பகுதி : ஏழு
முகமது
என்கிற பகுதியை தனது மகனின் பெயரிலிருந்து
நீக்க வேண்டுமென்று கோரிக்கைவைத்த ஒரு தகப்பனாரின் கோரிக்கை பற்றியும் அதற்கு
பேராசிரியர் கோபப்பட்ட நிகழ்ச்சியையும் சென்ற வாரம் சொல்லி இருந்தேன். மேலும் தொடர
முன்பு ஒரு சிறு திருத்தம், அதாவது கோரிக்கை வைத்த தகப்பனாரின் பெயர்தான் முகமது
சேக்காதியார். இவருக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். அவர்கள் அனைவரின்
பள்ளிச்சான்றிதழ்களிலும் தகப்பனார் பெயர்
சேக்காதியார் என்றுதான் குறிப்பிடப்பட்டு இருந்தன. ஆனால் குறிப்பிட்ட ஒரு மகனின்
பெயரின் தகப்பனார் பெயர் மட்டும் முகமது சேக்காதியார் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால், அவர்கள் குடும்பத்தின் பதிவேடுகளில் குழப்பம் இருப்பதால் முகமது
என்ற பெயரை நீக்கித் தர வேண்டுமென்பதுதான் அவரது கோரிக்கை.
இப்படிப்பட்ட
சம்பவங்கள் நமதூரில் வாடிக்கையாக நடைபெற்று வருகின்றன. காரணம் ஆண்கள்
வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றனர். போதுமான படிப்பறிவு மற்றும் கல்வியறிவு இல்லாத
பெண்கள், பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கும்போதும் வாக்காளர் அட்டை பதியும்போதும்
குடும்ப அட்டை பதியும்போதும் நமது பெண்கள் சொல்லும் பெயர்களைஅரசு அதிகாரிகள் தங்கள்
போக்குக்கு, தவறான எழுத்துக்களை வைத்து எழுதிப் பதிவு செய்து விடுகிறார்கள்.
காரணம் பதிபவர்கள் பெரும்பாலும் பிற மதத்தினர் என்பதாலும் அவர்கள் எழுதியதை
சரிபார்க்கும் ஆற்றல் நம்மவர்களுக்கு இல்லை என்பதாலும் இப்படிப் பட்ட குழப்பங்கள்.
ஏதாவது ஒரு காலத்தில் பாஸ்போர்ட் முதலிய சில
ஆவணங்களை ஏற்பாடு செய்யும்போது ஏகப்பட்ட குழப்பங்கள்; வீண்
செலவுகள்;காலவிரயங்கள்.
சரி
இப்போது பேராசிரியர் அவர்கள் சொல்லிக்காட்டிய முகமது என்கிற பெயர் தொடர்பான ஹுதைபியா
உடன்படிக்கை சம்பந்தப்பட்ட சரித்திர சம்பவத்துக்கு வரலாம்.
இஸ்லாமிய
சரித்திரத்தில் ஹுதைபியா உடன்படிக்கை என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது
பலருக்குத் தெரிந்து இருக்கும். மக்காவின் கொலைவெறிக் குறைஷியர்களுக்கும் அவர்களின் கூடவே இருந்த
யூத, கிருஸ்தவர்களுக்கும் மதினாவில்
கோலோச்சத் தொடங்கிய பெருமானார் நபி (ஸல்)
அவர்களுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையாகும். இந்த
உடன்படிக்கையின் பல அம்சங்கள் மக்காவின்
குறைஷியர்களுக்கு சாதகமாகவே அமைந்தது. மக்காவிலிருந்து மனம் மாறி குறைஷியர்கள்
மதினாவில் மண்டியிட்டாலும் அவர்களை திரும்பவும் மக்காவாசிகளிடம் ஒப்படைத்துவிட வேண்டும்
என்பதுபோன்ற கடுமையான ஷரத்துக்கள் அடங்கிய
ஒப்பந்தம். இஸ்லாமிய சரித்திரத்தில் பெருமானார் அவர்களை ஒரு இராஜதந்திரி என்று
நிருபித்த உடன்படிக்கை இது என்று சரித்திர ஆசிரியர்கள் வியந்து
குறிப்பிடுகிறார்கள். இந்த உடன்படிக்கையின் ஷரத்துக்கள் ஒரு வகையில் மக்காவிலிருந்த எதிரிகளுக்கு சாதகமாக இருந்தாலும்,
பெருமானாரின் அரசியல் தலைமையை நிலை நாட்டியதுடன் இஸ்லாம் என்பது நிற, இன, மத,
மொழிகளின் பாகுபாடு இல்லாமல் அனைவரின் உரிமையையும் நிலை நாட்டும் மார்க்கம் என்பதை உலகுக்கும் அறிவித்த உடன்படிக்கையாகும்.
இந்த
உடன்படிக்கையின் வாசகங்களை பெருமானார்
(ஸல் அவர்கள் சொல்லச் சொல்ல ஹஜரத் அலி ( ரலி) ரலி) அவர்கள்
எழுதினார்கள். உடன் இருந்த குறைஷிகளின் பிரதிநிதி அவைகளை உற்றுக் கேட்டுத் தேவையான நேரத்தில் தனது ஆட்சேபனையை எழுப்பினார்.
பெருமானார் அவர்கள் “பிஸ்மில்லா ஹிர
ரஹ்மாநிர்ரஹீம்” என்று சொல்லத் தொடங்கியபோது முதல் ஆட்சேபனை எதிர்களின்
தரப்பிலிருந்து எழுந்தது. “ரஹ்மான்” என்கிற இறைவனின் திருப்பெயரை எதிரிகள்
ஏற்றுக் கொள்ளவில்லை. மக்காவாசிகள் சொன்னபடியே அதேபோல் இறைவனின் தூதரான முகமது ரசூலுல்லாஹ்- வுக்கும்
மக்காவாசிகளுக்கும் என்று பெருமானார் மொழிந்தபோது பெரும் எதிர்ப்புக்
கிளம்பியது. அதற்கு முன், முகமது இரசூலுல்லாஹ் என்று ஹஜரத் அலி (ரலி) அவர்கள்
எழுதிவிட்டார்கள். இப்படி எழுதப்பட்ட முகமது இரசூலுல்லாஹ் என்கிற பெயர்
நீக்கப்பட்டு முகமது இப்னு அப்துல்லாஹ் என்று மாற்றி எழுதப்படவேண்டுமென்று
கூறினார்கள். அவர்கள் சொன்ன காரணமென்னவென்றால், மக்காவாசிகளுக்கும், மதினாவாசிகளுக்கும்
இடையில் உள்ள தலையாயப் பிரச்னையே, முகமது
இறைவனின் தூதரா இல்லையா என்பதுதான். முகமது இரசூலுல்லாஹ் என்று எழுதப்பட்ட இடப்பட்ட உடன்படிக்கையை ஏற்று குறைஷியர்களும் கையெழுத்து இட்டுவிட்டால் இரு அணிகளுக்கும் இடையில் வேறு எந்தப் பிரச்னையுமே இல்லை என்றாகிவிடும். இஸ்லாத்தையும்
முகமத் இறைவனின் தூதர் என்பதையும் மக்கா குறைஷியர்களும் ஏற்றுக்கொண்டாதாகிவிடும்.
ஆகவே
முகமது இரசூலுல்லாஹ் என்கிற பெயரை நீக்கித் தந்தால் மட்டுமே தாங்களும் கை எழுத்திட முடியும் என்றும் குறைஷியர்கள் கூறினர். அவர்களின் இந்த வாதத்தை பெருமானார் (ஸல்) அவர்களும் சரிதான் என்று ஏற்றுக்கொண்டு , முகமது இரசூலுல்லாஹ்
என்கிற பெயர் இருக்கிற இடத்தை நீக்கி விடும்படி ஹஜரத் அலி (ரலி) அவர்களிடம் சொன்னார்கள். இதுவரை பெருமானார் (ஸல்) அவர்கள் இட்ட
எந்தக் கட்டளையையும் மறுத்துப் பழக்கமில்லாத ஹஜரத் அலி (ரலி) அவர்கள் பெருமானாரிடம்
இதற்கு மறுப்புத் தெரிவித்தார்கள். முகமது என்கிற பெயரை என் கையால் நான் நீக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்கள்.
உடனே இரசூல் (ஸல்) அவர்கள் , கூடி இருந்த சஹாபாக்கள் இடம், அந்த உடன்படிக்கையில் குறைஷிகள்
நீக்கும்படி கூறுகிற முகமது இரசூலுல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்த இடம் எது என்று காட்டித் தரும்படி
கேட்டுக்கொண்டார்கள். எழுதப் படிக்கத்
தெரியாத உம்மி நபி நமது நாயகம் (ஸல்) அவர்கள் என்பதற்கு இந்த நிகழ்வும் ஒரு
சான்று. அதன்படி சஹாபாக்கள் காட்டிய இடத்தில்
இருந்த தனது பெயரை தனது கரங்களால் நீக்கினார்கள் என்று வரலாற்று நிகழ்வை
பேராசிரியர் அவர்கள் கூறி முடித்தார்கள். முகமது என்கிற பெயரை நீக்கும்படிக் கேட்ட பள்ளி மாணவரின் பெற்றோர் மூலம் நமக்குப்
பகிர்வதற்கு ஒரு உணர்வு பூர்வமான நல்ல
வரலாற்றுச் செய்தி கிடைத்தது.
தொடர்ந்து
முகமது என்கிற பெயர் தொடர்பாக, நூர்
முகமது அவர்கள் மீண்டும் மர்ஹூம் முகமது அலிய ஆலிம் சம்பந்தமான ஒரு செய்தியைச் சொல்லிச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்கள். அதாவது நமதூரில் , மர்ஹூம் M.B. முகமது என்கிற பெருமகனார் வாழ்ந்திருந்தார்கள். ஒரு குறிப்பிட்ட காலக்
கட்டத்தில் அதிரையில் இருந்த இளைஞர்களின் – அவர்களின் குடும்பத்தினரின் வாய்களில் புகழ் பெற்ற பெயராய் புகுந்து
புறப்பட்ட பெயர் இந்தப் பெயராகும். இன்று சிறந்த வாழ்வைப் பெற்று இருக்கக்கூடிய
அதிரையர்கள் பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி நல்ல வாழ்வுக்கு அடித்தளம் அமைத்த பெருமைக்குச் சொந்தக்காரர். இவர்களை மரியாதை நிமித்தமாக அனைவருமே MB மாமா என்றே அழைப்பார்கள்.
ஒருமுறை வெளியூர்க்கார முஸ்லிம்
ஒருவர் MB மாமா அவர்களைக் காண்பதற்காக அவர்கள் வீட்டைத் தேடி வந்து கொண்டிருந்தார்.
வந்தவர் மர்ஹூம் முகமது அலிய் ஆலிம்
அவர்களை வழியில் சந்திக்க நேரிட்டது. அவர்களிடம் MB மாமா
வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டிருக்கிறார். அதற்கு முகமது அலிய
ஆலிம் அவர்கள் MB மாமாவா அது யார்? என்று கோபத்துடன்
கேட்டுவிட்டு அல்லாஹ்வின் இரசூல் உடைய பெயரான முகமது என்கிற பெயரையும் அவர்களின்
தம்பிக்கு அஹமது என்கிற பெயரையும் சூட்டி இரு சகோதர்கள் முகமது, அஹமது என்று இருக்கும்போது இது என்ன MB மாமா தம்பி மாமா என்று சொல்லி பெயர்களை சிதைக்கிறீர்கள் என்று சினத்துடன் தனது வருத்தத்தை சொல்லிவிட்டு அவர்களின்
வீட்டுக்குச் செல்ல வழியையும் காண்பித்தார்களாம். ஆம் ! மூத்தவர் MB மாமா என்று அன்புடன் அழைக்கப்பட்ட
முகமது அவர்கள். இளையவர் நமது பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய பன்னூலாசிரியர்
அதிரை அஹமது காக்கா அவர்கள்.
இப்படி
விலாசங்களால் அழைக்கப்பட்டு பல நல்ல பெயர்கள் நமது வட்டாரங்களில்
சிதைக்கப்பட்டிருக்கின்றன. பெயர்களை
சுருக்கிக் கூப்பிடுவதால் புனிதமான இறைவனின், அவனது இரசூலின், தியாக சஹாபாக்களின்,
வரலாற்று நாயகர்களின் பல அழகிய பெயர்கள்
வெளிக்குத் தெரியாமலும் உச்சரிக்கப்படாமலும் மறைந்து விடுவதுடன் அதே பெயர்கள்
அடுத்த தலைமுறைக்கும் வைக்கப்படும்போது
அர்த்தங்கள் மாறியும் தோற்றம் தருகின்றன. புகழ்பெற்ற காதர் முகைதீன் அப்பா அவர்கள்
பெயர்கூட கார்மீன் என்றும் ஹாஜா முகைதீன் என்பது ஹாஜாமீன் என்றும் முகமது கனி
நாச்சியார் என்பது மெய்யனக்கநிச்சியா என்றும் அஹமது கனி என்பது ஆமைகனி என்றும்
பாக்கர் என்பது வாக்கூறு என்றும் அஹமது
முகைதீன் என்பது ஆவ்மீன் என்றும் முகமது முகைதீன் என்பது மொம்மீன் அல்லது மெளமீன் என்றும் வழங்கப்படுகின்றன. அல்லாஹ் நம்மை
மன்னிப்பானாக. அத்துடன் மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால் புனித மிக்க முகமது
என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது MD, MOHD . என்று சுருக்கி எழுதுகிறார்கள். இது அவசியம் தவிர்க்கப்படவேண்டிய முறைகேடு. அதையும்விட
மோசமான இன்னொரு பழக்கம் முகமது மற்றும் அஹமது ஆகிய பெயர்கள், சூட்டப்படுகிற பெயர்களின் முன்
பகுதியில் இருந்தாலும் அதைச் சொல்லி அழைப்பதை விட்டுவிட்டு பின் பகுதியில் உள்ள
பெயர்களை மட்டும் சொல்லி அழைப்பது.
உதாரணமாக முகமது ஹுசேன் என்று
பெயர் சூட்டப்பட்டு இருந்தால் வெறுமனே ஹுசேன் என்று மட்டும் அழைப்பது. அஹமது கபீர்
என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தால் வெறுமனே கபீர் என்று மட்டும் அழைப்பது. இதே
போல் சொல்லிக் கொண்டே போகலாம் என்றெல்லாம் நான் சொன்னேன். இதற்குப் பேராசிரியர் அவர்கள் தனது முழுப்பெயர் முகமது
அப்துல் காதர் என்றும் ஆனால் அவரை சுட்டி
அழைப்பவர்கள் அப்துல் காதர் சார் என்றும், காதர் சார்
என்றும்தான் அழைக்கிறார்கள் புனிதமான முகமது என்கிற பெயரை விட்டுவிடுகிறார்கள்
என்று வருத்தப்பட்டார். ஆனால் பேராசிரியர் அவர்களின் தகப்பனார் அவர்கள் தனது
மகனாரை அழைக்கும் போது முகமது அப்துல் காதர் என்று முழுப்பெயர் சொல்லி மட்டுமே
அழைத்ததை சிறு வயதில் இருந்தே நான் கேட்டிருக்கிறேன்; பார்த்து இருக்கிறேன்.
மேலும் சிலர் முகமது என்கிற பெயரை வழக்கு மொழியில் சிதைத்து மொம்மது என்றெலாம்
கூறுகிறார்கள். மலையாளத் திரைப்படத்துறையில் ஒரு புகழ் பெற்ற முஸ்லிம் நடிகர் இருக்கிறார். இவரது
முழுப்பெயர் முகமது குட்டி என்பதாகும் . ஆனால் இந்தத் திரைப்பட உலகினர் இவரை
அழைக்கும் பெயர் மம்முட்டி என்பதாகும். இப்படி மண்வெட்டி, கோடாரி,கலப்பை, அலவாங்கு என்றெல்லாம் இஸ்லாத்தில்
பெயர்கள் இருக்கின்றனவா என்று கேட்க
விரும்புகிறேன். மிகவும் துரதிஷ்டமான
நிலைமைகள்.
அரபு
நாடுகளில் வேலைக்குச்சென்றிருக்கும் நண்பர்களுக்குத் தெரியும். அரபிகள் நம்மை
பெயர் சொல்லி அழைக்க வேண்டிய தேவை இருந்தால் நாம் எந்தப் பெயரை உடையவராக
இறந்தாலும் நமது பெயரில் முகமது என்று இருந்தால் “ யா முகம்மத் !” என்றே
அழைப்பார்கள். சில நேரங்களில் நமது பெயர்கள் அவர்களின் நினைவில் இல்லாவிட்டாலும் நாம் முஸ்லிம் ஊழியர்களாக
இருக்கும்பட்சத்தில் நம்மை நோக்கி,” முஹம்மத்! “என்றே அழைக்கும் பழக்கத்தை
இயல்பாகக் கொண்டிருப்பார்கள்.
இதனைத் தொடர்ந்து
முகமது என்கிற பெயர் சில பேரரசர்கள்
மற்றும் மூதறிஞர்களால் எவ்வளவுதூரம் புனிதமாக கருதப்பட்டது என்பதற்கு ஒரு
வரலாற்றுச் செய்தியை பேராசிரியர் அவர்கள்
கூறி புளகாங்கிதம் அடைய வைத்தார்கள்.
இந்தியாவைக்
கட்டியாண்ட ஒளரங்கசீப் ஒரு மிகச்சிறந்த மார்க்க நெறியாளராக வாழ்ந்தார். அவருக்குப்
பணியாளராக இருந்தவர் பெயர் ‘முகமது குல்லி’
என்பதாகும். எப்போது எது தேவையாக இருந்தாலும் மாமன்னர் ஒளரங்கசீப் தனது பணியாளரை ‘முகமது குல்லி’ என்றே பெயர் சொல்லி அழைத்துக்
கட்டளைகள் இடுவது வழக்கம். சில நேரங்களில் அப்படி பணியாளர் தேவைப்படும் போது முகமது குல்லி என்று
அழைக்காமல் வெறுமனே ‘குல்லி’ என்று மட்டும் அழைப்பார். அப்படி வெறுமனே ‘குல்லி’ என்று அழைக்கப்படும் போதேல்லாம் உடனே வழக்கமாகவே பணியாளர் மாமன்னர் ஒலுச் செய்வதற்காக தண்ணீரைக் கொண்டு விரைந்து வருவார். மன்னர் ஒலுச் செய்து முடித்ததும், “பாத்திரத்தை
எடுத்துக் கொண்டு போ முகமது குல்லி” என்று முகமதை சேர்த்துக் கூறுவார். இதில்
இருந்து நாம் அறியும் செய்தி என்னவென்றால் மாமன்னர் ஒளரங்கசீப் ஒலு இல்லாமல்
முகமது என்கிற பெயரை தனது வாயால் கூட உச்சரிக்கமாட்டார் என்பதே ஆகும். முகமது
என்கிற இந்தப் பெயர் அவ்வளவு புனிதமும் புகழும் மேன்மையும் வாய்ந்தது ; இது ஒளரங்கசீப் மன்னருக்குப்
புரிந்தது; நம்மில்
பலருக்குப் புரியவேண்டும்.
இன்ஷா
அல்லாஹ் இரண்டாம் அமர்வின் இந்தக் கலந்துரையாடல் தொடர் அடுத்த வாரம் நிறைவுறும்.
இபுராஹீம் அன்சாரி
12 Responses So Far:
ஒரு யதார்த்தமான சந்திப்பைக்கூட உபயோகமான ஆய்வாக்கமுடியும் என்பதற்கான உதாரணம் இந்தத் தொடர்!
எத்துணை சத்தான அரட்டை! நீங்கள் நால்வரும் நண்பர்களா நடுவர்களா? நிறைய விஷயங்களுக்குத் தீர்வுகளைச் சொல்லி முடிக்கிறீர்களே!
எம்பி முஹம்மது மாமாவுக்கு நன்றிக்கடன் படாத நம்மூர்வாசிகள் மிகக்குறைவு. ஏராளமானோருண்டு, என்னையும் சேர்த்து.
அருமையான பதிவு.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!
- சபீர் அஹ்மது :-) அபுஷாஹ்ருக்
இந்தக் கட்டுரையில், பாசத்திற்குரிய எங்கள் பெரிய காக்காவை (எம்.பி.மாமா) நினைவுகூர்ந்திருப்பது குறித்து நான் டாக்டர் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
டாக்டர் அவர்களே! குடும்பப்பெயரையும் தந்தையின் பெயரையும் சேர்த்தெழுதும்போது வேண்டுமானால் பெயர் நீளமாகத்தோன்றலாமே தவிர, ஒரு மனிதனுக்கு ஒரு பெயர்தான் என்பதற்கு ஆதாரம் அல்-குர் ஆனிலேயே நாம் காணலாம்.(உ-ம்: ஆதம், மூஸா, முஹம்மத்)
இறைவனுக்கு அடிமை என்று பெயர்வைக்க விரும்பினால் மட்டும் அல்லாஹ்வின் அழகிய பெயர்களுக்கு முன்னால் 'அப்துல்' சேர்த்துக் கொள்ளலாம்.
எம்பி முஹம்மது மாமாவுக்கு நன்றிக்கடன் படாத நம்மூர்வாசிகள் மிகக்குறைவு. ஏராளமானோருண்டு, என்னையும் சேர்த்து.
அருமையான பதிவு.
நல்ல ஆய்வும் அலசலும்!
இவ்வளவுக்கு மத்தியில்,
என் மகன் பெயர் முஹம்மது சேக்காதி ஆனால்
பெரும்பாலோர் அழைப்பது முஹம்மது என்று மட்டுமே.
அல்ஹம்துலில்லாஹ்!
//அரபு நாடுகளில் வேலைக்குச்சென்றிருக்கும் நண்பர்களுக்குத் தெரியும். அரபிகள் நம்மை பெயர் சொல்லி அழைக்க வேண்டிய தேவை இருந்தால் நாம் எந்தப் பெயரை உடையவராக இறந்தாலும் நமது பெயரில் முகமது என்று இருந்தால்///
என்னுடைய முதலாளி இதுநாள் வரை என் வாப்பா(வின் பெயரை)வைத்ததான் அழைக்கிறார் என்னை அவர் அழைக்கும்போதெல்லாம் ! :)
கூட வேண்டியவர்கள் கூடிப் பேசினால் கொள்கை முடிவுகள் கூட எடுக்கலாம் !
நல்ல உதாரனம் இந்தக் கலந்துரையாடல் !
அருமையான பதிவு.
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பானவர்களே!
ஒரு சிறு திருத்தம்.
//அதன்படி சஹாபாக்கள் காட்டிய இடத்தில் இருந்த தனது பெயரை தனது கரங்களால் நீக்கினார்கள்//
என்ற வரிகளில் இரசூலுல்லாஹ் என்ற வார்த்தையையும் தனது கரங்களாலே நீக்கினார்கள் என்று இருந்து இருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன்.
சுட்டிக்காட்டிய தம்பி நூர் முகமது அவர்களுக்கு மிக்க நன்றி.
நூர் முஹம்மது காக்காவை(யே) கருத்தாடலில் காணோமே !?
சவுதிக்கு திரும்பியதும் எதிர் பார்க்கலமோ !?
கட்டுரையை படித்ததில் நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன்
அஸ்ஸலாமு அலைக்கும். மூழ்கி எழுந்தால் கை நிறைய முத்து குவியல்!அல்ஹம்துலில்லாஹ்.
கட்டுரையை படித்ததில் நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் மாமா
நல்ல கலந்துரையாடல்
அருமையான விசயங்கள் தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்களும்,துவாவும்
Post a Comment