Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று! இன்று ! நாளை! – தொடர் 26 26

அதிரைநிருபர் பதிப்பகம் | January 23, 2014 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும். 

அன்பான சகோதரர்களே! தொடரின் ஆரம்பமாக, இந்தத் தொடரை கடந்த இருபத்தி ஐந்து வாரங்களாகப் படித்துவரும் உங்கள் அனைவருக்கும் ஜசாக் அல்லாஹ் ஹைரன். நெஞ்சார்ந்த நன்றி. தொடரலாம். 

அனைத்துக் கட்சிகளின் சார்பாக இப்படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால் எப்படி இருக்கும் ?

காங்கிரஸ்: அய்யாங்கோ! அம்மாங்கோ! எங்க பஜாருக்கு வாங்க! ஒன்று எடுத்தால் இன்னொன்று இனாம்! எங்களோடு கூட்டணி அமைக்க வாங்க! கொலைகார பஜாருக்குப் போய் கூட்டணி அமைக்காதீங்க! எங்க கட்சி நூறாண்டுகள் கடந்த கட்சி! அறுபத்தி அஞ்சு வருஷம் ஆண்டிருக்கோம். காந்தியும் நேரும் இருந்த கட்சி. மவுலானா அபுல் கலாம் ஆசாத் தலைமை ஏற்ற கட்சி! நாற்பத்திமூனு வயது இளைஞர் ராகுல் காந்தி தலைமையில் வாங்க! வாங்க! உட்கார்ந்து பேசலாம். முதுகுக்கு முட்டுக் கொடுக்க தலையணைகள் உள்ளன. 


பா .ஜ. க : மாதாஜி! பாபாஜி! ஆவோ ஜல்தி! ஒண்ணா இருந்து கூடிப் பேசி கூட்டணி அமைக்கலாம். ஊழல காங்கிரஸ் பக்கம் போகாதீங்க. எங்க பக்கம்தான் உங்களுக்கு நல்ல டீ கிடைக்கும். எடியூரப்பா இருக்கிறார் என்று கவலை வேண்டாம். நீங்கள் எங்களுடன் கூட்டணி சேர்ந்தால் எலும்புக் கூடு மாலை போட்டு வரவேற்போம். சிட்பண்டு நடத்தி எப்படி தப்பிப்பது என்று சொல்லித் தருவோம். வாங்க! வாங்க! (இரண்டாவது வாங்க என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு அது நாங்கள் பெரிய கம்பெனிகளில் இருந்து கணக்கில் காட்டப்படாமல் நாங்க வாங்கும் தொகையிலிருந்து உங்களுக்கும் தரப்படும்!) 


உதிரிக் கட்சிகள் : இவ்வளவு நாள் காங்கிரசும் பிஜேபி யும் ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா? வாங்க! வாங்க! மூன்றாவதாக நாம் கூட்டணி அமைப்போம். நம்ம கூட முலாயம் சிங் யாதவும் மாயாவதியும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் லல்லுவும் நிதிஷ் குமாரும் மம்தாவும் ஜெகன்மோகனும் சந்திரபாபு நாயுடுவும் இருக்காங்க! இவர்கள் எல்லோரும் ஒருத்தரை ஒருத்தருக்குப் பிடிக்காது என்று கவலை வேண்டாம். எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு "வஸ்து" பத்திரமாக "பெட்டி"யில் இருக்கிறது. வேண்டுமானால் விஜயகாந்த் இருக்கவே இருக்கிறார். வாங்க! வாங்க!

கம்யூனிஸ்டுகள்: வாருங்கள் தோழர்களே! ஊழற்ற ஆட்சியை இந்தியாவில் அமைப்போம் ! ஜெயலலிதாவை பிரதமாராக்குவோம். பெங்களூரை மறப்போம்! திரிபுராவை மறப்போம்! கேரளத்தை மறப்போம்! மேற்கு வங்கத்தை மறப்போம்! புத்ததேவ் பட்டாச்சார்யாவும் அச்சுதாநந்தனும் நமக்கு வேண்டாம்! போயஸ் தோட்டத்தை நினைப்போம்!

=)0(==)0(==)0(==)0(==)0(==)0(==)0(==)0(==)0(==)0(==)0(==)0(==)0(==)0(=

இவைகளப் பார்த்த படித்த மக்கள்: அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை வர்ற திருவிழா வருது! கொஞ்சம் பணம் வரும் . நாலஞ்சு நாளக்கி பிரியாணிப் பொட்டலம் வரும். எல்லாரும் ஜனநாயகத்தைக் கூறு போட ஆரம்பிச்சிட்டாங்க. அகப்பட்டது மிச்சம். யாரு துட்டு கூடுதலாக் கொடுக்குறாங்க்களோ அவங்களுக்குப் போட்டுட வேண்டியதுதான். 

பார்த்தீர்களா இன்றைய ஜனநாயகத்தின் தலைவிதியை? ஜனநாயகம் என்கிற உயர்ந்த தத்துவம் என்கிற பூமாலை அரசியல் அளப்பறை என்கிற குரங்குகளின் கைகளில் . கொள்கை வேண்டாம், ஒத்த கருத்துக் கூட வேண்டாம் ஆனால் கூட்டணியாகச் சேரலாம் என்கிற தத்துவம் . அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது நிரந்தப் பகைவனும் கிடையாது என்று வசதிக்கு ஏற்ப ஒரு தத்துவம் . ஜனநாயகம் என்கிற குதிரையை குரங்காக்கும் தத்துவம். அதற்கு அடுத்த தத்துவம் கொச்சை மொழியில் கவுண்டமணி பாஷையில் “ இதெல்லாம் சகஜமப்பா”. மிஞ்சிப் போனால் உயர்ந்த பட்ச தத்துவம் அரசியல் ஒரு சாக்கடை என்று யாரோ ஒரு மேல்நாட்டு அறிஞன் சொன்னது.

ஹோட்டலில் சாப்பிடப் போனால் வாழை இலையில் கூட்டு வைப்பார்கள். ஆங்கில் காய்கறிகளும் நாட்டுப் புறக் காய்கறிகளும் ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாமல் இருந்தாலும் சமைக்க வசதியாக இருக்கும். சாப்பிடவும் சுவையாக இருக்கும். இந்த ஹோட்டல் கூட்டு, உணவுக்கு ருசியானது. ஆனால் இந்த அரசியல்வாதிகளின் கூத்து அதாவது கூட்டணி நாட்டுக்கு நலமானதா? ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி அரசியலை பலகீனமாக்கி, அசிங்கத்தை அனைத்துக் கட்சியினரும் இன்னும் அசிங்கப் படுத்தியே வருகிறார்கள். தாமும் தமது சந்ததிகளும் பிழைக்க, அடாதுடி செய்தாவது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துவிடவேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு காய்களை நகர்த்தி வருகின்றனர். 

அன்பர்களே! இன்றைய அரசியல் நிலையில் வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது – தனியாக ஆட்சி அமைக்க முடியாது என்கிற சூழ்நிலையில் “பண்ணைக் கட்சிகள்” என்று அழைக்கப்படுகிற பெரிய கட்சிகள் உதிரிப் பூக்களை தாங்கள் அமைக்கும் கூட்டணி மாலையில் கதம்பமாக சேர்ந்து கொள்ளும்படி அழைக்கின்றன. அதற்கான விலையை அவர்கள் தரவும் இவர்கள் பெறவும் தயாராகி இருக்கின்றனர். 

சிறிய கட்சிகளோ, வந்த வாய்ப்பையும் அத்துடன் வரும் பெட்டியையும் விட்டுவிடக் கூடாது என்று உடனே ஒப்புக் கொண்டுவிடுகின்றனர். இதற்கு உதாரணம் பிஜேபி யுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி அறிவிப்பு. இவ்விரு கட்சிகளும் கூட்டணி சேர்வது தென்னை மரத்தில் தேங்காய் காய்ப்பதற்கு பதில் தேள் காய் காய்ப்பதற்கு ஒப்பானது. இதற்கு முன் திராவிட முன்னேற்றக் கழகம் பிஜேபியுடன் சேரவில்லையா என்று ஒரு கேள்வி நமக்குள் எழலாம். ஆனால் அன்றைக்கு ஒரு குறைந்த பட்ச செயல்திட்டம் வகுக்கப் பட்டது. அதன்படி இராமர் கோயில் அது இது என்று மூச்சுக்கூட விடமுடியாமல் இருந்தது. 

இன்று மதிமுக பிஜேபியுடன் சேர்வதற்காக எந்த சேது சமுத்திரத்திட்டத்துக்காக பல முறை குரல் கொடுத்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் எடுத்துச் சொல்லி அந்தத் திட்டம் துவங்க உறுதுணையாக இருந்த வைகோ தான் பெற்ற அந்தப் பிள்ளையை வங்காள விரிகுடாவில் வைத்துக் கழுத்தறுத்துக் கொலை செய்து இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளார். அதுமட்டுமல்ல தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் காரணமாக ஏற்படும் சுற்றுச் சூழல் கேடுகளை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியவர் வைகோ. இன்று வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு வாயடைத்துப் போயிருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். 

மேலும் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழர்களுக்கு எதிராகப் பேசிவந்த பிஜேபியின் முக்கிய தலைவர் சுப்ரணியன் சுவாமி. தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேக்கு பாரத ரத்னா வழங்க வேண்டுமென்றும் பேசியவர் . வைகோ எப்படி யாருமறியா வண்ணம் யாழ்ப்பாணம் சென்று பிரபாகரனை சந்தித்து வந்தாரோ, அப்படி சுப்ரமணிய சுவாமியும் சென்று ராஜபக்சேயுடன் கலந்துரையாடிவிட்டு வந்தவர். அப்படிப்பட்ட சுவாமி முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருக்கும் பிஜேபியுடன் , பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறார் வரவேண்டிய நேரத்தில் வருவார் என்று “கேப்பையிலே நெய்வடியும்” கருத்துக்களை காய்ச்சித் தந்து கொண்டிருக்கும் வைகோ கூட்டணி சேர்ந்து இருக்கிறார். 

இதில் இன்னொரு முக்கிய விஷயம் மதிமுக வும் பாட்டாளி மக்கள் கட்சியும் தேச விரோதக் கட்சிகள் அதனுடன் கூட்டணி வைப்பது கூடாது என்று சுப்ரமணியம் சுவாமி சொல்வதையும் மீறி தமிழக பிஜேபி தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் , மதிமுகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டது என்று அறிக்கைவிடுகிறார். வைகோ அதை ஆமாம் என்கிறார். அநேகமாக முதன்முதலில் அறிவிக்கப் பட்ட கூட்டணி இதுதான். விந்தையிலும் பெரிய விந்தையடி சிந்திக்க முடியாத எங்குமே காணாத விந்தையிலும் பெரிய விந்தையடி என்று பழைய பாடல் ஒன்று உண்டு. அதுதான் இது.

இது ஒரு பக்கம் . இன்னொரு பக்கம் என்ன வென்றால் கம்யூனிஸ்டுகள் சொல்லும் கதை இருக்கிறதே அது அரபியனின் ஆயிரத்தொரு இரவுகளின் கதைகளையும் விக்கிரமாதித்தன் கதைகளையும் விஞ்சிவிடும். அதாவது ஜெயலலிதா தான் அடுத்த பிரதமராக வரவேண்டுமென்பது தமிழக கம்யூனிஸ்டுகள் ஊடகங்கள் எங்கும் முழங்கி வரும் முழக்கமாகும். ஆனால் அகில இந்திய கம்யூனிஸ்டுகளின் தலைவரான பிரசாந்த் கரந்தோ அல்லது சீதாராம் யச்சூறியோ இதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் மூன்றாவதாக ஒரு அணி அமையும் அதுவே ஆட்சியையும் அமைக்குமென்று சொல்கிறார்கள். தமிழக கம்யூனிஸ்டுகள் ஜெயலலிதா அடுத்த பிரதமாராக வரவேண்டுமென்று சொல்வது ஏனென்றால் அவர்களின் கருத்துப்படி, காங்கிரஸ் ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சியாகிவிட்டது- அந்நிய முதலீடுகளுக்கு வழி திறந்து விட்டது–விலைவாசி ஏறிவிட்டது – ஆகவே காங்கிரஸ் ஆட்சி தொலைய வேண்டுமென்று கூறுகிறார்கள். ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய வாதம்தான். ஆனால் ஊழல் மிகுந்த காங்கிரஸ் ஆட்சியை நீக்கிவிட்டு அதற்கு பதில் அவர்கள் கொண்டுவர வேண்டுமென்று நினைப்பது யாருடைய ஆட்சியை? ஒரு ரூபாய் சம்பளத்திலேயே அறுபத்து ஆறு கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக வழக்கு நடைபெற்று – வருடக் கணக்காக இழுத்தடிக்கப்பட்டு தீர்ப்புக்காக காத்து இருக்கும் அம்மையார் ஜெயலலிதாவை அல்லவா?

மன்மோகன் சிங்குக்குஅல்லது காங்கிரஸ் கட்சிக்கு மற்றும் மோடிக்கு எதிராக ஒரு மாற்றுப் பிரதமரை கொண்டுவரவேண்டுமென்று தமிழக கம்யூனிஸ்டுகள் நினைக்கும் பட்சத்தில் அவர்களின் நினைவுக்கு கேரளத்தின் அச்சுதனந்தனோ, பரதனோ, வங்காளத்தின் குருதாஸ் குப்தாவோ, புட்ட தேவ பட்டச்சரியாவோ, சீதாராம் யச்சூறியோ, பிருந்தா அல்லது பிரசாந்த் கரந்தோ நினைவுக்கு வராமல் போனது என்? அவர்களெல்லாம் அரசியலில் பழம் தின்று கோட்டை போட்டவர்கள் அல்லவா? கம்யூனிஸ்டுகளின் கண்ணை மறைப்பது எது? அதிமுக கூட்டணியால் கிடைக்கும் ஒரு இடம்தானே! அது கூட நிச்சயம் இல்லையே! ஆகவே இதுவும் ஒரு விந்தைக் கூட்டணி. ஆனால் இன்னும் அறிவிக்கப் படவில்லை. 

இந்திய நாட்டின் அரசியல் பலகீனப் பட்டதற்கு முதல் காரணம் காங்கிரஸ். இப்படிப் பட்ட பலகீனத்தை காங்கிரசுக்குத் தேடி வைத்தவர் இந்திரா காந்தி. உதாரணம் காமராசரை ஒழிக்க முதலில் திமுகவுடன் கூட்டு. பிறகு திமுகவை ஒடுக்க எம்ஜியார் காலத்தில் அதிமுகவுடன் கூட்டு. அதைத் தொடர்ந்தவர் ராஜீவ காந்தி பின் அவரது வம்சாவழிகள். 

இந்திய நாட்டின் அரசியல் பல்கீனப்பட்டதற்கு இரண்டாவது காரணம் பிஜேபி. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியுடன் பார்ட்னர்ஷிப் ஆட்சி. பீகாரில் நிதிஷ் குமாருடன் பயமுறுத்தும் ஆட்சி என்றெல்லாம் பலவாறு சத்தீஸ்கர் , ஜார்கண்ட் போன்றவற்றில் பிஜேபி செய்த அரசியல், கடந்த காலங்களில் ஜனநாயகத்தை பயமுறுத்தும் அரசியல். 

நமது நாட்டின் அரசியலில் இன்று காங்கிரசின் பலம் என்ன? தென்னாட்டைப் பொருத்தவரை கேரளத்தில் விட்டது பாதி தொட்டது பாதி. கர்நாடகத்தில் தப்பிப் பிழைத்து எடியூரப்பா தயவால் மாநில ஆட்சியைப் பிடித்தது. இப்போது பிஜேபியின் மோடி முன்னிறுத்தப் படுவதன் சதிகளின் ஒரு அங்கமாக எடியூரப்பா மீண்டும் பிஜேபியுடன் இணைந்தது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். தலை தப்பினால் கர்நாடகத்தில் தம்பிரான் புண்ணியம். ஆந்திரத்தில் “ சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி “ என்கிற கதை. தெலுங்கானா அமைக்கிறேன் என்று புலிவாலைப் பிடித்த கதை. ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்து பிறகு பேரம் பேசி வெளியில் விட்டு அவர் இன்று காங்கிரசுக்கு எதிராகப் போர்க்கொடி பிடித்து இருக்கிறார். தெலுங்கு தேசம் பிஜேபியுடன் பேசி வருகிறது. தெலுங்கு தேசக் கலவரத்தில் மத்திய அமைச்சராக இருந்த சிரஞ்சீவி ராஜினாமா செய்துவிட்டார். தமிழ்நாட்டில் நமக்கெல்லாம் தெரிந்த கதை. காங்கிரஸ் அனாதையாக விடப் பட்டு இருக்கிறது. 1967- ல் தோற்கடிக்கப்பட்ட காங்கிரஸ் நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் அரசியல் உலகில் அனாதையாக ஆனது மற்றொரு விந்தை. 

அதே நேரம் தென்னாட்டில் பிஜேபியின் நிலைக்கு ஒரு பெரிய சைபர் போடவேண்டும். கர்நாடகத்தில் ஆட்சியை மட்டுமல்ல ஆபாசமான நடத்தைகளால் அரசியல் மரியாதையும் இழந்துவிட்டது. கர்நாடகத்தைப் பொருத்தவரை பிஜேபிக்கு பாரதீய ஜல்சாப் பார்டி என்று பெயர் வைத்துவிட்டார்கள். ஆந்திரத்தில் இவர்கள் பெயருக்குப் போடும் கடிதம் முகவரியில் யாருமில்லை என்ற குறிப்புடன் திரும்பி வந்துவிடுகிறது. கேரளத்தில் பெயரை சொன்னாலே தலையைத் தொங்கப் போடுமளவுக்கு அங்கு கிருத்தவ மற்றும் முஸ்லிம்களின் சிறுபான்மையினரின் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. தமிழகத்தில் ஏதோ தங்களுக்குப் பெரும் ஆதரவு இருக்கிறது – மோடி அலை வீசுகிறது என்றெல்லாம் காசுக்கு ஆள் பிடித்துக் கூட்டம் கூட்டிக் காட்டி கோமாளி வேஷம் போட்டு உதிரிக்கட்சிகளை ஒரு கொள்கை இல்லாமல் கோட்பாடு இல்லாமல் உசுப்பிவிட்டுக் கொண்டு இருக்கிறது. மேடையில் மைக் பிடித்துப் பேசக்கூட ஆள் பிடிக்கவேண்டிய நிலை . ஆனால் கார்பரேட் முதலாளிகளின் தயவில் ஊடகங்களில் பேச்சுக்கள் பெரும் பேச்சுக்களாக இருக்கின்றன. மதுரை முனியாண்டி விலாசுக்குக் கூட ஊருக்கு ஊர் ஹோட்டல் இருக்கிறது பிஜேபிக்கு ஒரு பெட்டிக் கடை கூட இல்லை. தொலைக் காட்சிப் பெட்டியில் நடக்கும் விவாத அரங்கினில் சவுண்டு ராஜன்களின் சத்தம் போட்டும் வானதிகளின் வார்த்தைஜாலமும் ஏதோ இன்றே நரேந்திரமோடி பிரதமர் பதவியில் வந்து உட்கார்ந்துவிட்டதைப் போல அலறுகிறார்கள். இவையெல்லாம் அமெரிக்க டாலர்களின் அனுசரணையில் பத்திரிகைகளிலும் பல்லிளிக்கும் இதர விளம்பர ஊடகங்ளும் அரசியல் விளையாட்டு நடத்த உதவுமேயன்றி ஓட்டு வந்து விழாது.

மதிமுகவை மாய்மாலம் செய்த பிஜேபி பாமக மீது பாசமழை பொழிந்து வருகிறது. கொங்கு நாடு முன்னேற்றக் கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி என்கிற கடிதத்தாள் கட்சிகளையும் நோக்கி வலை வீசி இருக்கிறது. தேமுதிகவின் கடைக்கண் பார்வைக்குக் காத்துக் கிடக்கிறது. ஒரு தேசியக் கட்சி – நாட்டை ஆண்ட கட்சி இவை போன்ற வலைவீசித்தேடவேண்டிய நிலையில் இருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சி போன்ற கட்சிகளுக்கும் வலைவீசுவதற்கு பிஜெபிதான் வெட்கப் படவேண்டும். காரணம் கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத்தூக்கி மனையில் வைக்க வேண்டுமென்ற ஆவல். நிராசையாகப் போக இருக்கும் நீர்க்குமிழி ஆசை. 

வடநாட்டை எடுத்துக் கொண்டால் காங்கிரசை நான்கு மாநிலங்கள் ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலில் “தலாக்” சொல்லிவிட்டன. காஷ்மீரில், இராணுவ அத்துமீறல்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிக் கூட்டணிக்கு எப்படி மீண்டும் வாக்கு கிடைக்கு மென்று புரியவில்லை. திரிபுரா, பீகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் , அசாம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனித்து நிற்கவே முடியாது. வலுவான கூட்டணி தேவை. இதே நிலைதான் பிஜேபிக்கும். 

கோவா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் , அருணாசலப் பிரதேசம் , நாகாலாந்து , இமாச்சலம், டில்லி ஆகிய மாநிலங்களில் பிஜேபிக்கு சற்று வெற்றி கிட்ட வாய்ப்புண்டு. மஹாராட்டிரத்தில் சரத் பவாரை சார்ந்து இருந்தால் மட்டுமே காங்கிரசுக்கு ஓரளவு வாய்ப்பு உண்டு. உத்தரகாண்டத்தில் வாய்ப்புகள் சமநிலையாக இருக்குமென்று சொல்லப்படுகிறது. குஜராத்? வட்டிக்கடை அதிபர்களும் பெரும் முதலாளிகளும் கோடி கோடியாகப் பணமும் கொட்டிக் கிடக்கும் குஜராத்தில் – முஸ்லிம்களும் அஞ்சி முடங்கிக் கிடக்கும் நிலையில் – தனது மாநிலத்தவர் பிரதமர் என்ற உணர்வில பிஜேபி மீண்டும் வெற்றி பெறும்.

ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது. மோடி பிரதமர் என்கிற பிஜேபியின் கனவு தவிடு பொடியாகும். டில்லி பஹூத் தூர் ஹை பாய் என்று நாடே சொல்லும். மதசார்பற்ற மாநிலக்கட்சிகளின் ஆதிக்கமே ஓங்கும். மத சார்பற்ற மாநிலக் கட்சிகள்ஆன மாயாவதியின் பி எஸ் பி, முலாயம் சிங்கின் சமாஜ்வாடி, உமர் பாரூக்கின் தேசிய மாநாடு, நிதிஷ் குமாரின் ஜனதா தளம், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் , மம்தாவின் திருநாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலில் தாங்கள் தனித்து நின்றாலும் தேர்தலுக்குப் பிறகு காங்கிரசுக்கு ஆதரவு தரும் வாய்ப்பே அதிகம். கம்யூனிஸ்டுகள் கூட தேர்தலுக்குப் பிறகு ஒரு ஆட்சி அமைய வேண்டுமென்ற அடிப்படையில் பிஜேபிக்கு ஆதரவு தருவதைவிட காங்கிரசுக்கே குறைந்த பட்ச செயல் திட்டத்தில் வெளியில் இருந்து ஆதரவுதரும். 

ஆக ஒட்டு மொத்த இந்தியாவில் பிஜேபி மட்டும் தனது சொந்த பலத்தில் மட்டும் தனித்தே விடப்படும். அப்படி ஒரு நெருக்கடியில் ஆதரவுக் கரம் வருமென்றால் முன்பு சாப்பாடு போட்ட சகோதரியின் கரமாகவும் இருக்கலாம் அல்லது வழக்குகள் காரணமாக தமிழினத் தலைவரின் கரமாகவும் இருக்கலாம். 

சரி, நம்ம ஊர் “ பண்ணைக் கட்சி”களின் விஷயம் என்ன? இங்கு அதிமுக யாரோடும் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டது. இப்போதே செலவு பண்ண ஆரம்பித்துவிட்டது என்று தமிழ்நாட்டின் சுவர்களைப் பார்த்தாலே தெரியும். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் திருஷ்டிக்கு பூசணிக்காய் வைக்கத்தேவை இல்லாத வேலைகளை இலவசமாக அதிமுக செய்து கொண்டு இருக்கிறது. பல தலித் அமைப்புகளும் சாதி அமைப்புகளும் அதிமுகவுக்கு கேளாமலேயே ஆதரவை அறிவித்து இருக்கின்றன. ஜெயலலிதாவால் ஏழரை லட்சம் தொண்டர்கள் உள்ள அமைப்பு என்று ஏற்கனவே “ஐஸ் “ வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜெயலலிதாவை அவ்வப்போது சந்தித்து மாதத்துக்கொரு திரு- குரான் கொடுத்து வரும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தும் அதிமுகவை ஆதரிக்க துரதிஷ்டவசமாக வாய்ப்புள்ளது.

திமுகவோ , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அறிவித்து இருக்கிறது. மேலும் தேமுதிகவின் இணைப்புக்கு ஆசைப்பட்டுக் கொண்டு இருக்கிறது. தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்தால் திமுக கூட்டணி வலுவாகும். 

அதே நேரம் தமிழ்நாட்டில் , இப்போது டில்லியில் புயலைக் கிளப்பிக் கொண்டு இருக்கும் ஆம் ஆத்மி கட்சியும் டில்லியின் புகழோடு தமிழ்நாட்டில் கால் ஊன்ற ஊருக்கு ஊர் அலுவலகத்துக்கு இடம் தேடி வருகிறது. நான்கு சதவீத வாக்களர்கள் இவர்களுக்கு இப்போது ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக ஒரு சர்வே சொல்கிறது. இதனால் இன்னும் முடிவு எடுக்காமல் மதில் மேல் பூனையாக உள்ள தேமுதிக ஆம் ஆத்மியுடன் கூட்டுச் சேரும் ஒரு முடிவு எடுத்தாலும் வியப்பில்லை என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. அப்படி தேமுதிக ஆம் ஆத்மியுடன் சேராவிட்டால் அந்தத் திண்ணையில் தான் உட்கார்ந்து தன்னை கங்கையில் மூழ்கியது போல புனிதப் படுத்திக் கொள்ளலாமா என்றும் பாட்டாளி மக்கள் கட்சி சிந்தித்து வருவதாகவும் தெரிகிறது. 

இன்னும் பல கூத்துக்களும் கொடுமைகளும் சதிகளும் பார்க்க இருக்கிறோம். அவற்றுள் தமிழக முஸ்லிம் சமுதாயம் தொடர்புடைய முக்கியமான அரசியல் முடிவு எதிர் வரும் ஜனவரி 28- ஆம் தேதி தெரிந்த பிறகு அதன் சாதக பாதகங்களை அதன்பின் விமர்சிக்கலாம். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
ஆக்கம் : முத்துப் பேட்டை P.பகுருதீன் B.Sc;
உருவாக்கம்: இப்ராஹீம் அன்சாரி

26 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

ஆக மொத்தம் இந்திய ஜனநாயகம் சிவப்பு விளக்கு ஏரியாவாக மாறிவிட்டது.காசுக்கு பாய்விரிக்க காலில் சிலம்பணிந்து கண்ணகிகள் காத்திருக்கிறார்கள். மாதவியோ தன் தொழில் ஜனநாயகமாகிவிட்டதே என்று கண்ணத்தில்' கை' வைத்து கவலையோடு மூலையில் குந்தி விட்டால்.

sheikdawoodmohamedfarook said...

கடைசி நேர கூத்து இன்னும் சுவையாக இருக்கும். தேர்தல் முடிவு ஐயர் கடை ஆட்டுக்கறி பிரியாணிதான்.

sabeer.abushahruk said...

இதோ மக்கள் ஒட்டிய சுவரொட்டி:

போங்கய்யா போங்க. இப்ப வாங்க வாங்கன்னு கூப்பிடுவிய, அப்புறமா உள்ளுக்குள்ளேயே ஒப்பந்தங்களைப் போட்டுக்கொண்டு எங்களயெல்லாம் அம்போண்டு உட்டுட்டு கூட்டணி வச்சி கும்மாளம் அடிப்பீங்க.

போங்க போங்க.

Ebrahim Ansari said...

எங்கே மற்றவர்கள்?தே மு தி க வுடன் அவர்களும் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் போய்விட்டார்களா?

sabeer.abushahruk said...

//, நம்ம ஊர் “ பண்ணைக் கட்சி”களின் விஷயம் என்ன? //

//காங்கிரசை நான்கு மாநிலங்கள் ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலில் “தலாக்” சொல்லிவிட்டன. //

//காரணம் கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத்தூக்கி மனையில் வைக்க வேண்டுமென்ற ஆவல். நிராசையாகப் போக இருக்கும் நீர்க்குமிழி ஆசை. //

//கர்நாடகத்தைப் பொருத்தவரை பிஜேபிக்கு பாரதீய ஜல்சாப் பார்டி என்று பெயர் வைத்துவிட்டார்கள். ஆந்திரத்தில் இவர்கள் பெயருக்குப் போடும் கடிதம் முகவரியில் யாருமில்லை என்ற குறிப்புடன் திரும்பி வந்துவிடுகிறது. ///

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பொதுக்கூட்டத்தில் பேசினால் கரவோசை விண்ணைப் பிளக்கும்; பிரியாணி பொட்டலம் கொடுக்காமலேயே மீட்டிங்குக்கு கூட்டம் அலைமோதும்.

கட்சி மட்டும் ஆரம்பிச்சா கூட்டணிக்கட்சிகளுக்கு ஓட்டுப்போட்டு பழகிய எங்கள் ஓட்டெல்லாம் உங்கள் கூட்டணிக்குத்தான்.

அ.மு.மு.க. வை எப்பதான் ஆரம்பிக்கப் போகிறீர்களோ?

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்காஸ்

sabeer.abushahruk said...

//ஆக மொத்தம் இந்திய ஜனநாயகம் சிவப்பு விளக்கு ஏரியாவாக மாறிவிட்டது.காசுக்கு பாய்விரிக்க காலில் சிலம்பணிந்து கண்ணகிகள் காத்திருக்கிறார்கள். மாதவியோ தன் தொழில் ஜனநாயகமாகிவிட்டதே என்று கண்ணத்தில்' கை' வைத்து கவலையோடு மூலையில் குந்தி விட்டால்.//

கவிதையைப் போன்ற நச்சென்ற இந்த கருத்தின் எதார்த்தம் முகத்தில் அறைந்தாலும் சமீபத்தில் மிகவும் ரசித்த கருத்துகளில் ஒன்று ஃபாரூக் மாமாவோட மேற்சொன்ன கருத்து.

ஜாகிரு,

பெருசு பெருசுதான்!

என்னென்றே?

sabeer.abushahruk said...

//எங்கே மற்றவர்கள்?தே மு தி க வுடன் அவர்களும் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் போய்விட்டார்களா?//

காக்கா, அவுரு பப்ளிக்ல கண்ணு செவக்க ஆட்களையும் அடிப்பாரே?

Shameed said...

ATHU YENNA அ.மு.மு.க.

sabeer.abushahruk said...

அ.மு.மு.க. என்றால் "அதிரை முத்துப்பேட்டை முன்னேற்றக் கழகம்" அல்ல.

அழகிய முன்மாதிரி முன்னேற்றக் கழகம்.

sabeer.abushahruk said...

ஹமீது,

இவ்ளோவ் லேட்டா வந்திருக்கியலே கூட்டணி பேச்சு வார்த்தைலாம் முடிஞ்சிடிச்சா?

(இன்னிக்கு சவுதி ஜுபைல்லேர்ந்து வந்த அல் ஹார்பி குரூப்புக்கு 4.5 மில்லியன் திர்ஹம் அளவுக்கு எந்திரங்கள் விற்பதற்காக செம வேலை. எனக்கு ஜுபைல் ஞாபகம் வந்துடிச்சி)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா... ரத்திரி பூரா போஸ்டர் ஒட்டிட்டு லேட்டா வந்ததாலா கூட்டத்துக்கு வரமுடியலே... கொரயெல்லாம் புடிக்காதிய...

ஏதோ விசயகாந்த் மலேசியாவுல வசூல் வேட்டையில் இருக்காவோலாம...!

sheikdawoodmohamedfarook said...

இவ்வளவு கட்சியே வச்சுக்கிட்டு ஒரே ஒரு ஓட்டு கொடுத்து 'போடு' ன்டா யாருக்குத்தான் போடுறது ? 'ஒருத்தருக்கு போட்டுட்டு மத்தவங்களுக்கு போடாமே உட்டுட்டா நாளேபின்னே அவங்க மொகத்திலே எப்புடி முளிக்கிறது'ன்னு எனக்கு ஒரே கவலை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆக மொத்தம் இந்திய ஜனநாயகம் சிவப்பு விளக்கு ஏரியாவாக மாறிவிட்டது.காசுக்கு பாய்விரிக்க காலில் சிலம்பணிந்து கண்ணகிகள் காத்திருக்கிறார்கள். மாதவியோ தன் தொழில் ஜனநாயகமாகிவிட்டதே என்று கண்ணத்தில்' கை' வைத்து கவலையோடு மூலையில் குந்தி விட்டால்.//

இன்றைய சனநாயகத்தின் அப்பட்டம் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இவ்வளவு கட்சியே வச்சுக்கிட்டு ஒரே ஒரு ஓட்டு கொடுத்து 'போடு' ன்டா யாருக்குத்தான் போடுறது ? 'ஒருத்தருக்கு போட்டுட்டு மத்தவங்களுக்கு போடாமே உட்டுட்டா நாளேபின்னே அவங்க மொகத்திலே எப்புடி முளிக்கிறது'ன்னு எனக்கு ஒரே கவலை.....//

ஆமா ஆமா.... அந்த ஓட்டையும் அவங்களே போட்டுட்டு... ஓட்டும் கேட்டா எப்புடியாம் ?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கூட்டணியின் கூத்துக்களோடு அதன் பின்னணிக் கேவலங்கள் பற்றிய அழகான அலசல்.

Ebrahim Ansari said...

அன்புள்ள புதுக் கவிஞர் பெரியவர் மச்சான் எஸ். எம். எப் அவர்கள்

//காசுக்கு பாய்விரிக்க காலில் சிலம்பணிந்து கண்ணகிகள் காத்திருக்கிறார்கள்.//

இவ்வளவு அருமையாக இந்த சித்திரத்தை ஒரு வரியில் வரைந்து விட்டீர்களே! ஆயிரமானாலும் அனுபவம் அனுபவம்தான்.

Ebrahim Ansari said...

தம்பி அபூ இப்ராஹீம்

//ஏதோ விசயகாந்த் மலேசியாவுல வசூல் வேட்டையில் இருக்காவோலாம...!//

வந்துட்டாங்க. ஒரு முஸ்லிம் வீட்டுத் திருமணத்துக்குப் போயிருந்தாங்களாம். கலைஞர் முதல் பட்டாக்கத்தி பைரவன் வரை முடிவுக்கு காத்து இருக்கிறார்கள்.

அநேகமாக பட்டாக்கத்தி பைரவன் கூட போக வாய்ப்பு இருப்பதாக கணிக்கிறார்கள். காரணம்

அதிமுக திமுக வுக்கு மாற்றாகவே தேமுதிகவை நிலைப் படுத்தினாராம்.

பிஜேபி ஊழலை எதுக்குதாம்.

பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபியின் தலைமையில் கூட்டணி சேர்ந்தாலும் வரும் சட்ட மன்றத் தேர்தலில் தேமுதிக தலைமையை ஏற்று பிஜேபி கூட்டணியில் தொடருமாம்.

திமுக பெரிய கட்சியாம் . அதிமுக தேமுதிக எம் எல் ஏக்களை ஏப்பம் விட்டது போல் திமுகவும் ஏப்பம் விடுமாம்.

கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெரும்போதே மாநிலங்கள் அவை தேர்தலுக்கு திருச்சி சிவாவை அறிவித்தது சரியல்லவாம்.

பார்க்கலாம்.

Ebrahim Ansari said...

தம்பி கவிஞர் சபீர்! வ அலைக்குமுஸ் ஸலாம்.

//அ.மு.மு.க. என்றால் "அதிரை முத்துப்பேட்டை முன்னேற்றக் கழகம்" அல்ல.

அழகிய முன்மாதிரி முன்னேற்றக் கழகம்.//

கட்சிக்குப் பெயர் தேடிக் கொண்டிருந்தபோது காமதேனு போல தந்து இருக்கிறீர்கள். சொல்லுங்கள் என்ன பதவி வேண்டும்?

கட்சிக்குள் தவறு செய்பவர்களை நசுக்கிவிட வேண்டும். அதற்கு சகல கனரக வசதியும் உங்களிடம் தான் உண்டு.

Ebrahim Ansari said...

தம்பி ஜஹபர் சாதிக் ! கருத்துக்கு நன்றி.

சாவன்னா! அடுத்த வாரம் இன்னும் பல அரசியல் வேடிக்கைகள் இருக்கப் போகின்றன.

sabeer.abushahruk said...

//கட்சிக்குப் பெயர் தேடிக் கொண்டிருந்தபோது காமதேனு போல தந்து இருக்கிறீர்கள். சொல்லுங்கள் என்ன பதவி வேண்டும்? //

பதவி ஆசையெல்லாம் எனக்குத் துளிகூட இல்லை. மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் ஆனால் அது பதவி இல்லாமல் முடியாது. அதனால், தேர்தலில் ஒரு அடிமட்டத் தொண்டனாக கடுமையாக உழைக்கவே விருப்ப்ம்.

(வென்றபிறகு ஒரு முதல்வராகவோ பிரதமராகவோ கட்சியின் மூத்த தலைவர்களாகிய இரண்டு காக்காஸும் இந்த சிறியவனை நியமிக்கும் பட்சத்தில் அந்த அன்புக்கட்டளையை மீறும் அருகதை எனக்கில்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்)

மற்றபடி பதிவியெல்லாம் வேண்டாம் என்று பகிரங்கமாக அறிவிக்கிறேன்.

sheikdawoodmohamedfarook said...

மோடிக்கு ஓட்டுப் போடும் கரங்களே இந்தியத்தாயின் சேலை உரியும் கரங்க ள் . இது இரண்டாவது 'கரசேவை'! இடிபடப்போவது பாரதமாதாவின் மல்டிகலர் மாளிகை.

Ebrahim Ansari said...

தம்பி கவிஞர் சபீர் அவர்களே!

நமது கட்சியில் முதல்வர்கள் , பிரதமர்கள் நியமிக்கப்படுவதில்லை. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

இப்படி தேர்ந்தெடுக்கப் படுவதற்காக ( ஒன்று) கவனிக்கப் படுவார்கள் - Positive ( இரண்டு) கவனிக்கப் படுவார்கள். - Negative.
பிரியமுள்ள மச்சான் !
//மோடிக்கு ஓட்டுப் போடும் கரங்களே இந்தியத்தாயின் சேலை உரியும் கரங்க ள் . இது இரண்டாவது 'கரசேவை'! இடிபடப்போவது பாரதமாதாவின் மல்டிகலர் மாளிகை.//

உங்கள் பெயரில் முகநூலில் பதிந்து இருக்கிறேன்.


sabeer.abushahruk said...

//ஜனநாயக ரீதியில் //

எத்தனை சூட்கேஸ்கள் காக்கா?

sheikdawoodmohamedfarook said...

//மோடிக்கு ஒட்டு போடும் கரங்கள்/மச்சான் உங்கள் பெயரில் முகநூளில் பதிந்துறிக்கிறேன் // இதற்குத்தான் என் ''தாயார் மச்சினன் உள்ள ஊடா பாத்து கல்யாணம் பண்ணு !ஏங்க தாங்களுக்கு ஒதவியா இருக்கும் '' என்றார்கள். என் தாய் வாக்கு இப்பத்தான் பழிச்சுச்சு.நன்றி! தூத்துக்குடியில் முத்து குளிக்கப் போறவுக மசினனைதான் ஒதவிக்கு கூட கூட்டி போவாங்களாம்.அப்பத்தான் கடலில் மூழ்குன மச்சானே மச்சினன் கயிறு இழுத்து காப்பாத்து வாராம். அப்போ கூப்புடுறேன் கயிறு இழுக்க வாரியளா? ?

Ebrahim Ansari said...

தம்பி சபீர்! கட்சியின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி எத்தன சூட் கேசுகள் என்று கணக்கெடுக்கப் படாது. வேறு என்ன கணக்கெடுக்கபப்டும்? உங்கள் ஊகத்துக்கு. நாங்களாக வாய்திறந்து கேட்கமாட்டோம்.

அலாவுதீன்.S. said...

பரவாயில்லையே கருத்து களத்திற்குள் : நீங்களாகவே ஒரு புது கட்சி ஆரம்பித்து விட்டது போல் தெரிகிறது.

அரசியல் கூத்துக்கள் பற்றிய தெளிவான விளக்கம்! தள்ளாடும் விச?யகா ... ந்தை இவ்வளவு பேர் எதிர்???? பெட்டியின் கணத்திற்கு தகுந்தவாறு காட்சிகள் மாறும்?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.