Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தலைமைக்கு முன்னுரிமை 1

அதிரைநிருபர் பதிப்பகம் | June 12, 2015 | ,

:::: தொடர் - 26 ::::

தலைமைத் தகுதியைப் பெற்றவர்கள், தமக்குக் கீழுள்ளவர்கள் மீது எதையும் கட்டாயப்படுத்தித் திணிக்கக் கூடாது.  தலைவர்கள் எந்தத் தீர்மானத்தை எடுத்தாலும், தமக்குக் கீழுள்ளவர்கள் மீது வற்புறுத்தல் எனும் இறுக்கத்தையும்  காட்டலாகாது.  அவர்களின் கருத்துக்கும் முன்னுரிமை கொடுத்து, அதனைச் செவி தாழ்த்திக் கேட்கும் தன்மையைத் தலைவர் பெற்றிருக்கவேண்டும்.  இது, முடிவெடுக்கும் தன்மை தலைவருக்கு இல்லை என்பதன் அடையாளமாகாது.  மாறாக, எந்தத் தீர்மானத்தையும் எடுத்து, அதனைச் செயல்படுத்தும்போது, தனக்குக் கீழுள்ள தொண்டர்களுடைய ஒத்துழைப்பைப் பெற்றால் மட்டுமே அந்தச் செயல்பாடு முழுமை பெறும்.  அதில் பங்களிப்புச் செய்வோர் அப்போதுதான் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவார்கள்.

மாறாக, தனக்குக் கீழுள்ள தொண்டர்களைப் பற்றி எவ்விதக் கவனமும் கொள்ளாமல், தன்னிச்சையாகத் தலைவரே தன் அதிகாரத்தைக் காட்டி, தொண்டர்களை இயங்கக் கூறினால், அது தலைமையின் சரியான தன்மையாகாது.  ஏனெனில், தலைவரின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக் கொள்ளும் தொண்டரின் அறிவில் நன்மை இருக்கக்கூடும்.  அதனால்,  தலைவர் எடுத்த முடிவுக்குக் கட்டுப்பட்டு, அத்தொண்டர் தன் மனம் ஒப்பிய நிலையில் செயல்பட மாட்டார்.  அதன் விளைவாக, அவர் முழு மனத்துடன் ஈடுபடாமல் ஒப்புக்காகச் செயல்படும் அளவுக்கு வந்துவிடுவார்.  அல்லது, எதிரணியில் சேர்ந்துவிடும் அபாயமும் உண்டாகும்!

பிறருடைய கருத்தைக் கேட்பதால், தலைவர் அறிவில்லாதவர் என்ற நிலைக்குத் தரம் தாழ்ந்து போய்விட மாட்டார்.  அப்படிப் பெருந்தன்மையுடன் கேட்பதால், தொண்டரின் உள்ளத்தில், தலைவர் தமது கருத்தையும் கேட்கிறார் என்ற நம்பிக்கை உருவாகி, கருத்துக் கூறத் தமக்கும் உரிமையுண்டு என்ற தன்னம்பிக்கை ஏற்படும்.  இத்தகைய கருத்துப் பரிமாற்றத்தால், தொண்டர்களின் எதிர்பார்ப்பு, அச்சம், கவலை அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டு, முறையான தீர்மானத்துக்குத் தலைவர் வருகின்றார் என்ற நம்பிக்கை, தலைமைக்குக் கட்டுப்பட்ட தொண்டர்களின் மனத்தில் உண்டாகின்றது.

தலைவர், தொண்டர்களின் கருத்தைக் கேட்பதில் இன்னொரு காரணமும் உண்டு.   சில வேளை தொண்டர்களிடம் அது பற்றிய அதிமுக்கியக் கருத்துகளும் இருக்கலாம்.  அது தலைவரின் அறிவில் வந்திருக்காது.  அது சமுதாயத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தவும் கூடும்.  தொண்டர்களிடம் தலைவர் கருத்துக் கேட்காததாலோ, தலைவருக்கு அஞ்சித் தொண்டர் அக்கருத்தைக் கூறாமல் மறைத்துவிட்டாலோ, மொத்தச் சமுதாயத்திலும் மிகப் பெரிய பாதிப்புண்டாகும் என்பதால், தலைவர் எடுத்த முடிவு தவறாகிப் போய்விடும்!  எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் நன்மைகளுக்குத் தடையாகவும் போய்விடும்!  முடிவில், தலைவர் தலைமைக்குத் தகுதியற்றவராகப் போய்விடுவார்!  

இதனால்தான், இஸ்லாத்தில் ‘மஷ்வரா’ என்ற கலந்தாலோசனை கடமையானது என்ற தரத்தில் அமைந்துள்ளது.  மற்றவர்களுடன் கலந்தாலோசனை செய்வதில் இதயங்கள் இணைகின்றன.  இறைப் பொருத்தமும் அதற்கு உண்டு.  கலந்தாலோசனை செய்வதால், தலைவரிடம் ஓர் எச்சரிக்கை உணர்வு ஏற்படுகின்றது.  தொண்டர்களிடம் ஒற்றுமை உணர்வு நிலைக்கின்றது.  கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின்னர் செயல்பாட்டில் இறங்கும்போது, ஒவ்வொருவரின் பங்களிப்பு எவ்வளவு என்ற உண்மை தெரிய வருகின்றது.  அதனால்தான், (‘வஹி’ என்ற) இறைச் செய்திகளை அவ்வப்போது பெற்றுக்கொண்டு இருந்த நபியவர்களையும் மற்றவர்களுடன் கலந்தாலோசனை செய்யுமாறு கட்டளையிடுகின்றான் அல்லாஹ். ‘வஹி’யின் அடிப்படையில் செயல்பட்டதால்தான், நபியவர்களிடம் தவறு நிகழ்வது அரிதாக இருந்தது.  உண்மையில், கலந்தாலோசனை செய்வதால் மிகப்பெரும் நன்மைகள் உள்ளன;  அதில் ஐயமில்லை.  ஆனால், அவற்றுள் தலையாயது, ஒருமித்த கருத்துண்டாகி, செயல்பாடுகள் திட்டமிட்டபடி நடக்கும்.  அல்லாஹ்வின் அருள்மறை கூறுகின்றது:

“இன்னும், அவர்கள் எத்தகையோர் என்றால், தம் இரட்சகனின் கட்டளையை ஏற்று, தொழுகையையும் நிறைவேற்றுவார்கள்.  அவர்களின் செயல்பாடுகள் அவர்களுக்குள் கலந்தாலோசனை செய்தலாக இருக்கும்.  நாம் அவர்களுக்கு வழங்கிய செல்வத்திலிருந்து (தர்மமாகச்) செலவும் செய்வார்கள்.”  (42:38)

தலைவரால் முடிவெடுக்கப்பட்ட பின்னர், அந்த முடிவின் அடிப்படையில் செயலாற்றத் தொடங்கிவிட வேண்டும்.  அந்த முடிவுக்கு மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தவர்களும், தமது கருத்தைத் தள்ளி வைத்துவிட்டு, தலைவரால் எடுக்கப்பட்ட தீர்மானம் முற்றாகச் செயல்படுத்தப்படுவதில் முனைப்புக் காட்ட வேண்டும். இதுதான் கூட்டு முயற்சி என்பதன் சாரமாகும்.  தீர்மானம் முழுமையான – எதிர்பார்க்கப்பட்ட – வெற்றியைத் தந்திருக்காவிட்டாலும், தலைவரின் ஆதரவாளர்களாக இருக்கும் நிலையை விட்டு மாறிவிடக் கூடாது.  இதுவே, தலைமைக்குக் கட்டுப்படுவதன் இலக்கணமாகும்.  இன்று நமக்கென்று உலகளாவிய தலைமை இல்லையே என்று பேசுகின்றோம்; கவலைப்படு கின்றோம்.  ஆனால், வல்ல இறைவன் அருட்கொடையாக நமக்குத் தந்த தலைவரைப் பின்பற்றும் ‘சுன்னா’ என்ற அருள்நெறியை மறந்து நிற்கின்றோம்!

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறும், அந்த நபியவர்களுடன் இணைந்த தோழமையும் நமக்கு முன்னால் விரிந்திருக்கின்றது.  சிலபோது நபித்தோழர்கள் நபியின் கருத்திற்கு மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தாலும், அவர்களால் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்ட பின், அந்த முடிவின்படியே செயல்படுவதில் முனைப்புக் காட்டினார்கள்; அதைச் செயல்படுத்தத் தம் உயிர்களைக்கூடப் பணயம் வைத்தார்கள் என்ற வரலாறு நமக்கு முன் ‘திறந்த புத்தகமாக’ இருக்கின்றது.  

இந்த உண்மை நிகழ்வுக்குச் சான்றுகளாக ஹுதைபிய்யா உடன்படிக்கை, முஃதாப் போருக்கு ஜெய்து பின் அல்ஹாரிதா (ரலி) என்ற இளைஞரைத் தளபதியாக்கி அனுப்பியது, இஸ்லாமிய அணியில் சேர்ந்த பின்னர் மதம் மாறிச் சென்றோர் (முர்த்தத்து) களுக்கு எதிராகப் படையை அனுப்பியது, முதலான உண்மை நிகழ்வுகள் ‘சீரா’வின் பதிவுகளில் சிறந்த சான்றுகளாகி, நபியின் தலைமைக்கும், அவர்களுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலீஃபா அபூபக்ர் (ரலி)  போன்றவர்களின் தலைமைக்கும் கட்டுப்பட்ட தன்மையால், நபித்தோழர்கள் வெற்றிகளை அடைய முடிந்தது என்பதும் வரலாற்றுப் பதிவுகள் அல்லவா?  தலைவரால் ஒரு முடிவு எடுக்கப் பெற்ற பின்னர் தயங்கி நின்றது, நபித்தோழர்களின் பண்பல்லவே?  இக்கட்டான சூழலில், அண்ணலின் / கலீஃபாவின் தீர்மானமா, அல்லது நமது விருப்பமா என்ற நிலையை எட்டியபோது, நபியின் தீர்மானத்திற்கும் கலீஃபாவின் தீர்மானத்திற்கும் முன்னுரிமை அளித்த தோழர்கள் அல்லவா அவர்கள்? அதனால், வெற்றிக் கனியைப் பறித்த வல்லவர்கள் அல்லவா அந்த சஹாபாக்கள்?     

தலைவர் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற இலக்கணத்தை வகுத்தவர்கள் கூறும் நிபந்தனைகளுள் ஒன்று, ‘தலைவர் என்னிடம்தான் பேசுகின்றார்’ என்ற உணர்வை ஒவ்வொருவரும் பெறவேண்டும்.  தலைவர் தன்னைப் பார்க்கவில்லை;  தன்னைப் புறக்கணிக்கிறார்;  தனது கருத்துக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை  என்ற ‘நிராசை’ ஒருவரின் இதயத்திலும் இருக்கக் கூடாத தன்மையாகும்.  நபித்தோழர் ஒவ்வொருவரும், நபி (ஸல்) தன்னிடம்தான் உரையாடுகின்றார் என்ற உணர்வைப் பெற்றவராக இருந்தார். பெருமானாரின் பேச்சு ஒவ்வொன்றும் இவ்வடிப்படையில்தான் இருந்தது. இப்படியொரு தனித் தன்மையினால், பெருமானார் (ஸல்) தன்னிகரற்ற தலைவராக உயர்ந்து நின்றார்கள். அன்னாரின் பொதுவான பிரச்சாரத்தின்போதும், தோழர்களை நோக்கிப் பேசியதும், தன்னைத்தான் நபியவர்கள் பார்த்துப் பேசுகின்றார்கள் என்ற தரத்தில் இருந்தது.
அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) என்ற நபித்தோழர் இப்படி உணர்வு கொண்ட தோழர்களுள் ஒருவர்.  அவர் ஒரு நாள்,  “அல்லாஹ்வின் தூதர் அவர்களே!  மக்களுள் தங்களுக்கு மிக நெருக்கமான தோழர் யார்?” என்று கேட்டார்.  

அதற்கு நபியவர்கள், “ஆயிஷா” என்று பதிலளித்தார்கள்.  அந்தத் தோழர் அத்துடன் நிறுத்தவில்லை.  “ஆண்களில் யார்?” என்று கேட்டார். “அவருடைய தந்தை அபூபக்ர்” என்று கூறினார்கள்.  

இந்த பதில், அப்போதைக்கு என்றில்லாமல், அண்ணலாரின் இறப்பிற்குப் பின்னர் தலைமைப் பொறுப்புக்குப் பொருத்தமானவர் அபூபக்ர்தான் என்ற கருத்தையும் அடக்கியிருந்தது.  இப்படிப்பட்ட நட்புப் பிணைப்பால்தான், அல்லாஹ்வின் தூதருக்காக அவர்கள் எத்தகைய தியாகத்தையும் செய்ய ஆயத்தமாக இருந்தார்கள். உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தார்கள்!  இது நபித் தோழர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.  இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சிறப்புத் தோழராக இருந்ததால், மற்ற நபித்தோழர்களும் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களுக்குத் தனி மரியாதை செலுத்தினார்கள்.  நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்குப் பின், அபூபக்ர் (ரலி) அவர்களின் சொல்லுக்குப் பெருமதிப்புக் கொடுத்தார்கள்.

அதிரை அஹ்மது

1 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

ஒவ்வொரு அரசியல் தலைவனுக்கும்,சமுதாய மற்றும் குடும்ப தலைவர்களுக்கும் தலைமைத்துவ பொருப்பை கற்றுத்தரும் உலகில் ஈடு இல்லா நபி ஸல் அவர்களின் பல்கலைக்கழகம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு