Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தண்ணீரை வீண் விரயமாக்குவதைத் தடுக்க முடியும்! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | September 10, 2013 | , , ,

உணவு இல்லாமல்கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மனிதனால் ஓரிரு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது. தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பது என்ன என்று யோசித்தால், உடனடியாக நம் மனதில் தோன்றும் முதல் பிரச்சனை தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை. அது கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது. தேவைக்கு குறைவாக கிடைக்கிறது. இதனால் அண்டை மாநிலங்களோடு சண்டை, சச்சரவு ஏற்படுகிறது.

இயற்கையின் கொடையான தண்ணீர் உயிரின் ஆதாரம். இயற்கையின் விதிப்படி தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. தற்போது வாழும் மக்களுக்கு மட்டுமின்றி வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன் மீது உரிமை உண்டு. 

தண்ணீர் பற்றிய தகவலை நான் தேட ஆரம்பித்தது ஒரு கட்டாய சூழ்நிலையில் தான். ஏனென்றால் தற்பொழுது அதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு ஆங்காங்கே காண முடிகிறது, போர்வெல்களில் தண்ணீர் வரத்தில்லை, தண்ணீர் அடி மட்டம் கீழே இறங்கியுள்ளது ஆதலால் கம்பரசர் ஊதியே ஆக வேண்டுமென பலரும் இச்செயலில் செய்கின்றனர் காரணம் தண்ணீர் இல்லாமல் எந்தறொரு ஜீவனும் வாழ்வது கடினம். 

அன்று, கிணற்றினில் தண்ணீர் சாதரணமாக அள்ளலாம் அந்த அளவிற்கு தண்ணீர் நிறைந்து காணப்படும் மேலும் அள்ள அள்ள நீர் ஊறிக்கொண்டே இருக்கும் ஆனால் இன்று, கார்ப்பரேஷன் தண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் நம் பகுதிகளுக்கு வருகிறது என்பது சிறு ஆறுதல் தரக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம், வந்தோர்  தாகம் தணிக்க தண்ணீரும் இல்லை, சோகம் உரைக்க சொற்களும் இல்லை. 

வானிலை அறிஞர்கள் இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாது என்று சொல்லி வயிற்றில் புளி கரைத்திருக்கிறார்கள். தண்ணீர் ஒரு நாட்டின் ஜீவாதார பிரச்சனை, அதுதான் தனி மனிதனின் ஜீவாதார உரிமையும் கூட .வற்றாத ஜீவ நதிகளெல்லாம் வற்றும்வரை தண்ணீர் திருட்டு. வாழ வீடு கட்ட, வளம் கொழிக்கும் மணல் திருட்டு. வீட்டிலுள்ளோர், வெளியில் சென்று வந்தாலும், விருந்தினர் வந்து சேர்ந்தாலும் வந்தோரை வரவேற்று முதலில் உபசரிப்பது ஒரு குவளை தண்ணீர் கொடுத்து அந்நேரத்தில் தான் தண்ணீரின் முக்கியத்துவம் நமக்கு தெரிகிறது.

முந்தைய காலங்களில் (முன்னே என்றதும் பழங்காலத்துக்கு செல்ல வேண்டாம், 15-20 ஆண்டுகளுக்கு முன்னே ஆற்றங்கரை என்று அழைக்கப்படும் சி.எம்.பி லைன் வாய்க்காலில் தண்ணீர் வழிந்தோடும் ஆற்றில் சரியாக தூர்வாரப்படாமல் தெருக்களில் சிதறி பல நாட்களாக ஓடி பல குளங்கள் நிறையும் ஆனால் தற்போது அவ்வழியே துர்நாற்றம் வீசி தண்ணீர்க்கு பதில் சாக்கடை கால்வாய்களாக ஓடுகிறது என்பது வேதனையான விஷயம்,

இன்றைய தலைமுறை வற்றிய வாய்க்காலையும், ஆறையும், வானம் பார்த்த பூமியையும் வரலாற்றுச் சின்னங்களாய் பார்த்து வாய் பிளந்து நிற்கின்றனர். நாளைய தலைமுறைக்கு நாம் இவற்றையெல்லாம், நல்ல பல கதைகளாய், கவிதைகளாய், புவியியல் பாடத்தில் புள்ளிகளாய், கோடுகளாய் மட்டுமே சொல்ல இயலுமென்பதே இன்றைய நிலை. 

தமிழ்நாட்டில் விவசாயம் என்பதே இல்லாமல் போனாலும் ஆச்சர்யமில்லை . அரிசி ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யபடுகிறது, விலை உயர்வுக்கு காரணம் அதுதான். தமிழ்நாட்டில் தண்ணீர் இப்போது விற்பனை பொருள் , தண்ணீர் பாக்கெட் , தண்ணீர் பாட்டில் , தண்ணீர் கேன் என்று அது இப்போது பணம் பண்ணும் தொழில் என்றாகிவிட்டது. 

நம் பருவகாலத்தில் பலஞ்சூர், நசுனி, ராஜாமடம் போன்ற ஆறுகளிலும், செக்கடிக் குளம், செடியன் குளம், வெள்ளை குளம் மற்றும் ஆலடிக்  குளம் போன்ற குளங்களிலும் குளித்து அதன் கரையில் உள்ள மணலில் குதித்தோடி விளையாடி, மகிழ்ந்திருந்த காலம் மலையேறிப் போய்விட்டது. வற்றாத ஆறுகள் / குளங்கலெல்லாம், வசதி படைத்தோர், மணலை வாரிச்சுருட்டியப் பின் விட்டுச் சென்ற பள்ளங்கள் மட்டுமே, மனிதனின் உயிரைக்குடிக்க வாய் பிளந்து நிற்கின்றன வறண்டும் கிடக்கின்றன. 

நதிகள் ஒன்றாக இணந்தால் வெள்ள அபாயம் இருக்காது, நல்ல மழை பெய்த மாநில தண்ணீர் வறட்சி பாதித்த மாநிலத்திற்கு போய் சேரும் அந்த மாநில தண்ணீர் பிரச்சனையும் தீரும் , சமூக ஆர்வலர்கள் சுற்று சூழல் நிபுனர்கள் சமூக அமைப்புகள் நதிகள் இணைப்பை வலியுறுத்துகிறது , அது அவசர அவசியம் என்கிறார்கள் , ஆனால் எல்லா அரசும் ஆமாம் அவசியம் என்று சொல்லிவிட்டு அதற்கு எத்தனை ஆயிரம் கோடி செலவாகும் என்று சொல்லி ஒதுங்கி விடுவார்கள்.

ஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம். நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை  மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான். 

பருவமழை பொய்த்தது என்பது நமது தண்ணீர் தாகத்திற்கு காரணம் அல்ல. பெய்த மழை நீரை நாம் தேக்கி வைத்து கொள்ள எந்த ஏற்பாடும் செய்து கொள்வதில்லை, இதனால் பெய்த மழை நீரின் முக்கால் பங்கு கடலில் கலந்து வீணாகிறது என்பதுதான் நிஜம். வீட்டில் மழை நீர் சேமிப்பின் அவசியத்தை அரசு சொன்னதே பத்து வருடங்களுக்கு முன்புதான். இப்போது கூட கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் சரிவர தூர் வாரபடுவதில்லை, இதனால்தான் தண்ணீர் பிரச்சனை. ஆனால் தூர் வாரியதாக பொய் கணக்கு எழுதமட்டும் தவறுவதில்லை, இதனால் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிறைந்து வழிந்து கடலில் கலந்து விடுகிறது . இதுபற்றி எந்த அரசும் அக்கறைபட்டதும் இல்லை. கவலைபட்டதும் இல்லை.

அதிரையில் அதிகளவில் உப்பு விளைகிறது தண்ணீர் தேக்கமில்லாத காரணத்தால் அனைத்து தண்ணீரும் கடலோடு கலக்கின்றன, இந்தியாவின் இருபத்தைந்து சதவிகித மாவட்டங்களில் தண்ணீர் உப்பு அதிகமாகி விட்டது . அது மட்டுமல்ல நமது தண்ணீரில் இரும்பு தாது அதிகமாகி விட்டது என்கிறது நீர்வள அமைச்சகம். அதுமட்டுமல்ல ஈயம், குரோமியம் , காட்மியம் போன்ற கனிமங்களால் தண்ணீர் மாசுபட்டிருக்கிறது என்று தனது அறிக்கையில் நீர்வள அமைச்சகம் மிரட்டுகிறது, உலக அளவில் பார்க்கும் போது கூட இந்தியாவின் நீர்வளம் பெருமை பட்டு கொள்வது போல் இல்லை. மோசமான நிலைதான் , உலக மக்கள் தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை பதினாறு சதவிகிதம், ஆனால் இந்தியாவின் நீர்வளம் வெறும் நான்கு சதவிகிதம் தான் , நிலத்தடி நீர் ஏற்கனவே குறைந்துவிட்டது தற்போது மேற்பரப்பு நீரும் குறைந்து விட்டது என்கிறார்கள் நீர்வள நிபுனர்கள் .

இப்படியே போனால் என்ன ஆகும்? நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. பொதுவாக, நிலத்தின் அடியில், நீர் அடுக்கு(water table)க்கு சற்று கீழே, சில நூறு அடிகளில் நிலத்தடி நீர் பொதிந்து கிடக்கிறது. இந்த நிலத்தடி நீரை அக்யூபர் (aquifer) என்று நீர்வள நிபுணர்கள் சொல்கிறார்கள். அதற்கு கீழே, ஒரு அடுக்குக்கு பிறகு, ஆழ்நிலை உப்புத் தண்ணீர் களம்(deep salty aquifer) உள்ளது. சில நூறு அடிகளில் இருக்கும் நிலத்தடி நீரை, நாம் முற்றிலுமாக இறைத்துவிட்டால், அந்த இடத்திற்கு ஆழ்நிலை உப்புத் தண்ணீர் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்த தண்ணீர் கடல் நீர் போலத்தான். இதனை நமது அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்துவது மிகவும் கடினம்.

மக்களுக்கு பாதுகாக்கபட்ட சுகாதாரமான குடிநீர் வழங்காமல் இந்தியா வல்லரசு என்று சொல்லி கொள்வது பெருமையான விஷயம் அல்ல.

அதிரை தென்றல் (Irfan Cmp)

22 Responses So Far:

Shameed said...

கொஞ்சம் இருங்க தண்ணி குடிச்சிட்டு வாரேன்

Anonymous said...

நீங்க இவளவு சொல்றிங்க! ஆனா, டாஸ்மாக் கடைலே தான் தட்டுப்பாடு இல்லாமே தண்ணி கிடைக்கிதாமுலோ!

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம். நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான். //

சபாஷ் !

எல்லோருக்கும் இருக்கும் கவலை, எழுத்தில் பதிந்து தனது பங்கை எடுத்துரைத்திருக்கிறது பதிவு !

M.B.A.அஹமது said...

சகோதரர் இர்பான் அவர்களின் சமூக விழிப்புணர்வு பாராட்டுக்குரியது அவரது தண்ணீர் பற்றிய தேடல் நம் அனைவரையுமே சிந்திக்க வைக்கிறது .நமூதுரில் தொடங்கி இந்திய நாடு வரை அவரது கவலை அவரது தேச பற்றை பறை சாற்றுகிறது . இன்னும் கொஞ்சம் நிலத்தடி நீர் போனால் உப்பு தண்ணீர் அதை சென்னை போன்ற நகரங்களில் தற்போது அனுபவிக்கிறோம் .மாற்று வழி மரம் வளர்ப்போம் மழை நீர் சேகரிப்போம் .அல்லாஹ் தால்லாஹ் குர்ஆனில் சொல்லி இருப்பது போன்று அதன் வழியில் தண்ணீரை விரயம் பண்ணாமல் பாதுகாப்போம் .வாழ்த்துக்கள் அருமை சகோதரர் இர்பான் அவர்களே .

M.B.A.அஹமது said...

///நீங்க இவளவு சொல்றிங்க! ஆனா, டாஸ்மாக் கடைலே தான் தட்டுப்பாடு இல்லாமே தண்ணி கிடைக்கிதாமுலோ!///


மூத்த காக்கா இது தங்களுக்கே உரிய நகைச்சுவை .இதுவும் சகோதரர் இர்பான்னின் விழிப்புணர்வு போன்றே ஒரு விழிப்புணர்வு தான் .நமூதுரில் ஒன்றுக்கு மூன்று கடை வந்துவிட்டது என்றும் அதை தடுப்பதர்ர்க்கு மக்கள் போராட்டங்கள் நடத்திகொண்டிருப்பதாக அறிகிறோம் அதை ஒரே வரியில் நகைச்சுவையுடன் விழிப்புணர்வை அவர்களின் கவலையை வெளிபடுத்துவதில் எங்கள் பாரூக் காக்காவுக்கு இணை உண்டா


sabeer.abushahruk said...

தம்பி அதிரை தென்றலின் பதிவில் ஈரமிருக்கிறது.

அதென்னவோ தெரியவில்லை. தண்ணீர் ஆதாரமே இல்லாத பாலைவனங்களான வளைகுடாவில் எனக்குத் தெரிந்து ஒருமுறைகூட குடிதண்ணீர் பிரச்னை வந்ததேயில்லை ஆனால் ஆயிரெத்த்கெட்டு நீராதரங்கள் உள்ள நம்நாட்டில் குடிக்கவும் தண்ணி இல்ல கு.க.வும் தண்ணியில்ல.

KALAM SHAICK ABDUL KADER said...

குளங்களில் இல்லைத் தண்ணீர்
குளங்களாய்ப் போனது கண்ணீர்!

இப்னு அப்துல் ரஜாக் said...

"ஆற்று நீராக இருப்பினும்,தண்ணீரை வீண் விரயம் செய்ய வேண்டாம்"

மா மனிதர் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் ஹதீஸின் கருத்து.

Unknown said...

வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள்.- அல்-குரான்


அது ஆற்றுநீரோ குளத்து நீரோ கடல் நீரோ
வீண் விரயத்திலிருந்து விலகி நிற்போம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தம்பி இர்ஃபான், அருமையான விழிப்புணர்வு தந்தமைக்கு ஜஸக்கல்லாஹ் ஹைரா..

// வீட்டில் மழை நீர் சேமிப்பின் அவசியத்தை அரசு சொன்னதே பத்து வருடங்களுக்கு முன்புதான்.//

மழைநீர் சேமிப்புத்திட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள்... ஆனால் அந்த திட்டம் எந்த ஒரு வீட்டிலும் செயல்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியே...

என்றைக்கு காவேரி ஆற்றை தாயாக வைத்து கடவுளாக்கினார்களோ என்று அல்லாஹ்வின் கோபப்பார்வை ஏற்பட்டிருக்கலாமோ என்ற எண்ணத்தோன்றுகிறது. அவனே நமக்கு எல்லா செல்வ செழிப்புகளையும் தந்தான். அவனே அதை குறைத்துக்கொண்டான், அவனே அவைகளை திருப்பித்தருபவன். இன்ஷா அல்லாஹ்..

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...


அருமையான விழிப்புணர்வு தந்தமைக்கு ஜஸக்கல்லாஹ் ஹைரா.

Ebrahim Ansari said...

//பருவமழை பொய்த்தது என்பது நமது தண்ணீர் தாகத்திற்கு காரணம் அல்ல. பெய்த மழை நீரை நாம் தேக்கி வைத்து கொள்ள எந்த ஏற்பாடும் செய்து கொள்வதில்லை, இதனால் பெய்த மழை நீரின் முக்கால் பங்கு கடலில் கலந்து வீணாகிறது என்பதுதான் நிஜம். வீட்டில் மழை நீர் சேமிப்பின் அவசியத்தை அரசு சொன்னதே பத்து வருடங்களுக்கு முன்புதான். இப்போது கூட கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் சரிவர தூர் வாரபடுவதில்லை, இதனால்தான் தண்ணீர் பிரச்சனை. ஆனால் தூர் வாரியதாக பொய் கணக்கு எழுதமட்டும் தவறுவதில்லை, இதனால் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிறைந்து வழிந்து கடலில் கலந்து விடுகிறது . இதுபற்றி எந்த அரசும் அக்கறைபட்டதும் இல்லை. கவலைபட்டதும் இல்லை.//

அருமையான உணமையான கருத்து.

தமிழகத்தில் இருந்த மொத்த ஏரி , குளங்கள் 39,202. இவற்றில் இப்போது இருப்பதாக எண்ணிச் சொல்லப் படுவது 31,000 . முந்தைய குளங்களின் மொத்த நீர் கொள்ளளவு 3,90,000 மில்லியன் கன அடி தண்ணீர். தற்போதைய கொள்ளளவு சுமார் 2,10,000 கன அடி தண்ணீர். அப்போதைய பாசனப் பரப்பு 1.01 மில்லியன் ஹெக்டேர் இப்போதோ 0.5 மில்லியன் ஹெக்டேர்.

நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க, அவற்றைப் பயன்படுத்துவோர் அல்லது பயன் படுத்தும் தேவையில் இருப்போர் ஆகியோரின் பங்களிப்பு மிக முக்கியம். ஆனால் வீட்டில் வரும் ஒரு வாளி தண்ணீரில் குளித்து விட்டு ETERNAL -for men ஸ்ப்ரேயை அடித்துக் கொண்டு வெளியில் வரும் பண்பாடு வளர்ந்து வரும் இந்தக் காலத்தில் நம் கண்முன்னே வறண்டு கிடக்கும் குளங்களை நமக்கு நாமே உதவிசெய்து தண்ணீர் கொண்டு நிரப்ப முடியாதா? முயன்றால் முடியும். ஆனால் நேரமில்லை. அடுத்த இயக்கத்தைச் சார்ந்தவன் பற்றி மொட்டைப் பெட்டிஷன் போட வேண்டும். சொந்த சகோதரனைக் காட்டிக் கொடுக்கவேண்டும். ஒரு காரியமும் இல்லாமல் பாலத்து சுவற்றில் உட்கார்ந்து கொண்டு கூடிக் கூடி பேசிக்கொண்டே கழுவாத டீ கிளாசில் இருப்பதை ஊதி ஊதிக் குடிக்க வேண்டும்.

உதாரணமாக அந்த அந்த முஹல்லாவாசிகள் ஒன்றிணைந்து முயன்றால் எல்லாக் குளங்களும் நீரால் நிரம்பி வழிய வழி பிறக்கும்.

ZAKIR HUSSAIN said...

//என்றைக்கு காவேரி ஆற்றை தாயாக வைத்து கடவுளாக்கினார்களோ//

நான் மணல் லாரியை கொண்டு வந்து ஆற்றை தோண்டி எடுத்து காசு பார்க்கும்போது நீங்கள் வந்து பங்கு கேட்டால் என்ன செய்வது...இப்படி தாய் / கடவுள் என்று சொன்னால் தானே மற்றவன் வரமாட்டான்.

ஆனால் தாய் / பூமி மாதா / கடவுள் என்று சொல்லிக்கொண்டே தாயின் இதயம் / கண் எல்லாம் புடுங்கி விற்றுவிடுவோம். இந்த தாய் செத்தால் அடுத்த தாயின் காலடியில் கடை விரித்து பிஸ்னஸ் ஆரம்பித்து விடுவோம்.

ஆற்றில் தண்ணீர் வராமல் விவசாயி சாவதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை..இருக்கவே இருக்கிறது தந்தூரி சிக்கன்னும், நன் ரொட்டியும்.


தொட்டுக்கொள்ள சாராயமும் பணப்பெட்டியை வாங்கிக்கொண்டு கையெழுத்துப்போட்டுத்தர அரசியல்வதியும் அதிகாரிகளுக் இருக்க இனிமேல் கவலை ஏது.

வந்தே மாதரம்

adiraimansoor said...


//இந்தக் காலத்தில் நம் கண்முன்னே வறண்டு கிடக்கும் குளங்களை நமக்கு நாமே உதவிசெய்து தண்ணீர் கொண்டு நிரப்ப முடியாதா? முயன்றால் முடியும். ஆனால் நேரமில்லை. அடுத்த இயக்கத்தைச் சார்ந்தவன் பற்றி மொட்டைப் பெட்டிஷன் போட வேண்டும். சொந்த சகோதரனைக் காட்டிக் கொடுக்கவேண்டும். ஒரு காரியமும் இல்லாமல் பாலத்து சுவற்றில் உட்கார்ந்து கொண்டு கூடிக் கூடி பேசிக்கொண்டே கழுவாத டீ கிளாசில் இருப்பதை ஊதி ஊதிக் குடிக்க வேண்டும்.

உதாரணமாக அந்த அந்த முஹல்லாவாசிகள் ஒன்றிணைந்து முயன்றால் எல்லாக் குளங்களும் நீரால் நிரம்பி வழிய வழி பிறக்கும்.///

இப்ராஹிம் அன்சாரி காக்காவின் சிந்தனை துளிகள் எல்லொருக்கும் வந்துவிட்டால் தண்ணீர் தானாக வந்துவிடும்
சகோதரர் இர்பான், தண்ணீர் பற்றி இதற்கு முன்பு பதிந்த ஹிதாயத்துல்லா போன்றோரின் மனக் குமுறல்கள் ஓய்ந்துவிடும்

தண்ணீர்! தண்ணீர்!! தண்ணீர்!!!
அந்தி சாயும் நேரத்திலே தண்ணீர்
பாயும் நதிக்கரை யோரத்திலே
பறவையினம் இசை எழுப்ப
பனிமலர்கள் நடனமிட
நாத வண்டினங்கள் பண்ணிசைக்க
அசைந்தாடிச் சென்ற காலங்கள் இனி வருமா
அப்படி ஒரு காலம் இனிமேல் மீண்டும் வந்தால்
அதன் இன்பம்
எல்லை இல்லா உலகுக்கு நம்மை இழுத்துச்செல்லும்

adiraimansoor said...

உயிரின் தோற்றத்திற்கும் உலகின் எல்லா வளங்களுக்கும் மூலம் தண்ணீர். மனித உடலின் பெரும்பகுதி தண்ணீர். தண்ணீர் இல்லையேல் உணவு உற்பத்தி இல்லை, உயிரில்லை. மண்ணும் காற்றும்கூட தண்ணீரின்றேல் வறண்டு போய்விடும். எல்லா இயற்கை வளங்களுக்கும் மனித வளத்திற்கும் தாய் வளம் தண்ணீர். "தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே' என்ற முதுமொழியின் பொருள் இதுதான்.

adiraimansoor said...

பூமியைத் தவிர பிற கோள்கள் எதிலும் உயிரினம் இல்லை. புல் பூண்டு கூட இல்லை. காரணம், அங்கெல்லாம் தண்ணீரில்லை. நீரின்றி அமையாது உலகு! இயற்கையின் விதிப்படியே தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும், இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. அது எந்தவொரு தேசத்தின் தனிச் சொத்துமல்ல; உலகின் பொதுச் சொத்து. தற்போது வாழும் தலைமுறைக்கு மட்டுமல்ல, வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன்மீது உரிமை உண்டு.


அத்தகைய தண்ணீரை ஒரு சில முதலாளிகளின் லாபத்திற்காகத் தனிஉடைமையாக்குவதும் காசுக்கு விற்கும் கடைச்சரக்காகக் கருதுவதும் மாற்றுவதும் அநீதி! சமூக விரோத, மக்கள் விரோதக் கொடுஞ்செயல்!

adiraimansoor said...

அரிசியோ, துணியோ விற்றுத் தீர்ந்துவிட்டால் அவற்றை நாம் உற்பத்தி செய்து கொள்ளலாம். உற்பத்தியின் அளவையும் உயர்த்தலாம். ஆனால், தண்ணீரை அவ்வாறு உற்பத்தி செய்ய முடியாது; அளவையும் கூட்ட முடியாது.


தண்ணீருக்கு மாற்று இல்லை. அரிசி இல்லையென்றால் கோதுமை உண்ணலாம். சில நாட்கள் பட்டினியும் கிடக்கலாம். சைக்கிள் இல்லையென்றால் நடந்தும் செல்லலாம். ஆனால், தண்ணீர் இல்லையென்றால் உயிர்வாழ முடியாது. தண்ணீருக்கு எவ்வித மாற்றுப் பொருளும் இல்லை.

Ebrahim Ansari said...

தம்பி M.B. A அஹமது அவர்கள் கூறுவது

//நமூதுரில் ஒன்றுக்கு மூன்று கடை வந்துவிட்டது என்றும் அதை தடுப்பதர்ர்க்கு மக்கள் போராட்டங்கள் நடத்திகொண்டிருப்பதாக அறிகிறோம்//

ஆமாம் உண்மைதான் மூன்று திசைகளிலும் கடைகள் அதுவும் ஊருக்குள் நுழையும் முன்பே. நான்காவது திசையில் கடை இல்லை காரணம் அங்கே இருப்பது கடல்.

மிகப் பெரிய வெட்ககேடான விஷயம் என்னவென்றால் பெருநாள் தினங்களில் அமோக விற்பனையாம். கல்லா நிரம்பி வழிகிறதாம்.

மக்கள் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருப்பதும் உண்மைதான். போராட்டம் நடத்திய களைப்புத் தீர, தாக சாந்தி செய்துகொள்ளச் செல்வதும் உண்மைதான்.

உருப்படியான விஷயம் ஒன்றுமே நடைபெறவில்லை. மக்களிடம் சமூக பொறுப்புணர்வு இல்லை. குடிதண்ணீருக்காக குடங்களைத்தூக்கிகொண்டு தாய்மார்கள் அலைவது ஒரு காட்சி. எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்ப கூளங்கள். குளங்கள் யாவும் மழைக்காலத்தில் கூட வற்றி வறண்டு கிடக்கின்றன.

ஒரு அறிவுப் புரட்சி- ஒட்டு மொத்த விழிப்புணர்வு - ஏற்படாதவரை ஒன்றுமே நடக்காது.

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
காலத்தின் ஓட்டத்தில் எழுந்த சிந்தனை தாகத்துக்கு ஒரு தூண்டுகோள் இந்த ஆக்கம். ஒருகாலத்தில் இனப்படுகொலை,பொருளாதார பேரிழப்பு இப்படிபட்ட காரனிகளுக்காக பிற நாட்டில் அகதி,தகுதி(???????????)பெற்றகாலம் மாறி இந்தியர்கள் எங்கள் நாட்டில் நீர் இல்லை என அண்டை நாட்டில் தஞ்சம் புகும் அளவே இந்தியாவின் நீர் பஞ்சம் இருக்குமோ??? அல்லாஹ்தான் காப்பாற்றனும்.

Yasir said...

வழக்கம்போலவே தென்றல் சமுக அக்கறையுள்ள ஆக்கத்தை தந்து இருக்கின்றது...நம்மூரில் இரத்த அழுத்த நோய் சாப்பிடுவதால் மட்டும் வருவதில்லை...எப்ப தண்ணி வரும் எப்ப தண்ணி வரும் என்று நேரம் காலம் பார்க்கமல் நம்வீட்டு பெண்கள் முழித்து விழித்து ஒரு குடம் தண்ணீருக்காக தூக்கத்தை தொலைப்பதாலும் வருகின்றது..இந்த முறை விடுமுறையில் இத்தண்ணீர் பிரச்சனையை நன்றாக அனுபவித்தேன்....இந்த தண்ணீர் தட்டுபாடுநால புதுமாப்பிள்ளை பெண்ணை பிரித்து வைக்கும் சம்பவங்களும் நடந்த்துள்ளது நம்மூரில் குளிக்க தண்ணி இல்லாமா :)

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் ஜசக்கல்லாஹ் ஹைர்...

இது என்னால்லான சிறு முயற்சி இதை இங்கே மிகபெரிய எழுத்தாற்றல் மிகுந்த வல்லுனர்கள் நிறைந்த தளம் இதை தொடர்ந்து எழுதக்கூடிய தொடராகவும் அமைத்து வரும் சந்ததினர்கள் பயன்பட்டு அவர்கள் தெரிந்துக்கொள்ளும் வகையில் நூலாக மாற்ற முடியும்.

மேலும் எடிட்டராக்கா அவர்களுக்கும் கருத்தின் மூலம் பல தகவல்களை தந்த காக்காமார்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியுனை தெரிவித்துக்கொள்கிறேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு