Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று ! இன்று ! நாளை ! - தொடர் -12 19

அதிரைநிருபர் பதிப்பகம் | September 26, 2013 | , , ,

“திருவளர்ச் செல்வியோ நான் தேடிய தலைவியோ”  என்று எம்ஜியாரால் பாடப் பட்ட செல்வி  ஜெயலலிதா ஜெயராம் தமிழ்நாட்டின் முதல்வரானார். முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் எல்லோரையும் போல இவரும் வழக்கம் போல பல வாக்குறுதிகளை வாரி வழங்கினார்.  அதிலே ஒன்று நல்லாட்சி நடத்துவேன் என்பதாகும். அதன் அடையாளமாக ஒரே ஒரு ரூபாய் மட்டுமே தான் மாதச் சம்பளமாகப் பெறுவேன் என்று அவர்  அறிவித்தபோது “அம்மா நீர் வாழ்க!" என்று அடுத்தது வரப்போவது தெரியாமல் முழக்கமிட்டனர் அறியாத மக்கள்.  அந்த எண்ணத்தில்தான் அரியணை ஏறினார் என்று நம்பலாம். ஆனால்  ஆட்சி பீடம் அவ்வளவு எளிதானதல்ல.

நல்லவர்கள் ஆட்சியில் அமர்ந்தாலும் அவர்களை அதிர்காரவர்க்கங்கள் எப்படியாவது கைப்பாவையாக்கி அடிமைப்படுத்திவிடும் என்பதற்கு ஜெயலலிதாவும்  விதிவிலக்காகவில்லை. அதிகாரத் தேனை உறிஞ்சும் எறும்புக் கூட்டங்கள் அவரை மொய்க்க ஆரம்பித்தன. வீடியோ கேசட்டுகளின் வடிவில் வீட்டுக்குள் படையெடுத்த நவீன – நம்ப முடியாத உறவுகள் விலாவாரியாக வலம் வர ஆரம்பித்தன. தனது இரத்த சொந்தங்களை பல சொந்தக் காரணங்களுக்காக் பிரிந்து தனிமையில் வாழ்ந்துவந்த ஜெயலலிதாவை அரவணைக்கிறோம் - ஆதரவு காட்டுகிறோம் - அன்பு செலுத்துகிறோம் -பணிவிடை செய்கிறோம் என்கிற போர்வையில் நடராஜாக்களின் நடமாட்டம் அதிகரித்து உட்புகுந்தனர். 

ஒரு நிழல் முதலமைச்சர் சசிகலா என்கிற உயிர்த்தோழி மூலம் உருவானார். அமைச்சரவை அமைத்தல்- அமைச்சர்களின் துறைகளை ஒதுக்கல் - அரசின் ஐ எ எஸ் செயலார்கள் மற்றும் ஐ பி எஸ் உயர் காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வது பதவி  உயர்வு கொடுப்பது போன்ற முதலமைச்சருக்கே உரித்தான தனி அதிகாரங்கள் நிழல் அதிகாரத்தின் கைகளின் அங்கீகாரத்துக்கே முதலில் வந்தன.என்ன காரணமோ ஜெயலலிதா இவற்றுக்கெல்லாம் தலையாட்டினார். நீட்டிய இடத்தில் கையெழுத்தும் இட்டார். மைசூரில் பிறந்த ஜெயலலிதா முதலமைச்சார் ஆனால் ஆட்சி செய்தது என்னவோ மன்னார்குடி என்று அரசியல் நிலை ஆட்டம் போட்டது. 

பாசி பிடிக்கும் அளவுக்குப் பணம் சேர்ந்தது. சூட்கேசுகளின் விலை தாறுமாறாக ஏறின. மனதில் மாசில்லை என்று கூறியே எம் எல் ஏக்களை தூசியாகப் பார்த்தனர். ஆட்சிக்கு ஆபத்து உண்டாகுமோ என்று கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் கவலைப் பட்டார்கள். கட்சிக்காக ஆரம்ப காலம் தொட்டு உழைத்து அடி உதை வாங்கி சிறை வாசம் சென்றவர்கள்  அலட்சியப் படுத்தப் பட்டார்கள். ஆடம்பரம் கொடிகட்டிப் பறந்தது. தொண்டர்களின் தொண்டையில் முள் தைத்தது. எட்டில் அடங்காத எண்ணற்ற அவலங்கள் அங்கே ஆட்சி புரிந்தன. ஒரு குறிப்பிட்டவர்களுக்கு பலனளிக்கும் விதத்தில் அரசின் திட்டங்கள் அறிவிக்கப் பட்டன. 

சசிகலாவும் ஜெயலலிதாவும் கடவுள் பக்தி நிறைந்தும் காணப்  பட்டனர். பலமுறை யாகங்கள் நடத்தினார்கள்.  அதில் ஒரு விளைவு இவர்களின் ஆட்சிக் காலத்தில் கும்பகோணத்தில் நடந்த மகாமகம் நிகழ்ச்சியில் இருவரும் குளிப்பதைக் ஆனவந்த பல மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து பலியாயினர். மேலும் பிரம்மானந்தா என்கிற போலிச் சாமியாருடன் சசிகலா தொடர்பு வைத்து சில பூஜைகள் நடத்தினார் என்றும் பேசப்பட்டது. 

இந்த அவலங்களுக்குள் குறிப்பிடப் பட வேண்டிய அம்சம் “ வளர்ப்பு மகன் திருமணம். “ சசிகலாவின் உறவினரான சுதாகரன் என்பவரை ஜெயலலிதா தனது வளர்ப்பு மகனாக அறிவித்து அவருக்கு நூற்று கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தார். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் முதலமைச்சருக்கு இப்படி ஆடம்பரத் திருமணம் நடத்த எங்கிருந்து வந்தது பணம் என்று மக்கள் யோசிக்க ஆரம்பித்தனர். 

இப்படியே அடுத்த தேர்தல் வந்தது. இம்முறை தனது ஆடம்பரங்களால் மக்களின் நம்பிக்கையை இழந்த ஜெயலலிதா தோற்கடிக்கப் பட்டு காத்திருந்த கருணாநிதி முதல்வரானார். முதல்வரானதும், ஜெயலலிதா மேல் பல வழக்குகளைப் பாய்ச்சினார். போயஸ் கார்டன் தோட்டம் ஒரு சுப தினத்தில் சோதனையிடப் பட்டது. அங்கே கிடைத்தவைகளில் பல சொத்து, நகை பட்டுப் புடவைகள் இதர ஆவணங்களைஎல்லாம் விட முக்கியமானது குவியல் குவியலான ஒரு முறை மட்டுமே உபயோகப் படுத்தப் பட்ட செருப்புக்களாகும். 

ஜெயலலிதா கைது செய்யப் பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். நாடே அல்லோகலப் பட்டது. புகழ்பெற்ற நடிகையாக பழமொழிப் படங்களில் நடித்த ஜெயலலிதாவுக்கு இவை ஒன்றும் பெரிய சொத்தல்ல. ஆனால் எல்லா சொத்தும் முதலமைச்சர் ஆகுமுன்பே கைவிட்டுப் போன நிலையிலும் அரசியல் அம்பலத்தில் ஆடப் போகும் போது அதிகாரமும் கைவிட்டுப் போனபின் பிரச்னைகளை சமாளிப்பது சாமான்யமா?இந்த வழக்கின் சோதனையில் சிக்கிய ஜொலிக்கும் நகைகளையும் செல்வங்களையும் செருப்புக்களையும்  தொலைக் காட்சிகள் இரவு பகல் தொடர் நிகழ்ச்சியாக ஒளிபரப்பின. இந்த வழக்குகளின் தொடர்ச்சிதான் இன்று வரை பெங்களூர் தனி நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதாவுக்கு  எதிரான வருமானத்துக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்காகும். திருவளர்ச் செல்வி சேராத இடந்தனிலே சேராமல் இருந்திருக்கலாமோ  என்று சிந்திக்க ஆரம்பித்தார்.  

மீண்டும் அரியணை ஏறிய கலைஞர் காய்ந்த மாடு களங்களில் மேயப் புறப்படுவது போல் கட்சிக் காரர்களுக்கு ஆட்சியின் அனைத்துக் கதவுகளையும் திறந்துவிட்டார். தனது முந்தைய  தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்  கொள்ளத் தவறினார் முத்தமிழ் அறிஞர். மீண்டும் பழைய குருடி கதவைத்திறந்தாள். மக்களின் ஏகோபித்த வெறுப்பு அடுத்த தேர்தலில் தோல்வியைக் கொடுத்து வழக்குகளில் சிக்கி சின்னாபின்னப் பட்ட ஜெயலலிதாவை மீண்டும் அரியணை ஏற்றியது.   

அப்போது ஒரு சட்டச் சிக்கல் ஏற்பட்டது. பல கிரிமினல் வழக்குகளில் சிக்கி வழக்குகளை எதிர்கொண்டுள்ள ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்க முடியுமாஎன்ர சட்டச் சிக்கல் ஏற்பட்டது. நாடெங்கும் விவாதம். அப்போது தமிழ் நாட்டின் கவர்னராக இருந்தவர் கேரளா நாட்டின் முஸ்லிம் பெண்மணியான பாத்திமா பீவியாவார். சுப்ரீம் கோர்டில் நீதிதேவதையாக இருந்து கரை படாத கரங்களுக்கு சொந்தமான சட்டம் படித்த சம்பிரதாயங்களைத் தாண்டாதவர் என்று பெயர் பெற்றவர். வழக்குகளில் சிக்கி தண்டனைக்குக் காத்து இருக்கும் ஜெயலலிதாவுக்கு பதவிப் பிரமாணத்தை பாத்திமாபீவி செய்து வைக்க மாட்டார் என்று  நாடு எதிர்பார்த்தது, கலைஞரும் கொக்கரித்தார். ஆனால் அனைவரின் கண்ணிலும் மண்ணைத்தூவி விட்டார் பாத்திமாபீவி.  பாக்தாத் திருடன் என்கிற  திரைப் படத்தில் எம்ஜியாருக்கு ஒரு பெயர் சூட்டப் பட்டு இருக்கும். அந்தப் பெயர் தாங்கிய இடத்தில் தூவப் பட்ட விபூதியால் செய்வது அறியாது தவித்த பாத்திமா பீவி வாடிய முகத்தோடு காரில் வந்து இறங்கிய ஜெயலலிதாவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அலறினார் முத்தமிழ் வித்தகர். ஆனால் அந்த அலறல் யார் காதிலும் விழவில்லை. 

ஆட்சியில் அமர்ந்த  ஜெயலலிதா ஆர்வம் காட்டி கவனித்து அரங்கேற்றிய அரசியல் நாடகத்தின் பெயர்தான் “பழி வாங்கும் படலம்". நள்ளிரவில் காவல்துறையை ஏவிவிட்டு கலைஞரைக் கைது செய்ய வைத்தார். அதற்காக மேம்பாலம் கட்டுவதில் ஊழல்  என்ற ஓரங்க நாடகத்தை சித்தரித்தார். கைது செய்யப் படும்போது கருணாநிதி கதறிய கதறல் இன்னும் பலர் காதுகளில் ஒலிக்கின்றது. அதே தினம் மத்திய அமைச்சர்களான முரசொலி மாறன், டி.ஆர்.பாலு மற்றும் ஸ்டாலின் வரை கைது எனத் தொடர்ந்தது இந்த படலம். மத்திய அரசு தலையிட வேண்டியதாயிற்று. இந்த ஐந்தாண்டுகளின் ஆட்சியில் நாட்டு நலனை கவனிக்காமல் திமுகவினரை பழிவாங்கும் போக்குடன் பல முறை ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் வண்ணம் நடந்துகொண்ட ஜெயலலிதா, சர்ச்சைக்குரிய மதமாற்ற தடை சட்டம் போன்றவற்றையும் நிறைவேற்றினார். அத்துடன் எம்ஜியாருடைய பெயரையும் சிறுகச் சிறுக இருட்டடிப்புச் செய்தார். இதனால் மீண்டும் மக்களின் சாபத்துக்கு ஆளான ஜெயலலிதா அடுத்த தேர்தலில் மீண்டும் தோற்கடிக்கப் பட்டார். விளைவு.... / மீண்டும் கருணாநிதி ஐந்தாவது முறையாக முதல்வரானார். 

ஆட்சி பீடம் ஏறியதும் கருணாநிதி திரும்பவும் தனது கதை வசனத்தில் பழிவாங்கும் படலத்தை அரங்கேற்றுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இம்முறை கருணாநிதி வேறு வழியாக சிந்தித்தார். ஒரு வேளை இதுவே தனது இறுதிப் பதவிக்காலமாக இருக்கக் கூடும் என எண்ணினாரோ என்னவோ ஊழல் வெள்ளத்துக்குக் கதவுகளைத் திறந்துவிட்டார். ஆத்திலே போகிற தண்ணீரை அம்மா குடி அப்பா குடி என்று கட்சிக்காரர்கள் அள்ளி அள்ளிக் குடித்தார்கள். அரண்மனை போல வீடுகள், ஆடம்பரக் கார்கள், கல்வி நிலையங்கள், நில பேரங்கள், நில அபகரிப்புகள்  என கண்டபடி செல்வம் குவிய ஆரம்பித்தது. குறிப்பாக தனது குடும்பத்தைச் சார்ந்தோர் பலதுறைகளிலும் அரசியல் பதவி பெறவும், ரியல் எஸ்டேட் மற்றும் திரைப்படம் போன்ற பணம் கொழிக்கும் வணிகங்களில் ஈடுபடவும் வழி செய்து கொடுத்தார். கட்சிக்காக தியாகம் செய்தவர்கள் கண்டு கொள்ளப்படவில்லை. குடும்பத்தினர் தவறு செய்தால் அதை நியாயப் படுத்திப் பேச ஒரு கூட்டத்தையே வைத்து இருந்தார். இவை மக்களை சலிப்படையச் செய்தன.

இலவச அரிசி முதலிய பல நல்ல திட்டங்களால் மக்களைக் கவர முடியாமல் கருணாநிதி நடத்திய குடும்ப அரசியல் மத்திய மாநில அரசுத்துறைகளில் வரலாறு காணாத ஊழல் என்கிற குற்றச்சாட்டுகளை கருணாநிதியின் அரசியல் வாழ்வுக்குப் பின் அடுக்கிக் கொண்டே போனது. இந்த நிலையில் மீண்டும்  தேர்தல் வந்தது. கருணாநிதியின் சாதனைகளுக்கு மீறிய குடும்ப அரசியல் மீண்டும்  ஜெயலலிதாவை மூன்றாவது முறையாக இன்றைய முதல்வராக்கியது. காயிதே மில்லத், கருத்திருமன் போன்றவர்கள் இருந்த எதிர்க் கட்சித் தலைவர் பதவியை எம்ஜியார் மற்றும் ஜெயலலிதாவின் பிறப்பிடமான அதே கோடம்பாக்கத்தில் இருந்து வந்த விஜயகாந்த் ஏற்றுக் கொண்டார்.  

தமிழகத்தின் தலைவிதி  கருணாநிதியை விட்டால் ஜெயலலிதா, ஜெயலலிதாவை விட்டால்  கருணாநிதி என்று பதவி நாற்காலி சுழன்று கொண்டே வந்தது. ஆனால் தனது ஆட்சியின் தவறுகளில் இருந்து -மக்கள் பாடம் போதித்தாலும்- இவர்கள் பாடம் படி த்துக் கொள்ளவில்லை என்பதே வேதனையான உண்மை. 

இன்று சட்டமன்றம் நடைபெறுகிறது. உணமையான எதிர்க் கட்சியான திமுக ஒன்று வெளியேறுகிறது அல்லது வெளியேற்றப் படுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட மன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் நாற்காலிகளின் எதிரில் உள்ள மேசைகள்தான் ஒலி எழுப்புகின்றனவே தவிர உறுப்பினர்கள் பேச்சு மூச்சு இன்றி இருக்கிறார்கள் . அப்படியே பேசினாலும் அம்பிகையே ! ஈஸ்வரியே! எமை ஆளவந்த தேவதையே ! என்று புகழ் பாடுவதிலேயே பொழுது போய் விடுகிறது. இதைப் புன்னகையுடன் ஜெயலலிதாவும் ரசிப்பதால் தனிநபர் புகழ்ச்சி சட்டமன்றத்தில் பட்டொளி வீசிப் பறக்கிறது. 

இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். எம்ஜியாரோடு கதாநாயகியாக நடித்த அஞ்சலிதேவி, பானுமதி, பத்மினி, சரோஜாதேவி, லதா ஆகிய அனைவரும் ஒரு அளவுக்குப் பின்னர் திருமணம் முடித்துக் கொண்டு குடும்ப வாழ்வில் ஈடுபட்டு குடும்பத்தலைவிகளாக ஆகிவிட்டனர் .  ஆனால் வெண்ணிற ஆடை என்கிற திரைப் படத்தில் அறிமுகமான ஜெயலலிதாவுக்கு குடும்ப வாழ்வு கொடுத்து வைக்காத ஒன்றாகிவிட்டது. மனம் போன போக்கில் அவர் வாழ்ந்ததால் ஒரு நல்ல மனைவியாக, தாயாக, தரணியில் ஒரு குடும்பத் தலைவியாக மன அமைதியுடன் வாழவேண்டிய வாழ்க்கை அவரது கையை விட்டுப் போய்விட்டது. இதனால் விவேகானந்தர் போன்ற துறவிகளுடன் தன்னை தானே ஒப்பிட்டுப் பேசவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டு விட்டது. 

ஆனாலும்  அரசியலில் அவர் நுழைந்த காரணத்தால் அதற்குரிய நெளிவு சுளிவுகள் இன்று அவருக்கு அத்துப் படியாகிவிட்டன. அதற்காக  சில அரசியல் ஆலோசகர்களை தன்னுடன் வைத்திருக்கிறார். அவர்கள் இவருக்கு நல்லதைத் தவிர கெட்டதையே போதிக்கின்றனர்.   திரைப்படத்தில் வென்னிற ஆடையுடன் தொடங்கிய ஜெயலலிதா, அரசியலில் நுழையும் போதும்  அவர் எம்ஜியாரின் சவப் பெட்டியின் தலைமாட்டில் அவர் வெண்ணிற ஆடையே அணிந்து சோகமாக அமர்ந்து இருந்தே தொடங்கினார்.

தனி மனிதப் புகழ்ச்சிக்கு மயங்காமல், தன்னைச்சுற்றி இருக்கும் கூட்டத்தை கட்டுப் படுத்தி, பழிவாங்கும் படல நிகழ்வுகளை நிறுத்தி ஆள முற்படுவரானால் உண்மையிலேயே ஒரு சரித்திர நாயகியாக வரக்கூடிய வாய்ப்பு குடும்பம் குழந்தைகளற்ற  ஜெயலலிதாவுக்கு உண்டு. இன்னும் சொல்லப் போனால்   இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆக வரக்கூடியவராக இருக்கலாம் என்கிற பட்டியலில் இடம் பெறும் அளவுக்கு   தன்னை அரசியலில் நிலை நிறுத்தி வைத்திருக்கிற  ஜெயலலிதாவைப் பாராட்டவே வேண்டும். அதேநேரம் பழி வாங்கும் ஆயுதத்தை கைகளில் எடுத்து முந்தைய அரசின் நல்ல திட்டங்களை எல்லாம் முடக்கிப் போடுவது இவரது வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தவே செய்யும். 

உதாரணமாக ஆசியாவிலேயே பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை மூடிப் போட்டு வைத்து இருப்பது, பலகோடி ரூபாய் செலவழித்துக் கட்டப் பட்ட நவீன தலைமைச் செயலகத்தை வாழா வெட்டியாக்கி வைத்திருப்பது, எதிர்க் கட்சித் தலைவர்கள் மேலெல்லாம் அவதூறு வழக்குகளை ஏவிவிட்டு ஊருக்கு ஊர்  அலைக்கழிப்பது, வயது முதிர்ந்த முதியவர்கள் என்றும் பாராமல் குற்றம் சாட்டப் பட்டவர்களை நள்ளிரவில் சிறைவிட்டு சிறைக்கு மாற்றுவது போன்ற செயல்களை நிறுத்திக் கொண்டால் அது ஜெயலலிதாவின் பதவிக்கு கண்ணியம் சேர்க்கும். எதிர்க் கட்சித்தலைவர் விஜயகாந்த் மீது 34 ஊர்களின் நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு. அதே நேரம் எதிர்க் கட்சியில் இருந்து தனது கட்சிக்கு கட்சி மாறி வந்த நாஞ்சில் சம்பத் , பரிதி இளம் வழுதி ஆகியோர்  மீது போடப்பட்டு இருந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்ளும் போக்கு உண்மையான ஜனநாயகத்தை விரும்புவோர்க்கு இவர் மீது வெறுப்பை ஏற்படுத்தும் செயலாகும். 

இன்னும் பெங்களூர் நீதிமன்றத்தின் வழக்கின் தீர்ப்பை நாடே எதிர் நோக்கி இருக்கிறது. இது என்னவாகுமென்பது சசிக்கே வெளிச்சம். இந்தத் தீர்ப்பு தமிழக அரசியலை இன்னும் ஒரு புரட்டுப் புரட்டலாம்.  பார்க்கலாம்!  தருமபுரி போல் பேருந்துகள் எரிக்கப் படப்  போகின்றனவா  அல்லது அகர்வால் பவன் மற்றும் ஆனந்த பவனின் ஸ்வீட் பாக்கெட்டுகள் காலியாகப் போகின்றனவா என்பதை. 

இன்னும் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ். 

ஆக்கம்: P. முத்துப் பேட்டை  பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.

19 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நிறைய விசயம் தந்த காக்காக்களுக்கு நன்றிகள்!

இன்றைய பாரபட்சமிக்க சூழலில் வழக்கின் தீர்ப்பு ஸ்வீட்டாக இருக்கும் என்பதே நிச்சயம்.

Yasir said...

வாவ்...மெச்சதக்க எழுத்துநடை,சொல்வளம்,முத்துப்பேட்டைக்கே உரிய அளவான நையாண்டி..கட்டுரை ஜொலிக்கின்றது..நிறைய வரலாற்று சம்பவங்களை அள்ளி தருகின்றது....வாழ்த்துக்கள் சகோரரே

sabeer.abushahruk said...

க்ளாஸ்!!!

ஒரு அரசியல் பத்திரிகை நடத்துமளவிற்கு செய்திகள், சிந்தனை, ஆய்வு, அறிவுரை...

யபா...கலக்குறீங்க காக்காமார்களே

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா,கக்காஸ்

Ebrahim Ansari said...

//முத்துப் பேட்டை க்கே உரிய அளவான நையாண்டி// உண்மைதான் இந்த முத்துப் பேட்டைக் காரர்கள் இயல்பாகவே அப்படி த்தான். மருமகனார் யாசிர் சொன்ன அந்த மையத் திரும்பிப் படுக்கும் ஜோக் முத்துப் பேட்டை தயாரிப்புத்தானே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எல்லாமே அம்மா திட்டம் !

அம்மா (பெயர்) இல்லேன்னா

அம்மா திட்டும் !

KALAM SHAICK ABDUL KADER said...

வெண்ணிற ஆடையை வைத்து ஒப்பிடு மற்றும் இறுதி வரிகளிலும், கட்டுரையில் ஆங்காங்கேயும் நகைச்சுவையுடன் நடந்து வரும் எழுத்து நடையும் விறு விறுப்பான வாசிப்பை அள்ளி வழங்கின.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அரசியல் பேசாதீர்கள் என்று போர்டு போட்ட இடத்திலும் இந்த கட்டுரையை வாசியுங்கள் என்று கார்டு போடுவார்கள் !

எழுத்தின் நடை... கைபிடித்து அழைத்து செல்கிறது... பெங்களூர் வரை... :)

அழகாக ஆக்கினாலும் (பகுருதீன் காக்கா), ஊட்டி விட (இ.அ. காக்கா) இருக்கனும் !

crown said...

எல்லாமே அம்மா திட்டம் !

அம்மா (பெயர்) இல்லேன்னா

அம்மா திட்டும் !
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். திகட்டும் திட்டம்! ஆனால் திகட்டாத அபு.இபு காக்காவின் தமிழ்.

crown said...

அரசியல் பேசாதீர்கள் என்று போர்டு போட்ட இடத்திலும் இந்த கட்டுரையை வாசியுங்கள் என்று கார்டு போடுவார்கள் !

எழுத்தின் நடை... கைபிடித்து அழைத்து செல்கிறது... பெங்களூர் வரை... :)

அழகாக ஆக்கினாலும் (பகுருதீன் காக்கா), ஊட்டி விட (இ.அ. காக்கா) இருக்கனும் !
---------------------------------------------------------------------
ஆனாலும் எடிட்டராக்கா உங்களுக்கு ரொம்பத்தான் 'குளிர்விட்டுப்போச்சு!அனாலும் உண்மைதான் இ.அ காக்கா ஊட்டிவிட்டாள் ஒரே குளுமையும் ,இளமையும் நம்மை போர்வையாய் போர்த்தும்.

crown said...

பகுருதீன் காக்காவின் எழுத்துக்கு இதுவரை நான் கருத்து எழுதியதில்லை!காரணம் எழுத்து திறமையை வளர்த்துக்கொண்டே கருத்து எழுத நினைத்ததுண்டு! இப்ப கொஞ்சம் தேறிவருவதால் ஏதாவது எழுத ஆவல் கொண்டுள்ளுள்ளேன். விரைவில் இன்சா அல்லாஹ் என்னால் முடிந்த கருத்து கிறுக்கல் பதிவேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னு:

தி.மு.க.வை திட்டும் !
அம்மா திட்டம்..!
அடுத்த திட்டம்..!

குளிர்விட்டுப் போச்சா ?

மோடி எனும் கேடி சொன்னது !

"டமிலன் வேலை செய்யும் இடத்தை கோவிலாக்கிவிடுவானாம்"

இவரு பேசும்போதுதான் காஷ்மீரில் ராணுவ உடையில் சுட்டுவிட்டுச் சென்ற தகவல் கிடைக்கிறதாம் மவன அஞ்சலியும் செய்வார்களாம் !!!

எல்லாம் திட்டமிட்டு செய்யனும்னு என்னமா செயல் விளக்கம் பார்த்தியா ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///பகுருதீன் காக்காவின் எழுத்துக்கு இதுவரை நான் கருத்து எழுதியதில்லை!காரணம் எழுத்து திறமையை வளர்த்துக்கொண்டே கருத்து எழுத நினைத்ததுண்டு! இப்ப கொஞ்சம் தேறிவருவதால் ஏதாவது எழுத ஆவல் கொண்டுள்ளுள்ளேன். விரைவில் இன்சா அல்லாஹ் என்னால் முடிந்த கருத்து கிறுக்கல் பதிவேன். //

கிரவ்னு :

என்னாது ?

எழுதப் பழகுனியா ?

தேறிவருதா ?

ஓ... இதுவும் அம்மா திட்டமா ?

crown said...

உண்மைதான் இ.அ காக்கா ஊட்டிவிட்டாள் .
---------------------------------------------------------------------------
இந்த "ள்''லை நீக்கி சிறிய ''ல்'' போடவும், அவாளை அதான் அம்மாவை நினைத்துக்கொண்டே எழுதியதால் பெரிய "ள்" போட்டுவிட்டேன். இருந்தாலும் அவாளுக்கு பெரிய ஆள் என எப்பொழுதும் நினைப்பு.

Ebrahim Ansari said...

தம்பி கிரவுன்!

எந்த 'ள ' போட்டாலும் உங்கள்" லா" வே தனிதான். அதுதான் லல்லாலலால்லா என்று பாடத்தோன்றும் லா.

நல்ல வேலை "ஊட்டி" விட்டதாகச் சொன்னீர்கள். கொடநாட்டை சொல்லி இருந்தால் நான் தொலைந்தேன்.

வார்த்தைகளின் வடிவமைப்பாளர் ஒருவர் இப்போதுதான் எழுதப் பழகுகிறாராம். எல்லோரும் கேட்டுக் கொள்ளுங்கள்.

தன்னடக்கம் ஒன்று தன்னிலேயே தன்னை அடக்கிக் கொள்கிறது என்றுதான் நான் சொல்வேன்.

Ebrahim Ansari said...

//மோடி எனும் கேடி சொன்னது !

"டமிலன் வேலை செய்யும் இடத்தை கோவிலாக்கிவிடுவானாம்"//

அப்போ குஜராத்தி ஆளுகின்ற இடத்தை கொலைக் களமாக ஆக்கிவிடுவான் என ஒப்புக் கொள்கிறானா?

தமிழகத்திலே வந்து இந்தியிலே பேசுகிறார். அதை ஒரு அரைகுறை ராசா மொழிபெயர்க்கிறார்.

மாநாடு ஏதோ லேகியம் விற்க வந்தவன் பேசுவதுபோல் இருந்ததாக ஒரு முத்துப் பேட்டை நையாண்டி..

பல அடுக்குப் பாதுகாப்புக் கொடுத்த அன்புச் சகோதரிக்கு செலுத்திய நன்றியுரை " இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பனிரெண்டு மணிநேரம் மின்வெட்டு இருக்கிறது " என்கிற சாக்கடைச் சான்றிதழ்.

sabeer.abushahruk said...

கிரவுன்/ இ.அ.காக்கா,

எத்தனை அதிக விழுதுகள் விட்டு, வயதிலும் வடிவடிவத்திலும் எவ்வளவுதான் பெரியதாக இருந்தாலும்

ஆலமரத்திற்கு சின்ன 'ல' தானே போடுகிறோம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்று வரை...

சாதி, சமைய வேறுபாடுகள் அற்ற இந்தியாவை உருவாக்குவோம்'னு சொன்ன இந்தியர்கள்

இனி......

சாதி, சமைய, மோடி அற்ற இந்தியாவை உருவாக்குவோம்'னு சொல்ல வேண்டிய நேரம்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அம்மாவின் வழக்கு நடக்கும் பெங்களூரூலிம்... 'லா' பிரச்சினைதான்...

Anonymous said...

ஜெயலலிதா ஆட்சி நிழல் ஆட்சி அல்ல! H.G.Wells என்பவர் எழுதிய Invisible Man என்னும் விஞ்ஞான கற்பனைக் கதையில் ஒரு டாக்டர் ஆராச்சியின் மூலம் கண்டு பிடித்த மருந்தை வேறு ஒருவருக்கு கொடுத்து அவரின் ஆத்மாவை உடலை விட்டு நீக்கி அந்த உடலில் டாக்டர் தன் ஆத்மாவை செலுத்தி வேறு ஒருவரை கொலை செய்யும் கதைதான் H.G.Wells எழுதிய கதை. [கதையின் கரு] கரு சரியே ஆனால் அதை எழுதியவர் H.G.Wells தானா அல்லது Stevensonனா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. புத்தகதை தேடினேன். அது போன திசை தெரியவில்லை!]

இப்போ ஜெயா-சசி விசயத்தில் ஜெயாவின் உடலில் சசியின் உயிரா?
உருவம் இரண்டு! நிழல் ஒன்று! H.G.Wells அல்லது Stevenson / Science Fiction உண்மை ஆகிவிட்டதோ?

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு