நேற்று (5-செப்டம்பர்-2013) அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்தது.
மாலை நான்கு மணியளவில் மாணவர்கள் அனைவரும் திரண்டு வகுப்பு வாரியாக அமர, ஆசிரியர் தின நிகழ்ச்சிகள் சிறப்பாக ஆரம்பமாயின.
கிராத் ஓதியதற்குப் பிறகு தமிழ்த்துறைத் தலைவர் அஜ்முதீன் அவர்கள் சிறப்பான வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சிகளை தமிழ்த்துறையின் உதவி ஆசிரியர் உமர் பாரூக் அவர்கள் இனிய கவிதையில் தொகுத்து வழங்கினார்.
வரவேற்ரபுரையைத் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹாஜி மஹ்பூப் அலி அவர்கள் தலைமை உரை ஆற்றினார். அவர் தமது உரையில் அதிரை நிருபர் இணைய தளத்தின் நன்றி பாராட்டும் செயல்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கும் அன்புக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். அத்துடன் பள்ளியின் முன்னேற்றத்துக்காக உதவ நினைக்கும் அனைத்து தரப்பினரின் உதவிகளையும் நாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து பள்ளியின் உதவித்தலைமை ஆசிரியர் ஜனாப். ஹாஜி முகமது அவர்கள் பள்ளியின் சாதனைப் பட்டியலை வாசித்தார். மாணவர்களின் வெற்றி விகிதம் மற்றும் தனிப்பட்ட ஆசிரியர்களின் சாதனைகளை அவர் குறிப்பிட்ட போது மாணவர்களின் கரவொலி விண்ணைப் பிளந்ததது.
தொடர்ந்து வாழ்த்துரை ஆரம்பமானது. பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜி ஹாஜா முகைதீன் அவர்கள் தனது வாழ்த்துரையில் இனிய தமிழில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இருக்க வேண்டிய நல்ல உறவின் முக்கியத்துவம் பற்றியும் டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்களின் வாழ்வின் சாதனைச் சம்பவங்களையும் குறிப்பிட்டார்.
அதனைத்தொடர்ந்து இணைய தள எழுத்தாளரும் அதிரைநிருபர் வலைத்தளத்தின் மூத்த பங்களிப்பாளருமான அ.இப்ராஹீம் அன்சாரி அவர்கள் சிறப்புரையை ஆற்றினார். அவர் தமது உரையில் தனது பள்ளி வாழ்வின் சில ஆசிரியர்களையும் குறிப்பாக விழாவுக்கு வருகை தந்த திரு. ரங்கராஜன் சார் அவர்களைப் பற்றியும் பாராட்டிப் பேசி தனக்கு வழங்கப் பட்ட நினைவுப் பரிசை திரு ரங்கராஜன் சார் அவர்களுக்கு அணிவித்து அனைவரையும் மகிழச்செய்தார். நெகிழ்ச்செய்தார். மாணவர்களிடம் கல்வி, முயற்சி, இறைவனின் அருள் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமைந்தால் வெற்றி பெறலாம் என்பதை குறிப்பிட்டார்.
பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட பட்டி மன்றப் பேச்சாளர் சகோதரர் அண்ணா சிங்கார வேலு அவர்கள் தனக்கே உரித்த்தான நகைச்சுவை மற்றும் சிந்திக்கவைத்த செய்திகளால் மாணவர்களின் உற்சாக கரகோஷத்தை பெற்றார்.
அதிரைநிருபர் வலைதளத்தால் கவுரவித்து வழங்கப் பட்ட “நபிகள் நாயகம்” என்கிற வரலாற்று நூலையும் நினை வுப் பரிசையும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு முத்த பங்களிப்பாளர் அ.இப்ராகிம் அன்சாரி வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் அதிரை அறிஞர் பன்னூலாசிரியர் அதிரை அகமது, பேராசிரியர் அப்துல் காதர், கணிணி தமிழ் அறிஞர் ஜமீல் M.ஸாலிஹ், மூத்த சகோதரர் S.முகமது பாரூக். நாவலர் நூர் முகமது, பெற்றோர் சங்க தலைவர் செய்யது, எல்.எம்.எஸ். அபூபக்கர், ஷேக்கனா நிஜாம், ஆகியோரும் முன்னாள் ஆசிரியர்கள் ரங்கராஜன் மற்றும் ஹனிபா சார் அவர்களும் கலந்துகொண்டார்கள். காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் ஜனாப். உதுமான் முகைதீன் அவர்களின் வருகையும் குறிப்பிடத்தக்கது. ஏராளமான பொது மக்களும் வருகை தந்திருந்தனர்.
நிகழ்ச்சிகளை மீடியா மேஜிக் சகோதரர் நிஜாம் அவர்கள் அதிரைநிருபர் சார்பாக பதிவு செய்தார்கள்.
ஆசிரியர் தினம் பற்றிய கவிஞர் சபீர் அவர்களின் கவிதை படி எடுத்து அனைவருக்கும் வழங்கப் பட்டது.
நன்றியுரை மற்றும் நாட்டுப்பண்ணுக்குப் பின் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
மிகவும் உணர்ச்சிகரமான இந்த நிகழ்ச்சி ஒரு பெரும் ஊக்கமாக அமைந்தது என்று அனைவரும் போற்றினர்.
நிகழ்வுகளின் காணொளி விரைவில் பதிக்கப்படும் இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் பதிப்பகம்
14 Responses So Far:
மாஷா அல்லாஹ்!
இதற்காக ஆரம்பம் முதல் கடுமையாக உழைத்த இப்றாகீம் அன்சாரி காக்கா அவர்களுக்கு நன்றியும் அவர்களின் ஆரோக்யத்திற்கும் ஆயுளுக்கும் என் துஆவும்.
ஆரிய வம்சாவழி
அறியாமை விதைக்க
அந்தச்சதி அழித்தொழிப்பது
ஆசிரிய வம்சமன்றோ!
இந்த விழாவின் முக்கியமான அடிப்படையான அம்சம் மாணவர்களின் உற்சாகமான ஒத்துழைப்பு. ஒவ்வொரு அறிவிப்புக்கும் அவர்கள் எழுப்பிய கரவொலி. இந்த அளவுக்கு அவர்களின் ஆசிரியர்களின் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு கலந்த மரியாதை. நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் நிறைவு வரை கலந்து போக முயற்சிக்காமல் கட்டுக் கோப்பாக இருந்து நிகழ்ச்சிகளை உன்னிப்பாக கவனித்த இந்த மாணவச் செல்வங்களுக்குத்தான் முதல் பாராட்டு.
அதிரை நிருபர் வலைதளத்தின் சார்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் அப்துல் ரகீம் எழுதிய நபிகள் நாயகம் என்கிற வரலாறு புத்தகமும், நினைவுப் பரிசாக ஆசிரியர்களில் ஆண்களுக்கு வெள்ளை சட்டைத் துணியும் பெண் ஆசிரியர்களுக்குப் பொன்னாடையும் பார்சல் செய்து வழங்கப் பட்டது. இது இந்த நிகழ்ச்சியின் ஹை லைட். வானத்தில் இடிமுழக்கம் போல் கரவொலி.
மகிழ்ச்சியில் சில ஆசிரியர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பலரின் உதடுகளில் பெருமிதமான சிரிப்பு.
இது ஒரு ஆரம்பம். இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆண்டு அனைத்து தரப்பிலும் இணைந்து இதை இன்னும் வெற்றிகரமான நிகழ்வாக நடத்திட வேண்டுமென்ற ஆசையை முன்வைக்கிறேன்.
ஆலோசனைகள் வழங்கி ஊக்கப் படுத்திய தம்பி சபீர் அவர்களுக்கும், நெறியாளர் அவர்களுக்கும் நான்தான் நன்றி சொல்ல வேண்டும். எல்லாப் புகழும் இறைவனுக்கே.
நிகழ்ச்சிகளை நின்றுகொண்டே பொறுப்புடன் பதிவு செய்த தம்பி நிஜாம் அவர்களுக்கும் நாம் அனைவரும் பாராட்டும் நன்றியும் தெரிவிக்க வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து எமக்கு கல்வி பயிற்றுவித்த ஆசான்களை கவுரவப் படுத்த வேண்டும் என்ற ஆவல் எனக்கும் உண்டு வெளிநாட்டில் இருந்துகொண்டு சாத்தியமற்று போனது கொஞ்சம் வருத்தம்
எனினும் இந்த நல்ல நிகழ்வை சிறப்பாக நடத்த பக்க பலமாக இருந்த அதிரை நிருபர் மற்றும் நெரியாளர், முதன்மை பங்களிப்பாளர்கள், மூத்த சகோ. இப்ராஹீம் அன்சாரி காக்கா, கவிஞர் சபீர் காக்கா இன்னும் ஊரில் இருந்து இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் வாழ்த்துக்களும் துஆவும் என்றென்றும் உரித்தாகட்டும்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் அனைவரும் ஒன்றிணைந்து இதை விட வெற்றிகரமாக நடத்த அனைவரும் ஒரு கரமாக முயல்வோம்
வஸ்ஸலாம்
ஜபருல்லாஹ்
காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்.
//இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் அனைவரும் ஒன்றிணைந்து இதை விட வெற்றிகரமாக நடத்த அனைவரும் ஒரு கரமாக முயல்வோம்//
இன்ஷா அல்லாஹ் ! அவசியம் செய்யனும் !
திட்டமிட்ட செயல்பாடு, திறம்பட உக்குவிப்பு, அனுமதியும், அனுசரனையும் அணைபோடாத அறிவுரைகள் ! பணிவான பரிந்துரைகள், சட்டென்று ஏற்றுச் செய்யும் பெருந்தன்மை !
இப்படியாக பலசூழல்களுக்கிடையே சிறப்புடன் செய்த எங்கள் பிரியமிக்க இ.அ.காக்கா அவர்களுக்கும், எங்களோடு என்றும் ஒன்றியே இருக்கும் அன்புச் சகோதரர் மீடியா மேஜிக் நிஜாம் அவர்களின் பங்களிப்பும், மற்றும், பரிசளிக்க புத்தகங்களை ஏற்பாடு செய்த சகோதரர் அவர்களுக்கும் எங்கள் நன்றி என்றும் நிலைத்திருக்கும் இன்ஷா அல்லாஹ் !
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், அனைத்து ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவர்கள், அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் எங்கள் நன்றி என்றும் உரித்தாகட்டும்!
கவிக் காக்காவின் கவிதை சுற்றரிக்கையாக அனைவருக்கு செல்ல இருக்கிறது என்ற கூடுதல் தகவல் எங்களை மகிழ்வில் ஆழ்தியிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் !
தனி மின்னஞ்சல், சாட்டிங்க் மற்றும் அலைபேசி என்று பல்வேறு வகையில் தொடர்பு கொண்டு ஆர்வமூட்டிய நண்பர்களான எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவ மாணவிகள் அனைவருக்கும் நன்றிகள் !
நிகழ்வின் சிறப்பு : பரிசளித்த வாத்தியாருக்கே அதே பரிசை நினைவு பரிசாக அதனை வழங்கிய ஆசானுக்கே வழங்கியதுதான் !
இறைவன் நாட்டப்படி இனிதே நிறைவுற்ற ஆசிரியர் தின விழா
மென்மேலும் வருங்காலங்களிலும் சிறப்புற்று நடைபெற
வாழ்த்துகின்றேன்.
அன்புடன்
அபு ஆசிப் அப்துல் காதர்.
உயர்திரு.ரெங்கராஜன் சார் அவர்களின் கற்பிக்கும் திறனால், நூலைப் படிக்காமலே, அவர்கள் நடத்தும் வகுப்பில் அமைதியாக- உன்னிப்பாகக் கவ்னித்து வந்தால் அப்படியே அதனைத் தேர்வில் எழுத முடியும் என்கின்ற அளவுக்கு மிகவும் திறமையான- நகைச்சுவையான- சமய நல்லிணக்கம் போதிக்கக் கூடிய பேராற்றல் உள்ளவர்கள். அவர்களை ஒவ்வொரு முறையும், விடுப்பில் தாயகம் செல்லும் போதில் காண்கிறேன், இம்முறை நீண்ட நேரம் உரையாடினேன்; என்னுடைய உரையை அவர்கள் செவி மடுத்து , என் பேச்சின் ஒவ்வொரு வரிகட்கிடையிலும் விழி நிரம்ப ஆனந்தம் அடைந்ததும்; என்னைக் கட்டியணைத்து வாழ்த்தியதும் இன்றும் என் நினைவில் நிழலாடுகின்றன.
இவர்களைப் போன்ற நல்லாசிரியர்கட்கு அரசு விருது வழங்கவில்லை என்ற குறையை நிவர்த்தி செய்யும் வண்ணம், இ.அ. காக்கா அவர்கள் “நல்லாசிரியர் விருது” ஆகவே தனக்கு வந்த நினைவுப் பரிசினை அன்னார்க்கு வழங்கி மதிப்பளித்துள்ளார்கள்!
இப்படிப்பட்ட விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்ற பேரவா எனக்கும் நீண்ட நாட்களாக உண்டு. இதனை சென்ற முறை விடுமுறையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹாஜி மஹபூப் அலி அவர்களிடம் இக்கருத்தைச் சொன்னேன்; ஆயினும், நாம் அயல்நாட்டில் இருப்பதால் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பைத் தவற விட்டு விடுகின்றோம். இருப்பினும், என் உறவினரும், அப்பள்ளியின் முன்னாள் மாணவரும், நாவலருமான நூர்முஹம்மத் அவர்கள் கலந்து கொண்டது தமியேன் கலந்து கொண்டதைப் போன்ற ஓர் உணர்வில் ஆறுதல் அடைகிறேன்.
விழாவினைச் சிறப்பாக அமைத்துக் கொடுத்து வெற்றிகரமாக்கிய அனைவர்க்கும் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்த்தலைவனான அடியேனின் உளம்நிறைவான நன்றிகள்!
நிகழ்வு மகிழ்வு தந்தது போல், " நபி நாயகம் " வரலாற்று நூலைப் பெற்றவர்கள் படித்து அதன் பிரதிபலனை அடைந்து அதன் மூலம் நற்செய்தி விரைவில் பெற ஆவல். இன்சா அல்லாஹ்.
//கவிக் காக்காவின் கவிதை சுற்றரிக்கையாக அனைவருக்கு செல்ல இருக்கிறது என்ற கூடுதல் தகவல் எங்களை மகிழ்வில் ஆழ்தியிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் !//
சுற்றறிக்கையாக மட்டுமல்ல கால இறைவணக்க கூட்டத்தில் சபீர் அவர்களின் கவிதை வாசிக்கப் படுமென்றும் தமிழ்த்துறைத்தலைவர் மற்றும் பள்ளியின் தலைமைஆசிரியர் கூறினார்கள்.
நபிகள் நாயகம் என்ற தலைப்பிட்ட நூலை வழங்கியவர் எனது அருமை நண்பர் முத்துப் பேட்டை அல் மஹா அறக்கட்டளை யின் நிறுவனர் ஹாஜி . ஹைதர் அலி அவர்கள் ஆவார்கள். அவர்களுடைய ஆதரவில் பெண்களுக்கான ஒரு அரபிக் கல்லூரி, தையல் பயிற்சி நிலையம், கணிணி வகுப்புகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதன் முதல்வராக நமது பாசத்துக்குரிய அதிரை அஹமது காக்கா அவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இன்ஷா அல்லாஹ் வரும் ஆண்டில் பல முன்னாள் மாணவர்கள், இணைய தளங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இன்னும் சிறப்பாக நடத்த இறைவன் துணை இருப்பானாகவும்.
//கவிக் காக்காவின் கவிதை சுற்றரிக்கையாக அனைவருக்கு செல்ல இருக்கிறது என்ற கூடுதல் தகவல் எங்களை மகிழ்வில் ஆழ்தியிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் !//
பள்ளியின் பழைய மாணவன் என்ற முறையில்
சபீரின் கவிதை அப்பள்ளியிலேயே ஆசிரியர் தின விழாவில்
சுற்றறிக்கையாக அனைவரின் கையிலும் தவழ இருப்பது
கூடுதல் மகிழ்ச்சியை தருகின்றது.
இப்ராஹிம் அன்சாரி அண்ணன் அவர்கள் ஊரில் இருக்கும் காலத்தை இது போல் நல்லவிதமான விழாக்களில் செலவழிப்பது நல்லது.
நம்மை சரியான முறையில் எங்கேஜ் செய்யாவிட்டால் வீட்டு வாசலில் அதிகாலையில் ' "காக்கா...கிடாய் வெட்ட ஆள் வந்துடுச்சாம் உங்களை கூப்பிடுராங்க" என்ற சத்தமும் , யாரோ ஓடிப்போனதற்கு நாம் வேலை மெனக்கட்டு உட்கார்ந்து பஞ்சாயத்து பேச வேண்டிய சூழ்நிலையும் இருக்கும். அந்த சமயத்தில் அவர்கள் வீட்டில் தரும் 'பேயறஞ்ச மாதிரி" யான டீயையும் குடித்து தொலைக்க வேண்டியிருக்கும்.
மிஞ்சிப்போனால் நன்றாக படிக்கும் பெண் பிள்ளைக்கும் ஊரில் வெட்டியாக திரியும் பையனுக்கும் [பையன் துபாய்க்கு "ஏத்திவிட்டா" கிழித்து விடுவார் எனும் நம்பிக்கை நட்சத்திரம்] நிச்சயம் செய்ய அசரிலிருந்து - மக்ரிப் வரை சாப்பிட்ட கேசரி செரிக்காமல் அழைய வேண்டி வரும்.
எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் படித்து கொடுத்த ஆசிரியருக்கே பரிசு வழங்கும் வாய்ப்பு.
//அந்த சமயத்தில் அவர்கள் வீட்டில் தரும் 'பேயறஞ்ச மாதிரி" யான டீயையும் குடித்து தொலைக்க வேண்டியிருக்கும். //
இதைப் படித்ததும் ! 'இஞ்சி தேத்தனி குடித்த சுறு சுறுப்பு" அதிகாலையிலேயே...
// கேசரி செரிக்காமல்// எங்கிருந்துதான் வருகிறதோ இந்த ஊற்றுக்கள். ? தம்பி ஜாகிர் நீ எங்களுக்குக் கிடைத்த இறைவன் தந்த பரிசு.
Post a Comment