Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என் கண்ணான வாப்பாவே!!! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | December 19, 2012 | ,

ஒரு வயதான வாப்பாவும், வாலிபமான மகனும் தன் வீட்டின் பின்புறமுள்ள கொல்லைப்புற பூங்காவில் பொழுது சாயும் நேரம் அங்கு அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்திருந்தனர். மகனோ அவனுக்கு சுவராஸ்யமும், புத்துணர்ச்சியும் தரும் ஏதோ ஒரு சமாச்சாரத்தை தன் மொபைல் ஃபோனில் பரவசமாய் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் வாப்பாவும் அவனருகில் அமர்ந்து அந்த சாய்ங்காலக்காற்றில் தன் பழைய மலரும் நினைவுகளை அமைதியாய் அசைபோட்டுக்கொண்டிருந்தார். 

அந்த வயதான வாப்பாவிற்கு வயது முதிர்ச்சியால் கண்களில் கொஞ்சம் புரை விழுந்து தூரத்தில் இருப்பவை பனிமூட்டத்தில் நம் கண்களுக்கு மங்கலாக தெரிவது போல் தான் தெரியும் எல்லாமே. வயதாகி விட்டதால் கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து அதனால் வரும் செலவின் மூலமும், சொட்டு மருந்து மற்றும் இன்ன பிற தனி கவனிப்பின் மூலமும் தன் மகனுக்கும், வீட்டினருக்கும் சிரமம் ஏற்படுத்த விரும்பவில்லை. அப்படியே காலத்தை கழித்து விட்டு போய்ச்சேரவே எண்ணிக்கொண்டிருந்தார். 

அப்படி அவர் அந்த இருக்கையின் அருகில் தன் மகனுடன் அமர்ந்திருந்த சமயம். அருகிலுள்ள செடியின் நுனியில் ஒரு அசைவும், கிச் கிச் என்ற சப்தமும் இருந்தது. ஏதோ ஒரு பறவை தான் என்றபோதிலும் அது என்ன பறவை? என சரிவர கண்களுக்கு தெரியவில்லை. அதை கவனித்த அந்த வயதான வாப்பா அது அங்குமிங்கும் பறந்து திரிவதை கவனித்தார். பிறகு அருகில் மொபைல் ஃபோனில் மூழ்கி இருந்த மகனிடம் அமைதியாய், தம்பீ! அது என்ன? என்று வினவினார். அதற்கு அவன் எவ்வித உடல் அசைவும் இன்றி திரும்பி பார்க்காமலேயே சப்தமின்றி சிட்டுக்குருவி என்றான். 

அது அப்படியே மேலே பறந்து தலைக்கு மேலுள்ள மரக்கிளையில் வந்தமர்ந்தது. இன்னும் தெளிவுறாத வாப்பா, அதே கேள்வியை அவனிடம் அமைதியாய் கேட்டார். அதற்கு அவன் தன் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு 'சிட்டுக்குருவிப்பா....' என்றான். 

அது அருகிலேயே முன்தரையில் வந்தமர்ந்து எதையோ கொரித்துக்கொண்டிருந்தது. இன்னொரு முறை கேட்டுத்தெளிய மகனிடம் மெல்லிய குரலில் அது என்ன? வென கேட்டார். 

உடனே வெகுண்டெழுந்த மகன் கடும் சினம் கொண்டு துப்பாக்கியின் குழல்களிலிருந்து குண்டுகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்வது போல் தன்னை ஈன்றெடுத்த வாப்பாவை நோக்கி "எத்தனை முறை சொல்வேன். அது ஒரு சி. ட்.டு.க்.கு.ரு.வி. என்று, ஏன் உங்களுக்கு வெளங்கித்தொலையமாட்டிக்கிது? வயசான காலத்தில் இப்படி ஏன் என் உசிரை வாங்குகிறீர்கள்? என வாய்க்கு வந்தபடி அது ஒரு பெரும் இடைஞ்சலாக கருதி வாப்பாவை படபடவென சரவெடி போல் கண்டபடி திட்டித்தீர்த்து விட்டான். 

அதை கேட்டு மனம் உடையாமல் அமைதியாய் இருக்கையிலிருந்து எழுந்து தன் வீட்டினுள் சென்ற வாப்பாவை நோக்கி, எங்கே போறீங்க? என்றான். அதற்கும் அவர்கள் அங்கேயே இரு, சிறுது நேரத்தில் வருகிறேன் என தன் கை சைகையில் காட்டிச்சென்றார். 

வீட்டினுளிலிருந்து வெளியே வந்த வாப்பா கையில் ஒரு பழைய டைரியை எடுத்து வந்து தன் மகனிடம் கொடுத்து அதில் எழுதியுள்ளதை படிக்கச்சொன்னார். மகனும் அவர் படிக்கச்சொன்னதை படிக்க ஆரம்பித்தான். 

'என் மகன் இளையவனாக, சிறு பாலகனாக இருந்த சமயம் செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கும் என் அருகே குடுகுடுவென ஓடி வந்து அங்குமிங்கும் பறந்து திரியும் வீட்டுப்பறவையான சிட்டுக்குருவியை பார்த்து அது என்னா வாப்பா? என தன் மழலை மொழியில் என்னிடம் கேட்பான். நானும் அவனை அப்படியே கட்டி உச்சி முகர்ந்து தலைமுடியை தடவி அது ஒரு சிட்டுக்குருவி என செல்லமாய் சொல்லுவேன்.' 

'சிறிது நேரத்திற்குப்பிறகு அதே கேள்வியை என்னிடம் ஓடி வந்து கேட்பான். நானும் ஆசையாய் அவனை கட்டித்தழுவி மடியில் அமரவைத்து அது ஒரு சிட்டுக்குருவி என அன்பாய் சொல்லுவேன். இப்படி கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் 21 தடவைகளுக்கு மேல் என்னிடம் வந்து 'அது என்னா?' என்று கேட்டிருக்கிறான். இப்படி பல முறை என்னிடம் ஓடி வந்து கேட்டுச்செல்வதால் அவன் பிஞ்சு உள்ளம் புத்துணர்சி பெறும் நல்ல ஒரு  விளையாட்டாய் அவனுக்கு இருந்தது. அதை எவ்விதத்திலும் நாம் கெடுத்து விடக்கூடாது என நான் முகம் சுளிக்காமல் முகமலர்ச்சியுடன் கேட்கும் ஒவ்வொரு முறையும் 'அது ஒரு சிட்டுக்குருவி' என பதில் கூறி வந்திருக்கிறேன்.' என்று அந்த வாலிபன் அதிலுள்ளபடி படித்து முடித்து தன் வாப்பாவை அமைதியாய் நோக்கினான். 

உடனே தன் மேல் இவ்வளவு அளப்பரிய அன்பை எவ்வித தடையின்றி, சினமின்றி, சிரமமின்றி எக்காலத்திலும் பொழியும் அந்த வயதான வாப்பாவை கட்டித்தழுவி நெற்றியை முத்தமிட்டு அவர் தோலில் அப்படியே சிறுவன் போல் சாய்ந்து கொண்டு தான் கடுகடுப்பாக நடந்து கொண்ட செயலுக்காக கண்ணீர் சிந்தினான். அந்த வாப்பாவின் கழுத்து சட்டையும் இவன் கண்ணீரால் நனைந்தது. அதனால் வாப்பாவின் உள்ளமும் குளிரிச்சியடைந்தது. 

நேரம் ஒதுக்கி மேற்கண்ட கட்டுரையை படித்த நீங்கள் இத்துடன் இணைத்துள்ள சிறிய ஆவணப்படத்தின் காணொளியை தவறாமல் காணத்தவறாதீர். அதை மையமாக வைத்தே மேற்கண்ட கட்டுரையை எழுதியுள்ளேன். படித்ததும் தங்களின் மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் அறியத்தாருங்கள். 


பெற்றோருக்கு உண்மையில் கீழ்படிந்து நடக்கும் நல்ல பிள்ளைகளால் இப்படி அண்மையில் அமெரிக்காவின் ஆரம்பப்பள்ளியில் தன் பெற்றோரை கொடூரமாக கொன்றதுடன் பள்ளியின் பச்சிளம் பாலகர்களை கொல்லும் சம்பவங்கள் போல் நடைபெறாது என்பதே நிதர்சனமான உண்மை.  

திடீரென பெய்த மழையில் பள்ளியிலிருந்து நனைந்து வீடு வந்த ஒரு சிறுவனைக்கண்டு வீட்டிலுள்ளவர்கள் எல்லோரும் ஏசினர். ஆனால் தாயோ உடனே துணியை எடுத்து வந்து சிறுவனின் தலையை துவட்டி மழையை ஏசினாள்.

எனவே இவ்வுலகில் கலப்படம் செய்ய முடியாத ஒன்று ஒவ்வொரு தாயும், தகப்பனும் தன் பிள்ளைகளுக்கு செலுத்தும் பரிசுத்த அன்பாகும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

11 Responses So Far:

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

படித்துக்கொண்டிருக்கும் பொழுதே கண்ணீர் வந்து விட்டது தந்தையி பொருத்தத்தில் தான் அல்லாஹ்வின் பொருத்தம் இருக்கிண்றது

Abdul Razik said...

We never compare the Maternal and Paternal way relationship with other in this world. No one can trace this. Fantastic article, Lot of thanks to Brother Naina for revealed a nice example for Paternal love. There is an indirect estimation appears in this article regarding drawbacks of scientific technology too.

Abdul Razik
Dubai

Shameed said...

சிட்டுகுருவி கூடு கட்டி பார்த்திருக்கின்றோம் நம்ம MSM நெய்னா சிட்டு குருவியை வைத்து பாசக்கதையை "பின்னி"எடுத்துவிட்டார்

Iqbal M. Salih said...

ஸதக்கத்துல் ஜாரியா: தந்தைக்காகவும் தந்தையின் பாவமன்னிப்புக்காகவும் துஆ செய்துகொண்டிருக்கும் நற்பண்புகளுடைய மகன்கள், மகள்கள் (மிஷ்காத்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n) மிகவும் அற்புதமான ஒரு நினைவூட்டல்!

இக்பால் காக்கா சுட்டிக்காடிய நபிமொழிக்கேற்ப... நாமும் நன்மக்களாக இருக்க அல்லாஹ் அருள்புரிவானாக

இன்ஷா அல்லாஹ் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வயதானவர்களை குழந்தையைப் போல பராமரிக்க வேண்டும்!

Yasir said...

சிறந்த ஆக்கம் நண்பரே...

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்ல படிப்பினைக்குரிய ஆக்கம். இதில் அந்த தந்தை தனது டைரியை தனது மகனிடம் காட்டியபின் அந்த மகன் தனது தவறை உணர்வது வரவேற்க தக்கது. ஆனால் நம்மில் பெரும்பாலோர் பெற்றோரை அவர்களின் மரணம் நெருங்கும் வரைக்கூட இதுபோல் தவறை திருத்திக்கொள்ள முன்வராதது வருந்தத்தக்கது.
நாமும் ஒரு காலத்தில் இதுபோல் வாலிபத்ட்ள்ஹிலிருந்து முதுமையை அடைவோம் என்பதனை அவர்கள் உணர வேண்டும்.

sabeer.abushahruk said...

அற்புதமான நினைவூட்டல், தம்பி நெய்னா.

எனக்கென்னவோ இதிலுள்ள காணொளியில் சற்றே செயற்கையான அன்பும் நெய்னாவின் நேரேஷனில் எதார்த்தமான பாசமும் தென்படுகிறது.

sabeer.abushahruk said...

தொடர்புடைய உணர்வு கீழே:

இருப்பு!

முற்றத்துக்
கயிற்றுக்கொடிக்கும் 
வீட்டிற்குமென
மாறி மாறி
உலர்த்தியும்
விட்டுவிட்டுப் பெய்த
தூறலின் ஈரம்
மிச்சமிருந்ததால்

இரண்டு ஆண்டுகளுக்குமுன்
இறந்துபோன
வாப்பாவின்
சட்டையொன்றை
உம்மாவிடம் கேட்க
வாப்பாவுக்கு
ரொம்பப் பிடித்ததாக
தந்த சட்டை...
நான் பிரயோகித்துப்
புறக்கனித்துக்
கழட்டிப்போட்ட ஒன்று!

தென்னந்தோப்பில்
கரும்பச்சையாய்
செழிப்பாயிருந்த
ஒரு வரிசை மரங்களைக்
காட்டி 
புருவம் சுருக்க
அவை
வாப்பா நட்டவை
என்றான் தோட்டக்காப்பாளன்!

முன்முற்றத்தில்
தலைவாசலுக்கு வலப்புறம்
பந்தல்பிடித்து
மாடிவரைப் படர்ந்த
அவர் நட்ட
மல்லிகைக்கொடியில்
மொட்டவிழும்போதெல்லாம்
வீட்டினுள்
வாப்பா வாசம்!

எதிர்மனையில்
அவர் நட்ட
வேப்பமர நிழலில்
உம்மா அமர்ந்து
வெற்றிலை போடும்போதும்
அவர் விதைத்த
சப்போட்டா
பழங்கள் கொழிக்க
பறித்துப் பாதுகாக்கும்போதும்
உம்மா
ஒற்றையாய் உணர்வதில்லை!

அவர் மாற்றியமைத்த
மாடி பால்கனி...
பிரித்து வேய்ந்த
பின்முற்றத்துக்
கீற்றுக்கொட்டகை...
வீட்டின்
இடமும் வலமுமாய்
இட்டு வளர்த்த
கொய்யாவும் மாதுளையும்...
பேரனின்
முழங்கால்
சிராய்த்த
கற்கள் பொதிந்த
தெருவையே
மெழுகிய
சிமென்ட் தளம்...
சொத்துப் பத்திரங்களின்
கிழே
இடது கோடியில் கையெழுத்தாக...
காரின்
உட்கூரை வேலைப்பாடுகள்...
வீட்டுக்
கதவின் கைப்பிடி...

உம்மாவின்
வெண்ணிற ஆடை...
வெறும் கழுத்து...
என
எங்கும்
எதிலும்
வாப்பாவின் இருப்பு!

அப்துல்மாலிக் said...

முதியோர் இல்லங்கள் அதிகமாக வளர்ந்து வரும் இந்த சமயத்தில் நெய்னாவின் இந்த ஆக்கம் சிந்திக்கவேண்டிய ஒன்று...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு