Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு மீண்டும் சாத்தியமா? 52

அதிரைநிருபர் பதிப்பகம் | March 19, 2013 | , , ,


அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டுமென்று பலதரப்பிலிருந்தும்  குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. சில அரசியல் கட்சிகள் குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை நடத்தியது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.வைகோ தமிழகத்தின் பல பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு மதுக்கடைகள் ஒழிப்புக்கு ஆதரவாக மக்கள் ஆதரவைத் திரட்ட முற்பட்டார். பல இஸ்லாமிய இயக்கங்கள் தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் மறியல் போராட்டம் என்றெல்லாம் நடத்திக் காட்டின. பல மகளிர் அமைப்புகள் அடையாள உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தின. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கூட அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. திரு. சக்தி பெருமாள் என்ற ஒரு பெரியவர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து சாகும் நிலையில் கைது செய்யப்பட்டுக் காப்பாற்றப்பட்டார். இவைகளைத் தொடர்ந்தும் கண்ணால் காணும் காட்சிகளின் அவலங்களையும் முன்னிட்டு முழுமதுவிலக்கை தமிழ் நாட்டில் மீண்டும் அமுல் படுத்த வேண்டுமென்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.  இந்த பிரச்னை பற்றி நாமும் சற்று விவாதிக்கலாம்.



ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு நீதிக் கட்சியும் பிறகு காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருந்த காலங்களில் தமிழ் நாட்டில் மதுவிலக்கு அமுலில் இருந்தது. அப்போது கூட திருட்டுத்தனமாக சிலர் மறைவான இடங்களில் சாராயம் போன்றவற்றைக் காய்ச்சி அச்சத்துடன் குடித்து வந்தார்கள். அந்தப் பழக்கம் உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு பேரூராட்சி என்று எடுத்துக் கொண்டால் அங்கு அதிகபட்சமாக  ஐந்து பேர்கள் மட்டுமே அப்படி இருப்பார்கள். சில நேரங்களில் காவல்துறையிடம் மாட்டிக் கொள்வார்கள். எனக்கு சிறுவயதாக இருந்த போது இப்படி சாராயம் காய்ச்சிய ஒருவரை கைது செய்து  சேது ரோடு வழியே கையைக் கட்டி காவல்துறை இழுத்துச் சென்றதை ஊரே கூடி  வேடிக்கை பார்த்தது நினைவில் நிற்கிறது.  

காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா அவர்களை முதலமைச்சராகக் கொண்டு ஆட்சிக்கு வந்தது. அந்நேரம் மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுந்தபோது “ அரசின் வருமானத்துக்காக மதுவிலக்கை ரத்து செய்வது  மூட்டைப் பூச்சிக்காக வீட்டைக் கொளுத்துவதற்கு ஒப்பானது “ என்று கூறினார். இந்த நேரத்தில் அண்ணா மறைந்தார்.

அண்ணா அவர்கள் மறைந்த பிறகு அண்ணாவின் இதயத்தைக்  கடனாகக் கேட்டு இரங்கற்பா எழுதிய கலைஞர் கருணாநிதி அவர்கள் அண்ணாவை புகழ்ந்து பாடியபோது  

“ஆந்திரத்து பிரம்மானந்த ரெட்டிகாரும் 
ஆஹா நீதானே அசல் காந்தியவாதி என்று 
ஆராதனை செய்திட்டார் 
மதுவிலக்கை தீவிரமாய் ஆக்குகின்றீர்! 
பல மாநிலத்தில் கை கழுவி கலயம் கட்டிவிட்டார் மரங்களிலே என்று 
கிரி என்றால் மலையன்றோ! 
அந்த மலை தழுவும் முகிலானார் நம் அண்ணா”

என்று  குறிப்பிட்டு  கவி பாடிவிட்டு அண்ணாவுக்குப் பிறகு தானே  முதலமைச்சராக வந்த பிறகு ஒரு சுப முகூர்த்தநாளில் மதுவிலக்கை தமிழ் நாட்டில் ரத்து செய்து மதுக்கடைகளை திறந்துவிட்டார். மதுக்கடைகளைத் திறக்க வேண்டாம் என்று தி மு க ஆட்சிக்கு வருவதற்கு துணையாக நின்ற முஸ்லிம் லீக் மற்றும் இராஜாஜி ஆகியோர் விடுத்த கோரிக்கைகள் கலைஞரின் காதுகளில் விழவில்லை.

கலைஞர் கருணாநிதியின் மீது ஏற்பட்ட கருத்துமாறுபாடுகளால் தி மு க வை விட்டு விலகி தனிக் கட்சி கண்டு வென்று ஆட்சியைப் பிடித்த எம் ஜி ஆர் காலத்தில் மீண்டும் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வரப்படுமென்று நன் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ “ தைரியமாகச்சொல் நீ மனிதன் தானா? இல்லை!  நீதான் ஒரு மிருகம்! இந்த மதுவில் விழும் நேரம்! “என்ற திரைப் பாட்டுக்கு வாயசைத்துவிட்டதோடு தன் கடமை முடிந்தது என்று எண்ணி மதுக்கடைகளை தனது ஆட்சிக் காலம் முழுதும் தொடர்ந்தார். அத்துடன் வெறும் சாராயக் கடைகளாக இருந்தவை ஒயின் ஷாப் என்று அழைக்கப்படும்  சீமைச்சாராயம் விற்கும் கடைகளாகவும் அப்பனே! ராமச்சந்திரா ! என்று கோஷம் போட்டுத் துவக்கப்பட்டன.

அதன்பின் கருணாநிதி முதல்வராகி பின் ஜெயலலிதா அம்மையார்  முதல்வரானாலும் எத்தனையோ மாற்றங்கள் கண்டாலும் மதுவிலக்கு மட்டும் மீண்டும் அமுல் படுத்தப் படவில்லை. மாறாக, ஜெயலலிதா ஆட்சியில்  மது விற்பனைக்காக   டாஸ்மார்க் என்ற அரசின் நிறுவனத்தை ஏற்படுத்தி , படித்த இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி அரசே சொந்தமாக மதுக்கடைகளை நடத்த ஆரம்பித்தது மட்டுமல்லாமல் அந்த மதுக்கடைகளை ஒட்டி அரசே “ பார்” என்று அழைக்கப்படும் மதுபானம் அருந்தும் வசதிகளைக் கொண்ட விடுதிகளையும் நடத்த ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது. 

1983 ஆம் ஆண்டில் வெறும்  139 கோடி ரூபாய்களாக இருந்த மதுக்கடைகளின் ஏலத்தின் மூலம் இருந்த அரசின் வருமானம்  2002 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட இந்த அரசு மதுக்கடைகள் மூலம்    2,800  கோடி ரூபாய்களாக வானுக்குயர்ந்தது.  இந்த வருமானம்   2013ஆம் ஆண்டில்  25,000 கோடி ரூபாய்களாக இன்னும் உயர உயர்ந்து இருக்கிறது.  

இப்படிப்  பல ஆயிரம் கோடிகளாக மதுவிற்பனை மூலம் தமிழக அரசு கொட்டிக் குவித்திருக்கும் வருமானத்துக்குக் காரணமாக இருப்பது செல்வந்தர்கள் தரும் வரிகளல்ல. இந்த வருமானத்தின் பின்னணியில் இருப்பது ஒரு சமூக அவமானம். அரசு தனது வருமானத்தைப் பெருக்க எவ்வளவோ வழிகள் இருந்தும் இப்படி சாராயக்கடைகள் மூலம் பெறுவது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பிக்கொள்வதற்கு ஈடானது. 

கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேலான ஏழைத் தமிழர்கள் , கூலித் தொழிலாளிகள், நடுத்தர வர்க்கத்தினர் , பள்ளி கல்லூரி மாணவர்கள், சொல்வதற்கு வெட்கக்கேடாக இருந்தாலும் உண்மையில் பல பெண்கள் ஆகியோர் மதுவின் போதைக்கு அடிமையாகி தங்களின் வாழ்வையும் தாங்கள் குடும்பத்தினரின்  வாழ்வையும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் கவுரவத்தையும் துயருக்குள்ளாக்குகின்றனர்.  

முன்னெப்போதும் இல்லாத அளவில் தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள்  போன்ற அனைத்துப் பாதகங்களுக்கும் குடியே அடிப்படைக் காரணமாக அமைந்து இருக்கிறது.  

அறுபது சதவீதத்துக்கும் அதிகமான சாலை விபத்துக்கள் குடிப்பழக்கத்தின் காரணமாகவே நிகழ்வுறுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 

குடும்ப வன்முறையை கோலோச்சி  நிற்கச்செய்வதும் குடிப்பழக்கமே. குடிகாரக் கணவன்மார்களால் கொடுமைப் படுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பெற்ற குழந்தைகளை பேணாமல் அவர்களுக்கு கல்வி யறிவு தருவதில் சிந்தை செலுத்தாமல் இள வயதிலேயே அவர்களை வேலைக்கு அனுப்பி அவர்களின் கூலியைக் கூட தனது குடிப்பழக்கத்துக்கு பறித்துக் கொள்ளும் பாவிகளாக பெற்றோர் மாறும் சமூக அவலம் சந்தி சிரிக்கிறது. 

குடிக்கும் நிகழ்ச்சி இல்லாத சமுதாய நிகழ்ச்சிகளை சந்திக்க முடியவில்லை. பிறந்தநாள், கருமாதி செய்யும் நாள் முதல் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கூட குடிப்பதற்கும் குடிப்பவர்களுக்கும்  சிறப்பு ஏற்பாடுகள் செய்து வைப்பது சமூகப் பழக்கத்தில் தொத்து வியாதி போல்  குடியேறிய குஷ்டரோகமாகிவிட்டது. 

மனிதனுடைய ஒரு சில மணித்துளிகளின் சிறிய மகிழ்ச்சிக்கான விலை பண்பாட்டுச் சீரழிவு என்று ஆகிவிட்டது. 

படிக்கும் மாணவர்கள் பள்ளி கல்லூரிக்கு வரும்போதே குடித்துவிட்டு வரும் பழக்கத்துக்கும், தொழிலாளர்  கொஞ்சம் ஊத்தாமல் வந்தால் வேலை  செய்ய முடியவில்லை என்கிற நிலைமைக்கும் ஆளாகிவிட்டார்கள்.   

அரசியல் காரணங்களுக்காகவும் பொருளாதாரக் காரணங்களுக்காகவும் வாடகைக் கொலையாளிகளுக்கு வழங்கப்படும் இன்றியமையாதவைகளில் மது பாட்டில்கள் நீங்கா இடத்தைப் பெற்றுவிட்டன. மது குடித்த மயக்கத்தில் அடையாளம் காட்டப் படுபவர்களை வெட்டவும் குத்தவும் பின் விளைவுகளை சிந்திக்காமல் தலைப்பட்டுவிடுகிறார்கள். மது உள்ளே போனதும் மதி வெளியே வந்துவிடுகிறது.  மதுக்கடைக்குப் போக பணம் தராத தாயைக் கொன்ற மகனையும், மதுப்  பழக்கத்துக்காக பணம் இல்லாமல் பெற்ற மகளை விபச்சாரச் சந்தையில் விற்ற தகப்பனையும், மது போதையில் மருமகளை பெண்டாள நினைத்த மாமனாரையும், மதுக்கடைகளில் குடிபோதையில் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்ட நண்பர்களையும் சமீப கால  சரித்திரம் சந்தித்துவருகிறது.  

மாலை நேரங்களில் குடும்பங்களுடன் பொதுப் பேருந்துகளில் பயணிக்க முடியவில்லை. அருகில் வந்து அமர்பவர்கள் அடித்துவிட்டு வருவதால் ஒரு ‘சக்தி பிறக்குது நம் மூச்சினிலே. ‘

கோயில்கள், பள்ளிவாசல்கள் , தேவாலயங்கள்  பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவை அமைந்திருக்கும் இடங்களுக்கு நெருக்கமான இடங்களில் மதுபானக் கடைகள் வைக்கக்கூடாது என்பது விதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் உண்மையில்  இந்த விதிகள் நடைமுறையில் விடைகொடுத்து அனுப்பப்பட்டு விட்டன.  

நெறிமுறைகளைக் கூட பின்பற்றாமல்  இப்படி இந்த மதுக்கூடங்களை அரசே முன்னின்று நடத்துவது ஏன்?   மதுவிலக்கை ஏன் மீண்டும் நடைமுறைப் படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்பினால் இதற்காக சொல்லப்படும் தலையாய  காரணங்கள் (1) கள்ளச்சாராயமும் கள்ளச்சாராய சாவுகளும் அதிகரிக்கும் என்பதும் (2) குடித்துப் பழகியவர்கள் அண்டையில் உள்ள மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று குடிப்பதால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய வருமானம் அயல் மாநிலங்களுக்குச்  சென்றுவிடுகிறது என்பதுமேயாகும். 

கள்ளச்சாரயத்தைக் கட்டுப்படுத்த அல்லது ஒழிக்க அதிகாரம் பெற்ற அரசு இயந்திரம் தனக்குத்தானே நாங்கள் ஒரு வேஸ்ட் என்று ஒப்புக்கொள்ளத்தான் இந்த விவாதம் உதவும். ஆட்சி அதிகாரங்களைக் கையில் வைத்திருக்கும் அரசு இப்படிச்  சொல்வது கையாலாகத்  தனம்  என்றுதான் வருத்தத்துடன் குறிப்பிடவேண்டி இருக்கிறது. கள்ளச்சாராயத்தை முழுதுமாக ஒழித்துவிட  முடியாது என்று அரசே நினைத்து  சாராயக் கடைகளை திறந்து வைத்திருப்பது போல் கொலை, கொள்ளை குற்றங்களை முழுதுமாக ஒழிக்க முடியவில்லை என்று இந்திய தண்டனை சட்டத்தை இரத்து செய்துவிடலாமா? 

தமிழகத்துக்கு வரவேண்டிய வருமானம்  அண்டை மாநிலங்களுக்கு சென்று விடுகிறது என்கிற வாதமும் பொருளற்றது. குடிக்கும் எல்லோரும் ஒரு டூரிஸ்ட் பஸ்ஸை எடுத்துக் கொண்டு அடிமடியில் பணத்தைக் கட்டிக்கொண்டு அண்டை மாநிலங்களுக்கு  தினசரி போய் குடிப்பதில்லை.  அந்தந்த மாநிலங்களின் எல்லை ஓரங்களில் இருக்கும் ஒரு சிலர் மட்டுமே போய் வர முடியும். மொத்த மக்கள்தொகையில்,  இப்படிப் போவோரின் அளவு, கடலில் கரைக்கப்பட்ட  பெருங்காய அளவே. மேலும் வருமானம் என்பதைப் பார்க்கும் அரசு தனது மாநில மக்களின் மானம் போவதை ஏன் பொருட்படுத்த மறுக்கிறது?  வருமானத்துக்காக மானத்தை இழக்க அரசுகள் தயாராக இருக்குமானால் மானம் தொடர்பான வேறு தொழில்களையும் அரசே விடுதிகள் தொடங்கி வியாபாரமாகச் செய்யலாமே.  அத்துடன் கஞ்சா முதலிய போதைப் பொருள்களையும் அனுமதித்து கல்லூரி வாசல்களில் அரசின் சார்பில் கடை திறந்து நடத்தலாமே!  இவையெல்லாம் கண்துடைப்புக் காரணங்கள். 

உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் இரு அரசியல் கட்சிகளே முதன்மைக் கட்சிகள். இந்த இரு முதன்மைக் கட்சிகளில் மாறி மாறி ஒன்று ஆளும் மற்றது எதிர்க் கட்சியாக மக்கள் மன்றத்தில் இருக்கும்.  இந்த இரு கட்சிகளிலும் ஒரு குறிப்பிட்ட சமூக அல்லது சாதியைச் சேர்ந்த சக்தி படைத்த மோகனர்களும் பாலர்களும் ரட்சகர்களும் உடனுறைத் தோழிகளும் தோழர்களும் இளவரசிகளும் மொடாக்குடியாக்கும் மிடாசுகளும்  மிகப் பெரிய அளவில் மதுபான ஆலைகளை ஏழைத்  தமிழ் மக்களை நம்பியே நடத்தி வருகிறார்கள். இவர்களில் விஜயம் செய்யும் யாரையாவது அழைத்து ஐயா! சொல்லய்யா! என்று கேட்டால் இல்லைய்யா! என்று சொல்லிவிடுவார்கள்.   இந்த அரசு நடத்தும் மதுபான விடுதிகளின் ‘சாக்கனாங்கடை’ என்று அழைக்கப்படுகிற உள்ளுறை உணவுக்கூடங்களை நடத்துபவர்களும் இந்தக் குறிப்பிட்ட  சமூகத்தினர்  அல்லது இவர்களின் பங்காளிகளே.  தவிரவும் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் வார்டு கவுன்சிலர் வரையும்  மாவட்டச் செயலாளர்கள், வட்டங்கள்  ஒன்றியங்கள் ஆகியவற்றின் பொறுப்பாளர்களே  டெண்டர் என்ற பெயரில் கூத்தடித்து கொள்ளையடிக்கிறார்கள்.  இந்த உள்ளுறை உணவு விடுதிகளுக்காகவே ஆட்சி மாறும்    போதெல்லாம் கட்சி மாறுபவர்களும்  இருக்கிறார்கள். மதுக்கடைகளை அரசு மூட முடியாமல்  இருப்பதற்கு இதுவே முக்கியக் காரணம் . யாராலும் தொட முடியாத சக்திகள் படைத்த சாம்ராஜ்ஜியம் இந்த சாராய சாம்ராஜ்ஜியம். இது நமக்கு சொல்ல முடிந்த கதை நெருக்கத்தில் இருக்கும்  அரசுக்கோ சொல்ல முடியாத கதை.   

மதுபான ஆலைகளாலும் மதுபானக் கடைகளாலும்  அரசுக்கு கணக்கில்  வருவது ஒரு வகை வருமானமாகக் காட்டப்பட்டாலும் அரசுக்  கணக்குக்கு வராமல் அரசாளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் நிதிகளுக்காக ஆலை அதிபர்களால்   வழங்கப் படும் பெரும் தொகையான  கட்சி நிதிகள் கட்சிகள் தேர்தல்களில் அதிகாரம் பெற்று மீண்டும் ஆட்சிக்கு  வர   வாக்காளர்களுக்கு வழங்கவே பயன்படும் என்பதும் பூசனிக்காயைப் போட்டு உடைப்பதுபோல் உடைக்கவேண்டிய  ஊரறிந்த சிதம்பர ரகசியம். 

அரசின் தரப்பில் வைக்கப்படும் மற்றொரு குறிப்பிடத்தக்க வாதம் அரசு ஏழைகளுக்கு வழங்கும் இலவசம் அல்லது விலை இல்லாப் பொருள்கள் மற்றும் இலவச சலுகைகளால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மதுக் கடைகளால் வரும்  வருமானம் பொருளாதார ரீதியில் அரசின் கஜனாவுக்குத் தேவை என்று கூறப்படுகிறது.  “ கண்ணிரண்டும்  விற்று சித்திரம் வாங்கினால் உலகம் கை கொட்டி சிரியாதோ ? ” என்று பாரதியார் பாடிய வரிகளைத்தான் இந்த வாதம் நினைவூட்டுகிறது.  குடிக்கு அடிமையாகிவிட்ட ஒரு ஏழைத் தொழிலாளி ஒவ்வொருநாளும் ஒரு மது பாட்டில் வாங்கிக் குடித்தால் ,  ஐந்து ஆண்டுகளில் அரசு நடத்தும் டாஸ்மார்க் கடைகளில் செலவு செய்து இழக்கும் தொகை ஒரு இலட்சத்து இருபத்து ஆறு ரூபாய் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. ஆனால் அரசிடம் அவருடைய குடும்பம் இலவசமாகப் பெறும் பொருட்களின் மொத்த மதிப்பு  பதினாறு ஆயிரம்  ரூபாய் மட்டுமே. குரங்கு ஆப்பம் பங்குவைத்த கதை போலத்தான் இருக்கிறது இந்தக் கதை.  ஏர் ஓட்டுபவன் இளிச்ச வாயனாக இருந்தால் மாடு மச்சான் என்று கூப்பிடுமாம். அப்டித்தான் இந்த அரசுகள் இலவசம் என்று சின்ன மீனைப் போட்டு ஏழைகளின் உழைப்பின் வருமானம் என்கிற  பெரிய மீனை  ஒரேயடியாக தட்டிப் பறிக்கின்றன.  

குடிப்பவர்கள் தரப்பில் வைக்கப்படும் விவாதம் குடிப்பது அவரவர் தனி மனித உரிமை . இதில் அரசு தலையிடக் கூடாது என்பதாகும். மக்களுக்கு நல்லதை கற்பித்து தீயவற்றில் இருந்து விலகி இருக்கும்படி போதிப்பதும் அரசின் கடமை. குடிப்பது தனிமனித சுதந்திரம் என்றால் விபச்சாரம் செய்வது மட்டும் தனி மனித சுதந்திரம் இல்லை என்று ஆகிவிடுமா? காசுவைத்து சூதாடும் உரிமையையும் இந்தப் பட்டியலில் செர்த்துவிடலாமா? சுதந்திரம் கருதி அனுமதித்துவிடலாமா? பொது இடங்களில் புகைப் பிடிக்கக் கூடாது என்று அரசு போட்ட சட்டம் தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்காதா? பூக்களைப் பறிக்காதீர்கள் என்று ஏன் பூங்காக்களில் எழுதிவைக்கவேண்டும்? இந்த இடத்தில் சிறு நீர் கழிப்பவர்கள் தண்டனைகுள்ளாவார்கள் என்று ஏன் அறிவிப்புகள் தொங்குகின்றன?  மக்களின் வாழ்வை ஒழுங்கு படுத்துவது அரசின் கடமை. பொது அமைதிக்காக தனிமனித சுதந்திரத்தை கிள்ளிப் பார்ப்பது  தவறில்லை.  

அடுத்து அரசே நடத்தும் கடைகளாக இருப்பதால் நல்ல சரக்கு கலப்படமில்லாமல் கிடைக்கிறது என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. மது குடிப்பது உடலுக்கும் உடமைக்கும் கேடு விளைப்பது என்பது மருத்துவம் நிருபித்த உண்மைகள்.  இதில் அரசு தரும் மது மட்டும் நன்மை பயக்கும் என்று எண்ணுவது அறியாமையின் அரிச்சுவடி.   அரசே தன் பொறுப்பில் நடத்துவதால் குடிக்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு அரசாங்கமே குடிக்கச் சொல்லி கடை நடத்துகிறது  என்கிற ஒரு மன தைரியம் வருகிறது. இதனால் குடிப்பது சமுதாயத்தின் முன்னால்  நல்ல மரியாதையைத் தராது என்று தெரிந்தும் புதிய புதிய குடிகாரர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். 

ஒரு தேசிய அளவிலான புள்ளி விபரம்  நூற்றுக்கு தொண்ணூறு ஓட்டுனர்கள் குடிப்பழக்கம் உடையவர்கள்  என்று கூறுகிறது. ஆனால் மதுபானக்கடைகள் யாவும்  தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலேயே அமைந்திருப்பது ஒரு ஆபத்தை கைகாட்டி அழைக்கும் செயலாகும். அத்துடன் ஒரு ஊரின் எல்லையில் நான்கு திசைகளிலும் மதுபானக் கடைகள் திறக்கப் பட்டு ஜெகஜோதியாக ஒளிவீசிக் கொண்டு இருக்கின்றன. எல்லா நேரமும் அங்கு கூட்டம் அலை மோதிக்கொண்டு இருக்கிறது. 

இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த அல்லது துவக்கி வைத்த பல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தி விட்டார்கள். அண்ணா பெயரில் ஆசியாவிலேயே பெரிய நூலகம் திறக்கப் பட்டதை மூடிப் போட்டு அதை திருமண மண்டபமாக முயற்சிக்கிறார்கள். பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை அங்கு செயல் பட விடாமல் சிறப்பு மருத்துவ மனையாக மாற்றி விட்டார்கள். கலைஞர் பெயரில் காப்பீட்டுத்திட்டம் உட்பட பல திட்டங்களை அனாதையாக விட்டுவிட்டார்கள்.  அதே முறையைப் பின்பற்றி  கலைஞர் கருணாநிதியின் ஆட்சியின்  காலத்தில் அறிமுகப் படுத்தப் பட்ட மதுக்கடைகளையும் மூடினால் இந்நாள் முதல்வரை மக்கள் அம்மா என்று அழைப்பதற்கு ஒரு உண்மையான அர்த்தம் இருக்கும். பெண்கள் எல்லாம் இந்த அம்மையார்  இருக்கும் திசை நோக்கி திருப்புகழ் பாடுவார்கள். 

அரசு நினைத்தால் இந்த தற்கொலைப் பாதையை நோக்கி தமிழக மக்கள் மெல்ல மெல்ல சென்று கொண்டிருப்பதை தடுத்து நிறுத்த முடியும். அரசு நினைத்துத்தான் ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்த ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது; இராஜ மானியம் ஒழிக்கப் பட்டது; வங்கிகள் தேசியமயமாகப்பட்டன. இன்றைய முதல்வர் ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை நிறுத்தப் பட்டது. இன்றைய முதல்வர்தான் கந்துவட்டியில் இருந்து மக்களை காப்பாற்ற சட்டம் இயற்றினார்; கட்டைப் பஞ்சாயத்துக்கள் காவல் நிலையத்தில் கூட நடைபெறக்கூடாது என்று சட்டம் இயற்றினார்.  இதனால்தான் இவரை தைரிய லட்சுமி என்றும்  புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். 

தமிழக சரித்திரத்தில் இலவசக் கல்வி தந்ததற்காக  காமராசரின் பெயர் நிலைத்து நிற்கிறது. தமிழக சரித்திரத்தில் சத்துணவு தந்தற்காக எம் ஜி ஆர்  புகழ் நிலைத்து நிற்கிறது. அதே போல் மதுவிலக்கை மீண்டும் துணிச்சலுடன் அறிமுகப் படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் என்றென்றும் நிலைக்கும் பெருமையும் புகழும் பெறவேண்டும்.  பெண்களின் பிரதிநிதியாக இவர் இதைச் செய்ய வேண்டும்.  எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தில் தமிழகம் முழுமைக்கும் மீண்டும் மதுவிலக்கை தமிழக அரசு மீண்டும் கொண்டு வருமா? 

இபுராஹீம் அன்சாரி

52 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஸ்டெடியான அலசல் காக்கா !

மு.க.விடம் இருக்கும் இதயம் இனி யாருக்குச் செல்லும் !?

தூக்க முடியாம தூக்கி உற்றும் க.ஜெ. பார்ட்டியில் மருத்துவர் இல்லாமலா !

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Ebrahim Ansari,

A detailed analysis on Prohibiting Alcohol with keen expectations. I hope your ideas would be passed to the concerned people in power to realize the wish.

There seems to be selfishness dominating in the hearts of some political parties either in power or in opposition.

Giving freebies for people for voting, promising freebies after voting is a cunning plot to cheat the innocent people, and shutting their mouth for not asking their rights(since they would have received freebies from politicians). We can say its a kind of brainwashing and controlling the citizens.

Drinking alcohol is surely affecting the normal functioning of the brain. So their rational thinking ability and will power is lost. It can be an advantageous again for some selfish people in power.

According to a study, people lose their will power if they are addicted to alcohol. Not only that, the next few generation of those drunkards are also losing their will power. We are able to understand the pathetic conditions of drunkards and their future generations.

If a government and politicians are really service minded and safeguarding the citizens then they have to discourage the alcohol, tobacco, and drugs.

May Almighty God show us straight path.

Thanks and best regards,

B. Ahamed Ameen
www.dubaibuyer.blogspot.com



m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

'உ' ஐ 'ஊ'வ்வ்வ்வ்வ் என்று வாசிச்சுடுங்களேன்....

Iqbal M. Salih said...

அவசியமான கட்டுரை! அருமையான அலசல்கள்!

குடிகாரன்: "மனிதனின் பலம் அவனுடைய பலகீனமான நேரங்களில்தான் தீர்மானிக்கப் படுகின்றது என்பது வினோதமான ஓர் உண்மை!"

கண்ணிமைக்கும் நேரத்தில் முழுமதீனாவுக்கும் மதுவிலக்கை அமுல்படுத்தி வெற்றிகண்டது அண்ணல் நபி(ஸல்)யின் அதிசயமான நிர்வாக வெற்றிகளில் ஒன்றாகும்.

படித்ததில் ரசித்தது: "ஏர் ஓட்டுபவன் இளிச்ச வாயனாக இருந்தால் மாடு மச்சான் என்று கூப்பிடுமாம்".

Ebrahim Ansari said...

அலைக்குமுஸ் ஸலாம்.

அன்புள்ள இளைய சகோதரர் அஹமது அமீன்

//Giving freebies for people for voting, promising freebies after voting is a cunning plot to cheat the innocent people, and shutting their mouth for not asking their rights(since they would have received freebies from politicians). We can say its a kind of brainwashing and controlling the citizens.//

அருமையான வரிகள். நன்றி.

Ebrahim Ansari said...

//A detailed analysis on Prohibiting Alcohol with keen expectations. I hope your ideas would be passed to the concerned people in power to realize the wish.//

இதை ஒரு மனு வடிவில் எழுதிக் கொண்டு மாவட்ட அமைச்சரைப் பார்க்கப் போனேன். வாசலிலேயே தடுக்கப் பட்டேன்.
நான்: அமைச்சரைப் பார்க்க வேண்டும்.
காவலாளி: அய்யா முக்கிய பார்ட்டி மீட்டிங்கில் இருக்கிறார்.
நான்: முக்கியப் பார்ட்டி மீட்டிங்கா?
காவலாளி: சொன்னால் புரியலியா? பார்ட்டி பார்ட்டி மீடிங்க். அதிராம்பட்டினத்திலேருந்து வந்துரிக்கீங்க கொஞ்சம் ரால் பெரட்டி கையிலே எடுத்து வந்தீங்கன்னா பார்ட்டி மீட்டிங்குக்கு உதவியா இருந்திருக்குமே.

( எனக்குப் புரிந்தது. என்ன பார்ட்டி மீடிங்க் என்று. ) ஜூட்.

கற்பனையானாலும் உண்மை நிலை இப்படித்தான் இருக்கிறது.

மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போடப் போகும் முன் அந்தக் கட்சியினர் தாங்கள் தொண்டர்களுக்கு " போட்டு " த்தான் கூட்டிப் போனார்களாம்.

Ebrahim Ansari said...

தம்பி அபூ இப்ராஹீம்!

//மு.க.விடம் இருக்கும் இதயம் இனி யாருக்குச் செல்லும் !?//

அவர் கவிதையில் அண்ணாவிடமே திருப்பித் தருவதாக சொல்லி இருக்கிறார். பிரச்னை என்னவென்றால் அந்த இதயத்தில் இப்போது பல பை பாஸ் சர்ஜரிகள் செய்யப்பட்டுவிட்டன.

கவிதையின் கடைசிப் பகுதி.

நிழல் நீதான் என்றிருந்தோம்; நீ கடல்
நிலத்துக்குள் நிழல் தேடப்போய் விட்டாய்: நியாயந்தானா?
நான்தானடா நன்முத்து எனச் சொல்லி
கடற் கரையில் உறங்குதியோ?...
நாத இசை கொட்டுகின்ற
நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
விரல் அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே; அந்த
விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?
கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன்.. இன்று
மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை,
கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்,
இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா.

Aboobakkar, Can. said...

குடிகாரன் பேச்சு விடிந்தால போச்சு? மதுவிலக்கு அமலுக்கு வருவதை விட மணிதர்கள் திருந்துவதே மேல்...........கள்ள சாராயம் பெருக மதுவிலக்கே காரனம் ஆகிவிடும்???????????????

Ebrahim Ansari said...

With Respect to Brother Aboobakkar Can.

மனிதர்கள் திருந்துவதே மேல் என்பது சரியே. நன்னம்பிக்கையின் அடிப்படையில் பாசிடிவ் ஆக சொல்லி இருக்கிறீர்கள்.

இன்றைய சூழ்நிலைகள் மனிதர்கள் திருந்துவதை ஊக்கப்படுத்தவில்லை. மேலும் மனிதர்கள் கேட்டுப் போவதற்கே சூழ்நிலைகளை சுற்றி வைத்து இருக்கின்றன. அதிரையின் மூன்று எல்லைகளிலும் கடைகள் அமையப் பெற்று இருக்கின்றன. கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் காட்டாற்று வெள்ளம்தான்.

ஒரு தகவலைக் கேட்டால் நாம் மிகவும் வெட்கப்பட நேரிடும். அதாவது அதிரையில் எந்த நாளும் இல்லாத அளவு அதிக வியாபாரம் இரு பெருநாட்களின் தினங்களில் என்று அண்மையில் ஒரு வலைதளத்தில் வந்த செய்தி அதிர்ச்சியடைய வைத்தது. மிகவும் கவலையடையச்செய்தது.

அல்லாஹ் காப்பானாகவும்.

Abu Easa said...

//ஒரு தகவலைக் கேட்டால் நாம் மிகவும் வெட்கப்பட நேரிடும். அதாவது அதிரையில் எந்த நாளும் இல்லாத அளவு அதிக வியாபாரம் இரு பெருநாட்களின் தினங்களில் என்று அண்மையில் ஒரு வலைதளத்தில் வந்த செய்தி அதிர்ச்சியடைய வைத்தது. மிகவும் கவலையடையச்செய்தது.//

இதற்குக் காரனம் முஸ்லிம்கள் குடிக்கிறார்கள் என்பதல்ல. மகிழ்சியான தினத்தில் முஸ்லிம்கள் அதிகம் கொடுக்கிறார்கள் என்பதே

sabeer.abushahruk said...

தல சுத்துது, காக்கா.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சிறந்த அலசல்!

தமிழக கலாச்சாரம், பண்பாடு என சொல்லிக் கொள்ள சொச்சம் எதுவும் இருக்குமானால் அதை காப்பாற்ற பூரண மது விலக்கு உடனடி தேவை! காலம் கடந்தால் கலாச்சாரம் பண்பாடு இதுகளை வரலாற்றில் தான் இனி எழுத முடியும்.

சபீர் காக்கா,
சில நாளாக உங்களை காணாமல்
"நடுவுலே நட்சத்திரத்தையே காணோம்"
என்று எதாவது எழுதலாமான்னு தல சுத்துச்சு.

Abu Easa said...

அடியான் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு விபசாரம் புரியமாட்டான். அவன் திருடுகிறபோது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு திருடமாட்டான். மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு மது அருந்தமாட்டான். மேலும் அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு கொலை செய்யமாட்டான் என இறைத்தூரர் முகம்மது (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாவதாக) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி 6809)

அப்துல்மாலிக் said...

நல்ல அலசல்
டாஸமார்க்கால் என்னவெல்லாம் பயன், யாரெல்லாம் பயனடைகிறாங்க, எவ்வளவு வருமானம் வருதுனு இப்படி டீட்டெயிலே சொல்லிப்புட்டு இதை இழுத்து மூடுங்கனு சொன்னா சரியா காக்கா?

ஒத்தரூவாய்க்கு கொலை நடக்குதுனு படிக்கிறோம், அப்போ கோடி ரூவா கிடைக்கும்போது எவன் குடும்பத்தின் வயித்துலே அடிச்சாலும் என்னா எந்த குடும்பம் சீரழிஞ்சா என்னா என்ற கேள்விதான் முதலில் வரும். கோடிகளில் புரலுபவர்களுக்கு மப்புலே புரளவைப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை


Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களே!

//தல சுத்துது, காக்கா.//

குறுகிய நாட்களில் ஊர் சுற்றி வந்ததால் இருக்குமோ?

வாக்களித்தபடி சந்திக்க முடியாமைக்கு வருந்துகிறேன். அன்று நான் ஊர் வர இயலவில்லை. நான் வர இருந்த வேளை இரத்து ஆகிவிட்டது .நான் ஒரு போன் செய்து சொல்லி இருக்கலாம். எனக்கு தலை சுத்திவிட்டது என நினைக்கிறேன்.

Ebrahim Ansari said...

தம்பி எம் ஹெச் ஜெ. !

//தமிழக கலாச்சாரம், பண்பாடு என சொல்லிக் கொள்ள சொச்சம் எதுவும் இருக்குமானால் அதை காப்பாற்ற பூரண மது விலக்கு உடனடி தேவை! காலம் கடந்தால் கலாச்சாரம் பண்பாடு இதுகளை வரலாற்றில் தான் இனி எழுத முடியும்.//

இப்போதே எழுத ஆரம்பித்துவிடுங்கள். நம் வயதுக்கு நாம் காணாத பலவகை கொண்டாட்டங்கள் நமது வீட்டின் வரவேற்பறை வரை வந்துவிட்டன.

Ebrahim Ansari said...

தம்பி அப்துல் மாலிக் அவர்களுக்கு

//ஒத்தரூவாய்க்கு கொலை நடக்குதுனு படிக்கிறோம், அப்போ கோடி ரூவா கிடைக்கும்போது எவன் குடும்பத்தின் வயித்துலே அடிச்சாலும் என்னா எந்த குடும்பம் சீரழிஞ்சா என்னா என்ற கேள்விதான் முதலில் வரும். கோடிகளில் புரலுபவர்களுக்கு மப்புலே புரளவைப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை//

நன்னா சொன்நீங்கோ போங்கோ! இந்த சமூக அவலத்தை ஒழிக்க ஒன்று திரளவேண்டும். பெரும் போராட்டம் இல்லாமல் சாதிக்க முடியாது. ஒரு புறம் அரசே நடத்துவது மறுபுறம் சமூகத்தின் சக்திவாய்ந்தவர்கள் கைகளில் - கஷ்டம்தான். ஆனால் நிறைவேற்றியாக வேண்டும்.

அண்மையில் படித்தது- இரண்டு குடிமகன்கள் பேசியது

" என்னடா இவனுங்க குடிக்காதே குடிக்காதேன்னு புத்தி சொல்றானுங்க. ஊர் பேரு பூரா காரைக்குடி, இளையாங்குடி, பரமக்குடி , சோதியக்குடி, மன்னார்குடி ன்னு வச்சுப்புட்டு . மொதல்லே ஊர் பேரையெல்லாம் குடிக்காதேன்னு மாத்தட்டும் அப்பறம் நாங்க நிருத்துறோம். "

எப்படி லாஜிக்!

عبد الرحيم بن جميل said...

அஸ்ஸலாமு அலைக்கும்!

காலத்திற்க்கேற்ற கட்டுரை!மிகச் சிறப்பான அலசல்....//நெறிமுறைகளைக் கூட பின்பற்றாமல் இப்படி இந்த மதுக்கூடங்களை அரசே முன்னின்று நடத்துவது ஏன்?// ஒரு வேளை இது நமக்கு சொல்லப் பட்ட மறுமையின் அடையாளமாக இருக்கலாம்..தகுதியற்றவர்கள் ஆட்சி பொறுப்பில் இருப்பார்கள் என்று!!

அலாவுதீன்.S. said...

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு மீண்டும் சாத்தியமா? சாத்தியம்தான்! எப்படி?
தாங்கள் இந்த மதுவினால் பயன் அடைபவர்களைப் பற்றி தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள் - அதனால் மதுவிலக்கு என்பது சாத்தியமே இல்லை.

திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

இதுபோல் குடிமன்னராக பார்த்து திருந்தாவிட்டால் மதுவை ஒழிக்க முடியாது.
*********************************************************************************************************************
அன்புச் சகோதரர் இபுராஹிம் அன்சாரி அவர்களுக்கு - இப்பொழுது தமிழகத்தில் அடித்துக்கொண்டு இருக்கும் மாணவர்களின் புயலைப் பற்றியும் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.
 இந்தியாவில் முஸ்லிம் இன சுத்திகரிப்பு நடந்தபொழுதும்,
 இலங்கையில் புலிகள் முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்தபொழுதும்
 அமெரிக்கா உலகம் முழுவதும்இன சுத்திகரிப்பு செய்தபொழுதும்
இப்பொழுது பொங்கி எழும் (அ) நியாயவான்கள் எங்கிருந்தார்கள்.
மனிதவாதம் பேசாமல் -இவர்களும் இனவாதம்தான் செய்கிறார்கள்.

Adirai pasanga😎 said...

தள்ளாடும் தமிழகம் பற்றி ஒரு ஸ்டெடியான அலசல்..

சகோதரர் அலாவுதீனின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.

/// இப்பொழுது தமிழகத்தில் அடித்துக்கொண்டு இருக்கும் மாணவர்களின் புயலைப் பற்றியும் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.
 இந்தியாவில் முஸ்லிம் இன சுத்திகரிப்பு நடந்தபொழுதும்,
 இலங்கையில் புலிகள் முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்தபொழுதும்
 அமெரிக்கா உலகம் முழுவதும்இன சுத்திகரிப்பு செய்தபொழுதும்
இப்பொழுது பொங்கி எழும் (அ) நியாயவான்கள் எங்கிருந்தார்கள்.
மனிதவாதம் பேசாமல் -இவர்களும் இனவாதம்தான் செய்கிறார்கள்///

இந்த போராட்டத்தை இனவாதம் பார்க்காமல் மனித நேயம் பார்த்து போராடியிருந்தால் அனைவரும் குஜராத்துக்கும், மன்டைக்காட்டுக்கும், அஸ்ஸாமுக்கும்,பீஹாருக்கும், இன்னும் எங்கெல்லாம் நம் உள் நாட்டிலேயெ மத துவேசம் பிடித்து அலைபவர்களுக்கு எதிராக கூடியிருந்தால் மிகவும் பாராட்டலாம். அவ்வாறு நடக்கவில்லை.
குறைந்த பட்சம் இவர்களனைவரும் மது ஒழிப்புக்கு எதிராக திரன்டு இவ்வாறு போராட்டம் நடத்தினால் நாட்டுக்கும் நல்லது நாட்டு மக்களுக்கும் நல்லது.

sabeer.abushahruk said...

அ.நி: கார்ட்டூன் அசத்தலாயிருக்கிறது.

ஈனா ஆனா காக்கா: அய்யா அவர்கள் பூட்டுப்போடுவதற்கு முன்பே கடைக்காரர்களிடம் சாவியைக் கொடுத்து ரொம்ப நல்லவேன்னு பேர் வாங்கிட்டதாகக் கேள்வி.

எம் ஹெச் ஜே:

வெள்ளி: துபையில் ஏர்ப்போர்ட்டில்
சனி: சென்னையில் நிறுவன வேலை நிமித்தம்
ஞாயிறு: சென்னையில் மருத்துவம் பயிலும் மகளோடு
திங்கள்: அதிரையில் உம்மாவோடு
செவ்வாய்: அஜ்மானில் மனைவி மக்களோடு

புதன்: ஷர்ஜாவில் வேலையில்

தல சுத்துமா சுத்தாதா?

sabeer.abushahruk said...

//குறுகிய நாட்களில் ஊர் சுற்றி வந்ததால் இருக்குமோ? //

மட்டுமில்லை காக்கா. நீங்கள் விளக்கிச்சொல்லும் மதுவிலக்குக்கொள்கையிலான கட்சிகளின் நிலைபாட்டால்தான் தலை சுற்றியது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், காக்கா...

தினம் தினம் இடைவிடாத நடைபெரும் உண்ணாவிரத நாடகத்தில் குடிக்கனும்ல அதான் காக்கா பூரண மதுவிலக்கை கொண்டுவர அரசு யோசிக்கிறது.

ஈழத்துக்காக உண்ணாவிரதம் இருக்கும் வருங்காள பிரதமர்களுக்கும், மாநில முதல்வர்களுக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் (அதான் காக்கா கல்லூரி மாணவர்களுக்கு) டாஸ்மார்க்கிலிருந்து சரக்கு இரவில் சப்லை செய்யப்படுவதாக உளவுத்துறை வட்டார செய்தி தெரிவிக்கிறது.

عبد الرحيم بن جميل said...

அனைத்து சகோதரர்களுக்கும்!!

பின்னூட்டம் அதன் அதன் கட்டுரைகளைச் சார்ந்திருக்க வேண்டும்! Personal talks ஐ இங்கே தவிர்த்துக் கொள்வது சாலச் சிறந்ததென்றெண்ணுகிறேன்

sabeer.abushahruk said...

//பின்னூட்டம் அதன் அதன் கட்டுரைகளைச் சார்ந்திருக்க வேண்டும்! Personal talks ஐ இங்கே தவிர்த்துக் கொள்வது சாலச் சிறந்ததென்றெண்ணுகிறேன்//

கண்டிப்பாக சிறந்த ஆலோசனைதான். இருப்பினும்,

"தல சுத்துது" என்கிற என் கமென்ட் "மது" தொடர்பான பூடகமான, என் தகுதிக்குட்பட்ட சின்ன கருத்துதான். அதை பெர்சனல் ட்டாக் ஆக்கியது கட்டுரை ஆசிரியர். காணோமே என்று தேடியது எம் ஹெச் ஜே.

அவர்களுக்கு உண்மையைப் பதிலாகத் தருவது என் பொறுப்பல்லவா?

தவிர, இங்கு புழங்குபவர்கள் கொஞ்சம் கூடுதலாகவே பாசக்கார புள்ளைக. சித்த நேரம் காணோம்னாலும் தேடுவாக.

இப்படியான குசல விசாரிப்புகளும் குறும்புப்பேச்சுகளும் இல்லாவிடில் இந்த வலைப்பூ வாடிவுடும் சகோதரா.

பெர்சனல் ட்டாக்குக்காகவே பதிவு போடும் இவிங்கள ட்டக்குன்னு மாத்திட முடியாது. கொஞ்சம் விட்டுப்புடிங்க மருமகனே :-)

Abu Easa said...

யான் காக்கா, கார்டூன்ல மருத்துவர் சிரிச்ச மேனிக்கு உக்காந்திருக்காரே மதுக்கடைய மூடிட்டா எப்புடியும் கள்ளுகடைய தொறந்துலாம்கிற நெனப்போ?

Ebrahim Ansari said...

//தவிர, இங்கு புழங்குபவர்கள் கொஞ்சம் கூடுதலாகவே பாசக்கார புள்ளைக. சித்த நேரம் காணோம்னாலும் தேடுவாக.

இப்படியான குசல விசாரிப்புகளும் குறும்புப்பேச்சுகளும் இல்லாவிடில் இந்த வலைப்பூ வாடிவுடும் சகோதரா.//

வழக்கமாக வரக்கூடியவர்கள் வராவிட்டால் தேட்டப்பட்டு தேடுவது இங்கு வாடிக்கை. மகிழ்வாக எடுத்துக் கொண்டு அன்பை வளர்ப்பது இங்கு சகஜம். தலைப்பின் கடுமையான தாக்கத்தையும் இந்த அன்புத் தேட்டம் தீர்க்கும்.

Unknown said...

//அனைத்து சகோதரர்களுக்கும்!!

பின்னூட்டம் அதன் அதன் கட்டுரைகளைச் சார்ந்திருக்க வேண்டும்! Personal talks ஐ இங்கே தவிர்த்துக் கொள்வது சாலச் சிறந்ததென்றெண்ணுகிறேன்//

குட்டியும் கோதாவில் குதித்துவிட்டதே.....!

Ebrahim Ansari said...

கோதாவில் குதித்த குட்டியைப் பற்றி யார் என்று கேட்டால் பர்சனல் ஆகிவிடுமோ? பரவா இல்லை தெரிந்து கொள்வோம். சொல்லுங்களேன்.

sabeer.abushahruk said...

//கோதாவில் குதித்த குட்டியைப் பற்றி யார் என்று கேட்டால் பர்சனல் ஆகிவிடுமோ? பரவா இல்லை தெரிந்து கொள்வோம். சொல்லுங்களேன்//

நிஜமாகவே தெரியாதா காக்கா? மடியிலேயே தூக்கி வளர்க்கப்பட்ட கங்காருக் குட்டிபோல அல்ல இது. தனிக்காட்டில் விட்டு வளர்க்கப்பட்ட அதி அழகு குட்டி.

வெளங்களே?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எது எப்படியோ.... பெர்ஷனலாவே பேசிக்கிட்டோமே ! :)

நல்வரவு... பழகுமொழிக்கு விலாசம் கிடைத்து விட்டது !

KALAM SHAICK ABDUL KADER said...

பணம் தரும் போதை, மது தரும் போதையைக் குற்றமெனக் கருதுமா? குணம் என்றால் என்னவென்றே தெரியாத குறுமதியாளர்களான அரசியல் வியாதிகளிடம் அகப்பட்டுக் கொண்ட நாடு, அல்லாஹ்வின் மீது பயமும், நம்பிக்கையும் வராத வரைக்கும் எத்தீமையும் ஒழியுமா?

இருபெருநாட்களில் நம் இளைஞர்கள் பற்றிய அச்செய்தி இருதயத்தை மிகவும் வேதனைப்படுத்தியது. நம்மவர்களை முதலில் நாம் திருத்துவோம்; பின்னர் மற்றவர்களைப் பற்றி வருந்துவோம். இருதயம் கெட்டுவிட்டால் எல்லாம் கெட்டுவிடும் என்பதற்கிணங்க, முதலில் நம்மவர்களின் இருதயங்களில் இறையச்சத்தை விதைப்போமாக!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஈனா ஆனா டாக்டர் காக்கா; நீங்க சொன்னது போல் கலாச்சாரம் கடந்த கருமங்கள் நிறையவே புகுந்துவிட்டன.

அபூ டாக்டர் காக்கா; காணாததற்கு வரலாறு தந்தமைக்கு நன்றியும் மகிழ்வும். உண்மையில் தலைசுத்து பயணம்.

சகோ. அப்துல் ரஹீம் ஜமீல்; நீங்கள் பெர்சனல் சம்பந்தமாக எழுதியதன் மூலம் உங்களையும் அறிந்து கொண்டோம்.

ZAKIR HUSSAIN said...

கோடிகள் புரளும் வியாபாரம் மது, நிச்சயம் அவ்வளவு சீக்கிரம் மூடப்படாது.

Ebrahim Ansari said...

//நிஜமாகவே தெரியாதா காக்கா? மடியிலேயே தூக்கி வளர்க்கப்பட்ட கங்காருக் குட்டிபோல அல்ல இது. தனிக்காட்டில் விட்டு வளர்க்கப்பட்ட அதி அழகு குட்டி. //

இப்போது கூட விளங்காவிட்டால் ? அதி அழகாக விளங்கிவிட்டது. நானும் வரவேற்கிறேன். வாங்க மருமகனே! இன்றைக்கு வியாழக்கிழமை. இன்றும் உங்களின் ஆட்சிதான்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

நல்லதொரு அலசல் காக்கா வாழ்த்துக்கள்...

மது ஊட்டி மதி மயங்க செய்துவரும் அரசு அவனால் மதுவின் கேடு மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படுமாம். இந்த நேரத்தில்தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும் பண்புகளும் மறக்க ஆரம்பிக்குமாம். ஆடை ஒழுங்காக உள்ளதா என்று கவனம் இருக்காது.

என்னதான் மதிமயங்கி மதுவை நாடி சென்று தன் சுயநினைவை இழந்து கேடுகெட்டு அலையும் மாக்களுக்கு இது ஒரு ஜாலிக்கு னு சொல்லி அலையும் சிலரும் உள்ளனர்

மதுவின் கேடு

பண்பாடு காத்த நாடு இன்று

படும் பாடு சந்தி சிரிக்குது

ஏற்றம் தந்த பெருமை எல்லாம்

ஏமற்றம் கொண்டு சறுக்குது!

மனுசத்தன்மை என்ற ஒன்று

ம‌து உள்ளே போனால் வழுக்குது!

பள்ளி செல்லும் பிள்ளை கூட‌

பாழாகி தெருவில் நிற்குது!

ஏட்டில் வந்த கல்வி கூட‌

எட்டாக் கனியாய் ஆகுது

எட்டு வயது பிள்ளையையும்

காமப் பார்வை பார்க்குது!

இந்தக் குறைகள் தீருமோ

நம்மை பிடித்த சாபம் போகுமோ

நம் சோகம் என்று கழியுமோ

தமிழ்நாட்டில் கிழக்கு விடியுமோ

ஒரு காலத்தில் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக நடைபெற்ற மது விற்பனை தற்போது, நகரத்தின் நடுவிலே பிரதான தெருக்களில் கடை பரப்பி நிலைத்து விட்டது. மது விற்பனை என்பது சட்டவிரோதமான தொழில் என்பது மாறிப்போய் அரசாங்கத்தால் நடத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட அரசு நிறுவனமாக மாறிவிட்டது.

மதுப்பழக்கம் ஒரு நோய் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. என்ன பயன் இதெல்லாம் காற்றில் சொன்ன வார்த்தை போல் தான் யாருக்கும் சென்றடையாது என்பது மெய்.

மது அரக்கனை மாய்ப்போம், மானுடத்தைக் காப்போம்.

Shameed said...

Abu Easa சொன்னது…
//ஒரு தகவலைக் கேட்டால் நாம் மிகவும் வெட்கப்பட நேரிடும். அதாவது அதிரையில் எந்த நாளும் இல்லாத அளவு அதிக வியாபாரம் இரு பெருநாட்களின் தினங்களில் என்று அண்மையில் ஒரு வலைதளத்தில் வந்த செய்தி அதிர்ச்சியடைய வைத்தது. மிகவும் கவலையடையச்செய்தது.//

//இதற்குக் காரனம் முஸ்லிம்கள் குடிக்கிறார்கள் என்பதல்ல. மகிழ்சியான தினத்தில் முஸ்லிம்கள் அதிகம் கொடுக்கிறார்கள் என்பதே//

இதற்குக் காரனம் முஸ்லிம்கள் குடிக்கிறார்கள் என்பதல்ல. மகிழ்சியான தினத்தில் முஸ்லிம்கள் அதிகம் கெடுகிறார்கள் என்பதே!!!!!!!!! உண்மை

Yasir said...

சீரியஸான சிந்தனை ஆக்கம்...நாக்கைப்பிடுங்கும் கேள்விகள், பிரச்சனைகள் தீர்வுகள் என்று கட்டுரை மின்னுகின்றது...மதுவிலக்கு விசயத்தில் தள்ளாடும் அரசு இதனைக் கண்டு கொள்ளுமா ?....

சமீபத்தில் ஒரு பேச்சாளரின் வீடியோவைக் கண்டேன் அதில் அவர் “ மது விலக்கு” போராட்டம் நடத்தவே ஒரு 500 பேருக்கு மது வாங்கிக் கொடுத்துதான் கூட்டி செல்கின்றார்கள் என்றார்...எப்படி உருப்படுவது...நம் சமுதாய மக்களும் இறைவனின் தண்டனையை மறந்து விட்டு குடிக்கு அடிமையாவது கவலையளிக்கின்றது

Ebrahim Ansari said...

Assalaamu alaikkum.

நீண்ட நாட்கள் வராது இருந்த சகோதரர்கள் பலர் இந்தப் பதிவுக்கு கருத்துரை தந்தமைக்கு மிக்க நன்றி.

சகோதரர் அலாவுதீன் ! அலைக்குமுஸ் ஸலாம் . இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன்.

ஜசக் அல்லாஹ்.

عبد الرحيم بن جميل said...

வலைப் பூ வாடிவிட வேண்டாம் சபீர் மாமா!!வழக்கம்போல் தொடரலாம்!!அதிரைத் தமிழில் அசத்துரீங்க!!

எல்லோருடைய வரவேற்ப்பும் என்னை மகிழச் செய்தது முக்கியமாக அகமது பெரியவாப்பா!!

//பழகுமொழிக்கு விலாசம் கிடைத்து விட்டது !// நைனா தம்பி காக்கா!! என்னால் பழகுமொழிக்கு விலாசம் கிடைத்ததா? உல்டாவாகவல்லவா சொல்கிறீர்கள்!!

KALAM SHAICK ABDUL KADER said...

//கோடிகள் புரளும் வியாபாரம் மது, நிச்சயம் அவ்வளவு சீக்கிரம் மூடப்படாது.//

உளவியலாரின் வைரவரிகளை உளமொப்பி ஏற்கிறேன். ஆம். உள்ளம் திருந்தினால் எல்லாம் திருந்தும்! முற்றுகையும், போராட்டமும் முற்றிலும் அரசியவியாதிகளின் அன்றாட வேடிக்கையெனும் வாடிக்கைகளாக ஆகிவிட்ட பின்னர், எந்தக் “குடிமகனும்” செவியேற்க மாட்டார்!!

முதலில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் அதிரைப்பட்டினம் போன்ற நல்லூர்களில் அல்லாஹ்வின் அச்சத்தையும், அழகிய வாழ்வின் மிச்சத்தையும் நடைமுறை வாழ்வில் கொண்டு வருவோம். “இளந்தமிழ் மொழியன்” இக்பால் பின் முஹம்மத ஸாலிஹ் அவர்கள் சொன்னது போல்

\\கண்ணிமைக்கும் நேரத்தில் முழுமதீனாவுக்கும் மதுவிலக்கை அமுல்படுத்தி வெற்றிகண்டது அண்ணல் நபி(ஸல்)யின் அதிசயமான நிர்வாக வெற்றிகளில் ஒன்றாகும்.\\

என்ற அற்புதமான வரிகளை ஆழமாய்ச் சிந்தித்தால் குறைகள் நம்மிடம் தான் இருக்கின்றன என்பதை அறிந்து, நம் இளைஞர்களைத் திருத்துவோம் இதமாக!
முஸ்லிம்கள் ஏன் குடிகாரர்களாய் இருப்பதில்லை என்று மட்டும் மாற்றுச் சமுதாய மக்கள் உணரத் தலைப்பட்டால் தானாகவே அவர்களின் அறிவுக் கண் திறக்கும். இஃது எல்லா விடயங்கட்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன்.







KALAM SHAICK ABDUL KADER said...

அன்பு இளவல் அப்துற்றஹீம் பின் ஜமீல் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர்க்காத்தஹு.


வலைப்பூ மணக்க வருகை புரிந்த
நிலைப்பா டுணர்த்தும் நிலைத்து.

عبد الرحيم بن جميل said...

வ அலைக்கும்முஸ்ஸலாம்!! வரவேற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி சகோ.அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் அவர்களே!! தாங்கள் பயன்படுத்தும் தமிழின் செம்மை என்னை பொறாமை படச்செய்கிறது!

KALAM SHAICK ABDUL KADER said...

தனிநபர்ப் பின்னூட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்று எம் ஆசான் அவர்கள் வேண்டியிருந்தும், தவிர்க்க முடியாமல் மறுமொழி இடுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்:

அன்புச் சகோதரர் அப்துற்றஹீம் பின் ஜெமீல் அவர்களே! ஜஸாக்கல்லாஹ் கைரன். உங்களின் இனிய வாழ்த்துரைக்கு என் உளம்நிறைவான நன்றி.

ஒற்றுப்பிழைகளும், சந்திப்பிழைகளுமாய்க் குற்றம் குறைகளுடன் மலிந்து காணப்பட்ட என் தமிழ் எழுத்துக்களைத் திருத்தி, “நல்ல தமிழ் எழுதுவோம்” என்று எமக்கு நல்வழி காட்டி வரும் தமிழறிஞர்கள் அதிரை அஹ்மத் காக்கா (உங்களின் பெரிய வாப்பா), கணினித் தமிழறிஞர் ஜெமீல் பின் முஹம்மத் ஸாலிஹ் காக்கா(உங்களின் வாப்பா) மற்றும் இளந்தமிழ் மொழியன் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் (உங்களின் சாச்சா)ஆகியோர்க்கு உங்களின் பாராட்டையும், வாழ்த்தையும் சமர்ப்பிக்கிறேன்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே= அல்ஹம்துலில்லாஹ்!

Adirai pasanga😎 said...


///அப்துர்ரஹீம்ஜமீல் சொன்னது
அனைத்து சகோதரர்களுக்கும்!!

பின்னூட்டம் அதன் அதன் கட்டுரைகளைச் சார்ந்திருக்க வேண்டும்! Personal talks ஐ இங்கே தவிர்த்துக் கொள்வது சாலச் சிறந்ததென்றெண்ணுகிறேன்\\\

சொன்னதைச் செய்வதும் செய்வதைச் சொல்வதுமே நன்று.

عبد الرحيم بن جميل said...

சகோ.இப்னு அப்துல்வாஹித் அவர்களே!!

சபீர் மாமா சொன்னார்கள் personal talks இல்லாவிட்டால் வலைப்பூ வாடிவிடுமென்று! அதனால் அடுத்த பின்னூட்டத்திலேயே வாபஸ் வாங்கிவிட்டேன் காக்கா!!

Adirai pasanga😎 said...

வசந்தங்கள் வீசும் வண்ணத்தொடர்களும் அதற்கான பின்னூட்டங்களும் வரிசையாக இருக்கும்போது வலைப்பூ வாட வாய்ப்பேயில்லை தம்பி.

عبد الرحيم بن جميل said...


@ bro.ibn abdulwahid

எது எப்படியோ! வாபஸ் வாங்கிட்டேன்,ஒரு சஜ்ஜஸன் தானே காக்கா சொன்னேன்,சீரியஸ் ஆயிட்டீங்களே!! காக்கா சொன்னால் எல்லோரைப் போலவும் தொடரலாம் என நினைக்கிறேன்!!

Adirai pasanga😎 said...
This comment has been removed by the author.
Adirai pasanga😎 said...

//எது எப்படியோ! வாபஸ் வாங்கிட்டேன்,ஒரு சஜ்ஜஸன் தானே காக்கா சொன்னேன்,சீரியஸ் ஆயிட்டீங்களே!! காக்கா சொன்னால் எல்லோரைப் போலவும் தொடரலாம் என நினைக்கிறேன்!!//

Ofcourse with pleasure! brother.

Unknown said...

Assalamu Alaikkum

Today, central government of India has put emergency ban on advertising on tobacco in any form.

Please check the news below:
Click:
http://dinakaran.com/News_Detail.asp?Nid=44623


It seems the Indian government is responding to various demonstrations and appeal by people to stop tobacco.

There can be similar ban on alcohol expected soon in Tamil Nadu state if the government has empathy and real concern on health and well beings of citizens.

Thanks and best regards

B. Ahamed Ameen from Dubai.

http://www.dubaibuyer.blogspot.com



Abu Easa said...

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்

சகோதரர் இபுறாஹீம் அன்சாரி அவர்களின் இக்கட்டுரை இந்நேரம்.காம் தளத்தில்(http://www.inneram.com/others/others-best/wine-prohibition-in-tamil-nadu-9892.html) பதியப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெறிவித்துக்கொள்கிறேன்.

அல்லாஹ் உங்களுக்கு அருள்புரியட்டும் மூத்த சகோதரரே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.