Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இரு கல்வியாளர்கள், ஒரு கலைக்களஞ்சியம், ஒரு கட்டுரையாளர் - கலந்துரையாடல் ! - 8 நிறைவுறுகிறது! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | December 08, 2012 | , , , ,

பகுதி : எட்டு

கலந்துரையாடல் தொடர்ந்தது. அதற்கு  முன்   பேராசிரியர் தனது பணியாளரை அழைத்து ஆளுக்கு ஒரு ஹனி கேக் , மணி காராபூந்தி  மற்றும் தேநீர் கொண்டு வரும்படிப் பணித்தார். சும்மா சொல்லக்கூடாது ஹனி கேக் நன்றாகவே இருந்தது. தேநீரை சிப்பிக்கொண்டே பேச ஆரம்பித்தோம்.

தேநீர் வேளை என்பதால் கலந்துரையாடலும்  சற்று ரிலாக்ஸாக இருந்தது. சில நேரங்களில் நாம் சொல்லுகின்ற அல்லது எழுதுகின்ற வார்த்தைகள் வேறொரு அர்த்தம் கற்பித்து விடுவதால் நாம் உண்மையில் நினைத்ததற்கு முழுக்க முழுக்க  எதிர்மறையான விளைவுகளை  விளைவித்துவிடுவதாக ஹாஜா முகைதீன் சார் அவர்கள் கூறினார்கள். அதை வைத்து பேராசிரியர் ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்கள். சில காரணங்களால் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களின்  உண்மைப் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன.

அந்தக் காலம் இன்று போல் தொலை/ அலைபேசிகள் உபயோகிப்பது இல்லாத காலம். தொடர்புகளுக்குக் கடிதங்களை மட்டுமே பயன்படுத்தி வந்த காலம். எப்படியும் தொலைபேசியில் பேசித்தான் ஆகவேண்டுமென்ற  கட்டாய நிலைமை இருந்தால் நமதூர் தபால் நிலையத்தில் கால் புக் செய்துவிட்டு கட்டுச் சோற்றுடன் காத்திருக்க வேண்டும்.     நமதூரைச் சார்ந்த ஒரு இளைஞர் நீண்ட நாட்கள் மும்பையில் தங்கி வியாபாரம் செய்துவந்தார். அவருடைய பெற்றோர்கள் அவருக்காக உள்ளூரில் குடும்பத்திலேயே  ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவேடுத்துப்  பேசி வைத்து இருந்தார்கள். ஆனால் மகனின்  எண்ணம்   வேறுவிதமாக இருந்தது. மும்பையில் ஒரு பெண்ணின் மீது அவர் நேசம் கொண்டிருந்தார். அந்தப் பெண்ணையே மணமுடிக்கத்  தான் முடிவு செய்து அந்தத் திருமணமும் உடனே மும்பையிலேயே நடத்தபபடவேண்டுமென்று குறிப்பிட்டு பெற்றோர்களின் அனுமதி வேண்டி ஒரு கடிதம் எழுதி இருந்தார். கடிதத்தைப் படித்த இளைஞரின்  தகப்பனாருக்குப் பெரும்  கோபம் வந்து விட்டது. உடனே ஒரு கடிதம் வாங்கி “ உன் இஷ்டம் போல் செய்து கொள்; எங்களிடம் கேட்கவேண்டியதில்லை “ என்று கோபமாக  பதில் எழுதிப் போட்டுவிட்டார். கடிதம் மகனிடம் சென்று சேர்ந்ததும் மகனுக்குப் பெருத்த மகிழ்ச்சி. ஆம்! தந்தை கோபமாக உன் இஷ்டம் போல் செய்து கொள் என்று எழுதி இருந்ததை,  மகன் தனது தந்தை தனக்கு  அனுமதி வழங்கிவிட்டதாக   அர்த்தம் கற்பித்துக் கொண்டார். மும்பையிலேயே  திருமணமும் முடித்துக் கொண்டார்.   புதிய மனைவியுடன் அதிரைக்கு வந்தவரைக் கண்டு  சத்தத்துடன் சாத்தப்பட்ட கதவே வரவேற்றது. இப்படி அர்த்தம் அனர்த்தமான செய்தியை சிரிப்பு ஒலிகளுக்கு இடையே பேராசிரியர் வழங்கினார்.

அடுத்து ஒரு சீரியசான விஷயம் .     

உலகில் உள்ள பல்வேறு இஸ்லாமிய பல்கலைக் கழகங்களைப் பற்றி அறிந்திருப்போர்களுக்கு  இலங்கையில் பெருவள என்கிற இடத்தில்  உள்ள நலீமியா இஸ்லாமிய பல்கலைக் கழகம் என்கிற பெயர் நிச்சயம் பரிச்சயம் இருக்கும்; கேள்வியுற்று இருப்பார்கள்; சென்று வந்திருப்பார்கள். அல்ஹாஜ் மர்ஹூம் முகமது இஸ்மாயில் முகமது நலீம் என்ற பெயர் படைத்த கொடை வள்ளல் நிறுவிய பல்கலைக் கழகமாகும். அறிவில் சிறியவர் போல் வாழ்ந்து இவ்வளவு பெரும் உண்மைகளை தன் வாழ்வில் காட்டிய அந்த மனிதர், வரலாறு மிக அருமையாகவே காணும் மனிதர்  என்பதில் சந்தேமில்லை.


தான் சம்பாதிக்கத் துவங்கியது முதல், பணத்தாலேயே இறைவனின்  பாதையில் போராடி வாழ்ந்த அந்த முஜாஹித்துக்கு அல்லாஹ் அருள் பாலிப்பானாக! சிறுபான்மை சமூகத்தின் முதல் முக்கிய அடிப்படை ஜிஹாத், செல்வத்தின் மூலமான ஜிஹாத் தான் என உணர்த்திய அம் மனிதர் எம் செல்வந்தர்களுக்கு முன்மாதிரியாக அமைவாராக..!


இஸ்லாமிய அறிவுப் வட்டாரங்களில்  திடகாத்திரமான பல பங்களிப்புகளை நலீமியா பல்கலைக்கழகத்தின்  மாணவர்கள் செய்தார்கள்; செய்கிறார்கள். நவீன இஸ்லாமிய சிந்தனையை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர்களும், அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பவர்களும் அவர்களே. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உருவாகிய ஸகாத் நிறுவனங்களுக்கு வழிகாட்டும் நூலொன்றை அவர்கள் தயாரித்து வெளியிட்டார்கள். இஸ்லாமிய பத்திரிகை, சஞ்சிகைகள் ஆரம்பித்து நடத்துகிறார்கள். இலங்கையின் இஸ்லாமிய இயக்கங்களின் உந்து சக்தியாவும், பல ஊர்களில் இஸ்லாமிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கும் சக்தியாகவும் அவர்கள் திகழ்கிறார்கள். வேறு பல துறைகளில் நுழைந்து, படித்து அரச நிறுவனங்களில் அமர்ந்து தன் சுயத்தை இழக்காது சமூக உணர்வோடு பணி புரியும் பல நளீமீக்களை நாம் காணமுடியும். ஆசிரியர்களாவும் அதிபர்களாகவும் இருந்து இஸ்லாமிய உணர்வோடும், சமூகப்பற்றோடும் உழைக்கும் நளீமிக்களையும் பரவலாக நாம் காண முடியும். அல்லாஹ்வின் பேரருளால் இந்த உலகில்  இஸ்லாமிய மாற்றத்திற்கு நளீமிக்களின் பங்களிப்பு மகத்தானது என்பதனை எதிர்கால வரலாறு இன்ஷா அல்லாஹ் நிச்சயம் பறைசாற்றும்.


நலீமியா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தைப் பற்றிய எனது இந்த அறிமுகத்தோடு பேராசிரியர் மற்றும் நூர் முகமது அவர்கள் கூறிய உணர்வுபூர்வமான விஷயத்துக்கு வருவோம்.

அதற்கு முன்  

4:23   حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُم مِّنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُم مِّن نِّسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُوا دَخَلْتُم بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ وَأَن تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ ۗ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا

4:23உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.

இஸ்லாமியத் திருமணச் சட்டங்களில் ஒரே தாய் இடம் பால் குடித்தவர்கள் தங்களுக்குள்  திருமணம் முடித்துக்கொள்ளக்கூடாது என்று தடை இருப்பதை நாம் அறிவோம். இது பற்றி மேற்காணும் மேற்கோள் உட்பட்ட திருமறையின் பல அத்தியாயங்களில் கூறப்பட்டு இருக்கிறது. இது ஒரு புறம்  இருக்க எதியோப்பியாவில் பெண்களுக்கு மார்பகத்தில் அதிகமான தாய்ப்  பால் சுரப்பதால் அவர்கள் படும் வேதனையை குறைக்கவும்  அத்தகைய எதியோப்பிய பெண்களுக்கு அளவுக்கு அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை கருவிகள் கொண்டு வெளியாக்கி அந்த தாய்ப்பால் விரயமாகப் போகாமல் இருக்க அதை தாய்மார்களிடமிருந்து சேகரித்து ,  பதப்படுத்தி நீர் வடிவப் பாலாகவும், பால் பொடியாகவும் மாற்றம் செய்து சந்தைப்படுத்தி வருகிறார்கள். இந்தத் தயாரிப்புகள்  இலங்கையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன . இது பற்றி அண்மையில் பல ஊடகங்களில் செய்திகள் வந்தன.   தொடர்ந்து படிக்குமுன் இந்த செய்தியை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 

நலீமியா பல்கலைக் கழகத்தின் மாணவர்  ஒருவர் கண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து இருந்தார். அந்த மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம்  இருந்து வந்தது. அந்த சந்தேகம் என்ன வென்றால் இஸ்லாமிய சட்டப்படி, ஒரே தாயின் பாலைக்குடித்தவர்கள் திருமணம் செய்யக்கூடாதே – இப்படி சந்தையில் விற்கப்படுகிற தாய்ப்பாலை எந்தத் தாயின் பாலை யார் குடித்தார்கள் என்றெல்லாம் தெரியாமல் குடித்து வளரும் முஸ்லிம் குழந்தைகள்   பெரியவர்கள் ஆனதும் ஒரு வேளை ஒரே தாயின் பாலைகுடித்த இருவர் திருமணம் முடித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளானால்,  இறைவனின் வாக்கு  பொய்யானதாக ஆகிவிடுமே என்பதே அந்த சந்தேகம். இவர்களுள் சில பிற மதக்காரர்களும் இருந்து இதை கேலியாகவும் பேசினார்கள். இந்த நிலையில் இது பற்றி சிகிச்சைக்காக வந்திருந்த நலீமியா பல்கலைக்கழகத்தின் மாணவர்  இடமே இதற்கு விளக்கம் கேட்டுவிட மருத்துவர்களும், பிற மதத்தினரும் சென்று அந்தக் கேள்வியை எழுப்பினார்கள். பிற மதத்தினரும் ‘ ஆஹா நல்லா மாட்டிக்கிட்டாங்க ’ என்று நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு சென்றார்கள். நலீமியா மாணவரிடம் சென்று கேள்வியைக் கேட்டார்கள். 

மாணவர் அதிகம் யோசிக்காமல் இதற்குரிய பதிலைச்  சொன்னார். அதுவும் அனைவரும் அயர்ந்து போகும்படி நெற்றியடியாக பதிலைச்  சொன்னார். அதாவது அல்லாஹ் தனது வேதத்தை தானே பொய்யாக்க மாட்டான் . இறைவனின் வாக்கும் சட்டமும் எல்லாக் காலத்துக்கும் எல்லா மக்களுக்கும் ஏற்றதாகவே இருக்கும் என்ற முகவுரையுடன் விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.

சொல் வளம் மிகுந்த அரபி மொழியில் அல்லாஹ் தனது வேதத்தை அருளினான். ‘குடிப்பது’ என்கிற பொருள் கொள்ளும் சொல்லுக்கு அரப் மொழியில் ‘ஷரபன்’, ‘ரலாஹ்’ என்கிற வார்த்தைகளை உபயோகிப்பார்கள். ஒரே தாய் இடம் தாய்ப்பால் குடித்தவர்கள் திருமணம் முடித்துக் கொள்ளக்கூடாது என்கிற இறைவனின் சட்டத்தில் இறைவன் உபயோகித்து இருக்கிற வார்த்தை ‘ரலாஹ்’ என்கிற வார்த்தையாகும். ‘ரலாஹ்’ என்கிற வார்த்தைக்கு   ஒரே தாயின்  மார்பகத்தில் ஊறும் தாய்ப்பாலை பசிக்காக  உதடு மற்றும் நாக்கு கொண்டு சப்பி உறிஞ்சிக் குடிப்பது என்பது  விரிவான பொருள் விளக்கமாகும். அதேநேரம் ‘ஷரபன்’ என்கிற வார்த்தைக்கு குடுவை அல்லது பத்திரத்தில் கலந்து குடிப்பது என்பது பொருள் விளக்கமாகும். இவ்விரு அரபி வார்த்தைகளுக்கும் வெளிப்படையாக ‘குடிப்பது’ என்று மட்டும் பொருள் எடுத்துக் குழப்பிக் கொண்டிருப்பவர்கள் இதை விளங்கிக் கொள்ள வேண்டும். ‘ரலாஹ்’ என்ற வார்த்தையின் உண்மைப்  பொருளின்படி பசிக்காக மார்பில் வாய்வைத்து பால் குடிப்பவர்களால்தான் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ள இயலாது/ கூடாது. மற்றபடி பாத்திரங்களில் கலந்து குடிப்பவர்கள் ஒரே தாயின் பாலைக் குடித்தாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதே அந்த விளக்கம். ( அரபு நாடுகளில் ஷிரப் சாய் ? டீ குடிக்கிறாயா? என்கிற வார்த்தை பிரசித்தம். ஷிரப் என்பது ஷரபன் என்பதன் கிளைச்சொல் – இருமலுக்கு ஒரு SYRUB  வாங்கிக் குடி என்பது நாம் அடிக்கடி  சொல்வது ) . இறைவனின் வாக்கில் பிழை இல்லை; புரிந்தவர்கள் தவறாகப் புரிந்து கொண்டதே சந்தேகத்துக்குக் காரணம்.

பேராசிரியர் அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்றிருந்தபோது மதினாவில் இருந்த  தமிழ் நேசர்கள் பேராசிரியரை சந்தித்து மதினாவில் உள்ள தமிழர்களின் அமைப்பு ஒன்றில் உரையாற்ற அழைத்துச் சென்றார்களாம். அந்தத் தமிழர்களின் அமைப்பில் ஏராளமான நலீமியா பல்கலைக் கழக மாணவர்களும் இருந்ததை கவனித்த பேராசிரியர் அவர்கள், மேற்கண்ட சம்பவத்தை பேச்சின் ஊடே கூறி அனைவரையும் மகிழ்வித்ததாக் கூறினார்கள்.    உண்மையிலேயே இந்த நிகழ்ச்சியை பேராசிரியருக்கு ஒருமுறை எடுத்துச் சொன்னவர் நமது கலைக் களஞ்சியம் நூர் முகமது  அவர்கள்தான். என்றோ அவர் சொன்னதை  நினைவில் வைத்து மதினாவில் பேசியது பேராசிரியரின் ஆற்றல். 

அதேநேரம் இதை எழுதும் முன்பு சில மார்க்க அறிஞர்களிடம் விவாதித்தபோது , தாய்ப்பாலை விற்பனை செய்வது இறைவனால் தடுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினார்கள். ஆனால் எதியோப்பியா போன்ற  நாட்டினர் இந்த விற்பனைச் செயலில் ஈடுபட்டிருப்பது விந்தையானதே. அதிக உற்பத்தி, பெண்களின் வேதனை, நாட்டின் வறுமை ஆகிய காரணங்களால் இந்த நாட்டினர் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம். தவிரவும் எதியோப்பியா ஒரு வறுமையான நாடு . இஸ்லாத்தை முழுக்கத் தழுவாத மக்கள் வாழும் ஆப்ரிக்க நாடு.  இது பற்றிய தெளிவான திருமறை மற்றும் ஹதீஸ் விளக்கங்களை சகோதரர்கள்  ஜெமீல், அலாவுதீன் போன்றவர்கள்  தந்தால் நாம் மேலும் விளக்கம் பெற உதவும். நாங்கள் கலந்துரையாடியதையே நான் எழுதியுள்ளேன். மேலும் விளக்கங்கள் வந்தால் நலமே. 

இறைவனின் சட்டங்கள் என்றைக்கும் பொருந்தும் என்பதற்கு நான் படித்த இலண்டனில் நடந்த  இன்னொரு சம்பவத்தை சொல்ல ஆரம்பித்தேன்.                

இலண்டன் மாநகரில் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் ஒரு நிறுவனத்தில் வேலை  செய்யும் அனைவருக்கும் அவர்களின் குடுமபத்தினருடன் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த நிறுவனத்தில் வேலை  பார்க்கும் பன்னாட்டு ஊழியர்கள் தத்தம் குடும்பத்தினருடன் வந்து இருந்தார்கள். அந்த விருந்தில் ஒரு  முஸ்லிம் குடும்பத்தினரும் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு அருகில் ஒரு வெள்ளைக்கார குடும்பத்தினரும் அமர்ந்து இருந்தனர். விருந்தில் ஆரம்பத்தில் எல்லோருக்கும் ஒயின் என்கிற திராட்சை ரசம் பரிமாறத்  தொடங்கினார்கள். முஸ்லிம் குடும்பத்தினர் அமர்ந்து இருந்த இடத்துக்கு வந்த  பணியாளர்கள் திராட்சை ரசம் நிரப்பிய மதுக் கோப்பையை நீட்டிய போது அவர்கள் அனைவரும் அதை வாங்க மறுத்துவிட்டார்கள். இதை அவர்களுக்கு அருகிலிருந்த அந்த வெள்ளைக்காரர் கவனித்துக் கொண்டார்.

பின்னர் அனைவரும் தட்டுகளில் உணவு வகைகளை எடுத்துக் கொண்டுவந்து  சாப்பிடத்தொடங்கியபோது முஸ்லிம் குடும்பத்தினர் தங்களின் கரங்களால் உணவை சாப்பிடத் தொடங்கினர். மற்றவர்கள் கரண்டி மற்றும் கத்தியை வைத்து கை படாமல் சாப்பிடும்போது இவர்கள் ஏன் கைகளால் சாப்பிடுகிறார்கள் என்று யோசித்த வெள்ளைக்காரர்,  அருகில் இருந்த முஸ்லிம் குடும்பத்தலைவரிடம் ,

“ஏன் கைகளால் சாப்பிடுகிறீர்கள் கரண்டியில் சாப்பிட்டால் என்ன ? “  என்று கேட்டார்.

முஸ்லிம் சொன்னார்

” எங்களின்  கைகளின் சுத்தத்தின் மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால் கைகளைக்கொண்டு சாப்பிடுகிறோம். நீங்கள் உபயோகிக்கும் கத்தி மற்றும் கரண்டிகளின் சுத்தத்தின் மேல் உங்களுக்கு உறுதி இருக்கிறது என்று நீங்கள் சொல்ல முடியுமா ?”  வெள்ளைக்காரர் மவுனமாக தலையைத் தொங்கப் போட்டார்.

சற்று நேரம் கழிந்தது. விருந்து முடிவுருவதற்கு அறிகுறியாக அனைவருக்கும் பழங்கள் பரிமாறப்பட்டது. முஸ்லிம் குடும்பத்தினர் திராட்சைப் பழங்களை எடுத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். இப்போது மீண்டும் வந்தார் அந்த வெள்ளைக்காரர்.

“ என்னாப்பா இது? திராட்சைப் பழம் சாப்பிடுகிறீர்கள்? ஆனால் இதே திராட்சையை வைத்து தயாரிக்கப்பட்ட ஒயினை குடிக்க மறுத்துவிட்டீர்கள். உங்கள் மார்க்கத்தின் முறைகள் குழப்பமாக இருக்கிறதே!” என்று கிண்டலடித்தார்.

உடனே முஸ்லிம் வெள்ளைக்காரர் இடம் கேட்டார்.

“ நான் உங்களிடம் ஒரு சில கேள்விகள் கேட்கலாமா?”

“ ஓ ! தாராளமாக”   

“ நீங்கள் இந்த விருந்துக்கு குடும்பத்தினருடன் வந்து இருக்கிறீர்களா?”

“ ஆமாம். இதோ என் மனைவி , மகள், மகன் ஆகியோர். “

“ஓஹோ! நல்லது. உங்கள் மகளை யார் பெற்றார்கள்?”

“ உங்களுக்கு என்ன கழன்றுவிட்டதா? இது என்ன கேள்வி? என் மகளை என்  மனைவிதான் பெற்றாள் அதற்கென்ன இப்போ?”

“ அதாவது திராட்சையில் இருந்து ஒயின் வருவதைப் போல் உங்கள் மனைவி இடமிருந்து உங்கள் மகள் வந்திருக்கிறாள் சரிதானே? “

“ ஆமாம்”

“ அப்படியானால் உங்கள் மனைவி இடம் நீங்கள் செய்யும் எல்லாச்  செயல்களையும் உங்கள் மகளிடமும் செய்வீர்களா?” என்று கேட்கவும் வெள்ளைக்காரரின் முகம் மேலும் சிவந்துவிட்டது.

“ எங்கள் மார்க்கம் எங்களுக்கு திராட்சைப் பழத்தை புசிக்க அனுமதித்து இருக்கிறது. திராட்சை ஒயினைக் குடிக்கத்  தடை விதித்து  இருக்கிறது. எங்கள் மார்க்கம் எங்களுக்கு காட்டும் வழி நல்லதாகவே இருக்கும்” என்று சொன்னார்.  வெள்ளைக்காரர் மவுனமாக, சிந்தனையுடன் இடத்தைக் காலி செய்தார்.

சரி நண்பர்களே! இப்போதைக்கு இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன். அன்புச் சகோதரர் நூர் முகமது அவர்கள் விடுமுறை கழிந்து சவூதி புறப்பட்டு விட்டார்கள். 

மறு அமர்வில் வேறு சில அறிஞர்களுடன் சேர்ந்து கலந்துரையாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம். அதுவரை ஸலாம் கூறி விடை பெறுகிறேன்.
நிறைவுற்றது
இபுராஹீம் அன்சாரி

12 Responses So Far:

crown said...

( அரபு நாடுகளில் ஷிரப் சாய் ? டீ குடிக்கிறாயா? என்கிற வார்த்தை பிரசித்தம். ஷிரப் என்பது ஷரபன் என்பதன் கிளைச்சொல் – இருமலுக்கு ஒரு SYRUB வாங்கிக் குடி என்பது நாம் அடிக்கடி சொல்வது ) . இறைவனின் வாக்கில் பிழை இல்லை; புரிந்தவர்கள் தவறாகப் புரிந்து கொண்டதே சந்தேகத்துக்குக் காரணம்.

--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அருமை இதுதான் இந்த முஸ்லிம்களின் மூளையின் "சிறப்பு" என்பதை அனைவரும் அறிந்து கொள்வது நலம்.

Ebrahim Ansari said...

அலைக்குமுஸ்ஸலாம்.

தம்பி கிரவுன், பின்னுட்டம் இட்டதுடன் அலைபேசியிலும் அழைத்துப் பாராட்டும் அத்துடன் அக்கரையிலிருந்து மிகுந்த அக்கறையுடன் சொல்லிய அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி செலுத்துகிறேன்.

Iqbal M. Salih said...

மாஷா அல்லாஹ்.
விரல் முனையில் இயற்கையிலேயே ஜீரணநீர் சுரப்பதையும் ஸ்பூனில் சுரக்காது என்பதையும்கூட நாம் எடுத்துச்சொல்லலாம்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆய்வுகள் பல்வேறு நல் கருத்துக்களின் களஞ்சியமே!
நூர் முகம்மது காக்கா எப்போ மீண்டும் வருவாக!

அதிரை சித்திக் said...

எழுத்தின் மூலம்
பிறப்பிக்கும் ஆனைக்கும்
சொல்லின் மூலம்
பிறப்பிக்கும் ஆனைக்கும்
எவ்வளவு வித்தியாசம்
என்பதை பேராசிரியர்
கூறியதை காக்காவிளக்கியது
சுவாராஸ்யம்

KALAM SHAICK ABDUL KADER said...

//நூர் முகம்மது காக்கா எப்போ மீண்டும் வருவாக!\\

உங்களின் அன்பான வருகைக்கும்; அறிவானப் பின்னூட்டங்கட்கும் ஏங்கிக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் அ.நி. வாசகர்களில் அடியேனும் ஒருவன்.ஊரில்-நேரில் பார்த்தும் நீண்ட நேரம் உரையாட முடியாமல் போய் விட்டது. இப்பொழுது ஊரில் இருக்கின்றீர்களா? சஊதியில் இருக்கின்றீர்களா? உங்களுடமும், டாக்டர் இ.அ.காக்கா அவர்களிடமும், பேராசிரியர் அவர்களிடமும் நேரில் உரையாடுதற் போன்ற ஓர் உணர்வை இவ்வாக்கத்தைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது என் மனக்கண்ணில் காட்சிகளாய் வருகின்றன. அப்படியொரு நடையில் டாக்டர் இ.அ. காக்கா அவர்களால் ஆக்கப்பட்டிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும், இவ்வாக்கம் “நிறைவுறுகிறது” என்று தலைப்பின் கடைசி வரிகள் என் மனத்தில் வலிகளாய் உணர்கிறேன். சிந்துபாத் தொடர்போல் அ.நி.யின் நிரந்தரத் தொடராக இம்முவேந்தர்-மூவறிஞர்களின் அறிவு நதிகளின் சங்கமம்-முக்கூடல் இருக்க வேண்டும் என்பதே என் பேரவா என்பதை ஈண்டுப் பதிவு செய்கிறேன்.

Ebrahim Ansari said...

அன்பான கவியன்பன் அவர்களுக்கு.

மிக்க நன்றி. நூர் முகமது அவர்களை இனி இரு வருடம் கழித்தே எதிர் பார்க்கலாம். பலராலும் ரசித்துப் பாதிக்கப்பட்டதாக நான் உணர்ந்த இந்த தொடரை நிறைவு செய்தது எனக்கும் வருத்தமே. ஆனாலும் நாங்கள் கலந்துரையாடிய செய்திகளை எழுதிவிட்டேன். இனியும் இப்படி ஒரு சந்திப்பு இறையருளால் இருக்கும் அப்போது மீண்டும் எழுதலாம்.

அண்மையில் ஒரு நண்பர் என்னை நோக்கி அடித்த ஒரு கமெண்ட்: உன்னை வைத்துக் கொண்டு எதுவும் பேச பயமாக இருக்குதப்பா. அடுத்த வாரம் அதிரை நிருபரில் அப்படிப் பேசியது கட்டுரையாக வந்துவிடுமோ என்று பயப்படவேண்டி இருக்கிறது என்று கூறினார். இதை ஒரு பாராட்டாகவே கருதுகிறேன். அல்லாஹ் பெரியவன்.

sabeer.abushahruk said...

அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஈனா காக்கா அவர்கள் உள்ளிட்ட இந்தக் கட்டுரைத் தொடரின் காரணகர்த்தாக்களே

நன்றி நன்றி நன்றி

(மூன்று நன்றிகளுக்கான காரணங்கள்:

நன்றி 1: 

உங்கள் வயதை அடைந்தால் மட்டுமே எங்களுக்கு வாய்க்க இருந்த வாழ்க்கையின் அனுபவங்களை மனமுவந்து சிரத்தையோடு பகிர்ந்துகொண்டமைக்காக.

நன்றி 2: 
பால்யகால பள்ளிக்கால நடப்புகளைப் பகிர்ந்துகொண்டதன் மூலம் ஒரு பெரிய ஹோம்ஸிக்கை தூண்டியதற்கு.

நன்றி 3: 

முத்தாய்ப்பாய் மார்க்க சிந்தனையோடு நிறைவு செய்தபோதும்  "மீண்டும் ட்டானிக் உண்டு" என்று நம்பிக்கை தந்ததற்கு.

Shameed said...

இந்தவாராம் அன்சாரி மாமா வாவாவா ராராரா ம்ம்ம்

Ebrahim Ansari said...

கவிஞர் சபீர் அவர்களுக்கு,

நீங்கள் அனுப்பியுள்ள மூன்று நன்றிகளை பேராசிரியர், உங்கள் ஹாஜமீ சார், நமது நூர் முகமது ஆகியோருக்கு ஆளுக்கு ஒன்றாகப் பிரித்துக் கொடுத்து விட்டேன். எனக்கு? நமக்குள் என்ன நன்றி?

ஒவ்வொருமுறையும் தெம்பூட்டும் உங்கள் கருத்துக்களுக்கும் கவிதைகளுக்கும் நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

பாராட்ட வார்த்தைகள் வரவில்லை இப்ராஹீம் அன்சாரி காக்கா ,அல்லாஹ்வை புகழ்கிறேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இரண்டு மூன்று நாட்களாக ! ஒரே !

நன்றி நன்றி நன்றி ன்னு சொல்லிகிட்டே இருக்கிற மாதிரி ஃபீலிங்க்...

இருந்தாலும் அதுவே திருப்தியாகவும் இருக்கிறது...

ஜஸாக்கல்லாஹ் காக்கா !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு