உயர்சாதியினரின் சகிப்புத்தன்மை இல்லாததாலும், ஆதிக்க சக்திகளாலும் இப்படி அடிக்கடி அல்லலுக்கு உள்ளானது. 

பிறப்பிலே, குடிக்கும் தண்ணீரிலே, நடக்கும் தெருவிலே, அணியும் ஆடையிலே ,உணவருந்தும் விடுதிகளிலே, பயணிக்கும் பேருந்துகளிலே, படிக்கும் பள்ளிகளிலே, எல்லாம் பாகுபாடுகள் என்று காலம் காலமாக காட்டிவிட்டு திடீரென்று எல்லோரும் சமம் என்று அறிவித்தால் மந்திரத்தால் மாங்காய் பழுத்துவிடுமா? மனமாற்றம் இல்லாமல் நிறைவேறிவிடுமா?

இட ஒதுக்கீடு மட்டும் எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிடுமா? 

வெறும் வேலைவாய்ப்பும் , கல்வி வாய்ப்பும் மட்டும் அளித்ததால் சமுதாயம் திருந்திவிட்டதா? வன்கொடுமை சட்டம் அமுலில் இருக்கும்போது வன்கொடுமைகள் நடக்காமல் இருக்கிறதா? நாகரிகம் படைத்த சமுதாயம் என்று மார் தட்டிக்கொள்ளும் நாட்டில்தான் இன்றும் இப்போதும் கீழே பட்டியலிடப்படும் பாதகங்களும் நடைபெறுகின்றன. 
  • மனிதக்கழிவுகளை மனிதர்களே சுமக்கும் நிலை மாறவில்லை.
  • தோட்டிகள் என்று ஒரு சமுதாயத்தை முத்திரைகுத்தி வைத்திருப்பது மாறவில்லை.
  • தமிழ் நாட்டில் கீரிப்பட்டி , பாப்பாரப்பட்டி பஞ்சாயத்துகளில் தலித்துகள் தலைவர்களாக வர முட்டுக்கட்டை நீடிக்கிறது.
  • திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னும் அவரால் சுதந்திர தின கொடியேற்ற முடியவில்லை.
  • திண்ணியம் என்ற கிராமத்தில் சாதிக்கொடுமைகள் மனித மலத்தை வாயில் வைத்து திணித்து தண்டிக்கும் அளவு போய்விட்டது.
  • உணவுவிடுதிகளில் இரட்டை குவளை முறை இன்னும் மாறவில்லை.
  • உத்தபுரம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டோருக்கென எழுப்பப்பட்ட சுவர் இடிக்கப்பட்டதில் எண்ணற்ற பிரச்னைகள்.
  • திருக்கோயிலூர் அருகே கற்பழிக்கப்பட்ட இருளர் இன மகளிருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அரசு அவர்களின் கற்புக்கு ஐந்து லட்சம் விலை வழங்கி வாய் அடைக்கப்பார்க்கிறது.

இப்படி இந்த பட்டியல் இன்னும் நீளும். 

ஆதிக்க சமுதாயம் நடத்தும் அடக்குமுறைகள் இன்னும் அடங்கவில்லை என்பதைத்தான் இவைகள் பறைசாற்றுகின்றன. 

முதலாவதாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு சமூக அந்தஸ்து சரிசமமாக கிடைக்கவேண்டும் என்று எண்ணினால் இடஒதுக்கீடு மட்டும் அவர்களுடைய பிரச்னைகளை தீர்த்துவிடாது என்பதையும், பொருளாதார வளர்ச்சி மட்டும் அவர்கள் விரும்பும் சமூக நிலை உயர்வை கொடுத்துவிடாது என்பதையும் திண்ணமாகவும் தெளிவாகவும், தீர்க்கமாகவும் உணரவேண்டும். 

எடுத்துக்காட்டாக:-

நாட்டின் உயர் பதவி என்று கருதப்படுகிற உச்ச நீதிமன்றத்தில் புதிதாக பதவி ஏற்க வந்த உயர் சாதி நீதிபதி ஒருவர் ஏற்கனவே அந்த நாற்காலியில் இருந்து ஒய்வு பெற்றுப்போனவர் ஒரு தலித் இனத்தவர் என்பதால் பூசாரிகளை வைத்து மாட்டு மூத்திரம் தெளித்து நாற்காலிக்கு பரிகார பூஜை நடத்திய பிறகே பதவி ஏற்றார் என்பது பத்திரிக்கை செய்தி. 

ஜனாதிபதியாக கே.ஆர். நாராயணன் இருந்துவிட்டுப்போன பின்பு அதற்கு அடுத்துவந்தவரும் ஹோமம யாகம் நடத்தி தீட்டுக்கழித்துத்தான் ஜனாதிபதி மாளிகையில் பால் காய்ச்சினார்.   

கேரளத்தில் A.K.ராமகிருஷ்ணன் என்ற தலித்,  தபால் தந்தி துறையில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆக இருந்து ஒய்வு பெற்றார். அவரின் அறைக்கு கோமியம், பசுவின் சாணம் ஆகியவை தெளிக்கப்பட்டு தீட்டு கழிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் இருந்த அலுவலகம் முழுவதும் அதே சடங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த இணைப்பை பாருங்கள்.  . (http://scstemployees.blogspot.com/2011/04/sc-officer-room-cleansed-by-cow-dung.html)

இப்போது -  பல நாட்களாக மனதை அறுத்துக்கொண்டு இருக்கும் நான் எழுத நினைத்த விஷயத்துக்கு வருகிறேன்.
உரசல் தொடரும்...
-இபுராஹீம் அன்சாரி

34 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

முள்ளு குத்தினா வலிக்கும் சொன்ன பத்தாது அது எப்படி வதைக்கும் என்பதை சொல்லும் பதிவு !

பார்ப்பனீசத்தின் சூழ்ச்சி கொதறி வைத்திருக்கிறது இந்தியாவை... பழியை போடுவதோ மண்ணின் மைந்தர்கள் தலையில் !

//இப்போது - பல நாட்களாக மனதை அறுத்துக்கொண்டு இருக்கும் நான் எழுத நினைத்த விஷயத்துக்கு வருகிறேன்.//

அத சீக்கிரம் சொல்லுங்க காக்கா !

அப்துல்மாலிக் said...

//மாட்டு மூத்திரம் தெளித்து நாற்காலிக்கு பரிகார பூஜை நடத்திய பிறகே பதவி ஏற்றார்//
//கோமியம், பசுவின் சாணம் ஆகியவை தெளிக்கப்பட்டு தீட்டு கழிக்கப்பட்டுள்ளது.//

மனுஷனைவிட மாட்டு மூத்திரமும், சாணமும் இந்த பார்பனீயனுங்களுக்கு உத்தமமா தெரியும் இவனுங்க புத்தி இந்த நாட்டையும் இதே நிலமையில் வைக்கனும் என்ற இவனுங்க பிற்போக்கு தனத்துக்கு எப்போ முற்றுப்புள்ளி வைப்போமோ தெரியலே

இனப்பிரச்சினையை ஒரச ஒரச நிறைய உதிருது, நன்றி காக்கா

சேக்கனா M. நிஜாம் said...

// அடித்தட்டில் வாழும் தாழ்த்தப்பட்ட, இஸ்லாமியர் உட்பட்ட சிறுபான்மையினருக்கு தரப்படும் இட ஒதுக்கீட்டுக்கு மேல்தட்டு மக்களிடமிருந்து எதிர்ப்புக்குரல் கிளம்புவதுதான் பெரும் வேடிக்கை. சமுதாயத்தில் சமத்துவம்- பொருளாதாரத்தில் சமத்துவம்- வேலைவாய்ப்பில் சமத்துவம்-கல்வியில் சமத்துவம் போன்ற ஒரு மக்கள் அரசின் கோட்பாடுகளை ஒரு நலம்பேணு அரசு (WELFARE STATE) தனது மக்களுக்கு நடைமுறையில் தரவேண்டுமானால் நலிவுற்றோர்க்கு இட ஒதுக்கீடு அவசியம். //

சரியாகச் சொன்னிர்கள் சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களே..................

அரசியல் கட்சிகளால் தேர்தல் நேரத்தில் மாத்திரம் சிறுபான்மையினரின் ஓட்டுவங்கியினை குறி வைத்தே “இட ஒதுக்கீடுகள்” முன்னிலைப் படுத்தப்படுவது பெரும் வேதனைக்குறியதே..................

சேக்கனா M. நிஜாம் said...

// முதலாவதாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு சமூக அந்தஸ்து சரிசமமாக கிடைக்கவேண்டும் என்று எண்ணினால் இடஒதுக்கீடு மட்டும் அவர்களுடைய பிரச்னைகளை தீர்த்துவிடாது என்பதையும், பொருளாதார வளர்ச்சி மட்டும் அவர்கள் விரும்பும் சமூக நிலை உயர்வை கொடுத்துவிடாது என்பதையும் திண்ணமாகவும் தெளிவாகவும், தீர்க்கமாகவும் உணரவேண்டும். //


கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்

சேக்கனா M. நிஜாம் said...

நெறியாளர் ( அ.நி. ) அவர்களுக்கு,

“இன ஒதுக்கீடும் இட ஒதுக்கீடும் - உரசும் உண்மைகள் !” என்ற உரசலைப் பகுதி ஓன்று.....இரண்டு.... என்பதை குறிப்பிட்டு தலைப்பிடவும்

ZAKIR HUSSAIN said...

//ஜனாதிபதியாக கே.ஆர். நாராயணன் இருந்துவிட்டுப்போன பின்பு அதற்கு அடுத்துவந்தவரும் ஹோமம யாகம் நடத்தி தீட்டுக்கழித்துத்தான் ஜனாதிபதி மாளிகையில் பால் காய்ச்சினார். //

Is that president A.P.J AbulKalam?

Anonymous said...

சகோதரர் சேக்கனா M.நிஜாம் அவரக்ளுக்கு:

தங்களின் கருத்திற்கு நன்றி...

இது ஒரு குறுந்தொடர் என்று கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்ததால், பதிவின் முதல் பத்திக்கு மேல் வலப்பக்கம் குறுந்தொடர் எண் குறிப்பிடப்பட்டுள்ளது.

sabeer.abushahruk said...

எல்லோரும் அவரவர்கள் கோணங்களில்போட்டு குழப்பும் இட ஒதுக்கீட்டு பிரச்னையை நீங்கள் தெள்ளத்தெளிவாக சொல்லிச்செல்கிறீர்கள் காக்கா.

புள்ளி விவரங்களை நீங்கள் குறிப்பிடுகையில் வாசிக்க வாசிக்கப் புருவங்கள் உயர்கின்றன.

இந்த அருமையான குறும் ஆராய்ச்சியின் நிறைவில் தீர்வுகளும் சொன்னாலே உங்கள் பேச்சைக் கேட்போம்.

என்ன சொல்கிறீர்கள்.

படம் வரைந்து பாகங்களைக் குறித்ததுபோல் இந்த மரமண்டைக்கு இப்பதான் இட இன ஒதுக்கீட்டின் தந்திரங்கள் விளங்குகின்றன.

நன்றி காக்கா.

Noor Mohamed said...

இக் குறுந்தொடர் உரசும் உண்மைகள் மட்டுமல்ல! உறங்கிக் கிடக்கும் மக்களை உலக்கை கொண்டு இடித்து எழுப்புகிறார் இபுராஹீம் அன்சாரி காக்கா.

வி பி சிங் என்ற சிங்கம் மண்டல் கமிஷன்- இட ஒதுக்கீட்டு சட்டத்தைக் தைரியமாக கொண்டுவந்தார். மக்கள் மனதை மாற்றி அதை திசை திருப்பவே அத்வானி இர(த்)த யாத்திரை ஓட்டினார். முடிவோ சிங்கம் பதவியை இழந்தார்.

நாமோ இன்னும் பல கோஷ்டிகளாகப் பிறிந்துதானே கோஷங்கள் போட்டுக் கொண்டிருக்கின்றோம். என்று விடிவு காலம் வருமோ! எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே அதற்கு அருள் புரிய வேண்டும்.

சிந்திப்போம்! செயல் படுத்துவோம்!!

Anonymous said...

//தம்பி ஜாகீர்!

பத்த வச்சுட்டியே...... பரட்டை!

ராமேஸ்வரத்திலிருந்து போன சிவாச்சாரியரிடம் கேட்கலாமா?

தொடர் முடியட்டும் . ஏற்புரையில் சொல்கிறேன். //

-இபுராஹீம் அன்சாரி

Shameed said...

உரச உரச தீப்பொறி பறக்குது

அதிரை தாருத் தவ்ஹீத் said...

சகோ. இப்ராஹீம் அன்ஸாரீ,
அஸ்ஸலாமு அலைக்கும்.

கீழ்க்காண்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.


இராணுவ அமைச்சர் என்பது இந்தியாவின் மிகப் பெரிய பொறுப்பாகும்.

இப்படிப்பட்ட பொறுப்பை வகித்த ஒருவர், சம்பூர்ணானந்த் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்; ஒரு தாழ்த்தப்பட்டவர் அந்தச் சிலையைத் திறந்து வைத்ததால் அது தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி உயர்ஜாதிக்காரர்கள் கங்கை நீரால் அதைக் கழுவினார்கள். இந்த நிகழ்வை இந்தியா மறந்திட முடியுமா?

இங்கே ஆட்சி, அதிகாரத்தில் இருந்து விட்டால் தீண்டாமை தொலைந்து விடும் என்பது தொலைவான கருத்து என்பதை நாம் உணரலாம். எனவே அமுக்கப்பட்ட ஓர் இனம் ஆளும் வர்க்கமாகி விட்டால் அதற்கு அந்தஸ்து வரும்! ஆனால் தீண்டாமை அகலாது; அழியாது என்பதற்கு ஜெகஜீவன் ராமின் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு!

இட ஒதுக்கீடு முறையில் தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் தனித் தொகுதிகளில் கூட பார்ப்பனர்களைத் தலைவர்களாகக் கொண்ட கட்சியினர் ஜெயித்து விடுகின்றார்கள். அதன் பின் அவர்கள் இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராகவே போராடுகின்றார்கள். இது தான் அரசியலில் இட ஒதுக்கீடு பெற்ற தலித்துகளின் நிலை.

- கொடிக்கால் செல்லப்பா

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வேதனை தரும் உண்மைகள்!

பிரிட்டிஷ் ஏற்கெனவே கொடுத்ததாக இந்தியா நினைக்கும் சுதந்திரத்தை உதரித்தள்ளிவிட்டு, மீண்டும் ஒருமுறை இனப்பாகுபாடற்ற மனிதநேய சுதந்திரத்தை இந்தியாவே அறிவிக்க வேண்டும்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இபுராஹீம் அன்சாரி காக்கா.என்னத்தான் உரசுனாலும்.சொரணை அற்றவன்களுக்கு கூசப் போவதில்லை.எப்போ பகிரங்கமா கவுச்சி திண்கிறான்களோ அன்றுதான் அவங்களுக்கு சொரனையே வரும்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இபுராஹீம் அன்சாரி காக்கா.என்னத்தான் உரசுனாலும்.சொரணை அற்றவன்களுக்கு கூசப் போவதில்லை.எப்போ பகிரங்கமா கவுச்சி திண்கிறான்களோ அன்றுதான் அவங்களுக்கு சொரனையே வரும்.

Anonymous said...

அன்புள்ள சகோதரர். ஜனாப். ஜமீல் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ்ஸலாம்.

ஜசக்கல்லாஹ் ஹைர்

தாங்கள் இட்டிருக்கும் பின்னூட்டத்துக்கும் அன்பான தகவல்களுக்கும்.

இதேபோல் நிறைய சான்றுகளை குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறேன். – குறுந்தொடர் என்பதால் .

இன்ஷா அல்லாஹ் வாய்ப்பு இருந்தால் இந்திய அரசு அலுவலகங்களிலும், அதிகாரப்பதவிகள் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவரை விட்டு மறு சாதியினருக்கு மாறும்போது நடைபெறும் சடங்குகளைப்பற்றி தனிப் பதிவுதான் செய்ய வேண்டும்.

இபுராஹீம் அன்சாரி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//வாய்ப்பு இருந்தால் இந்திய அரசு அலுவலகங்களிலும், அதிகாரப்பதவிகள் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவரை விட்டு மறு சாதியினருக்கு மாறும்போது நடைபெறும் சடங்குகளைப்பற்றி தனிப் பதிவுதான் செய்ய வேண்டும்.//

அவசியம் காக்கா, அதனையும் தாங்கள் அலச வேண்டும் !

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/////// முதலாவதாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு சமூக அந்தஸ்து சரிசமமாக கிடைக்கவேண்டும் என்று எண்ணினால் இடஒதுக்கீடு மட்டும் அவர்களுடைய பிரச்னைகளை தீர்த்துவிடாது என்பதையும், பொருளாதார வளர்ச்சி மட்டும் அவர்கள் விரும்பும் சமூக நிலை உயர்வை கொடுத்துவிடாது என்பதையும் திண்ணமாகவும் தெளிவாகவும், தீர்க்கமாகவும் உணரவேண்டும். //////

நாம் அனைவரும் இந்து என்று சொல்லிக்கொண்டு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை கீழ் நிலையில் வைத்திருக்கும் பார்ப்பனீய ஆரிய கொடுமையை இன்னும் எத்தனை காலம்தான் சகித்துக் கொண்டு இருக்கப் போகிறார்கள் அப்பாவி மக்கள்.



///// நாட்டின் உயர் பதவி என்று கருதப்படுகிற உச்ச நீதிமன்றத்தில் புதிதாக பதவி ஏற்க வந்த உயர் சாதி நீதிபதி ஒருவர் ஏற்கனவே அந்த நாற்காலியில் இருந்து ஒய்வு பெற்றுப்போனவர் ஒரு தலித் இனத்தவர் என்பதால் பூசாரிகளை வைத்து மாட்டு மூத்திரம் தெளித்து நாற்காலிக்கு பரிகார பூஜை நடத்திய பிறகே பதவி ஏற்றார் என்பது பத்திரிக்கை செய்தி.

ஜனாதிபதியாக கே.ஆர். நாராயணன் இருந்துவிட்டுப்போன பின்பு அதற்கு அடுத்துவந்தவரும் ஹோமம யாகம் நடத்தி தீட்டுக்கழித்துத்தான் ஜனாதிபதி மாளிகையில் பால் காய்ச்சினார்.

கேரளத்தில் A.K.ராமகிருஷ்ணன் என்ற தலித், தபால் தந்தி துறையில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆக இருந்து ஒய்வு பெற்றார். அவரின் அறைக்கு கோமியம், பசுவின் சாணம் ஆகியவை தெளிக்கப்பட்டு தீட்டு கழிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் இருந்த அலுவலகம் முழுவதும் அதே சடங்கு செய்யப்பட்டுள்ளது. ////////

நிச்சயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடும் பொருளாதார தன்னிறைவும் சமூக அந்தஸ்தைப் பெற்றுத் தராது.

ஆரிய பார்ப்பனர்களால் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று இந்தியா முழுவதும் ஒதுக்கி வைத்திருக்கும் அனைவரும் ஒன்று கூடி அவர்கள் சரி சம சமூக அந்தஸ்து பெற நேர்வழியை பின்பற்ற முயற்சி எடுத்தால் ஆரிய கூட்டங்களின் அடக்குமுறை ஒரு முடிவுக்கு வரும்.

Anonymous said...

வ அலைக்குமுஸ்ஸலாம்.

நண்பர் எஸ்.அலாவுதீன் அவர்களுக்கு,

//நாம் அனைவரும் இந்து என்று சொல்லிக்கொண்டு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை கீழ் நிலையில் வைத்திருக்கும் பார்ப்பனீய ஆரிய கொடுமையை இன்னும் எத்தனை காலம்தான் சகித்துக் கொண்டு இருக்கப் போகிறார்கள் அப்பாவி மக்கள்.//

//நிச்சயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடும் பொருளாதார தன்னிறைவும் சமூக அந்தஸ்தைப் பெற்றுத் தராது.//

ஜசக்கலாஹ் ஹைர். தொடர்ந்து தாங்கள் ஊட்டும ஆரர்த்துக்கு மிக்க நன்றி. காத்திருங்கள்.

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி

ZAEISA said...

அஸ்ஸலாமு அலைக்கும்........

இப்ராஹீம் அன்சாரியாக்கா, நாம யாரும் தாழ்த்தப்பட்டவங்க என்று
பிரித்துப்பார்ப்பதில்லை அவனுங்க வசதிக்காக அவனுங்களே பிரித்து
வைத்துக்கொண்டு நமக்கு கிடைக்க வேண்டியவைகளை கிடைக்கச்
செய்யாதிருக்கவே இவ்வழிகளை உண்டு பண்ணிக்கிராய்க. பள்ளியில்
தன் பிள்ளையை சேர்க்கும் போது படிவத்தில் மதம்,ஜாதி என்றிருப்பதை
ஏன் ஜாதியை கேட்க்கிறாய் என்று எந்த தாழ்த்தப்பட்டவனும் எதிர்த்து
கேட்கவில்லையே...?ஏன்னா பின்னே நமக்கு கிடைக்க வேண்டியது கிடைத்து
விடும் என்பதால்தான்.....இன்றுகூட பாருங்களேன் நம்மவர்கள் டெல்லியில்
போய் பல நாட்கள் கிடந்தும் நம்பிக்கையோட இருந்த ரயிலையும் இல்லாமல் இல்லாமல் செய்திட்டான்.இந்த.....................................................

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இபுறாகிம் அன்சாரி காக்கா, வழக்கம் போல் தங்களின் பதிவு படிக்கும் மனிதநேயம் உள்ள எவரையும் உலுக்கும்.

"சோதனையும், வேதனையும் தனக்கு வராத வரை எந்த மனசுக்கும் வலிக்கப்போவதில்லை".

சூத்திரன், சூத்திரன் என்று சொல்லப்படும் பொழுது ஆத்திரம் வராமல் இருப்பதில்லை. அப்படி ஆத்திரம் வந்தால் சாஸ்த்திரம் பார்த்து மாட்டு மூத்திரம் தெளித்து பெரும்பான்மையான மக்களை ஒரு கூட்டம் சங்கடப்படுத்தி வருவது தொன்று தொட்டு வரும் துடைத்தெறியப்பட வேண்டிய ஒரு துர்க்குணம்.

அப்படிப்பட்ட துர்க்குணம் படைத்தவர்களுக்கு அவர்களால் தீண்டத்தகாதவன் என வில‌க்கி வைக்க‌ப்பட்டு சூத்திர‌ன் என‌ முத்திரை குத்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளே ப‌ல்ல‌க்கு தூக்கி நாட்டில் ஆங்காங்கே நடக்கும் ம‌த‌க்க‌ல‌வ‌ர‌ங்க‌ளில் அப்பாவி ம‌க்க‌ளை வேட்டையாட வேட்டை நாய் போல் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ருவ‌து வேத‌னையான‌ விட‌மேய‌ன்றி வேறில்லை.

Anonymous said...

வ அலைக்குமுஸ்ஸலாம்.

அன்புள்ள ஜனாப். M.S.M. அவர்களுக்கு.

ஜசக்கல்லாஹ். நல்ல கருத்தை பதிந்து இருக்கிறீர்கள்.

//அப்படிப்பட்ட துர்க்குணம் படைத்தவர்களுக்கு அவர்களால் தீண்டத்தகாதவன் என வில‌க்கி வைக்க‌ப்பட்டு சூத்திர‌ன் என‌ முத்திரை குத்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளே ப‌ல்ல‌க்கு தூக்கி நாட்டில் ஆங்காங்கே நடக்கும் ம‌த‌க்க‌ல‌வ‌ர‌ங்க‌ளில் அப்பாவி ம‌க்க‌ளை வேட்டையாட வேட்டை நாய் போல் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ருவ‌து வேத‌னையான‌ விட‌மேய‌ன்றி வேறில்லை.//

நீங்கள் இந்த பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருப்பது வரிக்கு வரி சரி.

இந்த மக்கள் யாரை நம்புவது, யார் பின்னால் போவது என்று தெரியாமல் மதி மயங்கி வேட்டை நாய் வேலைக்கு பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை.

இதை அந்த சமுதாய தலைவர்களும் உணர்ந்து இருககிறார்கள்.

இல்லாவிட்டால் இவர்களுக்காக தொடங்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி இவர்களாலேயே, இவர்கள் வாழும் பகுதியிலும் தொகுதியிலும் தோற்கடிக்கப்படுமா?

கட்சி மாநாடுகளுக்கு லாரிகளில் ஏறி கோஷமிட்டு செல்லும் கூட்டம் யார்?

இரவு பகல் பாராமல் கொடிகட்டி, போஸ்டர் ஒட்டி, கொத்தவரும் பாம்பு என்று தெரியாமல் பாம்புகளுக்கு பால் வார்ப்பது யார்?

அதனால்தான் குறிப்பிடுகிறேன் இட ஒதுக்கீடு மற்றும் இவர்களின் எல்லாபிரச்னைகளையும் தீர்த்துவிடாது. இன்னும் தீரவேண்டியது நிறைய இருக்கின்றன.

அவைகளையும் பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்.

இபுராஹீம் அன்சாரி

அதிரை முஜீப் said...

சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக இரண்டாம் பாகம் வெளியிட்டமைக்கு நன்றி..! இதே உத்வேகம் நம் சமுதாய மக்களிடம் இருந்தால் நாம் எப்போதே எங்கேயோ சென்று இருப்போமே...!

இந்த பதிவின் இரண்டாம் பாகத்தையும் நன்றியுடன் என் இணையத்தில் வெளியிட்டுள்ளேன். ஒதுக்கீடு என்பது ஒருவரோ அல்லது அரசாங்கமோ இத்தனை பங்கு என்று பிரித்து மற்றவருக்கு கொடுப்பதாகும். ஆனால் பார்ப்பனிய ஆதிக்க சக்திகளுக்கு அவ்வாறு யாராலும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாறாக அவர்கள் சூழ்ச்சியினால் பிடிங்கிக்கொண்டு அதை இத்தனை வருடகாலமாக தக்க வைத்துக்கொண்டு உள்ளனர்(அதற்கும் தனி திறமை படைத்தவர்கள் அவர்கள்..!). ஆனால் விட்ட சமுதாயமோ இன்னும் அறியாமையினால் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளதுதான் வேடிக்கை..! தமிழ்நாட்டு மக்கள் அடைந்த விழிப்புணர்வு கூட வட இந்திய முஸ்லிம் மக்களிடமோ அல்லது தழித் சமூகதிடமோ இல்லாது தான் இட ஒதுக்கீடு கோரிக்கை அடிக்கடி வலுவிழந்து விடுகின்றது. சும்மா சுனாமி போல ஒரே அடியாக அடித்து விழித்துக்கொண்டால்தான் அது கிடைக்க வாய்புண்டு.

மேலும் மக்களிடம் பிச்சைகேட்டு வருவார்களே இந்த ஆதிக்க வாதிகளும், அரசியல் அயோக்கியர்களும், அதாங்க அதற்கு பெயர் கூட தேர்தல் என்று வெட்கமில்லாமல் சொல்லுகின்றோமே அங்கே தான் நாம் கோட்டை விடுகின்றோம். அதனாலே கோட்டையையும் பாராளுமன்றத்தையும் விட்டுவிட்டோம்.

அரசியல், கல்வி, அரசாங்க வேலைவாய்ப்பு குறிப்பாக அதிகார பதவிகள்.... இதை நம் சமூகம் குறிப்பிட்டு இலக்கு வைத்து அதை அடையாத வரை இன்னும் பலவீனர்கலாகவே நாம் கருதப்படுவோம்.

இட ஒதுக்கீட்டில் வேலையோ கல்வியோ கிடைக்காவிட்டாலும் கூட போது பிரிவில் போட்டி போடும் மக்களாக நாம் உயரவேண்டும். நம் மக்களை உயர்த நடவடிக்கையை (மாஸ்டர் பிளான்) எடுக்க வேண்டும். ஏனெனில் இட ஒதுக்கீடு கிடைக்க கால தாமதம் ஆகும் காலமெல்லாம் இன்னும் நம் நிலை மோசமாகவே இருக்கும். அல்லது தற்போது இருக்கும் நிலையே தொடரும். ஆதலால் பொது பிரிவில் போட்டி போடும் சமுதாயமாகவும் நம்மை தயார் படுத்த வேண்டும். பின் படிப்படியாக இட ஒதுக்கீட்டிலும் நுழைய வேண்டும். அதற்கான சூட்சுமம் தான் நம்மிடம் இல்லை..!

KALAM SHAICK ABDUL KADER said...

அஸ்ஸலாமு அலைக்கும், அன்பின் இப்றாஹிம் அன்சாரி காக்கா மற்றும் சகோதரர் எல்லார்க்கும்,

இன்ஷா அல்லாஹ் 21-03-2012 புதன் இரவு உம்றா பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாலும், கடந்த மூன்று தினங்களாக எங்கள் அறையின் ETISALAT இணைப்புத் துண்டிக்கப்பட்டிருந்ததாலும் காக்கா அவர்களின் இணையம் பக்கம் வர இயலாமற் போனது.

இட ஒதுக்கீடு என்பதிலும் “ஜாதி” என்னும் முத்திரையும் பாகுபடுத்திக் காட்டியும் இஸ்லாமியர்களிடம் இல்லாத ஒரு பழக்கத்தைத் தூண்டுவதாகவும் அமைத்து விட்டதும் அறிக. இப்பொழுது தரப்பட்டுள்ள இட ஒதுக்கிட்டீன்படி “பொதுவாக” முஸ்லிம்கள் அப்பட்டியலில் வர இயலாது. குறிப்பாக, லெப்பை, பட்டாண் என்பன போன்ற “ஜாதி”பிரிவினைகளை (நம்மிடம் இல்லாதவைகளை)த் தூண்டும் நோக்கமும் இந்த குள்ளநரித் தந்திரத்தில் குறிப்பாக இடம் பெற்றுள்ளது என்பதும் வேதனையான விடயமாகும். பொதுவாக சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கை இயலாதா? ஆய்வில் மிக்க ஆழமான அறிவு நிறைந்த இப்றாஹிம் காக்கா அவர்களின் மறுமொழி காண அவா. மேலும், எனது உம்றா பயணம் “சலாமத்” ஆக அமைய உங்களனைவர்களிடமும் வேண்டுகிறேன் “துஆ”

KALAM SHAICK ABDUL KADER said...

திருத்தங்கள்:
//சகோதரர் // சகோதரர்கள்

//வர இயலாது// வர இயலுமா?

//வழங்கை// வழங்க

இப்னு அப்துல் ரஜாக் said...

//உதாரணமாக அமெரிக்காவில் பல ஆண்டுகளாய் அடிமைகளாய் ஒடுக்கப்பட்டு நடத்தப்பட்ட கருப்பினத்தவருக்கு இட ஒதுக்கீடு உண்டு.//

இது ஒரு தவறான தகவல்.


Racial quotas are illegal in the US
கறுப்பின விடுதலைக்கு பின் அனைவரும் சமம் என்றும் Ageism
Caste
Classism
Colorism
Genism
Heightism
Linguicism
Lookism
Mentalism
Racism
Rankism
Religionism
Sexism
Sexualism
Sizeism
Speciesism
Weight ism மூலம் பாரபட்சம் கூடாது என்பது மட்டுமே விதி.ஆனால் இட ஒதுக்கீடு கிடையாது.படிப்புக்கேற்ற,திறைமைக்கேற்ற வேலை வாய்ப்புக்கள்.அதுவே அமெரிக்கா.

இப்னு அப்துல் ரஜாக் said...

இப்ராஹீம் காக்கா அவர்களின் கட்டுரை சூடு பிடிக்கிறது.இந்தியாவின் மொத்த முசீபத்துக்கும்,பார்ப்பனியத்தின் பங்குதாரர்களாக இருக்கும் RSS கயவர்களே காரணம்.ஆனால் இதை பற்றி தெரியாமல்(அல்லது தெரிந்தும்)காசுக்காக சில தலித் மக்களும் இப்படி வீழ்ந்து விடுவதுதான் வேதனை.

சகோ முஜீப் காக்கா ,சகோ கலாம் காக்கா(நல்லபடி உம்ரா போய் வாங்க - எல்லாருக்கும் துவா செய்ங்க காக்கா)கருத்தும் ஏற்க கூடியதே.

Anonymous said...

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்.

அன்புள்ள சகோதர நண்பர் ஜனாப். அர.அல. அவர்களுக்கு,

ஜசகல்லாஹ் . தங்களின் அன்பான கருத்து பின்னூட்டத்துக்கு . அது பற்றி எனது தன்னிலை விளக்கம் பின்வருமாறு:-

அதற்குமுன், இப்படி சிறந்த விவாதங்களை முன்னெடுத்து வைத்து விளக்கம் கேட்கும் தங்களை மிகவும் பாராட்டியே தீரவேண்டும்.

மேம்போக்காக படிக்காமலும்- அடுத்தவர் எழுதியதை ஆராயாமல் இருக்கும் தன்மையும் அனைவருக்கும் வாய்க்காது.

கேட்டால்தான் விளங்கமுடியும். அந்தவகையில் உங்களின் கேள்வியை பாராட்டுகிறேன்- மதிக்கிறேன்- வரவேற்கிறேன்.

அடுத்து இப்படி தலைப்பிட்ட கட்டுரைகளை- அதுவும் கற்றோர் நிறைந்த அ.நி. அவையில் சமர்ப்பிப்பது என்பது கற்பனையாகவோ, ஆதாரங்கள் இல்லாமலோ எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அளவில் முடியாது – கூடாது என்பதில் நான் கவனமாகவே இருந்து வருகிறேன்.

அந்த வகையில் நான் அமெரிக்கா பற்றி குறிப்பிட்டுள்ள வரிகளுக்கு நான் ஆதாரமாக கண்டது – படித்தது கீழ்க்கண்ட வரிகள்.

அமெரிக்கவைப்பற்றியோ மற்ற அயல் நாடுகளைப்ப்பற்றியோ ஆராய்வது நமக்கு அதிகம் தேவை இல்லாத இல்லை என்பதால் கீழே உள்ள வரிகளை சுருக்கி ஒரு உதாரணமாக எனது கட்டுரையில் குறிப்பிட்டேன்.

அந்த வரிகள்.

Discrimination on the basis of race, religion, ethnicity, national or social origin exists in many nations under diverse social, economic and political systems. In order to correct the imbalance in terms of access to capital assets, employment, education, political participation and other spheres, countries have turned to practices of reservation, affirmative action, positive action or equal opportunity policies for these discriminated sub-groups in addition to general pro-poor policies. A great majority of these policies and programmes of intervention operate in respect to sub-group populations identified by ethnic, racial, religious or gender characteristics. The examples are not only from the West (USA, UK, Northern Ireland and Yugoslavia) but also from Latin American countries like Brazil, Bolivia, Peru; African countries like Nigeria, Sudan, South Africa and countries like Malaysia, Pakistan, China, Japan and India from Asia.


இதை எழுதியவர் தனது WHY RESERVATION NECESSARY ? என்ற நெடிய ஆராய்ச்சி கட்டுரையில் அமெரிக்காவிலேயே Research Associate of International Food Policy Research Institute,( Washington DC, U.S.A. ) என்ற பதவி வகித்த – இந்திய அரசால் பத்மஸ்ரீ.பட்டம் வழங்கப்பட்ட – தலைவர், UNIVERSITY GRANTS COMMISSION என்ற உயர் பதவி வகித்தவருமான மராட்டியத்தை சேர்ந்த திரு. SUKHDEV THROAT அவர்களாகும்.

இவருடைய இந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்த countries have turned to practices of reservation என்ற வாசகங்களை நான் குறிப்பிட்டு அமெரிக்காவின் பெயரும் அந்த லிஸ்டில் இருந்ததால் குறிப்பாக என்று எழுதியுள்ளேன்.

பின்னூட்டத்தில் அதிகம் எழுதமுடியாமல் சுருக்கமாக குறிப்பிட்டு இருக்கிறேன். விரிவாக படிக்கவேண்டுமனால் அந்த ஆராய்ச்சிக் கட்டுரையை மொழிபெயர்த்துத்தான் வெளியிடவேண்டும்.

அத்துடன் அமெரிக்காவில் இடஒதுக்கீடு இல்லாவிட்டாலும் கூட அது நம்மை பாதிப்பதும் அல்ல. நமது நோக்கத்துக்கு தேவையும் இல்லை.

மீண்டும் தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

இபுராஹீம் அன்சாரி

Anonymous said...

வ அலைக்குமுஸ்ஸலாம்.

அன்புமிக்க அன்பர் கவியன்பன் அவர்களுக்கு,

முதலாவதாக தங்களின் உம்ரா பயணம் இறைவனின் பேரருளால் நல்ல முறையில் அமைந்திட து ஆசெய்கிறோம்.

//பொதுவாக சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க இயலாதா? // என்று கேட்டு இருக்கிறீர்கள்.

என்னைப்பொருத்தவரை, இயலும் ஆனால் கூடாது என்றே கருதுகிறேன்.

சிறுபான்மையினர் என்று ஒட்டுமொத்தமாக பகுத்தால் அதில் எற்கனவே மேம்பட்ட நிலையில் உள்ளோரும் அடங்கிவிடுவார் என்பதுமட்டுமல்ல அந்த வலியோ எளியோரை மிஞ்சியும் , இன்னும் சொல்லப்போனால் எளியோரின் பங்கையும் எடுத்து இன்னும் ஏற்றம் பெறுவர்.

உதாரணமாக அதிரைக்கு மட்டும் - இருக்கும் எல்லா வீட்டுக்கும் - வீட்டுக்கு ஐந்து மூட்டை அரிசி அரசு இலவசமாகவும் - பாகுபாடு இல்லாமலும் வழங்குவதாக அறிவிப்பதாக வைத்துக்கொள்வோம்.

அதிரையில்தான் எளியோர் வாழும் பிலால் நகர், சின்னத்தைக்கால், பெரிய தைக்கால், சேது ரோட்டில் சாலை ஓரம குச்சுவீட்டில் வசிப்பவர்கள், ஏழை எளியவர்கள், மாலி நேரம் வாட சுட்டு விற்று வயிறு பிழைப்பவர்கள், தையல் கடை வைத்து பிழைப்பவர்கள், கோழிக்கடை, புரோட்டா கடை வைத்து பிழைப்பவர்கள், ஹல்வா கிண்டி சைக்கிளில் வைத்து தெருத்தெருவாக அலைந்து விற்கும் அன்றாடம் காய்ச்சிகள், வீடுகளில் பணியாரம் சுட்டுக்கொடுத்து பிழைப்பு நடத்துபவர்கள் என்றெல்லாம் பலதரப்பட்ட ஏழைகள் இருககிரார்கள்.

இங்கேதான் ஐந்து பேர்கள அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் , அரபு நாடுகளிலும் சம்பாதித்து அனுப்பும் பிள்ளைகளைக்கொண்ட குடும்பங்களும் ( மாஷா அல்லாஹ்) இருக்கின்றன.

இவர்கள் எல்லா வீட்டுக்கும் UNIFORM POLICY - யாக வீட்டுக்கு ஐந்து மூட்டை அரிசி என்று அறிவிப்பது எப்படி சரியிருக்காதோ அப்படித்தான்.

அதிரைக்கு சொல்லப்பட்ட அரிசி உதாரணம் அனைவருக்கும் பொருந்தும்

தமிழக முஸ்லிம்களை கூத்தானல்லூரிலும், அதிரையிலும், கீழக்கரையிலும், காயல் பட்டினத்திலும் மட்டும் பார்த்துவிட்டு எடை போடக்கூடாது.

ராணிப்பேட்டையில், வாணியம்பாடியில், ஆம்பூரில், பேரனாம்பட்டில் தோல்தொழிற்சாலைகளில், குடியாத்தம் தீப்பெட்டி தொழில்சாலைகளில்,
மற்றும் பீடி சுற்றுபவர்கள், தையல் கடை வைத்து இருப்பவர்கள் இப்படி அன்றாடங்காய்ச்சிகளாக பல இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள்.

இவர்களை கைதூக்கிவிட அரசிலிருந்து ஒரு உதவும் கரம் அவர்களுக்காகவே- அவர்களுக்காக மட்டுமே தேவை. அதை ஒட்டுமொத்தமாக தரக்கூடாது என்பதே அந்த துறை வல்லுனர்களின் வழங்கப்பட்ட ஆலோசனையாகும்.

அனைவருக்கும் பொருளாதாரம் பரவலாக்கப்பட்ட பிறகு - அதாவது கடலில் அலை ஓய்ந்த பிறகு- வேண்டுமானால் ஒட்டுமொத்த அறிவிப்பை செய்யலாம்.

வஸ்ஸலாம்.

இப்ராஹீம் அன்சாரி

Anonymous said...


நிதர்சனங்கள்
சொன்னது…

அருமையான பதிவு... அண்ணன் இப்ராஹீம் மஸ்தான் அவர்களுக்குள் சிறப்பான ஒரு எழுத்து ஆளுமை ஒளிந்திருந்ததை அறிந்து மகிழ்கிறேன்...

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் சகோதரர் - பொருளாதார வல்லுநர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கட்கு, முதற்கண் “ஜஸாக்கல்லாஹ் கைரன்” , என உம்றா பயணம் சிறப்பாக அமைய நீங்கள் துஆ செய்வதாகக் கண்ணுற்றச் செய்தியினால் மட்டற்ற மகிழ்ச்சி; என்பால் இவ்வளவு அன்பால் ஈர்க்கப்பட்டுள்ளச் சகோதரர்களை இத்தளம் வழியே அல்லாஹ் எனக்கு அருட்கொடையாக வழங்கியுள்ளான், அல்ஹம்துலில்லாஹ்/

எனது ஐயம் நீங்க பொருத்தமான உதாரணத்துடன் விளக்கம் அளித்துள்ளீர்கள்; அடியேனும் ஓரளவுக்கு ஆசிரியர் பணியாற்றுவதால் உங்களிடம் பேராசிரியர் ஆவதற்கான முழுத் தகுதியும் உள்ளதை என்னால் அவதானிக்க முடிகின்றது.

இட ஒதுக்கீட்டை உண்மையில் நம்மவர்கள் முழுமையாகப் பயன்படுத்துகின்றார்களா என்ற ஒரு புள்ளிவிவரம் தருக.

ஒருமுறை எனது மருமகனின் வகுப்புத்தோழர் (குடந்தை வட்டம்) பொறியாளர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப் போன இடத்தில் அங்குள்ள அதிகாரி சொன்ன வார்த்தைகளைக் கேளுங்கள்

“நீங்கள் எல்லாம் பாஸ்போர்ட் எடுத்து அயல்நாட்டிற்குச் செல்ல வேண்டியவர்கள் தானே; ஏன் இங்கு வந்து எங்களையும் தொந்தரவு செய்கின்றீர்கள்?”
இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த இஸ்லாமிய இளைஞன் கொதித்துப் போய் பதிலுக்குத் திட்டி விட்டுத் திரும்பி வந்து விட்டார்; இன்று அல்லாஹ் உதவியால் இங்கு GASCO வில் உயர் பதவியில் குடும்பத்துடன் இருக்கின்றார்.

இப்படிப்பட்ட பூசாரி-அதிகாரிகளால் நமக்குக் கிட்டிய வாய்ப்பு வரங்களும் தடையாகிப் போவதும் அறிக.

இ.யூ.முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் காதிர்முகைதீன் அவர்கள் இங்கு அய்மான் கூட்டத்தில் சொன்னார்கள்:\
“ கலைஞர் ஆட்சியில் கோவை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ளோர்க்கு வீட்டிற்கு ஒருவர் அரசுப் பணியில் அமர்த்த வேண்டும் என்று வாதாடிப் பெற்றோம்; ஆனால், வேலையிலமர்த்த அதிகாரிகள் சென்ற போது, எவருமே SSLC வரை கூட படிக்காதவர்களாதலால் அரசுப் பணியிலமர்த்த முடியாமல் கிடைத்த அரசாணையினைத் திருப்பி கலைஞரிடம் கொடுத்து விட்டனர்; அப்பொழுது கலைஞர் கேட்டார், “என்ன பாய், உங்கள் சமுதாயம் இப்படி இருந்தால் எப்படி? முதலில் எல்லாரும் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று கட்டளையிட்டு விழிப்புணர்வை உங்கள் சமுதாயத்தில் ஏற்படுத்துங்கள்” என்றாராம்.

இப்பொழுது நாம் போராடி வாதாடிப் பெற்ற இட ஒதுக்கீடு ஓர் ஓரமாக இடம்பார்த்து ஒதுங்கி விட்டதா? வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அளவுக்கு வேலை செய்கின்றதா? புள்ளி விவரம் கண்டால் புல்லரிக்கும் எமக்கு!

அடிப்படையில் கல்வி விழிப்புணர்வு உண்டாக வேண்டும். உங்களின் பேராசிரியர் கவிக்கோ அப்துற்றஹ்மான் அவர்கள் சமீபகாலமாக இம்முயற்சியில் ஈடுபட்டு அபுதபி அய்மான் கூட்டத்தில் இக்கல்வி விழிப்புணர்வு பற்றி மிக அருமையாகச் சொன்னார்கள்:

“முதலில் மார்க்கக் கல்வி , உலகக் கல்வி என்று பிரித்த வைத்தது தான் மாபெரும் தவறு; அப்படிப் பார்த்தால் அல்லாஹ் அல்-குர் ஆனில் சொல்லும் கல்வியறிவு புவியியல், வரலாறு, கணிதம், போர் முறை, அரசியல், வானவியல் என்று விரிந்து கொண்டே செல்வதிலிருந்து அறியலாம்: அல்லாஹ் நம்மை எல்லாக் கல்வியறிவினையும் கற்கத் தூண்டி வருகின்றான்”

அவர்கள் பேசி முடித்ததும் நான் எழுதியிருந்த ஒரு கவிதையினை அவர்களிடம் காட்டினேன்; அத்தருணமே எனக்கும் அவர்கட்கும் ஏற்பட்ட முதற்சந்திப்பு; அஃதே தித்திப்பு. ஒரு வியப்பு: அவர்கள் பேசிய உரையும், எனது கவிதையும் ஒரே கருப்பொருளை உள்ளடக்கியது@

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புக்குரிய ஜனாப் இப்ராஹீம் காக்கா அவர்களுக்கு,தங்களின் மேலான விளக்கம் கண்டேன்.

நாம் அமெரிக்க பற்றி இங்கு விவாதிக்கவில்லையாதளால் மேற்கொண்டு அதுபற்றி நானும் கருத்து கூற எண்ணவில்லை.

ஒரு கேள்வி அது எங்கிருந்து,யாரிடம்மிருந்து என்றெல்லாம் பார்க்காமல்,அருமையான விளக்கம் தரும் உங்களை மனதார பாராட்டுகிறேன்.

மற்றவர்கள் பாடம் பெறட்டும்.

அண்ணல் பெருமான் நபிகள் ஸல் அவர்கள் சொன்ன ஒரு செய்தி.வாசனை பொருட்கள் விற்பவனுடன் நாம் இருந்தால்,அந்த நல சுகந்தத்தை பெறமுடியும்,அது போல நல்ல நண்பனும்,பாத்திரங்களை அடைக்கும் தோல் துருத்தி பணியில் உள்ளவன் அருகில் இருந்தால்,கெட்ட வாடையும்,சேர்த்து நம் ஆடைகளில் அழுக்கையும் பெறுவோம்,இது கெட்ட நண்பனின் அடையாளம் என்றார்கள்.சுபானல்லாஹ்.எவ்வளவு அருமையான உதாரணம்.அதுபோன்று,உங்களிடம் கேள்வி கேட்டால்,இன்ஷா அல்லாஹ்,எங்களுக்கு பதிலுடன்,போனசாக அறிவும் கிடைக்கும்.இன்ஷா அல்லாஹ்.எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

அன்புக்கினிய சகோதர நண்பர்கள் அர.அல. அவர்களுக்கும் கவியன்பன் அவர்களுக்கும்,

தங்களின் அன்பான புரிந்துகொள்ளும் தன்மைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

தொடரின் வரவிருக்கும் பகுதிகளையும் படித்து தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.

அபுல் கலாம் எழுப்பியுள்ள இரு கேள்விகளும் உண்மையில் கவலையளிக்கக்கூடியதே.

பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அதிகாரியிடம் என் குடும்ப அட்டை சம்பந்தமாக நான் கேட்க போயிருந்தபோது கும்பகோணத்தில் உங்கள் உறவினரிடம் கேட்கப்பட்ட கேள்வி போன்று என்னிடமும் கேட்டார்கள். இதைத்தான் நான் ஒரே கேள்வியில் கேட்டு இருக்கிறேன்.
இட ஒதுக்கீடு மட்டும் எல்லா பிரச்னையும் தீர்த்துவிடுமா?

இதே பதில்தான் கலைஞர், பேராசிரியரிடம் கேட்டதற்கும். அரசு தரப்பில் இட ஒதுக்கீடு தந்தால் மட்டும் போதுமா? நம் பங்கு என்ன?நாம் எப்படி தகுதிகளை கூட்டிக்கொள்ளவேண்டும் ? தருவதை பெற கை நீட்டவேண்டியது அவரவர் கடமை. அதற்காக அரசா கைகளையும் படைத்து ஒட்டிவிட முடியும்? நம்மவர் உணரவேண்டும்.

தந்த இட ஒதுக்கீட்டைகூட நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே உண்மை. இதற்கு தனி அலசல் தேவை.

//பொது பிரிவில் போட்டி போடும் சமுதாயமாகவும் நம்மை தயார் படுத்த வேண்டும். பின் படிப்படியாக இட ஒதுக்கீட்டிலும் நுழைய வேண்டும். அதற்கான சூட்சுமம் தான் நம்மிடம் இல்லை..! //

என்று ஜனாப். அர. அல. அவர்கள் குறிப்பிட்டதையே தற்போது குறிப்பிட விரும்புகிறேன்.

இன்ஷா அல்லாஹ் தொடர் முடிவுரும்போது பதிலுரையில் - அல்லது இனியொரு ஆக்கத்தில் - இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர் பயன்படுத்திக்கொண்டனரா? அப்படியானால் எவ்வளவு? அதனால் பயன் அடைந்த தனிநபர்கள் யார் யார் ? அது மட்டும் போதுமா? அரசின் கை மட்டும் நீண்டால் போதுமா? நாம் செய்யவேண்டியது என்ன? என்பதைப்பற்றியும் விவாதிக்கலாம்.

வஸ்ஸலாம்.

இப்ராஹீம் அன்சாரி.

Yasir said...

உரசும் உண்மைகள்..உணர்வுகளை தட்டி எழுப்புகிறது தொடர்ந்து எழுதுங்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.