Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அன்புக் குறிப்புகள்... 19

அதிரைநிருபர் பதிப்பகம் | December 15, 2012 | , ,


அகர முதலாம் அம்மாவின் அன்பு
இகர இனிப்பாம் இல்லாளின் அன்பு
உள்ளம் உருகும் சகோதர அன்பு
கள்ள மில்லா குழந்தை அன்பு

முழுமதியாய் ஒளிரும் நபி(ஸல்)களின் அன்பு
முகமலர்ந்து காணும் ஈகையர் அன்பு
முதியோரிடம் காட்டணும்  பாசத்துடன் அன்பு
முதிர்சியின் அடையாளமே முழுமையான அன்பு

பிரியாமல் காப்பதுவும் அன்பு
பிரிந்தாலும் இணைப்பதுவும் அன்பு
புன்னகையின் உள்தோற்றம் அன்பு
புண்படச்செய்தால் பின் இரக்கமும் அன்பு

கொடுத்துப் பெறுவதால் நிலைத்திடும் அன்பு
கைமாற்றாய் பெறுவது இழுக்கான அன்பு
பாவமோ பழியோ பரிகாரமே அன்பு
சாபமோ சதியோ நல்லெண்ணமே அன்பு

காதலோ கல்யாணமோ அடிப்படையே அன்பு
கண்டதும் பணிவதுவும் அன்பு
காலமெல்லாம் கரையாது அன்பு
கனவிலும் உருப்பெறும் அன்பு

மலர்கள் மகரந்தமாய் தரும் அன்பு
மின்னல் மண்ணை முத்தமிடுவதும் அன்பு
மணமக்களின் மூலமே அன்பு
மதங்கள் போதிப்பதும் அன்பு

திருமறை போதிப்பதும் அன்பு
இரு கரமேந்தி வேண்டுவதும் அன்பு
இவ்வுலகம் வாழ்வதும் அன்பு
லவ் என்பதன் அர்த்தம் கூட அன்பு

வீழ்ந்தவரை தட்டிக் கொடுப்பதும் அன்பு
அழுதவரை தேற்றுவது கூட அன்பு
குழந்தைகளின் செய்கையெல்லாம் அன்பு
மழலையுடன் கொஞ்சுவதும் அன்பு

அகமதி யர் போற்றும் அன்பு
அகமதி லென்றும் அழியா அன்பு
முக மதில் அறியும் அன்பு
இக மதில் இகழாமற் காத்திடும் அன்பு

முகமதியர் முகமனால் ஏற்படும் அன்பு
இகமுழுமையும் இயக்கிடும் இறைவனின் அன்பு
சுகமிது நிலைக்க இருக்கணும் அன்பு
யுகமிதை வெல்ல என்றும் வேணும் அன்பு

துன்பம் கண்டவுடன் கண்ணீரும் அன்பு
இன்பம் கூடிட வழிதரும் அன்பு
அறத்துக்கும் வீரத்திற்கும் அன்பு
பிறர்க்கென வாழச் செய்வதும் அன்பு

இல்லார்க்கும் செலுத்தனும் அன்பு
இல்லந்தோறும் இருக்கணும் அன்பு
இல்லையென்று மூடிடா அன்பு
இவ்வாக்கம் ஆனதும் அழகுக் கவிஞர் அன்பு

M.H.ஜஹபர் சாதிக்

19 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் குறிப்பை
அன்பாய்க் குறித்த
அன்பின் கவிஞர்
அன்பைப் பெறுவோம்!

கீழே பதியப்பட்டுள்ள என் கவிதைப் போட்டிக் கவிதை அல்ல; போட்டிக்கான கவிதை. ஆம். “தமிழ்த்தோட்டம்” இணையதளம் நடத்திய கவிதைப் போட்டி (”அன்பு” என்னும் தலைப்பும் அவர்கள் கொடுத்தது தான்)




அன்பு

மனக்கேணியின்
வற்றாத ஊற்று
உயிர் கயிற்றால்
உணர்வு வாளியைக் கட்டி
கண்களாம் குடங்களில் ஊற்று
கண்ணீராகும் அன்பு ஊற்று

அள்ளிக் கொடுத்தால்
அளவின்றித் திருப்பிக்
கிடைக்கும் சூட்சமம்

பக்தி, பாசம், நட்பு, காதல்
பற்பலக் கிளைகள் கொண்ட
அற்புத மரத்தின் ஆணிவேர்

பூமிச் சுற்றவும்
பூமியைச் சுற்றியும்
பூர்வீக அச்சாணி

அரசனும்
அடிமையாவான்
கிழவனும்
மழலையாவார்

தட்டிக் கேட்கும் அதிகாரம்;
எட்ட முடியாத தூரம்
தட்டிக் கொடுக்கும்
அன்புப் பெருக்கால்
எட்ட முடியும் நெருக்கம்

பிள்ளைகளின் கிறுக்கல்களை
பிழைகளைப் பொறுக்கையிலே
கிடைக்கும் அங்கீகாரம்
படைக்கப்போகும் சரித்திரம்



அன்பும் அரவணைப்பும்
என்பும் அசைக்கும்
உருவமிலா உணர்வு


அடிமைப்படுத்தும் முத்தம்
அன்பு இசையின் ச்ப்தம்;
சப்தத்தின் இசைகளைப் போல
முத்தத்தின் வகைகளும் பல

புன்னகைக் கீற்று
அன்பென்னும் காற்று
அணைத்தல் இடியுடன்
பாச மேகங்களைக் கூட்டும்
நேச முத்த மழைக் கொட்டும்

அன்பின் தூது
முத்த மடல்
அனுப்பி வைக்க
ஏங்கும் உடல்


அடைக்கின்ற தாழ்களின்றித் திறந்த உள்ளம்
**** அதனுள்ளே பொங்குகின்ற அன்பு வெள்ளம்
தடையின்றி வெளியாகும் அன்பு ஊற்று
****தாகமெலாம் தீர்ந்திடவே அருந்திப் போற்று
படைத்தவனின் அன்பினிலே நூறில் ஒன்றே
***படைப்பினங்கள் வைக்கின்ற அன்பு என்றே
கிடைத்திட்ட வாய்ப்பான வாழ்வை யோசி
****கிளைகளையும் கேண்மையையும் அன்பால் நேசி

sabeer.abushahruk said...

எல்லாம் அன்பு மயம் என்பதை இதைவிட விலாவாரியாகச் சொல்லிவிட முடியாது.

எம் ஹெச் ஜே, ஸ்விட்ச் போட்டதும் கொட்டுவதுபோல கேட்டதும் கிடைத்திருக்கும் இந்த அன்புக்குறிப்புகள்தான் உங்களில் அடையாளங்கள் என்று அறிகிறேன்.

அறிந்ததையும் அனுபவிப்பதையும் பற்றியே இவ்வளவு ஆணித்தரமாக தெளிவாக சொல்லமுடியும்.

நீங்கள் அன்பை அனுபவித்து அதை அனைவரிடம் விதைப்பவர் என்பதே என் தெளிவு.

வாழ்த்துகள்.

sabeer.abushahruk said...

//துன்பம் கண்டவுடன் கண்ணீரும் அன்பு
இன்பம் கூடிட வழிதரும் அன்பு
அறத்துக்கும் வீரத்திற்கும் அன்பு
பிறர்க்கென வாழச் செய்வதும் அன்பு//

அன்பின் மிக முக்கிய முகவரிகளில் சில.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//வீழ்ந்தவரை தட்டிக் கொடுப்பதும் அன்பு
அழுதவரை தேற்றுவது கூட அன்பு//

புன்னகை போர்த்தி
புதுப் பொழிவுடன்..
பழகிய நாட்கள்தோறும்
பழக்கப்பட்ட முகம்
எழுதிய அன்புக் குறிப்புகள் !

இதை விட என்ன சொல்ல நான் !?

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.கவிஞர் சகோ.சபிர்காக்காவின் கவிதை அழகோ,அழகு அட! மன்னிக்கவும் சகோ.ஜாபர்சாதிக்கின் கவிதை அழகோ,அழகு!அப்படியே கவியரசு எழுதியதுபோல இருந்தது.சகோ.ஜாபருக்கு வாழ்த்துக்கள்.அப்படியே கவியரசு கவிகாக்காவின் பாதிப்பு இக்கவிதை!(இன்னும் வரும் பிறகு) சகோ.எழுதியதிலேயே முழுமையான கவிதை இது என்பது என் அபிப்பிராயம்.வொவ்வொறு வரிகளும் அருமை!

Shameed said...

அன்பு குறிப்புக்கள் அம்பாய் பாய்கின்றது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

முதலில் வந்த அன்பான மூவருக்கும் என் முதல் அன்பும் நன்றியும் சலாமும்!

கலாம் காக்கா
உங்களின் இனிய அன்புக்கு என் அதே பகரமும் உண்டு.
சபீர் காக்கா
அன்புக்கு, என்னை விதை என்றால் அதற்கு நீரிடுவது நீவிரே!
நெ. காக்கா
இப்படி சொன்னதே அன்பின் இனிய மாண்பு!

மேற்குறிப்பிட்டதை பதிவிடமுன் ரிவர்ஸ் பார்த்ததில் இனிய மகுடம் சூட்டிய க்ரவ்னார் வருகை இவ்வவைவைக்கு இன்னும் அழகு தருகிறது. அதோடு நம்ம வண்ணமயமான ஹமீது காக்காவின் இனிமை தரும் அம்பாய் பாயும் அன்பும் இனிய வருகை.
அந்த மூவரோடு உங்களையும் இணைத்துக் கொள்கிறேன்.

Iqbal M. Salih said...

(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்கவைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புஹாரி 6066

Unknown said...

மாஷல்லாஹ்! படைப்புகள் ஒன்றை விட ஒன்று மிகைதததாகவே உள்ளது. அன்புடன் ஒற்றுமை என்னும் கயிறையும் பற்றி பிடிப்போம். இன்ஷால்லாஹ்!

Ebrahim Ansari said...

தம்பி ஜகபர் சாதிக் அவர்களின் அகத்திலே உருவாகி பதியப்பட்டுள்ள இந்த அன்பான அன்புக் கவிதை அவர் மீது நாம் கொண்டுள்ள அன்பை இன்னும்
அதிகப்படுத்துகிறது.

அன்பிலா உடம்பு எலும்பாலும் தோலாலும் போர்த்தப்பட்ட ஒரு சதைப்பிண்டம் என்று படித்து இருக்கிறோம்.

அன்பே உயிரின் உயிர்நிலை! அன்பே உயிரின் உயர்நிலை! என்ற கருத்திட்டு அழகுத்தமிழில் சுட்டிக்காட்டிய பாங்குக்கு எங்களின் பாராட்டுக்கள்.

இன்னும் இதுபோல் பல தரவேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

crown said...

அகர முதலாம் அம்மாவின் அன்பு
இகர இனிப்பாம் இல்லாளின் அன்பு
உள்ளம் உருகும் சகோதர அன்பு
கள்ள மில்லா குழந்தை அன்பு
----------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
நம்மை விட்டு நகர முடியாத நிலைதான் அன்பு!
நுகரகூடிய மணம்தான் அன்பு! ஆரம்பமே அமர்களம்.
நல் இதயமே அன்பு அமரும் களம்.

crown said...

முழுமதியாய் ஒளிரும் நபி(ஸல்)களின் அன்பு
முகமலர்ந்து காணும் ஈகையர் அன்பு
முதியோரிடம் காட்டணும் பாசத்துடன் அன்பு
முதிர்சியின் அடையாளமே முழுமையான அன்பு
-------------------------------------------------------
நபி(ஸல்) அவர்களின் அன்பு கள்ளமில்லாத, கலப்படமில்லாத ,குறையில்லாத முழுமை உண்மை, பாசம், நேசம் கூடிய அன்பு.
பிற அன்பு அதன் ,அதன் போக்கில் மாறும் !
மாறக்கூடியதும்.

crown said...

பிரியாமல் காப்பதுவும் அன்பு
பிரிந்தாலும் இணைப்பதுவும் அன்பு
புன்னகையின் உள்தோற்றம் அன்பு
புண்படச்செய்தால் பின் இரக்கமும் அன்பு
----------------------------------------------
அருமை!அருமை! புண்படச்செய்தால் பின் இரக்கம் அது தான் அன்பு! சுட்டெரிக்கும் சூரிய ஒளியில் பின்
கிடைக்கும் குளிர் நிழல் அன்பு! அது நிஜ அன்பு!

crown said...

கைமாற்றாய் பெறுவது இழுக்கான அன்பு!
--------------------------------------------
கைமாற்றாய் பெருதல் அழுக்கு எண்ணம் கொண்டது அது பொய் அன்பு! நெத்திஅடி!

crown said...

இல்லார்க்கும் செலுத்தனும் அன்பு
இல்லந்தோறும் இருக்கணும் அன்பு
------------------------------------------
உள்ளத்தில் ஊறிடும், இதயத்தில் வேரிடும் பாசமே அன்பு! தெம்பூட்டும் கவிதை! மேலும் ,மேலும் எழுத வாழ்த்துக்கள்.

அதிரை சித்திக் said...

ஜகபரின் கவிதை
ஜகம் புகழ் கிடைத்திடும் போல்
தெரிகிறது ..வாழ்த்துக்கள்
வாழ்க வளர்க

Yasir said...

பண்புள்ள சகோ.M.H.ஜஹபர் சாதிக்கின் அன்புக்கவிதை உருகச்செய்கின்றது...ரிமீக்ஸ்ஸா இருந்தாலும் ரசனைமிக்கது இக்கவிதை உங்களின் தனித்திறமை நிறையவே வெளிப்பட்டு இருக்கின்றது.வாழ்த்துக்கள் நண்பரே

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்பு காட்டுவதிலும் நல் ஹதீஸ் தந்த இக்பால் காக்கா அவர்களுக்கும்,

தாங்கள் அறிந்த நவீன நுட்பங்களை எங்களுக்கும் கற்று தரும் சகோ. சஃபி அஹமது அவர்களுக்கும்,

மனித குலத்துக்கு நீதியை விளக்கி நூலாய் வெளியிட்டு சாதித்த மேதகு இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களுக்கும்,

உறவுகள் பற்றிய உண்மைகளை தொடராய் தொடர்ந்து தரும் உறவு சித்தீக் காக்கா அவர்களுக்கும்,

கருப்புக்குள் புகுந்து வெள்ளை அறிக்கை தொடர் தரும் நட்பு யாசிருக்கும்,

வரிக்கு வரி சரியான விளக்கம் தந்து மீண்டும் வந்து நல்லுரை வழங்கிய தோழர் க்ரவ்னாருக்கும்,

வாசித்த நேசித்த யாவருக்கும் அன்புடன் நன்றி ப்ளஸ் சலாம்.

மீண்டும் நன்றி ப்ளஸ் லவ்: சபீர் காக்கா!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு